மரமாகி நின்ற மரம்
பச்சையம் நீர்த்து உதிர்ந்துகொண்டிருக்கும்
இலையொன்றினை
முதுகில் சுமந்தபடி கீழிறங்கிக்கொண்டிருக்கும்
காற்றுக்கு
உச்சிக்கிளையில் தரையென இறங்கி
பின் கிளையென உணர்ந்து
தரைதொட கிளை படரும்
மழை நீருக்கு
மலைகளென நினைத்து கணுக்களையும்
குகைகளென பொந்துகளையும்
தாண்டி ஊர்ந்து பயணித்த
எறும்புக்கு
வண்ணங்கள் பிடிபடாமல்
பாளங்கள் பிளந்த மரப்பட்டையின்
உள்ளிருந்து எட்டிபார்க்கும்
கெவுளிக்கு
ஓர் இணைப்பறவைகளின் கொஞ்சலில்
முறிந்த முந்தைய காதலை
கடன்வாங்கிக் கொண்டிருந்த
எனக்கு என
எல்லாருக்கும் மரமாகி நிற்கிறது
இந்த மரம் வீட்டுவாசலில் !

காக்கை கூடு

எங்கள் வீட்டுமுன் வேப்பமரத்தில்
புதிதாக
இரண்டு காக்கைகள் கூடுவைத்துள்ளன .

காக்கைகளினால்
பொழுதுகளில் சங்கடமும்
சமயங்களில் பலன்களும் வரலாம் .

நாளை மறுநாள் வரப்போகும் பங்காளிகளை
இன்றே
கரைந்து காட்டிக்கொடுத்துவிடும் .

தப்பித்தவறி
எச்சமிட்டுவிட்டாலும்
நல்ல அதிஷ்டக்காரன் என்றொரு
பட்டம் கிடைக்கும் .

கூட்டிலிருந்த
கருவேல முள் விழுந்து
முற்றம் முழுவதும்
குப்பையாகிரதென்பாள் .

துணி தொவைத்து ஒன்றைக்கூட
மரத்தடியில்
காயபோட முடியவில்லை என்பாள் .

காக்கை என்பதை
அருவருப்பாய் மட்டுமே பார்ப்பவளுக்கு
எப்படி புரியவைப்பது ?
இந்த கூடு
நிறைய நேரங்களில்

இருக்கும் வரை சொறுவைத்த
அம்மையை
நினைவுபடுத்துகிறதென்பதை.