காவேரி

 
         உடைகளில்லாதிருப்பதிலொரு
         உல்லாசத்தை உணர்கிறேன்
         உடலில் கவிந்த ஊர்ப்பழுதியை
         ந்தியில் நனைந்து கரைக்கிறேன்
         என் நேற்றைய வானவில்
         நுரைக்குமிழிகளாகிக் கரையும் காட்சியை
         ந்தியில் கப்பல்விட்ட சிறுவனாகி
         வேடிக்கை பார்க்கிறேன்
         புலரியின் இளஞ்சூட்டில் வியர்க்க
         இலைகளால் விசிறிக்கொள்ளும்
         கரையோர வாழைமரங்கள்
         ந்தியின் நடுவில் உலர்ந்த மணற்திட்டில்
         உறுமீன் வருமுன் உடற்பயிற்சி
         செய்யுமொரு கொக்கு.
         மாமரத்துக் கிளிகளுக்கெப்போதும்
         மாளாத சந்தோஷம்
         உடல் கவ்விய உடைகளுடன்
         அவள் அருகில் வருகிறாள்.
         அவளுள் நுழைய இசைவை விழையும்
         என் விண்ணப்பங்களை
          நிராகராக்கவில்லையெனினும்
          சம்மதிக்காமலென்னைக் கொல்லும்
         மல்யுத்த உடற்கட்டுக்காரி
         கொங்கை குலுங்க சிரித்தபடி வருகிறாள்
         கிளிகடித்த மாம்பழமொன்றை
         என்மீது விட்டெறிந்து
         கரையேறிப் பறக்கிறாள்
         பின்தொடரும் பரபரப்போடு நான்
         நீந்திக் கரைசேர்கையில்
         களவு போயிருந்தததென்
         அம்மணம் மறைக்கும் திரை.
 
 
     
 

ஒரு கவிதை –

கடுகளவும் சந்தேகமில்லை
இது ஒரு பைத்தியக்காரவுலகம்
இதில் பலவித பைத்தியங்கள் வாழ்கின்றன.
காசுப் பைத்தியம் கார் பைத்தியம்
சினிமாப்பைத்தியம் சீட்டுப்பைத்தியம்
காதல் பைத்தியம் கவிதைப்பைத்தியம் என
நமக்கு முன்பும் பைத்தியங்களிருந்தன
அவை அப்பாவிகளாயிருந்திருக்கின்றன
அவை நிறையக் கதைகளைத்
தெரிந்து வைத்திருந்தன
அவைகள் சொல்ல நாம் கேட்டோம்
அவற்றிலொன்று
விறகுவெட்டி மூன்று கோடரிகள் கதை
அந்தக் கதையால் நாம் வீணாய் போனோம்
அதோ அவனைப் பார்த்தால் புரியும்
போட்டியாளனைப் போட்டுத் தள்ளுகிறான்
கவர்மெண்ட் பணத்தைக் களவாடுகிறான்
குபேரனாகிறான்
மண்ணைப் பொன்னாக்கும் மகானென்று
மண்டியிடுகிறதுலகம்
மகானின் தோட்டத்தில் மாடுகள் ரெண்டு
மூத்திரம் குடித்து பல்லிளிக்கின்றன
ஒன்றின் பற்கள் உனதைப் போலிருக்கின்றன
தோலிருக்கச் சுளைமுழுங்கித் தலைவன்
வாய் திறந்தால் பொய்யருவி- அவனை
கணினியுகத்தின் விடிவெள்ளியென்கிறதுலகம்
ஆட்டைப்போல் ஆளை வெட்டினவன் அரசனானான்
அடுத்தவன் கிடையில் ஆடு திருடி
அரசனுக்கத் தந்தவன் தளபதியானான்
கிலிபிடித்த ஒருவன் கடவுளைக் கற்பித்தான்
புசிக்க உணவில்லை பிட்டுக்கூலி
வசிக்க மனையில்லை சுடலைவாசி
உடுத்த உடையில்லை அம்மணாண்டி
முடிவெட்டக்காசில்லை சடாமுடி
அவனைக் கடவுளென்கிறதுலகம்

இப்போது சொல்
இது பைத்தியக்கார உலகமா இல்லையா?

மிச்சம்

 
                
                மரம்போல் நிற்காதே
                மனம் திறந்து
                பதிலைச் சொல்லென்றேன்
                
                மனிதனைப்போல
                மலிவானவையல்ல மரங்கள்
                
                தேக்கின்விலை மனிதனுக்கில்லை
                சந்தனமணமும்
               
                மழை, வெய்யில்,  பனி, புயல்
                எதுவானாலும் எதிர்கொள்ளும் மரங்கள்
                
                 குடையில் குளிரறையில்
                கம்பளியில் ஒளிவான் மனிதன்
               
                தழையும் நிழலும் தந்தாலும்
                ஆடுகளைத் தின்னாது மரங்கள்
                மனிதன் தின்பான்
               
                மரத்தை வெட்டினால்
                கட்டில் தொட்டில் கதவு ஐன்னல்
                மேசை நாற்காலி செய்யலாம்
               
                மிச்சத்தை
                நீயே யோசித்துக்கொள்ளென்றான்
 
       

இரு கவிதைகள்

முதலில்

முதலில் யானை மேலிருந்து இறங்கு
பிறகு பேசுவோம்
மராமத்து
வெள்ளைத்துரை உனைக் கண்டு
வேர்த்து வெளவெளத்து
வேஷ்டியைத் தழையவிட்டு
வளைந்து வணங்கும் காலம் போச்சு
கொலம்பஸ் பிறக்குமுன்பே
கடலோடி வணிகர் நாங்கள்
அதனால் பையா அடக்கி வாசி
எங்கள் சந்தை எங்கள் சட்டம்
எந்தக் கொம்பனும் அதற்கு அடக்கம்
சம்மதம் என்றால் கடையை விரி
சரிப்படாதென்றால்
கடையைக் கட்டு
அரிசி, பருப்பு, ஆமணக்கு,
காய், கறி மிளகாய், உப்பு,
மஞ்சள், வெல்லம், மாம்பழம்,
வாங்கலாம்.  உன் சரக்கை நீ
விற்கலாம்.  வாரந்தோறும் சந்தை உண்டு
அடாவடி விலைக்கு அனுமதி இல்லை
அடிமை வாணிபம் செய்வதற்கில்லை
வணிகம் செய்ய வந்தவன்
வணிகம் மட்டும் செய்வது நல்லது
உலவு பார்ப்பது கலகம் செய்வது
சித்துவேலை ஏதும் செய்தால்
சீவி விடுவோம் பனங்காய்போல.
உள்கோட்டில் பிஸ்டலை மறைத்து
உதட்டோ ரம் புன்னகை மலர்த்தி
கைக்குலுக்கும் கபடம் எனக்கும் தெரியும்
நெடுநாள் முன்பு பிஸ்டல் செய்வது
குடிசைத் தொழிலாய் இருந்தது
எங்களூரில்…..

இலவசம்

கோழி வாங்கினால்
முட்டை இலவசம்

ஜாடி வாங்கினால்
மூடி இலவசம்

பழம் வாங்கினால்
கொட்டை இலவசம்

கடன் வாங்கினால்
அட்டை இலவசம்

கட்டில் வாங்கினால்
மெத்தை இலவசம்

மெத்தை வாங்கினால்
தலையணை இலவசம்

என்ன வாங்கனால்
எத்தரே நொட்டுவது இலவசம்.

உப்பு

_

தலைவர்,மனிதவள மேம்பாட்டுத் துறை. பளிச்செனக் கண்ணில் பட்டது. அறைக் கதவின் மீதிருந்த ப்ளாஸ்டிக் பலகை. பலகைக்கு மேலே üதற்காலிகம்ý என ஸ்கெட்ச் பேனாவில் எழுதப்பட்ட மஞ்சள் காகிதம் ஒட்டப்பட்டிருந்தது.

கதவை மெல்லத் திறந்தாள். ரூம் ஸ்ப்ரே மணந்தது. சிகரெட் வாடையடித்தது. செவ்வக அறை. கதவு அறையின் ஒரு ஓரத்திலிருந்தது. மறுமூலையில் அந்த அதிகாரி உட்கார்ந்திருந்தார்.

“நான் உள்ளே வரலாமா…?”
“வெல்கம்”
அறைக்குள் நுழைந்தான். மூலைவாட்டில் குழலூதும் கண்ணன் பொம்மையாய் நின்றுகொண்டிருந்தான்.
“நான் மதியழகன்”
“வளையாபதி……”
கரகரத்த பெரியகுரல். கைகுலுக்கினான். விரல்கள் லேசாய் வலித்தன.
சிகரெட்டிருந்த இடதுகையில் நாற்காலியைக் காட்டி உட்காரச் சொன்னார்.
தடித்த கண்ணாடிக்குள்ளிருந்து இரண்டு கோலிக்குண்டு கண்கள் தன்னை ஊடுருவுவதை உணர்ந்தான். மறுவிநாடி எதிரேயிருந்த கணினியை இயக்கினார். ஒரு நிமிடம் ஸ்கிரீனில் வருவதை நன்றாகப் பார்த்துக்கொண்டு மீண்டும் பேசத் தொடங்கினார்.
“மிஸ்டர் மதியழகன். அப்பாவைச் சந்தித்தீர்களா?..”
திகைத்தான். கணத்தில் சுதாரித்துக் கொண்டவர் “ஐ மீன் உத்தப்பா…” என்றார்.
“உத்தப்பா இன்று அலுவலக வேலையா வெளியே சென்றிருப்பதால் உங்களைச் சந்திக்கச் சொல்லி ரிசப்ஷனில் சொன்னார்கள்.”
வெள்ளையுடையணிந்த ஊழியர் ஒருவர் அறைக்குள் வந்தார்.
“கோபால் உத்தப்பாவை எங்கிருந்தாலும் உடனே வரச்சொல்..”
“திருப்பதிக்கு போன் போடு சார். டி.எம்.டி. குடும்பம் பாலாஜி தரிசனத்துக்கு வந்திருக்கு. வி.ஐ.பி. தரிசனம் ஏற்பாடு செய்யப் போயிருக்கார். ஜி.எம் உத்தரவு.

2
சாரங்கன் உள்ளே வந்ததும் அறிமுகப்படுத்தியவர் ஆபீசருக்கான நியமனப் பத்திரம், இரகசியப் பத்திரம், அடையாள அட்டை இத்யாதிகளைத் தயார் செய்யச் சொல்லி உத்தரவிட்டார். அறிமுகப்படுத்தினார். üமிஸ்டர் மதியழகனை அழைத்துக் கொண்டு போங்கள்” என்றார்.
“சார் உங்களுக்கு தெரியாதா? ம்யூசிகல் சேர். உங்க ரூம்லேயே இருக்கட்டும். நான் எல்லாவற்றையும் ரெடி பண்ணிக்கிட்டு வர்ரேன்….”
வளையாபதியின் பதிலுக்குக் காத்திராமல் சாரங்கன் வெளியேறியதைக் கவனித்த மதியழகனின் கவனத்தை ஈர்த்தது கோப்பொன்று அருகாமையில் இருந்த அகன்ற ஸ்டூலில் உட்கார்ந்த சப்தம்.
“மிஸ்டர் மதியழகன், பயிற்சி முகாம் எப்படியிருந்தது..?”
“சுவாரசியமாக இருந்தது….”
“பயனுள்ளதாக இல்லையா?…”
“இனிமேல்தான் தெரியுமென்று நினைக்கிறேன்…”
தடித்த கண்ணாடிக்குள்ளிருந்த இரண்டு கோலிக்குண்டுக் கண்கள் தன்னை ஊடுருவுவதை உணர்ந்த மதியழகன் கவனமாயிருந்தான்.
“நீங்கள் அதிர்ஷ்டசாலியெனச் சொன்னார்களா?…”
“சொன்னார்கள்….”
“எதனாலென்று சொன்னார்களா….?”
“இந்தக் கம்பெனி இந்தியாவின் மிகப்பெரிய நிதிநிறுவனங்களில் ஒன்று எனச் சொன்னார்கள்..”
“மனிதவள மேம்பாட்டுத் துறையைப் பற்றி ஒரு அமர் வேறுமிருந்ததா…?
“இல்லை சார்….”
தண்ணீர் குடித்தார். தண்ணீருக்கடுத்து சிகரெட். சிகரெட்டுக்கடுத்து தொலைபேசி. “நான் பார்க்க வேண்டிய முக்கியமான பேப்பர்கள் வேறு ஏதானுமிருக்கிறதா…?”
எதிர்முனையிலிருந்து இல்லையெனப் பதில் வந்தது. தொலைபேசியில் யாரையோ விரட்டிக் கொண்டிருந்தார். “நாளை காலையில் உங்கள் சம்பந்தப்பட்ட பேப்பர்கள் அத்தனையும் என் மேஜைமீதிருக்க வேண்டும். என்னைக் கடுமையாக நடந்து கொள்ள நிர்பந்திக்காதீர்கள்.”
சிகரெட் துண்டு சாம்பல் கோப்பைக்குச் சென்றது. கண்ணாடியைக் கழற்றி மேஜைமேல் வைத்தார். முழுக்கை சட்டையை முழங்கைக்கு மடித்துக் கொண்டவர் “மிஸ்டர் மதியழகன் சூடாய் ஒரு டீ சாப்பிடலாமா?” கேட்டார். தலையாட்டினான்.
தேநீர் மிகவும் கொதித்தது மதியழகனால் அருந்த முடியவில்லை. கொஞ்சமும் அசராமல் வளையாபதி டீ அருந்திக் கொண்டிருந்தார்.
“சாரங்கன் ஆடி அசைந்துவர அரைமணி நேரமாகும். எதையும் முழுமையாகச் செய்வார். ஆனால் மெதுவாகத்தான் செய்வார்…அதுவரை நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்…?”
“நான் வேண்டுமென்றால் வெளியில் காத்திருக்கட்டுமா?” எனக்கேட்டான்.
தடித்த கண்ணாடிக்குள்ளிலிருந்து இரண்டு கோலிக் குண்டுக் கண்கள் அவனை ஊடுருவின.
“வேண்டாம். உங்கள் நேரத்தை வீணடிப்பீர்கள். மனிதவள மேம்பாட்டுத் துறையைப் பற்றி ஒரு சின்ன அறிமுகம் தருகிறேன், என்ன…?
“மகிழ்ச்சி சார்…” என்றான்.
தொலைபேசி ஒலித்தது. ரிசீவரையெடுத்து மேஜைமேல் வைத்தார். வெளியே சென்றிருந்த கோபால் உள்ளே வந்தார். வளையாபதிக்கு அருகே நின்று தலையைச் சொரிந்தார். நூறு ரூபாய் கடன் கேட்டார்.
“சம்பளம் வாங்கி சாராயம் குடி.. கடன் வாங்கி கள்ளுகுடி நீ எப்பய்யா திருந்துவே..?
நூறு ரூபாய் கை மாறிற்று.
“ஷல் வீ ஸ்டார்ட்.? மிஸ்டர் மதியழகன்..”
“யெஸ் சார்…” என்றான்.
“மிஸ்டர் மதியழகன். நீங்கள் ஒரு ஆபீசராய் இந்த நிறுவனத்தில் சேர்கிறீர்கள். ஒரு ஆபிசரிடம் நிர்வாகம் என்ன எதிர்பார்க்கிறதென்று நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். நெம்பர் ஒன். கீழ்ப்படிதல், நெம்பர் டூ. தொழில்திறமை. நெம்பர் த்ரீ. உற்பத்தித் திறன். நெம்பர் ஃபோர் தொழில் நேர்மை. நெம்பர் ஃபைவ். நிர்வாகத் திறமை. பஞ்சதந்திரங்கள். புரிந்ததா..?
ஆங்கிலச் சரளத்தில் ஒரு கணம் பிரமித்தவாறே புரிந்ததென்றான் மதியழகன். தொலைபேசி இருப்பிடம் சேர்ந்தது.
“மனிதவள மேம்பாட்டுத் துறையின் மூன்று முக்கியமான தியரிகளை உங்களுக்குச் சொல்லப்போகிறேன். முதலாவது. டடப டங்ழ்ங்ய்ய்ண்ஹப் டழ்ங்ள்ள்ன்ழ்ங் பட்ங்ர்ழ்ஹ்…”
அப்படின்னா என்ன? ஒரு வேலையை செய்ய எட்டுப்பேர் தேவைப்படுகிறது. ஆனால் அந்த வேலையை ஐந்துபேர் செய்யவேண்டும். வேலைச்சுமை அந்த ஐந்துபேரையும் வேகமாக வேலை செய்யவைக்கிறது. ஐந்து பேர் எட்டுபேர் வேலையை செய்யும்போது ஊழியர்களின் உற்பத்தித் திறன் கூடுகிறது. நிர்வாகத்துக்கு மூன்றுபேருடைய சம்பளம் லாபமாகிறது. அந்த லாபம் கணினி வாங்க, புதுக்கிளை திறக்கச் செய்ய வேண்டிய செலவுகளுக்குப் பயன்படுகிறது. புரிந்ததா..?
üதலையாட்டினான்ý
தொலைபேசி ஒலித்தது. எதிர்முனையிலிருந்து வந்த குரல் எதற்கோ கெஞ்சியது. “முதல் கேண்டிடேட் இன்னிக்குத்தான் வந்திருக்கார். அடுத்த வாரம் அனுப்பிச்சுடறேன்…”
மறுமுனையில் தொணதொணத்தது குரல்.
“காளியப்பன். என்னை நம்புங்கள். உறுதியாக நம்புங்கள்..”
தொலைபேசியை வைத்துவிட்டுத் தொடர்ந்தார்.
“மிஸ்டர் மதியழகன். இரண்டாவது தியரி. ஊ.ஊ.ப. அதாவது ஐந்து விரல்கள் தியரி. நம் கையின் ஐந்து விரல்களும் ஒன்றாயிருக்கிறதா…?
“இல்லை சார்..”
“ஊழியர்கள் அதுபோலத்தான். குதிரை கொள்ளென்றால் வாயைத் திறக்கும். கடிவாளமென்றால் வாயை மூடிக்கொள்ளும். ஊழியர்கள் அப்படித்தான் இருப்பார்கள். ஆனால் ஒரு ஆபீசர் அனைவரிடமும் வேலை வாங்கத் தெரிந்திருக்க வேண்டும். ஒருவனைக் கொஞ்ச வேண்டும். ஒருவனை விரட்ட வேண்டும். ஒருவனுக்குத் தார்க்குச்சி போட்டுக்கொண்டே இருக்க வேண்டும்… ஒருவனுக்கு கடன் கொடுக்க வேண்டும். இப்ப நான் கோபாலுக்கு கொடுத்தேனில்லையா? அதுபோல. சுருக்கமாக ஆடறமாட்டை ஆடிக் கறக்கணும். பாடறமாட்டைப் பாடி கறக்கணும்.
அங்கிருந்த பீரோவில் உள்ளிருந்த கோப்புகளை ஒழுங்குபடுத்திருந்த கோபால் குறுக்கிட்டு “கோபால் கறவை நின் ன மாடெல்லாமிருக்குது. அதையெல்லாம் எப்படிக் கறப்பியாம்….” என்றதும் “கோபால் நீ போய் ஒரு டீ சாப்பிட்டு எங்களுக்கு ரெண்டு டீ வாங்கிட்டு வா…” என்று வெட்டினார்.
“மதியழகன் சொல்ல மறந்துட்டேன். இந்த ஊ.ஊ.ப. தியரியை உருவாக்கியவர் நம் பொதுமேலாளர். இது பற்றி ஒரு தீசிஸ் எழுதியிருக்கார். ஐ.ஐ.எம் அகமதாபாத் டாக்டர் பட்டம் கொடுத்திருக்கிறார்கள்…”
மதியழகனுக்குச் சிரிப்பு வந்தது. சிரிப்பை மறைக்க கைக்குட்டையையெடுத்து முகம் துடைத்துக் கொண்டான்.
கோபால் டீ வாங்கிவர வெளியே சென்றதும், வளையாபதி தொடர்ந்தார்.
“ஒரு நாள் ஆடினால் கறக்கிற மாடு இன்னொரு நாள் கறக்காது. பாடினாக் கறக்கிற மாடு பாடினாக் கறக்காது. உதைக்கும்.
“அப்போது என்ன சார் செய்வது..?” மதியழகன் இடைமறித்துக் கேட்டான்.
அட்டகாசமான குரலில் சிரித்தார். பழைய கால பார்த்திபன் கனவு படத்தில் பார்த்த கபாலருத்திர பைரவனை நினைத்துக் கொண்டான். “உங்களுக்கு ஊ.ஊ.ப. புரிந்துவிட்டது. அடுத்தது கஇஎக
தியரி…”
கணினியை மீண்டும் இயக்கியவர் üதிம்மாச்சிபுரம்ý எனப் படித்தார். மதியழகனின் ஊர் அது. நமுட்டுச் சிரிப்பு சிரித்தார்.
“அப்படின்னா கஇஎக தியரி உங்களுக்குச் சுலபமாகப் புரியும் இந்தத் தியரியின் சொந்தக்காரர் இந்தக் கம்பெனியின் எக்ஸிகியூட்டிவ் டைரக்டர். மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் இந்தத் தியரி
ங.ஆ.அ. பாடபுத்தகங்களில் இடம் பெற்றிருக்கிறது. அதாவது. கண்ஸ்ரீந்ண்ய்ஞ் இர்ஜ் எழ்ஹக்ஷ்ண்ய்ஞ் இர்ஜ் சின்ட்ரோம். மேயற மாட்டை நக்கற மாடு…” நிறுத்தினார்.
“கெடுக்கும் சார்…” மதியழகன் கவனமாயிருப்பதைக் காட்டிக் கொண்டான்.
“அது எல்லாருக்கும் தெரியும். ஆனால் வேலை முடங்காமல் நடக்க வேண்டுமே. அதற்கென்ன செய்வது? அதற்கு நம் உ.ஈ, சில தீர்வுகளைச் சொல்கிறார். அதில் ஒன்று. வேலை செய்பவனுக்கு மேலும் வேலை கொடுக்க வேண்டும். வேலை செய்யாதவனுக்கு வசதிக்கேற்றாற்போல மசால்வடை ஜர்தாபீடா,பான்பராக், சிகரெட் வாங்கித் தரலாம். நிர்வாகத் திறமையென்பது வேலை செய்யாதவனிடம் வேலை வாங்குவது – அல்ல. பிரச்சினைகள் வரும். அதைவிட வேலை செய்பவனிடம் அதிக வேலை வாங்குவதுதான். உண்மையான நிர்வாகத் திறமையென்பது. நம் உ.ஈ யின் நிர்வாக உத்தி…. நம் உ.ஈ நிர்வாகத் திறமைக்குப் பேர்மமானவர் .
கோபால் டீ கொணர்ந்திருந்தார். கொதிநிலைத் தேநீர். வளையாபதி குடித்துக் கொண்டிருந்தார். சாரங்கன் நியமனக் கடிதம், அடையாள அட்டை, இரகசியக் காப்பு ஒப்பந்தம். அனைத்தையும் தயாராகக் கொண்டுவந்திருந்தார்.
மதியழகன் சிரமப்பட்டுத் தேநீரைச் சூடாகக் குடித்தான்.
ஒவ்வொரு தாளாய் சரிபார்த்துக் கையைழுத்திட்டார் வளையாபதி. எல்லாத் தாள்களையும் அவருக்குப் பின்னாலிருந்த குழலூதும் கண்ணனின் காலடியில் வைத்துக் கண்ணைமூடிக் üகிருஷ்ணார்ப்பணம்ý எனச் சொல்லி அனைத்தையும் ஒரு கவரில் போட்டு மதியழகனிடம் தந்தார்.
மதியழகன் எழுந்து நின்று பணிவுடன் வாங்கிக் கொண்டான்.
“திங்கட்கிழமை காலை கம்பெனியின் பொன்னேரி கிளையில் பணிக்குச் சேருங்கள். வாழ்த்துகள்..”
மதியழகனுடன் கை குலுக்கினார். நன்றி சொன்னான். சாரங்கனுக்கும் நன்றி சொன்னான்.
“இந்தியாவின் மிகப்பெரிய நிதிநிறுவனத்தில் அதிகாரியாய் வாழ்க்கையைத் துவங்குகிறீர்கள். கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும். இன்றிலிருந்து சாப்பாட்டில் உப்பைக் குறைத்துக் கொள்ளுங்கள். என்றார் சாரங்கன். வளையாபதி ஆமோதிக்கிறாற்போலத் தலையசைத்தான்.

நமக்கிருப்பது


நமக்குத் தெரியும்
ஒரு பொம்மலாட்டத்தில்
நாம் மன்னர்களென்று.
நமக்குத் தெரியும்
உண்மையில் நாம்
சம்பள அடிமைகளென்று
நமக்குத் தெரியும்
மன்னர்கள், குறுநில மன்னர்கள்
பெருநில மன்னர்கள், மாமன்னர்கள்
பெரு மாமன்னர்களின் பிரஜைகள் நாமென்று.
நமக்குத் தெரியும்
மாமன்னராகும் கனவு
பலருக்குமிருக்கிறதென்று
நமக்குத் தெரியும்
அரசன் வசமும் அவன்
எதிரிகள் வசமும்
ஆளும் அம்பும் உண்டென்று.
நமக்குத் தெரியும்
பசுக்களை, இளங்கன்றுகளை
காளைகளை, பறவைகளை, மரங்களை
சாய்த்தது யாரென்று.
நமக்குத் தெரியும்
கண்ணால் கண்டதும்
காதால் கேட்டதும்
தீர விசாரித்ததும் மெய்யென்று.
நமக்குத் தெரியும்
நமதடுத்த கணம்
கத்தியின் கூராய்
அரிவாளின் மின்னலாய்
துப்பாக்கியின் உறுமலாய் வருமென்று.
நமக்குத் தெரியும் நாம்
கண்களை, காதுகளை வாயை
பொத்திக்கொண்டிருக்க வேண்டுமென்று.
நமக்குத் தெரியும்
நமக்கிருப்பது ஒரே உயிர்
அதை எளிதில் விடக்கூடாதென்று.
தமிழில் அங்கத உணர்வுடன் கவிதை எழுதுவது எளிதான விஷயம் அல்ல. இதில் கை தேர்ந்தவர் ஞானக்கூத்தன். அவருடைய கவிதைகளில் sense of humour தொடர்ந்து வந்து கொண்டிருக்கும். எந்தக் கவிதையைப் படித்தாலும், படிப்பவரை சிரிப்பில் ஆழ்த்தும்படி இருக்கும். ஆனால் தீவிரமான கவிதைகளும் உண்டு. ஒருமுறை நவீன விருட்சத்திற்காக ஒரு கவிதை தரும்படி கேட்டேன். அவரும் எழுதிக் கொடுத்தார். அதைப் படித்தபிறகு எனக்குத் தாங்கமுடியாத சிரிப்பு வந்தது. குதிரை என்பது அக் கவிதையின் தலைப்பு.
குதிரை

மரத்துக்குக் கீழே குதிரை
அதற்குக் கொடுக்கப்பட்ட
புல்லைக் குனிந்து குனிந்து
தரையிலேயே தின்றவாறு நிற்க
குதிரைக்குப் பக்கம் இவன் போனான்
‘குதிரை,’ ‘குதிரை’ என்றான்.
இவனைக் குதிரை கவனிக்காமல்
தன்
பாட்டுக்குப் புல்லைக் கொரித்தது
மீண்டும் இவன் சொன்னான்
‘குதிரை, குதிரை, குதிரை’
விட்டது பட்டென் றொருஉதை
அந்தக் குதிரை.
தரையில் உருண்டான்
அப்பால் ஒருமுறைக்கூட
குதிரையென் னாமல் கிளம்பிப்போனான்.
பெரும்பாலும் பலருக்கு கவிதை மூலம் சிரிப்பை வரவழைக்கத் தெரியவில்லை. லாவண்யாவின் ‘நமக்கிருப்பது’ என்ற கவிதையில் சிரிப்பு வருகிறது. இந்தச் சிரிப்பை கடைசியில் கொண்டு வருகிறார்.
நமக்குத் தெரியும் நாம்
கண்களை, காதுகளை வாயை
பொத்திக்கொண்டிருக்க வேண்டுமென்று……….
படிக்கும்போது நமக்குத் தாங்கமுடியாத சிரிப்பு வருகிறது. நவீன விருட்சம் 80ஆவது இதழில் இக் கவிதை பிரசுரம் ஆகி உள்ளது. 80 ஆவது இதழைப் படித்த நண்பர் ஒருவர், லாவண்யா ஆணா பெண்ணா என்று கேட்டார். ஆண் என்றேன். அவருக்கு அதைக் கேட்டவுடன் சுவாரசியம் குறைந்து விட்டது. திரும்பவும், என்ன வயது என்று கேட்டார். ’60க்கு மேல்’ என்றேன். நண்பர் என்னிடம் லாவண்யாவைப் பற்றி அப்புறம் பேசவே இல்லை.
– அழகியசிங்கர்
19.07.2008