ஒரு கவிதை

ஒரு கவிதை
தன்னை எழுதிக்கொள்ள
சொற்களை எதிர்பார்த்து
காத்துக்கொண்டிருக்கிறது.
என்னிடம்.

இடையே வந்த தென்றல்
கொஞ்சம் அதன் முடியை
மயிலிறகு கொண்டு
நீவிச்சென்றது

அவ்வப்போது பெய்த
சிறு மழைத்துளிகள்
கலைந்த முடிகளை
சிறு கற்றைகளாக்கிச்சென்றது

அக்கற்றைகளிலிருந்து
வடிந்த மழைத்துளிகள்
காதோர மணிகளில்
தொக்கி நிற்க, அதில்
சூரியன் தன் முகம்
பார்த்துச்சென்றது.

இன்னும் தான்
உனக்குப்போதுமான
சொற்கள்
கிடைக்கவில்லையா
என அக்கவிதை
என்னை கேலி
செய்துகொண்டிருக்கிறது.

ஒரு புன்முறுவல்
கிடைத்தால்
இந்தக்கவிதை
முழுமை பெறும்
யாரேனும் அதனிடம்
சொல்வீர்களா..?!

எப்படி சௌகரியம் ?!
மழைச்சாரலில் நனைந்த
என் கவிதையை
உலரவைக்க தென்றலை
எதிர்பார்த்து காத்திருக்கிறேன்
உலராத உயிர்ப்புள்ள
கவிதையில் மட்டுமே
விருப்பமுள்ளவராயின்
முன்னரே நனைந்துள்ள
உங்களின் ஈர இதயம் காட்டி
என்னிடமிருந்து
கவிதையைப்
பெற்றுக்கொள்ளலாம்
உலர்ந்து தெளிந்த
கவிதையில் மட்டுமே
விருப்பமுள்ளவராயின்
அலங்கமலங்கலாக
சிறிது அழிந்து மறைந்த
எழுத்துகளை உங்கள்
விருப்பப்படி நிரப்பிக்கொள்ள
வேண்டிவரும்.

காதல் கவிதைகள்

கொஞ்சம் காதல்
கவிதைகள்
எழுதித்தரவேண்டும்
என பதிப்பாளர்
என்னிடம் கேட்டிருக்கிறார்,
யாருக்கேனும் என் கனவில்
வந்து போக விருப்பமா ?
ஏற்கனவே பிறரின் கனவுகளில்
உலவியவராயிருப்பினும்
பரவாயில்லை.
நீங்களும் உங்கள் நினைவுகளும்
என் காதல் கவிதைகளில்
நிச்சயம் இடம்பெறும்
என்பது உறுதி.
என் கனவுகளில் என்றும்
நிலைத்திருக்க வேண்டிவரும்
என்று அஞ்சத்தேவையில்லை.
அச்சில் வெளிவரப்
பெறுமானமுள்ள
கவிதைகள் தேறும் வரையே
உங்களின் நினைவுகள்
எனக்குத் தேவைப்படும்
நான் உறங்கிக்கொண்டிருக்கும்
நேரம் பார்த்து என் கனவுகளில்
நுழைந்துவிடுங்கள்
நான் விழித்திருக்கும் நேரம்
நுழைய நேர்ந்தால்
எப்போதும் அழியாமல்
தங்கிவிட வாய்ப்புண்டு.

பயம்

திருவிழா
விடுமுறையின்
கடைசி நாள் இரவில்
வரும் அடுத்த நாள்
பள்ளிக்கூடப்பயமும்,
ஞாயிறு இரவு
சினிமாவின்போது வரும்
அடுத்த நாள்
அலுவல் பயமும்
ஒன்றாகத்தான்
தோணுகிறது.

கவிதை

அடித்து, திருத்தி
காதுகளைத்திருகி
கொம்புகளை முறுக்கி,
மடக்கி, நீட்டி,
வைத்து, எடுத்து
சரி செய்து கொண்டேயிருக்கிறேன்.
மடியிலிருக்கும் அடங்காத
சிறுகுழந்தையைப் போல
எப்போதும் என் கவிதைகளை

காதல் திசை

வலமிருந்து இடம் தான்
தமிழும் இன்னபிற மொழிகளும்
எழுத வேண்டும்,
செ
ங்
கு
த்
தா
த்
தா
ன்
சைனீஸ் எழுத வேண்டும்,
ன்தாம்லவ துந்ருமிடஇ 
அராபிக் எழுத வேண்டும்
உனக்கு என்
காதலைப்புரியவைக்க
நான் எந்தத்திசையில்
எழுத வேண்டும் ?!

மெட்டமார்ஃபஸிஸ்

எனக்கே தெரியாமல்
எனது அறைக்குள் ஒரு பச்சோந்தி
நுழைந்து விட்டது,
என்னிடம் அனுமதி கேட்கவுமில்லை
அதை அது எதிர்பார்க்கவுமில்லை.
அதை விரட்ட பெரும்பாடாயிற்று.
சில நாட்கள் கழித்து
பின்னர் அதைத்தொடர்ந்து
ஒரு பாம்பும் நுழைந்து விட்டது,
சரி பச்சோந்தியைப்பாம்பு
தின்று விடும் என்று
எனக்குள் மகிழ்ந்து கொண்டேன்
சில நாட்களாக பச்சோந்தியைக்காணவில்லை
பாம்பு மட்டும் உலாத்திக்கொண்டிருந்ததை
என் கண்ணால் காண நேர்ந்தது.
சரி உண்டு விட்டது என்று
நினைத்து மகிழ்ந்த போது
பாம்பின் நிறம் மாறிக்கொண்டே வந்து
மீண்டும் பச்சோந்தியாகி விட்டது.
இப்போது
பச்சோந்தியிடம் பாம்பாக
மாறும் வித்தையைப்பயின்று
கொண்டிருக்கிறேன்
என்னைத்தொந்தரவு செய்யாதீர்கள்.

பறவைகளின் திசை

அன்று அந்திக்கருக்கலில்
கூட்டமாக வெண் பறவைகள்
திரும்பத்திரும்ப முன்னும்
பின்னுமாகப்பறந்து கொண்டிருந்தன
அந்தக்காரிருளில் அவை
திட்டுத்திட்டாக தெளிவாகத்தெரிந்தன
நானும் பல தடவைகள்
இருட்டிவிட்டால் அடுத்த தெருக்களில்
சுற்றிக்கொண்டு எங்கள்
வீட்டைத்தேடிக்கொண்டிருப்பேன்
அதுபோலவே அவைகளும்
தமது கூட்டின்
திசையைத்தவறவிட்டதுபோல்
எனக்குத்தோணியது
எனக்கொன்றும் புரியவில்லை
எப்போதும் அம்மா சொல்வாள்
அவை என்றும் திசை அறியக்கூடியவை
ஆதலால் ஒருபோதும் அவற்றின் திசை
தப்புவதில்லை என்று
மேலும் அவை நாடு கடந்தும்
பறக்கக்கூடியவை என்றும்
கடல் கடந்தும்
பறக்கக்கூடியவை என்றும்
அம்மா சொல்லக்கேட்டிருக்கிறேன்
அன்று நள்ளிரவு கடந்தும்
நானும் அம்மாவும்
வீட்டு வாயிற்படியிலேயே
அமர்ந்திருந்தோம்
நான் கரு நிற வானத்தையும்
அந்தப்பறவைகளையுமே
பார்த்துக்கொண்டிருந்தேன்
அம்மாவோ வைத்த கண்வாங்காமல்
தெருக்கோடியையும்
அதன் முனையையுமே
பார்த்துக்கொண்டிருந்தாள்.

பறவை

திருப்பிப்போடப்பட்ட ‘எஃப்’ வடிவத்தில்
அமர்ந்திருந்தது ஒரு பறவை அந்தக்கிளையில்
நீள அலகு , கால்கள் சிறகுக்குள் புதைந்து,
விரல்களின் நகங்கள் மட்டும் நீண்டு
மரக்கிளையை கவ்விக்கொண்டு நின்றது.
வால் சிறிது நீண்டு மரக்கிளைக்கு
கீழே வரை தெரிந்தது.
கச்சிதமான “எஃப்” தான்.
எஃப்’பைத்திருப்பி சரியாக்கினால்
என்ன எனத்தொன்றி
கல்லை விட்டெறிந்தேன் அதன்மேல்
பறந்து செல்கையில்
ஒரு எழுத்தையும் போல அல்லாமல்
நீண்ட கோடாகப்பறந்தது.
எஃப்’ம் கோடும் எனக்குத்தெரிகிறது
அந்தப்பறவைக்குத்தெரியுமா ?!

முதல் நிலவு

சூரியக்குடும்பத்தில் ஒரு கோளுக்கு
இருபத்தேழு நிலவுகள் இருப்பதாக
ஆய்வுகளின் முடிகள் தெரிவிக்கின்றன.
பகலென்ன இரவென்ன ?
எப்போதும் நிலவுகளின் ஒளியில்
எனை நனைத்துக்கொண்டேயிருப்பேன்
ஆதலால் நான் என்னை
அங்கே செலுத்திக்கொள்ளலாம்
என்றிருக்கிறேன்
இப்படிச்சொன்னதிலிருந்து
ஒரு நிலவு என்னுடன்
பேச மறுத்துவிட்டது.