எதையாவது சொல்லட்டுமா………65

நேற்று (1.1.2012) கம்பன் எக்ஸ்பிரஸ் வண்டியில் உட்கார்ந்திருந்தபோது, க்ளிக் ரவிக்குப் போன் செய்தேன்.  அவர் இலக்கிய வாசகர், சிறுகதை எழுத்தாளர்.  புகைப்படம் எடுப்பதில் திறமைசாலி.
அவர் ஒரு சிறுகதைத் தொகுப்பு கொண்டு வந்துள்ளார்.  எனக்கு அந்தத் தொகுப்பில் க்ளிக் ரவி என்ற பெயர்தான் உறுத்தலாக இருந்தது.  ஒரு திறமையான புகைப்படக்காரர், கதைகள் எழுத வேறு பெயர் எதையாவது தேர்ந்தெடுத்திருக்கலாம்.  அவர் சொன்ன ஒரு விஷயம் என் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.  இப்போதெல்லாம் யாரும் புத்தகம் படிப்பதில்லை என்று.
ஒரு பெரிய புத்தகக் காட்சி நடைபெறும்போது, எப்படி க்ளிக் ரவி இதுமாதிரி சொல்லலாம் என்று தோன்றியது.  அவர் சொல்வதில் எல்லாவித நியாயமும் இருப்பதாகவும் தோன்றியது.  முன்பு மாதிரி இப்போதெல்லாம் யாரும் புத்தகம் படிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை.  ஆனால் அளவுக்கதிகமாக புத்தகங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. 
எனக்கும் அப்பாவிற்கும் புத்தாண்டு அன்று சண்டையே வந்துவிட்டது.  ”நீ வாங்குகிற புத்தகங்களையெல்லாம் படிக்கிறயா?” என்று அவர் கேட்க, எனக்கு அவர் மீது கோபமே வந்து விட்டது.ஆனாலும் அந்த முணுக்கு கோபத்தை அடக்கிக் கொண்டேன்.  உண்மையில் என்னைச் சுற்றிலும் படிக்காதவர்கள் அதிகமாக இருக்கும்போது, நானும் படிக்காதவன் ஆகிவிட்டேன்.  எப்போதும் அப்பா தினசரிகளை மட்டும் படிப்பார்.  பின் டிவி.  என் குடும்பத்தில் உள்ள வேறு எந்த நபரும் இப்படி படிக்காதவர்கள்தான்.  நான் ஒருவன்தான் படிப்பவன். 
கல்லூரி நாட்களில் நான் பாரதியார் கட்டுரைகள் புத்தகத்தை படித்துக்கொண்டு மின்சாரவண்டியில் தாம்பரத்திலிருந்து மாம்பலம் வரை வந்துகொண்டிருப்பேன். கெமிஸ்டிரி படிக்க வேண்டிய சமயத்தில் பாரதியார் கட்டுரைகள் படிப்பேன்.  அப்போது என் மனநிலையை உருகும் மனநிலையாக வைத்திருந்தேன்.  பாரதியாரின் வாழ்க்கை வரலாறைப் படித்துவிட்டு, அவருக்கு ஏற்பட்ட முடிவைக் குறித்து உருகுவேன்.  அதேபோல் சில சினிமாப் பாடல்களைக் கேட்டால் உருகுவேன்.  ஆனால் என் எழுத்தாள நண்பர் ஒருவர், குருதத் படம் ஒன்றை பார்த்துவிட்டு அழ ஆரம்பித்து விட்டார்.
என் அப்பாவிற்கு இன்னொரு கவலை.  நான் வைத்திருக்கும் கொண்டு வந்திருக்கும் புத்தகங்களை என்ன செய்யப் போகிறேனென்று.  இன்னும் கேட்டால், என் குடும்பத்தில் உள்ள யார் கண்ணிற்கும் படாமல்தான் நான் புத்தகத்தை வைத்துக் கொண்டிருக்கிறேன்.  என் மனைவிக்கு புத்தகங்களைப் பார்த்தால் போது, படபடப்பாகிவிடும்.  எனக்கோ புத்தகங்களைப் பார்த்தால் மகிழ்ச்சியாக இருக்கிறது.  சிலருக்கு சில விஷயங்களில் சிலவிதமான வியாதி இருக்கும்.  எனக்கும் ப்ளாட்பாரத்தில் புத்தகங்களைப் பார்த்தால் போதும் வாங்காமல் இருக்க முடியாது.  இது என் குடும்பத்தாருக்கு பெரிய பிரச்சினை.  அப்பாவிடம் சொன்னேன். ”நான் இப்போதெல்லாம் புத்தகம் வாங்குவது கிடையாது,” என்று. 
”பொய் சொல்லாதே..” என்றார் அப்பா.
என் வருமானத்தின் பெரும்பகுதியை நான் புத்தகம் வாங்குவதும், புத்தகம் கொண்டு வருவதிலும் செலவிடுவதாக அப்பா எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருப்பார்.  அது உண்மையில்லை என்று சொன்னாலும் அப்பா நம்ப மாட்டார்.
சரி, நான் இப்ப சொல்ல வருவது, நம்மால் ஏன் புத்தகங்களைப் படிக்க முடியவில்லை?  க்ளிக் ரவி அவருடைய எல்லாப் புத்தகங்களையும் வேறு வழியில்லாமல் நூல் நிலையத்திற்கு தானம் வழங்கி விட்டதாகச் சொன்னார்.  குருதத் நண்பர் அவர் வீட்டுப் பரண்மீது புத்தகங்கள் அடுக்கடுக்காக தூசிப் படிந்து கிடக்கின்றன.  அந்த இடத்தை சுத்தம் பண்ண வேண்டுமென்று சொன்னால் போதும், அவர் வீட்டில் பெரிய ரகளையே நடக்கும்.  இன்னொரு நண்பர் இருக்கிறார், அவர் வீட்டு கட்டில் அடியெல்லாம் புத்தகங்களாக இருக்கும். 
நான் இன்னும் புத்தகம் ஏன் படிக்க முடியவில்லை என்பதற்கு வரவில்லை.  வயது ஆக ஆக இது ஒரு பிரச்சினை என்று நினைக்கிறேன்.  என் இன்னொரு நண்பர் ஒருவர், லைப்ரரி போவதை நிறுத்தி விட்டார்.  பின் அவர் எதாவது புத்தகம் படிக்க வேண்டுமென்றால், வாங்கி வைத்துக் கொள்வார்.  பின் நிதானமாக படித்துக்கொண்டிருப்பார்.  மாதக்கணக்கில். படிப்பதற்கு எந்த நிர்ப்பந்தமும் இல்லை. இந்த நேரத்தில்தான் முடிக்க வேண்டுமென்ற அவசியமும் இல்லை.  என்னால் அப்படி கூட புத்தகங்களைப் படிக்க முடியவில்லை.  உண்மையில் இப்படி நினைத்தேன் என்றால், எதாவது புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு விடுவேன்.  பின் சில பக்கங்களை எடுத்துப் புரட்டுவேன்.  ஆனால் பின்னால் படிக்க முடியாமல் போய்விடும். 
படிப்பதற்கு பெரிய முயற்சி செய்ய வேண்டும்தான்.  எனக்குத் தெரிந்த எழுத்தாள நண்பர் ஒருவர், எதாவது புத்தகம் படித்தால் அதைப் பற்றி விரிவாக எழுதவும் எழுதி விடுவார்.  நம்ம விஷயம் அதற்கும் பிரயோசனமில்லை. 
சரி எப்படி புத்தகம் படிப்பது?  என் பை நிறைய நான் படிக்க வேண்டிய புத்தகங்களை அடிக்கடி எடுத்துக்கொண்டு போவேன்.  பஸ்ஸில் ஏறியவுடன் படிக்கலாமென்றால், பஸ் முழுவதும் கூட்டம் நிரம்பி வழியும்.  சரி பஸ் வேண்டாம்.  அலுவலகம். மூச்சு விட முடியாது.  அந்த அளவிற்கு கூட்டம் முண்டி அடிக்கும்.  அந்தச் சமயத்தில் நான் பையிலிருந்து புத்தகத்தைத் தொட்டுப் பார்த்துவிட்டு வைத்துவிடுவேன். சக்கையாக அலுவலகம் பிழிந்த பிறகு வீட்டிற்கு பஸ்ஸில் வரும்போதும், புத்தகம் எடுத்துப் படிக்க முடியாது.  வீட்டிற்கு வரும்போது, தூங்கிக்கொண்டே வருவேன்.  புத்தகமாவது?  அது பையில் பத்திரமாகவே இருக்கும்.  ஞாயிற்றுக் கிழமைகளில் பரபரப்பாக இயங்குவதால், நான் புத்தகம் எடுத்துப் படிக்கும் நல்ல காரியத்தைச் செய்ய மாட்டேன். 
”நீ வாங்குகிற புத்தகங்களையெல்லாம் படிக்கிறயா?” என்று அப்பா கேட்பது காதில் விழுந்து கொண்டுதான் இருக்கிறது.  என்ன செய்வது?

எதையாவது சொல்லட்டுமா………64

ஒரு வழியாக 2011 போய்விட்டது.  ஓராண்டு ஆரம்பிக்குமுன் எதையெல்லாமோ செய்ய வேண்டுமென்ற எண்ணம் ஓடிக்கொண்டிருக்கும்.  ஆனால் ஒன்றும் செய்ய முடியாத இயலாமை இல்லாமல் இருக்காது. கடந்த ஆண்டில் 10 புத்தகங்கள் கொண்டு வரவேண்டுமென்று நினைத்துக்கொண்டிருந்தேன்.  பெரிய ஏமாற்றமாகப் போய்விட்டது.  பின் பத்திரிகையைத் தொடர்ந்து 3 மாதங்களுக்கு ஒருமுறை கொண்டு வர வேண்டுமென்று நினைப்பேன்.  ஒன்றும் நடக்கவில்லை.  இந்த ஆண்டு நான் ரொம்ப குறைவாகவே எழுதியிருக்கிறேன்.  என் நாவல் முயற்சி பாதியில் நிற்கிறது.  கவிதைகள் சிலவற்றை மட்டும் எழுதினேன்.  ஆனால் சிறுகதை எழுத முடியவில்லை. ஏன் மனம் அதில் செல்ல மறுக்கிறது?  அதேபோல் தினசரி செய்தித் தாள்களைத் தவிர நான் எந்தப் புத்தகமும் படிக்கவில்லை.
ஒரு கட்டத்தில் சர்க்கரை நோய் பற்றி பயம் வந்துவிட்டதால், தினமும் நடக்க ஆரம்பித்துவிடுகிறேன்.  காலையில் எழுந்தவுடன், ஓட்டலுக்குச் சென்று காப்பி குடித்துவிட்டு, நடக்க ஆரம்பித்துவிடுவேன்.  பின் கொஞ்சமாக சாப்பிடுவேன்.  அலுவலகம் ஓடுவேன்.  அதைவிட்டு திரும்பி வருவதற்குள் 9 மணி ஆகிவிடும். பின் எதைப் பற்றி சிந்திப்பது?  எழுதுவதும் கிடையாது.  படிப்பதும் கிடையாது. 
நான் எழுதுவதால் மட்டும் என்ன நடக்கப் போகிறது.  சாகித்திய அக்காதெமி பரிசு யார்யாருக்கோ போய்க் கொண்டிருக்கிறது.  பரிசுக்காக எழுதப் போவதில்லை என்றாலும், அது கிடைக்கவும் போவதில்லை.  இன்னும் சில பரிசுகள் ஏற்கனவே பரிசு வாங்கியவர்களுக்கே போய்க் கொண்டிருக்கிறது. 
சரி, எதாவது பத்திரிகையாவது கேட்கப் போகிறதா? கவிதை எழுதித் தாருங்கள்..கதை எழுதித் தாருங்கள் என்று.  அதெல்லாம் இல்லை.  எழுதினாலும் புத்தகத்தை நானே போடவேண்டும்.  அதை Marketing என்றால் என்னவென்று தெரியாமல் Marketing பண்ணத் தெரியவேண்டும்.  150 புத்தகங்கள்தான் அச்சடிக்கிறேன்.  பெரும்பாலும் லைப்ரரி ஆர்டர் வரப்போவதில்லை.  முன்பு, விஜயாபதிப்பகம் வேலாயுதம், திலீப்குமார் போன்றவர்கள் என் புத்தகங்களை விற்றுக்கொடுத்தார்கள்.  இப்போதெல்லாம் இல்லை.  New Booklands ல் ஒருமுறை புத்தகங்களை விற்கக் கொடுத்தால், பின் அவர்கள் திரும்பவும் கேட்பதில்லை. மறந்தும் விடுகிறார்கள்.
க.நா.சு ஒருமுறை நாவல் ஒன்றை அச்சடித்து, யாரும் அதை வாங்கவில்லை என்று தெரிந்தவுடன், அப்படியே பேப்பர் கடையில் போட்டுவிட்டதாக கூறுவார்கள்.  இலவசமாக க.நா.சு கவிதைகள் என்ற புத்தகத்தைக் கொடுக்கலாம் என்று கவிதைப் படிப்பவர்களைத் தேடி ஓடினேன்.  அவர்கள் என்னைப் பார்த்தவுடம் தலைதெறிக்க ஓட ஆரம்பித்துவிட்டார்கள். 
இதோ 2011 முடிந்துவிட்டது.  2012ல் அடியெடுத்து வைக்கும் உங்கள் எல்லோருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துகள். 
எப்படி சௌகரியம் ?!
மழைச்சாரலில் நனைந்த
என் கவிதையை
உலரவைக்க தென்றலை
எதிர்பார்த்து காத்திருக்கிறேன்
உலராத உயிர்ப்புள்ள
கவிதையில் மட்டுமே
விருப்பமுள்ளவராயின்
முன்னரே நனைந்துள்ள
உங்களின் ஈர இதயம் காட்டி
என்னிடமிருந்து
கவிதையைப்
பெற்றுக்கொள்ளலாம்
உலர்ந்து தெளிந்த
கவிதையில் மட்டுமே
விருப்பமுள்ளவராயின்
அலங்கமலங்கலாக
சிறிது அழிந்து மறைந்த
எழுத்துகளை உங்கள்
விருப்பப்படி நிரப்பிக்கொள்ள
வேண்டிவரும்.

நான் புத்தகக் காட்சி தேதியை தவறாகக் குறிப்பிட்டு விட்டேன்.  தேதி 5.1.2012 முதல் 17.1.2012வரை என்று வாசிக்கவும்.

அன்புள்ள நண்பர்களே,

வணக்கம்.
வருகிற 35வது புத்தகக் கண்காட்சி 5.1.2012 முதல் 17.1.2012வரை சென்னையில் நடைபெறுகிறது.  அதில் நவீன விருட்சமும் கலந்துகொள்கிறது.  நவீன விருட்சம் ஸ்டால் எண் 394.  இங்கு கலந்துகொள்ள விடுமுறை நாட்கள் தவிர மற்ற நாட்களில் நவீன விருட்சம் ஆசிரியரான நான் கலந்துகொள்ள முடியுமாவென்று தெரியவில்லை.  சீர்காழியிலிருந்து வரவேண்டும்.  எனக்கு ஸ்டாலைப் பார்த்துக்கொள்ள நண்பர்கள் உதவி செய்ய முடியுமா?
புதிய புத்தகம் எதுவும் விருட்சம் வெளியீடாக வரவில்லை.  ஏன் நவீன விருட்சமே வரவில்லை?  எல்லாம் பழைய புத்தகங்கள்தான்.  புத்தகக் காட்சி முடிவதற்குள் ரூ.5000க்குப் புத்தகங்கள் விற்றால் அதன் வெற்றியைப் பெரிதாகக் கொண்டாடலாம் என்று நினைக்கிறேன்.  உதவ விரும்புவர்கள் தகவல் தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.
அன்புள்ள

நாய்

ஒரு நாய் உள்ளே நுழைந்துவிட்டது
வாட்டச்சாட்டமான அதன் தோற்றம்
பயமுறுத்தியது
உறுமவில்லை
பார்த்தால் ஒரு பெண்மணி பின்னால்
சுற்றி சுற்றி வருகிறது
அந்தப் பெண்மணி
பஸ்ஸில் சென்றாலும்
அது
வந்து விடுகிறதாம்.
பணத்தைக் கட்டிவிட்டு
பெண்மணி வங்கிக் கிளையைவிட்டுச்
சென்று விட்டார்.
ஆனாலும்
அந்த நாய் மாத்திரம்
சுற்றி சுற்றி
என் மனதில்
வந்து கொண்டிருக்கிறது.

கூட்டல் கழித்தல்

 
பாவக்கணக்குகளை எழுதும் சித்ரகுப்தன்
எழுதி எழுதிக் கைசோர்ந்து 
கணினிக்கு மாறினார்.
ஜிபியில் சேமித்து முடியாமல்
டெராபைட் கொள்ளளவுக்கு மாறிய பிறகும்
திணற நேர்ந்தது.
அவுட் சோர்ஸிங் தீர்வாகுமென
மானுடரை அணுகினார்.
முட்டிமோதி முன்வந்த எவருக்கும் 
கணக்குகளில்
எந்தப் பாவமும் தெரியவில்லை.
பாவத்தைப் பற்றிய பார்வை
மாறியிருந்தது.
சம்பளமாகப் பூலோகத்தில்
சொர்க்க வாழ்வைப் பேரம்பேசி
வேலையைத் தொடங்கினார்கள்.
கூட்டலும் கழித்தலும்
வகுத்தலும் பெருக்கலும்
பணம், பதவி, புகழ் எனும் 
விடைகளையே 
திரும்பத் திரும்பத்
தேடியிருந்தது
சுவாரஸ்யத்தைத் தந்தது.
சகமனிதரிடம் அன்பு
பிற உயிரிடம் நேசம்
இயற்கையிடம் நன்றி
அற்றுப் போன பூமியின்
கடவுச்சொல் ஒருநாள்
காக்கும் சக்திக்கு மறந்து போகலாம்.
சுனாமிகளாலும் கலங்காத கோளினைத்
தன் இரட்சிப்பின் எல்லையிலிருந்து 
வைரஸ் பாய்ச்சி விலக்கலாம்.
அண்டவெளியில் பூமி
அதிவேகத்தில் சுழலாம்.
இரண்டு மணிகளுக்கொருமுறை
இரவு பகல் நேரலாம்.
அந்நாள்வரையிலும்
கூட்டலாம் கழிக்கலாம்
வகுக்கலாம் பெருக்கலாம்.
*** ***
 

குழந்தையின் கோபம்

கடவுளின் குழந்தையொன்று
உலகியல் விளையாட்டினை
விளையாடிக் கொண்டிருந்தது.
எது தவறு
எது சரியென
கடவுளிடம் கேட்டுக் கேட்டு
குழந்தை அந்தப்
பொம்மைகளை
தவறு சரியென
இரண்டு வட்டங்களுக்குள்
பிரித்து பிரித்து வைத்தது.
குழந்தை கடவுளிடம்
ஏதோ கேட்பதற்காக
திரும்பிப் பார்த்த
சில நிமிடங்களில்
வட்டங்களிரண்டிலிருந்தும்
பொம்மைகள்
சரிக்கும் தவறுக்குமாக
மாறி மாறி குதித்துக்
கொண்டிருந்தன.
சலித்துப் போனக்
குழந்தை
தவறுகள் வைத்திருந்த
வட்டத்திற்குள்
தானேப் போய்
உம்மென்று உட்கார்ந்து
கொண்டது

பிரத்யேக நிறம் சூழ்ந்த நடைபாதை..

 

*
மரணத்தின் குறிப்பேட்டில்
கையெழுத்து வாங்கும் தாதி
அவசரமாகத்
தவிர்த்து விடுகிறாள்
கேள்விகளையும்
அதற்குரிய பார்வைகளையும்

திறந்து அவளை உள்வாங்கிக் கொள்ளும்
கண்ணாடிக் கதவுக்கு அப்பால்
நிதானமாய் நீள்கிறது
பிரத்யேக நிறம் சூழ்ந்த ஒரு நடைபாதை

நம் கைகளோடு தங்கிவிடுவது
ஒரு பேனா மட்டுமே

******

கடைச் சொல்

 
கிளையிலிருந்து
தரைக்கு வீழ்கிற
இலையைப்  போன்றே
கணித நுட்பம்

தவிப்பு மனிதர்களின்
தந்திர வழி என்கிறார்கள் ?

தீர வலிக்குச்செய்து கொள்ளும்
நித்தியப்பணிவிடை என்கிறார்கள் ?

காதல் ஜோடிகளின்
கைகளிலிருக்கிற
கடைசி துருப்புச்சீட்டுஎன்கிறார்கள் ?

போதுமான தொரு
வாழ்விலிருந்து மீளும்
சுய விலகல் என்கிறான் ஞானி
ஒரு வேளை

துடித்தடங்கும்
இக்கயிற்றை அறுத்து
தரையிறக்குகையில்
உடைந்த என் குரல்வளையில்
எஞ்சியிருக்கலாம்

ஒரு தற்க்கொலையின்
காரணத்திற்கான
கடைசிச்சொல்.