அறிந்தரகசியம் போல

***அறிந்தரகசியம் போல




என் படுக்கையறைச்சன்னலோரம்
புறா ஒன்று அமர்ந்திருக்கிறது
நெடு நேரமாய்
அது
இருப்பது இல்லாதது போல்
இருக்கிறது.
ஒரு அந்தரங்கத்தை அறிந்த
ரகசியம் போல
அவ்வளவு அமைதி
அவ்வளவு சாந்தம்
எப்பொழுதாவது
தன் இணைக்கு மட்டும்
அனுப்புகிறது. தனது  தனிமையை
குறுஞ்செய்தியாக்கி
க்கும்…  க்கும்…




ரவிஉதயன்.

மீன்கொத்தி ஆறு

மீன்கொத்தி ஆறு                       




கரை ததும்பி
நகர்கிற ஆறு
நின்றவாறு பார்க்கிறீர்கள்


உங்கள் கால் விரல்களை
அதன் ஈர நுனிகள்
வருடி விடுகின்றன


நீர்க்குமிழிகள்
உங்களை
மிதக்க அழைக்கின்றன


உங்கள் மூச்சுக்காற்றின்
ஓசை போல
ஆறு உங்களோடு
தனிமையில் இருக்கிறது
அதன்
வசீகிர நீர்ச்சுழி
உங்களை வரவேற்கிறது


திறந்திருக்கிற நீர்ப்பரப்பிற்குள்
சட்டென்று
ஒரு துளிசிதறாமல்
மீனைப்போல
தாவிப் பாய்கிறீர்கள்


காத்திருந்த ஆறு
மீன் கொத்தியாகி
உங்களை கவ்விக்கொல்கிறது!

ரவிஉதயன்

கல் எறிந்தவர்க​ள்

பிளாட் பாரத்திலிருந்து
பிரிகிறது ரயில்

ஒரே தருணத்தில்
சில நூறு கரங்கள் உயர்ந்து
கையசைக்கின்றன
சட்டென
எழும்பிப்பறக்கின்ற
பறவைகள் போல்!

கல் எறிந்தவர்கள்
கண்களிருந்து
மெதுவாகக் காணாமல்
போகிறார்கள்

கடைச் சொல்

 
கிளையிலிருந்து
தரைக்கு வீழ்கிற
இலையைப்  போன்றே
கணித நுட்பம்

தவிப்பு மனிதர்களின்
தந்திர வழி என்கிறார்கள் ?

தீர வலிக்குச்செய்து கொள்ளும்
நித்தியப்பணிவிடை என்கிறார்கள் ?

காதல் ஜோடிகளின்
கைகளிலிருக்கிற
கடைசி துருப்புச்சீட்டுஎன்கிறார்கள் ?

போதுமான தொரு
வாழ்விலிருந்து மீளும்
சுய விலகல் என்கிறான் ஞானி
ஒரு வேளை

துடித்தடங்கும்
இக்கயிற்றை அறுத்து
தரையிறக்குகையில்
உடைந்த என் குரல்வளையில்
எஞ்சியிருக்கலாம்

ஒரு தற்க்கொலையின்
காரணத்திற்கான
கடைசிச்சொல்.

யுகங்கள் கடந்தது

முகர்ந்து முகர்ந்து
நாய்க் குட்டியொன்று
என்வீடு வரை
வந்து விட்டது.

யுகங்கள் கடந்த அன்பின்
புரியாத ரகசியத்தின்முன்

தளும்பி நின்ற
பேரமைதி கணமிது

காகிதத்தின் மீதுகடல்

 

 
 
சிறுமி காகிதத்தின் மீது
ஏழு கடலின் சித்திரத்தைத் தீட்டுகிறாள்
அதில்
ஏழு மீன்களை நீந்தவிடுகிறாள்
ஏழு மலைகளின் சித்திரத்தைத் தீட்டுகிறாள்
அதன் முகடுகளில்
ஏழு பஞ்சு மேகங்களை மிதக்கவிடுகிறாள்
ஏழு மேகங்கலிருந்து
சில மழை துளிகளை உதிர விடுகிறாள்

மழைத் துளிகள் விழுமிடத்தில்
ஒரு பூவின் சித்திரத்தைத் தீட்டுகிறாள்
அதனடியில்
தன் பெயரை எழுதுகிறாள்
இனி அவளை காண்பதென்றால்
ஏழு கடல்  ஏழு மலைளைத் தாண்டி
பயணிக்க வேண்டியிருக்கும் நமக்கு

வாசிக்கநேரு​ம் தருணம்

 

More|
 
இன்றைய நாளிதழ் செய்தியில்
நேற்று இறந்து இருந்தான்

இன்று அதிகாலை வரை
உயிரோடு இருந்தவன்
வாசிக்க தொடங்கிய கணத்திலிருந்து
சிறிது சிறிதாக
இறக்க தொடங்கியிருந்தான்

அன்றைய நாளிதழ்களை
அன்றைக்கே வாசிக்க
இயலாதவர்களுக்காக
இறந்தவன் மீண்டும் உயிர்த்தெழுகிறான்.

 பின்னொரு நாளில்
அவர்கள்அச்செய்தியை
வாசிக்கநேரும் தருணம்
மீண்டும் அவன்
 இறக்க வேண்டியிருந்ததது.