முடியுமெனில் சுட்டுத் தள்ளு


மொழிபெயர்ப்புக் குறுங்கதை

தனக்குச் சொந்தமான சூதாட்டவிடுதியொன்றில், பொறுப்பாளராகவிருக்கும் என்ஸோ (ENZO), 25 மில்லியன் டொலர்களைக் கையாடியிருப்பதாக மாஃபியா தலைவரான கோட்ஃபாதருக்கு தகவல் கிடைத்தது.
என்ஸோ காதுகேளாத, சற்று வயதான ஒருவர். அதனால் கோட்ஃபாதர், என்ஸோவுடன் கதைக்கச் செல்வது தனது சட்டத்தரணியுடன்தான். அந்தச் சட்டத்தரணிக்கு சைகை பாஷை தெரியும்.
“என்னிடமிருந்து களவாடிய 25 மில்லியன் டொலர்களும் எங்கே?” என்று என்ஸோவிடம் விசாரிக்கும்படி கோட்ஃபாதர், தனது சட்டத்தரணியிடம் உத்தரவிட்டார். சட்டத்தரணி, சைகை பாஷையை உபயோகித்து அந்தக் கேள்வியை என்ஸோவிடம் கேட்டார்.
‘நீங்கள் என்ன கேட்கிறீர்களென்றே எனக்கு விளங்கவில்லை’ என்ஸோ சைகை பாஷையிலேயே பதில் சொன்னார்.
“நாங்கள் எதைப் பற்றிப் பேசுகிறோமென்றே அவருக்கு விளங்கவில்லையென்று அவர் சொல்கிறார்” சட்டத்தரணி, கோட்ஃபாதரிடம் கூறினார்.
தனது கைத்துப்பாக்கியை வெளியே எடுத்த கோட்ஃபாதர், கோபத்தோடு அதனை என்ஸோவின் நெற்றியில் வைத்து, “திரும்பவும் கேள்” என சட்டத்தரணிக்குக் கட்டளையிட்டார்.
‘நீ சொல்லவில்லையென்றால் இவர் உன்னைக் கொன்றுவிடுவார்’ சட்டத்தரணி, என்ஸோவிற்கு சைகையில் சொன்னார்.
‘சரி. நான் உண்மையைச் சொல்லிவிடுகிறேன். பணம் எல்லாவற்றையும் கபில நிற பெட்டியொன்றில் போட்டு, எனது மைத்துனன் புரூனோவின் தோட்டத்தின் கிழக்குப்பக்கமாக உள்ள மதிலிலிருந்து இரண்டு அடிகள் தள்ளி, குழி தோண்டி புதைத்திருக்கிறேன்’ என்ஸோ சைகை மொழியில் சட்டத்தரணியிடம் விவரித்தார்.
“என்ன சொல்கிறான் இவன்?” கோட்ஃபாதர், சட்டத்தரணியிடம் கேட்டார். அதற்கு சட்டத்தரணி இவ்வாறு கூறினார்.
“இவன் சொல்கிறான். முடியுமென்றால் இவனை சுட்டுத் தள்ளட்டுமாம். அவ்வாறு சுடுமளவுக்கு உங்களுக்கு தைரியமில்லையாம்.”

தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன