எங்கும் தேங்கி நிற்கும் உனது மணித்துளிகள்..


*
ஒரு அனுமதி என்னைக் கொஞ்சம்
அசௌகரியப்படுத்துகிறது
அது உன் அறைவாசலில் எப்போதுமே நிரந்தரமாய்
ஸ்டூல் ஒன்றைப் போட்டு வைத்திருக்கிறது

வருவதும் போவதுமான உத்தரவுகளை
அச்சிட்டுக் காகிதத்தில் வைத்திருக்கிறாய் 

உனக்கான மணித்துளிகள்
உனது இருப்பிடத்தில் தொடங்கி அலுவலகம் வரை
மழைக்குப் பின்னான நீர்த் துளிகளைப் போல்
எங்கும் தேங்கி நிற்கிறது
முறை செய்யப்பட்ட பாதுகாவலோடு

சின்னஞ்சிறிய உதவி ஒன்றைக் 
கோரவும்
ஒரு பால்ய நினைவைப் பகிரவும்
காத்திருக்க நேரும்
ஒரு அனுமதி என்னைக் கொஞ்சம் அசௌகரியப்படுத்துகிறது

வெளிச்சம்

அந்தகாரத்தில் எனக்கு வழி காட்டிய
அச் சிறிய தங்க நிற ஒளிப் புள்ளி
வெளியே தென்படாதது
எங்கு, எப்பகுதியலது
தேடினாலும் தென்படாதது
அலங்காரங்களற்ற விழிகளில்
இருளை விடவும் அனேகமானவை
வெளிச்சத்தில் மறைந்துபோகும்
தென்படாமலேயே

இஸுரு சாமர சோமவீர

இருளில் உருளும் மனம்

இரவோடு
இருளும் வந்தது.
சுற்றிலும் எதுவுமே
தெரியவில்லை.
மனம் வெளிச்சமாக
இருந்தது.
வெளியே வெளிச்சம்
வந்தது. இடங்களும்
இடுக்குகளும்
பிரகாசமாய்
தெரிந்தன.
மனம் இருளத்
தொடங்கியது.

தரக்குடும்பம்

இரவை புணர்ந்தெழுந்ததும்
தொங்கவிடப்பட்ட வெள்ளை துணி மூடி
கொட்டாவி இறுமலை முடித்து
மூக்கின் துவாரங்களில்
காற்றோடு கணநேரம் பயிற்சித்தேன்
கற்பிக்கப்பட்டதை பிசகிடாது
பல் துடைப்பத்தில் பற்பசை இட்டேன்
குறுக்கும் நெடுக்குமாக அசைக்க
நினைவு உறுத்தியது
அய்யய்யோன்னு தலையிலடித்து
மேலும் கீழுமாக அசைத்து துலக்கினேன்
தர முத்திரையிட்ட
சோப்பு ஷாம்புகளால் உடல் கழுவினேன்
துணையாளும் அவங்களுக்கான அட்டவணையின்படி
ஸ்டிக்கரால் பெயரிடப்பட்ட டப்பாக்களிலிருந்து
வெகு எளிதாக சமைத்து முடிக்க
கொடுக்கப்பட்ட காலத்திற்குள் தயாராகி
காலனிகளின் அணிவகுப்பிலிருந்து
எனை பெயர்த்து வெளியேறினேன்
வெளிச்சுவற்றில் மின்னிக்கொண்டிருந்தது
என் தினக்கூலியை உத்திரவாதப்படுத்திக்கொண்டிருக்கும்
ISO தரச்சான்று இல்லமெனும்
பாலிமர் சீட்டில் பொறிக்கப்பட்ட
பச்சை எழுத்துக்கள்…

நிழல் விமானம்

 
 
வெண் திரைத்துனியில்
கருஞ்சித்திரமாய்
நகர்ந்து கொண்டிருந்தது
நிழல் விமானம்
பச்சை வயல்கள்,
மணற்பரப்புகள்,
தொழிற்சாலை கூரைகள்..
எல்லாவற்றின் மீதும்
கருநாகம் போல ஊர்ந்து சென்றது.
தந்தை கைப்பிடித்து
குதித்து குதித்து நடக்கும்
சிறுவனின் உற்சாகம்.
 
பிரம்மாண்டமானதொரு
நீர்ப்பாசன கிணறொன்றில்
பாய்ந்தபோது
நிழல் விமானம்
மறைந்துபோனது.
சகபயணியொருவர்
பயணத்தில் காணாமல்போனால்
உண்டாகும் பதைப்புடன்
பார்வையை
சுழலவிட்டேன்.
கருமேகங்கள் சூழ்ந்திருந்தன.
கதிரவன் ஒளிந்திருந்தான்.
போதுமான ஒளியின்மையால்
நிழல் விமானத்தை தேட முடியவில்லை.
மேகங்கள் விலகி
சூரியன் மீண்டும் வெளிவந்த
சில நொடிகளில்
அதிர்வின்றி
தரையை தொட்டது விமானம்.
 
முட்டிமோதி
படியில் இறங்கி
பேருந்தில் அமருமுன்
நிழல் விமானத்தை மீண்டும் பார்த்தேன்.
எவ்வித அசைவுமின்றி
ராட்சத அளவில்
அமைதியுற்று  நிற்கும்
விமானத்தின் அடியில்
நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்தது
நிழல் விமானம்.

எமதுலகில் சூரியனும் இல்லை

 

இறப்பர் மரங்களில் பால் இருந்த போதும்
பெருந் தோட்டத்தில் நாம் வசித்த போதும்
இறப்பர் விலை அதிகரித்த போதும்
நாம் இன்னும் கையாலாகாத நிலையிலென
உணர்கிறது இதயம் எப்போதும்
அடர்ந்த பெரும் இறப்பர் காட்டில்
பாறைகள், வேர்கள், நதிகள், ஓடைகளிடையே
இரவு உட்கொண்ட ரொட்டியின் பலத்தினால்
இரு பாதங்களையும் வைத்தபடி
மரத்துக்கு மரம் வெட்டிச் சேகரித்த பால் எடுத்து
நாம் வருகிறோம் சாயத் தேனீர் குடித்தபடி
தாயும் தந்தையும் வாழ்ந்த குடிசையின்
உரிமை எமக்கில்லை பிள்ளையே
ஊருமற்று நாடுமற்று
லயன் தான் வாழ்க்கையே
கிணற்றுத் தவளைகள் போல
லயத்திலிருக்கும் நம் எல்லோருக்கும்
உரிமையில்லை எதற்கும்
இது பற்றிக் கதைக்கவும் கூட

– ஹெரல்ட் மெக்ஸிமஸ் ரொட்ரிகோபுள்ளே

யுகங்கள் கடந்தது

முகர்ந்து முகர்ந்து
நாய்க் குட்டியொன்று
என்வீடு வரை
வந்து விட்டது.

யுகங்கள் கடந்த அன்பின்
புரியாத ரகசியத்தின்முன்

தளும்பி நின்ற
பேரமைதி கணமிது

அறையிருட்டு

எஞ்சியிருந்த மெழுகுவர்த்தி சுடரை
காற்றின் உதவியுடன் புகையாக்கி
ஒளியை விழுங்கியது
அறையிருட்டு.
மனிதவிழிகள் கூட
தனது ஓட்டைகளை
பார்க்க முடியாதென
கர்வம் கொண்டது.
தனது சுயசொரூபத்தை
முழுக்க உணரும்
வேட்கையில்
சன்னலுக்கு
வெளியே படர்ந்திருந்த
பேரிருட்டின் அங்கமானது.
பேரிருட்டு விரியும் திசைக்கு
மாற்றுதிசையில்
பேரிருட்டுப்பாதையினூடே
விரைந்து பறந்தது.
+++++
சில ஆயிரம் மைல்கள் தூரத்தில்
பேரிருட்டின் எல்லை முடிந்தது.
எலலையற்ற தன்மையை
அனுபவமாய் உணரும் பேரார்வத்தில்
சூரியவொளி ஆக்கிரமித்திருந்த
நிலப்பரப்பில் நுழைந்தவுடன்
அறையிருட்டின் ஒருபகுதி
பஸ்மமானது.
வந்த வழி உடன் திரும்பி
பேரிருட்டின் பாதையூடெ
அறைக்கு மீண்டு வர எத்தனிக்கையில்,
சூரியவொளியின் நீளும் கரங்களில் சிக்கி
பேரிருட்டுடன் சேர்ந்து
அறையிருட்டு கரைந்துபோனது.
+++++
பேரிருட்டின் ஆவியுடல்
சரண் புகுந்த ஏதொவோர் இடத்தினிலேயே
அறையிருட்டின் ஆவியுடலும்
அகதியானது.
பேரொளியின் ஆட்சி ஒய்ந்தபின்
மீண்டும் உயிர்க்கும் போது
அறையிருட்டையும் உயிர்ப்பித்து
அதன் அறையில் சேர்த்துவிடுவதாக
பேரிருட்டு வாக்களித்தது.

எதையாவது சொல்லட்டுமா………62

சமீபத்தில் நான் ஒரு நண்பருக்கு போன் செய்தேன்.  அவர் பெயர் ரவி.  என் சிறிய நோட் புத்தகத்தில் ரவி என்று பெயரிட்டு எழுதியிருந்த தொலைபேசி எண்ணைத் தேர்ந்தெடுத்து போன் செய்தேன்.  ரவிதான் எடுத்தார்.  ஆனால் நான் எதிர்பார்த்த ரவி அல்ல அவர். 
உண்மையில் நான் பேசவே நினைக்காத ரவிதான் அவர். 
”நான் ரவி பேசுகிறேன்,” என்றவுடன்.  ஐய்யயோ தவறு செய்துவிட்டோ மே என்று தோன்றியது.  பின் சமாளித்தேன். 
”எப்படிம்மா இருக்கே?” என்றேன். 
”நல்லாயிருக்கேன்..”
”பெண்ணெல்லாம் செளக்கியமா?”
”ம்..ம்–”
”பூனா போவதுண்டா?”
”ம்…ம்.. சரி, நான் அப்புறம் பேசறேன்…” என்று கூறி போனை துண்டித்துவிட்டார்.
எனக்கு ஏமாற்றமாக இருந்தது.  உண்மையிலேயே நான் பேச விரும்பாத ரவிதான் அவர்.  தெரியாமல் பேச்சைத் துவங்கினாலும், பின் ஏன் அவர் துண்டித்துவிட்டார்.  அவருக்கும் என்னுடன் பேசுவதில் ஒருவித சலிப்பு உண்டாயிருக்கும். 
வேடிக்கை என்னவென்றால் ஒருகாலத்தில் நானும் அவரும் நெருங்கிய நண்பர்கள்.  ஒரே வங்கியில் இருவரும் குமாஸ்தாவாகச் சேர்ந்தவர்கள்.  அவர் ஐயப்பன் கோயிலுக்குச் செல்வார்.  பின் அதைப் பற்றி பிரமாதப்படுத்திப் பேசுவார்.  எனக்கு அதுமாதிரி பேச வராது.  நான் அவரிடம் ஜே.கிருஷ்ணமூர்த்தி புத்தகம் ஒன்றைப் படிக்கக் கொடுத்தேன்.  அதைப் படித்தப்பிறகு ஐயப்பன் கோயிலுக்குப் போவதை நிறுத்திவிட்டார்.  அவர் ஆங்கில இலக்கியம் படித்தவர்.  நான் படிப்பதோ வேறு.  என்ன எழுதுவது என்று யோசித்துக்கொண்டிருப்பேன். அந்த ரவி காதல் திருமணம் செய்துகொண்ட பிறகு தில்லியில் போய் இருந்தார்.  பின் வேலையை விட்டுப் போய்விட்டார்.  லீகல் தொழிலிக்குப் போய்விட்டார்.  ஒருமுறை அவர் எனக்குப் போன் செய்து அவர் பெண் திருமணத்திற்கு என்னை அழைத்தார்.  அந்தத் திருமணத்திற்கு சுவாமி மலைக்குச் சென்றேன்.  அத்துடன் நின்றுவிட்டது எங்கள் நட்பு.  நாங்கள் பார்ப்பதே இல்லை.  பேசுவது என்பது இல்லவே இல்லை.  ஒரு காலத்தில் நெருங்கிப் பழகிய நட்பு ஏன் நின்றுவிட்டது.  வயது ஒரு காரணமா?
வயதாக ஆக நம்முடன் பேசுபவர்களுக்கும் வயதாகிக்கொண்டே போகும்.  பின் பார்ப்பது, பேசுவது எல்லாம் குறைந்து போய்விடும்.  யாரும் நட்புடன் தொடர்ந்து இருக்க மாட்டார்கள்.  ஒருமுறை Driveinல் பிரமிளைச் சந்தித்தேன்.  அவர் யாரோ சிலருடன் டீ அருந்தி கொண்டிருந்தார்.  பின் என்னைப் பார்த்தவுடன் என்னைக் கூப்பிட்டார். 
கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தபிறகு அவர் சொன்னார் : ”அமெரிக்காவிலெல்லாம் இப்பப் பேச்சுத் துணைக்குக்கூட பைசா கொடுத்தா ஒரு மணி நேரம், இரண்டு மணிநேரம் என்று பேசிக்கொண்டிருந்துவிட்டுப் போவார்கள்,” என்றார்.
அவர் சொன்னது எனக்கு இப்போது ஞாபகத்திற்கு வருகிறது.  ஒரு காலத்தில் Intensive ஆக இருந்த நட்பு என்பது நீர்த்துப் போய்விட்டது. யாரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வதில்லை.  பேசுவதில்லை.  அப்படியே பார்த்தாலும் பேசினாலும் ஏதாவது சில வார்த்தைகள்தான் தேறும்.  உண்மையில் உறவினர் வட்டம் காணாமல் போய்விட்டது.  நட்பு வட்டம்கூட நீர்த்துப் போய்விட்டது. 
அலுவலகத்தில் பழகியவர்களெல்லாம் அலுவலகத்தோடு நின்று விடுவார்கள்.  அப்புறம் என்ன?  நாம் யார்?  நாம் தனி ஆளா? அல்லது ஆள்கூட இல்லையா?

பட்டியல்

பாதையில் கிடந்த
கருவேல முள்ளை
ஓரத்தில் எடுத்துப் போடுகிறேன்
புட்டத்தை வாலால் மறைத்தபடி
ஒரு நாய்
என்னைக் கடந்து செல்கிறது
மாங்கிளைகளை வெட்டியாகிவிட்டது
இனி எந்த மரக்கிளையில்
கிளிகள் வந்தமரும்
மேகங்கள் எங்கே சென்றன
நடவு செய்பவர்களை
வெயிலில் காயவிட்டு
மாடுகள் தின்பதற்காகவாவது
உதவட்டும்
இந்த சுவரொட்டிகள்
அக்கரைக்கு நீந்திச் செல்ல
நீச்சல் மட்டும் தெரிந்திருந்தால்
போதாது
எப்போதாவது செல்லும்
விமானத்தை
வேடிக்கைப் பார்க்க
சொல்லியாத் தரவேண்டும்
காலம் முடிந்து
குருக்கள் கிளம்பிவிட்டார்
சாமி எங்கே போகும்.