ழ 6வது இதழ்

பிப்ரவரி / மே 1979

 நான்கு கவிதைகள்

1.

 அணுவுக்கு எதிராய்
 மக்கள் கிளர்ச்சி
 அணு உலையிலிருந்து
 சிதறி விட்டது
 அணுத்துகள் ஒன்று
 கலவர மக்கள்
 கூக்குரலிடுகின்றனர்
 வானிலிருந்தும் நீரிலிருந்தும்
 வினோத வாகனங்களைக்கொண்டு
 ஆராய்கின்றனர்
 சுற்றுப்புறத்திலிருந்து
 வெளியேற வேண்டும்
 உள் உலகிலிருந்து வெளி உலகிற்குத்
 தப்பிக்க வேண்டும்
 மீண்டும் மனிதம் அடிமையாயிற்று
 அதன் கண்டுபிடிப்பிற்கு.

2.

 எனக்குள் என்னில் என்னாய் விரிந்து
 உள் அழிழ்ந்தேன்
 கற்பனை நிஜம்
 காலம் ஒளி
 ஒலி பயணம்
 உருவம் உள்ளடக்கம்
 எல்லா இடங்களிலும் தேடினேன்
 தெரிந்தும் தெரியாமல்
 விரிந்தும் விரியாமல்
 இருந்தும் இல்லாமல்
 ஆன் ஏன்

3.

 அற்புதமாய்ப் புலர்ந்த காலை
 நீள நிழல்கள்
 நிலத்தில் கோலமிட
 வண்ணக்கலவையாய் உலகம்
 எங்கும் விரிந்து
 கெட்டியாய்த் தரை
 என் காலடியில்
 நிஜம் புதைந்து கிடக்க

4.

 ஒரு தலைப்பிடாத கவிதையாய்
 வாழ்க்கை
 ஒரு நாள் இரண்டு நாள் என
 தொடர்ந்த நாட்களை எண்ணினேன்
 காலையைத் தொடர்ந்து மாலை
 இரவாகும் காலப்புணர்ச்சியில்
 பிரமித்து நின்றேன்
 கடற் கரையில்

ஆத்மாநாம்

ழ 6 வது இதழ்

வருகை

கலையாத மேகங்களின் முன்னால்
காற்றுக்கு மிகவும் காத்திருந்து
அசைகின்ற மரஇலைகள் லேசாக
சோகம் காட்டும்.
முகம் வெளுப்பாய் கருமையில் சிவந்து
கன்றிப்போய் கன்னங்கள் வாடி கண் சோர்ந்து
தலைமுடி கலைய பார்வை உலர்ந்து அதுவும் முடியாமல் கைகளை
பின்னால் கோர்த்து நடந்து நடந்து களைத்துப் போய்
வானம் பார்த்து எப்போதோ ஒருமுறை கேட்கும்
மனது உறுத்தும் பறவைக்குரல் கேட்டு நனையும்
அவசரத்தின் அழைப்பாய் அடிக்கடி எழும்பும்
மணியோசை கவனத்தைக் கலைக்க வாடிய முகமும்
கூடியவயிறும் கைத்தாங்கி அணைத்துக்கொண்டே
உள்ளேசெல்ல வெண்சீறுடை செவிலியர் கண்டிப்பு
சாந்தம் கலந்த பார்வைக்கு ஓசையுடன் கூடிய சிறு
நடை கொண்டு வரும் செய்திக்காய் துடித்துப்போகும்
உள்ளே தாங்கமுடியாமல் அவதிப்படும் வலி
நீண்ட இரக்கமாய் கவலையுடனே கூட
எதிர்பார்பாய் மற்றெதுவும் மறிக்காமல்
அன்பே முதன்மையாய் மனது பொங்கி வழிந்தோடும்
நீ பெறப்போகும் இன்பத்தையும்
துன்பத்தையும் மற்றெல்லாவற்றையும்
விதியாய்க் கொண்டு வரும் அந்த
முதல் அழுகையை தயவுசெய்து பரவவிடு.

ஆர். ராஜகோபாலன்

ழ 6வது இதழ்

ஒரு கவிதை

தோட்டம் வெறுமையாய்க் கிடந்தது.
வேலிக்கான முட்புதரில் கொள்ளையாய் பூக்கள்
பட்டாளத்துச் சிப்பாய்க்கு வருவாயுயர்ந்தது
கூட்டான குடும்பம் குந்தித் தின்கிறது.
ஏடுகள் நிறைந்த கல்வியால்
குழந்தைகளின் சிந்தனை மழுங்கிப் போயிற்று
உழைப்பில்லை காசில்லை கனவுகள் நிறைந்தன
கருணையில்லை ஊரெல்லாம் கடவுள்கள்
திருடர் வளர்க்கும் நாய்களின் குரைப்பில்
பயப்படும் பிச்சைக்காரர்கள்!
சந்துத் திருப்பங்களில் காந்தி சிலைகள்
வீட்டு விருந்தில் மதுக் குப்பிகள்!
மிகவும் எண்ணிய நல்லவர்கள்
ஊர் கெட்ட; போகட்டும் என்று
உவமைக்கான
அரிச்சந்திரன் கெடாதிருக்க
இடுகாட்டில் குடிவைத்தார்கள்.

ஆதிநாதன்

ழ 5வது இதழ் – டிசம்பர் 1978 ஜனவரி 1979

தேனரசன் கவிதைகள் 
வெள்ளை ரோஜா-கவிதைகள் அன்னம் வெளியீடு,   அகரம் சிவகங்கை   ரூ.5-00
 தேனரசன் கவிதைகளை ஒருமுறை படித்ததும் ஒரு திறமையாளனை சந்திக்கிறோம் என்ற உண்மை உடனே புலப்பட்டு விடுகிறது.
   காகங்கள் முடிபுனைந்தால்
   கரைச்சல்களே சங்கீதம்
   சிறுமைக்கு நீர் வார்த்தால்
   தெருநெடுவே முள் வளரும்.
இந்த வரிகளைப் படிக்கும் பொழுது,’பேயரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்’ என்ற பாரதியின் வரியும், மற்றதில் எதிர் மறையாய ஒரு திருக்குறளும் முற்றிலுமாக மறைந்து புதிய வரிகளும் இடம் கொடுத்திருப்பதைப் பார்க்க முடிகிறது.
   ‘தேவை பணம் இதுவே
   திருவாய் மொழி  எனவே
   சேவை மனப்பான்மை
   சிவலோகம் போகிறது’
   ‘அவரவர்கள் பாட்டுக்கு
   அகப்பட்டது சுருட்டல்
   தவறில்லை என்னுமொரு
   தருமம் தழைக்கிறது.’
என்ற வரிகளில் ஒரு புதிய கவிஞனின் குரல் ஒலிப்பதைக் கேட்கலாம்.  சொல்லே கவிதை என்பது உண்மையென்றாலும் கவிஞன் கலைஞனுமாகவே காணப்பட்டு வருகிறான்.  கூற்றின் அளவிலேயே மேற்கண்ட வரிகள் தேனரசனுக்குக் கவிதை ஆகிவிட்டாலும் இந்தத் தொகுப்பில் சிருஷ்டி அளவிலான கவிதைகளும் உள்ளது  நிம்மதி தருகிறது.  அவற்றின் எண்ணிக்கை 38ல் 8 என்றாலும் ‘ஒரு வெளியேற்றம்’ ‘யார் சொன்னது?’ என்ற கவிதைகளும் பிறகு ‘ஆதிவாசிகள்,’ ‘ஒரு விவசாயியின் மறைவில்’, ‘ஈடு’, ‘பாவம் அம்மா,’  ‘மேஜை மீது’ ஆகிய கவிதைகளும் நன்றாக உள்ளன என்றாலும், எண்ணல் அலங்காரம் என்ற கவிதை எல்லாவற்றினும் சிறந்ததாக இருக்கிறது.  வயது வந்த தமக்கைக்காக ஒரு சிறுவன்.
   ‘ஐயா சாமி.  நாலு நாளாப் பட்டினி
   மூணு மாசம் முன்னாலே
   மாரி மகமாயி வந்து
   எங்க அக்காவின்
   ரெண்டு கண்ணையும்
   சூறையாட்டிட்டா
   ஒரு மனசு வெச்சு
   ஒதவுங்கையா’
என்று யாசிக்கிறான்.
   ‘நாளைக்குப்
   புத்திலக்கியம் படைத்து
   இந்தச் சமுதாயத்தை
   புணருத்தாரணம் செய்யப் போகிறவன்’

அந்த யாசிப்பில் வரும் நாலு, மூணு, ரெண்டு, ஒண்ணு என்ற எண்களின் இறக்கத்தை ரசிக்கிறானாம்.  இந்தக் கவிதையின் கடைசி வரிகளில் மனத்தின் வினோதப் போக்கு பிடிக்கப்பட்டிருப்பதால் இந்தக் கவிதையை உயர்வானதாகக் கூறவேண்டும்.

ஆனால் தேனரசன் கவனக்குறைவு என்ற குற்றத்துக்கு ஆளாகக்கூடாது.  உதாரணமாக அந்தச் சிறுவனின் யாசிப்புக் கூற்றில் ‘அக்காவின்’ என்று காணப்படுகிறது.  இந்தச் சொல்லில் வரும் ‘இன்’ பொருந்தாமல் நெருடுகிறது. 
கவிதை என்ற தலைப்பில் உள்ள கவிதை தேனரசனுக்குச் சிறப்பைத் தராது.  ‘பெண் துணை’ இல்லாத சமயத்தில் ஏகாந்தம் மேற்பட்டு ‘இப்போ யாருமில்லே வாடி என் மனச்சுக மோகினி’ என்று கவிதையை அழைக்கும் பொழுது தேனரசனின் திறமை வீணாகிறது.  ‘தனிமை கண்டதுண்டு-அதிலே
சாரமிருக்குதம்மா’ என்ற பாரதியின் வரியை நினைந்து மனதுக்கு ஆறுதல் சொல்லிக் கொள்ள நேருகிறது.  கவிதை பற்றிய, கவிஞனுக்கு இருக்க வேண்டிய அனுபவம் இங்கு காணப்படவில்லை.  மேலும் விஷயம் மிகவும் சாமான்யமாகி விட்டது. என்றாலும் கூட தேனரசன் நம்பிக்கை தருகிறார்.
                                                                                                –  ஞானக் கூத்தன்.               
 
அன்புடையீர்,
வணக்கம்.
ழ இதழின் 5வது இதழ் உங்கள் பார்வைக்கு முழுவதும் படைத்துவிட்டேன்.  இதேபோல் 6வது இதழ் முழுவதும் தருவதாக உத்தேசம்.  கவிதைகளும் கவிதைகளுக்குரிய பார்வையுடன் ஒரு இதழ் 1988ல் வெளிவந்தது.  பளபள அட்டை எதுவுமில்லாமல், அம்மணப்பதிப்பாக நியூஸ்பிரிண்டில் வெளிவந்த இதழ் ழ.
ஒரு திருமணத்தின்போது, அங்கு பரிமாறப்படும் சாப்பாடு இலைக்குக் கீழ், நியூஸ்பிரிண்ட் தாளைப் பயன்படுத்தினார்கள்.  அத்தாள் உருண்டையைப் பார்த்து, ஆத்மாநாம், எத்தனை ழ பத்திரிகைக் கொண்டு வரலாம் என்று ஞானக்கூத்தனிடம் கூறியதாக சொல்வார்கள்.
ழ பத்திரிகை வந்தவுடன் அதை எல்லோருக்கும் அனுப்புவார்கள்.  விற்பனைக்காக சில இடங்களுக்கும் அனுப்புவார்கள்.  ஆனால் அது விற்று வந்த பணத்தைப் போய்க் கேட்கக்கூட மாட்டார்கள்.  க்ரியா போன்ற சில அமைப்புகள் மொத்த விற்பனையை எழுதி வைத்துக்கொண்டு கொடுப்பார்கள்.  மற்றவர்கள் யாரும் சரியாக தந்ததில்லை. 
இதழ் அனுப்பும் பொறுப்பை ஆர்.ராஜகோபலன் அவர்கள் பார்த்துக்கொண்டிருந்தார்.  அவர் ஒரு கல்லூரி பேராசிரியர்.  அந்தப் பொறுப்பில் இருந்துகொண்டு ழ பத்திரிகையையும் பார்த்துக் கொண்டிருந்தார்.  இதழை 42 சுந்தரமூர்த்தி விநாயகர் கோயில் தெரு, சென்னை 5 என்ற முகவரியிலிருந்து கொண்டு வந்தார். அவர் ழ இதழின் இணை ஆசிரியர்.  திருவல்லிக்கேணியில் உள்ள  மக்கள் அச்சகம்தான் ழ பத்திரிகையை அச்சடித்துக் கொடுத்தது.
  
அன்புடன்,
அழகியசிங்கர்.
             

ழ 5வது இதழ் – டிசம்பர் 1978 ஜனவரி 1979

காளி-தாஸ்

ஒரு கவிதை

 பொழுது விடிந்து
 தினமும்
 நான் வருவேனென்று
 கடற்கரை மண்ணெல்லாம்
 குஞ்சு நண்டுகள்
 கோலம் வரைந்திருக்கின்றன.
  
 

ழ 5வது இதழ் – டிசம்பர் 1978 ஜனவரி 1979

நீல பத்மநாபன்

முன்னுரை

அஞ்சுவரி
 வஞ்சப்புகழ்ச்சிக்கு
 பத்தாயிரமென்றால்
 பத்து பக்க
 புஷ்பார்ச்சனைக்கு
 அட்சர லட்சமா?
 
   
முன் செல்

உடனோடி நாய்கள்
 வீறுடன் குரைக்கட்டும்
 கூடப் பறந்து காகங்கள்
 கத்தி களைக் கட்டும்
 ரதமே நீ
 மு
 ன்
 செல்
 முன்
 செ
 ல்

ழ 5வது இதழ் – டிசம்பர் 1978 ஜனவரி 1979

மீர்ஸா காலிப் முஹம்மது இக்பால் ஒரு அறிமுகம்
 உலகப் புகழ் பெற்ற உருதுக் கவிஞர்களான மீர்ஸா காலீப் முஹம்மது இக்பால் இவர்களின் சில கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து ஸ்டர்லிங் பப்ளிஷர்ஸ், டெல்லி வெளியிட்டிருக்கிறார்கள்.  உருதுக் கவிதைகளைப் பற்றி ஒரு ஆச்சரியமான விஷயம்,  
 கல்வியறிவு உள்ளவரும் அற்றவரும் அவற்றை ஒருங்கே புகழ்கின்ற தன்மை உருதுக் கவிதைகளின் இசை வடிவமும், அக்கவிதைகள் மனித
வாழ்க்கையோடு தங்களை ஐக்கியப் படுத்திக் கொள்வதும் இதற்கு ஒரளவு காரணம் எனலாம். இக்பாலும், காலிப்பும் பிரிவடையா இந்தியா தந்த பொக்கிஷங்கள்.  காலிப் இறந்த பத்தாண்டுகளுக்குப் பிறகு பிறந்தவர் இக்பால்.  காலிப்பின் கவித்துவத்தினால் பெரிதும் கவரப் பட்டவர். 
காலிப்பை கோதேயுடன் ஒப்பிட்டால் இக்பாலை காலெரிட்ஜுடன் ஒப்பிடலாம்.  இந்த ஒப்புமை முழுவதும் பொருந்தாது.  காலிப் பின் கவிதைகள் உணர்ச்சி வயப்பட்டு வெளி வந்தவை.  பேரானந்தத்தினின்று  வெளி வந்தவை.  இக்பாலின் கவிதைகள் தத்துவ பூர்வமானவை.  மக்களை விழிப்படையச் செய்தவை.
 காலிப்பின் கவிதைகள் பெரும்பாலும் கஸல்களாய் வெளிவந்தவை.  அராபிய மொழியில் கஸல் என்பது தனது பிரியத்துக்குரியவளிடம்,  உரியவன் பேசும் காதல் மொழி.  பிரிவைத் தாங்காது காதலன் அரற்றும் மொழி.  உறவை எதிர் நோக்கியிருக்கும் அன்புமொழி.  ஆனால் இக்பாலின் கவிதைகள் நஸாம் எனப்படுபவை.  இவை வேறுபட்டவை.  நாட்டுப் பற்றை, இஸ்லாமியப் புனருத்தாரணத்தை வலியுறுத்தியவை.
காலிப்பின் சில வரிகள்

  ”என்னுடைய இதயத்தின் துளைகளை
 ஒன்று சேர்த்து வைக்கிறேன்-
 அவளுடைய கண்கள் மறுபடியும்
 அதைத் துளைக்கட்டும்”

 ”இப்போது ரத்தக்கண்ணீர் சொரிவது கடினம்
 இதயத்தில் ரத்தம் வரச்  சக்தியில்லை”

 ”காதலின் வலிக்கோ மருந்தில்லை
 அற்பமான இதயமே-மறுபடியும்
 காதல்வலி கொள்கிறாயே”

 ”நீ இல்லாமல் ஒரு பொருளும் இருக்கமுடியாது
 அவ்வாறிருக்க-கடவுளே ஏனிந்த ஆரவாரம்”

 ”உலோபியான மண்ணைப் பார்த்து
 கேட்கிறேன் நான்-அதனுள்
 புதைத்த அழகுகளை அது
 என்ன செய்தது?”

 ”சூரிய உதயத்தில் பனித்துளி இறக்கக் கற்கிறது.
 அவள் பார்க்கின்ற வரை நானும் உயிருடன் இருப்பேன்.”
 ”நெடுஞ்சாலை வழிக் கள்ளர்களைப் போலவே
 என் மனதைக் கொள்ளை கொண்டு சென்று விட்டாளே,”
 ”இறப்பு நிச்சயம்-கண்டிப்பாய் வரும்
 ஆனால் அவளோ நான் விரும்பினும் வாராள்”
 ”ஒரு லட்சம் நம்பிக்கைகள் எனது மெளனத்தில்
 புதைந்து கிடக்கின்றன. நான்
 ஏழை யொருவனின் கல்லறையின்
 எரிந்த விளக்கு.”
 ”ஓ! காலிப்! இப்போது போய் ஒரு நிலத்தில் வாழு
 அந்த நிலத்தில் உனது அந்தரங்கத்தையும்
 பாட்டினையும் பகிர்ந்து கொள்பவர் இருக்கக்கூடாது
 அங்கொரு வீட்டினைக் கட்டு கதவுகளும்
 சுவர்களும் இருக்கக் கூடாது.
 அந்த வீட்டிற்குக் காப்பாளர், பக்கத்து
 வீட்டுக்காரர் இருக்கக் கூடாது
 நீ உடல் நலம் குன்றினால் உன்னைக் கவனிப்பார்
 இருக்கக் கூடாது.  நீ உயிரை விட்டால் துக்கம்
 அனுஷ்டிப்பவர் இருக்கக் கூடாது.”
இக்பாலின் சில வரிகள்
 ”ஓ அந்தணனே-நான் ஒன்று சொல்லட்டுமா?
 நீ வருந்தாமல் இரு-அது ஒரு உண்மை
 உன்னுடைய ஆலயங்களின் சாமிகள்
 எல்லாம் மிகவும் பழையன
 அவை உனக்கு வெறுப்பைப் போதித்தன
 உனக்குச் சொந்தமானவற்றை
 சொந்தமில்லை என்றன
 சண்டையிடு அல்லல்படு என்பவை
 கடவுளின் விருப்பம்-அறிவுக்குத்
 தெரிந்த உண்மை
 உன் அறிவு வார்த்தைகளால் நான் களைத்து
 வேதங்களையும் கோயில்களையும் விட்டு விடுகிறேன்
 எனக்குக் கற்கள் மட்டுமல்ல
 என்னுடைய நாட்டின் அற்பமான தூசியும் புனிதமானது”.
 ”கடலின் அருகே நின்றேன்
 ஓயாதடிக்கின்ற அலைகளைக் கேட்டேன்
 நீ எதற்கு அடிமை?
 ஆயிரக்கணக்கான கீழ்த்திசை முத்துகளுடன்
 உன்னுடைய ஓரங்கள் பளபளக்கின்றனவே!
 என்னுடைய இதயத்தைப் போன்ற
 மாணிக்கம் ஒன்று உன்னிடம் உள்ளதா?
 கடல் கரையிலிருந்து வெட்கப்பட்டு ஓடியது
 பேசவில்லை.”
 ”நான் விடைபெறும் போது
 எல்லோரும் கூறுவர்
 அவனை அறிந்தேன்-அவனை அறிந்தேன்
 எனினும் ஒருவரும் அறியவில்லை-
 எப்போது நான் வந்தேன்?
 என்ன நான் சொன்னேன்?
 யாருக்கு நான் சொன்னேன்?”

                                                                                                     திவ்யா.

ழ 5வது இதழ் – டிசம்பர் 1978 ஜனவரி 1979

இறப்புக்குமுன் சில படிமங்கள்

பிரம்மராஜன்

ஜன்னலில் அடைத்த வானம்
குறுக்கிடும்
பூச்செடிகளுடன்
சுப்ரபாதம் இல்லை என்றாலும்
மங்களமான பனிப்புகையில்
விடியல்.
நரைத்த உடைந்த இரவின் சிதறல்கள்
நேரமாய் வந்துவிட்ட
தோட்டியின் கால்களின் முன்.
மண் தின்று எஞ்சிய
எலும்பின் கரைகளில் சிற்பத்தின் வாசனை
காற்றைத் தவிர
அவனுக்கு மட்டும்
பியானோவென இசைத்து ஒலித்தது
உறங்காமல் திரிந்த
மணிகூண்டு உணர்விழந்துவிட்டது
உறையும் குளிரில்.
பறந்த பறவைகள் வானில் கீறியஓவியம்
பார்த்ததில்
பந்தயம் இழந்தது
நேற்று
விரலிடுக்கில் வழிந்த காலத்தின்
துளிகளை
மற்றொரு கையேந்த
கணங்களை முழுவதும் எரித்தாகிவிட்டது
அவன் இறந்து விட்டான்
இன்றெதற்கு இரண்டாவது மாடியில்
அழகான அறை?
பூக்கள் நிஜமாய்
மலராது அங்கு

 

பூனைகள்…..பூனைகள்…….பூனைகள்…..பூனைகள்…31

கணேஷ்
பூனைகள் ஜாக்கிரதை

அடுப்பில்  பால்  கொதிக்கிறது.
அது கொதிக்கும் சத்தம் கேட்காமல்
தொலைக்காட்சிக்குள் என்னை அமிழ்த்திக்கொண்டிருக்கிறேன்.
பொங்கி அத்தனை பாலும் வழிந்துவிட்டது. 
சமையலறையில் பாலாறு.
தொலைக்காட்சியின் கைதியாய்
தொடர்ந்து இருந்தேன்.
வீடு திரும்பிய மனைவி 
சமையலறை பார்த்தவுடன்
ஆனந்த கூக்குரலிட்டாள்.
துடைத்து விட்டார் போல சமையலறை.
பூனையொன்று  பாலாற்றை குடித்து
தரையை சுத்தம் செய்துவிட்டது.
சன்னலில் மியாவ் சத்தம் கேட்ட மனைவி 
பூனையின் பார்வையில் மயங்கி காதல்வயமானாள்.
என் திருமணத்தை காப்பாற்ற வேண்டும்.     
என்னை விட்டுவிடும்படி   தொலைக்காட்சியை  கேட்டேன்
பதில் கிடைக்கவில்லை.
மின்சார வெட்டு !
பூனைகள்  என் வாழ்வை சூறையாடுவதை  எங்ஙனம் தடுப்பது?
மின்சார வாரியத்துக்கு   
யாராவது தொலைபேசியில் அழைத்துக்கேளுங்கள் !
ஆறரை மணி செய்திகள்  முடிந்தால்தான்
தொலைக்காட்சி சிறையிலிருந்து நான் விடுபடமுடியும்.

க நா சுவைப் பற்றிய மதிப்பீடுகள்…….1

(பட்டியல்கள் தொடர்ச்சி……)

– அசோகமித்திரன்

க.நா.சு இல்லாமலும் இவர்கள் நன்றாக எழுதியிருப்பார்கள். எழுதினார்கள். க.நா.சு எடுத்துக் கூறுவதற்கு முன்புகூட இவர்களுக்கு உண்மையான ரசிகர்கள் இருந்திருக்கக்கூடும். ஆனால் க.நா.சுவால்தான் இவர்கள் பற்றி விமரிசனப் பூர்வமாக ஒரு ரசிகர் பார்வை உண்டு பண்ண முடிந்தது. மெளனியின் கதைகளுக்கும் நீல பத்மநாபனின் ‘தலைமுறைகள்’ நாவலுக்கும் அப்படைப்புகளையும், அப்படைப்பாளிகளையும் சிறிதும் பிடிக்காததோர் மத்தியில் கூட அவை இலக்கியமே என்று ஒத்துக்கொள்ளக் கூடிய சூழ்நிலை இன்றிருக்கிறதென்றால், அது க.நா.சுவின் திட்டவட்டமான, முறையான வாதங்கள் நிறைந்த விமர்சனங்களால்தான். அதேபோல ஜனரஞ்சங்கத் தன்மையே இலக்கிய நயமாக என்றென்றும் நியதியாகிவிடும் தமிழ் எழுத்துத்துறை வரை என்று மலைப்பூட்டிய நாளில் அந்த ஜனரஞ்சகப் படைப்புகள் பற்றித் துணிவாகவும், திட்டவட்டமாகவும், அறிவுபூர்வமாகவும் எடுத்துக் கூறிய பெருமை க.நா.சுவுடையதுதான். அவர் அறிவுபூர்வமாகத் தன் கணிப்புகளை எடுத்துக் கூறுவது – அவைகளுக்கு மறுப்புக் கூற இடமில்லாமல் அவர் வாதங்கள் இருப்பதால் – எவ்வளவோ பேருக்கு கோபமூட்டியிருக்கிறது, கோபமூட்டுகிறது.

க.நா.சுவுக்கு இப்படியும் ஒரு பெயர் உண்டு. அவர் இருப்பதும் இல்லாததுமாக ஆங்கிலத்தில் எழுதி, ஆங்கிலப் பத்திரிகைகளில் ஆதிக்கம் செலுத்துகிறார் என்று. க.நா.சு பல ஆங்கில வெளியீடுகளில் பல கட்டுரைகள் தற்காலத் தமிழ் இலக்கியத்தைப் பற்றி எழுதியிருக்கிறார். ஆனால் அந்த வெளியீடுகள் அவருக்கு மாறுபட்ட கருத்துகளை வெளியிடத் தடை விதித்ததில்லை.

தமிழ் இலக்கிய உலகைப் பற்றிக் க நா சு ஒருவரால்தான் ஆங்கிலத்தில் எழுத முடியும் என்றில்லை. அவரைவிட அந்த மொழியில் திறமையும் செல்வாக்கும் உள்ளவர்கள் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் எப்போதோ ஒரு முறை, அதுவும் க.நா.சு ஆரம்பித்த ஒரு சர்ச்சைக்கு பதிலடி போலத்தான் எழுதியிருக்கிறார்கள். ஆனால் தொடர்ச்சியாக, வருஷக் கணக்கில் அதுவும் முப்பதாண்டுகளுக்கும் மேலாக, அதே கோபத்துடன், அதே தீவிரத்துடன் எழுதவில்லை.

குறிப்பாக அவர்களே ஒரு இலக்கியப் பார்வை அமைத்துக்கொண்டு அப் பார்வையைப் பிறருக்குத் தெரியப்படுத்துவதில் க.நா.சு கொண்டிருக்கும் அயராத தீவிரத்துடன் செயல்படவில்லை. பல ஆண்டுகள் தொடர்ச்சியாக ஒன்றில் தீவிரத் தன்மை கொண்டிருப்பது அந்த ஒன்றில் அந்த நபர் கொண்டிருக்கும் ஆழ்ந்த நம்பிக்கையையும், அக்கறையையும்தான் காட்டும். க.நா.சுவின் கருத்துகள், கணிப்புகள் எப்படியாயினும் தமிழ் இலக்கியத் துறையில் அவருக்குள்ள நம்பிக்கையையும் அக்கறையையும் முப்பதாண்டுப் பணியின் நிரூபணம் ஆகியிருக்கின்றன. தமிழ் மொழி அல்லாதோர் மத்தியில் தமிழ் இலக்கியம் கவனத்தையும் கணிப்பையும் பெற்ற வருகிறதென்றால், அது க.நா.சுவும் அவர் போன்றோரும் தமிழ் இலக்கியம் பற்றி வேறு மொழிகளில் எழுதுவதால்தான். விஞ்ஞானப் பார்வை எல்லாத் துறையிலும் வளர்ந்திருக்கும் இந்த இருபதாம் நூற்றாண்டில் ஒருவர் முதன் முதலாக ஏதோ கூறியிருக்கிறார் என்பதால் மட்டும் அது நிச்சயமாக ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. ஆனால் ஒருவர் எடுத்துக் கூறுவதால்தான் அப்பொருள் பற்றி மேற்கொண்டு பரிசோதனை நடத்த ஒரு தளம் அமைகிறது. ஆதலால் முதன் முதலாக ஒன்றைப் பற்றி ஒருவர் கூறும் கருத்தும், கணிப்பும் முக்கியத்வமும், மதிப்பும் பெறத்தான் செய்கின்றன.

கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டு பிடித்துவிட்டு ஸ்பெயின் திரும்பினார். அவருக்கு விருந்து. ஆனால் ஸ்பெயின் பிரபுகளுக்கு கொலம்பஸ் மீது மிகுந்த அலட்சியம். அந்த விருந்திலேயே அவர் காது கேட்க ‘அப்படி என்ன பிரமாதமாக இவன் சாதித்துக் கிழித்து விட்டான்’ என்று பரிமாறிக் கொண்டார்கள். கொலம்பஸ் விருந்து முடியும் தறுவாயில் ஒரு முட்டையை உங்களால் செங்குத்தாக நிற்கச் செய்ய முடியுமா?” என்று கேட்டார். பிரபுக்கள், சீமாட்டிகள் அனைவரும் விருந்து மேஜை மீது முட்டைகளைப் புரட்டிப் புரட்டிப் பார்த்தார்கள். இறுதியாக ”நீ செய்து காட்டு, பார்ப்போம்,” என்றார்கள். கொலம்பஸ் தன் கையிலிருந்த முட்டையின் ஒரு நுனியைச் சிறிது தட்டி விட்டார். முட்டை இப்போது செங்குத்தாக நின்றது. ”இது என்ன பிரமாதம்?” என்றார்கள் பிரபுக்கள். ”முற்றிலும் உண்மை. ஒருவர் செய்து காட்டிவிட்டால் அப்புறம் எதுவும் பிரமாதம் இல்லைதான்,” என்று கொலம்பஸ் கூறினார்.

தற்காலத் தமிழ் இலக்கியத்தைத் தரம் பிரித்து இனம் கண்டுகொள்ள வாசகர்களுக்கு ஒரு சூழ்நிலை ஏற்படுத்துவதில், அளவிலும் தரத்திலும் தொடர்ந்து ஊக்கம் குன்றாமலிருத்தலிலும் க.நா.சு ஆற்றிய பணிக்கு நிகராக இன்றுவரை யாரும் பணி புரியவில்லை. இந்த விதத்தில் அவர் துணையில்லாதவர். தனியர்.
(நன்றி : கசடதபற பிப்ரவரி 1972)