இரு கவிதைகள்

முதலில்

முதலில் யானை மேலிருந்து இறங்கு
பிறகு பேசுவோம்
மராமத்து
வெள்ளைத்துரை உனைக் கண்டு
வேர்த்து வெளவெளத்து
வேஷ்டியைத் தழையவிட்டு
வளைந்து வணங்கும் காலம் போச்சு
கொலம்பஸ் பிறக்குமுன்பே
கடலோடி வணிகர் நாங்கள்
அதனால் பையா அடக்கி வாசி
எங்கள் சந்தை எங்கள் சட்டம்
எந்தக் கொம்பனும் அதற்கு அடக்கம்
சம்மதம் என்றால் கடையை விரி
சரிப்படாதென்றால்
கடையைக் கட்டு
அரிசி, பருப்பு, ஆமணக்கு,
காய், கறி மிளகாய், உப்பு,
மஞ்சள், வெல்லம், மாம்பழம்,
வாங்கலாம்.  உன் சரக்கை நீ
விற்கலாம்.  வாரந்தோறும் சந்தை உண்டு
அடாவடி விலைக்கு அனுமதி இல்லை
அடிமை வாணிபம் செய்வதற்கில்லை
வணிகம் செய்ய வந்தவன்
வணிகம் மட்டும் செய்வது நல்லது
உலவு பார்ப்பது கலகம் செய்வது
சித்துவேலை ஏதும் செய்தால்
சீவி விடுவோம் பனங்காய்போல.
உள்கோட்டில் பிஸ்டலை மறைத்து
உதட்டோ ரம் புன்னகை மலர்த்தி
கைக்குலுக்கும் கபடம் எனக்கும் தெரியும்
நெடுநாள் முன்பு பிஸ்டல் செய்வது
குடிசைத் தொழிலாய் இருந்தது
எங்களூரில்…..

இலவசம்

கோழி வாங்கினால்
முட்டை இலவசம்

ஜாடி வாங்கினால்
மூடி இலவசம்

பழம் வாங்கினால்
கொட்டை இலவசம்

கடன் வாங்கினால்
அட்டை இலவசம்

கட்டில் வாங்கினால்
மெத்தை இலவசம்

மெத்தை வாங்கினால்
தலையணை இலவசம்

என்ன வாங்கனால்
எத்தரே நொட்டுவது இலவசம்.

எதையாவது சொல்லட்டுமா……….60

1988 ல் நவீன விருட்சம் ஆரம்பித்தபோது, இலக்கியச் சந்திப்புகளை நடத்த வேண்டுமென்று என்ற எண்ணத்தைத் தூண்டியவர் க.நா.சு.  அதைச் செயல்படுத்தத் தூண்டியவர் லைன் சீனிவாசன்.  அவர் Pnb யில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, ஷபினா என்ற க்ளீனிங் பவுடருக்கு இணையாக Coin என்ற பவுடரை ஆரம்பித்தார்.  அந்தப் பவுடருக்கு விளம்பரம் வேண்டியிருந்தது.  அதை Hindu பேப்பரில் Engagement ல் விளம்பரம் கொடுக்க ஒரு காரணம் வேண்டியிருந்தது.  அதுதான் விருட்சம் இலக்கியச் சந்திப்பு கூட்டத்திற்கு வித்திட்டது.  கூட்டம் நடத்த வேண்டிய இடத்திற்கு வாடகை, பின் விளம்பரம் என்று கொடுத்துவிடுவார்.  நான்தான் கூட்டம் ஏற்பாடு பண்ண வேண்டும்.  விருட்சம் இலக்கியச் சந்திப்பை நடத்த வேண்டுமென்று நினைத்தபோது, க.நா.சு இல்லை.  ஒரு இலக்கியக் கூட்டத்தில் க.நா.சுவைப் பார்த்தபோது, எனக்கு அவரை மட்டும் வைத்துக்கொண்டு இலக்கியக் கூட்டம் நடத்த வேண்டுமென்ற எண்ணம் இருந்தது.  ஆனால் கூட்டம் எப்படி நடத்த வேண்டுமென்பது தெரியாது.  க.நா.சு எந்தத் தலைப்பிலும் எந்தவிதத் தயாரிப்பும் இல்லாமல் பேசக் கூடிய வல்லவர்.  அவர் இலக்கியத்தைப் பற்றி பேசுவதும், எழுதுவதும்தான் அவருடைய வாழ்க்கை.  எந்தப் புத்தகத்தையும் படித்துவிட்டு அபிப்பிராயம் சொல்லி விடுவார். 
நான் கூட்டம் நடத்தியபோது, க.நா.சு இல்லை.  காசியபன் என்ற படைப்பாளியை வைத்துக்கொண்டு முதல் கூட்டம் நடத்தினேன்.  கூட்டம் நடத்தும்போது பரபரப்பாக இருப்பேன்.  முதலில் கூட்டத்தை ஆரம்பித்து எப்படிப் பேச வேண்டுமென்பதே எனக்குத் தெரியாது.  என் மூத்த இலக்கிய நண்பர்களைப் பார்த்தால் அவர்களை வைத்து கூட்டத்தை நடத்தி விடுவேன்.  பெரும்பாலும் ஞானக்கூத்தனை கேட்டுக்கொள்வேன்.  அவரும் கூட்டத்தை ஆரம்பித்து விடுவார்.  பின் கூட்டம் முடிக்கும்போது எல்லோருக்கும் நன்றி என்று ஒத்தை வரியில் சொல்லி முடித்துவிடுவேன். 
பின் நானே கொஞ்சம் தைரியம் வரவழைத்துக்கொண்டு கூட்டத்தை நடத்தியிருக்கிறேன்.  ‘நம் முன்னால் யாரும் உட்கார்ந்து இருக்கவில்லை என்று நினைத்துக்கொண்டு பேசவேண்டும்,’ என்பார் நண்பர். ஒவ்வொரு கூட்டம் நடக்கும்போது எனக்குள் பரபரப்பு அதிகரித்துக்கொண்டு போகும்.  இப்போது நினைத்துப் பார்த்தால் சிரிப்புதான் வருகிறது.  கூட்டத்தில் பங்குகொண்டு பேச வருபவர்களுக்கு நான் வண்டிச் செலவெல்லாம் கொடுப்பதே இல்லை.  பேச வருபவர்கள் அவர்களே செலவு செய்துகொண்டு வருவார்கள்.  விருட்சம் என்ற பத்திரிகைக்குக் கொடுக்கும் மரியாதையாகவே நான் நினைத்துக்கொள்வேன். ஒருமுறை நான் கூட்டத்தை ஆரம்பித்து விடுவேன்.  பின் நான் மாம்பலத்திலிருந்து டூ வீலரில் வருவதற்குள் அதிக நேரம் எடுத்துக்கொண்டு விடும்.
இந்துவில் சில கூட்டங்கள் நடத்துவதற்குத்தான் நண்பர் உதவி செய்தார்.  பின் அவர் கண்டுகொள்ளவில்லை.  எனக்கோ கூட்டத்தை ஆரம்பித்து விட்டோ மே ஒவ்வொரு மாதமும் நடத்தித் தீர வேண்டுமென்ற வைராக்கியம்.  திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு பெண்கள் விடுதி மாடியில் கூட்டம் ஆரம்பிக்கும். அதற்கு வாடகை அப்போது ரூ.50.  போஸ்ட் கார்டில் கூட்டம் பற்றி எல்லோருக்கும் கடிதம் அனுப்புவேன்.  அதற்கு ரூ25.  மொத்த இலக்கியக் கூட்டத்தையும் ரூ100க்குள் முடித்துவிடுவேன்.
இப்படி பல ஆண்டுகள் நான் கூட்டம் நடத்தியிருக்கிறேன்.  சிலசமயம் சில கூட்டங்களால் ஏற்படும் பரபரப்பு அடுத்தநாள் வரைக்கும் என்னை விட்டுப் போகாது.  அப்போது பிரமிள் இருந்தார்.  அவர் ஒரு கடிதம் எழுதினார்.  It is dangerous.  Don’t do it என்று.  ஏன் அப்படி சொன்னார் என்பதை இப்போது கூட என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.  ஆனால் க.நா.சு கூட்டம் நடத்த வேண்டுமென்று கூறினார். இந்த இலக்கியக் கூட்டங்கள் மூலம் பல நண்பர்களைப் பார்க்க முடிந்தது.  என்னதான் இதுமாதிரி இலக்கியக் கூட்டம் நடத்தினாலும், அதெல்லாம் தனிப்பட்ட ஒருவருடைய விருப்பு வெறுப்புகளுடன்தான் நடத்த முடியும். 
மேலும் இதுமாதிரி இலக்கியக் கூட்டங்களுக்கு பெண்கள் வரவே மாட்டார்கள்.  வருபவர்கள் எல்லோரும் 45வயதிற்கு மேல்.  பெரும்பாலும் எழுத்தாளர்களே இருப்பார்கள்.  பார்வையாளர்களும் எழுத வேண்டுமென்று நினைப்பவர்களாக இருப்பார்கள்.  இந்து நாளிதழைப் பார்த்துவிட்டு இதுமாதிரி கூட்டத்திற்கு வரும் சிலர் அடுத்தக் கூட்ட அழைப்பிதழைப் பார்த்துவிட்டு ஓட்டமாய் ஓடி விடுவார்கள். மேலும் இலக்கியக் கூட்டங்களில் பல பிரிவுகள் உண்டு.  நா முத்துசாமி கூட்டம் நடத்துகிறேன் என்றால், கூத்துப் பட்டறையைச் சேர்ந்த பலர் கூட்டத்திற்கு வந்திருந்து கூட்டம் அதிகமாகக் காட்டும்.  வேறுசிலர் கூட்டத்தற்கு பத்து பதினைந்து பேர்கள் கூட வரமாட்டார்கள்.  எனக்குக் கூட்டம் அதிகமாக இருந்தாலும் பதட்டமாக இருக்கும்.  கூட்டமே இல்லை என்றாலும் பதட்டமாக இருக்கும்.
கூட்டத்திற்கு பார்வையாளர்கள்தான் வருகிறேன் என்று சொல்லிவிட்டு வராமல் இருப்பார்கள்.  ஒரு கூட்டத்தில் பேச வருகிறேன் என்று சொன்னவர்கள் யாரும் வராமல் போய்விட்டார்கள்.  அன்று முழுவதும் எனக்கு சரியாக தூக்கம் வரவில்லை.  ‘யாருடனும் இல்லை’ என்ற என் கவிதைத் தொகுதிக்குத்தான் அப்படி யாரும் வராமல் போய்விட்டார்கள்.  நான் இலக்கியக் கூட்டம்தான் நடத்த வேண்டுமென்று நினைத்தேன்.  ஆனால் இலக்கியக் கூட்டத்திற்குள்ளும் அரசியல் நடக்கிறது என்பது எனக்கு மெதுவாகத்தான் புரிந்தது.  ஆனால் அதை நான் பொருட்படுத்தவில்லை. நான் பெண்கள் விடுதியில் கூட்டம் போடுவதை நிறுத்திவிட்டு, பொது நூலகக் சின்ன கட்டிடத்தில் கூட்டம் நடத்தினேன். அங்கேயும் சில பிரச்சினைகள்.  முன்னதாக பதிவு செய்ய ஒரு முறை போகவேண்டும்.  பின் போலீஸ் ஸ்டேஷன் போய் அனுமதி கேட்க வேண்டும்.  போலீஸ் ஸ்டேஷனில் பலமணி நேரம் காத்திருக்க வேண்டும். அதுவும் சரிப்பட்டு வரவில்லை. பின் கூட்டம் நடத்த சரியான இடம் ரயில்வே ஸ்டேஷன் என்று அங்கும் கூட்டம் நடத்திப் பார்த்தேன். 
சமீபத்தில் என் நண்பர் விஜய் மகேந்திரன் என்பவர் கூட்டம் நடத்துங்கள் என்றார்.  நான் சொன்னேன் கூட்டம் நடத்த இடம் வேண்டும் என்றேன்.  இலக்கியக் கூட்டத்திற்காக ஆயிரக்கணக்கில் பணம் செலவு செய்ய நான் விரும்புவதில்லை.  இப்போதெல்லாம் ஒரு கூட்டத்திற்கு யாரும் வருவதுகூட சிரமமாக உள்ளது.  டிராபிக்.  இதற்குப் பயந்துகொண்டு நான் கூட யாரையும் சந்திக்க முடியாமல் இருக்கிறேன்.  ஆனால் கூட்டம் நடத்தத்தான் வேண்டும்.  அப்போதுதான் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள முடியும்.  கூட்டம் நடத்த கூட்டம் நடத்துபவர் ஒருவரும், பார்வையாளர் ஒருவர் இருந்தாலும் போதும்.  கூட்டம் ஆரம்பமாகிவிடும்.

உன்னிடம் எப்படிச் சொல்வது

கண்ணை மூடிக்கொண்டால்
உலகம் இல்லாமல் போய்விடுமா
தூர் வாரப்படும் கிணற்றிலிருந்து
எடுக்கப்படும் பொருட்களைக் காண
உனக்கு ஆவலாய் இருக்காதா
புள்ளிகள் மட்டுமே
அழகிய கோலமாகிவிடுமா
வானம் எழுதும்
ஓவியக் கவிதை தானே
வானவில்
காற்று நிரப்பப்பட்ட
பலூன்களைக் கண்டால்
குழந்தைமை உடைந்து
வெளிவருவதில்லையா
கருணை இல்லங்களுக்கு
உதவிடும் போது
நமது இறைமை கொஞ்சமாவது
வெளிப்படுவதில்லையா
ஒரு குழந்தை வந்து
உன்னை அம்மா என்றழைத்தால்
உனக்கு கோபிக்கத் தோன்றுமா
மிக அரிதாகவே
ஜோக்குகள் சொல்கிறேன்
சிரிக்க மாட்டாயா.

பறவை

திருப்பிப்போடப்பட்ட ‘எஃப்’ வடிவத்தில்
அமர்ந்திருந்தது ஒரு பறவை அந்தக்கிளையில்
நீள அலகு , கால்கள் சிறகுக்குள் புதைந்து,
விரல்களின் நகங்கள் மட்டும் நீண்டு
மரக்கிளையை கவ்விக்கொண்டு நின்றது.
வால் சிறிது நீண்டு மரக்கிளைக்கு
கீழே வரை தெரிந்தது.
கச்சிதமான “எஃப்” தான்.
எஃப்’பைத்திருப்பி சரியாக்கினால்
என்ன எனத்தொன்றி
கல்லை விட்டெறிந்தேன் அதன்மேல்
பறந்து செல்கையில்
ஒரு எழுத்தையும் போல அல்லாமல்
நீண்ட கோடாகப்பறந்தது.
எஃப்’ம் கோடும் எனக்குத்தெரிகிறது
அந்தப்பறவைக்குத்தெரியுமா ?!

திருகும் தண்ணீர்த் துளிகள்..

*
மேஜையின் எதிர் விளிம்பில் முடிந்து விட்டது
வசீகரத்துக்கென விரித்திருந்த மஞ்சள் பூக்கள்

விரல் நகங் கொண்டு நீ திருகும்
தண்ணீர்த் துளிகளில் கரைந்துக் கொண்டிருக்கிறது
பேச முடியாமல் தவிக்கும் உனது வார்த்தைகள்

நெற்றிப் பரப்பில் மிச்சமிருக்கும்
எனது வெயிலை ஒற்றியெடுக்க
பயன்படும் நாப்கின்னில்

காத்திருந்த வரை நீ வரைந்து வைத்த
கோட்டுச் சித்திரமொன்று
கையேந்திச் சிரிக்கிறது
நம் மௌனத்தை

கூரையிலிருந்து வழியும்
ஆரஞ்சு நிற விளக்கொளியில்
உன் முகத்தில் படர்ந்துக் கொண்டிருக்கிறது
மஞ்சள் பூக்களின் இதழ்கள்

*******
 

எதையாவது சொல்லட்டுமா……….59

சமீபத்தில் தேர்தல் வருகிறது என்றால் கதிகலங்க வேண்டிய நிலை வந்து விட்டது.  என்னைப் பொருத்தவரை எந்த ஆட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஒன்றுமில்லைதான்.  ஆனால் என் மனைவிக்கு தேர்தல் ஒரு பிரச்சினையாக மாறி விட்டது.  அதுவும் சமீபத்தில்தான்.  பொதுவாக அரசாங்கப் பணியாளர்கள்தான் தேர்தலுக்கு உட்படுத்துவார்கள்.  ஆனால் இந்த முறை வங்கியில் பணி புரிபவர்களையும் தேர்தல் பணிக்காக அழைத்துவிட்டார்கள்.  என் மனைவி பணிபுரியும் வங்கியில் உள்ள மேலதிகாரி அங்கு பணிபுரியும் 10க்கும் மேற்பட்டவர்களை தேர்தல் பணிக்காக சிபாரிசு செய்து விட்டார்.  அந்த விபரீதம்தான் என் மனைவி தேர்தல் பணிக்கு ஆளானது. 
நாங்கள் இருப்பது மேற்கு மாம்பலம்.  தேர்தலில் பணிபுரிய வேண்டுமென்றால் அதைத்தாண்டி வேறு ஒரு இடத்தில்தான் தேர்தல் பொறுப்பாளராகப் பணிபுரிய விடுவார்கள்.  மாநிலத் தேர்தல் போது, அண்ணாநகரில் உள்ள ஒரு பள்ளியில்  Proceeding Officer ஆகப் பணிபுரிய சொன்னார்கள்.  நான் சீர்காழியிலிருந்ததால், என்னால் மனைவிக்கு உதவி செய்ய முடியவில்லை.  மனைவியின் தேர்தல் பணிக்காக ஒரு நாள் விடுமுறை எடுத்துக்கொண்டு மனைவிக்கு உதவி செய்ய வேண்டுமென்று என் மேலதிகாரியைக் கேட்டேன்.  அவர் உதவி செய்ய மறுத்ததை இன்னும்கூட என்னால் மறக்க இயலவில்லை Proceeding Officer என்ற பொறுப்பை ஏற்றுக்கொள்ள என் மனைவி விரும்பவில்லை.  இது குறித்து தேர்தல் அதிகாரியிடம் கூறி பொறுப்பிலிருந்து விடுவிக்கக் கோரியும் அவர்கள் விடவில்லை.  அல்லது வேறு பொறுப்பிற்கு மாற்றும்படி கேட்டுக்கொண்டும் அவர்கள் காது கொடுத்துக்கூட கேட்க தயாராக இல்லை.  அந்தத் தருணத்தில் தேர்தல் நடக்கும் பள்ளிக்கூடத்திலேயே இரவு தங்க வேண்டும்.  அங்கு தங்குவதற்கு எந்த வசதியும் இருக்காது.  மனைவிக்கு அங்கு தங்குவதுதான் பிடிக்கவில்லை.  நல்லவேளையாக என் நண்பரும் மருத்துவரான செல்வராஜ் வீடு பக்கத்தில் இருந்ததால், பெரிய இடர்பாடிலிருந்து தப்பித்தோம்.  எனக்கு ஒரு நாள் முன்னதாக விடுமுறை கிடைத்திருந்தால், மனைவியை வீட்டிற்கு அழைத்து வந்திருப்பேன்.  
என் மனைவி சாதாரண computer operator அதாவது CTO.  அதை அவர்கள் Commercial Tax Officer என்று எடுத்துக்கொண்டு விட்டார்கள் போலிருக்கிறது.  அதற்குத்தான்  Proceeding Officer என்ற பதவியைக் கொடுத்து மனைவியை அலற அடித்துவிட்டார்கள்.  இன்னும் சில கூத்துக்களும் நடந்தன.  மனைவி அலுவலகத்தில் பணிபுரிந்த வேறு சிலர் Single Window Operatorகள் அவர்கள் பணம் பட்டுவடா செய்பவர்கள்.  அவர்களை Sweeper பதவிக்கு தேர்தலில் பணிபுரிய கூப்பிட்டார்கள். அவர்கள் அந்தப் பதவியை ஏற்றுக்கொள்ள கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். ஒருவழியாக சமாளித்து வந்தவுடன், மனைவிக்கு அப்படா என்றிருந்தது.  ஆனால் விதி விடவில்லை. திரும்பவும் மேயர், பஞ்சாயத்துத் தேர்தலுக்கும் மனைவி அலுவலகத்தில் உள்ள எல்லோரையும் கூப்பிட்டார்கள்.  இந்த முறை நிலைமை மோசம்.  முன்பாவது அண்ணாநகரில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் தேர்தலில் மனைவி கலந்து கொண்டார்.  இந்த முறை புதிய வண்ணாரப்பட்டையில்.  மகாராணி தியேட்டர் பக்கத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் நடக்கும் கூட்டத்தில் கலந்துகொண்டு எந்தப் பள்ளிக்கூடம் என்று சொல்கிறார்களோ அங்கே போகவேண்டும் என்றார்கள். 
நான் இருக்கும் சீகாழி என்ற இடத்தில் தேர்தல் 19ஆம் தேதி.  17ஆம் தேதி நான் சென்னையில் இருக்க வேண்டும் மனைவிக்கு உதவி செய்ய.  இந்தத் தேர்தல் வருவதற்குள் முன்பிருந்த மேலதிகாரியை மாற்றிவிட்டு வேறு ஒருவர் என் அலுவலகத்திற்கு வந்து விட்டதால், இந்த முறை நான் விடுமுறை எடுப்பதில் எந்தச் சிக்கலும் ஏற்படவில்லை.   திரும்பவும் மனைவி  Proceeding Officer.  வேண்டாம் வேண்டாமென்று கேட்டாலும் விடவில்லை.  அவருக்கு தைரியம் கொடுக்க மனைவியை நானே அழைத்துக்கொண்டு போனேன்.  அங்குள்ள தேர்தல் அதிகாரியைப் பார்த்து மனைவிக்குப் பதிலாக நான்  Proceeding Officer ஆகப் பணிபுரிகிறேன் என்றேன். நானும் வங்கியில் இருக்கிறேன் என்பதற்கு உரிய சான்றிதழ் கேட்டார்கள்.  அப்போது கொடுக்க முடியவில்லை.  கொடுத்திருந்தால், நான் அங்கிருப்பேன்.  மனைவியை வீட்டிற்கு அனுப்பி விட்டு. மனைவிக்கு நான் பக்கத்தில் இருந்தது ஆறுதலாக இருந்தது.  இந்த முறை புதிய வண்ணாரப்பேட்டையில் உள்ள சென்னை துறைமுகக் குடியிருப்பு உள்ள ஒரு பள்ளியில் தேர்தல் பணி.   Proceeding Officer என்பதால் பொறுப்பு அதிகம்.  அன்று 16ஆம் தேதி. மொத்தம் ஐந்து பேர் கொண்ட ஒரு குழு.  மனைவிதான் தலைமை தாங்கி நடத்த வேண்டும்.  ஒருவர் காஞ்சிபுரத்திலிருந்து வந்திருந்தார்.  இன்னொரு பெண்மணி பாலவாக்கத்திலிருந்து வந்திருந்தார்.  அன்று நான் மனைவியை அழைத்துக்கொண்டு மாம்பலம் கிளம்ப இரவு 9.30 மணி ஆகிவிட்டது.  வீட்டிற்கு வந்து சேர 10.30 மணி ஆகிவிட்டது.
அடுத்தநாள் காலை அவசரம் அவசரமாக 5 மணிக்குக் கிளம்பிப் போய்விட்டோ ம்.  தேர்தல் 7 மணிக்கு ஆரம்பித்து விட்டது.  மனைவியின் குழுவிற்கு டிபன் வாங்கித் தருவது, மதியம் சாப்பாடு வாங்கித் தருவது என்று பொறுப்பை ஏற்றுக்கொண்டு உதவி செய்தேன்.  அந்த இடத்திலிருந்து திருவொற்றியூர் பக்கத்தில் இருப்பதாக சொன்னார்கள்.  அதனால் பட்டினத்தார் சமாதியைப் போய்ப் பார்க்கலாம் என்று நினைத்தேன்.  திருவெற்றியூர் போனபோது, பட்டினத்தார் கோயில்தான் இருக்கிறதாம்.  கோயில் உள்ளே சென்று பட்டினத்தார் சமாதி எங்கே என்று கேட்டேன்.  ஒரு பெண்மணி,’இங்கேதான்’ என்றாள்.  ‘சிவலிங்கம்தான் இருக்கிறது..பட்டினத்தார் சமாதி எங்கே?’ என்று திரும்பவும் கேட்டேன்.  ‘பட்டினத்தார்தான் சிவலிங்கமாக மாறிவிட்டார்,’ என்றார் அந்தப் பெண்மணி. ‘எப்படி அப்படி மாற முடியும்?  என்னால் நம்ப முடியவில்லை,’ என்றேன்.  ‘நீங்கள் பட்டினத்தார் வரலாறு புத்தகம் உள்ளது.  வாங்கிப் படியுங்கள்,’ என்றார்.  நான் பட்டினத்தார் வரலாறு புத்தகம் வாங்கி கோயிலில் உட்கார்ந்தபடி படித்தேன்.  பட்டினத்தார் வரலாறு மிகவும் சுவாரசியமாக இருந்தது.  பட்டினத்தார் வாழ்க்கையிலும் சரி, வள்ளலார் வாழ்க்கையிலும் சரி சில சம்பவங்களை என்னால் நம்ப முடியவில்லை.  மூடிய அறையிலிருந்து வள்ளலார் எப்படி காணாமல் போனார். இதெல்லாம் ஆச்சரியம்..
திரும்பவும் தேர்தல் இடத்திற்கு வந்து, மனைவியை அழைத்துக்கொண்டு போகும் போது இரவு மணி 10.30.  அடுத்தநாளும் நான் சீகாழி அலுவலகத்திற்குப் போகவில்லை. தேர்தல் பொறுப்பு எடுத்துக்கொள்ள வேண்டாமென்று எழுதிக்கொடுக்க ஒரு அரசாங்க உத்தரவு இருப்பதாக சிலர் சொல்ல கேள்விப்பட்டேன்.  அது உண்மையா என்பது தெரியவில்லை.  ஆனால் அரசாங்க உத்தரவை மீறினால், மெமோ கொடுப்பார்கள் என்று பலரும் பயந்துகொண்டிருந்தார்கள்.

காகிதத்தின் மீதுகடல்

 

 
 
சிறுமி காகிதத்தின் மீது
ஏழு கடலின் சித்திரத்தைத் தீட்டுகிறாள்
அதில்
ஏழு மீன்களை நீந்தவிடுகிறாள்
ஏழு மலைகளின் சித்திரத்தைத் தீட்டுகிறாள்
அதன் முகடுகளில்
ஏழு பஞ்சு மேகங்களை மிதக்கவிடுகிறாள்
ஏழு மேகங்கலிருந்து
சில மழை துளிகளை உதிர விடுகிறாள்

மழைத் துளிகள் விழுமிடத்தில்
ஒரு பூவின் சித்திரத்தைத் தீட்டுகிறாள்
அதனடியில்
தன் பெயரை எழுதுகிறாள்
இனி அவளை காண்பதென்றால்
ஏழு கடல்  ஏழு மலைளைத் தாண்டி
பயணிக்க வேண்டியிருக்கும் நமக்கு

ஊனப் பிள்ளையார்

அடுக்கு மாடிக் குடியிருப்பின்
கீழ் தளத்தின் குறுஞ்சுவரில்
கையொடிந்த பிள்ளையார்
அண்டுவார் யாருமின்றி….
பட்டினியாய்… பரிதாபமாய்…
இரண்டு தினம் முன்பு
ஆறாவது மாடி
அனந்த நாராயணன்
வீட்டுப் பூஜை அறையில்
புஷ்டியான கைகளுடன்
பருத்த  வயிறோடு
மோதக பாத்திரத்துடன்
பார்த்த நினைவு.  

எஸ் எம் எஸ் மட்டுமே

அவள் எழப் போவதில்லை 

பேத்தியின் கல்யாணம் என்ன ஆச்சு என்று 
கேட்கப்போவதில்லை-
டாக்டர் வந்து பல்ஸ் பிடித்து 
உதட்டைப் பிதிக்கி 
இல்லை என்று சொல்லியும் ஆச்சு-
அவன் பேசலேன்னா, நீ அவனை 
கூப்பிடக்கூடாதா என்று சொல்ல இனி 
மூச்சுமில்லை –
நாம் அனைவரும்-
அண்ணன்கள், தம்பிகள்,
தங்கைகள், அக்காக்கள், 
அப்பாவின் தம்பிகள்,
அப்பாவின் கிராமத்து அக்காவின் பெண்கள் 
எல்லோரது பங்கும் அவளது
வடுக்களாய் விடாது மூச்சையும் மீறி
உடலில் ஊமைசொல்லென 
சாம்பலாகக் காத்திருந்தன, 
ஒன்று மட்டும் அறியாமல்-
எங்களது விருந்தோம்பல் என்பது
ஸ்ரார்த்தம் வழி 
அதுவும் வாழைக்காய் அரிசி பருப்பு மட்டுமே
கா கா வழி
தினமும் ஜன்னல்வழி-
எங்களை மன்னித்து விடு
மற்றவர் வடுக்கள்
உன்னைப் போல 
சுமக்க 
எங்களுக்கு 
இடமும் அவகாசமும் இல்லை
பேசுவதற்குக் கூட நாங்கள் 
எஸ் எம் எஸ் மட்டுமே 
அறிவோம்
..

வாசிக்கநேரு​ம் தருணம்

 

More|
 
இன்றைய நாளிதழ் செய்தியில்
நேற்று இறந்து இருந்தான்

இன்று அதிகாலை வரை
உயிரோடு இருந்தவன்
வாசிக்க தொடங்கிய கணத்திலிருந்து
சிறிது சிறிதாக
இறக்க தொடங்கியிருந்தான்

அன்றைய நாளிதழ்களை
அன்றைக்கே வாசிக்க
இயலாதவர்களுக்காக
இறந்தவன் மீண்டும் உயிர்த்தெழுகிறான்.

 பின்னொரு நாளில்
அவர்கள்அச்செய்தியை
வாசிக்கநேரும் தருணம்
மீண்டும் அவன்
 இறக்க வேண்டியிருந்ததது.