மம்மூட்டி நடித்த பேரன்பு

அழகியசிங்கர்

இந்தப படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது படத்தில் என்ன பெரிதாகச் சொல்லமுடியப்போகிறது இயக்குநர் ராமால் என்ற எண்ணம் ஏற்பாடாமல் இல்லை. ஆனால் படம் பார்த்தப்பின்தான் மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடிக்கும் சாதனா மீது அளவு கடந்த பச்சாதாப உணர்வு ஏற்படுகிறது.  அப்படி ஒரு பெண்ணை வளர்ப்பது என்பது சாதாரணமாகத் தெரியவில்லை.  அந்தப் பெண்ணுடன் போராடும் அப்பாவாக நடிக்கும் மம்மூட்டியும் நம் கண்களை விட்டு அகலவில்லை. 

ஆனால் இதையெல்லாம் கொஞ்சங்கூட போரடிக்காமல் படமாக எடுத்துக்கொண்டு போகிறார் ராம்.

இந்த முடக்குவாதப் பெண்ணைப் பார்த்துக்கொள்ள விரும்பாத அந்தப் பெண்ணின் அம்மா வேறு ஒருவருடன் வாழ ஓடிப்போய் விடுகிறாள்.

அவளுடைய செயல் அவள் கணவன் அமுதவன் துபாயிலிருந்து வருவதற்குக் காத்துக்கொண்டிருநததுபோல் இருந்தது.   அமுதவனுக்கு கூட இருந்தவர்களும் ஒத்துழைப்புத் தரவில்லை.  இந்தப் பெண்ணை எப்படியாவது தொலைத்துவிடு என்பதுபோல் அவன் அம்மாவே சொல்கிறாள்.  

குடியிருக்கும் வீட்டிலும் அவனால் இருக்க முடியவில்லை.  அதனால் தனியாக ஒரு மலையடிவாரத்தில் உள்ள வீட்டை பத்து லட்ச ரூபாய்க்கு வாங்கிக்கொண்டு வசிக்கிறான்.  யாரும் மனிதர்கள் இல்லாத இடமாகவும், குருவிகள் அழியாத இடமாக அவன் வசிக்குமிடம் இருக்கிறது.  அங்கும் அவனுக்குச் சோதனை.  வெள்ளைக்காரியிடமிருந்து பத்து லட்ச ரூபாய்க்கு வாங்கிய வீட்டை அவனிடமிருந்து அபகரித்துக்கொள்ள முயற்சி நடக்கிறது.  எவ்வளவு பணம் கொடுத்தாலும் வீட்டை விற்க மறுக்கிறான் அமுதவன்.

கதை முழுவதும் முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணைப் பார்த்துக்கொள்வதுதான் இந்தக் கதை.   இதை ஒரு கதைச் சொல்லியின் பாணியில் படத்தை இயக்கி உள்ளார் ராம்.  அத்தியாயம் அத்தியாயமாகப் படத்தை நகர்த்திக்கொண்டு போகிறார். 

அந்தத் தனிமையான இடத்திற்கு உதவி செய்ய வரும் ஒரு பெண்மணி ஒருநாள் மட்டும் உதவி செய்ய வந்துவிட்டுப் போய்விடுகிறாள். அமுதவன் தானே எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வது என்ற முடிவுக்கு வருகிறேன்.  

அப்போதுதான் தன்னை விஜயலட்சுமி என்று அறிமுகம் செய்துகொண்டு ஒரு பெண் வருகிறாள்.  சாப்பாட்டுக்கு வழியில்லை அங்கயே இருக்கிறேன்.  எந்த வேலையும் செய்கிறேன் என்கிறாள்.   அந்தப் பெண் ஏற்கனவே திருமணம் ஆனவள்.  அவனை ஏமாற்ற வந்திருக்கிறாள் என்பது அவனுக்குப் புரியவில்லை. அவளுடன் ஏற்பட்ட காதலால் அமுதவன் அவளை யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொள்கிறான்.  இதெல்லாம் ஒரு நாடகம் என்பதும் அவனிடமிருந்து அவன் இடத்தை அபகரிக்கும் திட்டம் என்பதும் அவனுக்குப் புரியவில்லை.  

அமுதவன் அந்த இடத்தை அவர்களிடம் விட்டுவிட்டுப் போகும்போது, விஜயலட்சுமியும் ஏற்கனவே திருமணம் செய்துகொண்ட கணவனும், அவர்கள் ஏன் அப்படி செய்தார்கள் என்பதைக் கேட்கும்படி சொல்கிறார்கள்.  அந்த இடத்தில் அமுதவன் சொல்வதைக் கேட்கும்போது படம் பார்ப்பவர்கள் மனம் நெகிழ வைக்கும்.  கோபம், பழி வாங்கும் எண்ணம் எல்லாவற்றையும் விட்டுவிடுவதற்கு இந்த இயற்கைதான் சொல்லிக் கொடுப்பதாகக் கூறிவிட்டுச் சொல்கிறான்.  இப்படி வசனங்களை அங்கங்கே தெறிக்க விடுகிறார் ராம்.  பல நெகிழ்ச்சியான காட்சிகளை மிகவும் நுணுக்கமாக எடுத்துக்கொண்டு போகிறார்.

தன் பெண்ணை அழைத்துக்கொண்டு தொடர்ந்து அமுதவன் படும்பாடுதான் இந்தக் கதை.  சென்னை நகரத்தில் அவர்கள் ஓட்டல் அறைகளில் தங்குகிறாரகள்.  தன் பெண்ணைத் தனியாக விட்டுவிட்டு அறைக் கதவைப் பூட்டிவிட்டு அமுதவன் கார் ஓட்டச் செல்கிறான்.  அந்தப் பெண் ஜன்னல் வழியாக அவள் அப்பா செல்வதைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள் ஏக்கத்துடன்.  இன்னொரு இடத்தில் ஜன்னல் வழியாகப் பார்க்கும்போது பள்ளிக்கூடம் தெரிகிறது.  பள்ளிக்கூட யூனிபாரம் மீது அவள் கவனம் செல்லுகிறது.  அதுமாதிரி ஒரு யூனிபாரம் வாங்கிக் கொடுக்கிறார் அப்பா. குவா

தனியாக ஓட்டல் அறையில் விட்டுவிட்டுச் செல்வது அமுதவனுக்குப் பெரிய பிரச்சினையாக இருக்கிறது.  அதனால் தன் பெண்ணை காப்பகத்தில் கொண்டு வந்து சேர்க்கிறான்.  அங்கும் அந்தப் பெண்ணைச் சரியாகப் பார்த்துக்கொள்வதில்லை.  அத்துடன் இல்லாமல் அடித்துக் கொடுமைப் படுத்துகிறார்கள்.  அமுதவன் தனியாக ஒரு வீடு பார்த்து அழைத்துப் போகிறான்.   ஆனால் அவன் இல்லாத நேரத்தில் பெண்ணைப் பார்த்துக்கொள்ள முடியவில்லை.  இந்தத் தருணத்தில்தான் அறவாளி மீரா என்பவருடன் அவனுக்கு அறிமுகம் கிடைக்கிறது. அந்தப் பெண்ணை உதவிக்குக் கூப்பிட வேண்டுமென்று அவனுக்குத் தோன்றவில்லை.

அமுதவன் கடைசியாக ஒரு முடிவுக்கு வருகிறான்.  பெண்ணுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொள்வது என்று.  கடற்கரைக்குப் பெண்ணை அழைத்துச் செல்கிறான். யூனிபார்முடன் பெண்ணும் வருகிறாள்.   தற்கொலைக்கு கடலை நோக்கிப் போகப் போக பெண்ணிற்குப் புரிந்து பெரிதாக சத்தம் போடுகிறாள்.  அந்தத் தருணத்தில்தான் அந்தப் பெண்ணைக் காப்பாற்ற மீரா வருகிறாள்.

தன் பெண்ணைப் பார்த்துக்கொள்ள மீராவைத் திருமணம் செய்துகொண்டு தன் வாழ்க்கையைத் தொடருகிறான் அமுதவன்.

உலகச் சினிமா அளவிற்கு தமிழ் சினிமாவும் போய்க்கொண்டிருக்கிறது என்பதற்கு பேரன்பு என்ற படம் ஒரு உதாரணம்.  அதை இயக்கிய ராமை பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறோம். இதேபோல் பல தமிழ் சினிமாக்கள் வந்து கொண்டிருக்கின்றன என்பதை நாம் உணர வேண்டுமென்று தோன்றுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன