மரணம் ஒரு கற்பிதம்

நேற்று ஒரு கார்டு வந்தது. ..”மேட்டூரில் எனது தந்தை சம்பந்தம்
போனவாரம் சனிக்கிழமை சிவலோகப்ராப்தி அடைந்தார் ”
என்று தெரிவித்து மேலும் சில விவரங்களுடனும் கருப்புக்கறை தடவி
இப்படிக்கு சிவராமன் ” என்று கையெழுத்திட்டிருந்தது.

கார்டில் கண்ட விஷயம் வெகு நேரம் புரியாமல் இருந்தது.
யார் இந்த சம்பந்தம்… யார் இந்த சிவராமன் இவர்களுக்கும்
எனக்கும் என்ன சம்பந்தம் என்ன சொந்தம்.. இவர்கள் நண்பர்களா
சொந்தக்காரர்களா.. அல்லது பங்காளிகளா ?

வெகுநேரம் குழம்பிய பின் வயதான என் தாயார் மூலம் ஓரளவு
அவர்களின் அடையாளங்கள் எனக்கு லேசாக தெரியவந்தது.
அவர்கள் என் காலஞ்சென்ற தந்தையாரின் பங்காளிகளின்
வம்சாவளிகள்.. அவர்களை நான் பிறந்ததிலிருந்தோ பிறந்து சில
ஆண்டுகளுக்குப் பிறகோ பார்த்ததேயில்லை.

என்னைப் பொறுத்த வரையில் சம்பந்தம் நாட்டின் எத்தனையோ
மக்களைப் போல் எனக்கு சற்றும் தொடர்பில்லாமல் மேட்டூரில்
எங்கோ வாழ்ந்து கொண்டிருப்பவர். இன்று இறந்து போயிருப்பவர்…

இந்த யதார்த்தத்தில் திரு சம்பந்தத்தின் சோகமான
மரணம் என்னை எந்த வகையில் பாதிக்கக் கூடும் ..ஏதோ ஒரு
மனிதனின் இழப்பு என்ற தகவலைத் தாண்டி ?

இன்னும் யோசித்துப் பார்த்தால் என்னைப் பொறுத்தவரையில்
அவர் எப்போதுமே இறந்தவர் தான்

ஒருவரின் சாவு என்பது அவருக்கும் நமக்கும் உள்ள அன்றாட
நெருக்கத்தையும் சார்புகளையும் உறவையும் பொறுத்தே
முக்கியத்வம் பெறுகிறது..

நமது குடும்பம் காலப்போக்கில் குடும்பங்களாக விரிவடைந்து
அவைகள் மேலும் உபகிளைகளாக பல ஊர்களில் படர்ந்து
பல்கிப் பெருகும் போது நமக்கு ஆரம்பத்தில் தெரிந்த குடும்ப
உறவுகள் பிறகு வெறும் நட்புக்களாகி பிறகு வெறும் அறிமுகங்களாக
பிறகு அதுவும் நீர்த்துப் போய் அவர்கள் அதிகம் பாதிக்காத எங்கோ
வாழ்கின்ற நபர்களாக மாறிப் போய்விடுகிறார்கள்

இந்த மாற்றங்களளே ஒரு வித மரணமாக அல்லது மரணத்தின்
வெவ்வேறு வகையான சாயல்களாக எனக்குத் தோன்றுகிறது.

* * * **

சில வருஷங்களுக்கு முன் என் சகோதரர் இறந்து போனார்.
அவருக்கு உயிருக்கு உயிரான நண்பர்கள் இருந்தார்கள்.

சகோதரர் இறந்து போன சில தினங்களுக்குப் பிறகு ஒரு
நண்பர் வாசலில் வந்து கதவைத் தட்டினார்.. திறந்தேன்…

”ராமனாதன் இல்லையா..? ” என்று கேட்டுக் கொண்டே உள்ளே
வந்தார். அவர் வெளியூருக்கு போய் விட்டு பத்து நாட்களுக்கு பிறகு
அப்போது தான் வருகிறார்.. நாங்கள் அவர் முகத்தை பார்த்துக் கொண்டு
எப்படி இதை சொல்வது என்று தெரியாமல் வாயடைத்துப் போய் நின்றோம்..

அவருக்கு எங்கள் மௌனம் அர்த்தமாகவில்லை. அந்த சமயம் எங்கள்
அண்ணி தலை விரிகோலமாக பொட்டு இல்லாமல் வெளியே வந்து
எட்டிப் பார்த்து நண்பரைப் பார்த்தவுடன் ”ஓ”வென்று அழுதார்.. ”ஒங்க நண்பர் போய்ட்டார் ”……..

வந்த நண்பர் ஒரு நிமிஷம் திகைத்துப் போய் தலையைப் பிடித்துக்
கொண்டு கீழே தடாலென்று விழுந்தார்.. ”அய்யோ அய்யோ..’ என்று
கதறினார்.. அவரால் அந்த அதிர்ச்சியை ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை

”ஊர்லேருந்து வந்தவுடனெ இன்னிக்கு கண்டிப்பா வந்து பாப்பேன்னு
சொல்லியிருந்தேனே..இப்படி என்னை ஏமாத்திட்டு போய்ட்டானே ! இனிமே
அவன் மாதிரி ஒரு மனுஷனை எங்கெ போய் பாப்பேன்..” என்று வாய் குளரி
புலம்பினார்… வெகுநேரம் ..

நண்பனின் இந்த நிரந்தரப் பிரிவு ஈடுசெய்ய முடியாத இழப்பாக
அவருக்கு தோன்றியது.

மரணம் அதன் முழு உக்கிரத்துடன் அவரை துடிக்க வைத்துக் கொண்டிருந்தது.

சற்று நேரம் விம்மி அழுத பின்பு மெள்ள தாங்கி எழுந்தார்.

”ராமனாதனுக்கு இந்த புஸ்தகத்தை கொடுக்கலாம்னு ஊர்லேருந்து வாங்கிண்டு வந்தேன்..இதை என் ஞாபகமா அவன் போட்டொ அடியிலெ வைச்சுடுங்கோ..
என்று ஒரு புஸ்தகத்தை மேஜையின் மேல் வைத்தார்..

அதன் தலைப்பு ”Life is beautiful ”

** ** ** **

தான் இறந்து போன பிறகு
நண்பர்களில் யார் யார் எந்த எந்த விதமாக அனுதாபத்தை தெரிவிக்கிறார்கள்
விரோதிகள் எவ்விதம் சந்தோஷப்படுகிறார்கள்
என்று அறிந்து கொள்ளும் ஆவலுடன் தான் இறந்து விட்டதாக ஒரு செய்தியை
பேப்பரில் போட்டு விட்டு ஒளிந்து கொண்டு வேடிக்கை பார்த்தான் ஒரு மேதை
அவன் பெயர் P. T Barnum அமெரிக்காவில் ஸர்க்கஸ் கலையில் புரட்சிகள்
செய்த ஒரு வித்யாசமான மனிதன் ..

மனித உள்மனக் கருத்துகளை கிளறிப் பார்க்க மரணம் இவனுக்கு
ஒரு வசதியான நாடகமாக அமைந்தது….

** ** **

ஒரு பெரிய அரசியல் தலைவர் ஆஸ்பத்திரியில் அவசரப்
பிரிவில் சேர்க்கப் பட்டு தீவிரமான சிகிச்சையில் உயிரோடு
போராடிக் கொண்டிருக்கும் போதே அவர் மரணத்தை ஆவலுடன்
எதிர்பார்த்த சில அரசியல் பிரமுகர்கள் அவசர ஆத்திரத்தால்
அந்த தலைவரின் இரங்கல் செய்தியை பார்லிமெண்டில் அறிவித்துவிட்டார்கள்.
பிறகு அல்லோல கல்லோலமாகி அந்த தவறான இரங்கலுக்காக
மன்னிப்புக் கோரப்பட்டது; சில ஆண்டுகளுக்கு முன்னால்..

இந்த சம்பவம் பலருக்கும் இப்போது நினைவுக்கு வரலாம்…

மரணம் சிலரை சில சமயம் முட்டாளாக்கி விளையாடுகிறது.

** ** **

கடைசியாக மரணத்தை பற்றிய இன்னொரு பரிமாணத்தை
சொல்லும் என் சிறிய கவிதை ஒன்று

”மரத்தை விட்டுப் பிரிந்து
மலர்கள்
மண்ணில் மெத்தென்று விழுகின்றன;

சாவிலிருந்து துக்கத்தை
சத்தமில்லாமல் பிரித்தவாறு. ”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன