கிழிபடும் மிச்சத்தின் பட்டியல்

பழைய பெயர் பட்டியலின்
கிழிபட்ட மிச்சத்தின் மீது புதிய பட்டியல்
ஒட்டப்படுகிறது

ஒரு பிரிவு
ஓர் ஏக்கம்
ஒரு காதல்
ஒரு புன்னகை
ஒரு காமம்
ஒரு பசலை
ஒரு துக்கம்
ஒரு வஞ்சம்
ஒரு கருணை
ஒரு துரோகம்
ஒரு யாசிப்பு

மற்றுமோர் பிரிவு
மற்றுமொரு தொடக்கம்
முற்றிலும் விடைபெறல்

பயணத்தைத் தொடங்குகிறது ரயில்
இன்னும் தீர்ந்திராத தவிப்புகளோடு 
பழைய பயணிகளின் ஸ்டேஷன்களை நோக்கி 

*******

எதையாவது சொல்லட்டுமா………69

21ஆம் தேதி ஜனவரி மாதம் சீர்காழி கிளையிலிருநந்து  எனக்கு விடுதலை தந்துவிட்டார்கள்.  திடீரென்று திரும்பவும் சென்னை என்பதை என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. வாரம் ஒருமுறை நான் சென்னைக்கு வராமலிருக்க மாட்டேன்.  திரும்பவும் சென்னையில் என் வாழ்க்கையைத் தொடர வேண்டும் என்பது திகைப்பாகவே இருந்தது.
காலையில் 9 மணிக்கு பஸ்ஸைப் பிடித்து ரம்மியமான வயல்வெளிகளைப் பார்த்தபடி மயிலாடுதுறையிலிருந்து சீர்காழிக்குச் செல்வது அற்புதமான அனுபவமாக இருக்கும். அதை திரும்பவும் இனிமேல் நினைத்துப் பார்க்க முடியாது. 
என்னால் மறக்க முடியாத இன்னொரு இடம் திருவல்லிக்கேணி.  நான் இங்குதான் கோஷ் மருத்துவமனையில்தான் பிறந்தேன். நான் மாம்பலவாசியாக மாறினாலும், திருவல்லிக்கேணிக்கு அடிக்கடி வருவேன்.  என் நண்பர்கள் இங்குதான் அதிகம்.  மேலும் விருட்சம் அச்சடிக்கிற இடமும் திருவல்லிக்கேணிதான். 
நான் கல்லூரியில் முதலில் காலடி எடுத்து வைத்தபோது, கணக்கு என்றால் ஒன்றும் தெரியாது.   அதைக் கற்றுக்கொள்ள திருவல்லிக்கேணியில் உள்ள என் உறவினர் வீட்டிற்கு வருவேன். ஒரு குறுகலான சந்தில்தான் அந்த வீடு. என் பெரியப்பா பையன் மாடிக்கு என்னை அழைத்துக்கொண்டு போவார்.  அங்கு டிரிகனாமென்டிரி கற்றுக்கொள்வேன்.
ஒருமுறை என் பெரியப்பா பையன் சில தாள்களில் எழுதி மறைத்து வைத்துக்கொண்டிருந்தார்.  நான் ஆவலாக என்னவென்று பார்க்க முயற்சி செய்தேன்.  ‘ஐயோ ஐம்பது’ என்கிற அவருடைய கதை.  முத்து முத்தான கையெழுத்தில் தாளின் ஒரு பக்கத்தில் கதையை எழுதியிருப்பார்.  அவர் எழுதுகிற மாதிரி என்னால் முதலில் எழுத வராது.  கதை என்று எதாவது எழுத ஆரம்பித்தால் அது கோணலாகப் போகும்.  என்னவென்று சொல்லத் தெரியிவில்லை என் பெரியப்பா பையன் தொடராத ஒன்றை நான் இன்னும் எழுத்து மூலம் தொடர்ந்து கொண்டிருக்கிறேன்.
என் பெரியப்பா பையன் மலர்த்தும்பி என்ற சிற்றேட்டைத் துவங்கினார்.  அதுதான் எனக்கு சிறுபத்திரிகை தொடர ஒரு காரணம்.
பல ஆண்டுகள் கழித்து என் பெரியப்பா குடும்பம் திருவல்லிக்கேணியிலிருந்து போனபிறகு கூட என் வாழ்க்கை திருவல்லிக்கேணியில் தொடராமலில்லை.  கணையாழி என்ற பத்திரிகையில் ஒருமுறை கவனம் என்ற பத்திரிகைப் பற்றி விளம்பரம் வந்திருந்தது.  அந்த கவனம் என்ற சிற்றேடை வாங்குவதற்கு திரும்பவும் நான் திருவல்லிக்கேணி வந்திருக்கிறேன்.  ஆர். ராஜகோபாலன் வீடைத் தேடிக் கண்டுபிடித்து கவனம் இதழை வாங்கிப் படித்திருக்கிறேன்.   அப் பத்திரிகை மூலம் பல எழுத்தாள நண்பர்களைச் சந்தித்திருக்கிறேன். 
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வைத்தியநாதன் என்ற நண்பரை மயிலாப்பூரில் சந்தித்து பின் திருவல்லிக்கேணியில் உள்ள கடற்கரைக்குச் செல்வேன். ஞானக்கூத்தன், ஆனந்த், ராஜகோபாலன், ரா ஸ்ரீனிவாஸன், காளி-தாஸ், வைத்தியநாதன் என்று பல நண்பர்களைச் சந்திப்பேன். 
ஒருமுறை பார்த்தசாரதி கோயில் பிரகாரத்தைச் சுற்றிக்கொண்டிருந்தேன்.  கூட ராஜகோபாலன், வைத்தியநாதன்.  அங்குதான் நரசிம்மரின் இன்னொரு பெயரான அழகியசிங்கர் என்ற பெயரைக் கண்டுபிடித்தேன்.  அதுமுதல் என் படைப்புகள் இன்னமும் அந்தப் பெயரில்தான் வந்து கொண்டிருக்கிறது. 
விருட்சம் என்ற பத்திரிகைக்கும் பெரிய தெருவில் உள்ள சேகர் அச்சகத்திற்கு நெருங்கிய பிணைப்பு உண்டு.  இப்போதோ அந்தத் தெருவில் இருக்கும் எங்கள் வங்கிக்கிளைக்கு நான் தினமும் டூ வீலரில் வந்து கொண்டிருப்பேன் என்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. இன்னும் திருவல்லிக்கேணியின்  மகிமையைப் பற்றி தொடர்ந்து எழுதுவேன்.

ஒரு கவிதை

ஒரு கவிதை
தன்னை எழுதிக்கொள்ள
சொற்களை எதிர்பார்த்து
காத்துக்கொண்டிருக்கிறது.
என்னிடம்.

இடையே வந்த தென்றல்
கொஞ்சம் அதன் முடியை
மயிலிறகு கொண்டு
நீவிச்சென்றது

அவ்வப்போது பெய்த
சிறு மழைத்துளிகள்
கலைந்த முடிகளை
சிறு கற்றைகளாக்கிச்சென்றது

அக்கற்றைகளிலிருந்து
வடிந்த மழைத்துளிகள்
காதோர மணிகளில்
தொக்கி நிற்க, அதில்
சூரியன் தன் முகம்
பார்த்துச்சென்றது.

இன்னும் தான்
உனக்குப்போதுமான
சொற்கள்
கிடைக்கவில்லையா
என அக்கவிதை
என்னை கேலி
செய்துகொண்டிருக்கிறது.

ஒரு புன்முறுவல்
கிடைத்தால்
இந்தக்கவிதை
முழுமை பெறும்
யாரேனும் அதனிடம்
சொல்வீர்களா..?!

ஜப்பான் பேனா நண்பி

முன்னர் அவள் அனுப்பியவை
நீண்ட கடிதங்களுடன்
காய வைக்கப்பட்ட செர்ரி மொட்டுக்களும்
செக்கச் சிவந்த மேப்பிள் இலைகளும்

புகைப்படங்களில்
பனி நிறைந்த சோலைகளில்
ரோஸா நிறத்தில் மலர்ந்திருந்தாள்
அனைத்து மடல்களிலும்
ஆங்கில வகுப்பினைக் குறித்தும்
குளிர்தினங்களில்
நீச்சலை விரும்பாத குளத்தின்
தங்க மீன்களைப் பற்றியுமே
எழுதியிருந்தாள்

காலம் செல்லச் செல்ல தற்பொழுது
என்றாவது வருகிறது கடிதம்
அதே இடம்தான் இது
பெரிய கட்டிடத்தின் அடியில்
வீட்டுக் குருவிப் பார்வையோடு
அவளிருக்கும் இப் புகைப்படம்
இப்பொழுதுதான் வந்தது எனக்கு
‘நித்திரையேயில்லை இரவில்
புகைபிடிப்பதை நிறுத்த முடியவில்லை
என்ன செய்ய வேண்டும்?’
புகைப்படத்தின் பின்னால்
அவளது உடைந்த கையெழுத்து

மூலம் – இஸுரு சாமர சோமவீர

கார்பொரேட் கூட்டங்களின் கடைசி நிமிடங்கள்



ஐயன்மீர்!
தொடக்கத்தில்
திரையில் காட்டப்பட்ட  
பாதுகாப்பு அட்டைகள் பற்றி
எந்த ஆட்சேபமும் இல்லை எங்களுக்கு.
அடுத்து முன்வைக்கப்பட்ட  
வரவு செலவு கணக்கு பற்றியோ
எதிர்கால திட்டங்கள் குறித்தோ
நாங்கள் சொல்ல விரும்புவதும்
ஏதுமில்லை.
விடைபெறுவதற்கு முன்
விருந்தோம்பல் சகிதம்
திறக்கப்பட்ட மதுப் போத்தல்களைப் பற்றியே
எங்களின் இந்த தாழ்ந்த விண்ணப்பம்.
எங்களைப் போலவே உங்களின்
வாகனங்களின் வருகைக்கும்
காத்திருக்கும்
எதிர்பார்ப்பின் கண்களுக்கு
என்னவிதமான உத்திரவாதத்தை
தரப் போகிறோம்

நாம்.

பறத்தலின் மீதான புரிதல்

உனக்கான இடம் இதுவல்ல
உள்ளுணர்வு சொல்லிய போது
உணர்கிறான் தோளோடு இருந்த
வலுவான இறக்கைகளை
அடைய வேண்டிய உயரமும்
போக வேண்டிய பாதையும்
வரைபடமாக விரிந்த போதும்
இறகுகளை நீவி அழகு 
பார்த்தபடி நிற்கிறான் 
எவருக்கும் தனை நிரூபிக்கும்
விருப்பங்கள் அற்றவனாய்
பறக்க அஞ்சுவதாக எழுந்த
பரிகாசங்களைப் புறந்தள்ளுகிறான்
வானத்துக்கு மட்டுமே புரிந்த புதிராக
மேகங்களின் வேகமும்
மாறும் அதன் வடிவங்களும்
பறத்தலின் மீதான நம்பிக்கையை விடவும்
பறத்தலின் மீதான புரிதல் மிகுந்திருக்க
இறக்கைகளை இன்னும் இறுக்கிக் கொண்டு
பாதங்கள் மண்ணில் பதியப்பதிய நடக்கிறவன்
வானம் தாண்டிக் கோடானு கோடிக்
கோள்களைப் பார்க்க இயலும்
பிரபஞ்சத்தின் உச்சியை 
அடைகின்ற பொழுதில்..
விரிக்கக் கூடும் தன் சிறகுகளை
அளவற்ற ஆனந்தத்தில்.
***

உதிர்வு

நெடிதாய் பேசி களிக்க
ஆவலில் சோளமாய் பொறிந்திடுவேன்
பக்கத்து வீட்டக்கா வந்திருக்காங்க
அப்புறமென அணைச்சிச் செல்லவும்…
உன் மலர்ச்சியை
இந்நாள்வரை கண்டிலேன் எப்பூவிலுமெனும்
எஸ் எம் எஸ்களை ஒருவழிப்பாதையில் கிடத்திடவும்…
ஒரு இலையை உலர்த்தி
உதிரச்செய்யும் செடியாகவும்
மாற்றங்கொள்வதேன் மதுவாகினி.

நகுலனைப் பற்றி சில நினைவுக் குறிப்புகள்

    முதன்முதலாக நகுலனைப் பற்றி எப்போது நான் தெரிந்துகொண்டேன்.  ஒருமுறை வைத்தியநாதனுடன் (தீவிர வாசகர், ழ, விருட்சம் இதழ்களில் கவிதைகள் அதிகம் எழுதியவர்)
நான், ஆத்மாநாம், மூவரும் ஆனந்த் வீட்டிற்குச் சென்றோம்.  எனக்கு வைத்தியநாதனைத் தெரியும்.  அவருடைய கவிதைகள் சில ‘ழ ‘வில் அப்போது வெளிவந்து கொண்டிருந்தன.  நான் அப்போது வங்கியில் பணிபுரிந்து கொண்டிருந்தேன். கதை, கவிதைகள் எழுதத் தெரிந்தவன்.  ஆனால் தமிழில் தீவரத்தன்மை கொண்ட படைப்புகளை ஆர்வமாய் தேடிப் போய் வாசிப்பவன்.  என்னை தீவிர எழுத்துக்கு அறிமுகப்படுத்தும் நோக்கமாகத்தான் வைத்தியநாதன் என்னை ஆனந்த் வீட்டிற்கு அழைத்து வந்தார்.  கூடவே எங்களுடன் வந்துகொண்டிருந்த ஆத்மாநாமிடம் என்னை அறிமுகப் படுத்தினார்.
    ஆனந்த் வீட்டிற்கு வந்தவுடன், வைத்தியநாதன் சொல்லியபடி, ஆனந்த் நாலைந்து ‘ழ’ வெளியீடு புத்தகங்களைக் கொடுத்தார்.  நான் மகிழ்ச்சியுடன் அவற்றை விலைக் கொடுத்து வாங்கினேன்.  ‘ழ’ புத்தகங்கள் எல்லாம் விலை குறைவாக இருந்ததோடல்லாமல் நல்ல தரத்துடன் தயாரிக்கப்பட்டிருந்தன.  உயர்ந்த தாளில் அச்சிடப்பட்டிருந்தன.  அதில் ஒரு புத்தகம், ‘கோட் ஸ்டான்ட் கவிதைகள்’.  அதை எழுதியவர் ‘நகுலன்’.  அப் புத்தகம் தயாரிப்பு முறையும், அதை அச்சிடப் பயன்படுத்திய தாளையும் கண்டு நான் வியந்து போனேன்.   ‘காகிதத்தில் ஒரு கோடு’ என்ற ஆத்மாநாம் புத்தகத்தில் அவருடைய கையெழுத்தையும் வாங்கி வைத்துக்கொண்டேன்.
   
நகுலன் இந்தப் புத்தகம் மூலமாகத்தான் எனக்கு அறிமுகமாகிறார்.  அவருடைய கவிதைகள் படிப்பதற்கு எளிமையாக இருப்பதோடல்லாமல் ஆழமான உணர்வு அலைகளை எழுப்பாமல் இருக்காது.
                இருப்பதற்கென்றுதான்
                வருகிறோம்
                இல்லாமல்
                போகிறோம்
    என்ற வரிகளெல்லாம், மனதில் வேறு வேறு எண்ண அலைகளை எழுப்பாமல் இருப்பதில்லை.
   
நான் நகுலன் பெயர்கொண்ட புத்தகங்களையெல்லாம் வாங்கத் தொடங்கினேன்.  ‘க்ரியா’ என்ற புத்தக வெளியீடு அறிமுகமானபோது, நகுலனின் ‘நினைவுப் பாதை’ என்ற நாவலை வாங்கினேன்.
   
பொதுவாக நகுலனின் எழுத்துகள் ஒரு மனதிலிருந்து இன்னொரு மனதிற்கு எழுதிகிற எழுத்துகள்.  என்னால் முழுதாகவும் அவற்றைப் படிக்க முடிந்ததுமில்லை.  ஏனெனில் மனதை அதிகமாக ஆட்டிப் படைக்கும் தன்மை கொண்டவை அவருடைய படைப்புகள்.
அவருடைய படைப்புகள் மூலமாக அவரை நான் அறிந்துகொண்டாலும், விருட்சம் பத்திரிகை ஆரம்பித்தபோதுதான் நேரிடையாக எனக்கு அவருடைய தொடர்பு ஏற்பட்டது.  அவர் படைப்புகளை அனுப்பும்போது, மறக்காமல் ஸ்டாம்பு, கவரெல்லாம் வைத்து அனுப்புவார்.  ஒரு குறிப்பும் எழுதி அனுப்புவார்.  ‘படைப்புகள் உங்களுக்குத் திருப்தியாக இல்லையென்றால் திருப்பி அனுப்பி விடுங்கள்,’ என்று.  நான் அவர் எழுதிய படைப்புகளை திருப்பியே அனுப்ப மாட்டேன்.
 
    ஒவ்வொரு விருட்சம் இதழையும் அவருக்கு அனுப்புவதில் அதிக ஆர்வம் காட்டுவேன்.  உடனுக்குடன் அவர் இதழ் குறித்து கருத்துக்களை ஒரு கார்டில் எழுதி அனுப்பி விடுவார்.  கார்டில் அவர் எழுத்தைப் படிப்பது என்பது பெரிய விஷயமாக இருக்கும்.  சிலசமயம் அவருடைய கையெழுத்து புரியும்படி நிதானமாக இருக்கும்.  சிலசமயம் புரியாமல் கிறுக்கப்பட்டிருக்கும். 
   
ஒரு சமயம் கார்டில் எனக்கு ஒரு கவிதை எழுதி அனுப்பினார் :
                நில்
                போ
                வா
                வா
                போ
                நில்
                போ
                வா
                நில்
                நில் போ வா?
    என்பதுதான் அக் கவிதை.  விருட்சம் இதழில் இந்த குறள் வழி கவிதையைப் பிரசுரம் செய்தேன்.  இது தரமான கவிதையா, பிரசுரம் செய்யப்பட வேண்டிய கவிதையா என்று கேட்டால், நான் பதில் சொல்ல மாட்டேன்.  நகுலன் எழுதியிருக்கிறார்.  அவர் எழுத்துக்களைப் பிரசுரம் செய்ய வேண்டியது, நான் மதிக்கும் எழுத்தாளருக்கு நான் கொடுக்கும் மரியாதை. இன்னும் சில படைப்பளாகளிடமும் நான் இதுமாதிரி நடந்து கொள்வேன்.
   இக் கவிதை பிரசுரம் ஆனவுடன், இரு இடங்களிலிருந்து எதிர்ப்பு வந்தன.  ஒன்று காஞ்சிபுரம் இலக்கிய நண்பர் வே நாராயணன் (காஞ்சிபுரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இலக்கியக் கூட்டங்களை நடத்தியவர்.  அபாரமான ஞாபகச் சக்தி கொண்டவர்.  கூட்டம் முழுவதும் யார் பேசினாலும் அதை மனதில் வாங்கிக் கொண்டு திருப்பிச் சொல்லும் தன்மை கொண்டவர்).  எப்படி இக் கவிதையை விருட்சத்தில் புரசுரம் செய்தீர்கள்?  அக் கவிதைக்கு என்ன அர்த்தம் என்பதை உங்களால் சொல்ல முடியுமா? என்று கேட்டு எழுதியிருந்தார்.  நான் அக் கடிதத்தை நகுலனுக்கு அனுப்பியிருந்தேன்.  அவர் இரண்டு பக்கங்களுக்கு விளக்கம் கொடுத்து பதில் அனுப்பினார்.  அதையும் விருட்சத்தில் பிரசுரம் செய்தேன்.
    
எதிர்த்தவர்களில் இன்னொருவர் பிரமிள்.  நகுலனின் இந்தக் கவிதையை ஏன் பிரசுரம் செய்தீர்கள்?  இது கவிதையா என்ற கேட்டார்.  ‘விருட்சம்’ இதழில் அரைப்பக்கம்தான் இக் கவிதை வந்திருக்கிறது.  வந்தால் என்ன?’ என்றேன்.
    ‘ஒரு சிறு பத்திரிகையின் அரைப் பக்கத்தில் பிரசுரம் விஷயம்கூட முக்கியம் உமக்கு இதெல்லாம் தெரியாதா?’ என்றார் பிரமிள்.  பிரமிள் இதைச் சாதாரணமாகப் பேசிவிட்டு விட்டுவிடுவார் என்று நினைத்தேன்.  ஆனால் அபத்தக் கவிதைகள் என்ற பெயரில் அவர் ஏராளமான கவிதைகள் எழுதியிருந்தார்.  அதில், ‘எந்துண்டி வஸ்தி?’ என்ற கவிதையில்,
           
                ‘நில் போ வா’
                என்பதை எழுதிக் கீழே
                கையெழுத்து வைத்து
                அனுப்பினார் சகா
                தேவனின் சகோ
                தர நாமி
                இதைக் கவிதை என்று
                போட்டுவிட்டது தன்
                இலையிலே ‘மரம்’
                ‘இதையே
                எழுதியது யாரோ
                ஏழுமலை ஆறுமுகம்
                என்றால் ‘மர’ இலையில்
                வருமா இது?’ என்றேன்.
                பதில் இல்லை இன்னும்.
    இப்படி ஒரு கவிதை பிரமிள் எழுதியிருக்கிறார் என்பது அது புத்தகமாக வரும்போதுதான் தெரியும்.நகுலன் ஒவ்வொரு முறையும் சென்னை அசோக்நகரில் உள்ள அவருடைய இளைய சகோதரர் வீட்டிற்கு வருவார்.  அப்படி வரும்போது மேற்கு மாம்பலத்தில் உள்ள என் வீட்டிற்குத் தகவல் தராமல் இருக்க மாட்டார்.  அவர் சென்னையில் இருக்கும்போதெல்லாம் அவரை அடிக்கடி சந்திப்பது என் வழக்கம்.  ஏன் தினமும்?
    
சிலசமயம் அவர் ஊரிலிருந்து வந்தபிறகு, அவர் சகோதரருடன் என் வீட்டிற்கு வருவார்.  அவரால் தனியாக வர முடியாது.  கூடவே அவருடைய சகோதரரை அழைத்துக்கொண்டு வருவார்.  யாராவது அவருக்குத் துணை வேண்டும்.  அவர் வரும் சமயத்தில் நான் தட்டுப்படவில்லையென்றால், என் தந்தையாருடன் பேசிக்கொண்டு இருப்பார்.  ஹோமியோபதி மருந்துகளைப் பற்றி என் தந்தை சொல்வதை புதிதாகக் கேட்பதுபோல ஒருவித மரியாதையுடன் நகுலன் கேட்பார். 
   
அவர் சகோதரர் என் வீட்டில் விட்டுவிட்டுப் போய்விடுவார்.  நான் நகுலனைப் பார்த்துவிட்டால் நேரம் தெரியாமல் பேசிக்கொண்டிருப்பேன்.  என்னைப் பார்த்து, “நீங்கள் இவ்வளவு தூரம் எல்லாருக்கும் உதவியாக இருக்கிறீர்கள்.  ஆனால் உங்களைப் பற்றி யாரும் எதுவும் சொல்லாமல் இருப்பது சரியில்லை,” என்பார்.  ‘யாருடனும் இல்லை’ என்ற என் கவிதைத் தொகுதியைப் பற்றி அவர் எழுதிய கட்டுரையை என்னால் மறக்க முடியாது. 
    
பொதுவாக நகுலன் வரும்போது, நான் புதிதாக எழுதிய கவிதைகளைக் காட்டுவேன்.  அவர் சிரத்தையுடன் படித்துவிட்டு, அதில் உள்ள பிரச்சினைகளைக் குறிப்பிடுவார். சில கவிதைகளைப் படித்துவிட்டு, வரிகளை மாற்றினால் நன்றாக இருக்குமென்று குறிப்பிடுவார். சில கவிதைகள் நன்றாக வந்திருப்பதாகவும் குறிப்பிடுவார்.  வேறு விஷயங்களையும் நாங்கள் பேசுவோம்.  ஒருமுறை நான் அலுவலகத்திற்குச் செல்வதற்காக மாம்பலம் ரயில்வே ஸ்டேஷனுக்குச் சென்று கொண்டிருந்தேன்.  அப்போது ஐராவதத்தைப் பார்த்தேன்.  நகுலன் வந்திருப்பதைக் குறிப்பிட்டேன்.  பின் இருவரும் அலுவலகம் போகாமல் நகுலனைப் பார்க்கச் சென்று விட்டோம்.  நகுலனுடன் பேசும்போது ஒருவருடன் ஒருவர் பேசுவதுபோல்தான் இருக்கும். ரொம்ப கூச்ச சுபாவம் உள்ளவர்.  
 அவருக்கு ஆல்பர்ட் மூலம் பரிசு கிடைத்தது.  அக் கூட்டத்திற்கு வந்த நகுலன், ரொம்ப கூச்சத்தோடு மேடையில் அமர்ந்திருந்தார்.  கூட்டத்துடன் நின்று பரிசு வாங்க எழுந்துகூட வர வெட்கப்பட்டார்.  ஆனால் மேடையில் தோன்றுவதையே பிரதானமாக விளம்பரப் பிரியராக ஒரு வங்கியின் தலைவர் இருந்தார்.   அவர்தான் அக்கூட்டத்தை நடத்த நன்கொடை கொடுத்திருக்கிறார்.  அவர் நகுலன் பக்கத்தில் அமர்ந்தும் அவருக்கு நகுலன் யார் என்பது தெரியாது.  இருவரும் ஒருவரைஒருவர் பேசாமல் அமர்ந்து கொண்டிருந்தார்கள்.
  
  நகுலனை அவர் சகோதரர் வீட்டிற்கு அழைத்துக்கொண்டு போவேன்.  நடந்துதான் போவோம்.  அவர் சகோதரர் வீட்டிற்குப் போவதற்குள், பல முறை ‘இந்த வழியாகத்தானே உங்கள் வீட்டிலிருந்து வந்தோம்,’ என்று கேட்காமல் இருக்க மாட்டார்.  
‘ஆமாம்,’ என்று பலமுறை நான் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்.  அவர் தனியாக எங்கும் போகமாட்டார்.  ஒரு சமயம் நகுலனின் திருவனந்தபுர நண்பர் காசியபன் மையிலாப்பூரில் இருந்தார்.  ‘அவரைப் போய்ப் பார்க்கலாமா? ‘என்று கேட்டேன்.  காசியபனும் அவர் வந்ததை அறிந்து பார்க்க ஆசைப் பட்டார். 
    ”என் வண்டி பின்னால் அமர்ந்து கொள்ளுங்கள்,” என்றேன்.  நகுலன் மறுத்து விட்டார்.  “பஸ்ஸில் போகலாம் வாருங்கள்,” என்றேன்.  அதற்கும் மறுத்துவிட்டார்.  “ஆட்டோவில் போகலாம்,”  என்றேன்.
  “அவ்வளவு பைசா செலவு செய்ய முடியாது.  வேண்டுமானால் காசியபன் என்னை வந்து சந்திக்கட்டும்,” என்று கூறி விட்டார்.  கடைசிவரை அவர் காசியபனை பார்க்கவே இல்லை.
    மிகக் குறைந்த பக்கங்களுடன் அவருடைய புத்தகமொன்றை கொண்டுவர நினைத்தேன்.  ‘இரு நீண்ட கவிதைகள்’ என்ற புத்தகம் அப்படித்தான் உருவானது.  நான் வங்கியில் இருந்தபடி பத்திரிகை நடத்துவதால், புத்தகம் போட எனக்குப் பணத் தட்டுப்பாடு இருக்கும்.  அதனால் நானும், நகுலனும் சேர்ந்து அந்தப் புத்தகத்தைக் கொண்டு வந்தோம்.  பாதி நானும், பாதி நகுலனும் செலவு செய்தோம்.  பொருத்தமே இல்லாமல் புத்தகத்தில் நகுலன் வரைந்த ஓவியமும் இருக்கும்.  புத்தகம் வந்தபிறகு வழக்கம்போல்  கவிதைப் புத்தகம் விற்கவில்லை.  பொதுவாக நம் தமிழ் தீவிர சூழ்நிலையில் கவிதைப் புத்தகத்திற்குக் கொடுக்கும் அலட்சியம்போல் வேறு எந்தப் பிரிவு நூலிற்கும் இருக்காது.  ஆனால் நகுலன் தான் போட்ட பணத்தை உடனடியாகக் கேட்க ஆரம்பித்து விட்டார்.  ஏனெனில் அவர் இதற்கு முன்னால் பலரிடம் புத்தகம் போட பணம் கொடுத்து ஏமாந்திருக்கிறார்.  நான் அவர் பணத்தை மாத மாதம் என் சம்பளத்திலிருந்து கொடுத்து சரி செய்தேன்..  இன்னும் கூட விற்காத புத்தகப் பிரதிகள் என்னிடம் இருக்கிறது.  விலை ரூ.12/-தான்.
    நகுலனை திருவனந்தபுரத்தில் ஒருமுறையாவது போய்ப் பார்க்க வேண்டுமென்று னைப்பேன்.  ‘நான் உங்கள் ஊருக்கு வந்து உங்களைப் பார்க்க வேண்டும்,’ என்று ஒருமுறை குறிப்பிட்டேன்.  உடனே, நகுலன், ‘நீங்கள் என் வீட்டிற்கு வந்து தங்க முடியாது,’ என்று குறிப்பிட்டார். அவருக்கு ஏனோ புரியவில்லை.  நான் அவரைப் பார்க்க வந்தாலும், அவர் வீட்டில் வந்து தங்க மாட்டேன் என்பது.  ஏனோ திருவனந்தபுரம் போய் அவரைப் பார்க்கவே இல்லை. 
    வழக்கமாக அவருக்குப் பத்திரிகை/புத்தகம் அனுப்பிக் கொண்டிருப்பேன்.  ஒருமுறை அவர் எனக்குக் கடிதமொன்று எழுதியிருந்தார்.
    16.12.1996-ல் அவர் எழுதிய கடிதத்தை இங்கு குறிப்பிட்டு முடிக்கிறேன்.
    நண்பருக்கு,
    வணக்கம்.  எனக்கு இம்மாதம் 12.12.96தான் பென்ஷன் கிடைத்தது.  எனவே மையம் சந்தாவை இன்றுதான் அனுப்ப முடிந்தது.
    நான் உடல் மனம் சோர்வுற்று மிகத் தளர்ந்த நிலையில் இருக்கிறேன்.  இனி எனக்கு  மையமோ வேறு பத்திரிகைகளோ புஸ்தகங்களோ அனுப்ப வேண்டாம்.  உங்கள் யாருடனும் இல்லை என்ற புத்தகத்தை அமெரிக்காவில் இருந்து வந்த பிறகு காலமான என் சகோதரியிடம் கொடுத்துவிட்டேன்.  அதுவும் என் கையில் இல்லை.
    இனியும் எழுதவேண்டாம் என்ற நிலையில் யாராவது வந்து எழுதுங்கள் என்று துன்புறுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.  எனக்கு 75-ஆவது தொடங்கிவிட்டது.  வெகு விரைவில் காலமாகிவிட்டால் என்ற நிலை.  உடல்-மன உளைச்சல்கள் அவ்வாறு.
    உங்களுக்கு நான் சொன்னதால் நாய்களற்ற வீதிகள் என்ற கவிதைத் தொகுதி கிடைத்ததா?
    உங்கள் தகப்பனாருக்கு என் நமஸ்காரத்தைச் சொல்லவும்.
    என்னவோ இருந்து கொண்டிருக்கிறேன்.
                                        அன்புடன்
                                        ‘நகுலன்’
    மேலே குறிப்பிட்ட கடிதத்தை நகுலன் அனுப்பிய பிறகு, நான் புத்தகங்களையோ பத்திரிகைகளையோ அனுப்புவதை நிறுத்தி விட்டேன்.  பிறர் மூலமாகத்தான் எனக்கு நகுலனைப் பற்றி தெரியும்.  நீல பத்மநாபனுடன் பேசும்போது, நகுலனைப் பற்றி விஜாரிக்காமல் இருக்க மாட்டேன்.
    
கடிதத்தில் குறிப்பிட்டபடி அவர் மரணத்தை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருந்தாரென்று நினைக்கிறேன்.

காதலுக்குப் பின் என் அடையாளம்

                                                   

உன்னைச் சிந்தித்து
ஒரு பறவையின் சிறகினில் அமர்ந்திருப்பேன்
அது
உன் ஊருக்குள் வந்திடுமென்றால்
அங்கு நான் குதித்திடுவேன்

ஊர் வாசி ஒருவனின் தலையில்
காகம் பீச்சுவது எப்படி?
அப்படி என் வருகை
இராணுவ வீரனின் ஆடையில் அலையும்
சிறுவர்களிடம்தான்
உன் முகவரியை கேட்டு எழுதியெடுப்பேன்

ஊருக்குள் பறந்து திரிந்ததில்
பசியெடுத்துவிட்டது
பறவைகள் உண்பதையெல்லாம்
என்னால் உண்ண முடியாதுபோயிற்று
அதோ
மொட்டைத் தலை பொருத்திய ஒருவன்
சூடான கஞ்சி விற்றுவருகிறான்
கண்டு ஒரு கிளாஸ் அருந்திட
பயமெனக்கு

யாரோ!
என்னையும் சுட்டுப் பொசுக்கிவிடுவாரோ
என்ற பயமெனக்கு

இதையெல்லாம் கதைக்க
உன் அருகில் உரசி அமர்ந்திட முடியவில்லை
பஸ்ஸில் பயணிப்பதுபோல்
நடுவில்
சிறுவனுமில்லை,சிறுமியுமில்லை,பிள்ளைக்காரியுமில்லை

ஊரில் கடும் மழையாம்
வானொலி சொல்கிறது
பெய்யட்டும்
என் கடிதங்களையெல்லாம் நீரில் விட
இலேசாக இருக்குமுனக்கு

ஒரு காலம்
சோடா மூடிகளை தட்டையாக்கி,நூலும் கட்டி
மின்சாரமில்லாத மின் விசிறி செய்தாயே
அதன் காற்றில்
உன் கேசத்திலொன்று ஆடியது
என் மார்பினில் வளர்ந்திருக்கும் உரோமங்களோடு போட்டியிட்டு

இதையெல்லாம்
உன்னில் உரசி உரசி கதைப்பதற்கு
அதிக நேரமெடுக்கும்
அதற்குள் நான் இந்த ஊரில் இருக்கமாட்டேன்

அவர்கள்
அடையாள அட்டை பரிசோதனை நடத்துகிறார்கள்
என்னிடம் கேட்டால்
என்ன சொல்ல
என் அடையாளம் நீதான்

ஒரு கவிதை –

கடுகளவும் சந்தேகமில்லை
இது ஒரு பைத்தியக்காரவுலகம்
இதில் பலவித பைத்தியங்கள் வாழ்கின்றன.
காசுப் பைத்தியம் கார் பைத்தியம்
சினிமாப்பைத்தியம் சீட்டுப்பைத்தியம்
காதல் பைத்தியம் கவிதைப்பைத்தியம் என
நமக்கு முன்பும் பைத்தியங்களிருந்தன
அவை அப்பாவிகளாயிருந்திருக்கின்றன
அவை நிறையக் கதைகளைத்
தெரிந்து வைத்திருந்தன
அவைகள் சொல்ல நாம் கேட்டோம்
அவற்றிலொன்று
விறகுவெட்டி மூன்று கோடரிகள் கதை
அந்தக் கதையால் நாம் வீணாய் போனோம்
அதோ அவனைப் பார்த்தால் புரியும்
போட்டியாளனைப் போட்டுத் தள்ளுகிறான்
கவர்மெண்ட் பணத்தைக் களவாடுகிறான்
குபேரனாகிறான்
மண்ணைப் பொன்னாக்கும் மகானென்று
மண்டியிடுகிறதுலகம்
மகானின் தோட்டத்தில் மாடுகள் ரெண்டு
மூத்திரம் குடித்து பல்லிளிக்கின்றன
ஒன்றின் பற்கள் உனதைப் போலிருக்கின்றன
தோலிருக்கச் சுளைமுழுங்கித் தலைவன்
வாய் திறந்தால் பொய்யருவி- அவனை
கணினியுகத்தின் விடிவெள்ளியென்கிறதுலகம்
ஆட்டைப்போல் ஆளை வெட்டினவன் அரசனானான்
அடுத்தவன் கிடையில் ஆடு திருடி
அரசனுக்கத் தந்தவன் தளபதியானான்
கிலிபிடித்த ஒருவன் கடவுளைக் கற்பித்தான்
புசிக்க உணவில்லை பிட்டுக்கூலி
வசிக்க மனையில்லை சுடலைவாசி
உடுத்த உடையில்லை அம்மணாண்டி
முடிவெட்டக்காசில்லை சடாமுடி
அவனைக் கடவுளென்கிறதுலகம்

இப்போது சொல்
இது பைத்தியக்கார உலகமா இல்லையா?