கல்லில் உள்ள மீன்

 
 
கல்லில் உள்ள மீன்
கடலுக்குத் திரும்ப
விழைகிறது
ஆய்வு, சிறிய
ஊகிக்க முடிகிற உண்மைகள் குறித்து
அது அலுப்புற்றிருக்கிறது
வெண்ணொளியால் அழுத்தம் பெற்ற
பக்கவாட்டுத் தோற்றத்தோடு
பகிரங்கமாகக் காத்திருப்பது குறித்து
அது அலுப்புற்றிருக்கிறது.

கடலில் மௌனம்
மீண்டும் மீண்டும் அலைகிறது
அவ்வளவு – தேவையற்றதுமே!

தன் எலும்புக் கூட்டு மலர்ச்சியை
பதிக்கும் கணம் வரும் வரை
அது மிதக்கிறது –
பொறுமையாக.

கல்லில் உள்ள மீனிற்குத் தெரியும்
வீழ்வது என்பது
வாழ்பவருக்குச் செய்யும்
உபகாரமென.

அதற்குத் தெரியும் – ஏன் ஒரு எறும்பு
ஒரு கடத்தல்காரனின்  எரியூட்டு போல
பகட்டாகவும், துல்லியமான அம்பரிலும்
தன்னுடயதைக் கட்டமைத்துக் கொள்கிறதென.

அதற்குத் தெரியும் – ஏன் ஒரு விஞ்ஞானி
பெரணியின் இச்சையூட்டும் ப்ரைலியை
இரகசிய உவப்பில்
வருடுகிறார் என.

குறிப்பு: புதைபடிவம் (fossil) குறித்த இந்த  ஆங்கிலக்கவிதையின் தலைப்பு The Fish in the Stone.  எழுதியவர், ஆப்ரிக்க-அமெரிக்க எழுத்தாளரான Rita Dove.
                              – மிருணா.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன