பயணத் துணை

தேரியின் சிவந்த மண்ணில்
மரங்களும் பறவைகளும் பார்த்திருக்க பசியாறினோம்
மேல்தளம் இருந்தவர்கள்
ஒன்றிரண்டு படியேறியவர்கள் குறித்து
நம்பிக்கையை நதியாக்கினர்
முதல் படியில் இருப்பவனுக்கு தேவைப்படும் கவனத்தையும்
பிடித்துக்கொள்ள வேண்டிய கைப்பிடிச் சுவற்றின் ரகசியங்களையும்
அன்பால் செலுத்திக் கொண்டிருந்தனர்
அருகிருந்த நெல்லி
மெல்ல மெல்ல பெருக்கத் துவங்கியது
தன் துவர்ப்பை இழந்துவிடாது
சற்றைக்குப் பின் மதுக்குடுவைகள் வந்தமர
அறை அன்பின் தேவாலயமானது
பல்படாது செய்நேர்த்தியோடு செயலாற்றுபவனென்றும்
இத்தனைபேர் இருக்க எனக்கென்னடாவென
ஆசுவாசப் பறவைகளை மிதக்கச் செய்தும்
இதேதான் பற்றிக்கொண்டாய்
விட்டுவிடாது தொடரென்றும்
வார்த்தைகள் குலைந்து குலைந்து
பூ முத்தங்களாக மிளிர்ந்து அடங்கியது
பயணிக்கிறேன்
மயில்தோகையின் வருடல்களோடும்
ஓயாது கூவிய சேவலின் இசையோடும்…

உதிர்வு

நெடிதாய் பேசி களிக்க
ஆவலில் சோளமாய் பொறிந்திடுவேன்
பக்கத்து வீட்டக்கா வந்திருக்காங்க
அப்புறமென அணைச்சிச் செல்லவும்…
உன் மலர்ச்சியை
இந்நாள்வரை கண்டிலேன் எப்பூவிலுமெனும்
எஸ் எம் எஸ்களை ஒருவழிப்பாதையில் கிடத்திடவும்…
ஒரு இலையை உலர்த்தி
உதிரச்செய்யும் செடியாகவும்
மாற்றங்கொள்வதேன் மதுவாகினி.

நதி ஈந்த எறும்பு

ஓய்விலிருந்தது மாமரம்
உதிர்ந்த இலைகளோடு நானும்
நழுவிய தினசரியிலிருந்த
அணைக்கட்டின் மீது ஊர்ந்தன
வெள்ளை நிறத்திலும் கருப்பு நிறத்திலுமாக
இரு சாரியாக எறும்புகள்
வெள்ளையின் பசியறிந்த கருப்பு
சுமந்துவந்த வயலை ஈந்தது
கருப்பின் தாகமறிந்த வெள்ளை
விழுங்கிவந்த நதியை கொடுத்து கொடுத்து
தன்போக்கில் நகர்ந்துகொண்டிருந்தன…

மாயங்கள் புரிகிறதே மதுவாகினி

உன்னுடனான உரையாடலுக்குப் பின்
செத்தை வெளியேற்றிய தாய்பசுவின் அமைதி கவ்வ
நூல் கோர்த்து தொங்கவிடப்பட்ட
வண்ண பலூன்களாக மிதக்கும் உன் வார்த்தைகள்
என்னுள் பயணிக்கத் துவங்குகிறது
சலவைக்குறியின் மையாகி
மகரந்தம் விதைக்கும் தட்டானாகவும்
நிலத்தை உயிர்ப்பூட்டும் மண்புழுவாகி
ஊற்றுக் கண்ணாகி கினற்றை ஈரமாக்குகிறது
இலுப்பை பூவாகி உடலை சக்கரையாக்கி
பவளமல்லியாகி சுவாசம் மணந்திட்டு
தொட்டாஞ்சிணுங்கியாகி நாணம் காட்டுகிறது
சுற்றும் நாய் ஒன்றிற்கு
பரிவுபொங்க சோறிட்டு
மீந்த மீந்த பாலூட்டுகிறது பூனைக்கு
வழிய வழிய செடிகளுக்கு நீர் இறைத்து
கையேந்துபவருக்கு ரூபாய்தாளை பிச்சையிடுகிறது
இருசக்கர வாகனத்தையும்
குதிரைகள் பூட்டிய ரதமாக்கி
புவி ஆளப் பிறந்தவனாய் பவனி வரச்செய்து
மாயங்கள் புரிகிறதே மதுவாகினி…

தரக்குடும்பம்

இரவை புணர்ந்தெழுந்ததும்
தொங்கவிடப்பட்ட வெள்ளை துணி மூடி
கொட்டாவி இறுமலை முடித்து
மூக்கின் துவாரங்களில்
காற்றோடு கணநேரம் பயிற்சித்தேன்
கற்பிக்கப்பட்டதை பிசகிடாது
பல் துடைப்பத்தில் பற்பசை இட்டேன்
குறுக்கும் நெடுக்குமாக அசைக்க
நினைவு உறுத்தியது
அய்யய்யோன்னு தலையிலடித்து
மேலும் கீழுமாக அசைத்து துலக்கினேன்
தர முத்திரையிட்ட
சோப்பு ஷாம்புகளால் உடல் கழுவினேன்
துணையாளும் அவங்களுக்கான அட்டவணையின்படி
ஸ்டிக்கரால் பெயரிடப்பட்ட டப்பாக்களிலிருந்து
வெகு எளிதாக சமைத்து முடிக்க
கொடுக்கப்பட்ட காலத்திற்குள் தயாராகி
காலனிகளின் அணிவகுப்பிலிருந்து
எனை பெயர்த்து வெளியேறினேன்
வெளிச்சுவற்றில் மின்னிக்கொண்டிருந்தது
என் தினக்கூலியை உத்திரவாதப்படுத்திக்கொண்டிருக்கும்
ISO தரச்சான்று இல்லமெனும்
பாலிமர் சீட்டில் பொறிக்கப்பட்ட
பச்சை எழுத்துக்கள்…

முகம்

ஊரின் முகத்தை தீர்மானிக்க
அலையத் துவங்கினேன்
மேற்கிலிருந்து பார்க்க கிழக்கும்
கிழக்கிலிருந்து திரும்ப மேற்கும்
வடக்கிருந்து வர தெற்கும்
தெற்கிருந்து இறங்க வடக்குமென
எதிரெதிர் துருவங்கள்
முகப்பாய் மாற்றம்கொள்ள
தோல்வி பனிபோர்த்த வீடடைந்தேன்
நிலைக்கண்ணாடி
ஒற்றைத் தன்மையோடு தொங்கவிட்டது முகத்தை…