ஏழாம் அறிவு

 
     
சாவதற்கு
பயமில்லாவிட்டாலும்
வருத்தமாக
இருக்கிறது.
புலன்கள் ஐந்தைக் கொடுத்து

ஒரு புல்லரிக்கும் உலகத்தை

நிரந்தரம் போல் காட்சியாக்கிப்
பின்
கண்களை மூடி விடக்
காத்திருக்கும்
கடவுளிடம் கோபம்
தடுத்தாலும் வருகிறது..
ஒரு வேளை ஆறுக்கும்
மேல் ஏழாவதாக
அறிவொன்றைக்
கொடுக்கமாட்டானா?
இறந்தவுடன் எனக்கே
சொந்தமான
எழிலுலகம் இன்னொன்றைக்
கண்டடைந்து
செத்தாலும் சாகாமல்
அங்கே
சலிக்கும் வரை
வாழ்ந்திருக்க!!!

இரவுக்குள் ஒரு இழப்பு

இங்கே குளிர் காலம். வெளிநாட்டுக் குளிரை முதல் முதலாக

அனுபவிக்கிறேன். இரவு தூக்கம் பிடிக்கவில்லை. புரண்டு புரண்டு

படுத்துக் கொண்டிருந்தேன். கண்ணுக்கும் மூளைக்கும் இடையிலுள்ள

பிரதேசத்தில் என்னென்னவோ காட்சிகள் தோன்றி மறைகின்றன. அது

கனவாகவும் இல்லாமல் உள்நினைவின் சிதறலாகவும் இல்லாமல்

குழம்பி இருக்கிறது.

திடீரென்று ஏழுகடல் தாண்டி..இடையிலுள்ள எவ்வளவோ தேசங்களைத்

தாண்டி போஸ்டல் காலனி முதல் தெருவில் ஆறாம் நம்பர் வீட்டின் முதல்

அடுக்ககத்தில் இருக்கிறேன். என் இனிய நண்பர் சந்திரமௌலி கூட

உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறார். எங்கே இவ்வளவு தூரம் ? ” என்று

கேட்கிறார். ” சும்மாத் தான் ..” என்கிறேன். ” எனக்கு ஆபீஸுக்கு

நேரமாகி விட்டது.. இப்போது இலக்கியம் பேசமுடியாது.. அதுவும் என்

வாழ்க்கை மற்றவர்கள் போலில்லை.. நான் ஆபீஸிக்கு ரயிலில் சீர்காழிக்கு

போக வேண்டும் ” என்கிறார்…” நானும் வருகிறேன் பேசிக் கொண்டே

போகலாம்..” என்கிறேன். ” சரி ஆனால் எனக்கு நேரமாகி விட்டது..

நான் போய்க் கொண்டே இருக்கிறேன்.. பின்னால் வாருங்கள்..”என்கிறார்.

அவர் போய் விடுகிறார். நான் குளித்து விட்டு உடை அணிந்து கொண்டு

என் காலணியைத் தேடுகிறேன். இத்தனைக்கும் அது சின்ன அறை தான்

என் காலணி தென்படவேயில்லை.. பெஞ்சு நாற்காலி மேஜை அத்தனை

அடியிலும் தேடுகிறேன். மணி ஆகிக் கொண்டிருக்கிறது. காலணியைக்

காணவில்லை.. உள்ளே சமையல் கட்டில் சந்திரமௌலியின் மனைவி

இருக்கிறார்கள். அவர்களிடமும் தயங்கி இதைச் சொல்லுகிறேன் அவர்கள்

உடனே வந்து அறையிலுள்ள அட்டாளியின் மேலேறி அங்கிருந்து என்

காலணியை எடுத்துக் கொடுக்கிறார்கள். ” அது எப்படி அங்கே போச்சு? “

புதிராக இருக்கிறது.. திடீரென்று சிரிப்பொலி கேட்கிறது என் பின்னாலிருந்து…. அறையில் ஐராவதமும் சீனிவாஸனும் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள்.. என்னைப் பார்த்து சிரிப்பதற்காகவே

அவர்கள் அங்கு வந்து உட்கார்ந்திருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.

நான் காலணியை அணிந்து கொண்டு வேகமாக வெளியேறுகிறேன்.

அப்போது என் கைப் பேசி ஒலிக்கிறது. காதில் வைத்து ” யாரென்று

கேட்கிறேன்? ” மௌலி ” நான் தான் .. இப்போது சீர்காழியில் இறங்கி

பஸ்ஸில் ஆபீஸுக்குப் போய்க் கொண்டிருக்கிறேன்..நீங்கள் வந்தால் கூட

என்னால் பேச முடியாது..என் மண்டை முழுக்க லெட்ஜரும் கணக்கும்

ஆபீஸ் கடுதாசிகளும் தான் இருக்கின்றன..தவிர ஆபிஸில் மற்றவர்கள்

பேசும் கோள்கள் தான் கேட்கின்றன…இலக்கியம் இங்கே செல்லாது…”

என்கிறார்..

” என் காலணி சதி செய்து விட்டது .. உங்களை சந்திக்க வேண்டுமென்று

தான் ஓடி வந்தேன்.. வாழ்க்கையில் நினைத்தது நிறைவேறாமல் எல்

லோருக்கும் ஏதாவது ஒரு பிரச்னை..இதில் கொடுத்து வைத்தவர்கள்

ஐராவதமும் சீனிவாஸனும் தான்.. அவர்கள் தான் சிரித்துக்

கொண்டே வாழ்க்கையை கழிக்க முடிகிறது..” என்றேன்..

திடீரென்று மூளை ஊமையாகி கண்ணிமைகள் படபடத்தது.

நான் விழித்த போது கதகதப்பான கட்டிலில் ஆனாலும் எனக்கு

ஒவ்வாத சூழலில் விழித்துக் கொண்டிருந்தேன்..எனக்கும் மௌலிக்கும்

இடையே ஏராளமான தூரம் இருந்தது!!

ஒரு கொத்துப் புல்

பூமியிலிருந்து சுமார் 12500 அடி உயரத்தில் யாத்ரீகர்களுக்காக
நவீன வசதிகளுடன் அமைக்கப் பட்டிருந்த சிற்றுண்டி சாலையில்
நான் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். என்னுடன் என் மனைவியும்
மகளும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்……

கேதார்நாத்தின் உச்சிக்கு வந்தடைய கௌரிகுண்ட் என்ற
ஸ்தலத்திலிருந்து 14 கிலோ மீட்டர் குட்டைக் குதிரையின் மேல்
ஆடி அல்லாடி இரண்டு மணி நேரம் சவாரி செய்தாக வேண்டியிருந்
தது. அந்த அனுபவ அவஸ்தையில் உடம்பும் மனசும் ஒரு வித்யா
சமான வெளியில் பரபரத்துக் கொண்டிருந்தது.

சாப்பிட்டுக் கொண்டிருந்த எங்களுக்கு குதிரை சவாரியை நினைத்
துக் கொண்ட போது திடீர் திடீரென்று சிரிப்பு வந்தது.. முன்னும்
பின்னுமாகவும் பக்க வாட்டிலும் எதிர்பாராத விதமாக ஆடிக் குலுங்கி
கொண்டு வந்த அந்த வித்யாசமான பயணம் எங்களுக்குள்
ஒரு குழந்தையின் சந்தோஷத்தை மலர்த்திக் கொண்டிருந்தது…

” இருந்தாலும் அந்தக் குதிரையை நெனைச்சா ரொம்ப பரிதாமா
இருக்கு அப்பா! ” என்றாள் மகள்..

‘ ஆமாம்…குதிரைகளுக்குக் கூட ஏன் எல்லா ஜீவராசிகளுக்குமே
ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட ஒரு வாழ்க்கை இருக்குன்னு
நெனைக்கிறேன்…ஒவ்வொன்றும் அது பொறக்கர இடத்தை
பொறுத்துத் தான் வாழ்க்கை சுகமாகவோ துக்ககரமாகவொ அமைகி
றது…..”” என்றேன்…

” நினைத்துக் கொண்டால் நம்ப முடியாமல் இருக்கிறது…
பார்ப்பதற்கு குட்டையாக பெரிய ஆகிருதி இல்லாமல் இருக்கிற
குதிரை நம்ப பாரத்தை அனாயாசமாக தூக்கிக் கொண்டு கல்லும்
கரடும் வழுக்கலுமாக இருக்கிற மேட்டுப் பாதையில் ஒரு இடத்தில்
கூட கால் இடறாமல் ஒரு பொறுப்புள்ள சிநேகிதன் போல்
உச்சி வரை ஏற்றி வந்து பத்திரமாக இறக்கி விடுகிறதே…
அந்த ஜீவனுக்கு நாம் எவ்வளவு நன்றிக்கடன் பட வேண்டும் ! “
என்றாள் மகள் உணர்ச்சி வசப்பட்டு..

” நிச்சயமாக ” என்றேன்…

எங்களுக்கு எதிரே ஒரு கிழவர் தனியாக உட்கார்ந்து கொண்டு
டீ சாப்பிட்டுக் கொண்டிருந்தார்….அவர் கூட வந்தவர்கள் பக்கத்தில்
எங்காவது இருக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்…

திடீரென்று அந்தக் கிழவர் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு
மூச்சு விட முடியாமல் வாயை அகலமாக திறந்து கொண்டு ஏதோ
ஒரு விதமாக குரல் எழுப்பினார்.. நான் பதறிப் போய் எழுந்து
நின்றேன்.. அங்கே சிற்றுண்டி பரிமாறிக் கொண்டிருந்த பணியாள்
அவர் அவஸ்தைப் படுவதைக் கண்டவுடன் ஓடி வந்து தாங்கிப்
பிடித்தான் .. கூட இருந்த இன்னொரு ஆளிடம் ஏதோ ஹிந்தியில்
கத்தினான்..அந்தப் பையன் உடனே எங்கோ வெளியே ஓடினான்..

ஐந்து நிமிஷத்துக்குள் ஒரு டாக்டர் கையில் மருத்துவ சாதனங்
களுடன் முதல் உதவிக்கு ஓடிவந்தார்….நாடித்துடிப்பையும் இதயத்
தையும் சோதனை செய்து விட்டு கிழவரின் நரம்பில் ஊசி போட்டார்..
அவர் மூக்கில் ஒரு ப்ளாஸ்டிக் மூடியை பொறுத்தி அடியில்
இணைத்திருந்த குழாய் மூலம் கொண்டு வந்திருந்த
சிறிய ஆக்ஸிஜன் சாதனத்தை இணைத்தார்..

இப்போது கிழவர் மெதுவாக சகஜ நிலைமைக்கு திரும்பிக்
கொண்டிருந்தார்.

அப்போது தான் அந்தக் கிழவரின் கூட வந்திருந்த அவருடைய
வயதான மனைவி அங்கே வந்து சேர்ந்தாள்..அவள் அற்பசங்கைக்கு
போயிருந்தாள் என்று தெரிந்தது.. .தன் கணவனின் நிலைமையை
கண்ட போது அவளுக்கு உடம்பெல்லாம் பதறியது.. உதடு நடுங்கி
கண்ணீர் தளும்பியது.. அவள் டாக்டரை கை கூப்பி நன்றி தெரிவித்துக்
கொண்டாள்.. அவளுக்கு பாஷை தெரியவில்லை..

“இந்த வயதில் இவ்வளவு கஷ்டமான பயணம் பண்ணி இந்த உச்சிக்கு
வரணுமா?.. ” என்று வருத்தத்துடன் பெருமூச்சு விட்டாள் என் மனைவி..

” ஏன் எனக்கும் அந்தக் கிழவர் வயது தான் ..எனக்கும் தான்..
அது நேரலாம்…” என்றேன்..

மனைவி என் வாயை பொத்தினாள்

கிழவருக்கு வைத்தியம் செய்து முடித்து விட்டு அந்த
டாக்டர் எங்கள் மேஜைக்க்கு அருகில் கடந்து போய்க் கொண்டிருந்
தார்… ” நான் தேங்க் யூ டாக்டர் என்றேன்…

அவர் என்னைப் பார்த்து விட்டு சற்று நின்றார்..” அவருக்கு வேறெ..
பிரச்னையில்லை. இந்த உயரத்துலே ப்ராணவாயு அடர்த்தி குறைவா
இருக்கும்.. அதனாலெ சில பேருக்கு இங்கே ஆக்ஸிஜன் போதாம
மூச்சு முட்டும் ..அதுக்கு தகுந்த முன்னெச்சரிக்கை எடுத்துக்கிறது
மிகவும் அவசியம்..’ என்று ஆங்கிலத்தில் சொன்னார்..

அதே தொடர்ச்சியில் ” ஸார்.. நீங்களும் வயசானவரா இருக்கீங்க..
எதுக்கும் உங்களையும் சோதனை பண்ணி பாத்துடறேன்..’ என்றார்..

சோதனை செய்யும் போது மனைவி கவலையுடன்
அவர் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள்

அவள் கவலையை ஊர்ஜிதம் செய்வது போல்..டாக்டர் ” அடடா..
உங்களுக்கு ஆஸ்த்துமா உண்டா..? உங்க நுரையீரல்லெ காத்து
சராசரி அளவுக்கும் கம்மியா தான் இப்போ போயிக்கிட்டிருக்கு..
மூச்சுத் திணறல் எப்ப வேணா வரலாம்.. என்னுடைய மருத்துவ அறை
இதே வளாகத்துலே தான் இருக்கு .. உடனே அங்கே வந்துடுங்க..
You need Oxygen inhalation at least for two or three hours
plus an injection”

அன்று இரவு முழுவதும் நான் மருத்துவக் கட்டிலில் மூக்கில்
ப்ளஸ்டிக் முகமூடியை போட்டுக் கொண்டு படுத்துக் கொண்டிருந்
தேன்.. என் மனைவியும் மகளும் வெது வெதுப்பாக்கப் பட்ட வேறு
அறையில் கதகதப்பாக தூங்கிக் கொண்டிருந்தார்கள்…

எனக்கு எதிர்ப்புறமாக இருந்த கட்டிலில் அதே கிழவர்
ஆயாசமாக படுத்துக் கொண்டு ப்ளாஸ்டிக் மூடி வழியாக என்னைப்
பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்…

எனக்கு தூக்கம் பிடிக்கவில்லை.. ஊசி மருந்தின் வேலையாக
இருக்கலாம்..இருதயம் லப் டப் என்று குதிரை ஓட்டிக் கொண்டிருந்தது..
எனக்கு எங்களை ஏற்றிக்கொண்டு வந்த குதிரையின் ஞாபகம் வந்தது.
அந்த மாதிரி பிராணிகள் பெரிய ஆத்மாக்களாக இருக்க வேண்டும் ..
மனிதன் என்கிற பாவ மூட்டைகளை ஓயாமல் உச்சியிலிருக்கும்
சிவனடிக்கு ஏற்றி விடுவதையே தன் ஜீவனமாக கொண்டு மடிகின்ற
அந்தப் பிறவிகள் மிருக வடிவில் மறைந்திருக்கும் ஞானிகள் என்று
தோன்றியது.

அதற்கு தன் முதுகின் மேலுள்ள பாரத்தைப் பற்றிய ஒரு தெளிவான
உணர்வு இருந்தது…எந்த பாரத்துக்கு எவ்வளவு பலத்தையும் வேகத்
தையும் உபயோகப் படுத்த வேண்டுமென்ற பிரக்ஞை அதற்குள் இயல்
பாக அமைந்திருக்கிறது..

அதன் செயல் பாட்டை கவனித்துப் பார்க்கும் போது நமக்கு நம்
வாழ்க்கையை அதன் பிரச்னைகளை சமாளிக்கும் தெளிவு கிடைக்க
ஏதோ ஒரு வித சாத்தியம் இருக்கும் என்று நினைத்தேன் ..

கௌரிகுண்டிலிருந்து 7 கிலொமீட்டர் ஏறியவுடன் பயணத்தை
நிறுத்தி சிற்றுண்டிக்காக சிறிது நேரம் எங்களை குதிரைக் காரன் இறக்கி விட்டான்.. பாரம் இறங்கியதும் குதிரை இறுக்கம் தளர்ந்து விடுதலையாக முதுகை சிலிர்த்துக் கொண்டு இரண்டு தரம் கனைத்துக் கொண்டது..விடுதலையாக மூச்சு விட்டது..

பிறகு குதிரைக்காரனின் தோல் பையை செல்லமாக இழுத்தது..
”இரு.. இரு..’ என்று பையன் தோள்பையை இறக்கினான். அதிலிருந்து
வெடிகுண்டுகளைப் போல் இருந்த மாவு உருண்டைகளை எடுத்தான்.
பாறை மேல் வைத்து கல்லால் உடைத்து சின்னக் கட்டிகளாக்கி
னான்..கொஞ்சம் தண்ணீரை எடுத்து அதில் தெளித்தான்..பிறகு
கட்டிகளை எடுத்து குதிரைக்கு ஒரு வாய் அவனுக்கு ஒரு வாய் என்று
உண்ண ஆரம்பித்தான்..

அந்த சத்து மாவு கொள் கோதுமை தினைப்பயிறு முட்டைக்கரு என்று
பலதும் கலந்து செய்யப் பட்டதென்று பின்னால் தெரிந்து கொண்டேன்…
குதிரைக்கார பைய்யன் மற்றபடி எந்த சிற்றுண்டியும் சாப்பிட
வில்லை.. எனக்கு வியப்பாக இருந்தது.. ஆனால் அதில் வியப்பதற்கு
ஒன்றுமில்லை..குதிரையின் கூடவே குதிரையைப் போலவே மலை ஏறி
இறங்கும் அவனுக்கும் அந்தப் பிராணிக்கும் ஒரே விதமான ஊட்டம் தான்
தேவையாய் இருந்தது.. போலும் ..அல்லது சகபிராணியையும் தன்னைப்
போல் பாவிக்கிரானோ என்னவோ!

டாக்டர் வரும் சத்தம் கேட்டது..நான் விழித்துக் கொண்டேன்..இல்லை
என் நினைவுகளிலிருந்து மீண்டேன் என்று சொல்லலாம்..டாக்டர் என்
மூக்குக் குழாயை எடுத்து விட்டு என் இதயத்தை சோதித்து விட்டு..
”இப்போது நீங்கள் தைரியமாக போகலாம் ” என்றார்..

நான் அவருக்கு நன்றி தெரிவித்து விட்டு..இன்னும் தூங்கிக் கொண்டி
ருந்த என் மனைவியையும் மகளையும் எழுப்பி கேதாரநாதரை தரிசனம்
செய்வதற்கு அவசரப் படுத்தினேன்..தரிசனம் முடிந்த கையோடு
கீழே இறங்க வேண்டும் ..

க்யூவில் நின்று சந்நிதிக்குள் உள்ளநெகிழ்வுடன் போனபோது
சற்று ஏமாற்றத்துடன் நின்றேன்..வடக்கு கோவில்களில் உள்ள
மூலவர்கள் நம்மூர் கோவில்களைப் போல் அழகுடன் அற்புத ஆகிருதியுடன்
காட்சி அளிப்பதில்லை..மூலவர் குட்டையான பளிங்கு கல்லில் ஆமணக்கு
கொட்டை கண்களுடன் காட்சியளித்துக் கொண்டிருந்தார்..

அவருக்கு பூஜை செய்த பண்டாக்கள் கேதாரநாதரை விட உயரமாக
இருந்தார்கள்..பிராகாரத்தின் வெளிச்சுவற்றில் திருஞான சம்பந்தரின்
சிவனைப் பற்றிய பாடல் பதிக்கப் பட்டிருந்தது.

எப்படியோ கேதாரநாத்துக்கு போய் சிவனின் அருளுக்கு
பாத்திரமாக வேண்டுமென்ற எங்கள் லட்சியம் பூர்த்தியாயிற்று..

நாங்கள் மீண்டும் குதிரை ஏறினோம்..எங்களை ஏற்றி வந்த அதே
குதிரைகள் எங்களுக்காக காத்துக் கொண்டிருந்தன. ஏறுவதை விட
இறங்குவது தான் கடினமானதென்றும் குதிரைகளுக்கு அதிக
எச்சரிக்கை தேவை இருக்குமென்றும் அங்கொருவர் சொன்னார்..
குதிரை எச்சரிக்கையுடன் தான் இறங்கிக் கொண்டிருந்தது…

பாதி மலை இறங்கியபோது எங்களுக்கு கீழேயிருந்து சில
தகவல்கள் வந்தது. இறங்கும் பாதைகளில் சில இடங்களில் நிலசரிவு
ஏற்பட்டு பாறைகள் உருண்டு கிடப்பதாகவும் எச்சரிக்கையுடன்
பயணம் செய்ய வேண்டுமென்றும் அறிவுறுத்தியது..

குதிரைக்கார பைய்யன் பத்திரமாகத் தான் குதிரையை வழி
நடத்தி சென்றான்.. கீழே அடிவாரத்தில் குதிரையை நிறுத்தி
எங்களை இறக்கி விட்டான்..குதிரையோடு சேர்ந்து நாங்களும்
பெருமூச்சு விட்டோம்.. இறங்கி மேலும் நடந்து வந்து கொண்டிருந்த
போது பக்கவாட்டில் பாறைகளின் ஓரமாக ஒரு கூட்டம் கூடி
இருந்தது..

நாங்கள் பரபரப்புடன் நெருங்கிப் போய் என்னவென்று
பார்த்தோம்.. பார்த்தவுடன் அதிர்ச்சியுற்றுப் போனோம்..
ஒரு குதிரையின் பின்னங்கால்களில் ஒரு பாறை விழுந்து கிடந்
தது. அதன் நுரைஈரல் புடைத்துப் போய் முன்னங்கால்கள்
வானைப் பார்த்துக் கொண்டிருந்தன.

”பாவம் நிலச்சரிவில் .பாறை உருண்டு வந்து இளைப்பாறிக்
கொண்டிருந்த குதிரையின் மேல் விழுந்திருச்சி…பரிதாபம்..”
என்று ஜனங்கள் பேசிக் கொண்டார்கள்…

சற்று நேர மௌனத்துக்குப் பின் கண்களில் ஈரத்துடன்

” ஒரு வழியா இந்த பாரம் தூக்கும் பிறவியிலிருந்து குதிரைக்கு
விடுதலை கிடைத்து விட்டது…” என்றாள் மகள்..

” இது விடுதலையா..தெரியவில்லை..விடுதலை இப்படிப்பட்ட
கோரவிபத்தாக இருந்திருக்க வேண்டாம்..மேலும் அந்தக் குதிரை
இப்படிப்பட்ட வாழ்க்கையை சந்தோஷமாக ஏற்றுக் கொண்டு வாழ
வில்லை என்று எப்படி நாம் முடிவுக்கு வர முடியும்? “

என்று சொல்லிவிட்டு மேலும் நடந்தேன்..

மல்லாந்து விழுந்து கிடந்த அந்தக் குதிரையின் வாயில்
இன்னும் தின்னப்படாமல் தொங்கிக் கொண்டிருந்த ஒரு கொத்துப்புல்
எனக்கு வாழ்க்கையின் தீராத பற்றை சொல்லிக் கொண்டிருந்தது.

மரணம் ஒரு கற்பிதம்

நேற்று ஒரு கார்டு வந்தது. ..”மேட்டூரில் எனது தந்தை சம்பந்தம்
போனவாரம் சனிக்கிழமை சிவலோகப்ராப்தி அடைந்தார் ”
என்று தெரிவித்து மேலும் சில விவரங்களுடனும் கருப்புக்கறை தடவி
இப்படிக்கு சிவராமன் ” என்று கையெழுத்திட்டிருந்தது.

கார்டில் கண்ட விஷயம் வெகு நேரம் புரியாமல் இருந்தது.
யார் இந்த சம்பந்தம்… யார் இந்த சிவராமன் இவர்களுக்கும்
எனக்கும் என்ன சம்பந்தம் என்ன சொந்தம்.. இவர்கள் நண்பர்களா
சொந்தக்காரர்களா.. அல்லது பங்காளிகளா ?

வெகுநேரம் குழம்பிய பின் வயதான என் தாயார் மூலம் ஓரளவு
அவர்களின் அடையாளங்கள் எனக்கு லேசாக தெரியவந்தது.
அவர்கள் என் காலஞ்சென்ற தந்தையாரின் பங்காளிகளின்
வம்சாவளிகள்.. அவர்களை நான் பிறந்ததிலிருந்தோ பிறந்து சில
ஆண்டுகளுக்குப் பிறகோ பார்த்ததேயில்லை.

என்னைப் பொறுத்த வரையில் சம்பந்தம் நாட்டின் எத்தனையோ
மக்களைப் போல் எனக்கு சற்றும் தொடர்பில்லாமல் மேட்டூரில்
எங்கோ வாழ்ந்து கொண்டிருப்பவர். இன்று இறந்து போயிருப்பவர்…

இந்த யதார்த்தத்தில் திரு சம்பந்தத்தின் சோகமான
மரணம் என்னை எந்த வகையில் பாதிக்கக் கூடும் ..ஏதோ ஒரு
மனிதனின் இழப்பு என்ற தகவலைத் தாண்டி ?

இன்னும் யோசித்துப் பார்த்தால் என்னைப் பொறுத்தவரையில்
அவர் எப்போதுமே இறந்தவர் தான்

ஒருவரின் சாவு என்பது அவருக்கும் நமக்கும் உள்ள அன்றாட
நெருக்கத்தையும் சார்புகளையும் உறவையும் பொறுத்தே
முக்கியத்வம் பெறுகிறது..

நமது குடும்பம் காலப்போக்கில் குடும்பங்களாக விரிவடைந்து
அவைகள் மேலும் உபகிளைகளாக பல ஊர்களில் படர்ந்து
பல்கிப் பெருகும் போது நமக்கு ஆரம்பத்தில் தெரிந்த குடும்ப
உறவுகள் பிறகு வெறும் நட்புக்களாகி பிறகு வெறும் அறிமுகங்களாக
பிறகு அதுவும் நீர்த்துப் போய் அவர்கள் அதிகம் பாதிக்காத எங்கோ
வாழ்கின்ற நபர்களாக மாறிப் போய்விடுகிறார்கள்

இந்த மாற்றங்களளே ஒரு வித மரணமாக அல்லது மரணத்தின்
வெவ்வேறு வகையான சாயல்களாக எனக்குத் தோன்றுகிறது.

* * * **

சில வருஷங்களுக்கு முன் என் சகோதரர் இறந்து போனார்.
அவருக்கு உயிருக்கு உயிரான நண்பர்கள் இருந்தார்கள்.

சகோதரர் இறந்து போன சில தினங்களுக்குப் பிறகு ஒரு
நண்பர் வாசலில் வந்து கதவைத் தட்டினார்.. திறந்தேன்…

”ராமனாதன் இல்லையா..? ” என்று கேட்டுக் கொண்டே உள்ளே
வந்தார். அவர் வெளியூருக்கு போய் விட்டு பத்து நாட்களுக்கு பிறகு
அப்போது தான் வருகிறார்.. நாங்கள் அவர் முகத்தை பார்த்துக் கொண்டு
எப்படி இதை சொல்வது என்று தெரியாமல் வாயடைத்துப் போய் நின்றோம்..

அவருக்கு எங்கள் மௌனம் அர்த்தமாகவில்லை. அந்த சமயம் எங்கள்
அண்ணி தலை விரிகோலமாக பொட்டு இல்லாமல் வெளியே வந்து
எட்டிப் பார்த்து நண்பரைப் பார்த்தவுடன் ”ஓ”வென்று அழுதார்.. ”ஒங்க நண்பர் போய்ட்டார் ”……..

வந்த நண்பர் ஒரு நிமிஷம் திகைத்துப் போய் தலையைப் பிடித்துக்
கொண்டு கீழே தடாலென்று விழுந்தார்.. ”அய்யோ அய்யோ..’ என்று
கதறினார்.. அவரால் அந்த அதிர்ச்சியை ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை

”ஊர்லேருந்து வந்தவுடனெ இன்னிக்கு கண்டிப்பா வந்து பாப்பேன்னு
சொல்லியிருந்தேனே..இப்படி என்னை ஏமாத்திட்டு போய்ட்டானே ! இனிமே
அவன் மாதிரி ஒரு மனுஷனை எங்கெ போய் பாப்பேன்..” என்று வாய் குளரி
புலம்பினார்… வெகுநேரம் ..

நண்பனின் இந்த நிரந்தரப் பிரிவு ஈடுசெய்ய முடியாத இழப்பாக
அவருக்கு தோன்றியது.

மரணம் அதன் முழு உக்கிரத்துடன் அவரை துடிக்க வைத்துக் கொண்டிருந்தது.

சற்று நேரம் விம்மி அழுத பின்பு மெள்ள தாங்கி எழுந்தார்.

”ராமனாதனுக்கு இந்த புஸ்தகத்தை கொடுக்கலாம்னு ஊர்லேருந்து வாங்கிண்டு வந்தேன்..இதை என் ஞாபகமா அவன் போட்டொ அடியிலெ வைச்சுடுங்கோ..
என்று ஒரு புஸ்தகத்தை மேஜையின் மேல் வைத்தார்..

அதன் தலைப்பு ”Life is beautiful ”

** ** ** **

தான் இறந்து போன பிறகு
நண்பர்களில் யார் யார் எந்த எந்த விதமாக அனுதாபத்தை தெரிவிக்கிறார்கள்
விரோதிகள் எவ்விதம் சந்தோஷப்படுகிறார்கள்
என்று அறிந்து கொள்ளும் ஆவலுடன் தான் இறந்து விட்டதாக ஒரு செய்தியை
பேப்பரில் போட்டு விட்டு ஒளிந்து கொண்டு வேடிக்கை பார்த்தான் ஒரு மேதை
அவன் பெயர் P. T Barnum அமெரிக்காவில் ஸர்க்கஸ் கலையில் புரட்சிகள்
செய்த ஒரு வித்யாசமான மனிதன் ..

மனித உள்மனக் கருத்துகளை கிளறிப் பார்க்க மரணம் இவனுக்கு
ஒரு வசதியான நாடகமாக அமைந்தது….

** ** **

ஒரு பெரிய அரசியல் தலைவர் ஆஸ்பத்திரியில் அவசரப்
பிரிவில் சேர்க்கப் பட்டு தீவிரமான சிகிச்சையில் உயிரோடு
போராடிக் கொண்டிருக்கும் போதே அவர் மரணத்தை ஆவலுடன்
எதிர்பார்த்த சில அரசியல் பிரமுகர்கள் அவசர ஆத்திரத்தால்
அந்த தலைவரின் இரங்கல் செய்தியை பார்லிமெண்டில் அறிவித்துவிட்டார்கள்.
பிறகு அல்லோல கல்லோலமாகி அந்த தவறான இரங்கலுக்காக
மன்னிப்புக் கோரப்பட்டது; சில ஆண்டுகளுக்கு முன்னால்..

இந்த சம்பவம் பலருக்கும் இப்போது நினைவுக்கு வரலாம்…

மரணம் சிலரை சில சமயம் முட்டாளாக்கி விளையாடுகிறது.

** ** **

கடைசியாக மரணத்தை பற்றிய இன்னொரு பரிமாணத்தை
சொல்லும் என் சிறிய கவிதை ஒன்று

”மரத்தை விட்டுப் பிரிந்து
மலர்கள்
மண்ணில் மெத்தென்று விழுகின்றன;

சாவிலிருந்து துக்கத்தை
சத்தமில்லாமல் பிரித்தவாறு. ”