விளக்குகளை அணை; வெளிச்சம் வரும்!

வீட்டுச் சுவரை இடித்துவிட்டு
கதவுகளை மூடிக் கொள்பவர்கள்,
தெருவில் விளக்கிட்டுவிட்டு
வீட்டிற்குள் வெளிச்சம் தேடி யலைகின்றோம்;

வாசலில் கோலம்போட்டு  உள்ளே
கோழி  வெட்டும் வீரர்கள்,
பேங்க் லாக்கரில் பணமும் நகையும் சேர்த்துவிட்டு
தெருப்பாடகனுக்கு வெறுங் கையசைக்கும் வள்ளல்களாகின்றோம்;

பட்டுப் புடவைக் கட்டி
அசைவ பாவம்பற்றி பேசுபவர்கள்,
பட்டுப்பூச்சி வாழ்க்கையதை
விதியின் வாளால் கொல்லவே விரும்புகின்றோம்;

நெற்றிப்பொட்டில் அடிக்கும் சாபம்
பணம் கொடுத்தால் அகன்றாப் போகும்?
சற்றும் யோசனை இல்லா ஓட்டம்
இடையேக் கரண்ட்டுப் போனால் கத்துமாட்டம்;

மனிதம் வற்றிப் போன மனமே
மலைக்கப் பெரிதாய் தெரிவது இருட்டோ?
முழுக்க  முழுக்க விதிகளை தகர்த்து
சுயநல அரசியல் புரிதல் தகுமோ?

போய்; வீணாய் எரியும் விளக்கினை யணைத்து
இருண்டவீட்டில் வெளிச்சமூட்டு, அல்லது
வெட்டும் மின்களம் செய்து செய்து
முண்டத்தின் தலையில் விளக்கை ஏற்று;

அணுவை உடைத்து உயிரை குடிக்கும்
விளையாட்டொன்றில் விளக்கைப் பூட்டி,
எறியும் வெளிச்சத்தில் எம் எதிர்வரும் நாளில்
பிறக்கும் தலைமுறைக்கு ஆபத்தைக் கூட்டு;

மின்வெட்டு செய்யுமிடம்
வெள்ளைச் சட்டையின் கல்லாப்பெட்டி,
அதை உடைக்கும் அரசியல் படித்துமுடித்தால்
முடிவுக்கு  ஆகும் மின்களப் போட்டி;

செய்யவேண்டியதை  விட்டுவிட்டு நீ
பகலெல்லாம் லைட்டுப் போடு
யாருமில்லா அறையில் கூட ஃபேன் ஓட ஏசி போடு
பிரிட்ஜ் திறந்து மூடாமல் மூணாம் வீட்டு கதையைப் பேசு

மேடைகளில் யாரோ பேச
வீடுநெடுக வாசலில் டியூப் லைட்டு கட்டு
வேணும்னா குடிசைகளின் கரண்ட்டை நிறுத்தி
கோடிகளுக்கு லைன மாத்து

நடிகருக்கு கட்டவுட்டில் கலர் கலரா பல்ப் மாட்டி
அரசியல்வாதிக்கு டாய்லட் வரை நிற்காத ஏ.சி. யூட்டி
மேடைகளில் மின்னும் பல சீரியல் செட்டுப் போட்டு
கடைகளை, கடவுளை விளம்பரப்படுத்த –

போட்டிபோட்டு மின்செலவு கூட்டு
பகலில் கூட இனி இருண்டு போகும்
இரவில் கூட வியர்த்துக் கொட்டும்
அதை வழித்து வழித்து நெற்றியெல்லாம் கோமாளின்னு எழுதி ஒட்டு!

தனிமைக்குள் கடவுள் இருக்கலாகாது !

யாருமற்ற தனிமையில்

கடவுள் இருப்பதாக

எனக்கு தோன்றவில்லை

கடவுள் எப்போதும்

இனிமையானவன்

தனிமை

சில நேரம் இனிமை

சில நேரம் துயரம்

கடவுள் எப்போதும்

பலம் வாய்ந்தவன்

தனிமை

சில நேரம் பலம்

சில நேரம் பலவீனம்

மிக நெருக்கத்தில்

தனிமையை தரிசித்தல்

சில நேரம் பரவசம்

சில நேரம் பெருவலி

யாருமற்ற தனிமையில்

கடவுள் இருப்பதாக

என்னால் நம்பமுடியவில்லை

தனிமையில் அழுவதும்

கடவுள் முன் அழுவதும்

ஒரு வகை திருப்தி

என்பது உங்கள் வாதமா?

சமனற்றிருப்பதே

தனிமைக்கு  அழகு

ஒருவேளை கடவுள்

தனிமைக்குள் இருந்தால்

உடனடியாக

அவரின் வெளியேற்றத்தை

நான் விரும்புகிறேன்

அதோ என் அந்த

நாற்காலியில் அமர்ந்திருக்கும்

தனிமை

தனிமையில் கிடக்கட்டும்

உங்கள் வாதப்படி

கடவுள் அங்கிருந்தால்

உடனே அவரை

வெளியேற்றுங்கள் .

சொல்

 
குதூகலம்.
மகிழ்ச்சி.
சந்தோஷம்.
உவகை.
சொற்கள்
உணர்வின் அடையாளமாக
பரிமாறப்பட்டன.
திகட்டிவிட்டதென்று
எழுந்து கொள்ள முடியாமல்
முற்றுப்புள்ளி எங்கோ போய் ஒளிந்திருந்தது.
அலுப்பு
சலிப்பு
வெறுப்பு
இயலாமை
சொற்களில்லாமல்
சொன்னது
உடல் மொழி.
சொற்கள்
முற்றுப்புள்ளியை
அழைத்து வந்து
பொருத்திக்கொண்டு
அமைதியாயின.
புன்னகை
புன்முறுவல்
குறும்புப்பார்வை
வெடுக்கென எழுதல்
உடல்மொழி
கட்டைவிரலை
உயர்த்திக்காட்டி
வெளியேறியது…
சொற்கள்
அமைதியாய்
காகிதத்தில் வந்தமர்ந்தன
கவிதையாக.
இறுமாப்புடன்
திரும்பிய
உடல்மொழி
கவிதையாக
உருக்கொண்ட
சொற்களைக்கண்டு
மோனமாகி
நெற்றி அகன்று
சிந்தனை வயப்பட்டது.
”வாய் வார்த்தையாகும் சொற்கள்
எழுத்துருவாகியும் பேசுகின்றன.”
சிந்தனையும்
சொற்களாகவே வெளிப்படுவதை
உணர்ந்த
உடல் மொழி
மரியாதையாய்
தலை குனிந்தது. 
சொற்கள் நிரம்பிய
கவிதை புத்தகத்தின்
பக்கங்கள் காற்றில் புரண்டன.

கல் எறிந்தவர்க​ள்

பிளாட் பாரத்திலிருந்து
பிரிகிறது ரயில்

ஒரே தருணத்தில்
சில நூறு கரங்கள் உயர்ந்து
கையசைக்கின்றன
சட்டென
எழும்பிப்பறக்கின்ற
பறவைகள் போல்!

கல் எறிந்தவர்கள்
கண்களிருந்து
மெதுவாகக் காணாமல்
போகிறார்கள்

எதையாவது சொல்லட்டுமா……71

க.நா.சு வை நாம் மறந்துவிட்டோம்.  அவருடைய 100வது ஆண்டை நாம் வெறுமனே சில கட்டுரைகள் எழுதி நிறுத்தி விட்டோம்.  நான் அவருடைய கவிதைகளை இலவசமாக அச்சடித்து விநியோகம் செய்ததோடு நிறுத்தி விட்டேன்.
ஆனால் க.நா.சுவை நான் பல சந்தர்ப்பங்களில் நினைத்துக்கொள்ள வேண்டும்.  உண்மையில் அவர் மரணம் அடையும்வரை புத்தகங்கள் படிப்பதையும் எழுதுவதையும் நிறுத்தவில்லை. இது ரொம்ப ஆச்சரியம்.  வயது ஆக ஆக நம்மால் புத்தகம் படிப்பது முடியாது.  க.நா.சு கண் தெரியாவிட்டாலும் படித்துக்கொண்டிருப்பார்.  எழுதிக்கொண்டே இருப்பார்.  இன்னும்கூட அவர் எழுதியது பிரசுரமாகாமல் இருக்கும். 
ஒருமுறை நான் விருட்சம் ஆரம்பித்தபோது எதாவது கட்டுரை தரும்படி கேட்டுக்கொண்டேன்.  உடனே க.நா.சு ஒரு கட்டுரை ஏற்கனவே எழுதியதைக் கொடுத்தார். பல சந்தர்ப்பங்களில் நான் க.நா.சுவைப் பார்த்து வியந்திருக்கிறேன்.  கவிதை எழுதுவது, விமர்சனம் செய்வது, கதை எழுதுவது என்று தனக்கென ஒரு வழியை வகுத்துக் கொண்டிருந்தார்.  
அவருடன் பேசுவது இனிமையான அனுபவமாக எனக்குத் தோன்றும்.  ஒருமுறை பெரிய கூட்டம் ஒன்று மயிலாப்பூரில் உள்ள அவருடைய வீட்டிற்குச் சென்றது.   அந்தக் கூட்டத்தில் நானும் ஒருவனாக இருந்தேன்.  இப்படி ஒரு கூட்டம் க.நா.சு என்ற மகத்தான எழுத்தாளரைப் பார்க்கத்தான் செல்லமுடியும்.  இப்படி ஒரு கூட்டம் இன்றைய எழுத்தாளருக்குச் சாத்தியமா என்பது தெரியவில்லை.  யாரும் யாரையும் பார்க்காமல் இருப்பதுதான் சாத்தியம். 
அந்தக் கூட்டத்தில் நகுலன் கூட இருந்தார்.  பின் கநாசு மயிலாப்பூரில் உள்ள ராயர் ஓட்டலில் சாப்பிட எங்களை அழைத்துச் சென்றார். உண்மையில் என்ன வருத்தமான விஷயம் என்னவென்றால், அன்று பேசியது ஒரு டைரியில் குறித்துக்கொள்ளாமல் விட்டுவிட்டது.  இப்படி எத்தனையோ கூட்டங்களை பதிவு செய்யாமல் விட்டுவிட்டது பெரிய தப்பாகவே எனக்குத் தோன்றுகிறது. 
க.நா.சு எந்தக் கூட்டத்தில் பேசினாலும் எந்தவிதத் தயாரிப்பும் இல்லாமல் மனதிலிருந்து பேசுவார்.  மாதம் ஒருமுறையாவது இலக்கியக் கூட்டம் நடத்த வேண்டுமென்பது அவர் விருப்பம். அப்படிப்பட்டவருக்கு ஒரு கூட்டம் நடத்தவேண்டும்.  அதற்கான முயற்சியில் நான் ஈடுபடுவேன். எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும். 

எதையாவது சொல்லட்டுமா………70

சமீபத்தில் நடந்த வங்கிக் கொள்ளையர்களைப் பற்றிய செய்தியைப் படித்தபோது, என் திகைப்பு அதிகமாகவே இருந்தது.  வங்கி வெகு எளிதாகக் கொள்ளை நடக்கும் இடமாக எனக்குத் தோன்றிகொண்டே இருக்கும்.
பீகாரிலிருந்து தமிழ்நாட்டில் பணிபுரிந்து கொண்டிருக்கும் என் வங்கி நண்பர், எப்படி இங்கே காவல் புரிபவர் இல்லாமல் ஏடிஎம் இயங்குகிறது என்று கேட்பார்.  அவர் இடத்தில் அப்படி இல்லையாம்.  சமீபத்தில் நடந்த வங்கித் தேர்வுகளில், பீகாரைச் சேர்ந்தவர்கள்தான் வங்கியில் அதிகமாக சேர்கிறார்கள்.  தமிழ் நாட்டுக்காரர்கள் மிகவும் குறைவாம்.  அதைக் கேட்கும்போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.  ராம் என்கிற அந்த பீகார் நண்பர் தமிழ் தெரிந்துகொள்ள முயற்சி செய்கிறார்.  எல்லா வேலைகளையும் தட்டாமல் செய்கிறார்.  அவர் கோபம் என்பது இல்லை.  அவர் மனைவியையும் ஊரிலிருந்து அழைத்துக்கொண்டு வந்து விட்டார். 
நான் பந்தநல்லூர் என்ற கிராமத்தில் பணிபுரிய செல்லும்போது, அந்த இடம் ஹோ என்று இருக்கும். கொள்ளையர்கள் எளிதில் புகுந்து கொள்ளை அடிக்கலாம்.  ஏன் என்று கேட்க ஆள் இருக்காது.  ஆனால் அங்கே எல்லாம் எதுவும் நடக்கவில்லை.  பணப் பெட்டியைப் பஸ்ஸில்தான் எடுத்துக்கொண்டு செல்வார்கள்.
நான் வங்கியில் சேர்ந்த புதியதில் தமிழ்நாட்டில் பணிபுரிபவர்கள் தமிழர்களாகவே இருந்தார்கள்.  அதிகமாகவும் இருந்தார்கள். ஆனால் இன்றோ நிலைமை மாறிவிட்டது.  தமிழர்கள் வங்கியில் பணிபுரிவது குறைந்து விட்டது. 
பீகாரில் இருப்பவர்கள்தான் வங்கியில் பணிபுரிய வருகிறார்கள்.  இப்படி வெளி மாநிலத்திலிருந்து வருபவர்கள் அதிகரித்து விட்டார்கள். அவர்களுக்கு தமிழ்நாடு சொர்க்கபூமியாக இருக்கும்.  பெரிய பயம் இருக்காது.  குற்றங்கள் நடந்தாலும் மற்ற மாநிலங்களை விட குறைவாக இருக்கும்.  குறிப்பாக பீகாரை எடுத்துக்கொண்டால், பீகாரை விட தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக இருக்கும்.  அதனல்தான் ராம் இங்குள்ள வங்கிக் கட்டிடங்களைப் பாதுகாக்க ஏன் கவலாளிகள் இல்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது என்கிறான்.
ஆழைப்புழை என்ற அற்புதமான இடத்திலிருநந்து கேரள பெண்மணி ஒருவர் குமாஸ்தாவாகப் பணிபுரிய    சீர்காழி வருகிறாள்.  ஊரில் இருக்கும் அம்மாவை நினைத்து எப்பாவாவது அழுவாள். ஆனால் தைரியமான பெண்.  வேறு மொழி பேசும் தமிழ்நாட்டில் தைரியமாக இருக்க முடிகிறது.
பீகாரிலிருந்து வந்தவர்கள்தான் சிலர் கொள்ளையர்களாக மாறி கொள்ளை அடிக்கிறார்கள். சிலர் படிக்க வருகிறார்கள்.  சிலர் வங்கியில் பணி புரிய வருகிறார்கள். 

ழ 6வது இதழ்

ஒரு கவிதை

தோட்டம் வெறுமையாய்க் கிடந்தது.
வேலிக்கான முட்புதரில் கொள்ளையாய் பூக்கள்
பட்டாளத்துச் சிப்பாய்க்கு வருவாயுயர்ந்தது
கூட்டான குடும்பம் குந்தித் தின்கிறது.
ஏடுகள் நிறைந்த கல்வியால்
குழந்தைகளின் சிந்தனை மழுங்கிப் போயிற்று
உழைப்பில்லை காசில்லை கனவுகள் நிறைந்தன
கருணையில்லை ஊரெல்லாம் கடவுள்கள்
திருடர் வளர்க்கும் நாய்களின் குரைப்பில்
பயப்படும் பிச்சைக்காரர்கள்!
சந்துத் திருப்பங்களில் காந்தி சிலைகள்
வீட்டு விருந்தில் மதுக் குப்பிகள்!
மிகவும் எண்ணிய நல்லவர்கள்
ஊர் கெட்ட; போகட்டும் என்று
உவமைக்கான
அரிச்சந்திரன் கெடாதிருக்க
இடுகாட்டில் குடிவைத்தார்கள்.

ஆதிநாதன்

அகத்தின் அழகு


இன்னொரு நாளின்
தொடக்கம்.
எல்லோருக்கும் கை அசைத்தபடி
வந்து கொண்டிருந்த மகனின்
மகிழ்ச்சி இழைகளால் ஆன
முகத்தை அணிந்தபடி
சென்று கொண்டிருந்தேன்.
இவனின் கை அசைப்பிற்கு
எதிர்வினை  ஏதுமின்றி
எதிர்ப்பட்ட முகமொன்றில் 
அத்தனை இறுக்கம். 
உற்றுப் பார்க்கையில்
சற்று முன் இறக்கி வைத்த

என் முகம்.

காவேரி

 
         உடைகளில்லாதிருப்பதிலொரு
         உல்லாசத்தை உணர்கிறேன்
         உடலில் கவிந்த ஊர்ப்பழுதியை
         ந்தியில் நனைந்து கரைக்கிறேன்
         என் நேற்றைய வானவில்
         நுரைக்குமிழிகளாகிக் கரையும் காட்சியை
         ந்தியில் கப்பல்விட்ட சிறுவனாகி
         வேடிக்கை பார்க்கிறேன்
         புலரியின் இளஞ்சூட்டில் வியர்க்க
         இலைகளால் விசிறிக்கொள்ளும்
         கரையோர வாழைமரங்கள்
         ந்தியின் நடுவில் உலர்ந்த மணற்திட்டில்
         உறுமீன் வருமுன் உடற்பயிற்சி
         செய்யுமொரு கொக்கு.
         மாமரத்துக் கிளிகளுக்கெப்போதும்
         மாளாத சந்தோஷம்
         உடல் கவ்விய உடைகளுடன்
         அவள் அருகில் வருகிறாள்.
         அவளுள் நுழைய இசைவை விழையும்
         என் விண்ணப்பங்களை
          நிராகராக்கவில்லையெனினும்
          சம்மதிக்காமலென்னைக் கொல்லும்
         மல்யுத்த உடற்கட்டுக்காரி
         கொங்கை குலுங்க சிரித்தபடி வருகிறாள்
         கிளிகடித்த மாம்பழமொன்றை
         என்மீது விட்டெறிந்து
         கரையேறிப் பறக்கிறாள்
         பின்தொடரும் பரபரப்போடு நான்
         நீந்திக் கரைசேர்கையில்
         களவு போயிருந்தததென்
         அம்மணம் மறைக்கும் திரை.
 
 
     
 

பயணத் துணை

தேரியின் சிவந்த மண்ணில்
மரங்களும் பறவைகளும் பார்த்திருக்க பசியாறினோம்
மேல்தளம் இருந்தவர்கள்
ஒன்றிரண்டு படியேறியவர்கள் குறித்து
நம்பிக்கையை நதியாக்கினர்
முதல் படியில் இருப்பவனுக்கு தேவைப்படும் கவனத்தையும்
பிடித்துக்கொள்ள வேண்டிய கைப்பிடிச் சுவற்றின் ரகசியங்களையும்
அன்பால் செலுத்திக் கொண்டிருந்தனர்
அருகிருந்த நெல்லி
மெல்ல மெல்ல பெருக்கத் துவங்கியது
தன் துவர்ப்பை இழந்துவிடாது
சற்றைக்குப் பின் மதுக்குடுவைகள் வந்தமர
அறை அன்பின் தேவாலயமானது
பல்படாது செய்நேர்த்தியோடு செயலாற்றுபவனென்றும்
இத்தனைபேர் இருக்க எனக்கென்னடாவென
ஆசுவாசப் பறவைகளை மிதக்கச் செய்தும்
இதேதான் பற்றிக்கொண்டாய்
விட்டுவிடாது தொடரென்றும்
வார்த்தைகள் குலைந்து குலைந்து
பூ முத்தங்களாக மிளிர்ந்து அடங்கியது
பயணிக்கிறேன்
மயில்தோகையின் வருடல்களோடும்
ஓயாது கூவிய சேவலின் இசையோடும்…