பனிநிலா

பனிக்குஞ்சொன்று கண்டேன்.
சூரியன் சுட்ட
கருஞ்சாம்பலை விலக்கி
வெண்ணொளி வீசி
வீதிக்கு வந்தது.
குளிர்ந்து செழித்தது
காடும் நாடும்.
வெண்ணிலா
அதுவென்று சொன்னேன்.
வியந்து உயரப்
பார்த்தவர்
விழிகளுள்
பனிக் குஞ்சினை
புதைத்து வைத்தேன்.
நாளுக்கு நாள்
வளரும் குஞ்சோடு
விரியும் ஒளியில்
வெளிகளும் வளர்ந்தன..
விண்மீன்களும் குஞ்சுடன்
கொஞ்சி களித்தன.

குழந்தையின் கோபம்

கடவுளின் குழந்தையொன்று
உலகியல் விளையாட்டினை
விளையாடிக் கொண்டிருந்தது.
எது தவறு
எது சரியென
கடவுளிடம் கேட்டுக் கேட்டு
குழந்தை அந்தப்
பொம்மைகளை
தவறு சரியென
இரண்டு வட்டங்களுக்குள்
பிரித்து பிரித்து வைத்தது.
குழந்தை கடவுளிடம்
ஏதோ கேட்பதற்காக
திரும்பிப் பார்த்த
சில நிமிடங்களில்
வட்டங்களிரண்டிலிருந்தும்
பொம்மைகள்
சரிக்கும் தவறுக்குமாக
மாறி மாறி குதித்துக்
கொண்டிருந்தன.
சலித்துப் போனக்
குழந்தை
தவறுகள் வைத்திருந்த
வட்டத்திற்குள்
தானேப் போய்
உம்மென்று உட்கார்ந்து
கொண்டது

இருளில் உருளும் மனம்

இரவோடு
இருளும் வந்தது.
சுற்றிலும் எதுவுமே
தெரியவில்லை.
மனம் வெளிச்சமாக
இருந்தது.
வெளியே வெளிச்சம்
வந்தது. இடங்களும்
இடுக்குகளும்
பிரகாசமாய்
தெரிந்தன.
மனம் இருளத்
தொடங்கியது.

சாலை விதி

ஏழு வயதுக் குழந்தை
ஸ்கூட்டர் ஓட்டும்
பாவனையில்
பிர்பிர் என்று
ஒலி எழுப்பிக் கொண்டே
ஓடிக் கொண்டிருந்தது.
வலது கையைச்
சுழற்றிச் சுழற்றி
வாகனத்தின் வேகத்தை
வாயால் கூட்டிற்று
குழந்தை.
இடது கை மட்டும்
காதினில் குவிந்திருக்க
சாலையில்
வாகனச்சப்தம்
காதை அடைக்கிறதா
என்றேன்.
உடனே குழந்தை
தொல்லைக்
கொடுக்காதே நான்
செல்ஃபோனில் பேசிக்
கொண்டேச்
செல்கிறேன் என்றது.

மரம் பெய்யும் மழை

மழை பெய்யத்
தொடங்கியதும்
மரம் பெய்யவில்லை
மழையை…
மழை நின்று
வெகு நேரமாகியும்
மரம் பெய்து
கொண்டே இருக்கிறது
மழையை பெரிய
பெரியத் துளிகளுடன்.
பூப்பெய்த மரங்கள்
பூ பெய்கின்றன
மழையோடு.
பூப்பெய்தாத மரங்கள்
இலைகளைப் போட்டு
விளையாடுகின்றன
போகும் நீரில்

ஊனப் பிள்ளையார்

அடுக்கு மாடிக் குடியிருப்பின்
கீழ் தளத்தின் குறுஞ்சுவரில்
கையொடிந்த பிள்ளையார்
அண்டுவார் யாருமின்றி….
பட்டினியாய்… பரிதாபமாய்…
இரண்டு தினம் முன்பு
ஆறாவது மாடி
அனந்த நாராயணன்
வீட்டுப் பூஜை அறையில்
புஷ்டியான கைகளுடன்
பருத்த  வயிறோடு
மோதக பாத்திரத்துடன்
பார்த்த நினைவு.  

புள்ளிக் கோலங்கள்

அரைப் புள்ளிகள்
இணைந்த போது
ஒரு புள்ளியின்
கரு உருவானது.
இருட்டில் வளர்ந்து
ஒரு நாள்
வெளிச்சத்திற்கு
வந்த போது
அதற்கெல்லாமே
ஆச்சரியக் குறியாய்
இருந்தது.
கால் நிமிர்ந்தபோது
காற் புள்ளியானது.
கேள்விக் குறிகளோடு
உலகைக் கற்றுக்
கொண்டே வந்தது.
காலங்கள்
செல்லச் செல்ல
காற்புள்ளி
அரைப் புள்ளியாயிற்று.
மேலானவர்களின்
மேற்கோள் குறிகளுடன்
மேலாக வளர்ந்த அது
முக்காற்புள்ளியாய்
முதுமையை எட்டிற்று.
முகமெங்கும்
வரை கோலங்களுடன்
முதுகு வளைந்து
பணிவுடன் …
முழுப் புள்ளியான
முற்றுப் புள்ளியை
எதிர்நோக்கி
இருக்கிறது
முக்காற்புள்ளி.

மழை துரத்திய இரவில்

வானத்தில் வந்த
பூகம்பம் போல்
திடீரென இடி முழக்கம்.
விண்மீன்களையெல்லாம்
சுனாமி அடித்துச்
சென்றது போல்
வெறுமையாய்
கருவானம்.
இடை இடையே
வானத்தைக் கீறித்
தெறித்த ரத்தமற்ற
நரம்புகளாய் மின்னல்.
எங்கோப் புறப்படுகிற
மழை என்னை
இங்கேத் துரத்தியது.
தூங்குவதற்கு முன்
சன்னல்களையெல்லாம்
அடைத்து விட்டேன்.
இடிக்கு அஞ்சி கேபிள்
இணைப்புகளையெல்லாம்
திறந்து விட்டேன்.
மொட்டை மாடியில்
தொங்கிய 
துணிகளையெல்லாம்
தூங்கும் அறைக்குள்
தூங்க விட்டேன்.
நானும் தூங்கிப்
போனேன் வருகிற
மழையும் வந்ததாய்..
இடையில்
கொசுக்கள் வந்து
கடித்து எழுப்ப
தொப்பையாய்
நனைந்திருந்தேன்
வியர்வையில்.
நீச்சல் தெரியாத
இன்னொரு கொசு
வியர்வை மழையில்
நனைந்து முங்கிச்
செத்தது.
சன்னலைத் திறந்தேன்.
வழக்கம் போல்
வெறும் வானம்
விண்மீன்களுடன்
ஒரு விளையாட்டுப்
புன்னகையுடன்…
கொசுக்கள்
குதூகலத்துடன்
கைதட்டிப் பறந்தன.
அன்றைய இடியின்
முடிவு இப்படியொரு
கவிதையாய். 

குழந்தையின் நிலாப் பயணம்

பிறையின்
வளைவினில்
வசதியாய்
ஒரு குழந்தை
உட்கார்ந்து கொண்டது.
நிலாவும் குதூகலமாய்
குழந்தையை
உலகம் முழுவதும்
சுற்றிக் காட்டிக்
கொண்டிருந்தது.
அதற்குள்
அம்மா பள்ளிக்கு
நேரமாகிறதென
குழந்தையை அடித்து
எழுப்பி பலவந்தமாய்
இழுத்துப் போனாள். 

வானத்தில் இரண்டு நிலாக்கள்

கணினித் திரையில்
அடோப் ஃபோட்டோ
ஷாப்பில் ஒரு
அழகான நிலாவை
வரைந்தேன்.

வானத்து நிலா

எனக்கு மாடலாக
இருக்க இன்னும்
வண்ணமயமாக்கினேன்
கணினித் திரையில்..
அந்த லேயரை
நகலெடுத்து
இன்னொரு நிலாவாக
ஒட்டினேன்.
அந்த நிலாவில்
மௌஸை வைத்து
தேர்வு செய்து அதனை
அப்படியே டிராக்
அன்ட் டிராப்பில் இழுத்து
வானத் திரையில்
விட்டேன்.
பூமியில் நன்றாய்
தெரிய தேவைக்கேற்ப
என்லார்ஜ் செய்தேன்.
அடுத்த நாள்
எல்லா செய்தித்
தாள்களிலும்
வானத்தில் இரண்டு
நிலாக்களென்பதே
தலைப்பு செய்தியாக
இருந்தது.
தேநீர் கடைகளில்
தேநீரை விட
சூடாக இருந்தன
நிலாச் செய்தி.
பரபரப்பான ஊழல்
விசாரணைகளும்
பாராளுமன்ற
சலசலப்புகளும்
மக்களுக்கு மறந்தே
போயிற்று.
அலுவலகங்களில்
அன்றாட அலுவல்களை
நிலா கிரகணமாய
மறைத்தது.
நாசா விஞ்ஞானிகளும்
இந்திய விஞ்ஞானிகளும்
விதவிதமாய் விளக்கம்
தெரிவித்தார்கள்.
நான் வரைந்து
வானத்தில் ஒட்டியதை
யார்தான் நம்பப்

போகிறார்கள்.