பிழை

நதி வெள்ளம்
கடல் நோக்கி
என்னவளின்
வீட்டின் கதவு
திறக்காது
தாமதமாய்ப் போனால்
மேகங்கள் தூது போகும்
என்னவளின்
செளக்கியத்தைச் சொல்லாது
மழை நீர் பேதம் பார்த்தா
மனிதனைத் தொடும்
பயணம் இரவுகளைத்
தொலைக்கும்
பிரிவு வரத்தை
யார் தான் வேண்டுவார்கள்
வெண்மேகம் கரைந்தோடும்
நினைவுப் போரலைகள்
விண்ணைத் தொடும்
நெஞ்சம் நிழலாடுகிறது
நிழல்கள் கூட
உன்னைப் போலவே
தெரிகிறது
எழுதுகோலில் மை
இருக்கிறது
கவிதை எதிரில்
உட்கார்ந்திருக்கிறது.

பட்டியல்

பாதையில் கிடந்த
கருவேல முள்ளை
ஓரத்தில் எடுத்துப் போடுகிறேன்
புட்டத்தை வாலால் மறைத்தபடி
ஒரு நாய்
என்னைக் கடந்து செல்கிறது
மாங்கிளைகளை வெட்டியாகிவிட்டது
இனி எந்த மரக்கிளையில்
கிளிகள் வந்தமரும்
மேகங்கள் எங்கே சென்றன
நடவு செய்பவர்களை
வெயிலில் காயவிட்டு
மாடுகள் தின்பதற்காகவாவது
உதவட்டும்
இந்த சுவரொட்டிகள்
அக்கரைக்கு நீந்திச் செல்ல
நீச்சல் மட்டும் தெரிந்திருந்தால்
போதாது
எப்போதாவது செல்லும்
விமானத்தை
வேடிக்கைப் பார்க்க
சொல்லியாத் தரவேண்டும்
காலம் முடிந்து
குருக்கள் கிளம்பிவிட்டார்
சாமி எங்கே போகும்.

கனவென்று தெரிந்திருந்தால்

கிணற்று நீரில்
நிலா பார்ப்போம்
தண்ணீர் உனைப் பருகி
தாகம் தீர்க்கும்
குழலோசை
செவியினில் இனிக்கும்
கண்களுக்கு நீ எதிரில் வருவது
மிகவும் பிடிக்கும்
மரத்திலிருந்து விழுந்த
பழுத்த இலையொன்று
உன் மீது உரசியதால்
தீப்பற்றி எரியும்
வீதியில் நீ
நடந்து வந்தால்
வெண்மேகம் குடைபிடிக்கும்
வரம் கொடுக்கிறேன் என்று
கடவுள் நேற்று
உன் வீட்டுக்கு வந்திருந்தாராமே
கல்லூரியில் நீ
வரலாறு படித்தாய்
தெருவெல்லாம் நானல்லவா
மரம் நட வேண்டியிருக்கிறது.

உன்மத்தம்

கதவைத் திறந்தேன்
முன்பனி முகத்தில்
அறைந்தது
உறக்கம் தழுவும் தருணம்
யாருக்கு இங்கே தெரியும்
கதவைத் திறந்தே வைத்திருங்கள்
எந்த உருவத்திலும்
இறைவன் வரலாம்
சில சமயம்
பார்க்க நேர்ந்துவிடுகிறது
அம்மாவின் முகத்தை
பொட்டில்லாமல்
இன்று ஒரே நிறத்தில்
உடையணிந்து வந்திருக்கிறோம்
எதேச்சையாக நேர்வது தான்
என்றாலும்
மனதில் வண்ணத்துப்பூச்சி
சிறகடிக்கிறது
விழுந்த மரத்தில் இருந்தது
வெறுமையான குருவிக் கூடு
வழிதவறிய யானைக் கூட்டம்
வாழைத் தோட்டத்தை
துவம்சம் செய்தது
கார்காலத்தில்
மனதில் ஏனோ ஈரப்பதம்
வாழ்க்கைக் குறிப்பேட்டில்
உங்களுடைய வாசகத்தை
நீங்கள் தான் எழுத வேண்டும்.

வரையறை

மழை விடாமல் பெய்தது
பகல் இருள் கவிந்திருந்தது
அலுவலகத்திற்கு
தாமதமாய் போனால்
நந்தனைப் போல்
வெளியே நிற்கவைத்து
விடுவார்கள்
சூரல் நாற்காலியில்
அவர் அமர்ந்திருந்தார்
நெல் மணிகளைக் கொறிக்கும்
மைனாக்களைப் பார்த்தபடி
புத்தி பேதலித்தவர்கள் எல்லாம்
ஏன் ஒரே இடத்தை
வெறித்துப் பார்க்கிறார்கள்
மனிதர்களோடு அளவளாவ
விரும்பாதவரைப் போல்
முகத்தை வைத்துக் கொண்டிருந்தார்
துஷ்டி கேட்க
இப்போதெல்லாம் அவர்
எவருடைய வீட்டிற்கும்
செல்வதில்லை
இப்போது எங்கோ
கிளம்பிக் கொண்டிருக்கிறார்
துக்கம் நிகழாத வீட்டிலிருந்து
ஒரு பிடி மண்ணை
அள்ளி வர
கிளம்புகிறாரோ என்னவோ.

உன்னிடம் எப்படிச் சொல்வது

கண்ணை மூடிக்கொண்டால்
உலகம் இல்லாமல் போய்விடுமா
தூர் வாரப்படும் கிணற்றிலிருந்து
எடுக்கப்படும் பொருட்களைக் காண
உனக்கு ஆவலாய் இருக்காதா
புள்ளிகள் மட்டுமே
அழகிய கோலமாகிவிடுமா
வானம் எழுதும்
ஓவியக் கவிதை தானே
வானவில்
காற்று நிரப்பப்பட்ட
பலூன்களைக் கண்டால்
குழந்தைமை உடைந்து
வெளிவருவதில்லையா
கருணை இல்லங்களுக்கு
உதவிடும் போது
நமது இறைமை கொஞ்சமாவது
வெளிப்படுவதில்லையா
ஒரு குழந்தை வந்து
உன்னை அம்மா என்றழைத்தால்
உனக்கு கோபிக்கத் தோன்றுமா
மிக அரிதாகவே
ஜோக்குகள் சொல்கிறேன்
சிரிக்க மாட்டாயா.

தசாவதாரம்

அலைகள் ஒன்றையொன்று
துரத்தி விளையாடுகிறது
குளத்தில் சலனம்
எறிந்த கல்
நீரில் அமிழும்
கோயில் நகரத்தில்
கடவுளுக்கு இடமில்லை
விபத்து நடந்த பகுதியில்
வாகனங்கள் விரையும்
வேகத்தைக் குறைக்காமல்
வாழ்க்கை ரகசியம்
ஜாதகக் கட்டத்தில்
தெரியுமென்றால்
ஜோதிடக்காரன்
அன்னாடங்காச்சியாக
இருப்பதேன்
ஈரம் இல்லாத
மனிதர்களால் தான்
உலகம் விளிம்பில்
நின்று கொண்டிருக்கிறது
ஆளுக்கேற்றபடி
வேஷம் போடத் தெரியாதவன்
தேசாந்திரியாகத்
திரிய வேண்டியது தான்.

கல்லறை வாசகம்

சாலையின் இருபுறமும் உள்ள
பூக்கள் பேசிக்கொண்டன
அவள் செளந்தர்யத்தில்
மயங்காத ஆடவர்களே
இல்லை என்றது முதல் பூ
டாலடிக்கும் தோலுக்கு உள்ளே
இருப்பது
ரத்தமும், சதையும் தான்
என்றது இரண்டாம் பூ
எனக்கு மட்டும்
உருமாறும் வித்தை
தெரிந்தால்
அவள் அணியும் காலணியாக
மாறி காலடியிலேயே
ஆயுள் முழுதும் கிடப்பேன்
என்றது முதல் பூ
அவள் இறந்தால்
இந்தப் பாதையின்
வழியாகத்தான்
தூக்கி வருவார்கள்
என்றது இரண்டாம் பூ
பேரழகிகளை சாவு
நெருங்குவதில்லை என்றது
முதல் பூ
மண் யாரையும்
ருசி பார்க்காமல் விட்டு வைத்ததில்லை
என்றது இரண்டாம் பூ.

ஒரு மழை நாள்

கார்மேக ஊர்வலத்தைக் கண்டு
மயில் தோகை விரிக்கும்
பூமியை குளிரச் செய்ய
வானம் கருணை கொள்ளும்
மரங்கள் தான் செய்த தவங்கள்
வீண்போகவில்லையென
மெய்சிலிர்க்கும்
குடை மனிதர்களுக்கு
மூன்றாவது கையாகும்
காகிதக் கப்பல்கள்
கணித சமன்பாடுகளைச்
சுமந்து செல்லும்
கொடியில் காயும்
துணிகளெல்லாம்
எஜமானியம்மாவை
கூவி அழைக்கும்
ஆடுகள் மே என்று
கத்தியபடி
கொட்டிலுக்கு ஓட்டமெடுக்கும்
தேகம் நனையச் செல்லும்
தேவதையை
கண்கள் வெறித்துப் பார்க்கும்.

பிரயோகம்

                                                                                                                                 

பாதி தூரம்
வந்த பிறகு தான்
தெரிந்தது
அதல பாதாளம்
அதற்கு மேல்
ஒன்றுமில்லை
தலை நோவ
மண்டையிடி
எதற்குத் தண்டனையோ
உடல்
நீலம் பாரித்தது
ஈசன் கழுத்திலுள்ள
பாம்பு தீண்டிற்றோ
பேச்சு சாதுர்யத்துடன் தான்
ஆரம்பிக்கிறது
பெரும் சண்டையில் போய்
முடிகிறது
வந்த வழியை
திரும்பிப் பார்த்தால்
இவ்வழியா வந்தோம்
மூக்கைப் பிடித்துக் கொண்டு
எனத் தோன்றும்
புலால் உண்ணத் தகுந்ததல்ல
என்று புரிகிறது
என்ன செய்வது
ஆதியில் பச்சை மாமிசத்தை
புசித்தவனுக்கு
துறவி சொல்வது
எங்கு புரிகிறது
மயன் காலண்டர்
முடியப் போகிறதாம்
இதோ தோன்றப்
போகிறாராம்
வாழும் போது
தண்டணை தருகிறோம்
சென்ற பிறகு
தேடி அழுகிறோம்
மானுடமே மரித்த பிறகு
தனித்து அலைவாரா
கடவுள்.