அங்கிருந்த காட்சிப்பிழை


செ.சுஜாதா,
வலிய உன் கரங்கள்
மேகத்தை உருட்டி இறுக்குகின்றன
மற்றுமொரு
இரவை
அடிவயிற்றில் எத்தி முடுக்குகிறாய்
அழுந்தும் உன் ஆள்காட்டி விரலில்
கசியத்தொடங்குகின்றன
நட்சத்திரங்கள்
கங்காரு நடையின் தோற்றமுடைய
உனது
இப்பயணத்தில்
சிதைகின்றன
பறவையின் வழித்தடங்கள்
மருண்டு தேயும் பிறைநிலவை
நீ நிமிர்ந்து காண எத்தனிக்காதே
எறும்புகள் ஊரும்
விறைத்த காட்டு மானின்
விழிகளை அங்கே நீ காணக்கூடும்
***

எதையாவது சொல்லட்டுமா……87

அழகியசிங்கர்
ஒருமுறை ஒரு மரத்தடியின் நிழலில் நாங்கள் நின்று பேசிக்கொண்டிருந்தபோது, அந்த நண்பர் ஒரு கேள்வி கேட்டார்.  üஉங்கள் வாழ்க்கையின் அர்த்தமென்ன?ý அப்போது அந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.  திகைப்பாக இருந்தது. இப்போதெல்லாம் அதுமாதிரியான கேள்விக்கு யாரும் சிரித்துக்கொண்டே பதில் சொல்லிவிடுவார்கள்.  சமீபத்தில் என் உறவினர் பையனிடம் அதுமாதிரி ஒரு கேள்வியைக் கேட்டேன்.  அவன் ஐடியில் பணிபுரிகிறான்.  காலையில் வேலைக்குப் போனால் இரவு தூங்குவதற்கு வருகிறான்.  காலையில் அவன் டிபன் சாப்பிடும்போது இந்தக் கேள்வியைக் கேட்டேன்.  அவன் உடனே சொன்னான்: “பூரி சாப்பிடுவது,” என்று.
அந்த நண்பர் என்னிடம் குறிப்பிட்டபோது நான் கொஞ்சம் தீவிரமாக இதைக் குறித்து யோசித்துப் பார்த்தேன்.  அதற்கு எந்தப் பதிலும் என்னால் சொல்லமுடியவில்லை.  கேள்வி கேட்ட அவரும் அதற்கு பதில் சொல்லவில்லை.  பின் அவர் கேட்டார்.  ‘நீங்கள் இந்த மரத்தை பார்த்திருக்கிறீர்களா?’
“இந்த அவசர உலகத்தில் எங்கே மரத்தையெல்லாம் பார்க்கிறது?” என்று பதில் கேள்வி போட்டேன்.
       “நாம் இப்படித்தான் பாஸ்..எதையும் பார்ப்பதில்லை..அவ்வளவு அலட்சியம் நம்மிடம்..”
அவரை முதல்முறை ஜே கிருஷ்ணமூர்த்தி கூட்டத்தில் சந்தித்திருக்கிறேன்.  பிரமிளுடன் டீக் கடை ஒன்றில் டீ குடிக்க வந்துகொண்டிருக்கும்போது, அவர் பிரமிள் சட்டைப் பாக்கேட்டில் அவர் கையில் எடுத்தப் பணத்தைத் திணித்தார்.  அவருடைய செய்கை எனக்கு திகைப்பாக இருந்தது.  பணம் கேட்டாலே கொடுக்க விரும்பாத இந்த உலகத்தில் இப்படியும் ஒருவர் பிரமிளுக்குக் கிடைத்திருக்கிறாரே என்று நினைத்தேன்.
தனியாக இருக்கும்போது இது குறித்து பிரமிளிடம் கேட்டபோது, “பொறாமைப் படாதே ஓய்..” என்று குறிப்பிட்டார். அந்த நண்பர் மேற்கு மாம்பலத்தில்தான் வசிக்கிறார் என்பதைத் தெரிந்துகொண்டேன்.  பின் அவரை நான் அடிக்கடி தெரு முனைகளில், டீக்கடைகளில் சந்திப்பது வழக்கம்.  பெரும்பாலும் ஞாயிற்றுக்கிழமைகளில்.  அவரும் என்னைப் போல தேசிய வங்கி ஒன்றில் பணிபுரிகிறார் என்பதை அவர் மூலம் அறிந்தேன்.  
அவர் எப்போதும் தாடியுடன் காட்சி அளிப்பார்.  அந்தத் தாடியும் அவர் முகத்திற்கு பொருத்தமாக இருக்கும்.  பேசும்போது சன்னமான குரலில்தான் பேசுவார்.  அவர் சத்தம் போட்டு பேசி நான் பார்த்ததில்லை.  பெரும்பாலும் அவருடைய நண்பர்கள் ஆட்டோ ஓட்டுபவர்கள்.
  
அவர்களுக்கு பலவிதங்களில் அவர் உதவி செய்திருக்கிறார்.எப்போதுமே அந்த நண்பரை வீட்டில் போய் பார்க்க மாட்டேன். ஞாயிற்றுக்கிழமைகளில் நான் டூவீலரில் போய்க் கொண்டிருக்கும்போது அவர் கண்ணில் படுகிறாரா என்று பார்ப்பேன். நானே வலியப் போய் அவரைப் பார்ப்பதில்லை.  அதேபோல்தான் அவரும். 
பார்க்க கம்பீரமாக தோற்றமளிக்கும் அவர் ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை என்ற கேள்வியை அவருடைய நெருங்கிய நண்பர் ஒருவரிடம் கேட்பேன்.  
“அவர் ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை என்பது தெரியவில்லை.  அவருக்கு ஒரு காதலி இருக்கிறாள்..”என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
ஆனால் அந்த நண்பரை நான் நேரில் பார்க்கும்போது, இந்தக் கேள்வியை மட்டும் கேட்க மாட்டேன்.  அன்றாடம் உழலும் பிரச்சினைகளிலிருந்து விலகி நாங்கள் வேறு விஷயங்களைப் பற்றி பேசிக்கொண்டிருப்போம். மரம் ஏன் பேசாமல் இருக்கிறது என்பதுபோல.  ராயப்பேட்டையில் பிரமிள் குடியிருந்த அறை இருந்த தெருவிற்கு எதிரில்தான் அவருடைய வங்கிக் கிளை.  அடிக்கடி பிரமிள் அறையில் அவர் தென்படுவார்.  அவர் பிரமிளுடன் என்ன பேசுவார் என்பது தெரியாது.  அங்குள்ள சில புத்தகங்களைப் பார்ப்பார்.  பின் பிரமிள் பேசுவதைக் கேட்பார்.  “வரட்டுமா, பாஸ்.”என்று கிளம்பி விடுவார்.
“வித்தியாசமான மனிதர்,” என்றன் பிரமிளிடம்.
“அவர் பிரச்சினை என்னவென்று தெரியாது.  நான்தான் அவரைக் காப்பாற்றினேன்.”
நானும் அந்த நண்பரும் அடிக்கடி சந்தித்துக் கொள்பவரில்லை. பல மாதங்கள் சந்தித்துக்கொள்ளாமலேயே இருப்போம்.  
ரொம்பநாள் ஆயிற்றே அவரைப் பார்த்துப் பேசி அவர் வீட்டு வழியாகத்தானே வந்துகொண்டிருக்கிறோம், அவர் வீட்டிற்குப் போய்ப் பேசலாம் என்று நினைத்து அவர் வீட்டிற்குப் போனேன்.
அவர் அவருடைய இளைய சகோதரன் குடும்பத்துடன் வசித்து வந்தார். 
உள்ளே போனபோது வரவேற்பு மோசமாக இருந்தது.  எல்லோர் முகத்திலும் நண்பரைப் பற்றி சொல்லும்போது ஒரு வித அலட்சியம். 
எங்கே என்று கேட்டபோது, ‘மாடியில் ஒரு அறை இருக்கிறது அங்கே போய்ப் பாருங்கள்,” என்றார்கள்.
மாடி அறைக்குச் சென்று அவரைப் பார்த்தேன்.  அவர் வழக்கம்போல் பீடி பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார்.
  
“உங்களைப் பார்த்து ரொம்ப நாட்கள் ஆயிற்று,”என்றேன்.
“இங்கதான் இருக்கேன், பாஸ்…”
       “இன்னிக்கு என்ன வீட்டில எதாவது விசேஷமா?”
“ஆமாம். அப்பாவுக்கு திவசம்..”
“என்ன திவசமா?  நீங்கதானே முதல் பையன்.  சடங்கில் கலந்துகொள்ளவில்லையா?”
“பாஸ்..எனக்கு அதிலெல்லாம் நம்பிக்கைக் கிடையாது..”
“நம்பிக்கை வேண்டாம்..வருஷத்திற்கு ஒருமுறைதான் வருகிறது.  வீட்டில் உள்ளவர்களுடன் சேர்ந்து நீங்கள் அதை நடத்தினால் என்ன வந்தது.”
என் கேள்விக்கு பதில் சொல்லக்கூட விரும்பவில்லை.
ஏன் நண்பரைப் பற்றி பேச்சு எடுக்கும்போது வீட்டிலுள்ளவர்கள் அவ்வளவு அலட்சியமாக பதில் சொன்னார்கள் என்று புரிந்தது.  அவர் வேண்டாத விருந்தாளியாக நினைக்கிறார்கள்.
அதன்பின் இரண்டு மூன்று ஆண்டுகள் அந்த நண்பரை நான் பார்க்கவும் இல்லை.  அவரும் என் கண்ணில் படவில்லை.
பின் ஒருமுறை அவரை ஒரு டீக் கடையில் சந்தித்தேன்.
என் வண்டியை நிறுத்திவிட்டு, அவரைப் பார்த்து, “எப்படி இருக்கிறீர்கள்?” என்றேன்.
“வேலையை விட்டுட்டேன் பாஸ்….” என்றார்.
கேட்பதற்கு அதிர்ச்சியாக இருந்தது.  அவரைப் பார்க்கும்போது, அவர் அணிந்திருந்த உடை அழுக்காக இருந்தது.  பார்க்க முன்பு இருந்த கம்பீரம் இல்லாமலிருந்தார்.
  
“ஏன் விட்டீர்கள்?”
“ஒரே கடன் தொல்லை…தாம்பரம் பக்கத்துல ஒரு வீடு கட்டியிருந்தேன்.  அதன் கடன் அதிகமாகப் போய்விட்டது…வேலையைவிட்டாத்தான் கடனை சரி பண்ணலாம் போலிருந்தது…”
“எப்ப விட்டீர்கள்?  இந்த கோல்டன் ஹண்ட் ஷேக் வந்ததே..அப்ப விட்டீர்களா?”
“அதுக்கு முன்னாடி..”
“ஏன் அதுமாதிரி செய்தீர்கள்? உங்களுக்கு பெரிசா கிடைத்திருக்காதே?”
அவர் செய்த முட்டாள்தனத்தை எண்ணி நொந்துகொண்டே சென்றுவிட்டேன்.  திரும்பவும் அவரை நான் பார்க்கவில்லை.  தெருவில் தட்டுப்படவில்லை.
ஒருமுறை பக்கத்தில் உள்ள அடுக்ககத்திலிருந்து ஒரு காவலாளி வந்து, “சார்…உங்களைப் பார்க்க ஒருவர் வந்திருக்கிறார்?” என்றான்.
நான் யார் என்று பார்ப்பதற்கு வெளியே வந்தேன்.  அவர்தான் நின்று கொண்டிருந்தார்.
  
“நான் இந்தப் பக்கமா வந்திருக்கிறேன்..இங்கதான் உங்கள் வீடு என்பது தெரியாது..”.  பார்ப்பதற்கு மோசமாக இருந்தார்.  நான் பதில் பேசாமல் அவரைப் பார்த்தேன். “பாஸ்..கொஞ்சம் அவசரம்..பணம் வேண்டும்.  கொஞ்சம் இலவசமா கொடுங்க..கொஞ்ச கடனா கொடுங்க..”
“பணமா?”
“பாஸ்..யோசனைப் பண்ணாதீங்க.. வீட்டிலிருந்தால் எடுத்து வாங்க.. இல்லாட்டி பாங்கிலிருந்து எடுத்துத் தாருங்கள்..”
“வீட்டில் இல்லை,” என்று கூறியபடி அவரை உஸ்மான் தெருவில் உள்ள என் வங்கிக் கிளைக்கு அழைத்துக்கொண்டு போனேன்.  வங்கியிலிருந்து பணத்தை எடுத்துக்கொண்டு வரும்போது ஒரு டீக் கடையில் நின்று, 150 ரூபாய் பணம் கொடுத்தேன்.
“என்ன 150 ரூபாய் கொடுக்கிறீர்கள்….பாங்கிலதான் சம்பாதிக்கிறீர்கள்…300 ரூபாய்க்கு மேல் கொடுங்கள்..”என்றார்.  நான் திகைப்புடன் 300 ரூபாய் கொடுத்தேன்.
“நன்றி பாஸ்..” என்றார்.
அடுத்தவாரமே ஒருநாள் பீச் ரோடில் பணிபுரியும் என் அலுவலகத்திற்கு வந்துவிட்டார்.  பார்க்க இன்னும் கோரமாக இருந்தார். அலுவலகத்திற்குள் நுழைய வெட்கப்பட்டு கேட் கிட்டே நின்று கொண்டிருந்தார்.  நான் அவரைப் பார்த்து அவசரம் அவசரமாக ஓடி வந்தேன். 
“பாஸ்..பணம் வேண்டும்…”
நான் அவர் கேட்ட பணத்தைக் கொடுத்தேன்.  பின் மெதுவாக,”நான் இதுமாதிரி கொடுக்க முடியாது…தப்பாக நினைக்காதீர்கள்? இதுதான் கடைசி முறை,” என்றேன்.  அதைக் கேட்டு அவர் கோபப் பட்டார்.”கொடுத்தால் என்ன வந்தது…குறைஞ்சா போயிடுவே…நான் பிச்சைக்காரன்னு நினைத்தாயா..இந்தப் பணத்தையே கொஞ்ச நண்பர்களிடம்தான் கேட்டு வாங்குவேன்..யார்க்கிட்டேயும் போய் நிற்க மாட்டேன்…கொடுக்கறதுக்கு பெரிய மனசு வேண்டும்…இல்ல பாவம் வந்து சேரும்…”என்று கூறியபடி அவர் அந்த இடத்தைவிட்டு போய்விட்டார்.
என் திகைப்பு அடங்க வெகுநேரம் ஆகிவிட்டது.
     (ஆகஸ்ட் 2013 அம்ருதா இதழில் வெளிவந்த கட்டுரை)

உதிர்ந்த கிடக்கின்றஇலை-

ரவிஉதயன்

உதிர்ந்த கிடக்கின்ற
இலையொன்றை எடுத்து
முகர்ந்தவாறே இது என்ன மரமென்று?
கல்யாணியண்ணன் கேட்டார்.
நிழலின் குளிர்ச்சியில்
நின்றுகொண்டிருந்த எனக்கும்
இலைமடங்கலின் வாசனைஅடிக்கிறது.
நெடுநெடுவென்று வளர்ந்துவிட்டது
அவரைப் போலவே
அவரது கேள்வி
என் அறியாமையின்மீது!
பெயர் தெரியாமரமென்கிறேன் அவரிடம்
அவரும் புன்னகைக்கிறார்.
அப்போது தான்
பெயர் தெரியா அம்மரத்தில்
பெயர் தெரியாப்பறவையொன்று
வந்தமர்ந்தது.

தூதும்,, சமாதானமும்.

அமைதிச்சாரல்



கல்லெறிபட்ட தேன் கூடாய்க்
கலைந்து கிடந்த வீட்டில்
இரு வேறு கட்சிகளாய்ப்
பிரிந்து நின்று
உப்புப் பெறாத விஷயத்துக்காய்,
விஷவார்த்தைகளால் சுட்டுக் கொண்டார்கள்
தலைவனும் தலைவியும்.
பறக்கும் தட்டுகளும், கண்ணீர்க் குண்டுகளும்
இறைந்து கிடந்த போர்க்களத்தில்,
சட்டென்று ஏற்றப்பட்டது
சமாதானக்கொடி
ஓடிச் சென்று கட்டிக் கொண்ட
மழலைத்தூதுவர்களால்..
எவர்க்காய்ப் பரிவதென்றறியாமல்
மருண்டு நின்றவர்களுக்காய்
போர் நிறுத்தம் அறிவிக்கப்பட
முதுகுக்குப்பின் கைகுலுக்கிக்கொண்ட
தூதுவர்களால்
நிரம்பி வழிந்தது மனக்கருவூலம்
வற்றாத அன்பால்..

இளஞ்சிவப்புச் சூரியனின் அலாதி ப்ரியம்


ஆறுமுகம் முருகேசன்      


“அடப்பைத்தியமே” யென
கால்களை
முத்தமிட்டுருந்தது நுரை

கழுத்தில்
சங்கிலிப் பூட்டப்பட்ட
படிமநாயைப் பிடித்தவாறு
என்னைக் கடக்கிறார்
ஹேண்ட்ஸம் பீச் தாத்தா

நான் முறைத்து அமர்ந்திருந்த
கடல்
திரும்பி என்னை முறைத்துக்கொண்டிருக்கிறது

நீ
வருகிறாய்!  

அன்புடையீர்,

                                                             25.07.2013
வணக்கம்.
நவீனவிருட்சம் 93வது இதழ் வெளிவந்துவிட்டது. ஒருவழியாக. கடந்த 6 மாதங்களாக முயற்சி செய்து வெளிவந்த இதழ்.  ஏன் இந்தத் தாமதம் என்ற கேள்விக்கு பதில் எதுவும் சொல்ல வரவில்லை. ஒரே கவனமாக இருந்தால் இன்னும் சீக்கிரமாக நவீன விருட்சம் இதழைக் கொண்டு வந்து விடலாம்.
கீழ்க்கண்ட படைப்பாளிகளின் படைப்புகள் வெளிவந்துள்ளன.  நவீன விருட்சத்தில் பங்குப்பெற்ற படைப்பாளிகள் தங்களுடைய முகவரிகளைத் தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.
1) தமிழில் தற்காலத் தோரணை – பாரதியின் கவிதை   2
2) பின்னற்தூக்கு – எம் ரிஷான் ஷெரீப்                                 17
3) எலிப்பந்தாயம் – சின்னப்பயல்                                 20
4) கதிரவன் எழுதுகிறான் – அழகியசிங்கர்                         24
5) குரு-சினிமா கட்டுரை – அம்ஷன்குமார்                         26
6) பயணீ கவிதைகள்                                                 30
7) மோத்தி – காசி விஸ்வலிங்கம்                                 32
8) அலாரம் – அழகியசிங்கர்                                         38
9) கரையான் – ராஜேஸ்வரி                                  45
                                                          அன்புடன்,
   
                                                                                                               அழகியசிங்கர்

பிரிகிற361 நாட்கள்


ரவிஉதயன்

பிரிகிற361
நாட்களை
அவசர அவசரமாக
1 முத்தத்தில் சமன் செய்ய
முயலுகிறார்கள் புதியதம்பதிகள்
பச்சை சிக்னல் விழ
ரயில் புறப்பட…
நான்கு நட்சத்திரவிழிகள்
மினுங்கி
மின்னுகின்றன.
18 பெட்டிகள்
கடந்து விட்டன
ரயில் சென்றுவிட்டது.

இப்போது
விழுகிறது சிகப்பு சிக்னல்.

காத்திருக்கின்றன
361 நாட்கள்
புதிய மனைவி மேலும்
சிகப்பு சிக்னல்.

எதையாவது சொல்லட்டுமா….86

அழகியசிங்கர்

நாமெல்லாம் நாடகப் பாத்திரங்கள்.  உலகம்தான் நாடகமேடை. வாழ்க்கை என்ற நாடகத்தில் நாம் எல்லோரும் நடித்துக்கொண்டிருக்கிறோம்.  தினம் தினம் நாம் என்ன நடிக்கிறோம் என்பது தெரியாமல் நடித்துக்கொண்டிருக்கிறோம்.  வசனம் யாரும் எழுதித் தருவதில்லை.  நாம்தான் வசனம் எழுதாமல் நடித்துக் கொண்டிருக்கிறோம். நம்முடைய நாடகத்தில் நாம்தான் எல்லாம்.  ஏன் இப்படி யோசிக்கிறேன்?
தங்கசாலையில் நாங்கள் குடியிருந்தபோது, குடியிருந்த வீட்டு சொந்தக்காரர் சினிமாவில் நடிக்க வேண்டுமென்று ஆசைப்பட்டார்.  நகைச்சுவைப் பாத்திரம் ஏற்று நாகேஷ் மாதிரி நடிக்க வேண்டுமென்று.  ஆனால் அது நடக்கவில்லை.  அவருக்கு அது பெரிய ஏமாற்றம் இல்லை. பள்ளிக்கூடம் படித்துக்கொண்டிருந்த எனக்கும் என்னைப்போல உள்ள சில நண்பர்களுக்கும் எப்படி நடிக்க வேண்டுமென்று சொல்லிக் கொடுத்துக்கொண்டிருப்பார்.  ஒருமுறை அரும்பாக்கத்தில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் நடக்கும் விழாவில் நாடகம் ஒன்று அரஙகேற்றம் நடத்த வேண்டுமென்று என்னை ஒரு நாடகம் எழுதச் சொன்னார்.  எழுதவே தெரியாத நான் ஒரு நாடகம் எழுதினேன்.  அந்த நாடகத்தில் பெண் பாத்திரமே இல்லை.  எல்லாம் ஆண் பாத்திரங்கள்.   அந்த நாடகத்தில் நான் ஒரு வில்லன்.  என் நண்பன் ஒரு வில்லன்.  என் தம்பி போலீஸ்காரன்.  
எல்லோரும் நடிக்கப் போனோம்.  நான் வசனம் பேசி என்நண்பன் கையிலிருந்து கத்தியைப் பிடுங்க வேண்டும்.  நான் வசனம் பேசியும் என் நண்பனிடமிருந்து கத்தியைப் பிடுங்க முடியவில்லை.  பெரிய முயற்சி செய்து கத்தியைப் பிடுங்க வேண்டியிருந்தது.  என் தம்பி போலீஸ்காரன்.  மேடையில் அவன் நடந்து வந்து கொண்டிருந்தபோது மைக்கை தட்டிவிட்டான்.  அவ்வளவுதான் எல்லாம் போயிற்று.  நாடகமும் பாதியில் நின்று போய்விட்டது.   அந்த நாடகத்தைக் காண்பதற்கு யார் வந்தார்கள் என்பது இப்போது என் ஞாபகத்தில் இல்லை.  உண்மையில் நாடகம் நடக்காமல் வேறு நாடகம் நடந்துவிட்டது.   நாடகம் முடிந்து  வீட்டிற்கு வந்துகொண்டிருந்தபோது, நண்பனிடம் கேட்டேன்.  “ஏன் நீ கத்தியை உடனே கொடுக்கவில்லை?” என்று.  “நீ கொஞ்சமாக வசனம் பேசினாய்.  இன்னும் கொஞ்சம் வசனம் பேசியிருக்க வேண்டும்,” என்றான் அவன்.  அந்த நாடகத்திற்கு வசனம் எழுதியதே நான்தான்.  அவன் அப்படிப் பேசியது வேடிக்கையாக இருந்தது.
சபாவில் நாடகம் பார்க்கும்போது எனக்கும் நாடகம் இப்படி நடத்த வேண்டுமென்று தோன்றும்.  ஆனால் அதற்கான முயற்சி எப்படி ஏற்பாடு செய்வது என்பது தெரியாது.  நான் வேலை எதுவும் கிடைக்காமல் திரிந்தபோது, என் உறவினர் பையன் முயற்சியில் ஒரு நாடகத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.  அந் நாடகத்தை என் உறவினர் பையன்தான் எழுதிக்கொண்டிருந்தார்.   ஆனால் நாடகம் அரங்கேற்றம் ஆகும் சமயத்தில் அவர் பெயரை குறிப்பிடப்படவில்லை. அதில் கதாநாயகியாக நடிக்கத் தொடங்கியவர், அன்றைய தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கும் ஒரு வசீகரமான பெண்மணி.  அவர் கணவர்தான் அந் நாடகத்தில் நடிக்கும் கதாநாயகன்.  அவர்தான் அந்த நாடகத்தையும் இயக்குபவர். நான் அந் நாடகத்தில் அத்தான் பாத்திரம் ஏற்று நடிக்கும் அசட்டுத்தனமான பாத்திரம்.  நானும் அந்தப் பெண்ணை காதலிப்பதாக  காட்சி. 
அந்தப் பெண்ணைப் பார்த்து நானும் காதல் வசனம் பேச வேண்டும்.  அந் நாடகத்திற்கான ஒத்திகை பல மாதங்களாக சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் நடக்கும்.  ஒத்திகைக்காக நான் மாம்பலத்திலிருந்து மயிலாப்பூருக்கு சைக்கிளில் போவேன்.  நான் அந்தப் பெண்ணைப் பார்த்து வசனம் பேசும்போது, அந்நாடகத்தின் இயக்குநரும், கதாநாயகனாக நடிப்பவருநான அவர், எப்படி நடிக்க வேண்டுமென்று சொல்லிக்கொடுப்பார்.  அவர் சொல்வதைக் கேட்டு நான் திரும்பவும் நடிப்பேன்.  
நான் வசனம் பேசியபடி கதாநாயகி முகத்தைப் பார்க்க வேண்டும்.  ஆனால் நான் கதாநாயகி முகத்தைப் பார்த்தால் வசனம் பேச வராது.  அல்லது வசனம் பேச வந்தால் கதாநாயகி முகத்தைப் பார்க்க மாட்டேன்.  
ஒருமுறை நான் வசனம்போது ஒரு தப்பை இயக்குநர் கண்டுபிடித்தார்.  “ஏன் நீங்கள் சத்தமாக வசனம் பேசுவதில்லை?” என்று கேட்டார்.  “எங்கே நீங்கள் சத்தம் போடுங்கள்?” என்று கேட்க, நான் பெரிதாக சத்தம் போட்டேன்.  üஎன்ன நீங்கள் இவ்வளவு சத்தமா குரல் எழுப்பிறீங்க…ஆனால் வசனம் பேசும்போது சத்தம் வருவதில்லையே?ý என்று கேட்டார்.  இன்னொரு முறை என்னிடம் பெரிய தப்பைக் கண்டுபிடித்தார்.  “ஒவ்வொரு முறையும் நாம் வசனம் பேசும்போதும், நம் உடம்பும் நடிக்க வேண்டும்,” என்றார்.  நான் அந்தக் கதாநாயகியைப் பார்த்து வசனம்போது, தேவையில்லாமல் என் கையை மார்பில் வைத்துக் கொள்வேன்.  “ஏன் கையை அப்படி வைத்துப் பேசறீங்க?”  என்று கேட்க, நான் திரும்பவும் வசனம் பேசும்போது, பேசுவதில் தடுமாறும்.  மேலும் கைகள் வெறுமனே தொங்கும்.  என் கவனம் முழுவதும் கைகள் மீதே இருக்கும்.  ஒரு வழியாக அவர் என்னை நடிக்க வேண்டாமென்று சொல்லிவிட்டார்.  எனக்கும் நிம்மதியாக இருந்தது.  அதன்பின் ஏன் நம்மால் நடிக்க முடியாதா என்ற கேள்விக்குறி சுழன்ற வண்ணம் இருந்தது. அந்த நாடகம் ஒருகாட்சியோடு அரங்கேற்றம் ஆகி முடிந்துவிட்டது. 
வங்கிப்பணியில் சேர்ந்தபிறகு நாடகத்தில் நடிக்க எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது.  பரீக்ஷா ஞாநி ஏற்பாடு செய்த நாடகத்தில்.  மூர்மார்க்கெட் என்ற நாடகத்தில்.  வேலை கிடைக்காத இளைஞன் பாத்திரத்தை ஏற்று நடித்தேன். மேடையில் பாதி தூரம் வந்து வசனம் பேசவேண்டும்.  நான் ரொம்பவும் சிரமப்பட்டு பேச வேண்டிய வசனத்தை மனனம் செய்து வைத்திருந்தேன்.  ஞாநி அவருடைய பரீக்ஷா நாடகங்களை வித்தியாசமாக அரங்கேற்றம் செய்வார்.  பெரும்பாலும் எக்மோரில் உள்ள மியூசியம் தியேட்டரில்தான் நாடகங்கள் அரங்கேற்றம் ஆகும்.  ஒரு நாடகம் நடத்த என்ன செலவாகும் என்பதை இன்னொரு நாடகத்திற்கான ஒத்திகை நடத்தும்போது சொல்வார்.  மிகக் குறைவான செலவில் நாடகத்திற்கான செலவை கொண்டு வந்துவிடுவார்.  நடிப்பவர்கள் எல்லோரும் சுதந்திரமாக நடிப்பார்கள்.  நாற்காலிக்காரர் என்ற நாடகத்தில் அசோகமித்திரனை நாற்காலியில் உட்கார வைத்து ஒரு நாடகத்தை நடத்திக் காட்டியவர். நான் நடிக்கும்போது ஒருமுறை கூட இப்படி நடிக்க வேண்டும் அப்படி நடிக்க வேண்டும் என்று ஞாநி சொன்னது கிடையாது.  
மேடையில் பாதிதூரம் வந்து நான் வசனம் பேச வேண்டும்.  நான் முதல் முறையாக எல்லோர் முன்னிலையிலும் நாடகத்தில் நடிக்கிறேன்.  ஆர் ஆர் சபாவில் அந்த நாடகம் நடந்தது என்று நினைக்கிறேன்.  நடிக்க வேண்டுமென்ற பரபரப்பு என்னிடம் கூடிக்கொண்டே போயிற்று.  பாதி தூரம் வந்து தைரியமாக வசனம் பேசினேன்.  ஆனால் என்னுடன் நடிக்க வந்த சக நடிகர் என்னைப் பார்த்து ஏராளமாக வசனம் பேசஆரம்பித்துவிட்டார்.  எனக்கே திகைப்பு.  நான் எப்படிப் பேசுவது என்று திகைத்துக்கொண்டிருந்தேன்.  என் திகைப்பையும் பதற்றத்தையும் வைத்தே அவர் இன்னும் வசனம் இட்டுக்கட்டி பேச ஆரம்பித்துவிட்டார்.  எனக்கு மேடையை விட்டு வந்தால் போதும் என்றாகி விட்டது.  நாடகம் நடித்த அன்று இரவு எனக்கு சரியாக தூக்கமே வரவில்லை.  நாடக மேடையில் பாதிதூரம் வந்து வசனம் பேசுவதுபோல் கனவு தொடர்ந்து வந்து கொண்டிருந்தது.  அடுத்தநாள் பரீக்ஷா ஞாநி வீட்டில் முதல்நாள் வைத்திருந்த என் சைக்கிளை எடுத்துக்கொண்டு ஓடி வந்துவிட்டேன்.  ஞாநி வீட்டிற்குள் போய் யாரிடமும் எதுவும் சொல்லவில்லை. ஒரு நாடகம் நடந்தாலும் நடக்காவிட்டாலும் நாடகம் ஒட்டி நடக்கும் நிகழ்ச்சிகள் நாடகத்தை தூக்கி சாப்பிடும்போல் இருக்கிறது.    
இரண்டு மூன்று வாரங்கள் கழித்து எனக்கு நாடக கிலி போனபிறகு நான் நடித்த பரீக்ஷா நாடகம் பற்றிய விமர்சனம் நடந்தது.  அதில் கலந்துகொண்டேன். அக் கூட்டத்திற்கு வந்திருந்தவர்கள்  நாடகத்தில் நான் ஏற்றப் பாத்திரத்தை சிலாகித்துப் பேசியது என்னால் நம்ப முடியாமல் இருந்தது.
பொதுவாக நாடகத்தில் நடித்தாலும் நாடகம் பார்ப்பதை பெரிதும் விரும்ப மாட்டேன்.  குறிப்பாக சபா நாடகங்களை. நாடகத்திற்கு யாராவது போகிறார்கள் என்றால் கிண்டல் செய்வேன்.  ஏன்என்றால் ஒரு நாடகத்தை 2 மணி நேரம் உட்கார்ந்து பார்ப்பது என்பது என்னால் முடியாது.  
முன்பெல்லாம் கோமல் சுவாமிநாதன் நாடக விழா ஏற்பாடு செய்து நடத்தியிருக்கிறார்.  பல நாடகக்குழுக்கள் கலந்து கொண்டு நாடகங்கள் அரஙகேறும்.  பல நாடகங்களுக்கு கூட்டமே வராது. ஆனால் எஸ்.வி சேகர் நாடகத்திற்கு மட்டும் குடும்பத்தோடு பலர் கலந்துகொண்டு பார்க்க வருவார்கள். கூட்டம் அதிகமாக இருக்கும். அதிக ஆடம்பரம் இல்லாமல் ஒரு நாடகத்தை அரங்கேற்றம் செய்ய முடியுமா? நாடகம் என்பது பலருடைய முயற்சி.  பார்வையாளர்கள் முயற்சி வேண்டும்.  நடிப்பவர்களின்  முயற்சி வேண்டும்.  நல்ல கதை வேண்டும்.    
எல்லோரும்போல் வாழ்க்கை என்ற நாடகத்தில் நானும் நடித்துக்கொண்டிருக்கிறேன்.  தினம் தினம் என்னுடைய வசனத்தைப் பேசிக்கொண்டிருக்கிறேன்.  பலவித முகபாவங்களை காட்டிக்கொண்டிருக்கிறேன்.  இந்த நடிப்பில் எல்லோரும்போல அலுப்பே ஏற்படப்போவதில்லை.
(ஜøலை 2013 அம்ருதா இதழில் வெளிவந்த கட்டுரை)

லாவண்யா

மனச்சிறை
பெய்த மழையில்
வனம் கடலானது
வீசிய புயலில்
மரங்கள் விழுந்தன
மரம் விழுந்த்தில்
என் கூடு  தொலைந்த்து
நீரும் தீயும்
என் கூடழிப்பது
என் பிறவியின் சாபம்
முதல் குருவி துவங்கி
என்வரை
சலியாமல் கட்டுகிறோம்
மீண்டும் மீண்டும்
கூடிழக்கும் துயரும்
கூடுகட்டும் சிரம்மும்
அனுபவித்தால்மட்டுமே புரியும்
உலர்ந்த புற்களை
மெலிந்த சுள்ளிகளை
சேகரிக்கும்போது
கூடு ஒரு மனச்சிறையென்று
ஒரு குரல்
தலைக்குள் கேட்டது.
நிறுத்திவிட்டேன்.
 
அற்ப சந்தோஷம்
குயில் கூவக்கேட்டு
கனவு காணலானேன்
குளிர் காற்று வீசவே
மனங்குளிரலானேன்
மின்னல் மின்னக்கண்டு
பெரிதும் மகிழ்ந்து போனேன்
கருமுகிற்கூட்டம் வரவே
களிப்படையலானேன்
அற்ப சந்தோஷத்தில்
ஏமாந்து போனேன்.
 

நிரந்தரத்தின் தரிசனம்

 ஆறுமுகம் முருகேசன்

அடைக்கப்பட்டக் குழாயிலிருந்து
ஒவ்வொருச் சொட்டாய்
நீர் தரைமோதி மேலெழும்பும்
சப்தமென
நம் இரவை கலைத்து அடுக்குகிறேன்
செவிலித்தாய் ஒத்த
ப்ரிய ரேகைகளின் வழி
எதிர்ப்பெதுவுமின்றி மிடறு மிடறாய்
தரிசிக்கிறாய் நீ !
தடதடத்த பின்னங்கழுக்து படபடப்பில்
தப்பிக்க முயன்ற எறும்பினை
வலிவலிக்காத வண்ணம் கைப்பற்றுகிறோம்
பின் மெதுவாக அசைவுறுகிறோம்
மிதந்து
நிமிரும்பொழுது
தற்காலிகமாக வெளியேறியிருந்தது எறும்பு
***