மருத்துவர்கள் பற்றிய நகைச்சுவைத் துணுக்குகள்

மருத்துவர்கள் பற்றிய நகைச்சுவைத் துணுக்குகள்
அசோகமித்திரன்
ஒரு காலத்தில் வார மாதப் பத்திரிகைகள் மிகவும் குறைவு. வெளிவருவதில் பக்கத்துக்குப் பக்கம் விகடத்துணுக்குகள் இருக்கும். திரும்பத் திரும்ப மருத்துவர்கள் பற்றிய துணுக்குகள். “டாக்டர் உன் நண்பர் என்று சொன்னாயே, பின் ஏன் ஃபீஸ் கொடுத்தாய்?”
“அவர் பிழைக்க வேண்டுமே?”
“அப்படிப் பணம் கொடுத்து வாங்கிய மருந்தை ஏன் குப்பையில் கொட்டினாய்?”
“நான் பிழைக்க வேண்டுமே?”
அந்த நாட்களில் டாக்டர்கள் பத்திரிகைகளைத் தொடாதவர்களாக இருக்க வேண்டும். அல்லது கோபமே வராதவர்களாக இருக்கவேண்டும்.
எந்தக் கலாச்சாரத்தில் நீண்ட மருத்துவப் பாரம்பரியம் இருக்கிறதோ, அங்கெல்லாம் ந்ம்பிக்கை-அவநம்பிக்கை இரண்டும் சேர்ந்தே இருக்கின்றன. பெரும்பாலானோர் கடவுளைப் பிரார்த்திகாதபடி டாக்டரிடம் செல்வதில்லை.
கன்னட எழுத்தாளர் சிவராம் கரந்த் பிறப்பால் பிராமணரானாலும் ஒரு நாத்திகவாதி. ஒரு முறை அவருடைய குழந்தைக்குப் பெருவாரி நோய் கண்டு விட்டது. எழுபது ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் நாட்டிலும் அம்மை, பிளேக் முதலியன கால அட்டவணை அமைத்துக் கொண்டு மாறி மாறி வரும். அம்மைக்கு வைத்தியம் செய்யாமல் வீடெல்லாம் வேப்பிலையைப் பரப்பி வைப்பார்கள். கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட பிறகு ஊமைத்துரை வெள்ளையர் ஆட்சிக்கு எதிரான போரைத்தொடர்ந்தார். ஒரு முறை அவர் தங்கியிருந்த வீட்டருகே வெள்ளைக்காரச் சிப்பாய்கள் வந்து விட்டார்கள். வீட்டில் ஒரு மூதாட்டி. ஒரு கவலை வேண்டாம் என்று சொல்லி வாயிற்படியருகே கொத்து கொத்தாக வேப்பிலையை வைத்தாள். வெள்ளைக்கார்ர்கள் அந்தத் தெருப்பக்கமே வரவில்லை. அம்மை நோய்க்கு அவ்வளவு பயம். இன்று நோய்த்தடுப்பு இருக்கிறது. முன்பு நோய் கண்டு விட்டால் வீட்டில் யாரையும் வரவிடமாட்டார்கள். மிகவும் நெருங்கிய உறவினர்களைக் கூட அநுமதிக்க மாட்டார்கள். அம்மை கண்ட நோயாளி ஒருக்கால் மருத்துவ மனையில் இறந்து விட்டால் அது போன்ற சங்கடம் கிடையாது. உடலை வீட்டுக்கு எடுத்து வர முடியாது. நேராக மயானத்துக்கு எடுத்துச் செல்லவேண்டும். அப்போது பிணத்தை எடுத்துச்செல்ல ஒரு வண்டியும் வராது. நான் வசித்த ஊரில் ஆம்புலன்ஸ் என்று நான் பார்த்தே கிடையாது.
ஊமைத்துரை வரலாற்றில் வேப்பிலை நிகழ்ச்சி பல விவரங்களைத் தெரிவிக்கிறது. இவ்வளவு பயந்து பயந்து இந்த நாட்டில் இருந்தாலும் பழைய ராணுவக் கல்லறைகளுக்குப் போனால் ஒரே கல்லறைக் கல் முப்பது நாற்பது பெயர்களைக் கொண்டிருக்கும். அவர்கள் போரில் உயிர் நீத்தவர்கள் அல்ல. பெருவாரி நோயில் உயிரை விட்டவர்கள்.
சிவராம கரந்த்தின் குழந்தையின் நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது. அவருடைய மனைவி அவர் காலில் விழுந்து கெஞ்சிக் கேட்டுக் கொண்டாள். மாரியம்மனுக்கு வேண்டிக்கொள்ளுங்கள், சாமுண்டிக்கு வேண்டிக் கொள்ளுங்கள்… “எனக்கு நம்பிக்கை இல்லை,” என்று சொல்லி டாக்டரை அழைக்கப் போனார். டாக்டர்கள் யாரும் வரவில்லை. குழந்தை போய் விட்டது. ஆனால் என் சொந்த அனுபவத்தில் எங்கள் வீட்டில்தான் எவ்வளவு வேண்டிக்கொண்டிருக்கிறோம்,எவ்வளவு காசு முடிப்புகளை சாமி படத்தடியில் வைத்திருக்கிறோம்? இந்த 82வது வயதில் என் பெற்றோர்களை நினைத்துக் கொண்டால் அவர்கள் துக்கம்தான் மனதில் முதலில் தோன்றுகிறது.
ஒரு காலத்தில் நாங்கள் வசித்த ஊரில் வைத்தியர்கள் மிகவும் குறைவு. பெரும்பாலோனோர் எல் எம் எஸ் அல்லது எல். எம் பி. அதாவது, எம் பி பி எஸ் இல்லை. வைத்தியர்கள் குறைவு என்பதால் சாவு அதிகம் என்று இல்லை. வைத்தியமும் சாவும் பெரிய பிரச்னைகள் அல்ல. பிணத்தைக் கொண்டு போனால் சுடுகாட்டில் எரித்து விட்டு வரலாம் அல்லது புதைத்து விட்டு வரலாம்.
நான் முதன் முதலில் மருத்துவர்கள் பற்றி விகடத் துணுக்கு எதிர்கொண்டது சாரணர் ‘காம்ப்ஃபய’ரில்தான். நான் இருந்த குழுவில் ஓரிருவர் தவிர மற்றெல்லோரும் தெலுங்கு அல்லது உருதுக்காரர்கள்.முன்னமேயே கூறியபடி சிறிய ஊரில் குறைவான மருத்துவர்கள் உள்ள நிலையில் இப்படியும் கேலி செய்ய முடியுமா?
கேலியும் செய்தார்கள். அதே டாக்டர்களிடமும் போனார்கள். தெய்வங்களிடமும் வேண்டிக்கொண்டார்கள்.
                                                                                                                                    பிப்ரவரி  2013                               

குருவின் துரோகம்

 எழுத்தாளர்களைப் பாத்திரங்களாக அமைத்துப் புனைகதைகள் எழுதுவதில் எனக்கு அதிகம் நம்பிக்கை இல்லை.  எழுத்தாளர்கள் பெரும்பாலும் மிகச் சிறிய, சாதாரண மனிதர்கள்.  அநேகமாக அவர்கள் எல்லாருக்கும் அவர்களைப் பற்றிப் பிறரிடம் சொல்லும்போதோ எழுதும்போதோ நிஜமல்லாதது மிகவும் இயல்பாக வந்து விடுகிறது.
 மனித இயல்பின் தன்மை அது.  நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு அன்று மிகவும் செல்வாக்கோடு இருந்த எழுத்தாளர் அவர் பணிபுரிந்த வானொலியில் அவருடைய மேலதிகாரியைக் கரிய பாத்திரமாகக் கதை எழுதியதைப் பெருமையோடு சொல்லிக்கொண்டிருந்தார்.  அது தவறு என்று நான் சொன்னேன்.  அவர் வானொலியில் இருந்தவரை என் மூச்சு கூட அப்பக்கம் வீச முடியவில்லை.
 கிட்டத்தட்ட என் அபிப்பிராயம்தான் அழகிரிசாமி வைத்திருந்தார்.  ஆனால் நண்பர் நா பார்த்தசாரதிக்குக் கதாநாயகனை எழுத்தாளனாக அமைப்பதில் மிகுந்த விருப்பம்.  நகுலனின் முதலிரு நாவல்கள் எழுத்தாளர்களைப் பற்றியல்ல.  அதன் பிறகு எழுதியதெல்லாம் அவர் நேரடியாக அறிந்த எழுத்தாளர்களைப் பற்றித்தான்.  சில இடங்கள் வேடிக்கையாக இருக்கும்.  ஆனால் பெரும்பாலும் வருத்தத்தைத் தருவதாக இருக்கும்.  பலரைப் பற்றி அவருடைய மதிப்பீடு தவறாக இருக்கும்.
 வயிற்றெரிச்சலைக் கொட்டித் தீர்த்துக்கொள்வதுற்காக சக எழுத்தாளர்களைப் பற்றி எழுதுவது நீண்ட காலமாகவே இருந்து வருகிறது.  நீண்ட காலமாக இருப்பதே அதை நியாயப்படுத்தாது.  எழுத்துத் துறையின் ஒரு சாபம் குருத்துரோகம்.  ஷெர்வுட் ஆண்டர்சன் என்ற எழுத்தாளர் மனப்பூர்வமாக இளம் எழுத்தாளர்களை ஊக்குவிப்பார்.  சிபாரிசுக் கடிதங்கள் எழுதித் தருவார்.  முதுகில் நிறையக் குத்து வாங்கிக்கொள்வார்.  அப்படிக் குத்தியவர்களில் ஹெமிங்க்வேயும் ஒருவர்.  ஆண்டர்சன் சிபாரிசில் ஒரு பதிப்பாளர் ஹெமிங்க்வேயின் முதல் நாவலைப் பிரசுரிப்பதாகக் கையெழுத்துப் பிரதியை வாங்கி வைத்துக்கொண்டார்.  அதன்பிறகு இன்னும் அதிகசெல்வாக்குடைய பதிப்பாளர் ஒருவர் ஹெமிங்க்வேயுடைய படைப்புகளைப் பிரசுரிப்பதாக ஒத்துக்கொண்டார்.  முதல் நாவலின் கையெழுத்துப் பிரதியை எப்படித் திரும்பப் பெறுவது?  அவசரம் அவசரமாக ஹெமிங்க்வே ஆண்டர்சனைக் கிண்டல் செய்து ஒரு சிறு நாவல் எழுதி அந்த முதல் பதிப்பாளரிடம் கொடுத்தார்.  அவர் மிகுந்த கோபத்துடன் அதைத் திருப்பிக் கொடுத்துவிட்டார். ‘அப்போது அந்த முதல் நாவலின் கையெழுத்துப் பிரதியையும் திரும்பக் கொடுத்து விடுங்கள்,’ என்று ஹெமிங்க்வே சொன்னார்.  இவ்வளவு கபடமாக நடந்துகொண்டபோது அவருக்கு வயது 25 ஆகவில்லை.
 இன்று தமிழ் எழுத்துலகத்தில் சிஷ்யர்களும் குருவாக உலவுபவர்களும் துரோகம் செய்யக்கூடும் என்று நினைக்க வைக்கிறது.  இதை மிகுந்த வருத்தத்துடன் எழுத வேண்டியிருக்கிறது.
 குருத்துரோகம் பற்றி இரு நாவல்களை நினைவு படுத்தலாம் என்று தோன்றியது.  ஒன்று, சாமர்செட் மாம் எழுதிய’கேக்ஸ் அண்ட் யேல்.’ இரண்டாவது ஸôல் பெல்லோ எழுதிய’ஹம்போலட்ஸ் கிஃப்ட்.’ அந்த நாளில் நோபல் பரிசு அறிவிக்கும்போது ஒரு படைப்பையும் குறிப்பிடுவதுண்டு.  ஸôல் பெல்லோ, ‘தி டாங்கிலிங் மான்,’அட்வென்சர்ஸ் ஆஃப் ஆகி மார்ச்,’ சீஸ் தி டே,’என மிகச் சிறந்த படைப்புகள் படைத்திருக்கிறார். ‘கிஃப்ட்’பரபரப்பும் ஓரளவு சினிமாவில் உள்ளளது போன்ற தீர்வுகளும் உடையது.  ஆனால் அதுதான் நோபல் பரிசுப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டது.  மாமை யாரும் ஸ்வீடன் பக்கமே திரும்ப விடவில்லை.  ஆனால் நிறை வாழ்வு, நீண்ட வாழ்வு, நிறை மறைவு.  எனக்குச் சிக்கலாக எழுத முடியும், ஆனால் வாசகன் எனக்கு முக்கியம் என்றிருந்தார். ‘கேக்ஸ் அண்ட யேல்’சுவாரஸ்யமாகவே இருக்கும்.  இரு நூல்களும் எளிதில் படிக்கக் கிடைக்கும்.  தமிழ் வாசகர்கள், குறிப்பாகத் தீவிர வாசகர்கள் பிரிவில் தம்மை அடையாளம் கண்டுகொள்பவர்கள், படிக்க வேண்டும்.  இன்றைய தமிழ்ப் புனைகதைப் படைப்புலகம் துல்லியமாக அர்த்தமாகும்.
    *******
 ஒரு நூலுக்கு அட்டை முக்கியம்.  அட்டை அளவுக்கு அட்டை மீதுள்ள வாக்கியம் அல்லது வாக்கியங்களும் முக்கியம்.  அந்த நூலைப் படிக்கத் தூண்டுவதில் இந்த வாக்கியங்களுக்கு முக்கியப் பங்கு உண்டு.  நூல் வாசகனை எட்ட வேண்டும் என்ற அக்கறை கொண்ட பதிப்பாளர் இந்த அட்டை வாக்கியங்களை எழுத ஒரு நிபுணரிடம் தருவார்.
 தமிழ் நூல்களில் சிலவற்றில் மட்டுமே இந்த அட்டை வாக்கியங்கள் அவற்றுக்குரிய முக்கியத்வத்தை உணர்ந்து எழுதப்படுகின்றன.  இந்த வாக்கியங்களில் பத்திரிகை விமரிசனத்திலிருந்து அல்லது ஒரு புகழ்பெற்ற எழுத்தாளர் கூறியதிலிருந்து ஓரிரு வரிகள் இருக்கும்.
 இப்படிப்பட்ட வரிகளில் ஜெயகாந்தன் பெயர் பார்த்ததாக எனக்கு நினைவு இல்லை.  அவருடைய கட்டுரைகளிலோ உரைகளிலோ சமகாலத்து எழுத்தாளர் எவரைப் பற்றியும் அவர் அபிப்பிராயம் கூறியதாக எனக்கு நினைவு இல்லை.  பாராட்டு என்றில்லாது பாதகமாகவும் அவர் கூறியதில்லை.  ஆனால் அவருடைய முன்னுரைகளில் யாராவது தாக்கப்படுவதை உணர முடியும்.  அந்த முன்னுரைகளே ஏதோ முந்தைய ஜன்மத்தில் எழுதியது என்று அவர் கூறக்கூடும்.  என்வரையில் அது உண்மையும் கூட.
 இதர இந்திய மொழிகள் பற்றி என்னால் உறுதியாகக் கூற முடியாது.  ஆனால் ஆங்கிலத்தில் அவருடைய படைப்புகளின் மொழிபெயர்ப்பு விசேஷமாக இருந்ததில்லை. ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ஆங்கில மொழிபெயர்ப்பை நான் சுமார் முப்பதாண்டுகள் முன்பு படித்திருக்கிறேன். ‘இந்தியன் ரிவ்யூ’வெளியிட்ட அந்த மொழிபெயர்ப்பு செய்திருந்த பேராசிரியருடன் சமீபத்தில் பேச வாய்ப்புக் கிடைத்தது.  அதை நன்கு திருத்தி அமைத்த பிறகே நூல் வடிவில் அச்சுக்குக் கொடுக்கக் கூறினேன்.
 ஐந்தாண்டுகள் முன்பு அமெரிக்காவில் உள்ள ஆண்டி சுந்தரேசன் என்பவர் மொழிபெயர்த்த சிறுகதைகளைப் படித்தேன்.  நன்றாக இருந்தது.  சமீபத்தில் கே எஸ் சுப்பிரமணியன் மொழிபெயர்த்த’ஒரு மனிதன், ஒரு வீடு’படித்தேன்.. மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
 கே எஸ்ஸின் மொழிபெயர்ப்பு வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம் சில தமிழ்ச் சொற்களை அப்படியே பயன்படுத்தியது.  மொழிபெயர்ப்பு நூல்களைப் படிக்க விரும்புவார்கள்.  ஓரளவு முயற்சி எடுத்துக்கொள்ளத் தயங்க மாட்டார்கள்.  எப்படியும் நூலின் இறுதியில் ஆங்கில இணைச்சொற்கள் தரப்பட்டிருக்கும்.  மூலப் படைப்பில்,’மகனே’என்பது அடிக்கடி வருகிறது.  இந்தியச் சூழலில் குழந்தாய், மகனே என்பதற்கு ஆங்கில இணை இணையாகாது.  கே.எஸ்’மகனே’என்றே ஆங்கிலத்திலும் எழுதியிருக்கிறார்.  நாவலே நல்ல மனம் படைத்த மனிதர்கள் பற்றியது. ‘மகனே’என்று அழைப்பது ஆழமான உறவையும் குறிப்பது.  இன்று எவ்வளவு பேர் தம் பிள்ளைகளை,’மகனே’என்று அழைக்கிறார்கள்?
 கே.எஸ் மிகவும் பாராட்டப்பட வேண்டியவர்.  அவருக்கும் எனக்கும் ஆறே வயது வித்தியாசம்.  அதுவே பன்னிரண்டாக இருந்தால,’உன் பணியை நீ மிகவும் சிறப்பாகச் செய்து முடித்திருக்கிறாய், மகனே!’ என்று கூறியிருப்பேன்.
(A Man, A Home and A World – Jayakanthan – Translation from Tamil
by K S Subramanian, Sahatiya Akademi, New Delhi – Price Rs.150) 
Please note this article appeared in Navina Virutcham 70th Issue
      

யாவரும் கேளீர்

எழுதுவது, படிப்பது இரண்டும் தனிமையில்தான் சாத்தியமாக இருந்தாலும் இவை ஆழ்ந்த நட்புக்கும் காரணமாக இருந்து விடுகின்றன. புதுமைப்பித்தன்-ரகுநாதன், கு.ப.ரா-பிச்சமூர்த்தி. ராமையா-சி சு செல்லப்பா எனப் பலர் உடனே நினைவுக்கு வருகின்றனர். இந்திய சுதந்திரத்திற்கு முன்பு பொதுவாக மக்களிடம் இருந்த விடுதலை வேட்கை இவர்களிடமும் இருந்தது.

கிட்டத்தட்ட இதே மாதிரிதான் ஷங்கரநாராயணன்-ஏ ஏ ஹெச் கே கோரி – சாந்தன் ஆகியோரைப் பற்றி நினைக்க முடிகிறது. இப்போது சுதந்திரம் என்ற அரூபமான, ஆனால் உணர்ச்சி எழுப்பக்கூடிய இலக்கு தேவையற்றுப் போய் விட்டது. இன்று பெரும்பாலும் பொருளாதாரக் கவலைதான் எல்லா இந்தியரையும் தீண்டுகிறது. எழுத்தாளர்களாகவும் இருந்து விட்டால் பத்திரிகை பிரசுரம், நூல் பிரசுரம் இவற்றுக்கும் மேல் வாசகர் கவனம் போன்றவை சின்னச் சின்னக் கவலைகளாக இருந்து வரும். பொருளாதாரம்தான் குடும்ப உறவுகள், பொறுப்புகளையும் நேரிடையாகவும், மறைமுகமாகவும் நிர்ணயிக்கிறது. இன்றைய மசாலாத் திரைப்படங்கள் இந்த ஒரு நம்பகமான சிறிதே பூதம் காட்டும் கண்ணாடி.

இந்தப் பொது விதியிலிருந்து சாந்தன் சற்றே விலகியவர். அவர் இலங்கைத் தமிழர். இந்த முப்பத்து மூன்று அபாயகரமான ஆண்டுகளையும் இலங்கையிலேயே இருந்து அனுபவித்தவர். அவருக்குள்ள கல்வித் தகுதிக்கும் ஆங்கில மேன்மைக்கும் அவர் எளிதாக இங்கிலாந்து அல்லது கனடா போன்ற நாடுகளுக்கு அகதியாகப் போய் வாழக்கூடியவர். ஆனால் அவர் இலங்கையிலேயே, முதலில் கொழும்புவிலும், பின்னர் யாழ்ப்பாணத்திலும் இருந்து விட்டார். பல நீண்ட கதைகள் அவர் எழுதியிருந்தாலும் அவருடைய குட்டிக் கதைகள் உருவத்திலும் பொருளிலும் விசேஷமானவை. அரசுகளாக ஏற்பாடு செய்த ரஷ்யச் சுற்றுலாவில் ஒரு தமிழன், ஒரு சிங்களவனோடு சேர்ந்துதான் வெவ்வேறு இடங்களுக்குப் போக வேண்டியிருக்கிறது. தமிழர்-சிங்களவர் உறவு மிகவும் சீர்கெட்ட நேரம். அப்போது அந்த சுற்றுலா வழிகாட்டி பேச்சோடு பேச்சாக உலகத்தின் மிகச் சிறந்த தேயிலை அங்கு உற்பத்தியாகிறது என்கிறான். சிங்களவன், தமிழன் இருவரும் ஒரே குரலில்,”என்ன சொன்னீர்கள்? என்ன சொன்னீர்கள்?” என்று கேட்கிறார்கள். இலங்கைத் தேயிலைப் பெருமை தமிழன் சிங்களவன் இருவருக்கும் அவ்வளவு தீவிரமானதாக இருக்கிறது.

இப்போது சாந்தன் ஒரு நாவல் எழுதியிருக்கிறார். எனக்குத் தெரிந்த அளவில் இது அவருடைய முதல் நாவல். அதன் இன்னொரு பெருமை அதை அவர் ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார். இன்னொரு தகவல் இது இந்திய அமைதிப்படை, தமிழர் துவேஷம் பற்றியது.

இந்திய அமைதிப்படை பற்றி இந்தியத் தமிழர் கொண்டிருக்கும் அபிப்பிராயத்தை தனியாக விவரிக்கத் தேவையில்லை. ஆனால் அமைதிப்படையில் மருத்துவராகப் பணியாற்றிய ஒருவர் கூறியது பரிதாபமானது. ஆயிரக்கணக்கில் அமைதிப் படையினர் கொல்லப்பட்டார்கள். உயிர் தப்பியவர்களில் முக்கால்வாசி கண்ணிவெடியால் கை கால் இழந்து ஆயுள் முழுதும் முடமாக வாழத் தள்ளப்பட்டவர்கள். பலர் இந்த மருத்துவரைப் பார்த்து, ”என்னைக் கொன்று விடுங்கள்…கொன்று விடுங்கள்..” என்று மன்றாடி இருக்கிறார்கள்.

படையினர் என்றால் யார்? 90 சதவீதம் சிப்பாய்கள். சிப்பாய்கள் யார்? எந்தத் தேர்ச்சியும் பயிற்சியும் இல்லாமல் தோட்டாக்களுக்கும், பீரங்கிகளுக்கும் தீனியாவதற்கென்றே படையில் சேர்ந்தவர்கள். ஏழைகள். ஏழைகளில் இந்திய ஏழை, சீன ஏழை, ஆப்பிரிக்கா ஏழை, இலங்கை ஏழை என்று கிடையாது.

சாந்தனின் நாவல் அமைதிப்படையினர் எல்லாத் தமிழர்களையும் விடுதலைப் புலிகள் அல்லது விடுதலைப் புலிகளுக்கு உளவு கூறுபவர்கள் என்று நினைப்பதாக உள்ளது. நல்ல யுத்தம் என்று கிடையாது. நல்ல படை என்று கிடையாது. நல்ல அரசன் என்றும் கிடையாது. முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு நைஜீரியாவுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டவுடன் உள்நாட்டுப் போர் ஆண்டுக்கணக்கில் நைஜீரியர்களும், பயாஃரா இனத்தவரும் போரிட்டுக் கொண்டார்கள். நமக்கு அந்த இரு குழுக்களிடையே என்ன வேற்றுமை இருக்கக் கூடும் என்றுதான் தோன்றும். ஆனால் சுமார் இரண்டு லட்சம் பயாஃப்ரா இனத்தவர் பட்டினி போடப்பட்டே கொல்லப்பட்டார்கள்.

நாம் மகா அரசர்கள், மகா வீரர்கள் கடல் தாண்டி வெற்றி பெற்றவர்கள் என்றெல்லாம் பெருமைப் பட்டுக் கொள்கிறோம். இவர்களால் எவ்வளவு ஆயிரக்கணக்கானோர் உயிர் துறந்தார்கள், எவ்வளவு பெண்கள் அக்கிரமத்துக்கு உள்ளானார்கள், எவ்வளவு வயோதிகர் மற்றும் குழந்தைகள் கவனித்துக்கொள்வோர் இல்லாமல் இருட்டிலும் பனியிலும் மழையிலும் வெயிலிலும் துடிதுடித்து இறந்தார்கள் என்றும் நினைக்க வேண்டும். யாதும் ஊரே, யாவரும் கேளிர்.

சாத்தனின் இப்புது நாவலைப் படிக்கும்போது பல விஷயங்கள் குறித்து யோசிக்கத் தோன்றியது. நூலின் தலைப்பு Whirlwind. வெளியிட்டவர் சென்னை ராமாபுரம் பார்க்துகார் என்ற இடத்தில் உள்ள v.u.s பதிப்பகம். விலை ரூ.100.

சி மணி

ந்த ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி சி மணி சேலத்தில் மரணமடைந்தார் என்ற செய்தி எனக்குத் துக்கம் தந்தாலும் நான் எதிர்பாராதது அல்ல. உத்தமமான அவருக்குத் தன் உடல் நிலையைக் கவனித்துக்கொள்ளத் தெரியாது. யாருக்குத்தான் தெரிகிறது என்று கேட்கலாம். நான் ‘எழுத்து’ பத்திரிகைக்கு முதலாம் ஆண்டு என் மகத்தான நண்பர்களில் ஒருவரான கி.ரா. அவர்களால் சந்தாதாரன் ஆனேன். (இது கரிசல் கி.ரா அல்ல). அப்போதே சி மணியுடையது அப் பன்னிரண்டு இதழ்களில் வந்திருக்கும். எனக்குப் பத்திரகையே ஒரு சோர்வு தந்தது. எழுத்தின் முக்கியக் கூறுகளைத் தவிர்த்து தவிர்க்கக்கூடியது மீத கவனம் செலுத்துவது போலிருந்தது.
நான் சந்தாதாரனாக இல்லாத போதிலும் அவ்வப்போது அது பார்க்கக் கிடைக்கும். நானும் சி சு செல்லப்பாவுமாகச் சேர்ந்து எது எதற்கோ நிதி, பேச்சாளர் என்று ஏற்பாடு செய்ய நிறைய அலைந்திருக்கிறோம். எஸ்.எஸ் வாசன், கிரிஷ் கர்னாட், எஸ்.கிருஷ்ணன், ஆருத்திரா என ஒரு நாளைக்கு ஒருவராகத் தடாலென்று போய் நிற்போம். அப்போது டெலிபோன் சாதாரண மக்கள் புழக்கத்துக்கு வரவில்லை.
செல்லப்பா ஒரு முறை கூட அவருடைய பத்திரிகையின் ஆதாரமாக விளங்கியவர்களைப் பற்றிச் சொன்னதில்லை. இந்தத் தருணத்தில்தான் இலக்கியச் சங்கம் என்றதொரு அமைப்பும், நடை என்ற பத்திரிகையும் தோன்றின. இதெல்லாம் எதற்கு என்று செல்லப்பா கேட்டதாக அந்த நண்பர்கள் சொன்னார்கள்.
‘இலக்கியச் சங்கம்’, ‘கோணல்கள்’ என்றதொரு சிறுகதைத் தொகுப்பை வெளியிட ‘நடை’ ஞானக்கூத்தன் கவிதைகளை வெளியிட்டது! என்னுடைய சிறுகதை ஒன்றை வெளியிட்டது! அப்போது சி மணி சைதாப்பேட்டை ஆசிரியர் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அநேகமாகத் தினமும் நாங்கள் சந்திப்போம். நிறையப் பேச இருந்தாலும் ஒருவரையும் குறை கூறவில்லை. நான் சேலம் வரவேண்டும் என்று எவ்வளவு முறை அழைத்திருப்பார்! நான் ஒருமுறை பேருந்துச் சீட்டு வாங்கிப் பயண தினத்தன்று மூச்சை விட முடியாமல் சீட்டை ரத்து செய்தேன்.
‘நடை’ ஐந்தாவது இதழின் போதே அவருக்கு அவநம்பிக்கை வந்துவிட்டது. நல்ல விஷயங்களாக வருவதில்லை என்று சொன்னார். எட்டாவது இதழோடு நிறுத்தி விட்டார். சி மணியின் ஒரு நண்பர் வி.து சீனிவாசன், எனக்கு மிகவும் ஆப்தமாக இருந்தார். அவருடைய விமர்சனம் தவறியதேயில்லை. அதே நேரத்தில் மிகவும் உற்சாகமாகவும் இருப்பார். அந்தச் சில மாதங்கள் மகிழச்சிகரமானதாக இருந்ததோட பல விதங்களில் எங்களை முன்னோடிகளாக்கியது! சி மணியே பதிப்பாளரானார். என்னுடைய நாவல் ‘கரைந்த நிழல்க’ ளை அவர் எவ்வளவு அக்கறையோடு வெளியிட்டு அதற்கு ஒரு பின்னுரையும் எழுதினார்! இவ்வளவு நெருக்கமாக இருந்தாலும் அவருடைய படைப்புகள் பற்றி அதிகம் பேச்செழுந்ததில்லை.
க.நா.சுவுக்கு சி மணியின் ‘எழுத்து’ கவிதைகள் பிடிக்கவில்லை. ஆனால் ‘வே மாலி’ கவிதைகள் பிடித்திருந்தன. இருவரும் ஒருவரே என்று அறிந்தபோது அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. நானும், சி மணியும் க்ரியாவின் அகராதிப் பணியின் தொடக்கத்தில் ஒரு வாரம் போலத் தினம் சந்திப்போம். ஷிஃப்மன் என்ற அமெரிக்கர் ஃபப்ரீஷியஸ் அகராதியை அடிப்படையாக வைத்து ஒரு தடிமனான கையெழுத்துப் பிரதியைக் கொணர்ந்தார். அதை அப்படியே வெளியிட்டால் அதற்கென்றே ஒரு துணை அகராதி வெளியிடத் தேவைப்படும் என்று கூறினோம். அது தொடக்கம்.
இன்று க்ரியா தற்காலத் தமிழ் அகராதி இரு சிறப்பான பதிப்புகள் கண்டிருக்கிறது. ஒரு கவிதையில் வந்த ‘தக்கோலம்’ என்ற சொல்லுக்கு இணை பார்க்க வேண்டியிருந்தது. அதுபோல ‘தட்டோ டி’ ‘விசல்’ ஆகிய சொற்களுக்கும். சில கவிஞர்கள் அகராதிகளை மீறியவர்களாகிறார்கள். சி மணிக்கு ‘ஆசான்’ விருது அளித்த நிகழ்ச்சிக்கு நான் போயிருந்தேன். அதுதான் நான் அவரைக் கடைசியாகப் பார்த்தது. இன்னும் என் முகவரி அட்டவணையில் அவருடைய சவுண்டம்மன் கோயில் தெரு முகவரிதான் இருக்கிறது. இவ்வளவு ஆண்டுகளில் அவர் அந்த முகவரியிலிருந்து மாறியிருக்கக் கூடும் இப்போது அது தேவையில்லாமல் போய்விட்டது.

இரங்கல்கள்

வைதீஸ்வரனின் தாயார் இறந்த தினத்தன்று அவர் வீட்டுக்குச் சென்றபோது நிறைய ஐம்பதாண்டு கால நண்பர்களைச் சந்திக்க நேர்ந்தது. எஸ் வி சகஸ்ரநாமம் என்பவர் போன்றோரின் விடாமுயற்சியில்தான் எம்.கே தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோரின் சிறை மீட்புக்கு வெற்றி கிடைத்தது. அப்போது இந்தியா சுதந்திரம் அடையவில்லை. கடைசி சரணாலயம் இங்கிலாந்திலுள்ள பிரிவி கவுன்சில் என்பது. வி.எல் எதிராஜ் என்பவர்தான் அதற்குரிய வக்கீல். ஏராளமான செலவு. எஸ் எஸ் வாசனிடமிருந்து கைப்பட ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலை சிறை மீட்பு நிதிக்காகப் பெற்றார் என்று கூறுவார்கள். என்.எஸ்.கிருஷ்ணன் சிறையில் இருந்தபோது அவருடைய நாடகக் குழு செயலிழந்து போகக்கூடாது என்று எஸ் வி சகஸ்ராமம் அக் குழு நாடகங்களைத் தினசரி அரங்கேற்ற வழி செய்தார். அப்படி நடிக்கப் பட்டதுதான் ‘மனோகரா’ நாடகம். அதில் மனோகரனாக நடித்தது. கே. ஆர் ராமசாமி. நாடகத்தில் வரும் ‘செயின்’ சீன் மிகவும் புகழ் பெற்றது. இது திரைப்படத்திலும் வரும். மேடையில் பொருந்தி போவது, திரைப்படத்தில் அபத்தமாகத் தோன்றும். அதில் இந்த ‘செயின்’ சீனும் ஒன்று. சிறைப் பிடித்து வரும் காவலாளிகள் கைதியின் பேருரைக்கு வசதியாக சங்கிலியோடு முன்னும் பின்னுமாக நகர்வார்கள். எஸ் வி சகஸ்ராமின் ‘பைத்தியக்காரன்’ நாடகமும் என்.எஸ். கிருஷ்ணன் சார்பில் நடத்தப்பட்டது. மேடையில் வெற்றிகரமாக இருந்த இந்த நாடகம் திரைப்படமாக அதிகம் சோபிக்கவில்லை.
ஆனால் எஸ் வி சகஸ்ராமம் யாருக்கும் நிழல் தரும் ஆலமரமாக வாழ்ந்தார். அவர் வீடு ஒரு சத்திரமாக இருந்தது. அவருடைய சகோதரர்கள், உறவினர்கள் நன்கு படித்த, பண்பாளர்களாக இருந்தார்கள். அவருடைய ஒரு சகோதரியின் மகன் என்.வி.ராஜாமணி என்னும் ராமநரசு. இன்னொரு சகோதரி மகன் வைதீஸ்வரன். ராமநரசு ஏன் ஜெமினி ஸ்டுடியோவைப் பணிபுரிய தேர்ந்தெடுத்தார்? அவர் கணக்கில் எம்.ஏ பட்டம் பெற்றவர். அப்போதே ஏதாவது கல்லூரியில் எளிதாகச் சேர்ந்திருக்கலாம். ஆனால் எனக்காகவென்று ஜெமினி தேர்ந்தெடுத்தார் என்று தோன்றுகிறது. அந்த நாளில் நான் யாருக்காக நண்பனானால் என்னை அப்படியே அவர்கள் குடும்பத்திலேயே சேர்த்துக் கொண்டு விடுவார்கள். எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. எனக்கு 21 வயது முடிந்திருக்கவில்லை. என்னுடன் ராமநரசுவின் தந்தையும் இதர உறவினர்களும் உலக விவகாரங்களை விவாதிப்பார்கள். நானும் இன்னொரு நண்பரும் எஸ் வி சகஸ்ராமத்துக்கும் ஒரு புனைபெயர் வைத்திருந்தோம். ‘மெளனி’. அவர் வீட்டில் எல்லோரும் ஏதேதோ பேசி, விவாதித்துக் கொண்டிருக்க, அவர் மட்டும் வாயே திறக்காது இருப்பார். அவருடைய தூண்டுதலில்தான் புதிய நாடகாசிரியர்கள் தோன்றினார்கள். அவர் மூன்றுமாத நாடகப் பள்ளி ஒன்று நடத்தினார். அதில் உருவானவர்தான் கோமல் சுவாமிநாதன். அவர் எழுதிய, தயாரித்த நாடகங்கள் எல்லாம் காலப்போக்கில் மறைந்து போய்விட்டன. ஆனால் அவருடைய வாழ்க்கையின் இறுதி நாட்களில் நடத்திய ‘சுபமங்களா’ பத்திரிகை இன்னும் பலருக்கு ஆதரிசமாக இருக்கிறது. அவரும் எனக்கு நண்பராகத்தான் இருந்தார். ‘நாம் முதலிலிருந்தே முற்போக்குத்தான். நாம் எதற்காகக் கட்சி கட்டும் கட்சிகளுடன் உறவு கொள்ள வேண்டும்,’ என்று என் வாதம். ஆனால் கோமலுக்கு அது வேண்டியிருந்தது.
ராஜாமணி, சகஸ்ரநாமம் இருந்த தாண்டவராயன் தெரு வீட்டில்தான் வைதீஸ்வரன் சில நாட்கள் இருந்தார். அவர் சில ஆண்டுகள் திருவல்லிக்கேணி திருவெட்டீசுவரன் பேட்டையில் இருந்தார். அவர் வீட்டருகில்தான் சி சு செல்லப்பாவோடு அமரத்துவம் அடைந்த 19 பிள்ளையார் கோயில் தெரு. கநாசுவும் பல ஆண்டுகள் 48 வாலாஜா சாலையில் இருந்தார். ஆனால் வீடு விஷயத்தில் பிரசுர விஷயத்திலும் செல்லப்பா அடைந்த வெற்றிகளை அவர் அடையமுடியவில்லை.
வைதீஸ்வரன் மூலம் நான் பரிச்சயம் பெற்ற உலகம் மிகவும் அகன்றது. எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எல்லாம் 21, 22 வயதுக்கு முன்பு. வைதீஸ்வரன் போலவே ஆர. கே ராமச்சந்திரன் மூவரும் அந்தக் குடும்பப் பரிவாரங்களே எனக்கு அறிமுகம் ஆனார்கள். அவர்கள் வீட்டில் இருக்க வேண்டும் என்றே தேவையில்லை. அங்கே இருப்பவர்களோடு பேசிக்கொண்டே இருப்பேன். சாப்பிடச் சொல்வார்கள். சாப்பிடுவேன். ஐந்தாறு முறை நேரமாகிவிட்டது, தூங்கி விட்டுக் காலையில் போ என்பார்கள். அப்படியே எந்த முன்னேற்பாடும் இல்லாமல்தான் அவர்கள் வீட்டிலேயே நிம்மதியாகத் தூங்கி விட்டுக் காலையில் வீட்டுக்குப் போவேன். என் தாயாருக்கும் இதெல்லாம் பழக்கப்பட்டு விட்டது. அப்போது தேடுவது, விசாரிப்பது என்றால் நேரே ஒருவர் போகவேண்டும்.
இதெல்லாம் வைதீஸ்வரன் வீட்டுத் துக்கத்தைப் பகிர்ந்து கொள்ளச் சென்றபோது நினைக்கத் தோன்றியது. அவர்கள் குடும்பத்தில் அநேகமாக அனைவருக்கும் சதுர வடிவ முகம். அவர்கள் அறிமுகம்தான் என்னை எழுதத் தூண்டியது என்றால் அது தவறாகாது.
என்னுடைய முதல் இரு சிறுகதைத் தொகுப்புகளுக்கும் ஞானக்கூத்தனும், வைதீஸ்வரனும்தான் முன்னுரை எழுதினார்கள். அதன் பிறகுதான் நான் முன்னுரைகள் எழுத வற்புறுத்தப்பட்டு இப்போது நான் முன்னுரைகளே படிப்பதில்லை. நல்ல வாசகர்கள் முன்னுரைக்கு முக்கியத்துவம் தரமாட்டார்கள்.
இவ்வளவு நீண்ட வரலாறுக்குச் சாட்சியாக நான் இருந்து கொண்டிருக்கிறேன். இரு மாதங்கள் முன்பு கூட என்னுடைய 50 ஆண்டு நண்பர் மெலட்டூர் விசுவநாதன் நொடிப்போதில் காலமானார். வைதீஸ்வரனின் தாயார் போல அவரும் மருத்துவமனை செல்லாமல் வீட்டிலேயே மெளனமடைந்தார். ‘கொடுத்து வைத்தவர்கள்’ என்று சொல்வதற்குச் சில அடையாளங்கள் உண்டு. அதில் ஒன்று மரணம். அது பகலில், வீட்டில் நடக்க வேண்டும். உற்றார் உறவினர் இருக்கும்போது நிகழ வேண்டும். மிக முக்கியமாக, நினைவுடன் உயிரை விட வேண்டும். தெலுங்கில் ஒரு பழமொழி உண்டு. மஞ்ச்சி மனுஷீக்கு மரணமே சாட்சி. நல்லவனுக்கு அவன் மரணம் அடையாளம்.
வைதீஸ்வரன் ஒரு குறும்புப் பார்வையுடன் ‘இந்த உடம்பை வைத்துக்கொண்டு இரங்கல் கூட்டங்களுக்குப் போகிறீர்கள்,’ என்றார். அவர் குறிப்பிட்ட கூட்டம் கிருத்திகா – சுகந்தி சுப்பிரமணியத்துக்காக நடத்தப்பட்ட கூட்டம். அன்று பேசிய ‘சிட்டி’யின் மகன் திரு வேணுகோபால் கிருத்திகாவின் இரு நாவல்களைப் படித்திருந்தார். நான் மூன்று படித்திருந்தேன். அந்தக் கூட்டத்திற்கு வந்த கூட்டம், பார்வையாளர்கள் எனக்கு ஆச்சரியமளித்தது. கூட்டத்திற்குச் சென்று வீடு திரும்பியவுடன் எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. சகஸ்ரநாமம் எழுத்தாளர்களை நாடகம் எழுதச் சொன்னார். வேண்டாம். இரங்கல் கூட்டங்கள் நடத்துங்கள் என்று கூறியிருந்தால் போதுமானது. (தயாராகிக் கொண்டிருக்கிற நவீன விருட்சம் 84வது இதழில் வெளியாகும்)

இரு பத்திரிகைகள்

முதுமையின் மிகப் பெரிய சோகம் நம்முடைய நண்பர்கள் ஒவ்வொருவராக மறைந்து கொண்டிருப்பார்கள் என்று இங்கிலாந்து எழுத்தாளர் சாமர்சாட் மாம் கூறினார். இதையே வேறு பலரும் கூறியிருக்கிறார்கள். தொண்ணூற்றொரு ஆண்டுகள் வாழ்ந்த மாம் பழுத்த அனுபவத்தால்தான் கூறியிருக்கிறார்.
‘மணிக்கொடி இதழ் தொகுப்பு’ படித்துக் கொண்டிருக்கும்போது எனக்கு மாம்மை நினைவுபடுத்தியவரை நண்பர் என்று கூற முடியாது. ஆனால் அவரை நிழலாகப் பல ஆண்டுகள் நான் அறிந்திருந்தேன். எனக்கு எட்டு அல்லது ஒன்பது வயதிருக்கும்போது, ‘ஆனந்தவிடனி‘ல் ஒரு கதை என் மனதை மிகவும் சங்கடப்படுத்தியது. குடிகாரனான தன் அப்பாவை ஒரு சிறுமி படுக்க வைத்து, உணவு கொடுத்துப் பாதுகாப்பாள். அச் சிறு வீட்டில் அவளும், அவள் தகப்பன் மட்டும்தான்.
அவன் வியாதி முற்றிப்போய்ப் படுக்கையிலேயே இறந்து விடுகிறான். அவன் இறந்து விட்டான் என்று தெரியாது. அவள் அவனுக்கு உணவு தர முயற்சி செய்வாள். இந்தக் கதை தொடர்ந்து நினைவில் இருந்து வருவதற்கு இன்னொரு காரணம் அது ஒரு முஸ்லிம் கதை. அது முஸ்லிம் கதை என்று அடையாளப் படுத்த அப் பெண்ணின் பெயருடன் அவள் தன் அப்பாவை ‘வாப்பா’ என்று அழைப்பாள்.
இரண்டு மூன்று ஆண்டுகள் கழித்து ‘ஆனந்தவிகட’னில் இன்னொரு முஸ்லிம் கதை. அதை எழுதியவருக்குச் சிறுகதைப் போட்டியில் அது முதல் பரிசு பெற்றுத் தந்தது. கதையின் பெயர் ‘கல்லறை மோகினி’. எழுதியவர் மீ ப சோமு. இதிலும் ‘வாப்பா’, ‘மவுத்’, ‘நிக்கா’ எல்லாம் உண்டு. இந்தக் கதைக்குக் கதைச் சுருக்கம் தருவது நியாயமல்ல. பரிசுதான் தரலாம்.
நான் முதலில் சொன்ன கதையை எழுதியவர் ம ஆலி சாஹிப். ‘மணிக்கொடி’ பத்திரிகையிலும் ஒரு கதை எழுதியிருக்கிறார் (அவர் இன்னும் பல கதைகள் எழுதியிருக்கக் கூடும்). அதிலும் முடிவு சாவில்தான். இன்றைக்குச் சரியாக 63 ஆண்டுகள் முன்பு எழுதியிருந்தாலும் அது வடிவத்தில் ஒரு நவீனக் கதை. ‘ஆனந்தவிகடன்’ கதையும் நவீனக் கதையே.
இவருடைய பெயரை எப்படி உச்சரிப்பது என்று புதிராக இருந்ததாலேயே அவருடைய பெயரை எளிதில் மறக்க முடியவில்லை. அவரை நான் சந்திக்க நேரும் என்று அப்போது நான் நினைத்திருக்க முடியாது.
ஆனால் சென்னையில் ஜெமினி ஸ்டுடியோவில் வேலைக்குச் சோந்தவுடன் முதல் நாளிலேயே சந்தித்த நபர்களில் அவரும் ஒருவர். எனக்கு மேஜையிருந்த ‘கோஹினூர்’ கட்டிடத்தில் அவருக்கும் ஒரு மேஜை போடப்பட்டிருந்தது. அந்தக் ‘கோஹினூர்’ கட்டிடத்திலேயே இன்னொரு முஸ்லிமும் இருந்தார். அவர் சையத் அகமத். ம ஆலி சாஹிப் கதை எழுதுபவர். சையத் அகமத் ஆர்ட் டைரக்டர். அவர் விளம்பர டிசைன்கள் செய்து கொண்டிருப்பார். ஜெமினிகதை இலாகாவில் ம ஆலி சாஹிப்பும் இருந்தார்.
வாரத்திற்கு நான்கு ஐந்து முறை ஜெமினி முதலாளி கதை இலாகாவினருடன் சேர்ந்து பேசுவார். அந்த அறை சாதாரணமான கட்டிடம். ஆஸ்பெஸ்டாஸ் கூரை. இரண்டு பெரிய ஜன்னல்கள். யார் யார் இருக்கிறார்கள், என்ன பேசுகிறார்கள் என்று வெளியில் இருந்தபடியே தெரிந்து கொள்ளலாம். எல்லோரும் சகஜமாக உரத்துப் பேசுவார்கள். வெற்றிலைப் பாக்குப் புகையிலை போடுவார்கள். எல்லோருமாகச் சேர்ந்து டிபன் சாப்பிடுவார்கள். ஏதோ சில நண்பர்கள் கூடி விவாதம் நடத்துவது போல் இருக்கும். ஜெமினி ஸ்டுடியோவிலும் சிக்கனம் கடைப்பிடிக்க வேண்டி வந்தபோது இந்த இலாகா கலைந்து போயிற்று.
ம ஆலி சாஹிப் தன் மேஜையைக் காலி செய்யும்போது அந்த அறையில் நான் இருந்தேன். மாதாமாதம் சம்பளம் என்பது போய் இனி என்ன செய்யப் போகிறோம் என்ற கவலை அவரிடம் இருந்தது.
அவரை எந்த உத்தியோகத்திலும் பொருத்திப் பார்க்க என்னால் முடியவில்லை. கதை இலாகாவில் அவருடைய பங்களிப்பு இருந்திருக்க வேண்டும். ‘மணிக்கொடி’யில் அவர் பிரசுரமான எழுத்தாளரல்லவா? இந்தி சினிமாவில் பல முஸ்லிம் கதைகள் இடம் பெற்றிருக்கின்றன. இந்திய சுதந்திரத்திற்கு முன்பு இது நிறையாவே நிகழ்ந்திருக்கிறது. சுதந்திரத்திற்குப் பின்பும், முஸ்லிம் கதைகள், முஸ்லிம் பாத்திரங்களுக்குத் தொடர்ந்து பிரதிநிதித்துவம் இருந்திருக்கிறது. மலையாள சினிமாவில் ஓரளவு முஸ்லிம் கதைகள், பாத்திரங்கள் இடம் பெற்றிருக்கின்றன.
தமிழ் சினிமாவில் தொழில் நுட்பத் துறையில் சிலர் இருந்திருக்கிறார்கள. ‘மணிக்கொடி இதழ்த் தொகுப்பில்’ ம ஆலி சாஹிப் பெயரைப் பார்த்தவுடன் இதெல்லாம் நினைத்துப் பார்க்க வாய்ப்புக் கிடைத்தது.
ஜெமினி ஸ்டுடியோவில் அடுத்த கட்ட சிக்கன நடவடிக்கையில் சையத் அகமதும் விலக வேண்டியிருந்தது. ‘கோஹினூர்’ கட்டிடத்தில் சில மாதங்கள் நான் தன்னந்தனியனாக இருந்தேன். சையத் அகமதுக்குத் தனி அறை. அது பூட்டியிருந்தது. ஆனால் ம ஆலி சாஹிபுடைய மேஜை நான் உட்கார்ந்த அறையில்தான் இருந்தது. எனக்கு இப்போதும் சிறிது சந்தேகம்தான். அவர் பெயரை எப்படி உச்சரிப்பது? ‘மணிக்கொடி இதழ்த் தொகுப்பில்’ என் பெயர் இருந்தாலும் என் பங்கு மிகவும் குறைவு. முதலில் ‘மணிக்கொடி’ இதழ்களே கிடைக்கவில்லை. ஒருவரைக் கேட்டால் இன்னொருவரைக் காட்டுவார். அவரைக் கேட்டால் வேறின்னொருவரைக் காட்டுவார். ஆதலால் கிடைத்த சில இதழ்களிலிருந்து தேர்ந்தெடுத்தது அதிகம் இல்லை. நல்ல வேளையாக சிட்டி, முத்துகுமாரசுவாமி ஆகியோர் முயற்சியில் நூல் இப்போது சிறப்பான, கணிசமான தொகுப்பாக அமைந்திருக்கிறது.
‘சரஸ்வதி களஞ்சியம்’ சரஸ்வதி ஆசிரியர் விஜயபாஸ்கரனாலேயே தொகுக்கப் பட்டிருக்கிறது. புதிய தமிழ் இலக்கிய வரலாறில் ‘சரஸ்வதி’ இதழின் பங்கு ‘மணிக்கொடி’க்கு எவ்வகையிலும் குறைந்ததில்லை. ‘மணிக்கொடியில்’ ஆசிரியர் பங்கு என்ன என்று நிர்ணயித்துக் கூறுவது கடினம். ஆனால் ‘சரஸ்வதி’ யில் ஆசிரியர்தான் பிரதான சக்தி. விஜய பாஸ்கரன் மகத்தான பத்திரிகையாசிரியராக இருந்திருக்கிறார்.
தமிழகத்தின் வரலாறுடன் அரசியல் போக்கும் மிகச் சூசமாக ‘சரஸ்வதி களஞ்சிய’த்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு பெரிய வீரர்களாக வலம் வந்தவர்கள், இந்தத் தொகுப்பு மூலம் சரியான அளவை எய்திருக்கிறார்கள். நாளெல்லாம் ஊருக்கு உபதேசம் செய்து வரும் அரசியல் கட்சி மறைமுகமாக எப்படியெல்லாம் நடந்து கொண்டிருக்கிறது என்று அறிய வரும்போது வருத்தமாகயிருக்கிறது.
ஐம்பதுகளில் உருவான இரண்டே இரண்டு நல்ல எழுத்தாளர்கள் என்று சுந்தர ராமசாமியையும், ஜெயகாந்தனையும் கநாசு பலமுறை தன் கட்டுரைகளில் குறிப்பிட்டிருக்கிறார். அவர்கள் வளர்ச்சியில் ‘சரஸ்வதி’ பத்திரிகைக்கு முக்கிய பங்கிருந்திருக்கிறது. ஜனநாயக முறையில் நிறைய விவாதங்களுக்கு இடம் அளித்திருக்கிறது. ஒரு விவாதம் புதுமைப்பித்தன் பற்றி.
இதையெல்லாம் மிகுந்த பக்குவத்துடனும் விரிவான மனதுடனும் விஜயபாஸ்கரன் தொகுப்பில் சேர்த்திருக்கிறார். சென்ற ஆண்டும் இந்த ஆண்டும் புதுமைப்பித்தன் பற்றி மிகத் தீவிரமாகவும் பகிரங்கமாகவும் பரிமாறிக் கொண்டவர்கள் ‘சரஸ்வதி களஞ்சிய’த்தைப் படித்தால் சந்தர்ப்பங்களுக்கேற்ப மனிதர்கள் எப்படி மாறிக் (மாற்றிக்) கொணடிருக்கிறார்கள் என்று புலனாகும்.
எனக்கு மிகவும் ஒளியூட்டியது 1959 ம் ஆண்டில் தமிழ் எழுத்தாளர் சங்கத் தேர்தல் பற்றிய சர்ச்சை. தமிழக அரசியல்வாதிகள் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே நாணயத்துக்கு ஒரு புது இலக்கணம் வகுத்திருப்பதைத் தெரிந்துகொள்ள முடிந்தது. இந்த மூவாயிரம் ஆண்டில் முதல் மகத்தான செய்தி நிருபராக ‘மகாபாரத’ சஞ்சயனைக் கூறலாம். பாரபட்சமின்றி பதினெட்டு நாள் யுத்தத்தின் முக்கிய தகவல்கள் அனைத்தையும் திருதிராஷ்டிரனுக்குச் சொன்னவர் சஞ்சயன்.
விஜயபாஸ்கரனின் ‘என்னுரை’யிலுள்ள தகவல்களை அவர் ஒரு முறை என்னிடம் நேராகவே கூறினார். அது 1969 அல்லது 1970ம் ஆண்டாக இருக்கும். எனக்கு அப்போது அவர் சொன்னது எதுவுமே புரியவில்லை. ஒரே காரணம், அவர் சொன்ன விஷயங்கள் குறித்து என்னுடையப் பரிச்சயமின்மை. இன்று அவருடைய எழுத்தில் அவை பற்றிப் படிக்கும்போது பெரிய புதிர் தீர்க்கப்பட்ட உணர்வே கிடைத்தது.
மகத்தான பத்திரிகையாசிரியராக இயங்கிய விஜயபாஸ்கரன் மகத்தான தொகுப்பாசிரியராகவும் கூட என்று ‘சரஸ்வதி களஞ்சியம்’ நிரூபிக்கிறது. ‘சரஸ்வதி’ பத்திரிகைதான் முதன் முதலில் இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களுக்கு மற்றவரோடு சம இடம் கொடுத்து வெளியிட்டிருக்கிறது. விஜயபாஸ்கரன் ஒரு கம்யூனிஸ்டாக இருந்தபடியால் ‘முற்போக்கினர்’ நிறையவே பத்திரிகையில் இடம் பிடித்திருக்கிறார்கள். இலங்கை கைலாசபதி உட்பட. இவர்களுக்கெல்லாம் க நா சுவின் இலக்கியத்திடம் பெரிதும் தொந்தரவுபடுத்தியிருக்கிறது. அவர்களுக்கு ஒரு பெரிய சௌகரியம், க நா சு வெறும் எழுத்தாளர் மட்டுமே. அவரே ஒரு பல்கலைப் பேராசிரியராகவோ அரசு அதிகாரியாகவோ இருந்திருந்தால் இவர்கள் இவ்வளவு வீராவேசம் காட்டியிருப்பார்களா என்பது சந்தேகமே.
கநாசு கட்டுரை இத் தொகுப்பில் இருக்கிறது. டைப்ரைட்டர் சகிதமாகச் சென்னையில் ஓர் அறையில் அவர் குடியேறினார் என்பதற்குத்தான் எவ்வளவு கட்டுடைத்தல்? ஆனால் ‘சரஸ்வதி’யில் க நா சுவின் எல்லாக் கட்டுரைகளுமே முக்கியத்துவம் உள்ளதோடு தொடர்ச்சியும் கொண்டதாக உள்ளன. உதாரணத்துக்கு, ‘திருக்குறள்’ பற்றிய விவாதம். ‘சாமர்சட் மாம்’ சமீபத்தில் இன்னொரு சந்தர்ப்பத்திலும் நினைக்கப்பட்டிருப்பார். வி எஸ் நைப்பால் எழுதிய புதிய நாவல் ‘அரை வாழ்க்கை’ நாயகனுக்கு அவனுடைய தகப்பனார் சாமர்சட் என்ற சொல்லைப் பெயருடன் சேர்த்திருக்கிறார். காரணம், அந்த எழுத்தாளர் மீதுள்ள அன்பு. இது அவருடைய கதைகளுக்காக அல்ல.
சாமர்சட் மாம் ஆன்மிகப் புதிருக்கு விளக்கம் கிடைக்குமாவென இந்தியாவுக்கு வந்தவர்களில் ஒருவர். அவருடைய ஒரு நாவலில் இந்தியா இடம் பெறும். அவர் எந்தத் துறவிகளைப் பார்த்தார் என்று தெரியாது. ரமணரைப் பார்த்தார் என்று நினைக்கிறேன். நைப்பாலுக்கு ஆர் கே நாராயணனைப் பிடிக்காது என்று ஒரு முறைக்கு இரு முறையாகக் கூறியிருக்கிறார்.
ஆனால் ‘அரை வாழக்கையில்’ பல இடங்கள் அதுவும் ஆரம்ப அத்தியாயம் நாராயணனைத்தான் நினைவுப்படுத்தும். நாராயணன் அவருடைய ‘வேர்’களைத் தாண்டி எழுத முற்பட்டதில்லை. நைப்பால் நாடுநாடாகச் சென்று எழுதியிருக்கிறார். சில பௌதிகப் பார்வைகள் ஓர் அயலானுக்குக் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் அதை வைத்துக்கொண்டு புனைகதை முயற்சி செய்வது ஆபத்தானது. இந்த ‘அரை வாழ்க்கை’யில் ஆசிரியரின் வேரற்ற நிலை நன்கு தெரிகிறது.
நைப்பாலின் ஆங்கில நடை பற்றி பல விமர்சகர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். மிகவும் எளிமையான நடை. நாராயணனின் நடையும் மிகவும் எளிமையானதுதான். இந்த எளிமை கைவருவதற்கு நிறையப் பயிற்சி தேவை.
(இறுதியாக ஒரு தகவல். அறுவை சிகிச்சை முடிந்து நான் வீட்டினுள் நடமாடக்கூடிய அளவு நலமுற்றிருக்கிறேன். ஜூலை – செப்டம்பர் 2001 ல் நவீன விருட்சம் இதழில் பிரசுரமான கட்டுரை)

நூலகங்களின் தேவை

ரு காலத்தில் சில தனியார் நூலகங்களில்தான் நல்ல புத்தகங்கள் இருக்கும். அரசு நூலகங்கள் மிகவும் குறைவு. நகரங்கள், சில முக்கிய ஊர்கள்தான் இந்த நூலகங்களைப் பெற்றிருக்கும். இந்தியா சுதந்திரம் பெற்றவுடனேயே நூலகங்கள் பெரிய அளவில் வளர்ச்சி பெறவில்லை. ஐம்பதாண்டுகள் முன்பு கூட மொத்தமாக நூறு பிரதிகளுக்கு நூலக உத்தரவு கிடைக்காது. ஒவ்வொரு மாவட்ட கல்வி அதிகாரியின் அங்கீகாரம் கிடைத்த பிறகுதான் அந்த மாவட்டத்திலுள்ள நூலகங்கள் சிலவற்றுக்குப் பிரதிகள் வாங்கப்படும். பதிப்பாளரே அந்த முப்பது நாற்பது நூலகங்களுக்கு தனித்தனியாக நூலும் நூலுக்கான விலை உத்தரவு ரசீதையும் அனுப்ப வேண்டும். இதைத் தவிர அந்த ரசீதின் நகலையும் அந்தக் கல்வி அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். எல்லா நூலகங்களுக்கும் பிரதிகள் கிடைத்து விட்டன என்ற தகவல் கிடைத்தபிறகு பதிப்பாளருக்கு முதலில் ஓர் ஒப்பந்தங் கடிதம் அனுப்பப்படும். அவர் இப்போது மொத்தப் பிரதிகளுக்கும் சேர்த்து ஒரு ஒப்புதல் ரசீதை அனுப்ப வேண்டும். அதன்பிறகு பணத்திற்குக் காத்திருக்க வேண்டும். அந்த நிலை இப்போதில்லை. இப்போது பிரதிகளும் நிறைய வாங்கப் படுகின்றன. ஆதலால் இந்த நூலக ஒப்புதல் உத்தரவு முக்கியத்துவம் அடைகிறது. இது நூல்கள் என்றில்லாமல் பத்திரிகைகளுக்கும் பொருந்தும். பல பத்திரிகைகளை நூலகங்களில்தான் காணலாம். ‘காலச்சுவடு’, ‘நவீன விருட்சம்’ போன்ற பத்திரிகைகள் நூலகங்களுக்குப் போனால்தான் நிறைய வாசகர்களை எட்ட முடியும். குடும்பத்திற்கு எல்லாருக்குமானவை என இயங்கும் வெகுஜனப் பத்திரிகைகளை நூலகங்கள் வாங்க வேண்டிய கட்டாயம்கூட இல்லை. சிறு பத்திரிகைகள் எல்லாமே வாசகர்களை மதிப்பவையாகாது. பல சந்தர்ப்பங்களில் இப் பத்திரிகைகளின் பக்கங்கள் ஒரு தனி நபர் விமரிசனத்துக்காகவே ஒதுக்கப்படுள்ளனவோ என்று தோன்றும். அதேபோல வழிபாடும் நடக்கும். நூலகங்களில் பத்திரிகைகள் வாங்குவது ஓரளவு அப்பத்திரிகைகளுக்கும் ஒரு சுயக்கட்டுப்பாடை ஏற்படுத்தும். பொறுப்புடன் நடத்தப்படும் சிறு பத்திரிகைகள் இருக்கின்றன. அவற்றை நூலகங்கள் வாங்குவது மிக அவசியம். அத்தகைய பத்திரிகைகளை வாங்குவதை நூலகங்களின் பொறுப்பு, கடமை என்று கூடக் கூறலாம். தமிழக அரசே நடத்தும் ‘தமிழரசு’ மத்திய அரசு நடத்தும் ‘போஜனா’ போன்ற பத்திரிகைகளை நூலகத்தில்தான் படிக்க முடியும். அயல் நாட்டு விநியோகத்திற்கென்று மிக மெல்லிய உயர் ரகத் தாளில் மத்திய அரசு ஒரு பத்திரிகை நடத்தி வந்தது. அது இப்போதும் வெளியிடப் படுகிறது என்று நினைக்கிறேன். மகிச் சிறந்த கட்டுரைகள் கொண்டிருக்கும். நூலகங்களிலேயே மிகச் சில நூலகங்களில்தான் அது படிக்கக் கிடைக்கும். சிறு பத்திரிகைகளின் பொருளாதரத்திற்கு ஓரளவு உதவும் இந்த நுலகங்கள் மதிக்கத்தக்கதாக அமைவதற்கு அதற்கு வரும் நல்ல பத்திரிகைகளைச் சார்ந்திருக்க வேண்டும். *********************** நூலகங்கள் இப்போது நிறைய வெளியடப்படுகின்றன என்று கூறும் அதே வேளையில் அவற்றின் தரத்தைப் பற்றியும் நினைக்க வேண்டியிருக்கிறது. ‘எனி இந்தியன்’ என்ற பதிப்பக வெளியீட்டுப் பட்டியலைப் பாரத்து எண்ணிக்கை மீது இவ்வளவு நம்பிக்கை வைக்கிறார்களே என்று தோன்றியது. ஆனால் அவர்கள் நூலகளைத் தனித்தனியாகப் படித்தபோது இவ்வளவு நல்ல நூல்கள் எப்போது எழுதப்பட்டன, வெளியிடப் படுவதற்காக எவ்வளவு நாட்கள் காத்திருந்தன என்று எண்ணும்படியாக இருந்தது. அதேபோல அந்த நிறுவனம் வெளியிடும் பத்திரிகையான ‘வார்த்தை’ கண்ணியத்துக்கு ஓர் எடுத்துக்காட்டாக உள்ளது. **********************
தமிழ் சினிமாவுக்கு எழுபத்தைந்து ஆண்டு நிறைவு எனச் சில கொண்டாட்ங்கள் இருந்தன. பழைய படங்களின் நிழற்படங்கள், தீ மற்றும் வேதியல் மாற்றங்களிலிருந்து தப்பிப் பிழைத்துச் சில படங்களின் துணுக்குகளைக் காண்பித்துக் கொண்டாட்டம் நிறைவு பெற்றது. ஆனால் இந்த எழுபத்தைந்து ஆண்டு முடிந்து தமிழ் சினிமாவுக்கு இன்னும் ஒரு வரலாறு எழுதப்படவில்லை. இருக்கிறது, பரமசிவம் எழுதியிருக்கிறார், பரமானந்தன் எழுதியிருக்கிறார் என்று உடனே சிலர் குரல் எழுப்பக்கூடும். ஆனால் பட்டியல்கள் போதாது. அந்தப் பட்டியலில் கூடத் தவறுகள் உள்ளன என்று அந்த நூலின் பின்னிணைப்புக் கூறும். ராண்டார் கை என்பவர் ஆங்கிலத்தில் பல பத்திரிகைகளில் தொடராக எழுதியிருக்கிறார். அவை நூலுருவில் வெளிவரவில்லை. இதுவரை வெளிவந்து, நான் பார்த்த நூல்கள் அதிகம் திருப்தி அளிக்கவில்லை. வரலாறு எழுதுவதற்கு ஆர்வம் வேண்டும். ஆனால் ஆர்வம் மட்டும் போதாது. சிந்தனையிலும் எழுதுவதிலும் ஒரு கட்டுப்பாடு வேண்டும். கட்டுப்பாடு இல்லாத எழுத்து சுவாரசியமாக இருக்கலாம். ஆனால் நம்பகத்தன்மையே இருக்காது. உதாரணத்திற்கு உர்து எழுத்தாளர் சாதத்ஹஸன் மண்ட்டோ இந்தி சினிமா பற்றி எழுதிய கட்டுரைகள். அந்த நாளில் இந்தி சினிமாவில் நடிகைகள் தொண்ணூறு சதவீதம் ஏழை முஸ்லிம்கள். உண்மையில் அவர்கள் மிகுந்த மன உளச்சல், வேதனைக்கு நடுவில்தான் பிழைப்புக்காக அவர்கள் சினிமாத் துறையில் இருக்க வேண்டியிருந்தது. இன்றுள்ள பாதுகாப்பும் பணவசதியும் அன்று கிடையாது. பெரிய நட்சத்திரமாக விளங்கியவர்கள் கூடப் புறநகர் ரயிலிலும் பேருந்துகளிலும் வேலைக்குப் போக வேண்டியிருந்தது. நாம் எதை எதையோ பாபம் என்கிறோம். அப்படி உழைத்த பெண்களைக் கேலயாகவும் தாழ்வாகவும் நினைப்பது மிகப் பெரிய பாபம் என்று நினைக்கிறேன். மண்ட்டோ கட்டுரைகள் என்றில்லை, இன்னும் பல எழுத்தாளர்கள் அன்றைய நடிகைகள் பற்றி எழுதியுள்ள நூல்களும் கட்டுரைகளும் இந்த அம்சத்தில் குறையுள்ளவை. சினிமாவை மட்டும் மதிப்பீடு செய்யும் வரலாற்றாசிரியர் இன்று மிகவும் தேவை. நடிக நடிகர்கள் முக்கிய பொருளாகக் கொண்டு இன்று நிறைய நூல்கள் வெளிவருகின்றன. ஆங்கிலத்தில் ஏராளமாக வந்திருக்கின்றன. சினிமா நூல்களுக்கென்றே ஒரு தனி புத்தகக் கடை வைத்துவிடலாம் என்று எண்ணும் அளவுக்கு நூல்கள் உள்ளன. ஆனால் ஓரளவு நம்பகத்தன்மை கொண்ட இந்தி சினிமா வரலாறு கிடையாது. எல்லோருக்கும் உதிரி உதிரியாக எழுதத் தோன்றுகிறது. பிமல் ராய் என்றொரு (வங்காள மற்றும் இந்தி சினிமா) டைரக்டர் – தயாரிப்பாளர் பற்றி அவருடைய மகளே ஒரு நூல் எழுதியிருக்கிறார். பிமல் ராயின் எதிரிகூட ஒரு சரியான வரலாறைக் கூறியிருக்கலாம். இன்று வரை வெளிவந்த இந்தி சினிமாக்களில் மிக உன்னதமானது என்று பெரும்பாலதனோர் கருதும் ஒரு திரைப்படத்தை நடிகர் தேவ் ஆனந்த் தயாரித்தார். அது ஒரு நாவலைத் தழுவியது. அதற்கான கட்டணம் செலுத்தப்பட்டது. ஆனால் திரைப்படத்தை, நூல் ஆசிரியர் பல்வேறு இடங்களில் மிகக் கடுமையாக விமரிசித்தார். நாவலும் திரைப்படமும் வெவ்வேறு தேவையும் வீச்சும் கொண்டவை. நீலகண்ட சாஸ்திரி வரலாறில் ஒரே வரியில் எழுதியதை கமலஹாசன் திரைபடத்தில் ஒரு பாட்டு, நிறையப் படகுகள், ஏசு கிறிஸ்து வரலாறில் உள்ளபடி சவுக்கடி (முதலில் இந்தக் கருவி தென்னிந்தியாவில் பன்னிரண்டாம் நூற்றாண்டில் இருந்ததா என்று எனக்குச் சந்தேகம்தான்) எல்லாவற்றையும் கலந்து பத்து நிமிடங்கள் ‘தசாவதாரத்தில்’ நிகழ்த்திக் காட்டினார். குலோத்துங்க சோழன் வைணவச் சத்ருவாக இருந்தால் விக்கிரத்தின் மூக்கைத் தட்டியிருந்தாலே போதும். தேவ் ஆனந்தின் சுய சரித நூல் இந்த வருட ஆரம்பத்தில் வெளிவந்தது. ஆனால் அதில் அவர் யாரையும் குற்றம் குறை கூறவில்லை. அவருக்கும் வாழ்க்கையில் பெரும் ஏமாற்றங்கள், இழப்புகள் இருந்திருக்கின்றன. இந்தச் சுயசரிதையும், திரைப்பட வரலாறாக எடுத்துக்கொள்ள முடியாது. தேவ் ஆனந்தின் பண்புக்கு எடுத்துக்காட்டாக வைத்துக்கொள்ளலாம்.

துங்கபத்திரை


எனக்கு நினைவு மங்கிக்கொண்டு வருகிறது என்று சொன்னால் சட்டென்று நம்ப மறுக்கிறார்கள். நுண்ணிய தகவல்கள் நினைவுக்கு வராது. ஆனால் அனுபவம் நிலைத்திருக்கிறது.

பாவண்ணனின் ஆரம்பக் கதை ‘கணையாழி’ யில் வெளியானது. இரு எழுத்துக்களில் தலைப்பு என்ற ஞாபகம். ‘இந்த இளைஞன் எவ்வளவு நன்றாக எழுதியிருக்கிறான்! தொடர்ந்து எழுதிப் புகழ் பெற வேண்டும்!’ என்று நினைத்துக் கொண்டேன். வெகு நேர்த்தியான கையெழுத்து. நல்ல கதையொன்று தபாலில் வந்தால் அது எழுதப்பட்ட விதத்திலிருந்து அந்தக் கையெழுத்துக்குரியவர் எப்படி இருப்பார் என்று சில நிமிடங்கள் யோசிப்பேன். நான் அன்று நினைத்தது பொய்த்துப் போகவில்லை.

சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு ஐந்து அமெரிக்க எழுத்தாளர்களுடன் கலந்து ஒரு படைப்புக்களம் புது டில்லியில் நடந்தது. அதற்குப் பாவண்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். தமிழ்ப் பிரிவு நடந்தது போல எந்த மொழிப் பிரிவும் நடக்கவில்லை. அவற்றில் இருந்த மூத்த எழுத்தாளார்கள் அவர்களைப் பற்றியே பேசிக்கொண்டு மூன்று நாளையும் முடித்தார்கள் என்று கூறினார்கள். ஒரு பயிற்சியாக ஒரு பத்திரிகைச் செய்தியை அடிப்படையாகக் கொண்டு இரு பக்கங்களில் ஒரு புனைகதை எழுதச் சொன்னேன். ஐந்து பேரும் ஐந்து வெவ்வேறு சிறந்த கதைகளை எழுதியிருந்தார்கள்.

இந்த மாதம் (ஏப்ரல் 2008) பாவண்ணனின் கட்டுரைகள் ஒரு தொகுப்பாக வந்திருப்பதைப் படிக்க நேர்ந்தது. பதினாறு கட்டுரைகள். பல கட்டுரைகள் நேரடியாகக் கர்னாடகத்தைக் களமாகக் கொண்டவை. பாவண்ணன் பயணம் மேற்கொள்ள தயக்கமில்லாதவர் என்றும் தெரிந்தது. ஒவ்வொரு கட்டுரையும் ஆழமான சிந்தனைகளில் வெளியானது. மிகவும் மகிழ்ச்சியாயிருந்தது. ஓரிடத்தில்கூட அபசுவரம் இல்லாத பக்குவமான தேர்ந்த எழுத்து. நான் சமீபத்தில் பாவண்ணன் வசிக்கும் பெங்களூருக்குச் சென்றிருந்தேன். அங்கிருந்த இரு நாட்களிலும் உடல் நலமில்லை. நான் தங்கியிருந்த வீட்டினருடன் கூடச் சரியாகப் பேச முடியவில்லை. பாவண்ணனைச் சந்திக்கவில்லை. இன்னும் பல நண்பர்கள், உறவினர்களையும் பார்க்க முடியவில்லை. நான் தொலைபேசியில் கூடப் பேசவில்லை.

இன்று நான் படித்த ‘துங்கபத்திரை’ நூலை அன்று படித்திருந்தால் ஒரு வேளை பாவண்ணனைப் பார்க்க முயற்சி செய்திருக்கக் கூடும். அடுத்த முறை என்பது எனக்கு இருக்குமா என்று சந்தேகமாக இருக்கிறது.
**********

நான் சிறுவனாக இருந்தபோது ஒரு முறை துங்கபத்திரையைக் கடந்தேன். அது 1941-ம் ஆண்டு. நாங்கள் போய்த் தங்கப் போகும் வீடுகளுக்குக் கொடுப்பதற்காகத் துவரம்பருப்பையும் உளுத்தம்பருப்பையும் சிறு சிறு மூட்டைகளாகக் கட்டி அவற்றைப் படுக்கைச் சுருளில் எடுத்துச் சென்றோம். அன்று தானியங்கள் ஓசூரிலிருந்து இன்னொரு ஊர் எடுத்துச் செல்வது குற்றம். என்ன சட்டம், என்ன விதி என்று தெரியாது. ஆனால் பிடிபட்டால் நடுவழியில் இறக்கி விட்டுவிடுவார்கள். இரயிலில் படுக்கையையே நாங்கள் பிரிக்க மாட்டோம்.

இரண்டாம் முறை ஹம்பி பார்க்கச் சென்றபோது பாவண்ணன் ஹம்பி பற்றி எழுதியிருப்பாரோ என்று எண்ணினேன். ஹம்பி என்ற விஜயநகரம் மிகப் பெரிய நகரம். குறுக்கே துங்கபத்திரை ஓடுகிறது. செங்கல் சுண்ணாம்புக் கட்டிடங்கள் முன்னூறு நானூறு ஆண்டு இருக்க வாய்ப்பில்லை. ஆனால் நிறையக் கட்டிடங்கள் கருங்கல்லால் கட்டப்பட்டவை. கோயில்களும். எவ்வளவு பெரிய நரசிம்மர்! ஆனால் ஒரு சிற்பம் ஒரு சிலை தப்பவில்லை. பாமினிஅரசர்கள் ஆறு மாதங்கள் கல்லுளியும், சுத்தியலும் கட்டப்பாரையும் கொண்டு ஆட்களை விட்டு ஓரங்குலம் விடாதபடி உடைத்திருக்கிறார்கள். அந்தப் பாமினி வம்சத்துக்குப் பெயரே ஒரு ‘பொம்மன்’ (பிராமணன்) ஆசியால் ஏற்பட்டது என்று ஆங்கிலேயர்கள் எழுதிய வரலாறிலேயே இருக்கிறது. விஜயநகர அரசனைத் தோற்கடித்துத் துரத்தியாகிவிட்டது. ஆனால் நகரத்தை வென்றவர்களே பயன்படுத்தியிருக்கலாமே?

சென்ற வாரம் நடந்த ஒரு நிகழ்ச்சியையே எவ்வளவு விதவிதமாக வெவ்வேறு குழுக்கள் சித்திரிக்கின்றன? ஐம்பது ஆண்டுகள் நூறு ஆண்டுகள் பற்றி எப்படி உறுதியாக இருக்க முடியும்? இரண்டாயிரம் ஆண்டுகளாக வரலாறைக் கூறியே யூதர்களை எல்லாருமே சேர்ந்து வேட்டையாடினார்கள். இரண்டாம் உலக யுத்த நாட்களில் மிகக் கொடூரமாக இயங்கிய யூத அழிப்புச் சாலையாக விளங்கிய ஆஷ்விச் அனுபவத்திலிருந்தும் தப்பியவர் ஒருவரின் செய்தி படித்தேன். அந்த 1944 ஆண்டில் அவருடைய வயது 15. ஆதலால் எல்லாம் தெளிவாகத் தெரியக் கூடிய பருவம். “இன்றும் நினைவுகள் துரத்துகின்றன. ஆனால் இந்த நினைவுகள்தான் எனக்குக் கவசமாகவும் தோன்றுகின்றன,” என்று அந்தக் கிழவர் கூறியிருக்கிறார்.

(நவீன விருட்சம் 79-80 வது இதழில் வெளிவந்த கட்டுரை – July 2008)