உன்மத்தம்

கதவைத் திறந்தேன்
முன்பனி முகத்தில்
அறைந்தது
உறக்கம் தழுவும் தருணம்
யாருக்கு இங்கே தெரியும்
கதவைத் திறந்தே வைத்திருங்கள்
எந்த உருவத்திலும்
இறைவன் வரலாம்
சில சமயம்
பார்க்க நேர்ந்துவிடுகிறது
அம்மாவின் முகத்தை
பொட்டில்லாமல்
இன்று ஒரே நிறத்தில்
உடையணிந்து வந்திருக்கிறோம்
எதேச்சையாக நேர்வது தான்
என்றாலும்
மனதில் வண்ணத்துப்பூச்சி
சிறகடிக்கிறது
விழுந்த மரத்தில் இருந்தது
வெறுமையான குருவிக் கூடு
வழிதவறிய யானைக் கூட்டம்
வாழைத் தோட்டத்தை
துவம்சம் செய்தது
கார்காலத்தில்
மனதில் ஏனோ ஈரப்பதம்
வாழ்க்கைக் குறிப்பேட்டில்
உங்களுடைய வாசகத்தை
நீங்கள் தான் எழுத வேண்டும்.

அழகன்

அந்தக் கனவில்
அவன் அழகாகத் தெரிந்தான்
கழுத்து நிறையப் பதக்கங்களுடன்
வெற்றிகளைக் குவித்திருந்தான்

ஒரு கனவில்
அவனை இந்திரன் சந்திரன் என்றனர்
மெத்தப் படித்த மேதாவி என்றனர்
அவன் முகத்தின் பொலிவு கண்டு
அவன் கண்களே கூசின

தனி விமானத்தில் உலகம் சுற்றிய
நீண்ட கனவொன்றில்
அவன் கம்பீரம் கூடியிருந்தது

தன் இருபத்தெட்டு மாடிவீட்டின்
மேல்தளத்துத் தோட்டத்தில்
காலைத் தேநீர் பருகிய கனவில்
மேகங்கள்
முற்றுகையிட்டுக் கொண்டாடின
அவன் அந்தஸ்தை

கனவுகள் தந்த சந்தோஷங்களுடனே
புலர்ந்தன தினம் பொழுதுகள்

இப்போதெல்லாம்
அவற்றுக்காகவே
சீக்கிரமாய் உறங்கச் செல்கிறான்

நிஜம் தொடாத நிகழ்வுகள் ஓடிய
திரை தந்தப் போதையில்
பகல் கனவும் பழக்கமாயிற்று

பலிக்குமெனச் சொல்லப்பட்ட
பகல் கனவுகளில்
மறந்தும் ஒருதுளி வியர்வை
வெளியேறிடாமல்
மேனி மினுமினுப்பைப்
பாதுகாத்துக் கொண்டான்

நிஜத்தை மட்டுமே பிரதிபலிக்கிற
அறைநிலைக்கண்ணாடி
தன் நிலைப்பாட்டை
மாற்றிக் கொள்ள இயலா
சகிப்புடன்
காட்டிக் கொண்டிருந்தது
விழிசெருக வாய் திறந்து
கனவில் கிடந்தவனை

அவலட்சணத்தின்
மொத்த இலக்கணமாக.

எதையாவது சொல்லட்டுமா………61

சமீபத்தில் நான் இரண்டு விழாக்களுக்குச் செல்லும்படி நேரிட்டது.  இரண்டுமே எனக்குத் தெரிந்து நெருங்கிய உறவினர் வீடுகளில் நடந்த விழா.  விழா என்பதை விட விருந்து என்று சொல்லலாமா என்பது எனக்குத் தெரியவில்லை.  இரண்டு குடும்பத்தினரும் பத்திரிகை அனுப்பி அழைத்திருந்தார்கள்.  முதல் அழைப்பு ஒரு கல்யாண அழைப்பிதழ்.  நங்கநல்லூரிலுள்ள ஒரு குளிரூட்டப்பட்ட பெரிய ஹாலில் நடைப்பெற்றது.  கல்யாண சத்திரம் அமர்களமாக இருந்தது.  நான் சீர்காழி ரிட்டர்ன் என்பதால், மாலை வேளையில் மட்டும் கலந்துகொண்டேன். அந்த இடமே அமர்களப்பட்டது.  பெண் வீட்டார் அதிகமாக செலவு செய்து ஏற்பாடு செய்திருந்தார்கள்.  லைட் மியூசிக் வேறு.  சத்தம் அலறியது.  விதவிதமா உணவு வகைகள் மாடியில் பரமாறிக்கொண்டிருந்தார்கள்.  நினைத்தபோது காப்பிகளும், குளீர் பானங்கள் வினியோகப்பட்டிருந்தன. கூட்டத்தில் யாரையும் யாரும் பார்க்கக்கூட முடியாது போலிருந்தது. அப்போதுதான் அந்த உறவினர் சில தினங்களுக்குமுன் எனக்கு போன் செய்தது ஞாபகத்திற்கு வந்தது.
நான் கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குமுன் என் பெண் திருமணத்தை நடத்தியிருந்தேன்.  அப்போது வந்திருந்த அதே சமையல்காரர்தான் உறவினர் கல்யாணத்திற்கும். 
உறவினர் கேட்டார் : ”உங்கள் பெண் திருமணத்தின்போது, சாப்பாட்டிற்கு எவ்வளவு ஆயிற்று?” என்று.
நான்,”ரூ11/2 லட்சம்,” என்றேன்.
அவர் சொன்னார் :  ”இப்போது 5 லட்சம்,” என்று. 
 கேட்கும்போது திகைப்பாக இருந்தது.  பின் கல்யாண சத்திரத்தின் வாடகை என்றெல்லாம் உறவினருக்கு ரூ.30 லட்சம் வரை செலவு இருந்திருக்கும். 
அன்று இரவு நான் ரயில் பிடித்து சீர்காழி வந்தபோது, என் வயிறு சரியாயில்லை.  சரியாக சில நாட்கள் ஆயிற்று.
இன்னொரு உறவினர் விழாவிற்கு நான் போகாமல் இருக்க முடியவில்லை.  மன்னார்குடியில் ஒரு சத்திரத்தில் இந்த விழா.  வளைகாப்பு, சீம்மந்த விழா இது.  ஒரு நாள் சத்திரத்தில் தங்க வேண்டுமென்றார்கள்.  எனக்கு அங்குதான் உதைத்தது.  சத்திரத்தில் படுத்தால் தூக்கம் வராது.  ‘எதாவது ஓட்டலில் அறை இருந்தால் தங்குகிறேன்,’ என்றேன்.  ஆனால் இறுதியில் என் முடிவை மாற்றிக்கொண்டது தப்பாகப் போய்விட்டது. 
மாடியில் உள்ள அறை ஒன்றில் நான் தங்க ஏற்பாடு செய்தார்கள்.  அறை முழுவதும் தூசியாக இருந்தது.  அறைக் கதவை உள்ளே சாத்திக்கொண்டு படுத்துக்கொள்ள முடியவில்லை.  பின் அறையில் உள்ள பாத்ரூம் மோசத்திலும் மோசமாக இருந்தது.  அங்கும் கதவு இல்லை.  சத்திரம் முழுவதும் உள்ள எல்லா பாத்ரூம்களும் சரியில்லாமல் இருந்தது.  சீமந்தம் என்பதால் கூட்டம் குறைவு.  மேலும் மழை. சென்னையிலிருந்து வரவேண்டிய உறவினர்கள் வரவில்லை.  பெண் வீட்டிலும் சரி, பிள்ளை வீட்டிலும் சரி கூட்டம் இல்லை.  
அன்று இரவு நான் சரியாக தூங்கவில்லை என்பதோடல்லாமல், அடுத்தநாளிலும் என் உடலில் அதிர்வு ஏற்பட்டது.  ஆனால் மன்னார்குடி பெரிய கோவிலில் உள்ள இராஜகோபால் சுவாமியை மிக நெருக்கமாக தரிசிக்க முடிந்தது. 
இந்த இரண்டு விழாக்களிலிருந்து தெரிந்துகொள்வது என்னவென்றால், முதல் திருமண வைபவம் மிகக் குறைவாக செலவை பலவலாறு குறைக்க முயற்சிக்கலாம்.  இரண்டாவது சீமந்த விழாவை சத்திரத்தில் வைத்திருக்க வேண்டாம்.  வீட்டிலேயே மிகக் குறைவான செலவுடன் செய்து முடித்திருக்கலாம்.  பெண் வீட்டார், பிள்ளை வீட்டார் போதும்.  வீணான ஆடம்பரம் செலவை மட்டும் ஏற்படுத்தவில்லை கூடவே கலந்துகொள்பவர்களையும் தொந்தரவு செய்து விடுகிறது.

கவிதை

பெரியசாமி 
இரு கோப்பைகளில்
கடலை ஆற்றிக்கொண்டிருந்தவனிடம்
வேறெங்கு வாழ்வதென
போராடின மீன்கள்
மனமுடைந்த முதலைகள்
தற்கொலை பூண்டன
போக்கிடமற்று அலைந்தன
பிற ஜீவராசிகள்
கூடை கூடையாய் எல்லோரும்
புசிக்கத் துவங்கினர்
மலிவு விலையில் மீன்களை

பொம்மலாட்டம்

ப.மதியழகன்

சருகுகள் பாதையை
மூடியிருந்தன
பழுத்த இலைகள்
தன்னை விடுவிக்கும்
காற்றுக்காக காத்திருந்தன
மொட்டைப் பனைமரத்தில்
காகம் ஒன்று அமர்ந்திருந்தது
வண்ணத்துப்பூச்சி
வண்ணங்களை உதிர்த்துச் சென்றது
வண்டுகளின வருகைக்காக
பூக்கள் தவம்கிடந்தன
திருட்டுக் கொடுக்க
என்னிடம் காலணிகள்
மட்டுமே இருந்தன
அருவியில் குளிக்கிறார்கள்
பணப் பித்து பிடித்தவர்கள்
இல்லை என்பவர்கள் மீது
ஒளிக்கிரணங்கள் படுவதில்லை
உண்டு என்பவர்கள் வீட்டில்
தீபங்கள் அணைவதில்லை
பொம்மலாட்ட பொம்மைகள்
எது செய்தாலும் தவறில்லை
ஆட்டுவிப்பவன் கைகளுக்கு
எது சரி எது தவறென்று
தெரியவில்லை.

மகனின் தீபாவளி

 
 
சோமா
 
பொட்டடுப்பில் வெந்நீர் வைத்து
எழுப்பி விடும் அப்பத்தா
உடல் முழுதும் எண்ணைய்
தேய்க்கத் துரத்தி சோர்ந்து
முதுகில் ரெண்டு வைக்கும் அம்மா
இரவெல்லாம் கண்விழித்த‌
டெய்லரின் கருணையில்
பட்டன் வைக்க மறந்து
முதல்நாளிரவு வந்து சேரும்
புதுச்சட்டை வாசம்-அதன்
காலருக்கு சந்தனமிடும் அப்பா
பேரம் பேசி வாங்கியிருந்த‌
நாடார்கடை பட்டாசை
பிரித்துக் கொடுக்கும் பெரியப்பா
அதிரசம் முறுக்குச் சுட்டு
அடுக்கும் பெரியம்மா-சாமி
கும்பிடும் முன்னரே இனிப்பு உப்புப்
பார்க்க சாம்பிள் கொடுக்கும் சித்தி
உடை மாற்றி விடும் சித்தப்பா
வருடமொருமுறை வீடுவீடாய்
மங்களம் கொட்டும் மேளக்காரன்
புதுத்துணி கட்டிய ஜோரில் ஊரையே
வளைய வரும் நண்பர் பட்டாளமென‌
ஞாபகம் விரித்தெழும் நேற்றைய
என் தீபாவளி என் மகனுக்கானதில்லை.
ஞாயிறுகளின் நீட்சியான
தீபாவளி விடுமுறையில்
அவனுக்கான பட்டாசு
இன்னும் வாங்க‌ப்படவே இல்லை.

மெட்டமார்ஃபஸிஸ்

எனக்கே தெரியாமல்
எனது அறைக்குள் ஒரு பச்சோந்தி
நுழைந்து விட்டது,
என்னிடம் அனுமதி கேட்கவுமில்லை
அதை அது எதிர்பார்க்கவுமில்லை.
அதை விரட்ட பெரும்பாடாயிற்று.
சில நாட்கள் கழித்து
பின்னர் அதைத்தொடர்ந்து
ஒரு பாம்பும் நுழைந்து விட்டது,
சரி பச்சோந்தியைப்பாம்பு
தின்று விடும் என்று
எனக்குள் மகிழ்ந்து கொண்டேன்
சில நாட்களாக பச்சோந்தியைக்காணவில்லை
பாம்பு மட்டும் உலாத்திக்கொண்டிருந்ததை
என் கண்ணால் காண நேர்ந்தது.
சரி உண்டு விட்டது என்று
நினைத்து மகிழ்ந்த போது
பாம்பின் நிறம் மாறிக்கொண்டே வந்து
மீண்டும் பச்சோந்தியாகி விட்டது.
இப்போது
பச்சோந்தியிடம் பாம்பாக
மாறும் வித்தையைப்பயின்று
கொண்டிருக்கிறேன்
என்னைத்தொந்தரவு செய்யாதீர்கள்.

அக்கறை/ரையை யாசிப்பவள்

அன்றைய வைகறையிலாவது
ஏதாவதொரு அதிசயம் நிகழக்கூடுமென
படிப்படியாயிறங்கி வருகிறாள்
சர்வாதிகார நிலத்து ராசாவின்
அப்பாவி இளவரசி
அதே நிலா, அதே குளம்,
அதே அன்னம், அதே பூங்காவனம்,
அதே செயற்கை வசந்தம்
அதுவாகவே அனைத்தும்
எந்த வர்ணங்களும் அழகானதாயில்லை
எந்த மெல்லிசையும் புதிதானதாயில்லை
எந்த சுதந்திரமும் மகிழ்வூட்டக் கூடியதாயில்லை
நெகிழ்ச்சி மிக்கதொரு
நேசத் தீண்டலை
அவள் எதிர்பார்த்திருந்தாள்
அலையடிக்கும் சமுத்திரத்தில்
பாதங்கள் நனைத்தபடி
வழியும் இருளைக் காணும்
விடுதலையை ஆவலுற்றிருந்தாள்
காவல்வீரர்களின் பார்வைக்குப் புலப்படா
மாய உடலையொன்றையும் வேண்டி நின்றாள்
அவள் நிதமும்
அப் புல்வெளியோடு
வானுக்குச் சென்றிடும் மாய ஏணியொன்றும்
அவளது கற்பனையிலிருந்தது
இப் பொழுதுக்கு மீண்டும் இக்கரை தீண்டா
ஒரு சிறு ஓடம் போதும்
எல்லை கடந்துசென்று
சுதந்திரமாய்ப் பறக்கும் பட்சிகள் பார்க்கவென
அச் சமுத்திரத்தின் அக்கரையில்
அவளுக்கொரு குடில் போதும்

பறவைகளின் திசை

அன்று அந்திக்கருக்கலில்
கூட்டமாக வெண் பறவைகள்
திரும்பத்திரும்ப முன்னும்
பின்னுமாகப்பறந்து கொண்டிருந்தன
அந்தக்காரிருளில் அவை
திட்டுத்திட்டாக தெளிவாகத்தெரிந்தன
நானும் பல தடவைகள்
இருட்டிவிட்டால் அடுத்த தெருக்களில்
சுற்றிக்கொண்டு எங்கள்
வீட்டைத்தேடிக்கொண்டிருப்பேன்
அதுபோலவே அவைகளும்
தமது கூட்டின்
திசையைத்தவறவிட்டதுபோல்
எனக்குத்தோணியது
எனக்கொன்றும் புரியவில்லை
எப்போதும் அம்மா சொல்வாள்
அவை என்றும் திசை அறியக்கூடியவை
ஆதலால் ஒருபோதும் அவற்றின் திசை
தப்புவதில்லை என்று
மேலும் அவை நாடு கடந்தும்
பறக்கக்கூடியவை என்றும்
கடல் கடந்தும்
பறக்கக்கூடியவை என்றும்
அம்மா சொல்லக்கேட்டிருக்கிறேன்
அன்று நள்ளிரவு கடந்தும்
நானும் அம்மாவும்
வீட்டு வாயிற்படியிலேயே
அமர்ந்திருந்தோம்
நான் கரு நிற வானத்தையும்
அந்தப்பறவைகளையுமே
பார்த்துக்கொண்டிருந்தேன்
அம்மாவோ வைத்த கண்வாங்காமல்
தெருக்கோடியையும்
அதன் முனையையுமே
பார்த்துக்கொண்டிருந்தாள்.

தருணம்

சில சம்பவங்கள்
நாம் விரும்பியோ விரும்பாமலோ நடக்காமலில்லை

யார் தீர்மானிக்கிறார்கள்
என்பது ஏனோ தெரிவதில்லை

அல்லது
நாமே அந்தச் சூழ்ச்சியில்
அறியாமல் மாட்டிக்கொண்டு விடுகிறோமா
என்றெல்லாம் தெரிவதில்லை

எல்லாம்
நடப்பது நடக்கட்டுமென்றுதான்
விடவேண்டியுள்ளது

நமக்கு விருப்பமான பொருள்
நம்மை அடைவதில்லை

நாம் தேர்ந்தெடுக்கும் பொருள்
நம் கைவசமாவதில்லை

நம் காலத்தை நாம் திருப்தியுடன்
கழிக்க வேண்டியதுதான்.

இதுதான் வாழ்க்கை என்று
பெரிதாக யோசனை செய்யாமலிருக்க வேண்டியதுதான்.