ஒரு கவிதை –

கடுகளவும் சந்தேகமில்லை
இது ஒரு பைத்தியக்காரவுலகம்
இதில் பலவித பைத்தியங்கள் வாழ்கின்றன.
காசுப் பைத்தியம் கார் பைத்தியம்
சினிமாப்பைத்தியம் சீட்டுப்பைத்தியம்
காதல் பைத்தியம் கவிதைப்பைத்தியம் என
நமக்கு முன்பும் பைத்தியங்களிருந்தன
அவை அப்பாவிகளாயிருந்திருக்கின்றன
அவை நிறையக் கதைகளைத்
தெரிந்து வைத்திருந்தன
அவைகள் சொல்ல நாம் கேட்டோம்
அவற்றிலொன்று
விறகுவெட்டி மூன்று கோடரிகள் கதை
அந்தக் கதையால் நாம் வீணாய் போனோம்
அதோ அவனைப் பார்த்தால் புரியும்
போட்டியாளனைப் போட்டுத் தள்ளுகிறான்
கவர்மெண்ட் பணத்தைக் களவாடுகிறான்
குபேரனாகிறான்
மண்ணைப் பொன்னாக்கும் மகானென்று
மண்டியிடுகிறதுலகம்
மகானின் தோட்டத்தில் மாடுகள் ரெண்டு
மூத்திரம் குடித்து பல்லிளிக்கின்றன
ஒன்றின் பற்கள் உனதைப் போலிருக்கின்றன
தோலிருக்கச் சுளைமுழுங்கித் தலைவன்
வாய் திறந்தால் பொய்யருவி- அவனை
கணினியுகத்தின் விடிவெள்ளியென்கிறதுலகம்
ஆட்டைப்போல் ஆளை வெட்டினவன் அரசனானான்
அடுத்தவன் கிடையில் ஆடு திருடி
அரசனுக்கத் தந்தவன் தளபதியானான்
கிலிபிடித்த ஒருவன் கடவுளைக் கற்பித்தான்
புசிக்க உணவில்லை பிட்டுக்கூலி
வசிக்க மனையில்லை சுடலைவாசி
உடுத்த உடையில்லை அம்மணாண்டி
முடிவெட்டக்காசில்லை சடாமுடி
அவனைக் கடவுளென்கிறதுலகம்

இப்போது சொல்
இது பைத்தியக்கார உலகமா இல்லையா?

One Reply to “ஒரு கவிதை –”

  1. உண்மைதான் தங்க கோடாரி மறுத்த அப்பாவி பைத்தியங்களும் எள்ளளவு மண்ணையும் என்சொத்தென சுருட்டும் பைத்தியங்களும் நிறைந்த உலகம்தான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *