நகரத்துப் பசுக்கள்

Ganesh V
தீனீ போட்டு கட்டுப்படியாகாமல்
விரட்டப்பட்ட நோஞ்சான் பசுக்கள்
தெருக்களில் திரிந்தன
வெள்ளைப் பசு
முள்மரங்களை
சுவாசம் பிடித்த படி நின்றது
மஞ்சள் பசு
சாலையோரங்களில் போடப்பட்ட
கற்குவியற்களை நக்குகிறது
வெள்ளைப்பசுவின்
இளங்கன்று
பிளாஸ்டிக் குப்பைகளை
ஆர்வத்துடன் நோக்குகிறது
மாலை வீடு திரும்பாத
பசுக்களைத்
தேடி வந்த உரிமையாளன்
மயங்கிக் தெருவில் கிடந்த பசுக்களை
லாரியில் ஏற்றி வீட்டுக்கெடுத்து செல்கிறான்.
இப்போதெலாம்
பசுக்கள் வீதிகளில் அலைவதில்லை
நவநாகரீக கோசாலையில்
சுகமாய்க் காலங் கழிக்கின்றன
காசு கொடுத்து
பசுக்களுக்கு உணவூட்டிச் செல்கின்றனர் வாடிக்கையாளர்கள்
இன்னுமொரு கிளை திறப்பதற்காக
உரிமையாளன்
கிராமத்திலிருந்து
மேலும் பசுக்களை
நகருக்கு அழைத்து வருகிறான்.

இலையின் இயல்பற்ற இதயம்


க.உதயகுமார்

நதிவழி நீந்தும்
இலைபோல்
லாவகம் வருவதில்லை
விதிவழி வற்றும் வாழ்வில்
ஓவியத்தின் கண்களென
நிலைகுத்தியே நிற்கிறது
துயர்
சன்னமாய் விரிசல் விட்டு
சுக்குநூறாய் உடைகிறது
கண்ணாடி மனசு

இலைகளுக்கு எப்படி
இவ்வளவு எளிதாக இருக்கிறது
தன்னை விடுவித்துக் கொண்டு
சுதந்திரமாய் சுற்றித் திரிய ?
மெலிதாய் விழவும்
ஒரு மழைக்குமுன்னதான காற்றில்
ஈரமாய் எழவும்
இலையின் இயல்பற்ற இதயத்தால்
முடிவதில்லை

பச்சை காய்ந்து
பழுப்பு மினுங்கும்
பருவத்தே
நானுமோர் இலையாவேன்
என்ற எதிர்பார்ப்பு இல்லாமலில்லை

அறுபதாம் தோட்டத்து மரண ஊர்வலம்

மொழிபெயர்ப்புக் கவிதை

கரங்களைக் கோர்த்து இரு வரிசையில்
முகத்துக்கு முகம் பார்த்தபடி
ஏழெட்டு வீடுகளையேனும் ஒழுங்காகக்
கட்டிட முடியாத நிலமொன்றில்
நெருங்கியடித்துத் தம்மை நுழைத்துக் கொண்ட
அறுபது வீடுகள்

அவற்றின் மத்தியால் செல்லும்
முச்சக்கர வண்டியொன்றேனும் பயணித்திட முடியாத
குறுகிய ஒழுங்கையின் இருமருங்கிலும்
இரண்டு வரிசைகளில் போடப்பட்டுள்ளன
ப்ளாஸ்டிக் கதிரைகள்

ஒரே விதமாகத் திறந்தே கிடக்கின்றன
எல்லா வீடுகளின் யன்னல்களும் கதவுகளும்

அமர்ந்திருக்கின்றனர் எல்லா வீட்டு முற்றங்களிலும்
வருபவர்கள் எல்லோரும்

அறுபதாம் தோட்டத்தில் வசித்த மூத்த குடியவள்
எவர்க்குப்
பசியெனினும் உண்ண உணவு கொடுத்து
எல்லோரது துயரத்துக்கும் ஒன்றுபோலவே செவிமடுத்தவள்
முழு அறுபதாம் தோட்டத்துக்கும்
அம்மா அவள்
பாட்டியவள்

எண்பத்தைந்து வருடங்களாக
துயரத்தை மட்டுமே அனுபவித்திருந்தாலும்
விழிகளிலிருந்து ஒரு துளிக் கண்ணீர் வழியவிடாது
எந்த நோய் நொடியும் தீண்டிடாது
ஒரு மலை, ஒரு பெருவிருட்சம் போன்றிருந்த
“ரத்து மார்கரெட் நோனா”
வீட்டுக்குள்ளே வந்துபோகும்
எவர் குறித்தும் அக்கறையற்று
சிறிய வரவேற்பறையின் மத்தியில்
மாமரப் பலகையால் செய்த
பெட்டியில் உறங்குகிறாள்
தன் பாட்டில் சுதந்திரமாக

ஓரிடத்திலிருந்து
மாஜரீன் பூசப்பட்ட பாண்துண்டுகளைக்
கொண்டு வருகையில்
மற்றோர் இடத்திலிருந்து கொண்டுவருவர்
தேனீரையும் பிஸ்கட்டையும்

ஒரே வீடு ஒரே குடும்பமென
எல்லா விழிகளிலும் கண்ணீரேந்தி
ஒன்றாக எல்லோருமே விழித்திருப்பார்கள்
இன்று அறுபதாம் தோட்டத்தில்

மூலம் – சஜீவனீ கஸ்தூரி ஆரச்சி (சிங்கள மொழி மூலம்)

தமிழில் – எம். ரிஷான் ஷெரீப், இலங்கை

கண்ணாடி மீன்கள்

செ.சுஜாதா,

கொஞ்சம் இமைகளை இலகுவாக்கு 
பெண்ணின் முதுகுத்தண்டாய் சரிந்து இறங்கும்
இந்த ஒற்றையடிப்பாதை
அழகிய தாமரைத் தடாகத்திற்கு
உன்னை அழைத்துச்செல்லும்
கொழுத்த செந்நாரைகள்
நீந்தப்பழகும் கண்ணாடி மீன்களை
தின்று திளைத்தபடி இருக்கின்றன
கண்டுகளிக்கலாம்
முடிந்தால்
உன் தூண்டிலையும் உடன் எடுத்து வா
ஆளற்ற வீட்டின்முன்
எத்தனைநேரம் தான் வெறித்திருப்பாய்
****

நாம் மனிதரைப் புரிந்து


ஆனந்தி வைத்யநாதன்

நாம் மனிதரைப் புரிந்து
கொள்ளா விட்டாலும்

நம்மை மனிதர் புரிந்து
கொள்ளா விட்டாலும்

நாம் சூழ்நிலைகளைப் புரிந்து
கொள்ளா விட்டாலும்

சூழ்நிலை நம்மை ஏற்றுக்
கொள்ளா விட்டாலும்

நாம் உண்மையை உணர்ந்து
கொள்ளா விட்டாலும்

உண்மை நமக்குள் இறங்கி
தெளிந்து கொள்ளா விட்டாலும்

நாம் பிறர் அன்பைப் புரிந்து
கொள்ளா விட்டாலும்

பிறர் அன்பு நம்மை இழுத்துக்
கொள்ளா விட்டாலும்

தானாய் வந்த வம்பை நாம்
அறிந்து கொள்ளா விட்டாலும்

நாமாய் தேடி வம்பு புரிய
மனம் கொள்ளா விட்டாலும்

விழுந்து,விழுந்து செய்த செயல்கள்
ஏற்றுக் கொள்ளா விட்டாலும்

செய்த செயல்கள் பின் நன்மை தருமென
தெரிந்து கொள்ளா விட்டாலும்…

அச்சங்கள்

 ராமலக்ஷ்மி


தோளில் வலையுடன் காடு மேடுகளில்
தேடித் திரிகிறான் கவிதையை,
ஒரு வேடனைப் போல.
காற்றைக் கிழித்தபடி
கிளியொன்று தன் குஞ்சுகளுக்காகக்
கவ்விப் பறந்தச் சோளக் கதிரிலிருந்து
நிலத்தில் உதிர்ந்த சிலமணிகளை,
ஆசையுடன் கொத்தப் போனச்
சாம்பல்நிறப் புறா மேல்
சாதுரியமாய் வலையை வீசுகிறான்.
தப்பிக்கும் போராட்டத்தில்
தோற்றுத் தளர்ந்த
பறவையின் கால்களை
இடக்கையால் வசமாய்ப் பற்றி
எடுத்துச் செல்கிறான்.
ஆனால்..
அது சுவைக்கப் படுகையில்
ஏற்படவிருக்கும் சத்தத்தை
எண்ணிப் பயப்படுகிறான்.
இருண்ட, அறியாத பாகங்களைக் கொண்ட
அதன் உடற்கூறு குறித்து
அச்சமுறுகிறான்.
தூக்கிப் பிடித்து
அப்படியும் இப்படியுமாகத்
திருப்பித் திருப்பிப் பார்க்கிறான்.
திடுமெனத் திறந்து கொண்ட அதன்
சிகப்புநிறச் சிறுகண்
தன்னை இகழ்ச்சியாய்ப் பார்ப்பதைத்
தாங்க மாட்டாமல்
விரல்களைப் பிரிக்கிறான்.
கண் எதிரே படபடத்துக்
கைநழுவி உயர உயரப் பறக்கிறக்
கவிதைப் புறாவை..
பார்த்துக் கொண்டே நிற்கிறான்.

எலிப்பத்தாயம்

சின்னப்பயல்



தொடர்ந்து
கவனித்துக்கொண்டு வருகிறேன்
அந்த
எலி இந்த நேரத்தில் தான் வருகிறது.
வந்தவுடன்
கவிழ்ந்து கிடக்கும் பீங்கான் குவளையை
உள்ளுக்குள்
எதேனும் இருக்கிறதா என
சுற்றி
ஒரு வட்டம் போட்டு பார்த்துவிட்டு
அடுக்களையின்
அடுத்த இடங்களுக்கும் செல்கிறது.
ஒன்றை
விடுவதில்லை
மீந்து
கிடக்கும் ரொட்டித்துண்டுகள்
சிந்திய
பால் , கடித்து மீதம் வைத்த கடலை மிட்டாய்,
தக்காளியின்
மேல் செதில்கள்,
உரித்துப்போட்ட
பூண்டுத்தொலிகள் என
இருக்கட்டும்
என்று விட்டுவைத்தேன்
ஒன்றும்
கிடைக்காத நாட்களில்
பரணில்
கிடக்கும் வீணான உளுத்துப்போன
கட்டைகளை
பற்கள் கொண்டு ராவுவது
தொடர்ந்தும்
கேட்கும்.
இன்று
விடக்கூடாது என்று
“வீட்டிற்குள்
தின்றுவிட்டு வெளியே போய்ச்சாகும் “
என்று
குறிப்பிட்டிருந்த பாஷாணம் வாங்கிவந்தேன்.
இன்றும்
வருகிறதா என்று பார்த்துவிட்டு
நாளை
வைக்கலாம் என்று ஓரமாய்
பாக்கெட்
பிரிக்காமல் வைத்துவிட்டேன்.
வந்தது,இரவில்
அதே நேரத்திற்கு
எனக்கும்
எழுப்புமணி இல்லாது விழிப்பு வந்துவிட்டது.
என்றும்
போல அதே குவளையை வளைய வந்து விட்டு
அடுக்களையின்
அனைத்து மூலைகளுக்கும்
சென்று
வருவது புலப்பட்டது.
சிந்தியவை
துடைக்கப்பட்டிருந்தது
மீந்தவை
காலியாக்கப்பட்டிருந்தது
தொலிகளின்
சுவடே இல்லை..
இருப்பினும்
பாக்கெட்
பிரித்து வைக்க மனமேயில்லை எனக்கு.

என்ன
ஒன்று
பூனைகளைப்போல
அத்தனை இலகுவில்
நம்மருகில்
வந்து பழகுவதில்லை எலிகள்.

– 

எதையாவது சொல்லட்டுமா…………85

அழகியசிங்கர்


தமிழகத்தில் வாகனங்களின் எண்ணிக்கை கடந்த 2012-13 ஆம் ஆண்டில் 1 கோடியே 70 லட்சத்து 91 ஆயிரத்து 768ஆக அதிகரித்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.  
இந்த அறிவிப்பை படித்தவுடன் எனக்கு திகைப்பு கூடி விட்டது. மேலே குறிப்பிட்ட எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 11.21 சதவீதம் அதிகமாம்.  மோட்டார் கார்கள் மட்டும் 15,22,706.  இப்படி மோட்டார் கார்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போனால் கார்களை எங்கே நிறுத்துவது.  பெரும்பாலும் எல்லோரும் கார்களை தெருவில்தான் நிறுத்துகிறார்கள்.  என் வீட்டிற்கு எதிரில் வீட்டில் வாகனங்களை நிறுத்த முடியாமல் தெருவில் எல்லோரும் நிறுத்துகிறார்கள்.  இதனால் அகலமான தெரு குறுகலாக மாறிவிட்டது.  
சென்னையில் இன்று ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு வாகன வசதி இல்லாமல் போக முடியாது என்ற நிலை ஏற்பட்டு விட்டது.  
சில ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு ஒரு மோட்டார் கார் வாங்கி ஓட்ட வேண்டுமென்ற ஆசை.  ஆனால் மோட்டார் கார் வாங்கினால் எங்கே நிறுத்துவது.  நான் இருந்த போஸ்டல் காலனி அடுக்ககத்தில் சொந்தக்காரரான ஒருவருக்கும் எனக்கும் கார் வைத்துக் கொள்வதில் பெரிய தகராறு வந்து விட்டது.  அவர் வேறு வழியின்றி அவர் காரை தெருவில் வைத்துவிட்டார்.  பின் அந்தக் காரை அவர் பயன் படுத்தவில்லை.  தெருவில் உள்ள தூசி எல்லாம் அவர் காரைப் பயன்படுத்திக் கொண்டது.  ஏன் இப்படி ஒரு மோட்டார் காரை வாங்கினார் என்று யோசிப்பேன்.  அப்போதுதான் தோன்றியது.  கூட்டத்தில் காரை ஓட்டும் சாமர்த்தியம் அவருக்கில்லை என்று.
சின்ன வயதிலிருந்து வாகனங்கள் ஓட்டும் ஆர்வம் எனக்கு அதிகம்.  திருச்சியில் நாங்கள் இருந்தபோதுதான் சைக்கிள் ஓட்ட கற்றுக்கொண்டேன்.  மிகக் குறுகிய தெருவான பாண்டமங்கல அக்ரஹாரத் தெருவில் நாங்கள் குடியிருந்தோம்.  தெரு முனையில் உள்ள வாடகை சைக்கிள் கடையில் குட்டி சைக்கிளை வாடகைக்கு எடுத்துக்கொண்டு ஓட்டுவேன்.  அந்தத் தெருவில் கோணல்மாணலாக சைக்கிளைஓட்டுவேன்.   சைக்கிளை எங்கும் நிறுத்தாமல் ஓட்டுவதாக எப்போதும் கனவு வரும். அப்பாவின் மேட் இன் இங்கிலாந்து சைக்கிளை எடுத்து ஓட்ட பழகிக்கொண்டேன்.  அது குதிரை மாதிரி இருக்கும்.  அதில் ஒரு பிரச்சினை. எப்படி சைக்கிளில் ஏறுவது என்பது தெரியாது.  அதற்காக ஒரு மின் கம்பத்தை நாடுவேன்.  மின் கம்பத்தின் மீது காலை வைத்து எப்படியோ ஏறி ஓட்டுவேன்.  இல்லாவிட்டால் குரங்கு பெடலை அழுத்தி ஓட்டுவேன்.  அந்த சைக்கிளில் இறங்கும்போதும்  பிரச்சினையாக இருக்கும்.  அந்தச் சைகிளை பல இடங்களுக்கு ஓட்டி காலில் அடிப்பட்டுக் கொண்டிருக்கிறேன். அசோகமித்திரன் சைக்கிள் ஓட்டி பார்த்திருக்கிறேன்.   
சைக்கிள் ஸ்கூட்டராக மாறி ஸ்கூட்டர் மோட்டார் சைக்கிளாக மாறியவுடன் சைகிள் ஓட்டுவதே நின்றுவிட்டது.  நான் வைத்திருந்த சைகிள்களை என் புதல்வனும் புதல்வியும் ஓட்டி எல்லாம் ஓய்ந்து போய்விட்டார்கள்.  சைகிள்களை இலவசமாக கொடுத்து விட்டோம். என் அப்பாவிற்கு 86வது வயதில் ஓட்டக்கூடாத சைக்கிளை ஓட்டி கீழே விழுந்து எலும்பு முறிந்து விட்டது. அவர் சைக்கிள் ஓட்டுவதைப் பார்க்கும்போது சைக்கிள் அவரை ஓட்டுகிறதா அல்லது அவர்தான் ஓட்டுகிறாரா என்ற சந்தேகம் வரும்.  அதன் பின் அவர் மேட் இன் இங்கிலாந்து சைக்கிளை யாருக்கோ தானம் கொடுத்துவிட்டார். இப்போது என் வீட்டில் சைக்கிளே இல்லை.  
ஸ்கூட்டர் வாங்கியபிறகு நான் சைக்கிள் ஓட்டுவதையே நிறுத்தி விட்டேன்.  அதை ஓட்ட கற்றுக்கொள்வதற்குள் நான் பட்டப்பாடு சாதாரண விஷயமாக தோன்றவில்லை.  என் அலுலகத்தில் பணிபுரிந்த நண்பர் ஒருவர்தான் எனக்கு ஓட்ட கற்றுக்கொடுத்தார்.  வண்டி ஓட்டும்போது அரசாங்க பஸ்கள் உறுமியபடி பக்கத்தில் வரும்போது பயம் கூடிக்கொண்டே போகும்.   
நகுலன் ஒருமுறை சென்னைக்கு வந்திருந்தபோது காசியபன் என்ற அவருடைய எழுத்தாள நண்பர் அவரைப் பார்க்க வேண்டுமென்று விரும்பினார்.  நகுலனை விட காசியபன் வயதில் பெரியவர்.  மேலும் மையிலாப்பூரில் காசியபன் வசித்துக் கொண்டிருந்தார்.  நகுலனை வந்து பார்க்கும்படி கூப்பிட்டார்.  ‘நான் அழைத்துப் போகிறேன், வருகிறீர்கா?’ என்று நகுலனை கேட்டேன்.  ‘டூ வீலரில் பின்னால் உட்கார பயம்,’ என்று நகுலன் குறிப்பிட்டார்.  ‘சரி பஸ்ஸில் போகவாம்,’ என்றேன்.  ‘பஸ்ஸில் அங்கெல்லாம் போக முடியாது,’ என்று மறுத்துவிட்டார்.  ‘ஆட்டோவில் போகலாமா?’ என்று கேட்டேன்.  ‘ஆட்டோவிற்கு எதற்கு செலவு செய்ய வேண்டும். காசியபனை அப்படிப் போய்ப் பார்க்க வேண்டாம்,’ என்று கூறிவிட்டார்.  அந்த முறை மட்டுமல்ல எப்போதுமே அவர்கள் இருவரும் சந்தித்துக்கொள்ளாமல் போய்விட்டார்கள்.  
ஒரு லட்சம் ரூபாய்க்கு நானோ கார் கிடைக்கிறது என்ற விளம்பரம் என்னையும் கார் வாங்க முயற்சி செய்து விட்டது.  அந்தக் காரை வாங்க பெரிய போட்டி நிலவியது.  எல்லோருக்கும் ஆச்சரியம் ஒரு லட்ச ரூபாய்க்கு காரா என்று.  நானும் விண்ணப்பம் செய்தேன்.  7 மாதங்களுக்குப் பிறகு கார் கிடைக்கும் என்று அறிவித்திருந்தார்கள்.  
அதற்குள் நான் கார் ஓட்ட கற்றுக்கொள்ள வேண்டுமென்ற பரபரப்பில் இருந்தேன்.  மயிலாடுதுறையில் இருந்ததால் அங்குள்ள  கார் ஓட்டக் கற்றுக்கொடுக்கும் ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் சேர்ந்தேன். எனக்குக் கற்றுக் கொடுத்தவர் எல்லாம் அவர்தான்.  ஓட்டுநர் பள்ளியும் அவர்தான்.  ஓட்டக் கற்றுக்கொடுப்பவரும் அவர்தான்.  அவர் ஒரு வீணாய்ப் போன மாருதி கார் வைத்திருந்தார்.  அதை வைத்துதான் பலருக்கு ஓட்ட கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்தார்.  
கார் ஓட்டக் கற்றுக்கொள்ளும்போதுதான் ஒரு உண்மையைக் கற்றுக்கொண்டேன்.  கார் ஓட்டுபவரிடம் ரொம்பவும் பேசக்கூடாது என்று.  ஓட்டக் கற்றுக்கொடுப்பவருக்கும் ஒரே வயது.  அவருக்குத் திருமணம் ஆகி பல ஆண்டுகளாக குழந்தைகள் பிறக்கவில்லை. அது பெரிய குறை அவருக்கு.   அவருடைய சோகக் கதையைப் பற்றி பேச ஆரம்பித்து விட்டார்.  ஏன் இப்படி வம்பில் மாட்டிக்கொள்கிறோம் என்று தோன்றியது. 
வாரம் ஒருமுறை வண்டி ஓட்டக் கற்றுக்கொள்ள அவருக்கு பணம் தர வேண்டும்.  நான் பணம் தரும் அன்று மட்டும் அவர் புன்னகைப் பூத்து மரியாதையுடன் பேசுவார்.  அதன் பின் அவர் எனக்கு கார் கற்றுத் தருகிறேன் என்று படுத்தியப்பாட்டை நினைத்து திகைப்பாகவே போய்விட்டது.  ஒவ்வொரு முறையும் நான் அவரை போனில் கூப்பிட வேண்டும்.  அவர் ஒரு இடத்தில் வந்து நிற்பார்.  பின் நான் அங்கே போய் கார் ஓட்ட கற்றுக்கொள்ள வேண்டும்.  நானும் அவரும் ஒரே வயதுக்காரர்.  முதலில் அவர் என்னுடன் மரியாதையாகப் பேசியவர், பின் ஏக வசனத்தில் பேச ஆரம்பித்துவிட்டார். üஒழுங்கா ஓட்டு…ஏன் இப்படி வளைக்கிறே…ஸ்டீரிங்கை ஒழுங்கா திருப்பு…ý என்றெல்லாம் கத்த ஆரம்பித்து விட்டார்.  ஏன் இவரிடம் மாட்டிக்கொண்டோம் என்று தோன்றியது.  ஒருமுறை என் சகோதரனிடம் இது குறித்து குறிப்பிட்டேன்.  ‘கற்றுக் கொடுக்கிறவர்கள் எல்லோரும் அப்படித்தான் இருப்பார்கள்….நீ கற்றுக்கொண்டு காரை வாங்கிக்கொண்டு போயிடுவே..அவன் எல்லோருக்கும் கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்…’ என்று அவன் குறிப்பிட்டான். அதன்பின் நான் மயிலாடுதுறையில் உள்ள அவரிடம் கார் கற்றுக்கொள்ளவில்லை.  சென்னையில்தான் டிரைவிங் லைசன்ஸ் வாங்கினேன்.
நானோ கார் எனக்குக் கிடைக்க வேண்டிய மாதம் இன்னும் முன்னால் வந்து எதிர்பார்த்ததைவிட சீக்கிரமாக கிடைத்து விட்டது.   காரைப் பார்க்கும்போது எனக்கு மலைப்பாக இருந்தது.  ஆனால் ஒரு லட்சத்திற்கு அந்தக் கார் கிடைக்கவில்லை.  அதன் விலை ஒரு லட்சத்து முப்பதாயிரம் மேல் போய் விட்டது. 
முதல்நாள் காரை எடுத்துக்கொண்டு வருவதற்கு போகும்போது கார் முன் நின்று நான், என் மனைவி, என் மாமியார் மூவரும் போட்டோ எடுத்துக்கொண்டோம்.  கார் ஓட்ட ஒரு டிரைவரை வைத்துக்கொண்டேன்.  கார் ஓட்டுபவன் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு நானோ காரைப் பற்றி விஜாரித்தேன்.  ‘இதை ஏன் சார் வாங்கினீங்க..ரொம்ப தூரம் இதை ஓட்டிக்கொண்டு போக முடியாது.  அங்கங்கே நின்னு நின்னுதான் போக வேண்டும்,’என்றான்.
என் வீடு இருக்கும் தெருவில் காரை கொண்டு வந்து வைத்தேன்.  தினம் தினம் என்னால் ஓட்ட முடியாவிட்டாலும் வாரம் ஒருமுறை எடுத்து ஓட்ட முயற்சி செய்வேன்.  ஒரு முறை என் காரை எடுத்துக்கொண்டு குறிப்பிட்ட இடத்தில் நிறுத்த முயற்சி செய்தபோது கார் இன்னொரு கார் மீது ரொம்ப லேசாக மோதி விட்டது.  இதனால் கார் நகராமல் நின்றுவிட்டது.  பின் அதை ரிப்பேர்  செய்தேன். செலவு அதிகமாகிவிட்டது.  நாங்கள் இன்னொரு வீட்டிற்கு குடி பெயர்ந்தபோது காரை வீட்டிற்குள் வைத்துக்கொள்ள வசதி கிடைத்தது.  ஆனாலும் காரை ஓட்டிக்கொண்டு வெளியே வருவதும் திரும்பவும் வீட்டிற்குள் கொண்டு வருவதற்கும் பெரிய போராட்டமே நடத்த வேண்டியிருந்தது.  ஒரு முறை சுவரில் இடித்து கார் கண்ணாடி ஒடிந்தது.  இன்னொரு முறை இரும்பு கேட் மீது இடித்து இரும்பு கேட் உடைந்து விட்டது.  ஒவ்வொரு முறையும் காரை எடுத்துக்கொண்டு போவதற்குள் பரபரப்பு அதிகரித்துக் கொண்டு போகும். 
நான் இப்போதெல்லாம் ஞாயிற்றுக்கிழமைதான் காரை எடுத்துக்கொண்டு போகிறேன். அசோக்நகரில் உள்ள சரவணபவன் ஓட்டல் முன் நிறுத்தி பொங்கல் வடை சாப்பிட்டுவிட்டு காரை  திரும்பவும் வீட்டிற்குள் கொண்டு வந்து வைத்துவிடுவேன்.  
ஒவ்வொரு நாளும் அலுவலகத்திற்குச் செல்ல மாடிப்படிகட்டுகள் வழியாக இறங்கும்போது நானோ கார் என்னைப் பார்த்து கண் சிமிட்டுகிறது.
      (அம்ருதா June 2013 இதழில் பிரசுரமானது)
      

யோசனை


 அழகியசிங்கர்

நடந்து கொண்டிருக்கும்போது
 ஏதோ யோசனை

 உட்கார்ந்திருக்கும்போது
 ஏதோ யோசனை

 சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது
 ஏதோ யோசனை

 வண்டியில் போய்க்கொண்டிருக்கும்போது
 ஏதோ யோசனை

 தூக்கம் இல்லாதபோது
 ஏதோ யோசனை

 யாருடனுவாவது பேசிக்கொண்டிருக்கும்போது
 ஏதோ யோசனை

 பெண்ணைப் பார்க்கச் சென்றால்
 பெண்ணைப் பற்றி ஏதோ யோசனை

 பையன் போன் பண்ணினால்
 பையனைப் பற்றி யோசனை

 அப்பா தனியாய் இருப்பது பற்றி யோசனை
 அலுவலகம் பற்றி யோசனை

 படிக்க முடியாத புத்தகம் பற்றி யோசனை
 விற்க முடியாத புத்தகம் பற்றி யோசனை

 குடியிருப்பில் தண்ணீர் இல்லையென்ற யோசனை

 வெயில்பற்றிய யோசனை

 மாதா அமிர்தமாயி சென்னை
 வந்தது பற்றி யோசனை

 கிரிக்கெட் பற்றி யோசனை

 தினமலர் படிக்கம்போது
 தினமலர் பற்றி யோசனை

 எல்லாவற்றையும் பற்றியும்
 யோசனை யோசனை யோசனை.
                                                                                   23.04.2013
 

பின்னற்தூக்கு

எம்.ரிஷான் ஷெரீப்
ஒரு தற்கொலைச் செய்தியோடு அன்றைய காலை விடிய
வேண்டியதாகியிருந்ததற்கும் வீட்டுப் பின்கட்டில் காகமொன்று அதன் தொண்டைத் தண்ணீர் வற்ற இரைந்து இரைந்து கத்தியதற்கும் என்ன சம்பந்தம் இருக்கப் போகிறது. அம்மா அதுவும் அபசகுனத்தின் அறிகுறியென, செய்தி கொண்டு வந்த செல்வியிடம் சொல்லிப் பெருமூச்சு விட்டாள்.

செல்விக்கு நீண்ட பின்னல். முழங்கால் வரை நீண்ட பின்னல். எப்பொழுதும் பின்னிவிட்டு அதன் நுனியில் கறுப்பு றப்பர்பேண்டால் முடிச்சுப்போட்டு விட்டிருப்பாள். மருத்துவத்
தாதிப்
பயிற்சிக்கென வந்திருந்த பெண்கள் தங்கியிருந்த விடுதியில் ஒரு பெண் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக அந்த மழைக்காலக் காலைப்பொழுதில் அவள் செய்திகொண்டு வந்தபொழுது அப் பின்னலும் முடிச்சும் தூக்குக் கயிறு போலத்தான் தோன்றியது.

எந்தப் பெண் எனத் தெரியவில்லை. வெளியூர்ப் பெண். ஆனாலும் இந்த வீதியில் பழக்கப்பட்ட ஒரு பெண்ணாகவே இருப்பாள். அருகிலிருந்த நகரத்தின் மையத்திலிருந்த மருத்துவத் தாதிகள் பயிற்சி நிலையத்தில் பயிலச் சேர்பவர்கள் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இந்த விடுதியில் இறுதி ஆண்டுகளில் தங்கிப் பயிலவேண்டுமென்பது ஒரு விதிமுறை. அந்த விதிக்கமையவோ, அல்லது தங்கிப் படிக்க வேறு வசதியான இடம் அந்த நகரத்தில் அமையாததாலோ பல ஊர்களிலிருந்தும் வந்திருந்த எல்லா இறுதியாண்டு மாணவிகளும் அங்கு வந்து தங்கியிருந்தனர்.

அம்மாவுக்கு எல்லாப் பெண்களையும் பரிச்சயம். வீட்டின் முன்னால் அம்மா ஒரு சிறிய பெட்டிக் கடை வைத்திருந்தாள். சின்ன ஷாம்பூ பக்கெட், சவர்க்காரம், கடித உறைகள், கூந்தல் பின்கள், ஊக்குகள் எனப் பெண்கள் வந்து வாங்கிப் போவார்கள். சில சமயங்களில் அவர்கள் விடுதியின் வயதான காவல்காரனுக்கு வெற்றிலையும் சுண்ணாம்பும் கூட வாங்கிப் போவார்கள். அம்மாவுடனான இந்தச் சிறிய வியாபாரங்களின் பொழுது அவர்கள் சிந்தும் புன்னகைகள் இடையில் ஒரு பாலம் போலப் பரவி அம்மாவுக்கு அவர்களுடனான பரிச்சயத்தை இலகுவாக ஏற்படுத்தி
விட்டிருந்தது.

மருத்துவத்
தாதிகள்
என்றால் அவர்களுக்கே உரிய வெள்ளைச் சீருடையையும் , தொப்பியையும் கற்பனை பண்ணக் கூடாது. இவர்கள் எல்லாவற்றையும் பயின்று பின் வேலை பார்க்கச் செல்லும்பொழுதே அவற்றை அணிபவர்களாக இருக்கக் கூடும். இப்பொழுதைக்கு வெள்ளைச் சேலைதான் அவர்கள் சீருடை. வீதியில் காலை ஏழு மணிக்கே அவர்கள் சோடி சோடியாய் பஸ் நிலையம் நோக்கி நடப்பதைப் பார்க்க வெள்ளைக் கொக்குகளின் அணிவகுப்பைப் போல அழகாக இருக்கும்.

செல்வி இப்பொழுது எழுந்துகொண்டாள். செய்தியை இன்னொருவரிடம் எத்திவைத்த திருப்தியோடு ஏதோ வர்ணிக்கமுடியாத சோகமொன்றும் அவள் முகத்தில் படிந்திருந்ததைப் பார்க்க
முடிந்தது.
அவள் எழுந்துகொண்டதோடு அம்மாவும் எழுந்துகொண்டாள். செல்வி கொண்டு வந்த பாலைப் பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்துக் காய்ச்சத் தொடங்கினாள். செல்விதான் அந்த விடுதிக்கும் பால் விற்பவள். முக்கால்வாசிப் பால் சுமந்த பெரிய பாத்திரத்தைத் தூக்கமுடியாமல் தூக்கிக் கொண்டு அடுத்த
வீட்டுக்கு
நகர்ந்தாள். அங்கேயும் அந்தத் தற்கொலைச் செய்தியை முதலில் இவள்தான் சொல்ல
வேண்டியிருக்கும். இல்லாவிடில் அந்த வீட்டிலிருந்து விடுதிப்
பக்கம்
யாரேனும் போய் வந்திருந்தால் அவர்களுக்கு முன்னமே தெரிந்திருக்கும்.

அம்மாவுக்குத்தான் ஒரே யோசனையாக இருந்தது. எந்தப் பெண்ணாக இருக்கும் ? நேற்று மாலையில் மழைக்கு ஒரு மஞ்சள் பூப்போட்ட குடையை எடுத்து வந்து பேனையும், பிஸ்கட்டும், வாழைப்பழமும் வாங்கிப் போனதே ஒரு சிவந்த ஒல்லிப்பெண். அதுவாக இருக்குமோ? சாக நினைத்த பெண் பிஸ்கெட்டெல்லாம் வாங்கிச் சாப்பிட்டு
விட்டுச்
சாகுமா என்ன? அதுவும் முழுதாக எழுதித் தீராத
வரைக்கும்
வாழ நினைக்காத பெண் கொஞ்சம் கூடுதல் விலைகொடுத்து அழகான பேனை வாங்கிப் போக மாட்டாளே? அதுவும் நட்ட நடுஇரவில் அறைத் தோழியருக்கு எந்த அரவமும் ஏற்படா வண்ணம் எழுந்து விடுதியின் முன் சாலைக்கு வந்து தன்னை முழுதும் நிர்வாணமாக்கி, தனது வெள்ளைச் சேலையில் தூக்குப் போட்டுச் சாக ஒரு பெண்ணுக்கு எந்தளவுக்கு தைரியம் இருக்கவேண்டும் ? அந்தச் சிவந்தபெண் அந்தளவுக்கு தைரியமானவளா என்ன ?

நிச்சயமாக அந்தப் பெண்ணாக இருக்கமாட்டாள் எனத் தோன்றியது. அவ்வாறெனில் இறந்த பெண் யார்? செத்தவள் இறுதியாக வந்து என்ன வாங்கிப் போனாள் ? அம்மா கடைக்கு வந்த பெண்களின் ஒவ்வொரு முகமாகத் தன் நினைவுக்குக் கொண்டுவர முயன்று தோற்றாள். நேற்று வந்த பெண்ணின் மஞ்சள் கலரில் அழகான பூப்போட்ட குடை ஞாபகத்திலிருந்த காரணம் அதே மாதிரியான குடை அம்மாவிடமும் இருந்ததுதான். அந்தக் குடையை யாருக்கோ இரவல் கொடுத்துப் பின் வாங்க மறந்துவிட்டதாகத் தோன்றிய கணம், பொங்கிய பாலை இறக்கி
வைத்துவிட்டு
எழுந்துபோய் அலமாரியின் மேலே பார்த்தாள். குடை அதன் பாட்டில் இருந்தது. ஆனால் எப்பொழுதோ, எதுபோன்றோ குடை அல்லது வெயில் சுமந்துபோன பெண்ணொருத்தி இன்று உயிருடன் இல்லை. நிச்சயமாக இந்தக் கடையில் சின்னச் சின்னதாகக் குவிந்திருக்கும் பொருட்களில் ஏதோ ஒரு பொருளை வாங்கிப் போனவளாகத்தானே இருப்பாள். அப்பொழுது சிந்திய புன்னகையும், சிதறவிட்ட மூச்சுக்காற்றுகளும் இந்த பெட்டிக் கடையின் மூலைகளைத் தேடி ஓடியிருந்திருக்குமே ?

வாசல் வீதியினூடாகப் போலிஸ் வண்டி விடுதியை நோக்கிப் போவது தெரிந்தது. இனி விசாரணை தொடங்கக்கூடும். அவளது பிணம் அறுக்கப்பட்டுப் பரிசோதனைகள் நடக்கும். தற்கொலைக்கான காரணம் பலவிதங்களில் அலசப்படும். அந்தப் பெண் குறித்தான ஒழுக்கமும், அந்தரங்கமும் கூடப் பரிசீலிக்கப்படும். இனி வண்டி,வண்டியாக அவளது உறவினர்கள் வந்து கதறலோடு விடுதியை நிறைக்கக்கூடும். காலை நேரங்களில் வீதியில் அணிவகுக்கும் கொக்குச் சோடிகளில் ஒன்று குறையும். அம்மா தன் கடையை அன்று மட்டும் மூடப்போவதாக உத்தேசித்துக் கொண்டாள். இன்றைய துக்கத்தில் எப்படியேனும் பங்குகொள்ள வேண்டும்போல இருந்தது அவளுக்கு.

தானாகச் சாவதை விடவும் அகால மரணங்கள் என்பவை பெரிய தாக்கத்தை ஏற்படுத்துபவைதான். ஒவ்வொரு நாளும் சிரிக்க நினைப்பதைப் போல, அழ நினைப்பதைப் போல, பசியை நினைப்பதைப் போல, குளியலை நினைப்பதைப் போல மரணத்தை தினமும் நினைப்பவர்கள் இல்லை. ஒருவரைச் சார்ந்தே வாழப்
பழகியவர்கள்
அல்லது அவரோடு நெருக்கமாகப் பழகியவர்கள் அல்லது தெரிந்தவர்கள் அவரது அகால
மரணத்தின்போது
பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

பின்னொருநாளில் யாரிடமோ ஏமாந்து செல்வியும் தற்கொலை செய்துகொண்ட பொழுது அவளிடம் பாலை இழப்பதற்காகக் காத்திருந்த அவளது பிரியத்திற்குரிய மாடுகளும், அவள் கொண்டுவரும் பாலைப் பெறுவதற்காகக் காத்திருந்த அம்மாவும் மீண்டும் சோகத்தில் மூழ்கினர். அம்மா தனது துயரத்தை வெளிக்காட்ட அன்றும் முன்போலக் கடையைப் பூட்டினாள்.

தனது தாவணியில் தூக்குப்போட்டுச் செல்வியின் தலை துவண்டு தொங்கிக் கொண்டிருந்த பொழுது அவளது நீண்ட பின்னல் அவளது முழங்காலை முன்புறமாகத் தொட்டபடி தனியாகத் தொங்கிக் கொண்டிருந்தது. அப்பொழுதும் அப்பின்னலும் கறுப்பு றப்பர்பேண்ட் முடிச்சும் தூக்குக் கயிர் போலத்தான் தோன்றியது.

இலங்கை