சொற்களை இழுத்துப் போகும் எறும்புகள்..


ஜன்னல் திரை விலகிய
நுண்ணிய கணத்தில்
கொஞ்சமாய் இந்த அறையினுள் நுழைந்துவிட்ட வானத்தை
என்ன செய்ய
சார்த்தி வைத்திருக்கும் வாசல் கதவின்
கீழ் இடுக்கு வழியே
எனது வார்த்தைகளைத் துண்டு துண்டுகளாக
இழுத்துப் போகும் அந்த எறும்புகளை
எப்படி அதட்ட
பிளாட்பாரத்தில் வளர்ந்திருக்கும்
கார்ப்பரேஷன் மரத்தின்
அடர்த்திக் கிளையிலிருந்து
சதா எதையாவது சொல்லித் திட்டிக் கொண்டிருக்கும்
அணில்களை எப்படி புரிய வைக்க
உங்கள் ஜன்னலுக்குள் அத்துமீறி
நுழைந்துவிட்டவன் நானென்று
******

கிழிபடும் மிச்சத்தின் பட்டியல்

பழைய பெயர் பட்டியலின்
கிழிபட்ட மிச்சத்தின் மீது புதிய பட்டியல்
ஒட்டப்படுகிறது

ஒரு பிரிவு
ஓர் ஏக்கம்
ஒரு காதல்
ஒரு புன்னகை
ஒரு காமம்
ஒரு பசலை
ஒரு துக்கம்
ஒரு வஞ்சம்
ஒரு கருணை
ஒரு துரோகம்
ஒரு யாசிப்பு

மற்றுமோர் பிரிவு
மற்றுமொரு தொடக்கம்
முற்றிலும் விடைபெறல்

பயணத்தைத் தொடங்குகிறது ரயில்
இன்னும் தீர்ந்திராத தவிப்புகளோடு 
பழைய பயணிகளின் ஸ்டேஷன்களை நோக்கி 

*******

பிரத்யேக நிறம் சூழ்ந்த நடைபாதை..

 

*
மரணத்தின் குறிப்பேட்டில்
கையெழுத்து வாங்கும் தாதி
அவசரமாகத்
தவிர்த்து விடுகிறாள்
கேள்விகளையும்
அதற்குரிய பார்வைகளையும்

திறந்து அவளை உள்வாங்கிக் கொள்ளும்
கண்ணாடிக் கதவுக்கு அப்பால்
நிதானமாய் நீள்கிறது
பிரத்யேக நிறம் சூழ்ந்த ஒரு நடைபாதை

நம் கைகளோடு தங்கிவிடுவது
ஒரு பேனா மட்டுமே

******

குற்றத்துக்கான புள்ளி..

*
திருந்தி விடுவது பற்றி விவாதித்துக் கொண்டிருந்த பகலில்
சூழ்ச்சிக்கான முதல் புள்ளியைக் கையில் வைத்திருந்தேன்

நாளது வரை நடந்த சம்பவக் குறிப்புகள்
எட்டு மடிப்புக் காகிதக் கோடுகளின்
அழுக்கேறி கிழிந்திருக்கிறது

ஒவ்வொரு எழுத்தின் வன்மத்தையும் அலசித்
தழுதழுத்த நாக்கின் நுனி சிவந்திருந்தது

சுலபம் என்கின்றன மனச் சுவர்கள்
பாதுகாப்பின் உச்சியில் நீரோடும் மின்சாரக் கம்பிகள்
தருணங்களின் கணத் துளிகளை ஆவியாக்குகின்றது

திருந்தி விடுவது பற்றி விவாதித்துக் கொண்டிருக்கும் பகல்
எங்கோ ஓர் இருட்டின் தனிமையில்
சத்தமில்லாமல் திறந்து விடுகிறது குற்றத்துக்கான
இறுதிப் புள்ளியை

******

எங்கும் தேங்கி நிற்கும் உனது மணித்துளிகள்..


*
ஒரு அனுமதி என்னைக் கொஞ்சம்
அசௌகரியப்படுத்துகிறது
அது உன் அறைவாசலில் எப்போதுமே நிரந்தரமாய்
ஸ்டூல் ஒன்றைப் போட்டு வைத்திருக்கிறது

வருவதும் போவதுமான உத்தரவுகளை
அச்சிட்டுக் காகிதத்தில் வைத்திருக்கிறாய் 

உனக்கான மணித்துளிகள்
உனது இருப்பிடத்தில் தொடங்கி அலுவலகம் வரை
மழைக்குப் பின்னான நீர்த் துளிகளைப் போல்
எங்கும் தேங்கி நிற்கிறது
முறை செய்யப்பட்ட பாதுகாவலோடு

சின்னஞ்சிறிய உதவி ஒன்றைக் 
கோரவும்
ஒரு பால்ய நினைவைப் பகிரவும்
காத்திருக்க நேரும்
ஒரு அனுமதி என்னைக் கொஞ்சம் அசௌகரியப்படுத்துகிறது

மௌனங்களை இழைப் பிரித்துத் தொங்கும் நிறம்..

மிகச் சிறிய துரோகத்திலும் கூட
அந்த நேர்த்தியை நுட்பமாய்
செய்து பழகினான்

மௌனங்களை இழை இழையாய்ப் பிரித்து
அறையெங்கும் தொங்க விட்டிருந்தான்
ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிறம்
அதன் நிறங்களின் நிழல்
சுவர்களில் எப்போதும் வழிந்துக்கொண்டேயிருக்கும்
அதன் நீள அகலங்கள் கணக்கிடப்பட்டிருந்தன

அவனுடைய தனிமையை
எப்போதும் பகிர்ந்து கொண்ட மின்விசிறியில்
முந்தின இரவு குளிருக்கென பயன்பட்ட
போர்வையை முடிச்சிட்டுத் தூக்கில் தொங்கிய
அவனது உடலுக்கும்
தரைக்குமான இடைவெளியை
கச்சிதமாக முடிவு செய்திருந்தான்

காவல்துறை எழுதிய மரணக் குறிப்பில்
அது பதிவாகவில்லை
துப்புத் துலக்கித் தேடப்பட்ட ஏதோ ஒன்று
அத்தனை ஒழுங்குகளையும் கலைத்துவிடும் காரணத்தையும்
அவன் விட்டுச் சென்றிருந்தான்

******
 

பொம்மையோடு முணுமுணுக்கும் ரகசியங்கள்..


*
பாப்பாவுக்கு நிலவைத் தொட்டு
ஊட்டும் சோற்றில்
விக்கல் உடைந்து
தெறிக்கிறது நட்சத்திரங்கள்

விரியும் முன்
அவள் பறிக்கும் மொட்டு
கைக் கூப்பி மணக்கிறது
குட்டி விரல் பிரித்து நிறம் நுகரும்
ஈரத்தில் 

தரையில் படரும் வெயிலை
நகம் சுரண்டிப் பிரிக்கிறாள்
நீளும் நிழல் துரத்தி
ஓடுகிறாள்

தன்  பொம்மையோடு மட்டும்
ரகசியங்களை முணுமுணுத்து
அதன் காதுகளைத் திருகி
தலைக் குனிந்து
உச்சரிக்கிறாள்

******

முடிவற்று நீளும் பயணத்தின் வெற்றுக் கால்கள்

 
அந்தத் தெரு வழியே நடக்கும் நிழல்களில்
ஒன்று வயதானது
மற்றொன்று இளவயது

தொலைந்து போன தருணங்களின்
ரகசியங்களை
அளவில் அடங்காத மலர்தலை
சொல்ல விரும்பும் தயக்கத்தை
கதவடைத்துக் கொள்ளும் மௌனங்களை
கருணையின் மீது பிரயோகிக்கப்படும் சாபங்களை

யாவற்றையும் உருக்கி ஊற்றும் வெயில்
பிளாட்பாரம் ஏறி நிதானிக்கும் வெற்றுக் கால்களை
குறுகுறுக்கச் செய்து சூடேற்றுகிறது
மேலும் நடக்கத் தூண்டி
முடிவற்று நீளும் பயணத்தை நோக்கி

எல்லாத் தெரு வழியேயும் நடக்க நேரும் நிழல்கள்
இரண்டுக்கு மேற்பட்டவை
ஆனால்
ஒன்று வயதானது
மற்றொன்று இளவயது

******
 

திருகும் தண்ணீர்த் துளிகள்..

*
மேஜையின் எதிர் விளிம்பில் முடிந்து விட்டது
வசீகரத்துக்கென விரித்திருந்த மஞ்சள் பூக்கள்

விரல் நகங் கொண்டு நீ திருகும்
தண்ணீர்த் துளிகளில் கரைந்துக் கொண்டிருக்கிறது
பேச முடியாமல் தவிக்கும் உனது வார்த்தைகள்

நெற்றிப் பரப்பில் மிச்சமிருக்கும்
எனது வெயிலை ஒற்றியெடுக்க
பயன்படும் நாப்கின்னில்

காத்திருந்த வரை நீ வரைந்து வைத்த
கோட்டுச் சித்திரமொன்று
கையேந்திச் சிரிக்கிறது
நம் மௌனத்தை

கூரையிலிருந்து வழியும்
ஆரஞ்சு நிற விளக்கொளியில்
உன் முகத்தில் படர்ந்துக் கொண்டிருக்கிறது
மஞ்சள் பூக்களின் இதழ்கள்

*******
 

சொல்லிச் சென்ற நொடியிலிருந்து..

*
நீ
மீண்டும் வருவதாக
சொல்லிச் சென்ற நொடியிலிருந்து
நான்கு மொட்டுகளோடு
மலராமல் காத்திருக்கிறது
பூச்செடி

உனக்கென எழுதிக் கொண்டிருக்கும்
கடிதத்தை
நினைக்கும் கணமெல்லாம்
மேஜை விளிம்புவரை வந்து
எட்டிப் பார்த்து விலகுகிறது
ஜன்னல் திரை

ஒரு வார இடைவெளியை
ஓராயிரம் பட்டாம்பூச்சி சிறகுகளின்
வர்ணங்கள் உதிர்ந்து
புரியா ஓவியமாகிறது இத்தனிமை அறை

******