மழை விடாமல் பெய்தது
பகல் இருள் கவிந்திருந்தது
அலுவலகத்திற்கு
தாமதமாய் போனால்
நந்தனைப் போல்
வெளியே நிற்கவைத்து
விடுவார்கள்
சூரல் நாற்காலியில்
அவர் அமர்ந்திருந்தார்
நெல் மணிகளைக் கொறிக்கும்
மைனாக்களைப் பார்த்தபடி
புத்தி பேதலித்தவர்கள் எல்லாம்
ஏன் ஒரே இடத்தை
வெறித்துப் பார்க்கிறார்கள்
மனிதர்களோடு அளவளாவ
விரும்பாதவரைப் போல்
முகத்தை வைத்துக் கொண்டிருந்தார்
துஷ்டி கேட்க
இப்போதெல்லாம் அவர்
எவருடைய வீட்டிற்கும்
செல்வதில்லை
இப்போது எங்கோ
கிளம்பிக் கொண்டிருக்கிறார்
துக்கம் நிகழாத வீட்டிலிருந்து
ஒரு பிடி மண்ணை
அள்ளி வர
கிளம்புகிறாரோ என்னவோ.
Author: virutcham
மரம் பெய்யும் மழை
*27 ம் 67 ம்
முடிவற்று நீளும் பயணத்தின் வெற்றுக் கால்கள்
அந்தத் தெரு வழியே நடக்கும் நிழல்களில்
ஒன்று வயதானது
மற்றொன்று இளவயது
தொலைந்து போன தருணங்களின்
ரகசியங்களை
அளவில் அடங்காத மலர்தலை
சொல்ல விரும்பும் தயக்கத்தை
கதவடைத்துக் கொள்ளும் மௌனங்களை
கருணையின் மீது பிரயோகிக்கப்படும் சாபங்களை
யாவற்றையும் உருக்கி ஊற்றும் வெயில்
பிளாட்பாரம் ஏறி நிதானிக்கும் வெற்றுக் கால்களை
குறுகுறுக்கச் செய்து சூடேற்றுகிறது
மேலும் நடக்கத் தூண்டி
முடிவற்று நீளும் பயணத்தை நோக்கி
எல்லாத் தெரு வழியேயும் நடக்க நேரும் நிழல்கள்
இரண்டுக்கு மேற்பட்டவை
ஆனால்
ஒன்று வயதானது
மற்றொன்று இளவயது
******
மொழி அதிர்ச்சி
”பிரச்சனெ பெரிஸ்ஸா ஒண்ணுமில்லீங்க.”
”பரவாயில்லெ, எதுவானாலும் சொல்லுங்க..அவங்களுக்கு என்ன பிரச்சினென்னு முழுஸ்ஸாத் தெரிஞ்சாத்தான் உதவி செய்யிறதுக்கு எங்களுக்குச் சுலபமா இருக்கும்.”
”கொஞ்ச நாளாவே சிடுசிடுங்கறது, எங்கிட்டே எரிஞ்சு விழுறது, கொழந்தைகங்களெப் போட்டு மொத்தறது இப்பிடியாயிருக்குதுங்க. சமாதானப்படுத்துனாகூட கோபம் தணியிறதில்லெ..”
”வீட்டுலெ ஏதாச்சும் சிக்கலாச்சா?”
”சிக்கலுன்னு என்னெத்தெங்க சொல்றது? கொஞ்ச நாளா யாபாரம் அவ்வளவு சொகமில்லீங்க.. ஒருவேளை அதனாலெதான் ரிலேக்ஸேஸனாயி ஒரு மாதிரி ஆயிட்டாளோன்னு நெனெக்கிறேன்.”
”என்ன ஆயிடுச்சின்னு சொன்னீங்க?”
”அது ஒண்ணுமில்லீங்க..நீங்க மேக்கொண்டு என்ன வெவரம் வேணும்னு சொல்லுங்க..”
”சரி, நல்ல ஆழ்ந்து தூங்குறாங்களா?”
”தூங்குறா. ஆனாக்க சில வேளெயிலே ரிலேக்ஸேஸனாயி ஒரே முட்டா யோசிக்க ஆரம்பிச்சிருவா..அண்ணிக்குப் படுக்கிறதுக்கு ரவெக்கி ஒரு மணி ரெண்டு மணி ஆயிரும்.”
”என்ன ஆச்சுன்னா தூக்கம் கெடுங்குறீங்க?”
”அது ஒண்ணுமில்லீங்க..நீங்க மேக்கொண்டு கேளுங்க.”
”நல்ல ருசிச்சு வேளாவேளெக்கிச் சாப்பிட்றாங்களா?”
”அப்படிச் சொல்றதுக்கில்லீங்க..ஏதோ சாப்பிடும்..ஆனா ரிலேக்ஸேஸனாயிட்டா சாப்பாடு எறங்காது.”
”என்ன ஆயிடுச்சின்னா சாப்பாடு எறங்காதின்னீங்க?”
”அது ஒண்ணுமில்லீங்க..நீங்க மேக்கொண்டு கேளுங்க..”
”குளிக்கிறதுலெ ஏதாச்சும் பிரச்சினெயிருக்கா? தெனமும் நேரத்துக்குக் குளிக்கிறாங்களா?”
”குளிக்குது. அதுலெ என்னாங்க இருக்கு? ஆனாக்க சிலவேளே இந்த ரிலேக்ஸேஸன் ஆயிடுங்க.. அப்ப குளிக்காதுங்க..”
”என்ன ஆனா குளிக்கமாட்டாங்கன்னு சொன்னீங்க?”
”அது ஒண்ணுமில்லீங்க.. நீங்க மேக்கொண்டு கேளுங்க..”
”இவங்களுக்குத் தலையிலெ எப்பவாச்சும் அடிபட்டிருக்கா?”
”பலமா அடின்னு சொல்றதுக்கு ஒண்ணுமில்லீங்க..ஆனா இவ படுத்துற கூத்து தாங்கமாட்டாமெ எனக்கே ரிலேக்ஸேஸன் ஆயி ஒரு ருல் தடியெ எடுத்து அவ தலையிலே சிறுஸ்ஸா ஒரு போடு போட்டுட்டேங்க. ஒரு நாலு தையல் போட்டிருக்கு. அவ்வளவுதாங்க..”
”ஒங்களுக்கு என்ன ஆச்சுன்னு சொன்னீங்க?”
”அது ஒண்ணுமில்லீங்க. நீங்க மேக்கொண்டு கேளுங்க..”
”நா மேக்கொண்டு கேக்குறதுக்கு முன்னாடி ஒங்ககிட்டெ ஒரு உதவி கேக்கணும்..”
”எங்கிட்டெயா, நா ஒங்களுக்கென்ன உதவி செஞ்சிறப் போறேங்க?”
”அப்பிடிச் சொல்றதுக்கில்லே..ஒங்களெப் புரிஞ்சிக்கர்றதுக்கு நீங்கதான் உதவி செய்யணும்..”
”………………………….”
”நடுநடுவுலெ எனனமோ ஒரு வார்த்தெயெ உபயோகிச்சீங்க..அது என்னான்னு கொஞ்சஞ் சொல்றீங்களா?”
”அட, நீங்க ஒண்ணு..அது ஒண்ணுமில்லீங்க..”
”அப்பிடி நீங்க சொல்லக்கூடாது. நீங்க அது என்ன வார்த்தைன்னு சொன்னாத்தான் நீங்க சொன்ன முழு வெவரமும் எனக்கு வெளங்கும். இல்லேன்னா இவ்வளவு வெவரம் சேகரிச்சும் பிரயோசமில்லாமெப் போயிரும்..”
”நா புரியாத எதெயும் சொல்லலீங்களே.”
”இல்லெ, சொன்னீங்க. இந்த ரிலேக்ஸஸன்னு ஏதோ அடிக்கடிச் சொன்னீங்க. இந்த வார்த்தெய வேறெ ஒரு அர்த்தத்துலெதான் எனக்குத் தெரியும்.. ஆனா நீங்க எந்த அர்த்தத்துலெ அதெச் சொன்னீங்கன்னு சொல்ல முடியுமா?”
”அதுங்களா? அது சும்மாங்க..இந்த பேண்ட் சட்டை போட்டுவிட்டு ‘டை’ யெல்லாம் கட்டிக்கிட்டு ஒயிலாச் சிகரெட்டுப் பிடிக்கிற மாதிரித்தானுங்க அதுவும்..”
”எனக்குச் சத்தியமாப் புரியல்லெ.”
”ஆமாங்க, இந்த இங்கிலீஷ் வார்த்தைக்கெல்லாம் என்னாங்க பெரிஸ்ஸா அர்த்தம் இருந்திறப் போறது?”
”என்ன ஒரேயடியா அப்படிச் சொல்லீட்டீங்க..”
”பெறகென்னாங்க..இங்கிலீஷ்லெ தஸ்ஸு புஸ்ஸுன்னு நாலு வார்த்தெ விட்றதெல்லாம் ஒரு ஸ்டைலுக்குத்தானுங்களே. ரிலேக்ஸேஸனும் அதே மாதிரித்தானுங்க..சும்மா ஸ்டைலுக்கு நடுநடுவுலெ அங்கெ அங்கெ விட்டுக்கிர்றதுங்க.. இதுக்கெல்லாம் போயி நீங்க அர்த்தங் கேட்டுக்கிட்டு இருக்கீங்க?”
(அக்டோ பர் – டிசம்பர் 1991ஆம் ஆண்டு நவீன விருட்சம் இதழில் பிரசுரமான கதை)
காலம்
சேர்ந்தே சுழன்றது எனக்கான காலம்.
எட்டிப் பிடித்துவிட எத்தனித்த தருணங்களில்
கைகளுக்குள் சிக்காமல் சுழன்றபடி இருக்கிறது.
துணைக்கு அழைத்த தாம்புக் கயிறும்
காலத்தின் சுழற்சியில் என் கழுத்தை சுற்றிக் கொண்டது.
மூச்சு முட்டி தத்தளித்து,
தூக்கி வீசப்பட்டு,
அறையின் ஓரத்தில் கிடந்தவன் மீது
நான் பார்த்துக் கொண்டிருந்த கணத்திலேயே
கீழிறங்கி,
என்னை மிதித்து, நடந்து, கடந்து சென்றது காலம்
இரு கவிதைகள்
முதலில்
முதலில் யானை மேலிருந்து இறங்கு
பிறகு பேசுவோம்
மராமத்து
வெள்ளைத்துரை உனைக் கண்டு
வேர்த்து வெளவெளத்து
வேஷ்டியைத் தழையவிட்டு
வளைந்து வணங்கும் காலம் போச்சு
கொலம்பஸ் பிறக்குமுன்பே
கடலோடி வணிகர் நாங்கள்
அதனால் பையா அடக்கி வாசி
எங்கள் சந்தை எங்கள் சட்டம்
எந்தக் கொம்பனும் அதற்கு அடக்கம்
சம்மதம் என்றால் கடையை விரி
சரிப்படாதென்றால்
கடையைக் கட்டு
அரிசி, பருப்பு, ஆமணக்கு,
காய், கறி மிளகாய், உப்பு,
மஞ்சள், வெல்லம், மாம்பழம்,
வாங்கலாம். உன் சரக்கை நீ
விற்கலாம். வாரந்தோறும் சந்தை உண்டு
அடாவடி விலைக்கு அனுமதி இல்லை
அடிமை வாணிபம் செய்வதற்கில்லை
வணிகம் செய்ய வந்தவன்
வணிகம் மட்டும் செய்வது நல்லது
உலவு பார்ப்பது கலகம் செய்வது
சித்துவேலை ஏதும் செய்தால்
சீவி விடுவோம் பனங்காய்போல.
உள்கோட்டில் பிஸ்டலை மறைத்து
உதட்டோ ரம் புன்னகை மலர்த்தி
கைக்குலுக்கும் கபடம் எனக்கும் தெரியும்
நெடுநாள் முன்பு பிஸ்டல் செய்வது
குடிசைத் தொழிலாய் இருந்தது
எங்களூரில்…..
இலவசம்
கோழி வாங்கினால்
முட்டை இலவசம்
ஜாடி வாங்கினால்
மூடி இலவசம்
பழம் வாங்கினால்
கொட்டை இலவசம்
கடன் வாங்கினால்
அட்டை இலவசம்
கட்டில் வாங்கினால்
மெத்தை இலவசம்
மெத்தை வாங்கினால்
தலையணை இலவசம்
என்ன வாங்கனால்
எத்தரே நொட்டுவது இலவசம்.
எதையாவது சொல்லட்டுமா……….60
உன்னிடம் எப்படிச் சொல்வது
கண்ணை மூடிக்கொண்டால்
உலகம் இல்லாமல் போய்விடுமா
தூர் வாரப்படும் கிணற்றிலிருந்து
எடுக்கப்படும் பொருட்களைக் காண
உனக்கு ஆவலாய் இருக்காதா
புள்ளிகள் மட்டுமே
அழகிய கோலமாகிவிடுமா
வானம் எழுதும்
ஓவியக் கவிதை தானே
வானவில்
காற்று நிரப்பப்பட்ட
பலூன்களைக் கண்டால்
குழந்தைமை உடைந்து
வெளிவருவதில்லையா
கருணை இல்லங்களுக்கு
உதவிடும் போது
நமது இறைமை கொஞ்சமாவது
வெளிப்படுவதில்லையா
ஒரு குழந்தை வந்து
உன்னை அம்மா என்றழைத்தால்
உனக்கு கோபிக்கத் தோன்றுமா
மிக அரிதாகவே
ஜோக்குகள் சொல்கிறேன்
சிரிக்க மாட்டாயா.
பறவை
திருப்பிப்போடப்பட்ட ‘எஃப்’ வடிவத்தில்
அமர்ந்திருந்தது ஒரு பறவை அந்தக்கிளையில்
நீள அலகு , கால்கள் சிறகுக்குள் புதைந்து,
விரல்களின் நகங்கள் மட்டும் நீண்டு
மரக்கிளையை கவ்விக்கொண்டு நின்றது.
வால் சிறிது நீண்டு மரக்கிளைக்கு
கீழே வரை தெரிந்தது.
கச்சிதமான “எஃப்” தான்.
எஃப்’பைத்திருப்பி சரியாக்கினால்
என்ன எனத்தொன்றி
கல்லை விட்டெறிந்தேன் அதன்மேல்
பறந்து செல்கையில்
ஒரு எழுத்தையும் போல அல்லாமல்
நீண்ட கோடாகப்பறந்தது.
எஃப்’ம் கோடும் எனக்குத்தெரிகிறது
அந்தப்பறவைக்குத்தெரியுமா ?!








