சூபியும் சுஜாதாவும் என்ற மலையாள திரைப்படம்

சூபியும் சுஜாதாவும் என்ற படத்தை ப்ரைம் வீடியோவில் பார்த்தேன். விட்டு விட்டுத்தான் பார்த்தேன். என்னால் மறக்க முடியாத மலையாளப்  படம்.  வாய் பேசமுடியாத ஒரு பெண்ணுடன் ஒரு சூஃபி சந்நியாசி காதலிப்பது போல் படம்.  உண்மையில் இருவரும் காதலிக்கிறார்கள்.  
கதை கேரளாவில் ஒரு கிராமத்தில் நடக்கிறது.  இந்தக் காதல்  ஈடேறாது என்று படம் ஆரம்பிக்கும்போதே தெரிந்தாலும், இது எப்படி நிகழ்கிறது என்பதுதான் கதை. 
சுஜாதா என்ற பாத்திரமேற்று நடித்த நடிகை அதித்ராவ்  மறக்க முடியாத கதை  பாத்திரமாக கதையுடன் ஒன்றி விடுகிறார்.  அவருடைய ரசிகர்கள் ரொம்ப நாட்களுக்கு இந்தப் படத்தை ஞாபகம் வைத்துக்கொள்வார்கள்.
அதித்ராவ் 14 ஆண்டுகளுக்குப் பிறகு மலையாளப் படத்தில் நடிக்கிறார் என்று குறிப்பிடுகிறார்கள்.   சூபியாக நடிக்கும் தேவ் மோஹனுக்கு இது முதல் படம். இந்தப் படத்தில் முக்கியமாக உரையாடல்களே இல்லை.  
இந்தப் படத்தைப் பற்றி சில விமர்சனங்கள் பார்த்தேன்.  இந்தப் படம் மெதுவாகப் போகிறது.  இந்தப் படத்தில் கதையே இல்லை என்றெல்லாம். இந்தக் கருத்துக்களை நான் ஏற்றுக்கொள்ள வில்லை.

நான் ப்ரைம் வீடியோவில் பார்த்தாலும், விட்டு விட்டுத்தான் பார்த்தேன்.  அப்படிப் பார்த்தாலும் இந்தப் படத்தைப் பார்த்து முடிக்கும் வரை இந்தப் படத்தைப் பற்றி நினைக்காமலில்லை . 

ஒரு கிராமத்துச் சூழலில் நடைபெறும் இந்தக் கதையில் எல்லாம் இயல்பாக இருப்பதுபோல் இருக்கிறது.  சூபிக்கும் சுஜாதாவிற்கும் ஏற்படும் காதல் பரவசத்தை ஏற்படுத்தத் தவறவில்லை.  அந்தக் காதல் நிறைவேறாது என்றாலும் வாய் பேச முடியாத நிகழும் இந்தக் காதல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தத் தவறவில்லை.


சுஜாதா ஒரு வாய் பேச முடியாத ஒரு அழகான பெண்.  அவளுக்கு வாய்த்தான் பேசமுடியாதென்றாலும் காது நன்றாகக் கேட்கும்.  முஸ்லிம் குடும்பங்களிருக்கும் நடுவில் சுஜாதா குடும்பமும் வசிக்கிறது. 
இந்தப் படத்தில் ஆரம்ப காட்சியே அற்புதமாக அமைந்திருக்கிறது.  10 ஆண்டுகளுக்கு முன்னால் அந்த ஊரை விட்டுப் போன சூபி அந்த ஊருக்குத் திரும்பி வருகிறான்  உண்மையிலேயே அவன் சாவதற்குத்தான் அங்கு வருகிறான்.   பின் இந்தப் படம் பின்னோக்கிச் செல்கிறது. 

சுஜாதாவும் சூபியும் சந்திக்கும் காட்சிகளிலிருந்து  ஆரம்பமாகிறது.  ஒருவருக்கொருவர் பேசாமல் காட்டப்படும்

காதல் கதையைத் தத்ரூபமாகக் காட்சி படுத்திருக்கிறார்கள்.  
இசையும் நடனமும் இப்படத்தில் முக்கியமாகக் காட்டப் படுகின்றன.  ஆரம்பத்தில்  சூபி   காதல் அவள்  அப்பாவால் தடுக்கப்படுகிறது.  ஒரு கட்டத்தில் சூபியுடன் ஓடிப் போய்விடலாமென்று சுஜாதா நினைக்கிறாள்.  அதைத் தடுத்து விடுகிறார் அவள் அப்பா. 

ஏற்கனவே ராஜீவ் குடும்பத்தினருடன்  அவள்  திருமணம் நிச்சயமாகிறது. . 
சூபி அந்த ஊரை விட்டுப் போய்விடுகிறான்.  சுஜாதா அவள் அப்பா விருப்பப்படி ராஜீவ்வை திருமணம் கொள்கிறாள் துபாய்க்குச் சென்று விடுகிறாள். ராஜீவ்வை மணம் முடித்தாலும் அவள் சூபி நினைவாகவே இருக்கிறாள். 


பத்தாண்டுகளுக்கு முன் போன சூபி திரும்பவும் அவர்கள் ஊருக்குத் திரும்பி வருகிறான்.  வந்த இடத்தில் இறந்தும் விடுகிறான்.   துபாயில் இருக்கும் அவர்களுக்குச் செய்தித் தெரிகிறது.  அதைக் கேட்டவுடன் சுஜாதா கடுமையாகப் பாதிக்கப்படுகிறாள்.  இந்தச் சம்பவத்தை அற்புதமாகப் படம் எடுத்திருக்கிறார் இயக்குநர் நாரான புழா ஷான்வாஸ்.  
இதுதான் முதல் படம் ஒடிடி பிளாட்பார்ம் மூலம் காட்டப்படுகிறது.  மனைவியை அழைத்துக்கொண்டு சுஜாதாவின் கிராமத்திற்கு வருகிறான். 

சுஜாதா சூபி நினைவாகவே இருக்கிறாள்.  ஊரிலிருந்து வந்ததிலிருந்து  படபடப்பாக இருக்கிறாள்.  ராஜீவ்வும் பரபரப்பாக இருக்கிறான். 

அடுத்தாள்  அவன் ஊருக்குத் திரும்ப வேண்டும்.  ஒருநாள்தான் அவன் இங்கிருப்பதாகத் திட்டம்..  சவ அடக்கம் நடக்கும் இடத்திற்கு ஏர் போர்டிலிருந்து நேராக காரில் போகிறார்கள் அவனும் சுஜாதாவும்..

நிம்மதி இல்லாமல் இருக்கிறாள் சுஜாதா.  அவர்கள் சவ அடக்கம் செய்யும் இடத்திற்குச் செல்கிறார்கள்.  ஆனால் சுஜாதா காரிலேயே இருக்கிறாள்.  
அவர்கள் பெண்களை சவம் அடக்கம் செய்யுமிடத்திற்கு அனுமதிக்க மாட்டார்கள்.  அதனால் சுஜாதா காரிலேயே அமர்ந்து இருக்கிறாள்.  துக்கம் தாங்க முடியாமல் அழுது கொண்டிருக்கிறாள். அவள் கணவன் ராஜீவ் சவ அடக்கத்திற்குப் போகிறான்.  சவக்குழியில் ஒரு பிடி மண்ணத் தூவுகிறான்.

திரும்பவும் அவர்கள் சுஜாதா அப்பா அம்மா வசிக்கும் வீட்டிற்கு வருகிறார்கள்.  அவர்களுக்கோ இவர்களைப் பார்க்கும்போது திகைப்பு.  
அவர்கள் துபாயிலிருந்து புறப்படும் போது யாரிடமும் எதுவும் சொல்லவில்லை.  சுஜாதா துக்கம் தாங்காமலிருக்கிறாள்.  ராஜீவ் அடுத்த நாள் ஊர் திரும்ப வேண்டுமென்று இருக்கிறான்.  பாஸ்போர்ட்டை எடுத்து வைத்துக்கொள்ள நினைத்தபோது பாஸ்போர்ட் இல்லை என்று தெரியவருகிறது.  உடனே பதட்டமடைகிறான்.  எங்கும் தேடியும் கிடைக்கவில்லை.  தன் மனைவி சுஜாதாவைத் திட்டுகிறான்.  சுஜாதாவிற்கு வாய்த்தான் பேச முடியாது தவிர அவளுக்கு யார் பேசுவதும் கேட்கும்.

அவனுக்குச் சந்தேகம் வருகிறது.  பிணத்தை அடக்கம் செய்யும்போது சவக்குழியில் குனிந்து மண்ணைப் போடும்போது அவன் வைத்திருந்த பாஸ்போர்ட் கீழே விழுந்து விட்டிருக்குமா என்ற சந்தேகம் ராஜீவ் மனதில் எழுகிறது.  

புதைக்கும் இடத்திற்குப் போய் கல்லறையைத் தோண்டுகிறார்கள்.  அங்கே கிடைக்கவில்லை.  இரவு நேரத்தில் யாருக்கும்  தெரியாமல் பதட்டத்துடன் தோண்டுகிறார்கள்.  வீட்டிலேயே கீழே விழுந்து கிடந்த பாஸ்போர்டடை சுஜாதா கண்ணில் பட,  எடுத்துக்கொண்டு சவக்குழி இடத்திற்கு வருகிறாள்.

முதன் முதலாக  சுஜாதா சூபியைச் சந்திக்கும் பேருந்தில் சூபி ஒரு பச்சை நிற மாலையை பேருந்தில் விட்டுவிட்டுச் சென்று விடுவான்.  அவன் நினைவாக அதை எடுத்து வைத்துக்கொண்டிருப்பாள் சுஜாதா. இப்போது .அதை சவக்குழியில் போடுகிறாள். 

கூடவே அவன் நினைவையும் அழித்து விடுகிறாள். 

அவர்கள் துபாய் திரும்பும்போது ராஜீவ் அவளும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்கிறார்கள்.  அவர்களிடையே காதல் துளிர் விடுகிறது. 
கொஞ்சம்கூட அலுக்காமல் இந்தப் படத்தைப் பார்த்துரசித்தேன்   

துளி : 42 – நான்கு மதிப்பெண்களுக்கு மேல்..

அழகியசிங்கர்

அமெரிக்கா போகிறேன் என்று எழுத்தாளர் கந்தசாமியிடம் சொன்னபோது, ‘நிறையா பொழுது கிடைக்கும்யா புத்தகங்கள் படிக்கலாம், எழுதலாம்,’ என்றார்.  அவர் ஒவ்வொரு முறை அயல்நாடு செல்லும்போது ஒரு புத்தகம் எழுதாமல் வர மாட்டார்.  அவர் சொன்னதில் எழுதுவதில் முன்னே பின்னே இருந்தாலும், புத்தகங்களைப் படிக்கிறேன்.  இதே சென்னையில் இவ்வளவு தூரம் படித்திருக்க மாட்டேன்.  

அதேபோல் அதிகமாக தமிழ் சினிமாக்களைப் பார்க்கிறேன்.  பொதுவாக சென்னையில் இருக்கும்போது யாராவது சொன்னால்மட்டும் தியேட்டரில் போய்ப் படம் பார்ப்பேன்.  தியேட்டரில் படம் பார்ப்பது அவதியாக இருக்கும். இங்கு  நெட்டில் சுலபமாக (பணம் கட்டியிருப்பதால் விளம்பரங்களைப் பார்ப்பதைத் தவிர்க்கலாம்) படங்களைப் பார்க்கிறேன்.  தினமும் குறைந்தது ஒரு படமாவது பார்க்காமல் இருக்க மாட்டேன்.  

இன்தூசம் ஒவ்வொரு படத்திற்கும் மதிப்பெண்கள் கொடுத்திருக்கிறது. ஐந்து மதிப்பெண்களில் நான்கு மதிப்பெண்கள்  மேல் வாங்கும் படங்கள் எல்லாம், எல்லாவிதங்களில் பார்க்க சிறப்பாக இருக்கிறது.  ஐந்து கட்டங்களாகப் பிரித்து மதிப்பெண்கள் தருகிறார்கள். 1. நடிப்பு 2. சிரிப்பு 3. காதல் 4. கதை 5. படத்தின் உருவாக்கம் என்று.

நான்கு மதிப்பெண்கள் வாங்கும் படங்கள் மட்டுமல்ல 3லிருந்து 4க்குள் வாங்கும் படங்களும் சிறப்பாக உள்ளன.  நான் முதலில் புத்தகங்கள் படிப்பதில் தீவிரமாக இருந்தவன், சினிமா பார்ப்பதில் தீவிரமாக மாறிவிட்டேன். தினமும் ஒரு படமாவது பார்த்துவிடுவேன்.  

முழுவதும் தமிழ் சினிமாப்படங்கள்தான் பார்க்கிறேன். பார்க்கப் பார்க்க எதாவது தோன்றினால் எழுதலாம் என்று  தோன்றியது.  பாலா இயக்கிய நாச்சியார் என்ற படத்திற்கு 4 மதிப்பெண்கள் மேல் குறிப்பிட்டிருந்தார்கள்.  எனக்குப் பொதுவாக பாலா படங்களைப் பார்ப்பதற்குத் தயக்கம் ஏற்பட்டு விடும்.  ஆனால் 4 மதிப்பெண்களுக்கு மேல் என்பதால் நாச்சியார் படத்தைப் பார்த்தேன்.  பாலா இயக்கிய இப்படத்தின் மீது அளவுகடந்த மதிப்பு கூடி விட்டது.  

அதேபோல் யூ டர்ன் என்ற படம் பார்த்தேன்.  என்னடா இருக்கப்போகிறது இந்தப் படத்தில் என்றுதான் பார்த்தேன்.  படத்தைப் பார்த்தவுடன் ரசிக்கும்படி படத்தை எடுத்திருக்கிறார்களே என்று தோன்றியது.  ஒரு சில இயக்குநர்களின் பெயர்கள் மட்டும் தெரிகிறது.  ஆனால் பல புதியவர்கள் வந்திருக்கிறார்கள்.  அவர்கள் பெயர்கள்  அவ்வளவாய் தெரியவில்லை.

இப் படங்கள் எல்லாவற்றையும் சப்டைட்டிலுடன் காட்டுகிறார்கள். உலகம் முழுவதும் எல்லா மொழிபேசுபவர்களும் இப்படங்களைப் பார்த்து ரசிக்க முடியும் என்று தோன்றுகிறது.  தமிழ் படங்களைப் பார்ப்பதுபோல் மற்ற மொழிப்படங்களையும் பார்க்கலாமென்று நினைக்கிறேன்.  ஆனால் தமிழிலிலேயே அதிகமாகப் படங்கள் பார்க்க வேண்டியிருப்பதால், மற்ற மொழிப் படங்களை முயற்சி செய்யவில்லை.

சென்னையில் உலகத் திரைப்பட விழாக்கள் நடக்கும்போது கட்டாயம் பல படங்களைப் பார்த்துவிடுவேன்.  இந்த ஆண்டு அவற்றைப் பார்த்தபோது  கொஞ்சம் வெறுப்புதான் தோன்றியது.  ஆனால் இப்போது பார்க்கும் தமிழ் படங்கள் மீது எனக்கு வெறுப்பு ஏற்படவில்லை.  ஒரு படம் பார்த்தவுடன் இன்னொரு படம் பார்க்கவேண்டுமென்ற எண்ணம் ஏற்படுகிறது.  

மம்மூட்டி நடித்த பேரன்பு

அழகியசிங்கர்

இந்தப படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது படத்தில் என்ன பெரிதாகச் சொல்லமுடியப்போகிறது இயக்குநர் ராமால் என்ற எண்ணம் ஏற்பாடாமல் இல்லை. ஆனால் படம் பார்த்தப்பின்தான் மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடிக்கும் சாதனா மீது அளவு கடந்த பச்சாதாப உணர்வு ஏற்படுகிறது.  அப்படி ஒரு பெண்ணை வளர்ப்பது என்பது சாதாரணமாகத் தெரியவில்லை.  அந்தப் பெண்ணுடன் போராடும் அப்பாவாக நடிக்கும் மம்மூட்டியும் நம் கண்களை விட்டு அகலவில்லை. 

ஆனால் இதையெல்லாம் கொஞ்சங்கூட போரடிக்காமல் படமாக எடுத்துக்கொண்டு போகிறார் ராம்.

இந்த முடக்குவாதப் பெண்ணைப் பார்த்துக்கொள்ள விரும்பாத அந்தப் பெண்ணின் அம்மா வேறு ஒருவருடன் வாழ ஓடிப்போய் விடுகிறாள்.

அவளுடைய செயல் அவள் கணவன் அமுதவன் துபாயிலிருந்து வருவதற்குக் காத்துக்கொண்டிருநததுபோல் இருந்தது.   அமுதவனுக்கு கூட இருந்தவர்களும் ஒத்துழைப்புத் தரவில்லை.  இந்தப் பெண்ணை எப்படியாவது தொலைத்துவிடு என்பதுபோல் அவன் அம்மாவே சொல்கிறாள்.  

குடியிருக்கும் வீட்டிலும் அவனால் இருக்க முடியவில்லை.  அதனால் தனியாக ஒரு மலையடிவாரத்தில் உள்ள வீட்டை பத்து லட்ச ரூபாய்க்கு வாங்கிக்கொண்டு வசிக்கிறான்.  யாரும் மனிதர்கள் இல்லாத இடமாகவும், குருவிகள் அழியாத இடமாக அவன் வசிக்குமிடம் இருக்கிறது.  அங்கும் அவனுக்குச் சோதனை.  வெள்ளைக்காரியிடமிருந்து பத்து லட்ச ரூபாய்க்கு வாங்கிய வீட்டை அவனிடமிருந்து அபகரித்துக்கொள்ள முயற்சி நடக்கிறது.  எவ்வளவு பணம் கொடுத்தாலும் வீட்டை விற்க மறுக்கிறான் அமுதவன்.

கதை முழுவதும் முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணைப் பார்த்துக்கொள்வதுதான் இந்தக் கதை.   இதை ஒரு கதைச் சொல்லியின் பாணியில் படத்தை இயக்கி உள்ளார் ராம்.  அத்தியாயம் அத்தியாயமாகப் படத்தை நகர்த்திக்கொண்டு போகிறார். 

அந்தத் தனிமையான இடத்திற்கு உதவி செய்ய வரும் ஒரு பெண்மணி ஒருநாள் மட்டும் உதவி செய்ய வந்துவிட்டுப் போய்விடுகிறாள். அமுதவன் தானே எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வது என்ற முடிவுக்கு வருகிறேன்.  

அப்போதுதான் தன்னை விஜயலட்சுமி என்று அறிமுகம் செய்துகொண்டு ஒரு பெண் வருகிறாள்.  சாப்பாட்டுக்கு வழியில்லை அங்கயே இருக்கிறேன்.  எந்த வேலையும் செய்கிறேன் என்கிறாள்.   அந்தப் பெண் ஏற்கனவே திருமணம் ஆனவள்.  அவனை ஏமாற்ற வந்திருக்கிறாள் என்பது அவனுக்குப் புரியவில்லை. அவளுடன் ஏற்பட்ட காதலால் அமுதவன் அவளை யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொள்கிறான்.  இதெல்லாம் ஒரு நாடகம் என்பதும் அவனிடமிருந்து அவன் இடத்தை அபகரிக்கும் திட்டம் என்பதும் அவனுக்குப் புரியவில்லை.  

அமுதவன் அந்த இடத்தை அவர்களிடம் விட்டுவிட்டுப் போகும்போது, விஜயலட்சுமியும் ஏற்கனவே திருமணம் செய்துகொண்ட கணவனும், அவர்கள் ஏன் அப்படி செய்தார்கள் என்பதைக் கேட்கும்படி சொல்கிறார்கள்.  அந்த இடத்தில் அமுதவன் சொல்வதைக் கேட்கும்போது படம் பார்ப்பவர்கள் மனம் நெகிழ வைக்கும்.  கோபம், பழி வாங்கும் எண்ணம் எல்லாவற்றையும் விட்டுவிடுவதற்கு இந்த இயற்கைதான் சொல்லிக் கொடுப்பதாகக் கூறிவிட்டுச் சொல்கிறான்.  இப்படி வசனங்களை அங்கங்கே தெறிக்க விடுகிறார் ராம்.  பல நெகிழ்ச்சியான காட்சிகளை மிகவும் நுணுக்கமாக எடுத்துக்கொண்டு போகிறார்.

தன் பெண்ணை அழைத்துக்கொண்டு தொடர்ந்து அமுதவன் படும்பாடுதான் இந்தக் கதை.  சென்னை நகரத்தில் அவர்கள் ஓட்டல் அறைகளில் தங்குகிறாரகள்.  தன் பெண்ணைத் தனியாக விட்டுவிட்டு அறைக் கதவைப் பூட்டிவிட்டு அமுதவன் கார் ஓட்டச் செல்கிறான்.  அந்தப் பெண் ஜன்னல் வழியாக அவள் அப்பா செல்வதைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள் ஏக்கத்துடன்.  இன்னொரு இடத்தில் ஜன்னல் வழியாகப் பார்க்கும்போது பள்ளிக்கூடம் தெரிகிறது.  பள்ளிக்கூட யூனிபாரம் மீது அவள் கவனம் செல்லுகிறது.  அதுமாதிரி ஒரு யூனிபாரம் வாங்கிக் கொடுக்கிறார் அப்பா. குவா

தனியாக ஓட்டல் அறையில் விட்டுவிட்டுச் செல்வது அமுதவனுக்குப் பெரிய பிரச்சினையாக இருக்கிறது.  அதனால் தன் பெண்ணை காப்பகத்தில் கொண்டு வந்து சேர்க்கிறான்.  அங்கும் அந்தப் பெண்ணைச் சரியாகப் பார்த்துக்கொள்வதில்லை.  அத்துடன் இல்லாமல் அடித்துக் கொடுமைப் படுத்துகிறார்கள்.  அமுதவன் தனியாக ஒரு வீடு பார்த்து அழைத்துப் போகிறான்.   ஆனால் அவன் இல்லாத நேரத்தில் பெண்ணைப் பார்த்துக்கொள்ள முடியவில்லை.  இந்தத் தருணத்தில்தான் அறவாளி மீரா என்பவருடன் அவனுக்கு அறிமுகம் கிடைக்கிறது. அந்தப் பெண்ணை உதவிக்குக் கூப்பிட வேண்டுமென்று அவனுக்குத் தோன்றவில்லை.

அமுதவன் கடைசியாக ஒரு முடிவுக்கு வருகிறான்.  பெண்ணுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொள்வது என்று.  கடற்கரைக்குப் பெண்ணை அழைத்துச் செல்கிறான். யூனிபார்முடன் பெண்ணும் வருகிறாள்.   தற்கொலைக்கு கடலை நோக்கிப் போகப் போக பெண்ணிற்குப் புரிந்து பெரிதாக சத்தம் போடுகிறாள்.  அந்தத் தருணத்தில்தான் அந்தப் பெண்ணைக் காப்பாற்ற மீரா வருகிறாள்.

தன் பெண்ணைப் பார்த்துக்கொள்ள மீராவைத் திருமணம் செய்துகொண்டு தன் வாழ்க்கையைத் தொடருகிறான் அமுதவன்.

உலகச் சினிமா அளவிற்கு தமிழ் சினிமாவும் போய்க்கொண்டிருக்கிறது என்பதற்கு பேரன்பு என்ற படம் ஒரு உதாரணம்.  அதை இயக்கிய ராமை பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறோம். இதேபோல் பல தமிழ் சினிமாக்கள் வந்து கொண்டிருக்கின்றன என்பதை நாம் உணர வேண்டுமென்று தோன்றுகிறது.

தடம் என்ற தமிழ்ப் படம் பார்த்தேன்..

அழகியசிங்கர்

2011ஆம் ஆண்டு இதே அமெரிக்காவிற்கு வந்திருந்தோம்.  ப்ளோரிடா என்ற இடத்தில் தங்கியிருந்தோம்.  ஒரு ஆங்கிலப்படம் பார்க்க அழைத்துச் சென்றான்.   இதே ஒரு பெரிய கட்டடத்தில் ஏகப்பட்ட திரை அரங்குகள்.  ஒரு ஆங்கிலப்படம் பார்த்தோம்.  இரவு நேரத்தில்.  வழக்கம்போல் அந்தப் படம் பார்க்க நாலைந்து பேர்கள்தான் தென்பட்டார்கள்.  படம் என்னவென்று புரியவில்லை.  படம் பார்க்காமல் தூங்கி வழிந்தேன்.  

8 ஆண்டுகள் கழித்து இப்போது பீனிக்ஸ் என்ற இடத்திற்கு வந்திருக்கிறேன்.  போனவாரம்  ஹார்க்கின்ஸ் திரையரங்கத்தில் தடம் என்ற தமிழ்ப் படம் பார்த்தேன். அது குறித்து எழுத உள்ளேன்.  திரை அரங்கத்தில் முதியவர்களுக்கு டிக்கட் விலை 8 டாலர்கள்.  மற்றவர்களுக்கு  எட்டரை டாலர்கள்.  

 தடம் தமிழ்ப் படத்தைப் பற்றி எழுத விரும்புகிறேன்  மகிழ் திருமேனி இயக்கியுள்ள படம்.  பொதுவாக திரை அரங்கில் தமிழ்ப் படங்களைப் பார்க்கும்போது  சிறிது நேரத்தில் நெளியாமல் இருக்க மாட்டேன்.  ரொம்ப தாங்க முடியாவிட்டால் எழுந்து போய்விடுவேன்.  ஆனால் தடம் படத்தை முழுவதும் ரசித்தேன். கடைசி வரை பார்த்தேன்.  வித்தியாசமான கதை அம்சம்.

ஆனால் இந்தப் படத்தில் தென்பட்ட பிரச்சினையும் புரிந்து விட்டது. இரட்டை வேடத்தை எடுத்து முக்கியமான பாத்திரம் ஏற்று நடித்த நடிகர் அதைச் சரிவர செய்யவில்லை என்று எனக்குத்  தோன்றுகிறது.  

இரட்டை வேடத்தில்  நடிக்கும்போது ஒரு வேடத்திற்கும் இன்னொரு வேடத்திற்கும் நடிப்பால் வேறுபடுத்திக் காட்ட வேண்டும்.  உதாரணமாக  üஎங்கள் வீட்டுப் பிள்ளைý என்ற படத்தில் எம்.ஜி.ஆர் இரண்டு வேடங்களையும் வேறு படுத்திக் காட்டி நடித்துள்ளார்

இதில் நடித்த நடிகருக்கு அது சரியாக வரவில்லை.  ஆரம்பத்தில் இப் படத்தைப் பார்க்கும்போது எனக்குக் குழப்பமாக இருந்தது.  ஆனால் போகப்போகத்தான் புரிந்தது.

இப்படி ஒரு நல்ல படத்தை இந்த நடிகர் ஓரளவு நடிப்பு மூலம் மட்டுப்படுத்தி விட்டாரா என்று தோன்றுகிறது.

பொதுவாக இரட்டை வேடம் என்றால் ஒரு கதாநாயகன் வீரனாகவும் இன்னொருவன் கோழையாகவும் காட்டுவார்கள்.  அல்லது ஒருவன் நல்லவனாகவும் இன்னொருவன் கெட்டவனாகவும் காட்டுவார்கள்.  பிறகு அதில் ஒரு சிக்கலை ஏற்படுத்தி அந்தச் சிக்கல் அவிழ்ப்பதுபோல் கதை போகும்.

இந்தப் படமும் அதற்கு விதிவிலக்கல்ல.  படத்தில் முக்கியமாக நான் கருதுவது போலீஸ் ஸ்டேஷன், கோர்ட்.   போலீஸ் வேடத்தில் நடித்திருக்கும் வித்யா ஸ்மிருதி சிறப்பாக நடித்துள்ளார். 

அப்பாவுடன் இருக்கும் எழில் நன்றாகப் படித்து சிறப்பாக வளர்கிறான்.   அடுக்குமாடி கட்டடம் கட்டுபவராக மாறுகிறான். ஆனால் அம்மாவால் வளர்க்கப்படும் கவின்  சரியாக வளர்க்கப் படாமல் கிட்டத்தட்ட ரௌடி மாதிரி திரிகிறான்.

படத்தில் சில விஷயங்களை ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கிறது.  சோனியா அகர்வால் நடித்திருக்கும் அம்மா பாத்திரம். 

இப் படத்தில் காணப்படும் காதல் காட்சிகள் நம்பும்படி இல்லை.  காதல் என்றாலே நெருக்கத்தை உண்டாகப்பட வேண்டும். உணர்வு மூலம் ஏற்பட வேண்டிய ஒன்று.   அந்த நெருக்கம் ஏனோ இதில் உணர முடியவில்லை.  இரும்புத்திரை என்ற படத்தில் சிவாஜியும் வைஜெயந்திமாலாவும் நடித்திருப்பார்கள்.  ஒருவரை ஒருவர் தொட்டுக்கூட நடித்திருக்க மாட்டார்கள். அதில் வெளிப்படும் காதல் நம்பும்படி இருக்கும். ஆனால் எப்போதும் ஞாபகத்தில் இருக்கும் ஒன்றாக இருக்கும்.  அவர்கள் ஒரு பாடல் பாடுவார்கள்.  கானா இன்பம் என்று ஆரம்பமாகும் பாடல்.  இன்னும் அந்தக் காட்சியை ஞாபகத்தில் வைத்துக்கொண்டிருக்கலாம்.  ஆனால் இந்தப் படத்தில்  காதல் விரசமாகக் காட்டுவதுபோல் தோன்றுகிறது. அமெரிக்காவிற்கு விமானத்தில் பயணம் செய்துகொண்டு வரும்போது குளோபல் படம் ஒன்றைப் பார்த்தேன்.  அதில் ஒரு காதல் படம்.  படம் பெயரெல்லாம் குறித்து வைத்துக்கொள்ளவில்லை.  ஒரு பெரிய பஸ் மாதிரி ஒன்றை ஒருத்தி ஓட்டிக்கொண்டு பல இடங்களுக்குச் சென்று கொண்டிருக்கிறாள்.  வழியில்; ஒரு வாலிபனைச் சந்திக்கிறாள். அவளுடன் அவனும் பயணம் செய்கிறான்.  . பயணத்தின்போது அவர்களிடையே காதல் ஏற்படுகிறது.   அவனுடன் சேர்ந்து செல்வதுதான் கதை. நிகழ்ச்சிகள் சிறப்பாகப் படமாக்கப்பட்டிருக்கின்றன.  

தடம் படத்தில் முக்கியமாக நான் கருதுவது கதைக்களம்.  அது சிறப்பாக அமைக்கப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது.  போலீஸ் வேடத்தில் நடிக்கும் வித்யா ப்ரதீப் பார்வையாலேயே எல்லோரையும் வசியப்படுத்துபவராகத் தென்படுகிறார். 

எழில் செய்யும் கொலையை மறைக்க கவினும் போலீசில் மாட்டிக்கொள்கிறான்.  அப்போதுதான் எனக்குப் புரிகிறது.  இரண்டு வேடஙகளில் நடிக்கப்படுகிற படம் என்று.  அதுவரை ஒன்றும் புரியவில்லை.  யாரைக் குற்றவாளி என்பதில் ஒரு குழப்பம் ஏற்படுகிறது.  கடைசியில் உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடித்து விடுவார்கள் என்று நினைத்துக்கொண்டு பார்த்தேன்.  ஆனால் கதை வேறு விதமாகப் போபய் விடுகிறது. 

இப்போதெல்லாம் சிறப்பான முறையில் தமிழ்ப்படங்கள் எடுக்கப்படுகின்றன.  நான் சென்னையிலிருந்து புறப்பட்டு வரும்போது செழியன் இயக்கிய டுலெட் என்ற படத்தைப் பார்க்க நினைத்தேன்.  முடியாமல் போய்விட்டது. 

மகிழ் திருமேனி பாடலே இல்லாமல் 2 மணி நேரத்திற்குப் பார்வையாளர்களை ரசிக்க வைத்திருக்கிறார்.  இதில் அவர் வெற்றி பெற்றுள்ளார்.  

இன்னொரு முறை பார்க்க வேண்டும்….

நான் இந்த 15வது சென்னை சர்வதேசப் பட விழாவில் பார்த்த ஒரே தமிழ்ப்படம் üமனுசங்கடாý. அம்ஷன்குமார் இயக்கியப் படம் இது. இப்படத்தைப் பார்த்துவிட்டு வந்த பிறகு எனக்குத் தோன்றியது இலக்கிய நண்பர் ஒருவருடன் பல ஆண்டுகளுக்கு முன் ராஜகுமாரி தியேட்டரில் பார்த்த குருதத்தின் படம். படம் முடியும் தருவாயில் என் பக்கத்தில் அமர்ந்திருந்த இலக்கிய நண்பர் கண்ணீர் விட்டு அழுதுகொண்டிருந்தார். அவருடைய அழுகை எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. ஒரு சினிமாப்படம் என்பது என்ன? அது நமக்குத் தெரியாத இன்னொருவர் வாழ்க்கையைச் சொல்வது. அதன் மூலம் நமக்கு மகிழ்ச்சியும் திகைப்பும் ஏற்படுகின்றன. சிலசமயம் தாங்க முடியாத வருத்தத்தையும் ஏற்படுத்தாமல் இல்லை. அம்ஷன்குமார் படம் நிஜ வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு துயரமான சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது.
வாழ்க்கையில் தென்படும் சோகம் மனதின் துயரத்தை அதிகரித்துவிடும். படம் பார்த்தாலும் இந்த உணர்வு ஏற்படாமல் இருக்காது. ஆனால் நாம் படம் பார்க்கிறோம் என்ற உணர்வு முக்கியம். மனுஷங்கடா படம் கூட ஆரம்பக் காட்சியிலிருந்து கடைசி வரை ஒரு சோக நிகழ்ச்சியை வெளிப்படுத்திய வண்ணம் இருக்கிறது. அப்பாவின் மரணத்தால் துயரமடைகிற இளைஞன் கோலப்பன் தன்னுடைய கிராமத்திற்குச் செல்கிறான். அங்கே அவன் எதிர்கொள்கிற பிரச்சினை எல்லோர் மனதிலும் ஒரு கேள்விக்குறியை உருவாக்காமல் இருக்காது.
ஊருக்குச் சென்ற இளைஞனைத் தேடி அவனுடைய தோழி அவன் கிராமத்திற்கு வருகிறாள். அவன் வசிக்குமிடத்தை பாதையில் எதிர்படுகிற இளைஞர்களிடம் கேட்கிறாள். அப்படிக் கேட்பதன் மூலம் அவனமானப்படுகிறாள். அவளுக்கு அந்தக் கிராமம் எப்படி என்பது புரிந்து விடுகிறது.
பிணத்தின் முன் கோலப்பனின் அம்மா பாடுகிற ஒப்பாரி பாடலுடன் படத்தின் முக்கியக் கட்டம் நகர்கிறது. உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து அம்ஷன்குமார் படம் எடுத்துள்ளார். இப்படம் பார்க்கும்போது பல தமிழ்ப் படங்கள் ஞாபகத்திற்கு வருகின்றன. உண்மையில் இந்தப் படத்திற்கும் ஞாபகத்தில் வருகிற அந்தப் படங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. கதை விஷயத்தில். உதரரணமாக ருத்ரய்யாவின் அவள் அப்படித்தான், ஜான் அப்ராஹமின் அக்ரஹாரத்தில் கழுதை
ஏன சில பாலசந்தர் படங்களை நாம் எப்படிப் புரிந்துகொள்ள முயற்சி செய்கிறோமோ அப்படித்தான் இந்தப் படத்தையும் நாம் புரிந்துகொள்ள முயற்சி செய்யவேண்டும். ஆனால் ஒரு விஷயத்தில் ஒற்றுமை இருப்பதாகப் படுகிறது அந்தப் படங்களைப்போல் கதை நகர்கிற விதத்தில்.
கோலப்பன் வீட்டில் உறவினர்கள், நண்பர்கள் என்று சூழ்ந்துகொண்டிருக்கிறார்கள். பிணத்தை எடுத்துக்கொண்டு பொது வழியில் போய்ப் புதைக்க முடியவில்லை. தலித்துக்கென்று இருக்கின்ற வழியில் செல்ல முடியவில்லை. அது காட்டுப் பகுதியாக இருக்கிறது. தலித்துக்கும் மற்றவர்களுக்கும் இடையே உள்ள போராட்டம்தான் இந்தக் கதை.
பின்னணி இசை இல்லாமல் கிராமத்தின் மௌனத்தை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறார். பார்வையாளர்களுக்கு தாமும் ஒரு கிராமத்தில் இருப்பதான உணர்வு ஏற்படாமல் இருக்காது. எந்தக் காட்சியிலும் மிகைப்படுத்தப்படாத உணர்வை எழுப்புகிறார்.
கோலப்பனின் அம்மா அவனுடைய தோழிக்கு அவன் அக்காவை அறிமுகப்படுத்தும் காட்சி துக்கத்திலும் சிறப்பாக அமைந்திருக்கிறது.
பொது வழியில் பிணத்தை எடுத்துக்கொண்டு போக கோர்ட் சாதகமாக தீர்ப்பு வழங்கியும், பிணத்தை எடுத்துக் கொண்டு போக முடியவில்லை. ஆதிக்க சாதியினரின் கெடுபிடிதான் இதற்குக் காரணம். இங்கு போலீஸ்காரர்கள், அரசாங்க ஊழியர்கள் என்று எல்லோரும் எதிராக உள்ளார்கள். சென்னையில் ஒரு மூலையில் இருக்கும் எனக்கு இதெல்லாம் சாத்தியமா என்ற கேள்வி எழாமல் இல்லை.
கோலப்பனையும் அவன் உறவினர்களையும் போலீஸ் வண்டியில் வலுக்கட்டாயமாக அழைத்துப் போகிறார்கள். கோர்ட் உத்தரவு இருந்தும் ஒன்றும் செய்ய முடியவில்லை. அவர்கள் போலீஸ் வண்டியில் அழைத்துக்கொண்டு போகும்போது ஒரு காட்சி வெளிப்படுகிறது. போகும் வழியில் ஆதிக்க ஜாதியினர் கல்லெடுத்து அடிக்கிறார்கள். பார்க்கக் கொடுரமாக இருக்கிறது.
இறுதியில் இன்குலாப் எழுதிய கவிதை பாடலாக ஒலிக்கிறது. உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட படம். படம் தொய்வில்லாமல் வசனத்திற்கு அதிகம் முக்கியத்துவம் தராமல் காட்சியாகவே பலவற்றைக் காட்டியிருக்கிறார்.
இந்தப் படம் தியேட்டரில் வெளிவந்தால் இன்னொரு முறை பார்ப்பதாக இருக்கிறேன்.