வானத்தில் இரண்டு நிலாக்கள்

கணினித் திரையில்
அடோப் ஃபோட்டோ
ஷாப்பில் ஒரு
அழகான நிலாவை
வரைந்தேன்.

வானத்து நிலா

எனக்கு மாடலாக
இருக்க இன்னும்
வண்ணமயமாக்கினேன்
கணினித் திரையில்..
அந்த லேயரை
நகலெடுத்து
இன்னொரு நிலாவாக
ஒட்டினேன்.
அந்த நிலாவில்
மௌஸை வைத்து
தேர்வு செய்து அதனை
அப்படியே டிராக்
அன்ட் டிராப்பில் இழுத்து
வானத் திரையில்
விட்டேன்.
பூமியில் நன்றாய்
தெரிய தேவைக்கேற்ப
என்லார்ஜ் செய்தேன்.
அடுத்த நாள்
எல்லா செய்தித்
தாள்களிலும்
வானத்தில் இரண்டு
நிலாக்களென்பதே
தலைப்பு செய்தியாக
இருந்தது.
தேநீர் கடைகளில்
தேநீரை விட
சூடாக இருந்தன
நிலாச் செய்தி.
பரபரப்பான ஊழல்
விசாரணைகளும்
பாராளுமன்ற
சலசலப்புகளும்
மக்களுக்கு மறந்தே
போயிற்று.
அலுவலகங்களில்
அன்றாட அலுவல்களை
நிலா கிரகணமாய
மறைத்தது.
நாசா விஞ்ஞானிகளும்
இந்திய விஞ்ஞானிகளும்
விதவிதமாய் விளக்கம்
தெரிவித்தார்கள்.
நான் வரைந்து
வானத்தில் ஒட்டியதை
யார்தான் நம்பப்

போகிறார்கள். 

தரிசனம்

பரிச்சயமற்ற நகரின்
பிரதான பெண்தெய்வத்தின் 
தரிசனம் வேண்டுமென்றாள்
வயோதிகத்தால் நிதானமானவள் 
என் கைப்பிடித்து நடந்தாள்
ஒரு முக்கிய நாற்சந்தியின்
ஏதோ ஒரு திருப்பத்தில்
திரண்டிருந்த மக்களுடன்
கடவுளை நெருங்குகையில் 
வழி மாறியதை
உணர்ந்து கொண்டாள்
வேற்று மார்க்கத்தின்
பிரத்தியேக இறைவனை
குளிரூட்டும் பசுமையை
வேறு மனிதர்களை
சிறுமியின் ஆர்வத்துடன்
பார்த்தாள்.
தவறுக்கு வருந்தி
அவள் தெய்வத்திடம்
கூட்டிச் செல்ல விழைந்தேன்
பணிவாக மறுதலித்த
அவள் கண்களில்
மதங்களுக்கு முந்தைய
கடவுளுக்கு முன் பிறந்த
ஆதி மனுஷியின்
ஆனந்தமும் அமைதியும் கண்டேன்
பேருந்தில் திரும்புகையில்
கடவுளர்கள் சிறைப்பட்டிருந்த
கட்டிடங்களின் உச்சி விளக்குகள்
அணைந்து எரிந்து அளவளாவுவது
புரியத் தொடங்கியது அன்றுதான்

எதையாவது சொல்லட்டுமா……….55

கடந்த ஒரு மாதமாக நாங்கள் சனி, ஞாயிறு தினங்களில் மட்டும் சுற்றிக்கொண்டிருப்போம்.  நயக்கரா பயணத்தின்போதுதான் அரவிந்த் 4 நாட்கள் எங்களை அழைத்துச் சென்றான்.  ப்ளோரிடா வந்திறங்கியபோது களைப்பு அசாதாரணமாகவே இருந்தது.  மலைப்பாகவும் இருந்தது.  நடக்கும்போது நான் பின் தங்கி நடப்பேன்.  அரவிந்தனுக்கு அதுவே படபடப்பாக இருக்கும்.  ”அப்பா, இவ்வளவு மெதுவாக நடப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை,” என்பான் என் மனைவியிடம்.  திருமணமானபோதில் நான் மனைவியை விட வேகமாக நடப்பேன்.  கிண்டல் செய்வேன்.  ஆனால் இப்போதோ வேறு மாதிரி ஆகிவிட்டது.  பெரும்பாலும் இங்கே கார் எடுத்துக்கொண்டுதான் எல்லா இடங்களுக்கும் செல்ல வேண்டும்.  ஒரு பால், ஒரு தயிர் வாஙகக் கூட கார்தான்.  அமெரிக்காவில் சினிமா தியேட்டர்கள் எப்படி இருக்கிறது என்பதை அறிய ஆசை.  2 சினிமாக்களைப் பார்த்தேன். இரவு 10 மணிக்குமேல்தான் சினிமாவே போக முடிந்தது. சினிமார்க் என்ற இடம்.  அந்த ஒரு இடத்திலேயே 24 தியேட்டர்களில் சினிமாக்கள் ஓடிக் கொண்டிருந்தன.
ஒரு டிக்கட்டை வாங்கிக்கொண்டு எந்த சினிமாவையும் பார்க்கலாம்.  புதிதாக வந்த ஒரு ஆங்கிலப் படத்தைப் பார்த்தேன். நம்ம ஊர் விட்டலாச்சாரியரே தேவலை என்று தோன்றியது.  அதிக செலவு இல்லாமல் மாயஜால வித்தை காட்டுபவர்.  தியேட்டரில் விளம்பரங்கள் ஓடிக் கொண்டிருந்தன.  ஆனால் தியேட்டரில் யாருமில்லை.  நாங்கள்தான் உள்ளே நுழைந்தோம்.  பின் மெதுவாக பத்து பேர்கள் வரை வந்தார்கள். 
இங்கு வங்கிகள் எப்படி செயல்படுகின்றன என்பதைப் பார்க்க Bank of America வின் கிளைக்குச் சென்றேன்.  கூட்டமே இல்லை.  இதே சீர்காழியில் கூட்டம் அப்பிக்கும்.  பணிபுரியும் ஒருவர் வரும் வாடிக்கையாளர்களை இன்முகத்துடன் வரவேற்கிறார்.  பின் அவர் தேவையைப் புரிந்துகொண்டு உடனடியாக செய்து முடிக்கிறார்.  மொத்தமே வங்கியில் 4 அல்லது 5 பேர்கள்தான் இருக்கிறார்கள். குச்சி முட்டாயை பல இடங்களில் வைத்திருக்கிறார்கள்.  வாடிக்கையாளர் விருப்பப்பட்டால் எடுத்துச் சாப்பிடலாம்.  சேஸ் வங்கிக்கிளையில் ஒரு மூலையில் காப்பி எடுத்துச் சாப்பிட கருவியெல்லாம் வைத்திருப்பார்கள். 
பொதுவாக இங்கே யாரையும் இன்முகத்துடன் வரவேற்பார்கள்.  புதியவர்களைப் பார்த்தால் குட் மார்னிங் என்று சொல்ல தவற மாட்டார்கள்.  அதேபோல் கார்கள்.  வேகமாக வரும் கார்கள் பாதசாரிகளைப் பார்த்தவுடன் நின்று விடுவார்கள்.  பாதசாரிகள் கடந்து சென்றபின்தான் நகர்வார்கள்.  இங்கு டால்பின் ஷோ பிரபலமானது.  அங்கு கூட்டம் அதிகமாக இருக்கும்.  நியுயார்க்கில் வாடகைக் கார்கள் அதிகம்.  அதை ஓட்டிக்கொண்டு செல்பவர்கள் பெரும்பாலும் நம்ம நாட்டு பஞ்சாபிகாரர்கள்.  சீனர்கள் வாழுமிடம் என்று தனியாகவே ஒரு இடம் இருக்கிறது.
ப்ளோரிடாவில் ஒரு இடத்தில் சிவா விஷ்ணு கோவில் இருந்தது.  அதில் பெரும்பாலோர்கள் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள்தான் இருப்பார்கள். பரந்த பரப்பளவில் கட்டிய கோவில். பெரும்பாலும் தென்னிந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் வருவார்கள். 
அமெரிக்காவில் தபால் நிலையம் எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்க ஆவல்.  ஒரு தனி கட்டிடத்தில் தபால் நிலையம் பிரமாதமாக இருந்தது.  தபால் நிலையத்திற்கு வந்துவிட்டால் போதும், தபாலை அனுப்ப எல்லா வசதிகளும் இருக்கின்றன.  முக்கியமாக அனுப்புவதற்கு தோதாக விதம் விதமான அஞ்சல் உறைகள். நாம் இந்தியாவிலிருந்தால் கடைக்கு ஓடுவோம் உறைகளை வாங்க.  அட்டைப் பெட்டியில் அனுப்புவதாக இருந்தாலும் அட்டைப் பெட்டி இருந்தது. 
நாங்கள் சென்னை கிளம்புவதற்குமுன் மியாமி கடற்கரைக்குச் சென்றோம்.  இங்கே மாலை வேளைகளில் மழைப் பெய்து கொண்டிருந்ததால், காலையில் சென்றோம்.  சூரிய உதயம் பார்க்க நினைத்தோம்.  மேகம் புண்ணியத்தைக் கட்டிக்கொண்டது.  அந்த கடற்கரை மண்ணை கொஞ்சம் கட்டி எடுத்துக்கொண்டு வந்தேன்.  எங்கள் அலுவலக நண்பர் சொன்னதால் எடுத்துக்கொண்டு வந்தேன்.  பின் பல இடங்களுக்குச் சென்ற நான் மண்ணை எடுத்துக்கொண்டு வராமல் போய்விட்டேன்.  மியாமியில் ஒரு தெருவின் பெயர் ஐ பி சிங்கர் பெயர் இருந்தது.  எனக்குப் பிடித்த எழுத்தாளர் இவர். ப்ளோரிடாவில் உள்ள மியாமியில்தான் அவர் வாழ்ந்திருக்கிறார் என்று நினைத்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. 
13ஆம்தேதி சென்னையை நோக்கி நாங்கள் பிரிட்டீஷ் ஏர்வேஸில் ஏறியபோது, பையனை விட்டு வர மனமே இல்லை.
நான் இதுவரை எழுதியதை பயணக் கட்டுரையாக எடுத்துக்கொள்ள வேண்டாமென்று தோன்றுகிறது.  அல்லது பயணக் கட்டுரை மாதிரி தோற்றம் தருகிற ஒன்றாக வேண்டுமானால் நினைத்துக்கொள்ளலாம்.  அமெரிக்கா போய்விட்டு வந்ததைப் பற்றி 2 விதமான கருத்துக்களை என்னால் கொண்டு வர முடியும்.  நான் விமானத்தில் ஏறி பயணம் செய்தபோது, அதன் தூரம் பெரிய பிரமிப்பையும், இவ்வளவு தூரம் கடந்து விட்டோ மா என்கிற பயமும் ஏற்பட்டது.  திரும்பவும் யோசிக்கும்போது, அப்படி போய் வருவது பெரிய விஷயமல்ல என்றும் தோன்றியது. 
நான் சென்னைக்கு வந்தபிறகும் அமெரிக்காவின் பிரமிப்பு சற்றும் குறையாமல்தான் இருக்கிறது.  

நாளை.

 
 
நாளைக்கு ஒரு நாடகம்
நடிக்க வேண்டியிருக்கிறது
நாடக ஸ்க்ரிப்ட் கைக்கு வரவில்லை
நாள்முழுவதும் ஒத்திகை செய்ய வழியில்லை
கதாபாத்திரம் அதே தான் என்றாலும்
இன்றுபோட்டது நாளைக்கு இறந்ததாகிவிடும்
புத்தம்புது நாடகம்தான் நித்தம்!
க்ரீன் ரூமைவிட்டு வெளியே வந்து
விளக்குபோட்டதும்
வெளிச்சத்தில்தான்
வசனம்பேசவேண்டும்
இன்றையநாடகத்திற்கான ஒத்திகையை
நேற்றைக்குப்பார்க்கவில்லை
இன்றுதான் நேற்றின் நாளையாகி இருந்ததே.
கைநழுவும் பாதர்சமில்லைதான் நாளை
ஆனாலும் கைபிடிக்க இயலா காற்று
நாளை பிறந்ததும்  மேடை ஏறியதும்
தானாய் வருகின்றன வசனங்கள்
நாளையின் தலை எழுத்ததினை
அசலைப்பத்திரப்படுத்திக்கொண்டு
நகலையாவது இறைநாயகன்
நம்கைக்கு அனுப்பி வைத்தால்
சரிபார்த்து நடிக்கலாம்
அதற்கு வழி இல்லாததால்
நாளை கதி என்ன என்று தெரியாமலே
மேடை ஏறி நடிக்கத் தயாராகிக்கொண்டுதான் இருக்கிறோம்!

கல்லில் உள்ள மீன்

 
 
கல்லில் உள்ள மீன்
கடலுக்குத் திரும்ப
விழைகிறது
ஆய்வு, சிறிய
ஊகிக்க முடிகிற உண்மைகள் குறித்து
அது அலுப்புற்றிருக்கிறது
வெண்ணொளியால் அழுத்தம் பெற்ற
பக்கவாட்டுத் தோற்றத்தோடு
பகிரங்கமாகக் காத்திருப்பது குறித்து
அது அலுப்புற்றிருக்கிறது.

கடலில் மௌனம்
மீண்டும் மீண்டும் அலைகிறது
அவ்வளவு – தேவையற்றதுமே!

தன் எலும்புக் கூட்டு மலர்ச்சியை
பதிக்கும் கணம் வரும் வரை
அது மிதக்கிறது –
பொறுமையாக.

கல்லில் உள்ள மீனிற்குத் தெரியும்
வீழ்வது என்பது
வாழ்பவருக்குச் செய்யும்
உபகாரமென.

அதற்குத் தெரியும் – ஏன் ஒரு எறும்பு
ஒரு கடத்தல்காரனின்  எரியூட்டு போல
பகட்டாகவும், துல்லியமான அம்பரிலும்
தன்னுடயதைக் கட்டமைத்துக் கொள்கிறதென.

அதற்குத் தெரியும் – ஏன் ஒரு விஞ்ஞானி
பெரணியின் இச்சையூட்டும் ப்ரைலியை
இரகசிய உவப்பில்
வருடுகிறார் என.

குறிப்பு: புதைபடிவம் (fossil) குறித்த இந்த  ஆங்கிலக்கவிதையின் தலைப்பு The Fish in the Stone.  எழுதியவர், ஆப்ரிக்க-அமெரிக்க எழுத்தாளரான Rita Dove.
                              – மிருணா.

நிலவும் குட்டி முதலைகளும்

 

சலனமற்ற இரவில்
சல்லாபமாய்
மிதந்து கொண்டிருந்தது
பிறைநிலா
அந்தப் பெரிய குளத்தில்…
குத்து வாள் போலிருந்த

அதன் கூர்பகுதிகளிரண்டிலும்
குட்டி முதலைகள் தனது

முதுகைச் சொறிந்து
கொண்டன. 

இன்னும் அவளுக்குத் தெரியாது

 
நீ கனவில் வந்து 
காலடி வைக்கும் 
நேரங்களிலெல்லாம் 
அதிகாலை வந்து 
என் கதவைத் தட்டி 
எழுப்பிவிடுகிறது…
உன்னைப் பார்க்கும் 
தருணங்களில் 
காமம் பீறிட்டு
ஊற்றெடுக்கும் 
ஆனால் 
உத்தமனாகக்
காட்டிக்கொள்கிறேன் என்னை…
நீ அருகில் இருக்கையில் 
கரம் பிடிக்கவிடாமல் 
கட்டுப்படுத்திவிடுகிறது 
உன் பார்வை 
பார்வையைத் தின்று தொலைத்துவிட்டேன் 
என்ன செய்ய…
விக்கல் நிற்க முத்தம் கொடு 
சந்தர்ப்ப வசத்தால் 
உயிர் பரிகசிக்கும் 
விரலின் 
மெல் உரசலுக்காக 
காத்துக்கிடக்கிறேன்…
உன் கீழ் வானம் இறங்குமா?
இத்தனையும் 
நான் உன்னை 
காதலிக்க தொடங்கிய நாள் முதல் 
தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது…
                                         

இருத்தலியல்

 

ஹைடென்ஷன்
ஒயர்களில் கூடு கட்டும்
வீரமிகு குருவிகள்
கைதட்டலுக்குப்பயந்து
வீசிப்பறக்கின்றன
கட்டிட உச்சிகளின்
சிற்பப் பிதுக்கங்களிலும்,
மதில் மேல் நடந்து கொண்டும்
சிந்தனை செய்யும் பூனைகள்
சிறு துளி நீருக்குப்பயப்படுகின்றன.
சூரியனின் எலும்புகளை
தன் குலைத்தல்களாலேயே
பிறாண்டி எடுக்கும் நாய்கள்
கல்லெறிக்குப்பயந்து
ஓடி ஒளிகின்றன.
காட்டையும் துவம்சம்
செய்யும்
மாமத ஆனைகள்
முழ நீள அங்குசத்திற்கு
அடங்கி நிற்கின்றன
அங்கு கில்லட்டின்களை
சாணை பிடிப்பவர்கள்
புறா இறகு வைத்து
காது குடைந்து
கொண்டிருக்கின்றனர்
மானுடத்தைப் புரட்டிப்போடும்
இலக்கியம்
ஒரு துளி பேனா மையைக்
கண்டு விக்கித்து நிற்கிறது.

என்ன சொல்ல?

இனிமேல் பார்க்கவே கூடாதென்று நினைத்திருந்த
இடுங்கிச் சிரிக்கும் அந்த கண்களை
இனம் மொழி தேசம் கடந்து
இன்னொரு இடத்தில் காணச் செய்யும்
இந்த இயற்கையை என்ன சொல்ல?
o

குற்றமுள்ள குக்கீகள் (cookies)

உனது செல்பேசியைக்
கொந்த முயன்றதில்
எனது சில நழுவிய அழைப்புகளும்
கூந்தல் பராமரிப்பிற்கான
குறுஞ்செய்திகளும்
மட்டுமே கிடைத்தன
உனது மின்னஞ்சலை
புகுந்து படித்ததில்
சில எரிதமும்,
எண்ணவே இயலாத
அளவு பணப்பரிசு
அஞ்சல்களும்
மட்டுமே கிடைத்தன
உனது இணைய
அரட்டைகளை
இடைமறித்து
வாசித்துப்பார்த்ததில்
கட்டுப்பட்டித்தன யுவதியின்
சொல்லாடல்கள்
மட்டுமே கிடைத்தன
உனது சமூக
வலைத்தளங்களின்
பகிர்வுகளில்
எந்த சுவாரசியமுமற்ற
பொதுவான விஷயங்கள்
மட்டுமே கிடைத்தன
எனக்குள்
அழிக்க இயலாத
குற்றமுள்ள
குக்கீகளாய் (cookies)
இவையனைத்தும்
மண்டிக்கிடக்கின்றன
எப்போதும்.