அலைகள் காத்திருக்கும்…

பாக்கெட்டில் இருந்து பறந்து போன பட்டாம் பூச்சியை

உதிர்ந்த வண்ணம், ஒரு சிறகுடன்
மீண்டும் தேடி மீட்ட போது
பூச்சி சொன்னது “நொண்டுவது
நான் மட்டுமல்ல 
  காலத்தில் கரைந்து போகும் நீயும் தான்,
நொண்டினாலும்,பாடி பறந்து திரிவேன் நான் ”
என்ற பூச்சியை பார்த்து சொன்னென்
“நான் மானுடன்-Man can be destroyed ,but not deafeted.”

காதல் கவிதைகள்

கொஞ்சம் காதல்
கவிதைகள்
எழுதித்தரவேண்டும்
என பதிப்பாளர்
என்னிடம் கேட்டிருக்கிறார்,
யாருக்கேனும் என் கனவில்
வந்து போக விருப்பமா ?
ஏற்கனவே பிறரின் கனவுகளில்
உலவியவராயிருப்பினும்
பரவாயில்லை.
நீங்களும் உங்கள் நினைவுகளும்
என் காதல் கவிதைகளில்
நிச்சயம் இடம்பெறும்
என்பது உறுதி.
என் கனவுகளில் என்றும்
நிலைத்திருக்க வேண்டிவரும்
என்று அஞ்சத்தேவையில்லை.
அச்சில் வெளிவரப்
பெறுமானமுள்ள
கவிதைகள் தேறும் வரையே
உங்களின் நினைவுகள்
எனக்குத் தேவைப்படும்
நான் உறங்கிக்கொண்டிருக்கும்
நேரம் பார்த்து என் கனவுகளில்
நுழைந்துவிடுங்கள்
நான் விழித்திருக்கும் நேரம்
நுழைய நேர்ந்தால்
எப்போதும் அழியாமல்
தங்கிவிட வாய்ப்புண்டு.

தூக்கம்

இரவு நேரங்களில்
தூக்கம் வருவதில்லை
எழுந்து உட்கார்ந்து விடுவேன்

பின்
திரும்பவும் படுத்துக்கொண்டுவிடுவேன்
லைட் எதுவும் போடுவதில்லை
மின்விசிறி மாத்திரம்
சுற்றிக்கொண்டிருக்கும்

சன்னமாய் விளக்கு வெளிச்சம்
ஹாலை நிரப்பிக்கொண்டிருக்கும்
எதையும் யோசனை செய்யாமல்
யோசனையைத் துரத்திக்கொண்டிருப்பேன்

பின்
தூங்கு என்று கண்ணை மூடிக்கொள்வேன்
தூக்கம் வருவதில்லை
கனவை வாவென்று கூப்பிட்டாலும்
கனவும் வருவதில்லை

உடம்பு எப்படி விரும்புகிறதோ
அப்படி இருந்துவிடலாமென்று
யோசிக்கும்போது
தூக்கம் மெல்ல கண்ணைச் சுழற்றும்.

 

எங்கும் தேங்கி நிற்கும் உனது மணித்துளிகள்..


*
ஒரு அனுமதி என்னைக் கொஞ்சம்
அசௌகரியப்படுத்துகிறது
அது உன் அறைவாசலில் எப்போதுமே நிரந்தரமாய்
ஸ்டூல் ஒன்றைப் போட்டு வைத்திருக்கிறது

வருவதும் போவதுமான உத்தரவுகளை
அச்சிட்டுக் காகிதத்தில் வைத்திருக்கிறாய் 

உனக்கான மணித்துளிகள்
உனது இருப்பிடத்தில் தொடங்கி அலுவலகம் வரை
மழைக்குப் பின்னான நீர்த் துளிகளைப் போல்
எங்கும் தேங்கி நிற்கிறது
முறை செய்யப்பட்ட பாதுகாவலோடு

சின்னஞ்சிறிய உதவி ஒன்றைக் 
கோரவும்
ஒரு பால்ய நினைவைப் பகிரவும்
காத்திருக்க நேரும்
ஒரு அனுமதி என்னைக் கொஞ்சம் அசௌகரியப்படுத்துகிறது

வெளிச்சம்

அந்தகாரத்தில் எனக்கு வழி காட்டிய
அச் சிறிய தங்க நிற ஒளிப் புள்ளி
வெளியே தென்படாதது
எங்கு, எப்பகுதியலது
தேடினாலும் தென்படாதது
அலங்காரங்களற்ற விழிகளில்
இருளை விடவும் அனேகமானவை
வெளிச்சத்தில் மறைந்துபோகும்
தென்படாமலேயே

இஸுரு சாமர சோமவீர

இருளில் உருளும் மனம்

இரவோடு
இருளும் வந்தது.
சுற்றிலும் எதுவுமே
தெரியவில்லை.
மனம் வெளிச்சமாக
இருந்தது.
வெளியே வெளிச்சம்
வந்தது. இடங்களும்
இடுக்குகளும்
பிரகாசமாய்
தெரிந்தன.
மனம் இருளத்
தொடங்கியது.

தரக்குடும்பம்

இரவை புணர்ந்தெழுந்ததும்
தொங்கவிடப்பட்ட வெள்ளை துணி மூடி
கொட்டாவி இறுமலை முடித்து
மூக்கின் துவாரங்களில்
காற்றோடு கணநேரம் பயிற்சித்தேன்
கற்பிக்கப்பட்டதை பிசகிடாது
பல் துடைப்பத்தில் பற்பசை இட்டேன்
குறுக்கும் நெடுக்குமாக அசைக்க
நினைவு உறுத்தியது
அய்யய்யோன்னு தலையிலடித்து
மேலும் கீழுமாக அசைத்து துலக்கினேன்
தர முத்திரையிட்ட
சோப்பு ஷாம்புகளால் உடல் கழுவினேன்
துணையாளும் அவங்களுக்கான அட்டவணையின்படி
ஸ்டிக்கரால் பெயரிடப்பட்ட டப்பாக்களிலிருந்து
வெகு எளிதாக சமைத்து முடிக்க
கொடுக்கப்பட்ட காலத்திற்குள் தயாராகி
காலனிகளின் அணிவகுப்பிலிருந்து
எனை பெயர்த்து வெளியேறினேன்
வெளிச்சுவற்றில் மின்னிக்கொண்டிருந்தது
என் தினக்கூலியை உத்திரவாதப்படுத்திக்கொண்டிருக்கும்
ISO தரச்சான்று இல்லமெனும்
பாலிமர் சீட்டில் பொறிக்கப்பட்ட
பச்சை எழுத்துக்கள்…

நிழல் விமானம்

 
 
வெண் திரைத்துனியில்
கருஞ்சித்திரமாய்
நகர்ந்து கொண்டிருந்தது
நிழல் விமானம்
பச்சை வயல்கள்,
மணற்பரப்புகள்,
தொழிற்சாலை கூரைகள்..
எல்லாவற்றின் மீதும்
கருநாகம் போல ஊர்ந்து சென்றது.
தந்தை கைப்பிடித்து
குதித்து குதித்து நடக்கும்
சிறுவனின் உற்சாகம்.
 
பிரம்மாண்டமானதொரு
நீர்ப்பாசன கிணறொன்றில்
பாய்ந்தபோது
நிழல் விமானம்
மறைந்துபோனது.
சகபயணியொருவர்
பயணத்தில் காணாமல்போனால்
உண்டாகும் பதைப்புடன்
பார்வையை
சுழலவிட்டேன்.
கருமேகங்கள் சூழ்ந்திருந்தன.
கதிரவன் ஒளிந்திருந்தான்.
போதுமான ஒளியின்மையால்
நிழல் விமானத்தை தேட முடியவில்லை.
மேகங்கள் விலகி
சூரியன் மீண்டும் வெளிவந்த
சில நொடிகளில்
அதிர்வின்றி
தரையை தொட்டது விமானம்.
 
முட்டிமோதி
படியில் இறங்கி
பேருந்தில் அமருமுன்
நிழல் விமானத்தை மீண்டும் பார்த்தேன்.
எவ்வித அசைவுமின்றி
ராட்சத அளவில்
அமைதியுற்று  நிற்கும்
விமானத்தின் அடியில்
நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்தது
நிழல் விமானம்.

எமதுலகில் சூரியனும் இல்லை

 

இறப்பர் மரங்களில் பால் இருந்த போதும்
பெருந் தோட்டத்தில் நாம் வசித்த போதும்
இறப்பர் விலை அதிகரித்த போதும்
நாம் இன்னும் கையாலாகாத நிலையிலென
உணர்கிறது இதயம் எப்போதும்
அடர்ந்த பெரும் இறப்பர் காட்டில்
பாறைகள், வேர்கள், நதிகள், ஓடைகளிடையே
இரவு உட்கொண்ட ரொட்டியின் பலத்தினால்
இரு பாதங்களையும் வைத்தபடி
மரத்துக்கு மரம் வெட்டிச் சேகரித்த பால் எடுத்து
நாம் வருகிறோம் சாயத் தேனீர் குடித்தபடி
தாயும் தந்தையும் வாழ்ந்த குடிசையின்
உரிமை எமக்கில்லை பிள்ளையே
ஊருமற்று நாடுமற்று
லயன் தான் வாழ்க்கையே
கிணற்றுத் தவளைகள் போல
லயத்திலிருக்கும் நம் எல்லோருக்கும்
உரிமையில்லை எதற்கும்
இது பற்றிக் கதைக்கவும் கூட

– ஹெரல்ட் மெக்ஸிமஸ் ரொட்ரிகோபுள்ளே

யுகங்கள் கடந்தது

முகர்ந்து முகர்ந்து
நாய்க் குட்டியொன்று
என்வீடு வரை
வந்து விட்டது.

யுகங்கள் கடந்த அன்பின்
புரியாத ரகசியத்தின்முன்

தளும்பி நின்ற
பேரமைதி கணமிது