கிழிசல் சேலை



கன்னியாகுமரியிலிருந்து சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு செயயாதவர்களுக்கான பெட்டியில் பயணம் செய்வது தாயம்மா பாட்டிக்கு மிகவும் கடினமாகவே இருந்தது. நாகர்கோவிலில் ரயில் ஏறிய போது அந்த பெட்டியில் எல்லா இருக்கைகளிலும் ஆட்கள் அவ்வளவாக இல்லை. இருக்கையில் காலை வசதியாக நீட்டி வைக்க முடிந்தது. ரயில் ஆரல்வாய்மொழி, நாங்குநேரி, வள்ளியூர், என சினன ரயில் நிலையங்களைக் கடந்த போதுகூட பயணிகள் கூட்டம் எல்லா இருக்கைகளையும் நிரபபி விடடது. இருக்க ஓரததில் சிறிது இடம் கேடடவர்கள், சிறிது நேரததில் இடம் தந்தவர்களை இறுக்கி இருக்கையில் சவுகரியமாக உட்கார எததனித்தார்கள். தாயமமா பாடடி தன்னைவிட வயதான ஒருவருக்கும் , ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்குமாக இடம் கொடுத்து கடைசியில் தரையிலேயே உட்கார்ந்தாள். தனக்கு துணையாக வந்த அந்த கோட்டாறுக் கடைக்காரப் பையன் பககவாட்டில் உயரததில் சாமான்கள் வைப்பதற்கான அநத குறுகிய இடத்தில் படுத்துக் கொண்டான். அதைப் பார்த்து தாயம்மா பாட்டிக்கு பயம் கொடுதது விடடது.

‘எப்பா விழுந்திராதப்பா|கீழே இறங்கு|’ என உட்காரச் சொன்னாள். அவன் படுத்திருக்கும் இடததில் அவன் உடம்பின் கால் பகுதி வெளியே துருத்திக் கொண்டிருந்தது. சிறிது கவனமின்றி கண் அயர்ந்தால் கூட கீழே விழ வேண்டியதுதான். கீழே விழுநதால் தலையில் அடி விழுந்து உயரே போய் விடும் ஆபத்து. இபபடி கவலையில் பாட்டி அவனை உரககக் கூப்பிட்டு அச்சுறுத்தினாள். சுற்றி இருககும் சிலருககு அது பொழுது போக்கு களமானது. எல்லோரும் பாட்டியை கிண்டல் செய்தார்கள். உட்கார்ந்தால் தலை தட்டுகிற அந்த குறைந்த உயரத்தில் அவனைப் போல் பலரும் படுத்திருந்தார்கள். அதிலும் அதிசயமாய் ஒருவர் தனது பருத்த தொப்பை ரயிலின் கூரையைத் தட்ட ரயிலுக்கு இணையாய் குறட்டை ஒலியால் கூவிக் கொண்டிருந்தார். அவர் தன் மேல் விழுந்து விடுவாரோ என அஞ்சி கீழே உட்கார்ந்திருந்த ஒருவர் இடம் மாறி சென்று விட்டார். இந்த அதிசயங்களோடு பயணிகளின் அவஸ்தைகளையெல்லாம் சகித்துக் கொண்டு ரயில் உற்சாகமாய் ஓடிக் கொண்டிருந்தது.

ரயிலை விட விரைவாய் பாட்டியின் மன ஓட்டம் இருந்தது. இது கூட அவளுக்கு எதிர்பாராமல் எதிர் கொள்ளும் பயணமாக இருந்தது. செனனையிலுள்ள தனது இளைய மகள் வழி பேத்திக்கு சென்ற வாரம்தான் திருமணம் நடந்தது. மாப்பிள்ளை வீட்டாரும் சென்னையைச் சேர்ந்தவர்கள்தான். உறவினர்கள் அதிகம் பேர் சொந்த ஊரில் இருந்ததால் அவர்களின் வசதிக்காக திருமணத்தை நாகர்கோவிலிலேயே நடத்தினார்கள். திருமணமென்ற சடங்கின் மூலம் தொலைவிலுள்ள தனது பிள்ளைகளையும் உறவினர்களையும் ஒன்றாகப் பார்க்க இயல்வதில் தாயம்மாவிற்கு மிகவும் சந்தோஷமாகவே இருந்தது. தான் தற்போது வசிக்கும் ஊர், அதன் மக்கள், அங்குள்ள சடங்குகள், பிளளைகள், அதன் பள்ளிகள், அவர்களின் அனுபவங்கள் என எல்லாவற்றையும் சொநத ஊரில் கூடிப் பகிர்ந்து கொண்டார்கள். இத்தோடு ஒரு சிலரின் பேச்சிலும் சிரிப்பிலும் அவர்கள் பலரிடம் கொண்ட வன்மப் பகையின் சாயல்கள் கொடிய மிருகமாய் பதுங்கி இருந்தன. தாயம்மா பாட்டிக்கு ஆச்சரியமாக இருந்தது. உலகம் எவ்வளவு வேகமாய் போய் கொண்டிருக்கிறது. தனது மூத்த மகள் ரமணியையும் இளைய மகள் சுனிதாவையும் இப்போதுதான் பள்ளிக்கு கொண்டு விட்டது போல் இருக்கிறது. அதற்குள் அவர்கள் பெரியவர்களாகி, திருமணமாகி, குழந்தைகளும் பெற்று, அவர்களை நல்ல முறையில் படிக்க வைத்து, பெரியவர்களும் ஆக்கி, அவர்களுக்கும திருமணம் நடந்தாகி விட்டது. பேத்தியின் திருமணம் முடிந்து சென்னையில் நடைபெறும் விருந்து வைபவத்திற்காக, இளைய மகளின் நிர்ப்பந்தத்தில் பாட்டி சென்னைக்கு பயணமாகிக் கொண்டிருக்கிறாள்.

தாயம்மா பாட்டிக்கும் சேர்த்துத் தான் மொத்தம் இருபது டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து வைத்திருந்தார்கள். இருந்தும் அந்த குடும்பத்தின் மூத்த குடிமகளான அவளுக்கு மட்டும் பதிவு செய்யப் படாத பெட்டியில் பயணிக்க வேண்டிய சூழ்நிலை. அதுதான் அவளை இந்த நரக வேதனைக்குள்ளாக்கியது.

தான் தனது அம்மா அப்பாவை நேசித்த அளவிற்கு தனது பிள்ளைகள் தன்னை நேசிக்காதது தாயம்மா பாட்டிக்கு வருத்தத்துடன் ஆச்சரியமாகவும் இருந்தது. அதற்கான காரணங்களையும் அலசி ஆராய்ந்தாள்… எதுவும் பிடிபடவில்லை. ஆனாலும் அவள் தன் பிள்ளைகளைப் பற்றி மோசமாக யாரிடமும் எதுவும் சொன்னது கிடையாது.

பிள்ளைகள் சிறிதாக இருந்த போது இருவரில் இளைய மகள் சுனிதாவைப் பற்றித்தான் மிகவும் கவலைப் படுவாள். பொறுமையானவள். பிழைக்கத் தெரியாதவள், சூது வாது தெரியாது… எதைச் சொன்னாலும் நம்பி விடுவாள். இன்னொரு வீட்டில் மணமாகி செல்லப் போகிற இவள் எப்படி குடும்பம் நடத்தி, குழந்தை பெற்று அவர்களை வளர்த்து ஆளாக்கப் போகிறாள் என்று கவலைப் பட்டு புத்திமதி சொல்வாள். அன்று பல இரவுகள் உறங்காமல் தான் கவலைப் பட்ட அந்த மகளா இன்று இவ்வளவு பெரிய சாமரத்தியசாலி. மிகுந்த ஆச்சரியமாக இருந்த்து அவளுக்கு.

தாயம்மா பாட்டிக்கு எண்பது வயதாகி விட்டது. சில மாதங்களாக முதுமை காரணமாக உடல்நலமின்றி மிகவும் பலவீனமாகவே இருந்தாள். திருமணம் நாகர்கோவிலிலேயே நடந்ததால் மிகவும் சந்தோஷப்பட்டாள். தனது உடல் நலனைக் காரணம் காட்டி சென்னைக்கு விருந்துக்கு வர மறுத்தாள். இளைய மகளோ ‘ அம்மா நீங்க நிச்சயம் வரணும் . மாப்பிள்ளை வீட்டுக் காரங்க உங்களை கண்டிப்பா சென்னை விருந்துக்கு கூட்டிட்டு வரச் சொல்லி இருக்காங்க. அதனாலே நீங்க நிச்சயம் வந்தே ஆகணும். நீங்க வரல்லைண்ணா அவங்க தப்பாதான் எண்ணுவாங்க. இன்னும் உன் இளைய பேத்திக்கு இஞ்சினியரிங் அட்மிஷன் வேற இருக்கு. அதுக்கு கருமுத்து செட்டியார்ட்டே நீ வந்து நேரிலே சொன்னாதான் காரியம் நடக்கும். ஒரு வாரம் எங்கக் கூட இருந்திட்டு திருப்பி வந்திடலாம் ‘என்று சொன்னாள்.

இளைய மகள் சுனிதா எந்த அளவிற்கு மாறி விட்டாள். திருமணமெல்லாம் முடிந்து சாமான்களையெல்லாம் பத்திரமாக பெட்டிகளாகக் கட்டிக் குவித்த போதே தனது மகளின் சாமர்த்தியத்தை எண்ணி ஆச்சரியப்பட்டாள். அவளுடைய நகைகளையும் துணிகளையும் மருமகன் பெரிய பைக்குள் அடைத்தபோது அவள் கூறிய வார்த்தைகள் இன்னமும் பாட்டியின் காதுகளில் அலைகளாய் அடித்துக் கொண்டிருக்கின்றன.

‘என்னங்க பையிலே துணியை இப்படி யாராவது அடுக்குவாங்களா? கிழிசல் சேலையை பத்திரமா உள்ளே வச்சிகிட்டு நகையை மேலே வச்சிருக்கீங்க| இபபடி வச்சா ஊரு போனா கிழிசல் சேலைதான் கிடைக்கும். முதல்லே நகையை பத்திரமா அடியிலே வச்சுகிட்டு எல்லா துணியையும் வச்ச பின்னாடி அம்மாவுக்க அந்த கிழிசல் சேலையை கடைசியிலே வைங்க .அது தொலைஞ்சு போனாலும் பரவாயில்ல’ என்றாள்.

அப்போது தனது மகளுக்கு இவ்வளவு புத்தி வநது விடடதே என சந்தோஷப் பட்டாள். ஆனால் இன்று அந்த வார்த்தைகள் கத்தியாய் அவள் நெஞ்சைக் குத்திக் கிழிப்பது போல் இருக்கிறது. தானும் ஒரு கிழிந்த சேலையாய் அவளுக்கு பட்டது. கல்யாண நிகழ்வுகள் மிகவும் சிறப்பாகவும் சந்தோஷமாகவும்தான் நடந்தன. சுனிதாவைவிட அவளது சம்பந்தக்காரர்கள் தாயம்மாவை மிகவும் கவனித்து மரியாதை செலுத்தினார்கள். நிச்சயமாக சென்னை விருந்திற்கு வரவேண்டுமென விரும்பி வற்புறுத்தினார்கள். இறுதியில அவர்களின் வற்புறுத்தலுக்கு இணங்கி தாயமமாவும் ரயிலுக்கு முன்பதிவு செய்ய சம்மதம் தெரிவித்தாள். சம்பந்தக்காரர்கள் கல்யாணம் முடிந்த மறுநாளே சென்னை திரும்பி விட்டனர். பெண்வீட்டாரோ திருப்பி கொடுக்க வேண்டிய கல்யாண சாமான்கள் பாத்திரங்களையெல்லாம் சரி செய்து விட்டு மூன்றாவது நாள் திரும்பினர்.

துணிமணிகள், கல்யாண அவசியத்திற்காக சென்னையிலிருந்து கொண்டு வந்த பொருட்களென எல்லாவற்றையும் கட்டிப் பெட்டிகளாக்கிய போது ரயில் புறப்படுவதற்கு இன்னமும் ஒரு மணி நேரமே இருந்தது. பக்கத்திலிருந்த ஒரு பிள்ளையார் கோவிலில் தேங்காய் உடைத்துவிட்டு அவசர அவசரமாக காரைப் பிடித்து ரயில் நிலையம் வந்த போது அரை மணி நேரம் ஆகி இருந்தது. பிளாட் ஃபார்மில் எல்லாப் பொருட்களையும் வைத்துவிட்டு அங்கிருந்த இருக்கையில் ரயிலின் வருகைக்காக காத்திருந்தார்கள். கன்னியாகுமரியிலிருந்து ரயில் சிறிது கால தாமதமாகவே வந்தது. இவர்கள் ஏற வேண்டிய எஸ்.8 பெட்டியும் அவர்கள் உட்கார்ந்த இடத்திலிருந்து சிறிது தூரம் தள்ளியே இருந்தது. ரயில் புறப்படுவதற்கு பதினைந்து நிமிடங்களே இருந்தன. தாயம்மா பாட்டியைப் பொருட்களுக்கு காவலாய் இருக்கச் சொல்லிவிட்டு மற்றவர்கள் ஒவ்வொரு பொருளாக பெட்டிக்கு கொண்டு போனார்கள். அவர்கள் எல்லாப் பொருட்களையும் பெட்டியில் சேர்க்கவும் ரயிலும் புறப்பட்டு விட ஒரு துணிப்பையுடன் தாயம்மா பாட்டி மட்டும் ரயில் நிலையத்தில் மாட்டிக் கொண்டாள். தாயம்மா பாட்டிக்கு எனன செய்வதென்றேத் தெரியவில்லை. சிறிது நேரத்தில் அவளிடம் மூத்த மகள் வாங்கி கொடுத்த அந்த பழைய செல்ஃபோன் அலறியது. பாட்டி பதட்டத்துடன் செல்ஃபோனை எடுக்கவும் இணைப்பு தடை பட்டது. வீட்டிற்கே திரும்பி விடலாம் என்றால் வீட்டுச் சாவி கூட ரயிலிலுள்ள பையில்தான் இருக்கிறது. அடுத்து வந்த அழைப்புகளிலும் ரயில் நிலையத்திற்கே உரிய ஒலிப் பின்னணியில் எதிர் முனை பேச்சினை அவளால் உள் வாங்க இயலாமல் பக்கத்திலிருந்த ஒரு இளைஞனின் உதவியுடன் ரயிலிலிருந்து அழைத்த மகளுடன் பேசினாள். ஒரு பயனுமில்லாத அசிரத்தையான வருத்தத்தை மகள் தெரிவித்தாள்.

‘அம்மா பத்திரமா அதே இருக்கையில் இரு| கோட்டாற்றிலே நம்ம கடைக்கார பையனுக்கு ஃபோன் பண்ணி சொல்லி இருக்கிறேன். அவன் ஒரு மணி நேரத்திலே வந்திடுவான். அம்மா அடுத்த டிரெயின்லே அவன் கூட வந்திடு’ என்றாள்.

அரை மணி நேரத்தில் அந்த கடைக்காரப் பையனும் வந்து டிக்கெட் எடுத்து பாட்டியை பத்திரமாக இருக்கையிலும இருத்தினான். அவனின் பாசம் பாட்டிக்கு சிறிது ஆறுதலைத் தந்தது. அவன் முடிந்த அளவு பாட்டியை சவுகரியமாக உட்கார வைத்தாலும் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளுக்கே உரிய அசவுகரியங்களை அவள் அனுபவிக்க வேண்டி இருந்தது. அதிலும் கோடை விடுமுறைக் கூட்டம் வேறு. இந்த கூட்டத்தில் யாரும் யாரையும் மிதிக்கலாம். இந்த அசவுகரியத்தில் சமத்துவமும் சகிப்புத் தன்மையும் தானாகவேப் பிறக்கிறது. எந்த வசதியுமற்ற இந்தச் சூழலில் சிலர் குறட்டை விட்டு தூங்குவதைக் காணும்போது ஆச்சரியமாக இருக்கும். வீட்டில் இவர்கள் இவ்வளவு சுகமாகத் தூங்குவார்களா என நினைக்கத் தோன்றும். நாள் முழுக்க உழைத்த அவர்களின் உழைப்பின் களைப்போ என அனுதாபம் ஒருபுறம். மற்றவர்களின் இடங்களை ஆககிரமித்து நீட்டி நிமிர்த்தி படுத்திருக்கும் அவர்களது சுய நலத்தை எண்ணி கோபிக்கும் ஒரு மனம்.

தனது எண்பது வயது வாழ்க்கையில் எத்தனையோ மனிதர்களை கண்ட அவள் ரயிலில் இன்னும் புதிய மனிதர்களை சந்தித்தாள். எல்லாவற்றையும் விட தான் பெற்று வளர்த்த மகளே மிகவும் புதிதாகத் தெரிந்தாள்.

தாயம்மா பாட்டியின் அருகில் அழுக்குத் துணிகளும் பொருட்களும் நிறைந்த பையும் குழந்தைகளுமாக ஒரு தம்பதி உட்கார்ந்திருந்தது. கைக் குழந்தை அழுது கொண்டிருக்க இன்னொரு பையன் அவனது அப்பாவின் தலை முடியை பிடித்து இழுத்து விளையாடிக் கொண்டிருந்தான். அம்மாவோ தலை வலியில் புழுவாய் துடித்துக் கொண்டிருக்க அப்பாவோ செய்வதறியாது திகைத்துக் கொண்டிருந்தார். தாயம்மா தலைவலிக்காக பையில் வைத்திருந்த ஹோமியோபதி மருந்தினை எடுத்து அநத பெண்ணிடம் கொடுத்து உதவினாள். சிறிது நேரத்திலேயே அவள் தலைவலியிலிருந்து விடுபட்டு நன்றி சொனனாள். தனது அவஸ்தை மிகுந்த இந்த பயணத்திலும் பாட்டிக்கு ஒரு திருப்தி. இந்தப் பெட்டியில் பயணம் செய்ததால் தானே இந்தப் பெண்ணிற்கு உதவ முடிந்தது என்று.

மணி அதிகாலை மூன்றாகி இருக்கும். பாட்டி உறக்கம் வந்தும் உறங்க முடியாமல் அரைத் தூக்கத்தில் இருந்தாள். அப்பொழுது ஒரு கனவு. ஒரு பெரிய பைக்குள் கீழே பாட்டியின் பிள்ளைகள் படுத்துக் கிடக்க அதன் மேல் பட்டுச் சேலைகள் போர்த்தி இருக்க பாட்டி பையின் மேல் பகுதியில் கிழிசல் சேலையுடன் படுத்து கிடந்தாள். கனவு மயக்கத்தில் களைத்த பாட்டி நிலையத்தில் நின்ற ரயிலின் ஹாரன் ஒலியில் திடுக்கிட்டு விழித்தாள். பக்கத்தில் இருந்த அந்த ஏழைப் பெண் பாட்டியின் காலைத் தொட்டு நன்றி கூறி விட்டு குடும்பத்துடன் ரயிலை விட்டு இறங்கினாள். அதற்குள் ரயில் புறப்படுவதற்கான ஹாரன் ஒலித்துவிட அநத பெண் கணவனிடம்

‘ நீங்க முதல்லே குழந்தையை இறக்குங்க. ரயில் புறப்பட்டாச்சு. சீக்கிரம் …. சாமான்ங்க போனாப் பரவாயில்ல கடைசியிலே எடுத்துக்கலாம் சீக்கிரமா குழந்தையை இறக்குங்க ‘ என்றாள்.



முடியுமெனில் சுட்டுத் தள்ளு


மொழிபெயர்ப்புக் குறுங்கதை

தனக்குச் சொந்தமான சூதாட்டவிடுதியொன்றில், பொறுப்பாளராகவிருக்கும் என்ஸோ (ENZO), 25 மில்லியன் டொலர்களைக் கையாடியிருப்பதாக மாஃபியா தலைவரான கோட்ஃபாதருக்கு தகவல் கிடைத்தது.
என்ஸோ காதுகேளாத, சற்று வயதான ஒருவர். அதனால் கோட்ஃபாதர், என்ஸோவுடன் கதைக்கச் செல்வது தனது சட்டத்தரணியுடன்தான். அந்தச் சட்டத்தரணிக்கு சைகை பாஷை தெரியும்.
“என்னிடமிருந்து களவாடிய 25 மில்லியன் டொலர்களும் எங்கே?” என்று என்ஸோவிடம் விசாரிக்கும்படி கோட்ஃபாதர், தனது சட்டத்தரணியிடம் உத்தரவிட்டார். சட்டத்தரணி, சைகை பாஷையை உபயோகித்து அந்தக் கேள்வியை என்ஸோவிடம் கேட்டார்.
‘நீங்கள் என்ன கேட்கிறீர்களென்றே எனக்கு விளங்கவில்லை’ என்ஸோ சைகை பாஷையிலேயே பதில் சொன்னார்.
“நாங்கள் எதைப் பற்றிப் பேசுகிறோமென்றே அவருக்கு விளங்கவில்லையென்று அவர் சொல்கிறார்” சட்டத்தரணி, கோட்ஃபாதரிடம் கூறினார்.
தனது கைத்துப்பாக்கியை வெளியே எடுத்த கோட்ஃபாதர், கோபத்தோடு அதனை என்ஸோவின் நெற்றியில் வைத்து, “திரும்பவும் கேள்” என சட்டத்தரணிக்குக் கட்டளையிட்டார்.
‘நீ சொல்லவில்லையென்றால் இவர் உன்னைக் கொன்றுவிடுவார்’ சட்டத்தரணி, என்ஸோவிற்கு சைகையில் சொன்னார்.
‘சரி. நான் உண்மையைச் சொல்லிவிடுகிறேன். பணம் எல்லாவற்றையும் கபில நிற பெட்டியொன்றில் போட்டு, எனது மைத்துனன் புரூனோவின் தோட்டத்தின் கிழக்குப்பக்கமாக உள்ள மதிலிலிருந்து இரண்டு அடிகள் தள்ளி, குழி தோண்டி புதைத்திருக்கிறேன்’ என்ஸோ சைகை மொழியில் சட்டத்தரணியிடம் விவரித்தார்.
“என்ன சொல்கிறான் இவன்?” கோட்ஃபாதர், சட்டத்தரணியிடம் கேட்டார். அதற்கு சட்டத்தரணி இவ்வாறு கூறினார்.
“இவன் சொல்கிறான். முடியுமென்றால் இவனை சுட்டுத் தள்ளட்டுமாம். அவ்வாறு சுடுமளவுக்கு உங்களுக்கு தைரியமில்லையாம்.”

தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை

குட்டிக்கதைகள்

ஒரு தேதி
வன் கதவைத் திறந்துகொண்டு படிக்கட்டில் உட்கார வந்ததுமே ஒரு பழுப்பு நிற பூனைக்குட்டி விருட்டென்று பாய்ந்தோடியது. சற்று நேரத்திற்கு முன்தான் மழை பெய்து ஓய்ந்திருந்தது. சுற்றிலும் ஈரம் புற்களும் சின்னஞ்சிறு செடிகளும் ஆங்காங்கே மழையில் பளிச்சென்றிருந்தன. சாலையின் இரண்டு புறங்களிளும் எதிரெதிராய் இரண்டு தெரு நாய்கள் ஒன்றையொன்று கடந்தன. மாலை மணி ஐந்திற்கே மணி ஆறுபோல் ஒளி மங்கியிருந்தது. வானத்தின் நீலம் முற்றிலும் மறைந்து கொஞ்சம் கொஞ்சம் இடைவெளி விட்டு மேகங்கள் திரண்டிருந்தன. அந்த இடைவெளியில் வெள்ளை நிற மேகங்கள் முன்முகம் காட்டிக் கொண்டிருந்தன. திடீரென்று பூனைக்குட்டி பக்கத்தில் வந்து அதனுடைய ஓசையை எழுப்பத் துவங்கிற்று. எட்டிப் பார்த்தான். உருண்டைக் கண்கள் இரண்டையும் விழித்தபடி அவனைப் பார்த்து கத்திக் கொண்டிருந்தது. அதனுடைய இடத்திற்கு தான் வந்து தொல்லை கொடுத்து விட்டோமோ என்று எண்ணினான். சிறிது நேரத்தில் பூனைக்குட்டி ஓடிப்போய் தூரத்திலிருந்து கத்திக் கொண்டிருந்தது. அவன் உட்கார்ந்த இடத்திற்குப் பின்னால் சிறிய கறுப்பு எறும்புகள் சென்று கொண்டிருந்தன. படிக்கட்டுகளில் இரண்டிரண்டு கோடுகளாய் கோலமாவில் போடப்பட்டிருந்தது. எறும்புகள் அவற்றையெல்லாம் கடந்து சென்று கொண்டிருந்தன. இதைச் சொல்லிக்கொண்டிருக்கும்போதே தான் வேறு யாரோவாகச் செயல்பட்டு சிந்தித்துக் கொண்டிருந்தான். தான் நினைத்துக் கொண்டிருப்பதையெல்லாம் பக்கத்தில் இருந்த தென்னை மரம் கேட்டுக் கொண்டிருக்குமோ என்று தோன்றிற்று. அப்பொழுது மின்னல் ஒன்று கிழக்குப்புற வானில் பளிச்சிட்டது. திடீரென்று நான்கு சிறு பறவைகள் இரண்டு காகங்களுடன் அணிவகுத்துச் சென்றன. அவன் குறித்து வைத்திருந்த நாளில் அப்படி ஒன்றும் பெரிதாக நடக்கப் போவதில்லையோ என்று தோன்றிற்று. ஒரு கணம், நடந்தால் என்னவெல்லாம் ஆகும் என்று மனக்கணக்கு போட ஆரம்பித்தான். உறக்கத்திலிருந்து அவன் விடுபடுகிறான். நிச்சயம் சில மாறுதல்கள் நிகழக்கூடும். மதிப்புடன் போற்றிப் பாதுகாத்தவை எல்லாம் ஒரு கணத்தில் அர்த்தம் இழந்து புதியதோர் தளத்தில் இயங்கத் தொடங்கும். அவன் அனுபவத்தில் உலகம் புதியதோர் பொருள் கொள்ளும். அவன் நினைவுகள் எல்லாம் கடந்த காலத்தில் மட்டுமே சஞ்சரித்துக் கொண்டிருக்கும். அவற்றின் மாறுபடும் பொருள்கள் மட்டுமே நிகழ் காலத்திலிருந்து எதிர் காலத்திற்கு கடந்து செல்லும். மேலும் சில காகங்கள் பல்வேறு திசைகளிலிருந்து கிழக்கு நோக்கிப் பறந்து கொண்டிருந்தன. இரண்டு பச்சைக் கிளிகள் கூவிக் கொண்டே பறந்தன. எல்லாமே பார்ப்பதுபோல் மட்டுமே இருக்கிறது. கைகளை நீட்டித் தொட்டுப் பார்த்தான். எல்லாமே செங்கல் கட்டிடங்கள். நிச்சயம் ஏதோ தவறு நேர்ந்திருக்க வேண்டும் என்று தோன்றியது. தலை நிமிர்ந்து மேலே பார்த்தான். ஆகாயம் முழுக்க அவன் பெயர். நான் இல்லை அது என்றான். உரக்கக் கூவினான். எந்தப் புறத்திலிருந்தும் எவ்வித எதிரொலியும் கேட்கவில்லை. அவன் விழித்துப் பார்த்தபோது வேலைக்காரியின் முகம் பூதாகாரமாய் தெரிந்தது. தேதியைப் பார்த்தான். அவன் குறிப்பிட்டு வைத்திருந்த தேதி கடந்து விட்டிருந்தது.
– ஆத்மாநாம்

தமிழ்ப் பேசும் ஆங்கில படம்

தெரு விளக்குகள் அணைந்து விட்டது. எல்லா திசைகளிலும் பூரணமான இருட்டு. மணி எட்டேகால் சொச்சம்தான். காற்று சூறையாக சப்தம் காட்டியபடி தாறுமாறாக வீசியது. இந்தக் கோடையில் காய்ந்து சருகாகி மடிந்துப்போன சாலைப் புழுதியெல்லாம் காற்றில் மேலெழுந்து கண்களில் அப்பியது. மேலெல்லாம் நாற்றப் பூச்சு. நட்சத்திர மண்டலம் மறைந்துப் போனது. தேய்ந்து போய் வளர்ந்த நிலவையும் காணோம். மின்னல் மின்னி நெளிய, இடி இடித்துக் காட்டியது. மழைவரும் என்று பேசிக்கொண்டு சிலர் ஓட்டமும் நடையுமாய் விரைந்தார்கள். தூற்றல் பலமாக விழுந்தது. ஏறிவந்த சைக்கிளை தள்ளிக் கொண்டும் போக இயலவில்லை. சுழற்றியடித்து அதை நிறுத்தியது காற்று. உடல் பலஹீனம்வேறு. தேங்கிவிட்டேன். காலம் என் முன்னே இருளாக கவிழ்ந்து கிடக்கிறது. விளக்குகள் மீண்டும் உயிர்பொற்றன. காற்றும் தூறலும் கூடிக்கொண்டே இருந்தது. நாலு வீடு தள்ளி, ஒரு வீட்டின் முன்புறம் கொஞ்சம் பெரிய பெட்டிக்கடை. அதன் முன்னால் போடப் பட்டிருந்த கீற்றுப் பந்தலில் சிலர் ஒதுங்கி நின்றார்கள். மழை விடட்டுமென சைக்கிளை ஓரத்தே விட்டுவிட்டு நானும் அங்கே ஏறிக்கொண்டேன். தூரத்தில் இருக்கும் எங்க முஹல்லா பள் ளியில் இருந்து ‘இஸா தொழுகை’க்கான பாங்கு, சூறைக் காற்றின் வினோத இரைச்சல்களையும் விஞ்ச கேட்டது.என்னை கண்டவுடன் கடைக்காரன் என் பிராண்ட் சிகரெட் பாக்கெட் ஒன்றை எடுத்து என்னிடம் நீட்டினான். அவ்வப்போது சிகரெட் வாங்க அங்கே போவதுண்டு. கடைவைத்த புதிதில் அவன் துரு துருவென வியாபாரம் செய்வதை பார்க்கப் பிடிக்கும். அவனுக்கு திருமணமாகிய சில மாதங்களில் விபத்தில் சிக்கிக் கொண்டான். பெரும்பாலும் பலருக்கு நிகழும் பொது விபத்துதான். சிலரால் அதில் மீண்டுவிட முடிகிறது. சிலரால் முடிவதில்லை. அதன் பிறகு, சிலநேரம் கணவனுக்கு உதவிகரமாக கடையில் அவன் மனைவி நிற்பதைப் பார்த்திருக்கிறேன். அவள், அவனைவிட கெட்டி. புன்னகைத்தப்படி அவள் வியாபாரம் செய்வதைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். இப்பொழுது பொட்டிக் கடை முன்னால் நிற்க இடம் காணவில்லை. இன்னும் சிலர் வந்து கூடிக்கொண்டார்கள். எதிரே சினிமா கொட்டகை. தமிழ்ப் பேசும் ஆங்கிலப்படம்! போஸ்டர் ஒட் டியிருந்தது. அதில் ஒருத்தி நிமிர்ந்து புடைத்துக் கொண்டிருந்தாள். தொடர்ந்த மழையின் சாரலில் அவள் கழன்று மடியத் தொடங்கினாள். நிற்பவர்களில் பலரும் அந்தப் படம் பார்க்க முன்கூட்டியே வந்தவர்கள். அது ஆங்கில படம் என்றாலும், மொழிமாற்றம் செய்யப்பட்டிருப்பதால் அதனை விளங்கிக் கொள்வதில் சிரமம் ஏற்படாது. ஆனால் அந்தப் படத்தின் மாறுப் பட்ட கலாச்சார வடிவைதான் இவர்கள் புரிந்துக் கொள்ள சிரமப்பட வேண்டும். அதையும் தமிழ்ப் படுத்த முடியுமாயென்ன? என்றாலும் அதுவும் அத்தனை சிரமம் தராதென்றே நினைக்கறேன். இப்பொழுதெல்லாம் மேற்கிற்கும் நமக்குமான கலாச்சார வித்தியாசம் ரொம்பவும் சுறுங்கி விட்டது.கடையின் உள்பகுதியில் தவணைக்கு பணம்பெற்ற ஒருவனை அழைத்து வந்து வைத்து, வட்டிக் குறித்த சர்ச்சையாக பஞ்சாயத்து ஒன்று நடந்துக் கொண்டிருந்தது. தவணைக்கு பணம் தரு வது கடைக்காரனின் இன்னொரு தொழிலாக இருப்பது எனக்குப் புதிய செய்தி! அந்த ஏரியாவின் சவடால் பேர்வழி ஒருவன் கடைக்காரனுக்காக, அவனது குரலாகவே தவணை வாங்கி யவனிடம் பேசிக் கொண்டிருந்தான். தவணை வாங்கியவனின் அக்கா, தங்கைகளின் கற்பில் அவன் உரசலை நிகழ்த்தும் பேச்சாக அது இருந்தது. கடைக்காரன் வட்டி நோட்டை புரட்டிப் பார்த்து அசலும் வட்டியுமான சுத்தத்தை எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தான். வீட்டின் உள்ளிலிருந்து கடைக்காரனின் மனைவி வந்து கடைவாசலில் நின்ற கூட்டத்தை எட்டிப்பார்த்தாள். நல்ல மழையென சிரித்தாள். சவடால் பேர்வழி அவளைப் பார்த்ததும், பெயர் கூறி அழைத்து குடிக்க தண்ணி எடுத்துவரச் சொல்லிச் சிரித்தான். அவளும் சிரித்துக் கொண்டே உள்ளே போனாள். தண்ணியெடுத்துவர போனவளை பார்த்தபடிக்கு, “கடையை அடைத் துக் கொண்டு நிற்காதீர்கள்” என்று கூறியவனாக கடைக்காரன் எல்லோரையும் போகப் பணித்தான். என்னிடம், “பாய் போங்க மழைவிட்டா மாதிரி இருக்கு, இப்படியே நின்னா எப்படி?” என்றான். விளக்கு மீண்டும் அணைந்தது. மழை வேகம்பிடித்து. சுழன்று சாறல் வேகமாக அடிக்கத் துவங்கியது. வீட்டுக்காரி சொம்புடன் வந்தாள். ‘அங்கே வருகிறேன்’ என்று ஜாடைக்காட்டியப்படி கடைக்காரனுக்காகப் பரிந்து கத்திக் காட்டிக்கொண்டே கடையைவிட்டு வெளியே இறங்கி வந்தான் சவடால். தவணைப்பெற்றவன், தான் வாங்கிய மூவாயிரத்துக்கு மாதம் முண்ணூறுமேனி இரண்டு வருஷம் தந்திருக்கிறேன், இன்னும் என்னிடம் பணம் கேட்டால் எப்படி? என்ற பழையப்பட்டையே மீண்டும் பாடினான். கடைக்காரன் கூட்டுவட்டிக் கணக்கு பேசினான். முதலும் வட்டியுமாக இன்னும் ஆறாயிரத்து எழுநூற்றிச் சொச்சம் பாக்கியிருப்பதற்கான கணக்கை, நோட்டு குறிப்பிலிருந்து எடுத்துக் காட்டினான். “இது ரொம்ப அநியாயம், வெளங்காமெ போயி டுவிங்கெ” தவணை வாங்கியவன் புலம்பியப்படி இறங்கி நடந்தான். “அவன் போறான் பாரு” என்றான் கடைக்காரன். “விடுண்ணெ எங்கே போயிடப்போறான், நாளைக்கு இழுத்து வச்சி நாலு தட்டுதட்னா…. தான பணத்தெ வைக்கிறான்” என்றான் சவடால். “வட்டிசுத்தமா அவன்கிட்டே வாங்கியாகனும்” என்கிற கேரிக்கையை அழுந்த வைத்தான் கடைக்காரன். தன் மனைவி, தண்ணீர் குடிக்கும் சவடாலிடம் சிரித்துப் பேசிக்கொண்டிருப்பதை பார்த்து, “நாளைக்கு அந்தப் பயலை விடக்கூடாது” என்றவனாக தவணை நோட்டைத் திறந்து மீண்டும்வட்டி விகிதத்தை கூட்டிப் பார்ப்பவனாகவும், கும்பலை கலைந்துப் போகும்படி சப்தம் கொடுத்தவனாகவும் இருந்தான். திரும்பவும் மழை தன் வேகத்தைக் கூட்டியது. காற்றின் சாரலில் கொட்டகையில் நின்ற அத்தனைப் பேரும் தப்ப முடியவில்லை. தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த சவடாலும், படியிறங்கிவந்து செம்பைத் தந்த அவளும் முழுக்க ஈரமாகிப்போனார்கள். மின்னலும் இடியும் அதிர்ந்தது. கடைக்காரன் எல்லோரையும் போகச் சொல்லி மீண்டும் மீண்டும் பணித்தான். நின்றவர்கள் யாரும் கடைக்காரனைப் பொருட்டாகவே நினைக்கவில்லை. நின்று போன காலத்தோடு தாங்களும் அசைவற்றுப் போனமாதிரி மௌனம் காட்டினார்கள். ஒன்றை நினைத்தவனாக எனக்குள் சிரிப்பெழுந்தது. ‘காலம் இருளாக கவிழ்ந்தது’, ‘காலம் நின்றுப்போனது’ என்றெல்லாம் நான் எழுதுவதை என் நண்பன் ஒருவன் படிக்கக் கூடுமென்றால், “உங்களுக்கெல்லாம் மூளை வெந்து அவிந்து விட்டது என்பான். காலத்தை காலமாகப் பார்க்கப் பழகுங்கள், அதன் பிறகு கதை, கவிதை எழுதலாம்” என்பான். அவனிடம் விவரிக்கவோ, ஏதேனும் பதில் சொல்லவோ என்னிடம் எந்த வார்த்தையும் இருக்காது. வாங்கித்தான் கட்டிக்கொள்ளவேண்டும். எனக்கும் அது பிடிக்கும். கடைக்காரனின் மனைவி, சவடாலை ‘அண்ணெ’ என்றே அழைத்தாள். அவனை, தனது விரல்களால் மழையில் தள்ளி விளையாட்டுக் காட்டினாள். மழைத் தண்ணீரை கரங்களில் ஏந்திய வன், அவள் மீது தெளித்தான். சிறிது நேரத்திற்குப் பிறகு நல்ல ஈரத்தோடும் நிறைந்த சிரிப்போடும் உள்ளே போனாள். தலைத்துவட்ட துண்டு வேண்டும்யென கேட்டப்படி சவடால் பின் தொடர்ந்தான். கடைக்காரன் கொளுத்திவைத்திருந்த காண்டாவிளக்கு அணைத்தது. மீண்டும் அதைக் கொளுத்திக் கொள்ளலாம், என்பதாக பரபரப்பு அற்று காணப்பட்டான். கூட்டம் மௌனம் கலைந்து, “மழை இன்னும் வேகம் பிடிக்கும் போல் தெரிகிறது! இடியும் மின்னலையும் பார்க்க அப்படித்தான் இருக்கிறது!” என்றார்கள். “படத்திலே கூட இப்படி ஒரு மழைக்காட்சி பார்ககமுடியாது!” என்றவர்களாக. “இன்றைக்கு படம் பார்த்தாமாதிரிதான்! போகலாம்” என்று விருப்பமில்லாமல் ஒவ்வொருவராக கலைந்தார்கள். வீட்டின் உள்ளே இருந்து கடைக்காரனின் மகள் கதவை திறந்து வெளியேவந்ததும், அதை பொறுப்பாக சாத்தியப்படி தூக்கக்கலக்கத்தில் சிலேட் பல்பத்தோடு வந்தாள். மகளைப் பாத்ததும் கடைக்காரன் முகத்தில் பெரியதிருப்தி! “இன்னும் வீட்டுக்கணக்கு போட்டுமுடியலப்பா, தூக்கம் வேறே வரது. அம்மாதான் அப்பாகிட்டே போயி கேட்டுப் போட்டுக்கோன்னு அனுப்பிட்டாங்க” என்றாள். “இங்கே வந்து உட்கார், கணக்குத்தானே… நான் போட்டுத்தருகிறேன்” என்றபடி கடைக்காரன் காண்டாவிளக்கை கொளுத்த முற்பட்டான். மின்னலும், இடியும் மீண்டும் மீண்டும் சஞ்சலப் படுத்தியது. தீகுச்சியை தேடி எடுத்த கடைக்காரன், தீபொட்டியின் ஓரபட்டையின் மீது உரசினான். தீ பற்றிக்கொண்டது. பற்றியத் தீயைக் கொண்டு காண்டா விளக்கை கொளுத்த, ஸ்தலத்தில் மீண்டும் மங்கலானப் பிரகாசம். யோசித்த போது, எந்த சிரமும் இல்லாமல் எத்தனை சுலபத்தில் அந்தப் பிரகாசத்தை மீண்டும் உண்டாக்கிக் கொள்கிறான்! என்றே தோன்றியது. நாளைக்கு இவனுக்கு, இவன் எதிர்பார்த்த வட்டியும் முதலும் வசூல் ஆகிவிடுமென கருதியவாறு இருளுக்குள் இறங்கி, எனது சைக்கிளை தேடினேன்.

பூனைகள்………..பூனைகள்…………….பூனைகள்……25

அரசியல் வாதியும் அவர் வளர்த்த பூனையும்

அரசியல்வாதி ஒரு பூனை வளர்த்தார் அன்றாடம் பாலுடன் அனுசரணையாய் வளர்க்கப் பட்டது அந்தப் பூனை அவர் மடியில் கிடந்து மாமிசம் சாப்பிட்ட பூனை அது.
அரசியல்வாதி எம். எல். ஏ ஆனார். எம். பி ஆனார். மத்திய மந்திரியும் ஆனார் பூனைக் காவல்படையுடன் சுற்றும் அவர் அருகே இன்று அந்த பூனையால் அண்ட இயலவில்லை
அரசியல்வாதியின் மனைவியாய் நெடுங்காலம் இருந்த பின் ஒரே நாளில் திடீரென முதல் மனைவியாய் பதவி உயர்வு பெற்ற அந்தப் பெண்ணின் சமையல் அடுப்பில் தூங்குகிறது இன்று அந்த பூனை

குமரி எஸ்.நீலகண்டன்..

யாவரும் கேளீர்

எழுதுவது, படிப்பது இரண்டும் தனிமையில்தான் சாத்தியமாக இருந்தாலும் இவை ஆழ்ந்த நட்புக்கும் காரணமாக இருந்து விடுகின்றன. புதுமைப்பித்தன்-ரகுநாதன், கு.ப.ரா-பிச்சமூர்த்தி. ராமையா-சி சு செல்லப்பா எனப் பலர் உடனே நினைவுக்கு வருகின்றனர். இந்திய சுதந்திரத்திற்கு முன்பு பொதுவாக மக்களிடம் இருந்த விடுதலை வேட்கை இவர்களிடமும் இருந்தது.

கிட்டத்தட்ட இதே மாதிரிதான் ஷங்கரநாராயணன்-ஏ ஏ ஹெச் கே கோரி – சாந்தன் ஆகியோரைப் பற்றி நினைக்க முடிகிறது. இப்போது சுதந்திரம் என்ற அரூபமான, ஆனால் உணர்ச்சி எழுப்பக்கூடிய இலக்கு தேவையற்றுப் போய் விட்டது. இன்று பெரும்பாலும் பொருளாதாரக் கவலைதான் எல்லா இந்தியரையும் தீண்டுகிறது. எழுத்தாளர்களாகவும் இருந்து விட்டால் பத்திரிகை பிரசுரம், நூல் பிரசுரம் இவற்றுக்கும் மேல் வாசகர் கவனம் போன்றவை சின்னச் சின்னக் கவலைகளாக இருந்து வரும். பொருளாதாரம்தான் குடும்ப உறவுகள், பொறுப்புகளையும் நேரிடையாகவும், மறைமுகமாகவும் நிர்ணயிக்கிறது. இன்றைய மசாலாத் திரைப்படங்கள் இந்த ஒரு நம்பகமான சிறிதே பூதம் காட்டும் கண்ணாடி.

இந்தப் பொது விதியிலிருந்து சாந்தன் சற்றே விலகியவர். அவர் இலங்கைத் தமிழர். இந்த முப்பத்து மூன்று அபாயகரமான ஆண்டுகளையும் இலங்கையிலேயே இருந்து அனுபவித்தவர். அவருக்குள்ள கல்வித் தகுதிக்கும் ஆங்கில மேன்மைக்கும் அவர் எளிதாக இங்கிலாந்து அல்லது கனடா போன்ற நாடுகளுக்கு அகதியாகப் போய் வாழக்கூடியவர். ஆனால் அவர் இலங்கையிலேயே, முதலில் கொழும்புவிலும், பின்னர் யாழ்ப்பாணத்திலும் இருந்து விட்டார். பல நீண்ட கதைகள் அவர் எழுதியிருந்தாலும் அவருடைய குட்டிக் கதைகள் உருவத்திலும் பொருளிலும் விசேஷமானவை. அரசுகளாக ஏற்பாடு செய்த ரஷ்யச் சுற்றுலாவில் ஒரு தமிழன், ஒரு சிங்களவனோடு சேர்ந்துதான் வெவ்வேறு இடங்களுக்குப் போக வேண்டியிருக்கிறது. தமிழர்-சிங்களவர் உறவு மிகவும் சீர்கெட்ட நேரம். அப்போது அந்த சுற்றுலா வழிகாட்டி பேச்சோடு பேச்சாக உலகத்தின் மிகச் சிறந்த தேயிலை அங்கு உற்பத்தியாகிறது என்கிறான். சிங்களவன், தமிழன் இருவரும் ஒரே குரலில்,”என்ன சொன்னீர்கள்? என்ன சொன்னீர்கள்?” என்று கேட்கிறார்கள். இலங்கைத் தேயிலைப் பெருமை தமிழன் சிங்களவன் இருவருக்கும் அவ்வளவு தீவிரமானதாக இருக்கிறது.

இப்போது சாந்தன் ஒரு நாவல் எழுதியிருக்கிறார். எனக்குத் தெரிந்த அளவில் இது அவருடைய முதல் நாவல். அதன் இன்னொரு பெருமை அதை அவர் ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார். இன்னொரு தகவல் இது இந்திய அமைதிப்படை, தமிழர் துவேஷம் பற்றியது.

இந்திய அமைதிப்படை பற்றி இந்தியத் தமிழர் கொண்டிருக்கும் அபிப்பிராயத்தை தனியாக விவரிக்கத் தேவையில்லை. ஆனால் அமைதிப்படையில் மருத்துவராகப் பணியாற்றிய ஒருவர் கூறியது பரிதாபமானது. ஆயிரக்கணக்கில் அமைதிப் படையினர் கொல்லப்பட்டார்கள். உயிர் தப்பியவர்களில் முக்கால்வாசி கண்ணிவெடியால் கை கால் இழந்து ஆயுள் முழுதும் முடமாக வாழத் தள்ளப்பட்டவர்கள். பலர் இந்த மருத்துவரைப் பார்த்து, ”என்னைக் கொன்று விடுங்கள்…கொன்று விடுங்கள்..” என்று மன்றாடி இருக்கிறார்கள்.

படையினர் என்றால் யார்? 90 சதவீதம் சிப்பாய்கள். சிப்பாய்கள் யார்? எந்தத் தேர்ச்சியும் பயிற்சியும் இல்லாமல் தோட்டாக்களுக்கும், பீரங்கிகளுக்கும் தீனியாவதற்கென்றே படையில் சேர்ந்தவர்கள். ஏழைகள். ஏழைகளில் இந்திய ஏழை, சீன ஏழை, ஆப்பிரிக்கா ஏழை, இலங்கை ஏழை என்று கிடையாது.

சாந்தனின் நாவல் அமைதிப்படையினர் எல்லாத் தமிழர்களையும் விடுதலைப் புலிகள் அல்லது விடுதலைப் புலிகளுக்கு உளவு கூறுபவர்கள் என்று நினைப்பதாக உள்ளது. நல்ல யுத்தம் என்று கிடையாது. நல்ல படை என்று கிடையாது. நல்ல அரசன் என்றும் கிடையாது. முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு நைஜீரியாவுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டவுடன் உள்நாட்டுப் போர் ஆண்டுக்கணக்கில் நைஜீரியர்களும், பயாஃரா இனத்தவரும் போரிட்டுக் கொண்டார்கள். நமக்கு அந்த இரு குழுக்களிடையே என்ன வேற்றுமை இருக்கக் கூடும் என்றுதான் தோன்றும். ஆனால் சுமார் இரண்டு லட்சம் பயாஃப்ரா இனத்தவர் பட்டினி போடப்பட்டே கொல்லப்பட்டார்கள்.

நாம் மகா அரசர்கள், மகா வீரர்கள் கடல் தாண்டி வெற்றி பெற்றவர்கள் என்றெல்லாம் பெருமைப் பட்டுக் கொள்கிறோம். இவர்களால் எவ்வளவு ஆயிரக்கணக்கானோர் உயிர் துறந்தார்கள், எவ்வளவு பெண்கள் அக்கிரமத்துக்கு உள்ளானார்கள், எவ்வளவு வயோதிகர் மற்றும் குழந்தைகள் கவனித்துக்கொள்வோர் இல்லாமல் இருட்டிலும் பனியிலும் மழையிலும் வெயிலிலும் துடிதுடித்து இறந்தார்கள் என்றும் நினைக்க வேண்டும். யாதும் ஊரே, யாவரும் கேளிர்.

சாத்தனின் இப்புது நாவலைப் படிக்கும்போது பல விஷயங்கள் குறித்து யோசிக்கத் தோன்றியது. நூலின் தலைப்பு Whirlwind. வெளியிட்டவர் சென்னை ராமாபுரம் பார்க்துகார் என்ற இடத்தில் உள்ள v.u.s பதிப்பகம். விலை ரூ.100.

ஒரு கொத்துப் புல்

பூமியிலிருந்து சுமார் 12500 அடி உயரத்தில் யாத்ரீகர்களுக்காக
நவீன வசதிகளுடன் அமைக்கப் பட்டிருந்த சிற்றுண்டி சாலையில்
நான் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். என்னுடன் என் மனைவியும்
மகளும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்……

கேதார்நாத்தின் உச்சிக்கு வந்தடைய கௌரிகுண்ட் என்ற
ஸ்தலத்திலிருந்து 14 கிலோ மீட்டர் குட்டைக் குதிரையின் மேல்
ஆடி அல்லாடி இரண்டு மணி நேரம் சவாரி செய்தாக வேண்டியிருந்
தது. அந்த அனுபவ அவஸ்தையில் உடம்பும் மனசும் ஒரு வித்யா
சமான வெளியில் பரபரத்துக் கொண்டிருந்தது.

சாப்பிட்டுக் கொண்டிருந்த எங்களுக்கு குதிரை சவாரியை நினைத்
துக் கொண்ட போது திடீர் திடீரென்று சிரிப்பு வந்தது.. முன்னும்
பின்னுமாகவும் பக்க வாட்டிலும் எதிர்பாராத விதமாக ஆடிக் குலுங்கி
கொண்டு வந்த அந்த வித்யாசமான பயணம் எங்களுக்குள்
ஒரு குழந்தையின் சந்தோஷத்தை மலர்த்திக் கொண்டிருந்தது…

” இருந்தாலும் அந்தக் குதிரையை நெனைச்சா ரொம்ப பரிதாமா
இருக்கு அப்பா! ” என்றாள் மகள்..

‘ ஆமாம்…குதிரைகளுக்குக் கூட ஏன் எல்லா ஜீவராசிகளுக்குமே
ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட ஒரு வாழ்க்கை இருக்குன்னு
நெனைக்கிறேன்…ஒவ்வொன்றும் அது பொறக்கர இடத்தை
பொறுத்துத் தான் வாழ்க்கை சுகமாகவோ துக்ககரமாகவொ அமைகி
றது…..”” என்றேன்…

” நினைத்துக் கொண்டால் நம்ப முடியாமல் இருக்கிறது…
பார்ப்பதற்கு குட்டையாக பெரிய ஆகிருதி இல்லாமல் இருக்கிற
குதிரை நம்ப பாரத்தை அனாயாசமாக தூக்கிக் கொண்டு கல்லும்
கரடும் வழுக்கலுமாக இருக்கிற மேட்டுப் பாதையில் ஒரு இடத்தில்
கூட கால் இடறாமல் ஒரு பொறுப்புள்ள சிநேகிதன் போல்
உச்சி வரை ஏற்றி வந்து பத்திரமாக இறக்கி விடுகிறதே…
அந்த ஜீவனுக்கு நாம் எவ்வளவு நன்றிக்கடன் பட வேண்டும் ! “
என்றாள் மகள் உணர்ச்சி வசப்பட்டு..

” நிச்சயமாக ” என்றேன்…

எங்களுக்கு எதிரே ஒரு கிழவர் தனியாக உட்கார்ந்து கொண்டு
டீ சாப்பிட்டுக் கொண்டிருந்தார்….அவர் கூட வந்தவர்கள் பக்கத்தில்
எங்காவது இருக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்…

திடீரென்று அந்தக் கிழவர் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு
மூச்சு விட முடியாமல் வாயை அகலமாக திறந்து கொண்டு ஏதோ
ஒரு விதமாக குரல் எழுப்பினார்.. நான் பதறிப் போய் எழுந்து
நின்றேன்.. அங்கே சிற்றுண்டி பரிமாறிக் கொண்டிருந்த பணியாள்
அவர் அவஸ்தைப் படுவதைக் கண்டவுடன் ஓடி வந்து தாங்கிப்
பிடித்தான் .. கூட இருந்த இன்னொரு ஆளிடம் ஏதோ ஹிந்தியில்
கத்தினான்..அந்தப் பையன் உடனே எங்கோ வெளியே ஓடினான்..

ஐந்து நிமிஷத்துக்குள் ஒரு டாக்டர் கையில் மருத்துவ சாதனங்
களுடன் முதல் உதவிக்கு ஓடிவந்தார்….நாடித்துடிப்பையும் இதயத்
தையும் சோதனை செய்து விட்டு கிழவரின் நரம்பில் ஊசி போட்டார்..
அவர் மூக்கில் ஒரு ப்ளாஸ்டிக் மூடியை பொறுத்தி அடியில்
இணைத்திருந்த குழாய் மூலம் கொண்டு வந்திருந்த
சிறிய ஆக்ஸிஜன் சாதனத்தை இணைத்தார்..

இப்போது கிழவர் மெதுவாக சகஜ நிலைமைக்கு திரும்பிக்
கொண்டிருந்தார்.

அப்போது தான் அந்தக் கிழவரின் கூட வந்திருந்த அவருடைய
வயதான மனைவி அங்கே வந்து சேர்ந்தாள்..அவள் அற்பசங்கைக்கு
போயிருந்தாள் என்று தெரிந்தது.. .தன் கணவனின் நிலைமையை
கண்ட போது அவளுக்கு உடம்பெல்லாம் பதறியது.. உதடு நடுங்கி
கண்ணீர் தளும்பியது.. அவள் டாக்டரை கை கூப்பி நன்றி தெரிவித்துக்
கொண்டாள்.. அவளுக்கு பாஷை தெரியவில்லை..

“இந்த வயதில் இவ்வளவு கஷ்டமான பயணம் பண்ணி இந்த உச்சிக்கு
வரணுமா?.. ” என்று வருத்தத்துடன் பெருமூச்சு விட்டாள் என் மனைவி..

” ஏன் எனக்கும் அந்தக் கிழவர் வயது தான் ..எனக்கும் தான்..
அது நேரலாம்…” என்றேன்..

மனைவி என் வாயை பொத்தினாள்

கிழவருக்கு வைத்தியம் செய்து முடித்து விட்டு அந்த
டாக்டர் எங்கள் மேஜைக்க்கு அருகில் கடந்து போய்க் கொண்டிருந்
தார்… ” நான் தேங்க் யூ டாக்டர் என்றேன்…

அவர் என்னைப் பார்த்து விட்டு சற்று நின்றார்..” அவருக்கு வேறெ..
பிரச்னையில்லை. இந்த உயரத்துலே ப்ராணவாயு அடர்த்தி குறைவா
இருக்கும்.. அதனாலெ சில பேருக்கு இங்கே ஆக்ஸிஜன் போதாம
மூச்சு முட்டும் ..அதுக்கு தகுந்த முன்னெச்சரிக்கை எடுத்துக்கிறது
மிகவும் அவசியம்..’ என்று ஆங்கிலத்தில் சொன்னார்..

அதே தொடர்ச்சியில் ” ஸார்.. நீங்களும் வயசானவரா இருக்கீங்க..
எதுக்கும் உங்களையும் சோதனை பண்ணி பாத்துடறேன்..’ என்றார்..

சோதனை செய்யும் போது மனைவி கவலையுடன்
அவர் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள்

அவள் கவலையை ஊர்ஜிதம் செய்வது போல்..டாக்டர் ” அடடா..
உங்களுக்கு ஆஸ்த்துமா உண்டா..? உங்க நுரையீரல்லெ காத்து
சராசரி அளவுக்கும் கம்மியா தான் இப்போ போயிக்கிட்டிருக்கு..
மூச்சுத் திணறல் எப்ப வேணா வரலாம்.. என்னுடைய மருத்துவ அறை
இதே வளாகத்துலே தான் இருக்கு .. உடனே அங்கே வந்துடுங்க..
You need Oxygen inhalation at least for two or three hours
plus an injection”

அன்று இரவு முழுவதும் நான் மருத்துவக் கட்டிலில் மூக்கில்
ப்ளஸ்டிக் முகமூடியை போட்டுக் கொண்டு படுத்துக் கொண்டிருந்
தேன்.. என் மனைவியும் மகளும் வெது வெதுப்பாக்கப் பட்ட வேறு
அறையில் கதகதப்பாக தூங்கிக் கொண்டிருந்தார்கள்…

எனக்கு எதிர்ப்புறமாக இருந்த கட்டிலில் அதே கிழவர்
ஆயாசமாக படுத்துக் கொண்டு ப்ளாஸ்டிக் மூடி வழியாக என்னைப்
பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்…

எனக்கு தூக்கம் பிடிக்கவில்லை.. ஊசி மருந்தின் வேலையாக
இருக்கலாம்..இருதயம் லப் டப் என்று குதிரை ஓட்டிக் கொண்டிருந்தது..
எனக்கு எங்களை ஏற்றிக்கொண்டு வந்த குதிரையின் ஞாபகம் வந்தது.
அந்த மாதிரி பிராணிகள் பெரிய ஆத்மாக்களாக இருக்க வேண்டும் ..
மனிதன் என்கிற பாவ மூட்டைகளை ஓயாமல் உச்சியிலிருக்கும்
சிவனடிக்கு ஏற்றி விடுவதையே தன் ஜீவனமாக கொண்டு மடிகின்ற
அந்தப் பிறவிகள் மிருக வடிவில் மறைந்திருக்கும் ஞானிகள் என்று
தோன்றியது.

அதற்கு தன் முதுகின் மேலுள்ள பாரத்தைப் பற்றிய ஒரு தெளிவான
உணர்வு இருந்தது…எந்த பாரத்துக்கு எவ்வளவு பலத்தையும் வேகத்
தையும் உபயோகப் படுத்த வேண்டுமென்ற பிரக்ஞை அதற்குள் இயல்
பாக அமைந்திருக்கிறது..

அதன் செயல் பாட்டை கவனித்துப் பார்க்கும் போது நமக்கு நம்
வாழ்க்கையை அதன் பிரச்னைகளை சமாளிக்கும் தெளிவு கிடைக்க
ஏதோ ஒரு வித சாத்தியம் இருக்கும் என்று நினைத்தேன் ..

கௌரிகுண்டிலிருந்து 7 கிலொமீட்டர் ஏறியவுடன் பயணத்தை
நிறுத்தி சிற்றுண்டிக்காக சிறிது நேரம் எங்களை குதிரைக் காரன் இறக்கி விட்டான்.. பாரம் இறங்கியதும் குதிரை இறுக்கம் தளர்ந்து விடுதலையாக முதுகை சிலிர்த்துக் கொண்டு இரண்டு தரம் கனைத்துக் கொண்டது..விடுதலையாக மூச்சு விட்டது..

பிறகு குதிரைக்காரனின் தோல் பையை செல்லமாக இழுத்தது..
”இரு.. இரு..’ என்று பையன் தோள்பையை இறக்கினான். அதிலிருந்து
வெடிகுண்டுகளைப் போல் இருந்த மாவு உருண்டைகளை எடுத்தான்.
பாறை மேல் வைத்து கல்லால் உடைத்து சின்னக் கட்டிகளாக்கி
னான்..கொஞ்சம் தண்ணீரை எடுத்து அதில் தெளித்தான்..பிறகு
கட்டிகளை எடுத்து குதிரைக்கு ஒரு வாய் அவனுக்கு ஒரு வாய் என்று
உண்ண ஆரம்பித்தான்..

அந்த சத்து மாவு கொள் கோதுமை தினைப்பயிறு முட்டைக்கரு என்று
பலதும் கலந்து செய்யப் பட்டதென்று பின்னால் தெரிந்து கொண்டேன்…
குதிரைக்கார பைய்யன் மற்றபடி எந்த சிற்றுண்டியும் சாப்பிட
வில்லை.. எனக்கு வியப்பாக இருந்தது.. ஆனால் அதில் வியப்பதற்கு
ஒன்றுமில்லை..குதிரையின் கூடவே குதிரையைப் போலவே மலை ஏறி
இறங்கும் அவனுக்கும் அந்தப் பிராணிக்கும் ஒரே விதமான ஊட்டம் தான்
தேவையாய் இருந்தது.. போலும் ..அல்லது சகபிராணியையும் தன்னைப்
போல் பாவிக்கிரானோ என்னவோ!

டாக்டர் வரும் சத்தம் கேட்டது..நான் விழித்துக் கொண்டேன்..இல்லை
என் நினைவுகளிலிருந்து மீண்டேன் என்று சொல்லலாம்..டாக்டர் என்
மூக்குக் குழாயை எடுத்து விட்டு என் இதயத்தை சோதித்து விட்டு..
”இப்போது நீங்கள் தைரியமாக போகலாம் ” என்றார்..

நான் அவருக்கு நன்றி தெரிவித்து விட்டு..இன்னும் தூங்கிக் கொண்டி
ருந்த என் மனைவியையும் மகளையும் எழுப்பி கேதாரநாதரை தரிசனம்
செய்வதற்கு அவசரப் படுத்தினேன்..தரிசனம் முடிந்த கையோடு
கீழே இறங்க வேண்டும் ..

க்யூவில் நின்று சந்நிதிக்குள் உள்ளநெகிழ்வுடன் போனபோது
சற்று ஏமாற்றத்துடன் நின்றேன்..வடக்கு கோவில்களில் உள்ள
மூலவர்கள் நம்மூர் கோவில்களைப் போல் அழகுடன் அற்புத ஆகிருதியுடன்
காட்சி அளிப்பதில்லை..மூலவர் குட்டையான பளிங்கு கல்லில் ஆமணக்கு
கொட்டை கண்களுடன் காட்சியளித்துக் கொண்டிருந்தார்..

அவருக்கு பூஜை செய்த பண்டாக்கள் கேதாரநாதரை விட உயரமாக
இருந்தார்கள்..பிராகாரத்தின் வெளிச்சுவற்றில் திருஞான சம்பந்தரின்
சிவனைப் பற்றிய பாடல் பதிக்கப் பட்டிருந்தது.

எப்படியோ கேதாரநாத்துக்கு போய் சிவனின் அருளுக்கு
பாத்திரமாக வேண்டுமென்ற எங்கள் லட்சியம் பூர்த்தியாயிற்று..

நாங்கள் மீண்டும் குதிரை ஏறினோம்..எங்களை ஏற்றி வந்த அதே
குதிரைகள் எங்களுக்காக காத்துக் கொண்டிருந்தன. ஏறுவதை விட
இறங்குவது தான் கடினமானதென்றும் குதிரைகளுக்கு அதிக
எச்சரிக்கை தேவை இருக்குமென்றும் அங்கொருவர் சொன்னார்..
குதிரை எச்சரிக்கையுடன் தான் இறங்கிக் கொண்டிருந்தது…

பாதி மலை இறங்கியபோது எங்களுக்கு கீழேயிருந்து சில
தகவல்கள் வந்தது. இறங்கும் பாதைகளில் சில இடங்களில் நிலசரிவு
ஏற்பட்டு பாறைகள் உருண்டு கிடப்பதாகவும் எச்சரிக்கையுடன்
பயணம் செய்ய வேண்டுமென்றும் அறிவுறுத்தியது..

குதிரைக்கார பைய்யன் பத்திரமாகத் தான் குதிரையை வழி
நடத்தி சென்றான்.. கீழே அடிவாரத்தில் குதிரையை நிறுத்தி
எங்களை இறக்கி விட்டான்..குதிரையோடு சேர்ந்து நாங்களும்
பெருமூச்சு விட்டோம்.. இறங்கி மேலும் நடந்து வந்து கொண்டிருந்த
போது பக்கவாட்டில் பாறைகளின் ஓரமாக ஒரு கூட்டம் கூடி
இருந்தது..

நாங்கள் பரபரப்புடன் நெருங்கிப் போய் என்னவென்று
பார்த்தோம்.. பார்த்தவுடன் அதிர்ச்சியுற்றுப் போனோம்..
ஒரு குதிரையின் பின்னங்கால்களில் ஒரு பாறை விழுந்து கிடந்
தது. அதன் நுரைஈரல் புடைத்துப் போய் முன்னங்கால்கள்
வானைப் பார்த்துக் கொண்டிருந்தன.

”பாவம் நிலச்சரிவில் .பாறை உருண்டு வந்து இளைப்பாறிக்
கொண்டிருந்த குதிரையின் மேல் விழுந்திருச்சி…பரிதாபம்..”
என்று ஜனங்கள் பேசிக் கொண்டார்கள்…

சற்று நேர மௌனத்துக்குப் பின் கண்களில் ஈரத்துடன்

” ஒரு வழியா இந்த பாரம் தூக்கும் பிறவியிலிருந்து குதிரைக்கு
விடுதலை கிடைத்து விட்டது…” என்றாள் மகள்..

” இது விடுதலையா..தெரியவில்லை..விடுதலை இப்படிப்பட்ட
கோரவிபத்தாக இருந்திருக்க வேண்டாம்..மேலும் அந்தக் குதிரை
இப்படிப்பட்ட வாழ்க்கையை சந்தோஷமாக ஏற்றுக் கொண்டு வாழ
வில்லை என்று எப்படி நாம் முடிவுக்கு வர முடியும்? “

என்று சொல்லிவிட்டு மேலும் நடந்தேன்..

மல்லாந்து விழுந்து கிடந்த அந்தக் குதிரையின் வாயில்
இன்னும் தின்னப்படாமல் தொங்கிக் கொண்டிருந்த ஒரு கொத்துப்புல்
எனக்கு வாழ்க்கையின் தீராத பற்றை சொல்லிக் கொண்டிருந்தது.

திண்ணை

மழை பெய்துகொண்டிருந்த பிற்பகலொன்றில் மழைக்காகத் திண்ணையில் ஒதுங்கியிருந்த என்னிடம் பெரியாச்சிதான் அவ்விடயத்தைச் சொன்னார். தூறல் வலுக்கிறதாவெனப் புறங்கையை நீட்டிப் பார்த்துக் கொண்டிருந்தபோது வெற்றிலை, பாக்கு இடித்துக் கொண்டிருந்த பெரியாச்சி சொன்ன விடயம் இலேசான அதிர்வை உண்டாக்கியது என்னில்.

ஊருக்கு வந்தவுடனேயே டீச்சரைப் பற்றி நீண்ட நாட்களுக்குப் பின்னர் கேள்விப்படும் முதற்செய்தியை நல்ல செய்தியில் சேர்த்துக்கொள்வதா, கெட்ட செய்தியில் சேர்த்துக்கொள்வதா எனப்புரியவில்லை. சொன்ன பெரியாச்சியின் முகத்தை நம்பமுடியாமல் ஏறிட்டுப் பார்த்தேன். இறந்த காலங்களனைத்தையும் சுருட்டியெடுத்துச் சுருக்கங்கள் நிறைந்த முகத்தில் எந்த சலனமுமின்றி வெற்றிலை மென்று கொண்டிருந்தார்.

சடசடவென்று மழை திரும்பவும் வலுத்துப் பெய்யலாயிற்று. மழைச் சாறல் திண்ணையின் ஓரங்களில் சேற்றோவியம் வரையலாயிற்று. மழையின் எந்தப் பிரக்ஞையும் அற்று வாலறுந்த நாயொன்று ஓடிக்கொண்டிருந்தது. மாமாவின் வீடு இன்னும் புராணகாலத்து வீடாக, நாட்டு ஓடுகளைச் சுமந்துகொண்டிருந்தது. ஊருக்கே பழம்வீடாக இருப்பதில் மாமா சற்றுப்பெருமையும் கொண்டிருந்தார்.

சிவப்பு, கருப்புப் பூ அலங்காரங்களைக் கொண்ட வெண்சீமெந்துத் தரை எப்பொழுதும் ஒரு குளிர்ச்சியைக் கொண்டிருக்கும். அந்தக் குளிர்மை, மாமாவின் வீடுமுழுக்க, அனல்பறக்கும் கோடை காலத்திலும் ஒரு புகையைப் போலப் படர்ந்திருக்கும். வெளித்திண்ணை மிக அகலமாகவும் நான்கு தூண்களுடனும் இரண்டு அடிக்கும் சிறிது அதிகமான உயரத்துடனுமிருக்கும். அதில்தான் நின்றுகொண்டிருந்தேன்.

இந்த வீட்டைப்பற்றி பெரியாச்சி என் சிறுவயதில் கதை, கதையாகச் சொல்லியிருக்கிறார். முன்னர் பாய் பின்னுவதற்கும், அவித்த நெல் காயப்போடுவதற்கும் பயன்பட்ட திண்ணை இப்பொழுது பெரியாச்சியின் வெற்றிலை இடித்தலையும், மாமாவினுடைய பேரப்பிள்ளைகளின் விளையாட்டுக்களையும் அமைதியாகப் பார்த்தபடியிருக்கிறது.

பெரியாச்சியின் கணவர் கட்டிய வீடு இது. முற்காலங்களில் பக்கத்து ஊர்களிலிருந்து எங்களூர் பெரியாஸ்பத்திரிக்கு மருத்துவத்திற்காக வரும் ஜனங்கள் இரவுப்பொழுதைத் தங்கிச் செல்வதற்காகப் பொதுநோக்கில் இத்திண்ணை கட்டப்பட்டிருந்தது. திண்ணையிலிருந்து பார்த்தால் வீதியைத் தாண்டிப் பரந்த, எப்பொழுதும் வயல்காற்றைச் சுமந்தவண்ணமிருக்கும் வயலும் அதற்கப்பாலுள்ள ஆற்றங்கரை மூங்கில்களும் தெளிவாகத் தெரியும். நான் முன்னர் அதில் பட்டம் விட்டிருக்கிறேன்.

பட்டம் நூலறுந்து போய் வயல்வெளிக்கடுத்து இருந்த பாடசாலைக் கூரையில் சிக்கும், அந்தப் பாடசாலையில்தான் டீச்சர் அந்த நாட்களில் படித்துக் கொடுத்துக் கொண்டிருந்தார். டீச்சர் வீட்டுக்கு வயல்வெளியினூடாக நடந்துபோக வேண்டும். ஐந்தாம் வகுப்புப் பரீட்சை சமயம் பாடத்தில் ஏதோ சந்தேகம் கேட்க, வயல்வரப்பின் ஊடாக மழைக்கால இரவொன்றில் தவளைகள் கத்தக் கத்த, வெளிச்சத்திற்காக காய்ந்த தென்னஞ்சூளை எரித்து அவர் வீட்டுக்கு நான் சென்ற இரவு இன்னும் நினைவில் இடறுகிறது.

டீச்சர் வீடுதான் ஊரிலேயே மிகப்பெரிய தோப்பில் அமைந்த வளவு வீடு. வீட்டைச் சுற்றிலும் அழகிய சமதரைப்புல்வெளி. அழகழகான ரோஜாக்களும், ஓர்க்கிட்களும் பூத்துக்குலுங்கும். தெளிந்த நீரைக் கொண்ட பெருங்கிணறு ஒன்று அவர் வீட்டின் முன்னால் இருந்தமை ஊர் மக்களுக்கும், அவருக்குமிடையிலான நெருக்கத்தை அதிகப்படுத்தியிருந்தது.

ஐந்தாம் வகுப்பின் அரசாங்கப் பரீட்சையில் அவரது வகுப்புப்பிள்ளைகளான நாங்கள் எல்லோரும் சிறப்பாகச் சித்தியெய்தியமை அவரை மிகவும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியிருந்தது. மாணவர்களெல்லோரையும் வீட்டுக்கு வரவழைத்து முற்றத்தில் பாய் விரித்து கேக், பிஸ்கட், இனிப்பு தந்து உபசரித்து மகிழ்ந்தார்.

டீச்சரின் கணவரை நான் பார்த்திருக்கிறேன். டீச்சருக்கு நேர்மாறு அவர். டீச்சரின் புன்னகை முகம் அவருக்கு எள்ளளவும் வாய்க்கவில்லை. எப்பொழுதும் ஏதோ கடுப்பானதொன்றை விழுங்கிவிட்ட மாதிரியொரு பார்வை, பிதுங்கிய விழிகளில் மிச்சமிருக்கும். அவர் வாய்விட்டுச் சிரித்து யாராவது பார்த்திருந்தால் உலகின் எட்டாவது அதிசயம் அதுவெனச் சொல்லலாம்.

மழையின் துளியொன்று ஓட்டிலிருந்த ஓட்டையொன்றிலிருந்து தவறி என் மேல் விழுந்து தற்கொலை செய்துகொண்டது. எதற்கோ வெளியே வந்த மாமா என்னைக் கண்டுவிட்டார்.

“ஐயோ..உள்ளே வாங்க மகன்..தெரியாத ஊடு மாதிரி வெளியே நின்னுக்கிட்டு..மழையில நல்லா நனஞ்சுட்டீங்களா? மருமகன் வந்திருக்கிற விஷயத்தை நீங்களாவது சொல்ல வாணாமா?”

பெரியாச்சியை லேசாகக் கடிந்துகொண்டார் மாமா.

நான் சப்பாத்தைக் கழற்றிவிட்டு உள்ளே போக முற்பட்டேன்.அந்தத் தரையின் குளிர்ச்சி எனக்கு வேண்டும். நீண்ட பிரயாணக் களைப்பினைக் கொண்ட கால்கள் அந்தக் குளிர்ச்சிக்கு ஏங்கின.

“பரவாயில்ல மகன்.அப்படியே வாங்க..மழை வரணும் போல இருக்கு..உங்கள இங்கே கூட்டி வர.”

மாமியின் குரலில் ஒளிந்திருந்த கிண்டலோடு நானும் அப்படியே உள்நுழைந்தேன்.

பெரியாச்சி இன்னும் திண்ணையிலேயே அமர்ந்திருந்தார். மழையும், திண்ணைகளும் அவருக்குத் தோழிகள் போலும். அவரது பொக்கை வாய், வெற்றிலையை மெல்லுவதைத் தூரத்திலிருந்து பார்க்கையில் மழையோடும், திண்ணையோடும் அவர் கதைத்துக் கொண்டிருப்பது போலவே இருந்தது. இடைக்கிடையே சிவந்த வெற்றிலைச் சாற்றினை தெருவில் வழிந்தோடும் மழை நீரில் துப்புவதானது மழைத் தோழி மீதான செல்லக் கோபத்தை வெளிப்படுத்துவதாகப்பட்டது எனக்கு.

ஆனால் மழை மீது அவருக்கென்ன கோபமிருக்கமுடியும்? இந்தத் தொண்ணூறு வருட கால வாழ்க்கையில் எத்தனை மழையைப் பார்த்திருப்பார்? அன்றைய காலம் முதல் அவர் பார்த்த ஒவ்வொரு துளிக்கும் ஒவ்வொரு பெயரிட்டிருந்தாலும் கூட எத்தனை சினேகிதங்கள் அவருக்கிப்போதிருந்திருக்கும்?

மாமா சாய்மனைக் கதிரையில் உட்கார்ந்திருந்தார். பழங்காலத்தை மரச்சட்டங்களில் பிணைத்துக் கொண்டுவந்ததைப் போல வீட்டுக்கூடத்தின் வலது மூலையில் அது அன்றையகாலம் தொட்டு இருந்து வருகிறது. புதிதாகத் திரும்பவும் பின்னியிருந்தார்கள். மதிய சாப்பாட்டிற்குப்பின்னரான பகல்தூக்கம் மாமாவுக்கு அதில்தான் என்பது ஞாபகமிருக்கிறது. சிறுவயதில் பார்த்திருக்கிறேன்.எந்தவொரு அசைவுமற்று, சாய்த்து உட்காரவைக்கப்பட்ட சிலை மாதிரி தூங்கிக் கொண்டிருப்பார்.

அப்பொழுதுகளில் நானும், என் வயதொத்த சிறுவர்களும் தூங்கும் இவர் மூக்குக்கருகில் மிளகாய்த் தூளை விசிறிவிட்டு ஒளிவோம். பெரும் தும்மல்களோடு எழுந்து ஒன்றும் புரியாமல் மிக நீண்ட நேரம் விழிகளைச் சிமிட்டிச் சிமிட்டி விழிப்பார். மாட்டிக் கொண்ட ஒரு நாளில் இடது காதைச் செமத்தியாகத் திருகிவிட்டார்.

இப்பொழுது தூங்கவில்லை அவர். நான் வரமுன்பே தூங்கியெழுந்திருந்திருக்க வேண்டும். இல்லாவிடில் இருபது வருடத்திற்கு முன்னைய மிளகாய்த் தூள் இப்பொழுது அவர் மூளையில் உறைத்திருக்கவேண்டும். மழைக்கு இதமானதாக மாமி கோப்பி தந்தார்.

“மகன் எங்கட ஊட்டுக்கெல்லாம் வரணுமெண்டா இப்படித்தான் மழை பெய்யணும் போல”

“அப்படியில்ல மாமி. சரியான வேலை. சனி, ஞாயிறு லீவு எண்டாலும் சனிக்கெழம விடிய முந்தி ஊருக்கு வர பஸ் எடுத்தா, பாருங்க எத்தனை மணிக்கு வந்து சேர்றதுன்னு”.

கொழும்பிலிருந்து பஸ் ஏறும்போது மழையிருக்கவில்லை. இடையில் தாண்டி வந்த எந்தெந்த ஊர்களில் மழை பெய்துகொண்டிருந்தது எனவும் தெரியாதவாறு பஸ் இருக்கையில் அமர்ந்து டிக்கட் எடுத்ததுமே தூங்கிவிட்டிருந்தவனை பழகிய கண்டக்டர்தான் எழுப்பி, இறக்கி விட்டிருந்தார். பஸ் செல்லும் தெருவோரத்து வீடென்பதனால் மழை தொப்பலாக நனைத்துவிடும் முன்பு மாமா வீட்டுத் திண்ணையில் ஒதுங்கி விட்டிருந்தேன்.

பெரியாச்சிக்கு இந்த விடயம் எப்படித்தெரிந்திருக்கும்? யார் சொல்லியிருப்பார்கள்? உலகத்தின் ஓசைகளெல்லாம் கேட்டு ஓய்ந்த பெரியாச்சியின் செவிகள் இப்பொழுது வேறு ஓசைகளுக்கு ஒத்துழைப்பதில்லை. காலம் அவரது காதுகளுக்குப் பூட்டு மாட்டி சாவியைத் தொலைத்திருந்தது. ஏதாவது அவருக்கு விளக்கிச் சொல்லவேண்டுமென்றால் கூட செய்கை மொழி மட்டுமே உதவும் நிலையில் அவரது காதுகள் இருந்தன.

இந்நிலையில் டீச்சர் பற்றிய விபரம் எப்படித் தெரிந்திருக்கக் கூடும்? ஒருவேளை பொய்யாக இருக்குமோ? யாராவது வெற்றிலை ஒரு வாய்க்கு வாங்கவந்தவர்கள் சொன்னதை பெரியாச்சி தப்பாகப் புரிந்துகொண்டிருப்பாரோ? டீச்சரின் ஐம்பது வயதுகளைத் தாண்டி, இருபத்தாறு வருடத் திருமண வாழ்விற்குப் பிறகு அவர் எதிர்பார்த்திருந்த விவாகரத்துக் கிடைப்பது என்பது கிராமங்களில் இன்னும் அதிர்ச்சிக்கும், சலனத்துக்கும் உரிய விடயமாகவேயிருந்தது.

டீச்சர் எனக்கு எனது இரண்டாம் வகுப்பிலேயே அறிமுகமானார். மடக்கக் கூடியதான சிறு குடையும், கைப்பையும் எப்பொழுதும் அவர் கூடவே வரும். காலைவேளைகளில் எப்பொழுதும் சிவந்திருக்கும் விழிகளிரண்டும் அவருக்குச் சொந்தமானவையாக இருந்தன. இரண்டாம் பாடவேளையின் போது தினமும் ஒரு இளமஞ்சள் நிற மாத்திரையை கைப்பையில் இருக்கும் சிறுபோத்தலிலுள்ள நீரைக் கொண்டு குடித்துக் கொள்வார்.

அன்றொருநாள் அப்படித்தான். மாத்திரையை வாயில் போட்டுக்கொண்டவர் தண்ணீர் கொண்டு வர மறந்திருந்தார். ஒரு மாணவனை அனுப்பி வெந்நீர் கொண்டுவரச் சொன்னார். அவனோ ஏதுமறியாதவனாக ஒரு பிளாஸ்டிக் கோப்பையில் கொதிக்கக் கொதிக்க வெந்நீர் கொண்டுவந்து கொடுக்க, அப்படியே வாயிலூற்றிக் கொண்ட டீச்சருக்கு புரையேறி, வாயெல்லாம் வெந்துவிட்டது. டீச்சர் கைக்குட்டையால் வாய்பொத்திக் கொண்டு மௌனமாக அழுததை அன்றுதான் கண்டோம். நாங்களெல்லோரும் பதறிவிட்டோம். அந்த மாணவனும் பயத்தில் அழுததைக் கண்டவர் ‘எனக்காக வருத்தப்பட நீங்களாவது இருக்கீங்களே’ எனச் சொல்லி அணைத்துக் கொண்டார்.

“மாமி,பெரியாச்சி சொல்வது உண்மையா?”

“என்ன மகன்?”

“இல்ல! டீச்சர்…?”

“ஓ மகன்..அவங்க விரும்பின விடுதலை கிடைச்சிட்டுது. எவ்ளோ காலத்துக்குத் தான் தன்ட புருஷன் இன்னொருத்தியோட குடும்பம் நடத்துறதப் பொறுத்துக்கொண்டிருக்குறது? அவ இருபது வருஷத்துக்கும் மேல பொறுத்துப் பார்த்தாச்சுதானே…?”

“இனி எதுக்கு 20 வருஷம் காத்திருக்கணும்? இந்த விஷயம் தெரிய வந்த உடனே டிவோர்ஸ் கேட்டிருக்கலாமே? சும்மா அவங்க வாழ்க்கையையும் வீணாக்கிக் கொண்டு…”

“அப்டியில்ல மகன். நாலு பொம்புளப் புள்ளைகள வச்சிக்கொண்டு, இதுல தகப்பனும் இல்லையெண்டா அதுகளிண்ட எதிர்காலத்துல எவ்வளவு சிக்கல் வருமெண்டு டீச்சர் யோசிச்சிருப்பாங்க. இப்ப எல்லோரையும் நல்லபடியாக் கரை சேர்த்திட்ட பிறகு அவங்க தன்னோட விருப்பத்தை நிறைவேத்திட்டிருக்காங்க. இனி யாரையும் அவ எதிர்பார்த்துட்டிருக்கத் தேவையில்ல. பென்ஷன் காசு வருது. புள்ளைகளுக்கு ட்யூஷன் எடுக்குறதாலக் காசு வருது. பின்னக் காலத்துக்கு அது போதும்தானே “

மாமா சொன்னதற்கு எந்தவொரு பதிலும் சொல்லத் தோன்றவில்லை.

டீச்சரின் இருபது வருடப் பொறுமையின் பலனாக அவர் எதிர்பார்த்திருந்த விடுதலை கிடைத்திருக்கிறது. டீச்சரைப் பார்க்கவேண்டும் போலிருந்தது. அன்றைய காலத்தில் அத்தனை கவலைகளையும் நெஞ்சுக்குள் புதைத்துக் கலங்கிய செவ்விழிகளோடு உலவும் டீச்சரின் விழிகள் இப்பொழுது பிரகாசமாக மின்னிக்கொண்டிருக்கக் கூடும்.

மழை விட்டிருந்தது. மாமா, மாமியிடம் சொல்லிக்கொண்டு வெளியில் வந்தேன். திண்ணையின் மூலையில் துளித்துளியாய் வாளியில் சேர்ந்திருந்த மழைநீரைக் கொண்டு, பெரியாச்சி திண்ணையை முழுமையாகக் கழுவி விட்டிருந்தார். மாமாவின் இளவயதில் காணாமல் போன தன் கணவரை எதிர்பார்த்து, நாளையும் பெரியாச்சி இதில் உட்கார்ந்து காத்திருக்கக் கூடும்.

நான், பிரமிள், விசிறிசாமியார்……13

எனக்குத் தெரிந்தவரை பிரமிளுக்கு எந்தக் கெட்ட பழக்கமும் இல்லை. ஆனால் அவருடன் பழகிய இளமை கால நண்பர்கள், அவர் கஞ்சா அடிப்பார் என்று என்னிடம் குறிப்பிட்டிருக்கிறார்கள். என்னால் இதை நம்ப முடியாது. நான் பழகியவரை அவர் கஞ்சாவும் சரி, எந்த மதுபானங்களும் குடிப்பவரில்லை. அடிக்கடி டீ குடிப்பார். தானே சமையல் செய்து கொள்வார். இன்னொரு பழக்கம். அவர் எல்லாரிடமும் பணம் வாங்க மாட்டார். யாரிடம் கேட்க வேண்டுமோ அவரிடம்தான் கேட்பார். அதேபோல் என்ன தேவையோ அதை மட்டும் கேட்பார்.
ஆரம்ப காலத்தில் எனக்கு வங்கியில் அதிக சம்பளம் இல்லை. இருந்தாலும் என்னிடம் ஒரு குறிப்பிட்ட தொகைக்குமேல் கேட்க மாட்டார். சிலசமயம் கேட்காமல் என்னைப் பார்க்கக்கூட வருவார். அவரைப்போல் நடக்க யாராலும் முடியாது. பல இடங்களுக்கு பெரும்பாலும் அவர் நடந்தே செல்வார். அவர் வயதில் கையெழுத்து தெளிவாக இருக்கும். ”ஆச்சரியமாக இருக்கிறது. உங்கள் கையெழுத்து பிரமாதமாக இருக்கிறதே,” என்பேன். ”நீர் கண்ணுப் போடாதீர்,” என்பார்.
இன்று பிரமிளைப் புகழ்பவர்கள் ஒரு காலத்தில் அவர் கிட்டவே நெருங்க முடியாது. யாரையாவது அவருக்குப் பிடிக்கவில்லை என்றால் அவர்கள் தொலைந்தார்கள். எழுதி எழுதியே அவர்களைத் தொலைத்துக் கட்டிவிடுவார். அவரை யாரும் திட்ட முடியாது. ஆரம்பத்தில் அவர் தங்குவதற்கு இடம், சாப்பிட தேவையான சாப்பாடு என்று ஏற்பாடு செய்தால், அவர் தொடர்ந்து எதாவது செய்ய முடியும் என்று எனக்குத் தோன்றியது. இதை ஆரம்ப காலத்தில் அவருக்கு உதவி செய்த டேவிட் சந்திரசேகரிடம் குறிப்பிட்டேன். ”நாலைந்து பேர்கள் சேர்ந்தால், அவர் தேவையை நாம் பூர்த்தி செய்யலாம்,” என்று சொன்னேன். ”நான் உதவி செய்கிறேன். நாலைந்து பேர்களைச் சேர்க்க முடியாது,” என்று டேவிட் கூறிவிட்டார்.
நான் நவீன விருட்சம் என்ற பத்திரிகை தொடங்கப் போகிறேன் என்பதை அறிந்து என் அப்பாவிடம், ”சும்மா இருக்கச் சொல்லுங்கள்,” என்றவர்தான் பிரமிள். அதே பிரமிள் பின்னால் ஒரு கட்டத்தில் விருட்சம் இதழை நிறுத்த வேண்டும் என்று நினைத்தபோது, என் எண்ணத்தை மாற்றியவர்.
ஆரம்பத்தில் விருட்சத்திற்கு பிரமிள் கொடுத்த படைப்புகள் எல்லாம் அரசியல். ஒருமுறை அவர் நீண்ட கவிதை ஒன்றை விருட்சத்திற்கு அனுப்பியிருந்தார். அது சுந்தர ராமசாமியின் கவிதையைக் கிண்டல் செய்து எழுதப்பட்ட ஒன்று. நான் பிரசுரம் செய்யவில்லை. சங்கடமாக இருந்தது. அவர் கொடுத்த இன்னொரு கவிதை வன்முறை. கவிதை வாசிப்பவரை நோக்கி கவிதை நகரும். ”இதைப் படிப்பவர்கள் டிஸ்டர்பு ஆகிவிடுவார்கள்,” என்றேன். ”மேலும் எனக்கே இக்கவிதையைப் படித்தால் ராத்திரி தூக்கம் வராமல் போய்விடும்,” என்றேன். பிடித்துக்கொண்டார் பிரமிள். அவர் கவிதையை வாசித்துவிட்டு நான் தூங்காமல் போனதைப் பற்றி எல்லோரிடமும் சொல்லியிருக்கிறார்.

மரமாகி நின்ற மரம்
பச்சையம் நீர்த்து உதிர்ந்துகொண்டிருக்கும்
இலையொன்றினை
முதுகில் சுமந்தபடி கீழிறங்கிக்கொண்டிருக்கும்
காற்றுக்கு
உச்சிக்கிளையில் தரையென இறங்கி
பின் கிளையென உணர்ந்து
தரைதொட கிளை படரும்
மழை நீருக்கு
மலைகளென நினைத்து கணுக்களையும்
குகைகளென பொந்துகளையும்
தாண்டி ஊர்ந்து பயணித்த
எறும்புக்கு
வண்ணங்கள் பிடிபடாமல்
பாளங்கள் பிளந்த மரப்பட்டையின்
உள்ளிருந்து எட்டிபார்க்கும்
கெவுளிக்கு
ஓர் இணைப்பறவைகளின் கொஞ்சலில்
முறிந்த முந்தைய காதலை
கடன்வாங்கிக் கொண்டிருந்த
எனக்கு என
எல்லாருக்கும் மரமாகி நிற்கிறது
இந்த மரம் வீட்டுவாசலில் !