எதையாவது சொல்லட்டுமா………64

ஒரு வழியாக 2011 போய்விட்டது.  ஓராண்டு ஆரம்பிக்குமுன் எதையெல்லாமோ செய்ய வேண்டுமென்ற எண்ணம் ஓடிக்கொண்டிருக்கும்.  ஆனால் ஒன்றும் செய்ய முடியாத இயலாமை இல்லாமல் இருக்காது. கடந்த ஆண்டில் 10 புத்தகங்கள் கொண்டு வரவேண்டுமென்று நினைத்துக்கொண்டிருந்தேன்.  பெரிய ஏமாற்றமாகப் போய்விட்டது.  பின் பத்திரிகையைத் தொடர்ந்து 3 மாதங்களுக்கு ஒருமுறை கொண்டு வர வேண்டுமென்று நினைப்பேன்.  ஒன்றும் நடக்கவில்லை.  இந்த ஆண்டு நான் ரொம்ப குறைவாகவே எழுதியிருக்கிறேன்.  என் நாவல் முயற்சி பாதியில் நிற்கிறது.  கவிதைகள் சிலவற்றை மட்டும் எழுதினேன்.  ஆனால் சிறுகதை எழுத முடியவில்லை. ஏன் மனம் அதில் செல்ல மறுக்கிறது?  அதேபோல் தினசரி செய்தித் தாள்களைத் தவிர நான் எந்தப் புத்தகமும் படிக்கவில்லை.
ஒரு கட்டத்தில் சர்க்கரை நோய் பற்றி பயம் வந்துவிட்டதால், தினமும் நடக்க ஆரம்பித்துவிடுகிறேன்.  காலையில் எழுந்தவுடன், ஓட்டலுக்குச் சென்று காப்பி குடித்துவிட்டு, நடக்க ஆரம்பித்துவிடுவேன்.  பின் கொஞ்சமாக சாப்பிடுவேன்.  அலுவலகம் ஓடுவேன்.  அதைவிட்டு திரும்பி வருவதற்குள் 9 மணி ஆகிவிடும். பின் எதைப் பற்றி சிந்திப்பது?  எழுதுவதும் கிடையாது.  படிப்பதும் கிடையாது. 
நான் எழுதுவதால் மட்டும் என்ன நடக்கப் போகிறது.  சாகித்திய அக்காதெமி பரிசு யார்யாருக்கோ போய்க் கொண்டிருக்கிறது.  பரிசுக்காக எழுதப் போவதில்லை என்றாலும், அது கிடைக்கவும் போவதில்லை.  இன்னும் சில பரிசுகள் ஏற்கனவே பரிசு வாங்கியவர்களுக்கே போய்க் கொண்டிருக்கிறது. 
சரி, எதாவது பத்திரிகையாவது கேட்கப் போகிறதா? கவிதை எழுதித் தாருங்கள்..கதை எழுதித் தாருங்கள் என்று.  அதெல்லாம் இல்லை.  எழுதினாலும் புத்தகத்தை நானே போடவேண்டும்.  அதை Marketing என்றால் என்னவென்று தெரியாமல் Marketing பண்ணத் தெரியவேண்டும்.  150 புத்தகங்கள்தான் அச்சடிக்கிறேன்.  பெரும்பாலும் லைப்ரரி ஆர்டர் வரப்போவதில்லை.  முன்பு, விஜயாபதிப்பகம் வேலாயுதம், திலீப்குமார் போன்றவர்கள் என் புத்தகங்களை விற்றுக்கொடுத்தார்கள்.  இப்போதெல்லாம் இல்லை.  New Booklands ல் ஒருமுறை புத்தகங்களை விற்கக் கொடுத்தால், பின் அவர்கள் திரும்பவும் கேட்பதில்லை. மறந்தும் விடுகிறார்கள்.
க.நா.சு ஒருமுறை நாவல் ஒன்றை அச்சடித்து, யாரும் அதை வாங்கவில்லை என்று தெரிந்தவுடன், அப்படியே பேப்பர் கடையில் போட்டுவிட்டதாக கூறுவார்கள்.  இலவசமாக க.நா.சு கவிதைகள் என்ற புத்தகத்தைக் கொடுக்கலாம் என்று கவிதைப் படிப்பவர்களைத் தேடி ஓடினேன்.  அவர்கள் என்னைப் பார்த்தவுடம் தலைதெறிக்க ஓட ஆரம்பித்துவிட்டார்கள். 
இதோ 2011 முடிந்துவிட்டது.  2012ல் அடியெடுத்து வைக்கும் உங்கள் எல்லோருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துகள். 

4 Replies to “எதையாவது சொல்லட்டுமா………64

 1. வரும ஆண்டு நல்ல ஆண்டாக நிச்சயம் அமையும்
  தங்கள் எழுத்துப் பணியும் உச்சம் தொடும்
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய
  புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

 2. காபிக்கு பதில் தண்ணீர் குடித்து விட்டு நடந்து பாருங்கள்

  சமைத்த உணவை பாதியாய் குறைத்துக் கொண்டு வெள்ளரி, காரட் மற்றும் பழங்களை சாப்பிடுங்கள்

  தன்னம்பிக்கையோடு எழுத உட்காருங்கள்
  அப்புறம் ஒரு விஷயம், சர்க்கரை என்பது வியாதியே அல்ல

  புத்தாண்டு வாழ்த்துக்கள்

  நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *