தரிசனம்

பரிச்சயமற்ற நகரின்
பிரதான பெண்தெய்வத்தின் 
தரிசனம் வேண்டுமென்றாள்
வயோதிகத்தால் நிதானமானவள் 
என் கைப்பிடித்து நடந்தாள்
ஒரு முக்கிய நாற்சந்தியின்
ஏதோ ஒரு திருப்பத்தில்
திரண்டிருந்த மக்களுடன்
கடவுளை நெருங்குகையில் 
வழி மாறியதை
உணர்ந்து கொண்டாள்
வேற்று மார்க்கத்தின்
பிரத்தியேக இறைவனை
குளிரூட்டும் பசுமையை
வேறு மனிதர்களை
சிறுமியின் ஆர்வத்துடன்
பார்த்தாள்.
தவறுக்கு வருந்தி
அவள் தெய்வத்திடம்
கூட்டிச் செல்ல விழைந்தேன்
பணிவாக மறுதலித்த
அவள் கண்களில்
மதங்களுக்கு முந்தைய
கடவுளுக்கு முன் பிறந்த
ஆதி மனுஷியின்
ஆனந்தமும் அமைதியும் கண்டேன்
பேருந்தில் திரும்புகையில்
கடவுளர்கள் சிறைப்பட்டிருந்த
கட்டிடங்களின் உச்சி விளக்குகள்
அணைந்து எரிந்து அளவளாவுவது
புரியத் தொடங்கியது அன்றுதான்

மாற்றுத் திறன்

இருவருக்கு எதிரில்
தலை குனிந்து
அமர்ந்திருக்கிறான்
மனைவி கோவிலில்
மெய்மறந்திருந்தாள்
அவனுக்குப் பேசும் திறமை
குறைவாக இருக்கிறது
பூங்காவில் மகள்
ஊஞ்சலாடுகிறாள்
வாடிக்கையாளர்களிடம்
தன் நிறுவனத்தின்
அருமை பெருமைகளைப்
பேசக் கூசுகிறான்
சதுரங்கக் காய்களுடன்
காத்திருக்கிறான் நண்பன்
நிறைவேற்றும் சாத்தியங்களற்ற
பொய்களைச் சொல்ல இயலுவதில்லை
இவன் காதலை நிராகரித்தவள்
மீண்டும் வந்திருக்கிறாள்
மகப்பேறுக்காக
வெளியூர் மேலதிகாரியின்
காதல் தோல்விகளை
சாயங்கால வேளைகளில்
அவருடன் குடித்துக் கொண்டே
கேட்டிருக்கலாம்.
வேலைக்காரச் சிறுமியை வருடும்
பணக்கார விரல்களை
அடுத்த முறை கண்டால்
வெட்டிவிட வேண்டும்
கழுத்தைப் பிடித்துத் தள்ளுவதிலும்
நேர்மை தவறாத நிர்வாகம்
வெளியேறும் நேர்முகத்தில்
உற்பத்தித் திறன் குறைவு
என்று மட்டும் குறிப்பிட்டது
இடப்பற்றாக் குறையால்?
இப்படிப்பட்ட இரவில்
பூங்காவில் மணியடித்து
கோயிலில் ஊஞ்சலாடி
மகப்பேறுக் காதலியுடன்
சதுரங்கம் விளையாடியதில்
உற்பத்தித் திறன் உயர்ந்ததாக
அந்தச் சிறுமி சொல்லிய போது
தனது பிரத்யேக வனத்துள்
மெல்ல மெல்ல பிரவேசித்தான்

களங்கம்

நிலாவிலிருந்து
வெகு தூரத்திலிருப்பதாக
அறிவியல் புத்தகங்கள்
விவரித்த நட்சத்திரங்கள்
நிலவின் அருகில்
சூழ்ந்திருந்தன நேற்று
பின்னிரவில் எழுந்தவள்
நிலவில் களங்கம் என்றாள்
சில தினங்களில்
வளர்ந்தது நிலா
களங்கத்துடன்
தொலைந்திருந்த நட்சத்திரங்களுடன்
அறிவியலில் வாசித்திராத
வேறு நிலவுகளும்

மனமுகிலில் தவழ்ந்தன

மகத்தான..

சின்ன மகள்
மேடையில் பாடுகிறாள்
அழகாகப் பாடும் வரிகளில்
அம்மா இலயிப்பதில்லை
ஸ்வரம் பிறழும் போதெல்லாம்
தவறாமல் நெளிகிறாள்
பாடிய மற்ற குழந்தைகள்
அவள் நினைவிலேயே இல்லை
முடிவை அறிவிக்கும் முன்
பயந்திருக்கிறாள்
அறிவித்த பின்பு
அழத் துவங்குகிறாள்
ஆனந்தமோ அயர்ச்சியோ
அல்லது அழுபவள் மட்டும்
அறிந்த வேறெதுவோ
அம்மாவின் கைப்பிடித்து
உள்ளே நுழைந்த குழந்தை
அம்மாவைக் கைத்தாங்கி
அழைத்துச் செல்கையில்
வடகிழக்கில் பயணிக்கும்
பச்சை அம்பை
சில விரல்கள் வருடுகின்றன

விரிசல்

ஒரு சாயங்கால வேளையில்
கண்ணாடியோ பீங்கானோ
விழுந்து நொறுங்கும் சப்தம்
பொதுச்சுவருக்கு அப்பால்
பக்கத்து வீட்டில்
மையங் கொண்டிருந்தது
கதவருகில் சென்றபோது
கசிந்து கொண்டிருந்தன
கடுமையான வார்த்தைகள்
ஒவ்வொரு துண்டும்
பொறுக்கப்படும் ஓசை
ஒன்றில் அவன் முத்தம்
ஒன்றில் அவள் வெட்கம்
சிலவற்றில் அவர்கள் சத்தியம்
ஒரு மிகப்பெரிய துண்டில்
இப்போது அழுது கொண்டிருக்கும்
குழந்தையின் சிரிப்பு
பதட்டமாக நானும் நானும்
பேசித் தீர்க்கிறோம்
மறுநாள் காலையில்
கலங்காத கண்களுடனும்
வழக்கமான புன்சிரிப்புடனும்
அவளைக் கண்ட எனக்கு
நிம்மதியுடன் சற்று ஏமாற்றமும்
வார இறுதியில்
கைகோர்த்துச் சென்றவர்களின்
சிரிப்பின் விரிசல்
மாயப்பசையில் இணைந்திருந்தது
கோபத்தில் தட்டை
நகர்த்த மட்டும் அறியும்
எனக்குள் இருக்கும் மிருகம்
இன்னும் கொஞ்சம் வளர்கிறது

இதயத்தில்

என்னுடைய நிறம்

கருப்புமில்லாத
வெளுப்புமில்லாத
சாம்பல் நிறம்
என் இதயப் பகுதியில்
பச்சை நிறத்தில்
ஒரு முதலை இருக்கிறது
வெகுநாட்களாக நானும்
இந்த முதலையும்
காத்துக்கிடந்தோம்
இருபத்தைந்து வயது யுவதி
என்னை ஸ்பரிசித்தாள்;
இப்போது அவள் வீட்டில் நான்;
வயது முதிர்ந்த அவரை
என்னுடன் அனுப்புகிறாள்
வெளியே செல்லும் எங்களுக்குக்
கையசைத்து விடையளிக்கிறாள்
விரைந்த வாகனத்தின்
தகரத்தில் மாட்டிய என் கை
குருதிப் புனலில்
நினைவிழந்த பெரியவருக்குக்
குழாயில் சொட்டும் இரத்தம்
எல்லோரும் பார்த்துக்கொண்டே இருக்கிறோம்
தொங்கியபடி நானும்
நாவில் குருதியொழுகும் முதலையும்
குதிரை இதயத்துடன்
வந்தவனுடன் அவளும்

உச்சத்தின் அருகில்

முன்னூறு கண்கள்
உற்றுப் பார்த்தாலும்
சட்டை செய்யாத இயந்திரம்
பத்தாயிரம் அடி உயரத்தில்
மிதக்கிறது முன்னும் பின்னும்
அலட்சியப் புன்னகையுடன் ;
குதிகாலில் குறுக்கிட்ட
குழந்தையின் பார்பியால்
தடுமாறி விழுபவளைத்
தாங்கிப் பிடிப்பவன்
கண்களிலிருந்தும்
அதரங்களிளிருந்தும்
சில பூக்கள் அவளைச்
சூழ்ந்த நேரத்தில்
மீண்டும் பெண்ணானவளின்
கன்னச் சிவப்பிற்கு
அவள் செலவழித்த கணங்கள்
புரிகிறது பலருக்கு இப்போது ;
வேறு தளத்திற்கு நகர்ந்திருந்த
கவிதை ஒருவனுக்கு ;
கேட்கும் ராகத்தின்
புது இழை ஒருத்திக்கு ;
எல்லாமே உச்சத்தின் அருகில்
சில மணித்துளிகளே ஆயினும்.

கவிதைகள் (குறும்பா என்றும் சொல்லலாம்)

1. வயோதிகம் கடிகாரமாய்
துடித்துக் கொண்டிருக்கிறது
இன்னொரு நாளைப்
பார்த்துவிடும் உயிர்ப்புடன்

2.வெகுநாள் மீனவன்
தொடர்ந்த வேட்டையில்
மங்கிய தன் கண்களால்
ஆமையைக் கும்பிட்டான்
நின்று கொன்றால்
எதுவும் தெய்வந்தான்

3.உனக்கான என் அன்பு
உணரப்படாமலே
புறக்கணிக்கப் பட்டுள்ளது
பிரித்ததும் கசக்கப்பட்ட
உறையின் உட்புறத்து
இளஞ்சிவப்பு காகிதம் போல

4.உலர்த்தப்பட்ட ஆடையின்
நாலைந்து கண்கள்
உள்ளங்கைக் குளத்தில்
பிணைந்திருந்த ரேகைகள்

பிக் பாக்கெட்

சிறுகதை

பர்சைத் தொலைத்திருந்தார் சங்கரன். அவர் பொதுவாக காரில் போகும் நபர். இன்று வண்டி திடீரென்று சப்பையான தனது வலது முன்பக்கச் சக்கரத்தைக் காட்டி ‘சாரி பா’ என்றது. ஸ்டெப்னி மாற்ற நேரம் இல்லாததால், வெறுத்துப் போய், மூன்று வருடங்களில் முதன் முறையாக மாநகராட்சிப் பேருந்தில், நெரிசலில் பயணித்தார்.

அப்படி ஒண்ணும் சிரமமாக இல்லை. எத்தனை பேர்! எத்தனை முகங்கள்! ஒவ்வொன்றிலும் கவலை, மகிழ்ச்சி, ஆர்வம், சோர்வு என பலவகை உணர்ச்சிகளுடன் முகங்கள்! டிக்கெட் வாங்கிக்கொண்டு ஒரு பொறுப்புள்ள, கண்ணியமான குடிமகனின் இலட்சணங்களுடன் ஓட்டுனர் இருந்த திசையில் முன்னேறிக் கொண்டிருந்தார்.
சைதாப்பேட்டை தாண்டி, நந்தனத்தை நெருங்கியது பஸ். என்னவோ சொல்லமுடியாத உணர்ச்சி திடீரென்று. அனிச்சையாகப் பான்ட் பாக்கெட்டைத் தடவிப் பார்த்தார். ஆ, பர்ஸ் காணோம். சுற்று முற்றும் பார்த்ததில், அருகில் இருந்தவன் கையில் என்னவோ இருந்தது. நழுவி அவன் பின்னால் சென்றதைப் பார்த்து விட்டார். உடனே, சப்தமாக ‘பிக் பாக்கெட் பிக் பாக்கெட்’ என்று கூவி, ஒரு அதிர்ச்சி உண்டாக்கினார்.

பஸ் நிறுத்தப்பட்டது. அவர் காட்டியதன் பேரில் அந்த பிக் பாக்கெட் பிடிக்கப் பட்டான். போலிஸ் அழைக்கப்பட வேண்டும் என்று பொதுக்கருத்து நிலவியது. ஆனாலும் எல்லோருக்கும் ஆபிஸ், ஆசுபத்திரி என்று சொந்த அவசரங்கள்.

உடனே யாரோ இரு இளைஞர்கள் துவங்கி வைக்க, அந்தத் திருடனுக்கு சரமாரியாக தர்ம அடி விழுந்தது. அவன் வாயில் இரத்தம் கசிந்தது. அவனிடம் துழாவிப் பார்த்தார்கள். பர்சின் சுவடே இல்லை. வெறும் இரண்டு ருபாய் நாணயம் சட்டைப்பையில் இருந்தது.

“இவனுங்கள நம்பக்கூடாது சார். ஒரு ரெண்டு, மூணு பேரா வருவானுங்க. சும்மா பாஸ்டா பாஸ் பண்ணுவாங்க.”

“ஆமாடா, ஒத்தன் எடுப்பான், உடனே இன்னொருத்தன் கிட்ட பாஸ் பண்ணி, அவன் மூணாவது இப்பிடி போயிடும்”

“இப்பிடித்தான் ஒரு தடவ, பஸ்லேந்து ஜன்னல் வழியா தூக்கிப்போட்டான். அத கரீட்டா இவன் சகா வந்து காட்ச் புடிச்சிகினு போயிடாம்பா”

கண்டக்டர் சங்கரனிடம் “சார், எல்லாருக்கும் லேட் ஆகுது. வண்டிய போலிஸ் ஸ்டேசனுக்கு விடுவோம். அப்புறம் நீங்க பாத்துக்கோங்க” என்றார்.

அதற்குள் பிக் பாக்கெட் ஆசாமியின் சட்டை பெரும்பாலும் கிழிந்து போயிருந்தது. ஒரு மாதிரி கைகால்களை மடக்கி உட்கார்ந்திருந்தான். தலைமேல் அடி விழாதபடி கைகளால் மூடிக் கொண்டான்.

சங்கரன் முன்பு அம்பத்தூரில் குடியிருந்தபோது பக்கத்து வீடு போலிஸ் ஸ்டேஷன். ஒவ்வொரு இரவும் குற்றவாளிகளின் அலறல் காதை அறையும். பகல் நேரங்களில், காவலர்கள் உள்ளே நுழைகையில், சிறு திருடர்களை ஏதோ நொறுக்குத் தீனி உண்பது போல் ஒரு தள்ளு தள்ளி பூட்ஸ் காலால் மிதிப்பதை நிறைய முறை பார்த்திருக்கிறார். தேவைக்கு அதிகமாக போலிஸ்காரர்கள் அடிப்பதாகவே இவருக்குத் தோன்றும். ஒரு மாதிரி சிறு குற்றவாளிகளின் மேல் பொதுப் பரிதாபம் இவருக்கு வழிந்து ஓடும்.

இப்போதும் பர்ஸ் பறிபோன கோபம், வருத்தம் எல்லாம் காணாமல் போய், உடலைக் குறுக்கி, சாலை ஓரமாய், இரத்தம் வழிய உட்கார்ந்து இருந்தவனிடம் பரிதாபம் மேலோங்கி நின்றது. ஒரு முடிவு எடுத்தவராக, செல் போனைக் காதில் வைத்துக்கொண்டார். பிறகு குரலை உயர்த்தி, ‘சார், சாரி, பர்சு வீட்டுல வெச்சுட்டேன். இப்பதான் போன் வந்தது’ என்று பொதுவாகச் சொன்னார். அடுத்த ஐந்து நிமிடங்களுக்கு இலேசான திட்டு, நிறைய அறிவுரை என்று பொதுஜனம் இவர் மேல் கக்கிய விஷயங்கள் அவ்வளவு முக்கியமில்லை.

எல்லோரும் போன பின்னும், அவன் அங்கேயே தலை குனிந்து இருந்தான்.

“நீ தா எடுத்தன்னு தெரியும். உனக்கு விழுற அடி பாக்க முடியல; அதான். பர்ஸ் எங்கே?’

அவன் ஒண்ணும் சொல்லவில்லை. கொஞ்ச நேரம் சும்மா இருந்த அவனால் இலேசாக எரிச்சல் அடைந்த அவர் “எனக்குத் தேவையான சில விஷயங்கள் பர்சில் இருக்கு. பணத்த விட்டுட்டு அதையாச்சும் கொடுத்திடு” என்றார்.

அவன் ஒண்ணும் பேசவில்லை. பிறகு திடீரென்று எழுந்து, இவரைப் பார்த்தான். வேகமாக நடக்க ஆரம்பித்தான். முட்டாள்தனமாக இருந்தாலும் சங்கரனும் தொடர்ந்தார்.

சிறிது நேரம் கழித்து அவன் “சார், சாயங்காலம் தரேன். உங்க அட்ரஸ் தாங்க” என்றான்.

“பர்சில் வீட்டு அட்ரஸ், போட்டோ எல்லாம் இருக்கு. இருந்தாலும், இதுதான் என் செல் நம்பர். அட்ரஸ் தெரியலேனா கூப்பிடு”

அவருக்கு நம்பிக்கை இல்லை. ஆனாலும் வேறு எதுவும் செய்ய முடியவில்லை. நல்ல வேளையாக செல் போன் இருந்தது. ஒரு ஆட்டோ (இப்போ கிடைக்குது!) பிடித்து நண்பன் ஆபிசுக்குப் போய் சேர்ந்தார்.

சாயங்காலம் ஏழு மணிக்கு வாசலில் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்தார். நிழலாட, நிமிர்ந்து பார்த்தார். அவனேதான். தயங்கித் தயங்கி வந்தான். அவரிடம் பர்சை நீட்டினான். வாங்கிப் பார்த்தார். பணம் அப்படியே இருந்தது. மற்ற குப்பைகளும்.

“என்ன பணம் எடுத்துக்கலையா?”

“வேணாம் சார்”

“என் இப்பிடி ஒரு தொழில் பண்ணுற?”

“உன்னத்தான் கேக்குறேன்”

“அது அப்புடித்தான் சார்; மாத்த முடியாது இனிமே”

“அதா ஏன்னு கேக்குறேன்”

“படிப்பும் இல்ல. வேற வேலையும் கெடைக்காது”

“உனக்கு என்ன வேல தெரியும்”

“சார், டிரைவிங் தெரியும் சார்”

“சம்பளம் நாலாயிரமோ, அஞ்சாயிரமோ கிடைக்கும். ஆமா, இதுல உனக்கு எவ்வளவு தேறும் மாசத்துக்கு?”

“மாமூல் போக, ஒரு பதினஞ்சு-இருபது வரும் சார். ஆனா நெறைய அடி ஒத திங்கணும் சார்”

“ம்ம்”

“அதோட மனுஷாலு நம்மள மதிக்க மாட்டாங்க – ஆனா பலகிடிச்சி”

கொஞ்ச நேர மௌனம். பிறகு அவனே தயங்கி அவரிடம் கேட்டன்.

“சார், நீங்க ஒரு டிரைவர் வேல போட்டுத் தரீங்களா?”

அவருக்கு அவன் மேல் உடனே ஒரு பச்சாதாபம் எழுந்தது. கிளர்ச்சியாக உணர்ந்தார். சமுதாயத்தில் ஒருவனையாவது திருத்தப்போகும் சாத்தியக்கூறு அவருக்கு கொஞ்சம் பரபரப்பைத் தந்தது. ஆனாலும், பெரிய மனிதர்களுக்கே உரிய, பல நூற்றாண்டுகளாக உட்புதைந்த, ஜாக்கிரதை உணர்வு “ம்ம், ரெண்டு நாள் கழிச்சு வா, பார்க்கலாம்” என்று சொல்ல வைத்தது.

இரண்டு நாட்களில் யோசிக்க யோசிக்க, உயர் இலட்சியங்கள் எனும் மெழுகுப் பொம்மையை நடைமுறை வாழ்க்கை என்னும் சுடர் உருக்கிக் கொண்டிருந்தது.

மூன்றாம் நாள் காலையில் வந்த அவனிடம் ‘இப்போதைக்கு இல்லப்பா. பின்னாடி இருந்தா சொல்லுறேன். இப்ப இருக்குற ரெசஷன் டயத்துல கார் வேணாம்னு பாக்குறேன்’ என்று முடித்துக் கொண்டார். கொஞ்ச நேரம் நிலத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். நிமிர்ந்த போது நிச்சயமாக ஈரமான கண்களைப் பார்த்தது உண்மை. சுதாரித்துக் கொண்டான். முள்ளும் மலரும் ரஜினி பார்த்திருப்பீர்களே. அதனை நினைவு படுத்திக் கொள்ளுங்கள். அதே போல இலேசாக தலையைச் சாய்த்து ‘பரவாயில்ல சார்’ என்றான். நிச்சயமாக அவன் கண்களில் இப்போது இவரைப் பார்த்து பரிதாபம் இருந்தது. மெல்ல நடந்து மறைந்தான்.

‘பாவந்தான்; ஆனா எப்பவும் மடில நெருப்பக் கட்டிகிட்ட மாதிரியில்ல இருக்கணும்”

“ஏதாவது காணாம போச்சுன்னா, பாவம் அவனத்தான சந்தேகப் படுவோம்?”

“இப்போ, கஷ்டமோ நஷ்டமோ, பதினஞ்சு-இருவதுன்னு சம்பாரிக்குறான்; அஞ்சாயிரம் சம்பளம் எப்படிப் பத்தும் அவனுக்கு?”

இப்படியெல்லாம் சால்ஜாப்புகள் அவரைச் சுற்றி வந்தன ஒரு வாரத்திற்கு.

பிறிதொரு நாள் சிக்னலில் காத்திருக்கையில், ஓடிக் கொண்டிருந்த பஸ்சில் இருந்து இலாவகமாக, பெருமிதமாக இறங்கியவனைப் பார்த்தார். குற்ற உணர்ச்சி, எத்தனை சால்ஜாப்பு செய்தும் போகவில்லை. மனசாட்சி பின்குறிப்பாக ‘நீ அவன் பெயரைக் கூட கேட்கவில்லையே’ என்றும் உப கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தது.

ரொட்டியும் மீன்களும்

கரையிலிருந்து வெகுதூரம்
கடலுக்குள் சென்றேன்
படகிலிருந்து குதித்து
நீருக்குள் நுழைந்தேன்
கீழே, கீழே இன்னும் கீழே
போய்க்கொண்டே இருந்தேன்
முடிவில் காலில் தட்டுப்பட்டது
தரை என்றுதான் சொல்லவேண்டும்
நிறைய மீன்கள்.
வேறு என்னவெல்லாமோ ஜீவராசிகள்
அவர்கள் என்னை
பார்க்கவில்லை. அல்லது
பார்த்ததாகக் காட்டிக்கொள்ளவில்லை.
பொட்டலத்திலிருந்து விடுவித்த ரொட்டியின்
முதல் துண்டை மேலே வீசினேன்
ஆயிரம் மீன்கள் பாய்ந்து வந்தன
அடுத்த துண்டுக்கு இன்னும் இரண்டாயிரம்
இப்போது என்னை சுற்றி
நீங்கள் எல்லாம் பார்க்காத வண்ணங்களில்
சிறியதும் பெரியதும்
அழகுடனும் மேலும் அதி அழகுடனும்
பல்லாயிரம் மீன்கள்
இப்போது அவர்களின் கண்கள்
என்மீது மட்டுமே.
ஒரு தேவகுமாரனைப்போல் உணர்ந்தேன்.
அங்கேயே இருந்துவிட ஆசையுற்றேன்
ஆயினும் எனக்கான ஜூடாஸ்கள்
காத்துக்கொண்டு இருந்ததால்
நீந்தி மேலெழுந்து கரை சேர்ந்தேன்
எனது சிலுவையை
சுமக்கத் துவங்கினேன்

(81வது நவீன விருட்சம் இதழ் செப்டம்பர் மாதம் தயாராகப் போகிறது. இதழுக்குப் படைப்புகளை அனுப்ப வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். படைப்புகளை navina.virutcham@gmail.com மூலம் அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறேன். படைப்புகள் navinavirutcham.blogspot ல் பிரசுரமாவதுடன், பத்திரிகையிலும் பிரசுரமாகும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஒருவரே எத்தனை படைப்புகள் வேண்டுமானாலும் அனுப்பலாம். இன்னும் நண்பர்களை நவீன விருட்சத்திற்கு துணை சேர்க்கலாம் – ஆசிரியர்)