எதையாவது சொல்லட்டுமா…….88

அழகியசிங்கர்


கவிஞர் ஆத்மாநாம் சில அற்புதமான கவிதைகளை எழுதி உள்ளார்.  ஆனால் அவரைப் பற்றி அவர் இருக்கும்போது யாரும் சொல்லவில்லை.  இப்படித்தான் நாம் நம் படைப்பாளிகளைக் கொண்டாடுவதில்லை.  அவர்கள் எழுத்தை அலட்சியப்படுத்துகிறோம்.  ஆத்மாநாம் ஒருமுறை ழ என்ற பத்திரிகையை வைத்துக்கொண்டு ஒரு இலக்கியக் கூட்டத்தில் எல்லோரிடமும் நீட்டிக்கொண்டிருந்தார்.  அவரிடமிருந்து பத்திரிகையை வாங்கியவர்கள் யாரும் அந்தப் பத்திரிகைக்கு உரிய தொகையைக் கொடுக்கவில்லை. ஆத்மாநாம் யார்? அவர் எப்படியெல்லாம் கவிதை எழுதுகிறார் என்பதையெல்லாம் யாரும் மதிப்பிடவில்லை.  பங்களூரில் அவர் தங்கியிருந்தபோது, க.நா.சுவைப் போய் சந்தித்திருக்கிறார்.  தான் எழுதிய கவிதைகளைக் காட்டியிருக்கிறார்.  க.நா.சு அவர் கவிதைகளைப் பற்றி எதுவும் எழுதவில்லை.  உண்மையில் க.நா.சு எல்லாவற்றையும் படித்துவிட்டு உடனே அதைப் பற்றி அபிப்பிராயம் சொல்லக்கூடியவர்.  ஏன் அவருடைய கடைசிக் கால கட்டத்தில் விக்கிரமாதித்யன் கவிதைகளைப் பற்றி கூட தினமணியில் எழுதியிருக்கிறார். ஆத்மாநாம் கவிதைகளைப் பற்றி ஒன்றும் சொல்லாமல் விட்டுவிட்டார்.  
ஆத்மாநாம் அவசரப்பட்டுவிட்டார்.  அவர் இப்போது இருந்திருந்தால் பெரிய அளவில் வாசகர் வட்டம் இருந்திருக்கும்.  ஏன் அவர் சினிமாவில் பாடல்கள் எழுத ஆரம்பித்திருந்தால், பேசப்படக் கூடிய சினிமா பாடலாசிரியராக மாறியிருப்பார்.  1978 இறுதியில் அவர் எழுதிய பல கவிதைகள் இன்னும்கூட கவிதையை ரசிப்பவர்களின் ஞாபகத்தில் இருக்கிறது. இந்தக் கட்டுரை முடியும் தறுவாயில் அவருடைய கவிதை ஒன்றிலிருந்து ஒருசில வரிகளைக் குறிப்பிட நினைக்கிறேன்.  நான் எழுத வந்தது வேறு. ஏன் ஆத்மாநாம் கவிதை ஞாபகம் வருகிறது என்பதை சொல்ல வருகிறேன்.
நான் சீர்காழியில் உள்ள அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, மயிலாடுதுறையிலிருந்து பஸ்ஸில் பயணம் செய்வேன்.  நான் குடியிருந்த தெருவிற்கு எதிரிலுள்ள பஸ் நிறுத்தத்தில் சிதம்பரம் போகும் பல பஸ்கள் போய் வந்தவண்ணம் இருக்கும்.  
அதில் தொற்றிக்கொண்டு போவேன்.  பஸ் ஒரே கூட்டமாக இருக்கும். நான் எப்போதும் ஏறும் பஸ் கிடைத்தால் அதில் பயணம் செய்யும் ஒருவர் எனக்கு உட்கார இடம் அளிப்பார்.  பஸ் குறிப்பிட்ட நேரத்திற்குக் கிளம்பி குறிப்பிட்ட இடத்திற்குப் போய்விடும்.  நான் பத்துமணி அலுவலகத்திற்கு 9 மணிக்கே கிளம்பி விடுவேன்.  நடுவழியில் பஸ்ஸில் போகும் அனுபவம் அற்புதமானது.  இரண்டு பக்கங்களிலும் வயல்கள், மரங்கள் என்று பிரமாதமான தோற்றத்தில் இருக்கும்.  இப்போதெல்லாம் அந்த இடங்கள் கொஞ்சம் கொஞ்சமாக கான்கிரீட் கட்டடங்களாக மாறிக்கொண்டு வந்தாலும், இன்னும்கூட சென்னையில் பஸ்ஸில் போகும் மோசமான அனுபவம் அங்கில்லை.  பஸ் வளைந்து வளைந்து போகும் பாதை அற்புதமானது. 
ஒவ்வொருமுறை அலுவலகம் போகும்போது நினைத்துக்கொள்வேன்.இதுமாதிரி அனுபவம் கிடைப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டுமென்று.  ஆனால் அலுவலகம் போனால் ஏன் மாட்டிக்கொண்டோம் என்று தோன்றும். பிழிய பிழிய வேலை. மூச்சு விடக்கூட முடியாது.
  வங்கியில் காலை நேரத்தில் கூட்டம் அப்பிக்கொள்ளும்.  ஊழியர்கள் எண்ணிக்கை குறைவு.  ஆனால் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகம்.  நான் அமெரிக்காவிற்கு சென்றபோது  ஒரு வங்கி எப்படி இயங்குகிறது என்று பார்க்கச் சென்றேன்.  அங்குள்ள ஊழியர் ஒருவர் என்னைப் பார்த்தவுடன் புன்னகையுடன் உள்ளே அழைத்துச் சென்றார்.  பின் ஒரு இருக்கையில் அமரச் சொன்னார்.  அங்கு வருகிற வாடிக்கையாளர்களுக்கு காப்பி கிடைக்கும்.  அவர்களே போய் வேண்டுமென்றால் எடுத்துக் குடிக்கலாம். ஊழியர் ஒருவர் வாடிக்கையாளருக்கு சாக்லெட் கொடுப்பார். வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் வங்கிக்குள் நுழைவதில்லை. ஆனால் இந்தியாவில் உள்ள வங்கிகளின் நிலைமை வேறுவிதம்.  வாடிக்கையாளர் கூட்டத்தைப் பார்த்ததும் ஊழியர்கள் அரண்டு போய் விடுகிறார்கள்.  ஒருவழியாக கூட்டத்தைச் சமாளித்து அனுப்புவதற்குள் போதும் போதுமென்று ஆகிவிடும்.  எல்லாக் கூட்டமும் ஒரு குறிப்பிட்ட  நேரத்தில் போய்விடும்.  அதன்பின்னும் அலுவலகத்தில் உட்கார்ந்து அன்றைய பணியை முடிக்க வேண்டும்.
வீடு திரும்பும்போது ஒவ்வொருமுறையும் இரவு ஒன்பது மணி ஆகிவிடும்.  பணியை முடித்தாலும் அவ்வளவு எளிதில் கிளை மேலாளர் வீட்டிற்குப் போக அனுமதிக்க மாட்டார்.  கிளை மேலாளர், நான், இன்னொரு அலுவலர் மூவரும் இரவு 9 மணிக்குமேல் சீர்காழியிலிருந்து பஸ் பிடித்து வீட்டிற்கு வரும்போது கிட்டத்தட்ட 10 மணிமேல் ஆகிவிடும்.கிளை மேலாளர் பஸ்ஸில் ஏறியவுடன் தூங்க ஆரம்பித்து விடுவார்.  நானும் இன்னொரு அலுவலர் மட்டும் பேசிக்கொண்டே வருவோம். சோர்வின் எல்லைக்கு எங்கள் முகங்கள போய்விடும்.  அந்த நீண்ட பாதை வழியாக பஸ் செல்லும்போது இரவு நேரம் வேறுவிதமான தோற்றத்தைக் காட்டிக்கொண்டிருக்கும்.  
ஒருமுறை நாங்கள் அப்படி பஸ்ஸில் வந்துகொண்டிருக்கும்போது ஒரு பெரியவர் நிற்க முடியாமல் அவதிப் பட்டார்.  கிட்டத்தட்ட 80 வயதிருக்கும்.  என் பக்கத்தில் உள்ள இருக்கையில் அவரை உட்காரும்படி சொன்னேன்.  பஸ் டிக்கட் கொடுக்க அவர் சில்லரைகளைத் தேடித் தேடி கொடுத்தார்.  அப்போதுதான் அவரை உற்றுக் கவனித்தேன்.  தொளதொளவென்று பேன்ட் அணிந்திருந்தார்.  சட்டை தாறுமாறாகப் போட்டுக் கொண்டிருந்தார்.
அவரைப் பார்த்து, ”எங்கே போகிறீர்கள்?” என்று கேட்டேன்.
“மயிலாடுதுறைக்கு..”
“அங்கே யார் இருக்காங்க.”
“யாரும் இல்லை?”
“யாரும் இல்லையா?  மனைவி.”
“செத்துப்போயிடுத்து.”
“உங்களைப் பார்த்துக்கொள்ள யாரும் இல்லையா?”
“ஒரு பையன் இருக்கான்.  அவன் என்னைப் பார்த்துக்கொள்ள மாட்டான்…என்னைத் துரத்தி விட்டான்..”
அவரைச் சற்று உற்றுப் பார்த்தேன். “நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?”
“பிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறேன்.”
அவர் சொன்னதைக் கேட்டு எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.  
        “ஏன் சீர்காழி வந்தீர்கள்?”
“நான் மயிலாடுதுறை பஸ் நிலையம் பக்கத்தில்தான் பிச்சை எடுப்பேன்.  ஒரு மாறுதலுக்காக சீர்காழி வந்தேன்…”
“எதாவது கிடைத்ததா?”
“ஒண்ணும் சரியாய் கிடைக்கலை…ஒருத்தன் என்னை அடிச்சிட்டான்…”
சீர்காழியில் யாரிடமோ அடியை வாங்கிக் கொண்டு என் பக்கத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் பிச்சைக்காரரைப் பார்த்து எனக்கு வருத்தமாக இருந்தது.
நான் குடியிருந்தது வள்ளலார் கோயில் தெரு.  ஒவ்வொரு வியாழக்கிழமை குரு ஸ்தலம் என்பதால் கூட்டம் கூடியிருக்கும்.  அங்கு எப்போதும் காலை நேரத்தில் ஏழெட்டுப் பேர்கள் கையில் ஓடை வைத்துக்கொண்டு வரிசையாக உட்கார்ந்து இருப்பார்கள்.  எல்லோரும் பார்க்க பளிச்சென்று இருப்பார்கள்.  காவி உடை அணிந்திருப்பார்கள்.அவர்களைப் பார்க்கும்போது சிவனடியார்கள் இப்படித்தான் இருப்பார்களா என்று நினைத்துக்கொள்வேன்.  எனக்கு எப்போதும் ஒரு சந்தேகம் இருக்கும்.  எல்லோருக்கும் சரிசமமாக பிச்சை கிடைக்குமா என்ற சந்தேகம்தான்.  ஒருவரைப் பார்த்துக் கேட்டேன்.  “உங்கள் எல்லோருக்கும் சரிசமமாகப் பிச்சைக் கிடைக்குமா?” என்று.  
அவர்களில் ஒருவர் சொன்னார்.  “எங்களுக்குக் கிடைப்பதை நாங்கள் சமமாகப் பிரித்துக்கொள்வோம்” எல்லோரும் குடும்பத்தை விட்டு வந்தவர்கள்.  எந்த நோயும் அவர்களுக்கு இருப்பதாக தெரியவில்லை.  எப்போதும் நடிகர் நடிகைகளையே பேட்டி காணும் இந்த டிவிக்காரர்கள், இவர்களைப் போன்றவர்களை ஏன் பேட்டி காண்பதில்லை என்று தோன்றும்.
எனக்கு அடிக்கடி மனதில் ஒலித்துக்கொண்டிருக்கும் ஆத்மாநாமின் பிச்சை என்ற கவிதை.  அதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
நீ ஒரு பிச்சைக்காரனாய்ப் போ
பிச்சை பிச்சை என்று கத்து
உன் கூக்குரல் தெருமுனைவரை இல்லை
எல்லையற்ற பெருவெளியைக் கடக்கணும்
உன் பசிக்காக உணவு
சில அரிசி மணிகளில் இல்லை
உன்னிடம் ஒன்றுமே இல்லை
சில சதுரச் செங்கற்கள் தவிர
உனக்குப் பிச்சையிடவும் ஒருவருமில்லை
உன்னைத் தவிர.
                …………………………………….
பஸ்ஸில் என் பக்கத்தில் அமர்ந்திருந்த பிச்சைக்காரருக்கு நானும் அலுவலக நண்பரும் கொஞ்சம் பணம் கொடுத்தோம்.  
“இனிமேல் மயிலாடுதுறையை விட்டு சீர்காழிக்கு பிச்சை எடுக்க இதுமாதிரி வராதீர்கள்,” என்று அறிவுரை கூறினேன். 
       (அம்ருதா செப்டம்பர் 2013 இதழில் பிரசுரமானது)

ஐராவதம் பக்கங்கள்

இலக்கியத்தின் முதுமை
எனக்கு இப்போது அறுபதைந்து வயதாகிறது.  வங்கியில் ஓய்வுபெற்று ஓய்வூதியம் பெற்று வருகிறேன்.  தெருவில் இறங்கி நடக்கும்போதெல்லாம் என்னைவிட முதியவர்களைத்தான் எதிர்கொள்கிறேன்.  வாலிபர்களும், யுவதிகளும் சைக்கிள், ஸ்கூட்டர் மோட்டார்கார் முதலிய வாகனங்களில் பயணிக்கிறார்களோ என்னவோ?
சமீபத்தில் எழுபத்தோரு வயது நிரம்பிய ஒரு நண்பரை தற்செயலாக சந்தித்தேன்.  அந்தக் காலத்தில் தீபம், கணையாழி முதலிய இலக்கிய பத்திரிகைகளின் வாசகர்.  காஞ்சிபுரம் நகரத்துக்காரர்.  புனேயில் ராணுவ கணக்குப் பிரிவில் பணியாற்றி ஓய்வுபெற்று கணிசமான ஓய்வூதியம் பெறுபவர்.  மாம்பலம் ஒட்டியுள்ள அசோக்நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் சொந்தக்காரர்.  மனைவியுடன் வசித்து வருகிறார்.  இவருக்கு இரு மகன்கள்.  இருவரும் உயர்கல்வி பயின்று அமெரிக்காவில் பத்தாண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறார்கள்.  அவர்கள் அமெரிக்கா குடியுரிமைப் பெற்று விட்டார்கள்.  இந்தியாவிற்கு திரும்பி வரும் உத்தேசமில்லை.  நண்பர் அமெரிக்கா போய் முறையே நியூஜெர்ஸி நகரில், டல்லாஸ் நகரில் ஆறு ஆறு மாதங்கள் கழித்துவிட்டு இந்தியா திரும்பி விட்டார்கள்.  
நியுஜெர்ஸியில் வசிக்கும் மூத்த மகன்,”அப்பா நீ இங்கேயே பிராணனைவிட்டால் நான் மின் யந்திரத்தில் உன்னைத் தகனம் செய்கிறேன்,” என்று கூறியிருக்கிறான்.  ஆனால் மனிதருக்கு அங்கு இருப்பு கொள்ளவில்லை.  இந்தியா திரும்பி விட்டார். என்னிடத்தில் சொன்னார். : “தம்பி, எனக்கு மரணம் நெருங்கி விட்டது.  நான் கண்ணம்மா பேட்டையில், (தியாகராயநகரின் சுடுகாட்டுப் பகுதி) எரிக்கப்படவே விரும்புகிறேன்,” என்றார்.  
இது விரக்தியனாலோ வெறுப்பினாலோ சொல்லப்பட்ட வார்த்தைகள் இல்லை.  நிறை வாழ்வு வாழ்ந்துவிட்ட திருப்தியில் மரணத்தை ஏற்றுக்கொள்கிற விதமாக கூறப்பட்ட வார்த்தைகள்.  அவருக்கு வாழ்க்கையின் மீதான பற்று இன்னும் நீங்கவில்லை என்பதற்கான அறிகுறிகள் எனக்கு எதிரிலேயே ஒரு செயல் புரிந்தார்.  அந்த வார குமுதம் பத்திரிகையை கடையில் வாங்கி பையில் தயாராக வைத்திருந்த தபால் கார்டில் அதில் வெளியாகியிருந்த ஒரு சமாசாரத்தின் எதிர் வினையாக நாலு வரிகள்எழுதி தபால் பெட்டியில் போட்டார்.  குமுதம் ஆசிரியருக்குக் கடிதங்கள் பகுதியில் தன் பெயர் பிரசுரமாவதைப் பார்க்க குழந்தைத் தனமான ஆசை.

சின்னப்பயல்


வயது

என் வயதைக்கேட்கும்
அனைவரும்
தம் வயதில் இரண்டைக்கூட்டி
வைத்துக்கொண்டு
அதுதானே
என்றே கேட்கின்றனர்
உன் வயதை நான் எப்போதும்
என்னிலிருந்து
இரண்டைக்கழித்து விட்டே
நினைத்துக்கொள்கிறேன்

-ராமலக்ஷ்மி

வலி
தேநீர் விருந்தொன்றில் சந்தித்தேன் 
அந்த இளைஞர்களையும் யுவதிகளையும்.
இன்முகத்தோடு வேலைகளை
இழுத்துப் போட்டுச் செய்தார்கள்.
வேடிக்கைப் பேச்சால் 
விருந்தினர்களைக் கவர்ந்தார்கள்.
“பக்கத்தில் குடிவந்திருக்கிறார்கள்
புலம் பெயர்ந்தவர்கள்”
தணிந்த குரலில் குனிந்து என்னிடம் 
நண்பர் சொன்னது
காலிக் கோப்பைகளை எடுக்கவந்தவன்
காதுகளில் விழுந்து விட
புன்முறுவலுடன் நகர்ந்தான்.
‘கலவரங்களில்
குடும்பங்களை
இழந்தவர்கள்’ 
ஏறிட்டே பார்க்க இயலவில்லை
அறிந்த பின்
அந்தப் பிரகாசமான முகங்களை.
வரலாற்றின் 
கருப்புப் பக்கங்களால் காயப்பட்டவர்கள்,
போதுமென்கிற அளவுக்கு
வாழ்நாளின் பெருந்துயர்களைப் 
பார்த்து விட்டவர்கள் 
ஒருபொழுதும் அதைப் பற்றி பேசமட்டுமல்ல
காட்டிக்
கொள்ளவும் 
விரும்புவதில்லை என்று புரிந்தது. 
விருந்தின் முடிவில் அவர்கள் பாடிய பாடல்
என் நாடி நரம்புகளிலிருந்து வெளியேற 
ஒரு யுகம் ஆகலாம்.
அப்படி இருக்கையில்
அவர்களும் அழக் கூடும்
தம் நண்பர்களும் உடனில்லாத..
யாரும் பார்க்காத பொழுதுகளில்

ஆ. கிருஷ்ண குமார்.

ஊதா நிற தொங்கட்டான்
———————————————-

தொங்கட்டான்கள்
அழகானவை

தொங்கட்டான்களுக்கு
பாரம் குறைவு

தொங்கட்டான்களில்
கருமை இளஞ்சிவப்பு
ஊதா
நிறங்கள்
எதனோடும் ஈடு சொல்ல இயலாதவை

இதன்
பொருட்டே
தொங்கட்டான்களை
வலிந்து சூட்டிக்கொள்கிறேன்.

கூர் மழுங்கிய
கரு நிற தொங்கட்டானின்
சிமிட்டலில்
மெல்லிய கருணை
பிறந்து அழியும்

இளஞ்சிவப்பு நிற தொங்கட்டானின்
குறுகுறுவென்ற
ஆட்டலில்
அருவ இசையொன்றின் பிரதியை
உணரலாம்

பிடித்து சூட்டுவதால்
ஊதா நிற தொங்கட்டான்
காதகேசம் சிக்கி
நெருடும்.

பிரக்ஞை சிதறிய
ஒரு சிறு கணத்தில்கூட
அவை
இருப்பையே தெரிவிப்பதில்லை
என்பதால்
எனக்கு முக்கியமாகிறது.

கடைசியாக
ஒரு நாள்
உணர்ந்தறிந்தேன்
அவை பார்ப்பதற்காக
மட்டுமே
அழகானவை என்றும்
பாம்படங்களின்
தோற்றம் என்றும்

நாதிரும் ஸிமினும் இவர்களுக்கிடையிலான பிரிவும்’ – ஒஸ்கார் விருதினை வென்றுள்ள ஈரானின் முதல் திரைப்படம்

– எம்.ரிஷான் ஷெரீப்                    
                                                                     
விவாகரத்துக் கோரி
நிற்கும் ஒரு இஸ்லாமியத் தம்பதியிடமிருந்து
காட்சி ஆரம்பிக்கிறது. விவாகரத்துக்கான
காரணம் தமது பதினொரு வயது மகளின்
எதிர்காலம். ஈரானின் நெருக்கடியான
சூழ்நிலையில் தனது மகள் வாழ்வதை
விரும்பாத மனைவி ஸிமின், தனது
கணவன் நாதிருடனும் மகள் தேமேயுடனும்
வெளிநாடு சென்று வாழத் தீர்மானிக்கிறாள்.
கணவனால் அவர்களுடன் வர முடியாத
சூழ்நிலை. ஞாபகமறதி (அல்ஸீமர்)
நோயினால் பாதிக்கப்பட்ட முதியவரான
தனது தந்தையைப் பார்த்துக்
கொள்ளும் கடமை தனக்கு இருப்பதால்
அவளது வெளிநாட்டுப் பயணத்திற்கு
உடன்பட மறுக்கிறான். மனைவி
விவாகரத்துக் கோரி விண்ணப்பிக்கிறாள்.
“ஒரு வேலைக்காரரை
வச்சுப் பார்த்துக்கலாமே.
அவருக்கு இவர் தன்னோட மகன்
என்பது கூடத் தெரியாது.”
“ஆனா அவர் என்னோட தந்தைன்னு
எனக்குத் தெரியும்.”
இவ்வாறாக நீதிபதியின்
முன்னால் வாதிட்டுக் கொள்ளும்
தம்பதியினது விவாகரத்து குறித்த
விசாரணையின் முடிவில் விவாகரத்துக்கான
காரணம் வலிதற்றதெனக் கூறி
அவ் விண்ணப்பத்தை நிராகரிக்கிறது
நீதிமன்றம். அதற்கு மேலும்
கணவன், மகளுடன் சேர்ந்து வாழ
விரும்பாத மனைவி தனது பெற்றோரிடம்
சென்று விடுகிறாள். அதற்கு
முன்பு, கணவன் வங்கி வேலைக்கும்,
மகள் பாடசாலைக்கும் சென்றதன்
பின்னால் வீட்டில் தனித்திருக்கும்
தனது வயோதிப மாமனாரைப் பார்த்துக்
கொள்வது யாரென்ற கவலையில்
மனைவி, ஒரு பெண்ணை அதற்காக
ஏற்பாடு செய்கிறாள். அதன் பின்னர்
அக் குடும்பத்தில் நடந்தவை
என்ன என்பதுதான் படத்தின்
கதை.
இஸ்ரேலை ஆட்டம் காண
வைத்து, இஸ்ரேலின் திரைப்படமான
‘ஃபுட் நோட்(Footnote)”டைத் தோற்கடித்து,
இந்த வருடத்துக்கான 84 ஆவது
ஒஸ்கார் விருது விழாவில், சிறந்த
வெளிநாட்டுத் திரைப்படத்துக்கான
ஒஸ்கார் விருதினை வென்றெடுத்திருக்கிறது
“எ ஸெபரேஷன் – A Separation (பிரிவொன்று)”
எனும் இந்த ஈரான் திரைப்படம்.
ஈரானிய, இஸ்லாமியப் பண்பாடுகளை
விளக்கும் இத் திரைப்படமானது
ஒஸ்கார் விருதினை வென்று தனது
இருப்பை அமெரிக்காவிலும்,
இஸ்ரேலிலும் உரக்கச் சொல்லியிருக்கிறது.
படத்தின் முக்கிய கதாபாத்திரங்களான
மூன்று ஆண்களும், மூன்று பெண்களும்
இணைந்து படத்தினை தொய்வின்றி
நகர்த்தியிருக்கிறார்கள்.
நாம் பார்த்துப் பழகியிருக்கும்
சினிமாக்களில் மிகைத்திருக்கும்
சினிமாத்தனங்களுக்கு மத்தியில்
எந்தவொரு சினிமாத்தனமும்
இல்லாத காட்சியமைப்புக்களும்,
நடிப்பும், யதார்த்தமும் அதன்
ஒவ்வொரு உணர்வுகளையும் பார்வையாளனுக்குள்ளும்
ஏற்படுத்தி விடுகிறது.
தனது கணவன் கடனாளியான
நிலையில், அன்றாட வாழ்க்கையைக்
கழிக்கச் சிரமப்படும் ஏழைப்
பெண் ராஸியா தனது கணவனுக்குத்
தெரியாமல் நாளாந்த வருமானத்துக்காக
தனது ஆரம்பப் பாடசாலை செல்லும்
மகளுடன்  அம் முதியவரைக்
கவனித்துக் கொள்ளவென வந்து
செல்கிறாள். இறைபக்தி மிக்க
அவள், பகல்வேளையில் அவ் வீட்டுக்கு
வந்து முதியவருக்கு பணிவிடை
செய்துவிட்டு, அவ் வீட்டவர்கள்
வந்ததும், தனக்கான ஊதியத்தைப்
பெற்றுக் கொண்டு வீடு திரும்புகிறாள்.
ஒரு நாள், அவள் வீட்டினைச்
சுத்தப்படுத்திக் கொண்டிருக்கையில்,
முதியவர் வீதிக்குச் சென்று
விடுகிறார். வாகன நெருக்கடிக்கிடையே
வீதியைக் கடக்கும் முதியவரைக்
காப்பாற்ற அவள் ஓடுகிறாள்.
அடுத்த நாள் வங்கிக்குச்
சென்ற நாதிரும், பாடசாலை சென்ற
அவனது மகள் தேமேயும் வீட்டுக்குத்
திரும்பி வந்து பார்த்தால்
வீடு பூட்டப்பட்டிருக்கிறது.
சாவி வைக்குமிடத்தில் சாவி
இல்லை. தன்னிடமிருந்த திறப்பைக்
கொண்டு கதவைத் திறக்கும் கணவன்,
உள்ளே சென்று பார்க்கிறான்.
மகள் அலறுகிறாள். அவனது முதிய
தந்தை கட்டிலருகே விழுந்து
பேச்சு மூச்சற்றிருக்கிறார்.
அவரது கைகள் கட்டப்பட்டிருக்கின்றன.
திகைத்துப் போகின்றனர் கணவனும்
மகளும். முதலுதவிகள் செய்து
தந்தையைக் காப்பாற்றுகிறான் 
கணவன். கோபமும், கழிவிரக்கமும்,
அழுகையும் அவனிடம் மிகைத்திருக்கும்
நிலையில் ராஸியா, தனது மகளுடன்
வீட்டுக்கு வருகிறாள். தனது
தந்தையை அநாதரவான நிலையில்,
கைகளைக் கட்டித் தனியாக விட்டுச்
சென்றதற்கு ராஸியாவைத் திட்டி
வெளியே தள்ளுகிறான் கணவன்.
தனது பணத்தைத் திருடியதாகவும்
அவள் மீது குற்றம் சுமத்துகிறான்.
அவள் வாசலிலிருந்து கதறுகிறாள்.
தனது அன்றைய ஊதியத்தைத் தருமாறு
கெஞ்சுகிறாள். திடீரென ராஸியாவும்
அவளது மகளும் கதறியழுவதைக்
கேட்டுக் கதவைத் திறந்து பார்க்கிறாள்
தேமே. படிகளில் விழுந்து எழும்பும்
ராஸியாவைக் காண்கிறாள் அவள்.
அதன்பிறகுதான் அக்
குடும்பத்தில் பாரிய சிக்கல்கள்
எழுகின்றன. ராஸியா ஐந்து மாதக்
கர்ப்பிணியாக இருந்திருக்கிறாள்
என்பதுவும், அந்தச் சம்பவத்தில்
அவளது குழந்தை வயிற்றிலேயே
இறந்துவிட்டது என்பதுவும்
அக் கணவனைக் கொலைகாரனெனக்
குற்றம்சாட்டி அவனைக் கைது
செய்ய ஏதுவாக அமைகிறது. அதன்
பின்னர் நடந்தவை என்ன? அக்
கணவன், மனைவி விவாகரத்து வழக்கிற்கு
என்னவானது? மகள் தேமே, முதிய
தந்தை ஆகியோரின் நிலைமை என்ன?
என்பவற்றை உணர்வுபூர்வமாக
இத் திரைப்படம் சித்தரிக்கிறது.
நடிப்பென்றே சொல்லமுடியாத
அளவுக்கு மிகவும் ஆழமாக, கதாபாத்திரத்துடன்
ஒன்றி வாழ்ந்துகாட்டியிருக்கிறார்கள்
படத்தில் சம்பந்தப்பட்டிருக்கும்
எல்லா நடிகர்களும். பிரதான
கதாபாத்திரத்தில் நடித்திருக்கும்
நடிகர் பேமென் மோடி, திரைக்கதையாசிரியராகவும்,
ஆடை வடிவமைப்பாளராகவும் பல
திரைப்படங்களில் பணியாற்றியவர்.
இத் திரைப்படத்தின் இயக்குனரான
அஸ்கர் ஃபர்ஹதியின் திரைப்படமான
‘அபௌட் எல்லெ(About Elle)’யில் 2009இல்
அறிமுகமானவர். இத் திரைப்படத்துக்காக
பெர்லின் சர்வதேச திரைப்பட
விழாவில் சிறந்த நடிகர் விருதினை
வென்றிருக்கிறார்.
கணவனோடு வாதிடும்போதும்,
கணவனுக்காக வாதிடும்போதும்
மிகச் சிறப்பாகத் தனது நடிப்பினை
வெளிப்படுத்தியிருக்கும்
நடிகை லைலா ஹாதமி, சிறந்த நடிகைக்கான
விருதினை பல தடவைகள் வென்றவர்.
இவர்களது மகளாக இயக்குனரின்
சொந்த மகளான ஸரீனா ஃபர்ஹதி
மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்.
அழுகையையும், கவலையையும் உள்ளடக்கியபடி
இவர் துயருரும் ஒவ்வொரு காட்சியும்
மிகவும் தத்ரூபமானது.
கர்ப்பிணியாக வீட்டு
வேலைகள் செய்கையிலும், அபாண்டமான
பழி சுமத்தப்பட்ட நிலையில்
அழுகையுடன் குரலுயர்த்திப்
பேசும்போதும், தனது குழந்தையை
இழந்து கையறு நிலையில் தவிக்கும்போதும்,
கணவனுடைய கோபத்தை எதிர்கொள்ளும்போதும்
என பல முகங்களைக் காட்டி நடிக்க
முடிந்திருக்கிறது பணிப்பெண்ணாக
நடித்திருக்கும் நடிகை சரே
ஃபயத்திற்கு. ஏற்கெனவே பலமுறை
சிறந்த நடிகை விருதினை வென்றிருக்கும்
இவர் இத் திரைப்படத்துக்காக
பெர்லின் சர்வதேச திரைப்பட
விழாவில் சிறந்த நடிகை விருதினையும்
வென்றிருக்கிறார் என்பது
குறிப்பிடத்தக்கது.
பல திரைப்படங்களை இயக்கி
விருதுகளை வென்று சிறந்த இயக்குனராக
தனது பெயரை நிலைநாட்டியுள்ள
இயக்குனர் அஸ்கர் ஃபர்ஹதிக்கு
இத் திரைப்படத்தின் மூலமும்
சிறந்த இயக்குனருக்கான விருது
கிடைத்துள்ளது. எட்டு லட்சம்
அமெரிக்க டொலர் செலவில் தயாரிக்கப்பட்ட
இத் திரைப்படமானது, இதுவரையில்
இருபது மில்லியன் அமெரிக்க
டொலர்களை வருமானமாக ஈட்டியிருக்கிறது.
அத்தோடு இத் திரைப்படமானது,
பெர்லின் சர்வதேச திரைப்பட
விழாவில் ஐந்து விருதுகளையும்,
டர்பன் சர்வதேச திரைப்பட விழாவில்
இரண்டு விருதுகளையும், ஃபஜ்ர்
திரைப்பட விழாவில் ஏழு விருதுகளையும்,
15 ஆவது ஈரான் திரைப்பட விழாவில்
நான்கு விருதுகளையும், இன்னும்
பல முக்கியமான திரைப்பட விழாக்கள்
பலவற்றில் விருதுகள் பலவற்றையும்
வென்றுள்ளது.
படத்தின் ஒரு காட்சியில்
நாதிருக்கும் ஸிமினுக்கும்
இடையிலான உணர்வுபூர்வமான
உரையாடல் இப்படி இருக்கிறது.
“இந்தப் பிரச்சினைக்கு
நான் காரணமல்ல.”
“அவர்களுடைய குழந்தை
இறந்து விட்டது.”
“என்னோட தந்தையும்
துன்புறுத்தப்பட்டிருக்கிறார்.
அவர் இன்னும் கதைக்கவேயில்ல.”
“அவர் இதுக்கு முன்னாடியும்
கூடக் கதைக்கல்ல”
“ஆனா அவர் பேசிய சில
சொற்கள்ல நான் சந்தோஷப்பட்டிருக்கேன்.”
“அவர் பேசாம இருக்கிறது
ஒரு குழந்தையை இழக்கிறதை விட
அவ்வளவு மோசமானதா?”
“அதுக்கு நான்தான்
காரணம்னு நீங்க எப்படிப் பார்க்குறீங்க?”
“அப்புறம் எப்படி
அவ தன்னோட குழந்தையை இழந்தா?”
“எனக்குத் தெரியாது.
அவளோட கணவன் அவளுக்கு ஏதோ செய்து
அதனால குழந்தையை இழந்திருக்கலாம்.
இப்ப என் மீது குற்றம் சுமத்துறா.
அன்னிக்கு டொக்டர்கிட்ட போனதா
அவளோட பிள்ளை சொல்லுது. நான்
வீட்டுக்கு வரும்வரை டொக்டரிடம்
போறதுக்கு அவளால ஏன் காத்திருக்க
முடியாமப் போனது? இவ்வளவு வயதானவரை
அவள் ஏன் கட்டிலோடு கட்டி வச்சுட்டுப்
போனாள்?”
எல்லாக் கதாபாத்திரத்தின்
மீதும் அனுதாபத்தை ஏற்படுத்தி
விடும்படியான படத்தின் ஒவ்வொரு
காட்சியும் உரையாடல்களும்
நாற்காலியின் முனைக்கு நம்மை
இழுத்து வருகிறது. காந்தமாக
ஈர்க்கிறது. எந்தநிலையிலும்
எதுவும் நடக்கலாம் எனும் உயிர்ப்பு
நிலை படம் முழுவதும் விரவியிருக்கிறது.
இக் கதை இடம்பெறும் களம் ஈரானாக
இருந்தபோதிலும், இக் கதையானது
ஈரானுக்கு மாத்திரமானதேயல்ல.
முழு உலகத்தின் எல்லா மூலைகளிலும்
எக் கணத்திலும் நடைபெறக் கூடியது.
நடுத்தர வர்க்க இஸ்லாமியக்
குடும்பங்களிலெழும் சிக்கல்கள்,
பாசப் போராட்டங்கள், பிரிவுகள்
என முக்கியமானவற்றை உள்ளடக்கி
உருவாகியிருக்கும் இத் திரைப்படமானது
ஈரானின் கலாசாரத்தையும், அரசியலையும்
மறைமுகமாகப் பிரதிபலிக்கிறது.
பழமைக்கும் நவீனத்துக்கும்
இடையிலான நீதிமன்றத் தீர்ப்புகள்
மற்றும் நவீன ஈரானில் ஆண் பெண்
உறவு குறித்துச் சித்தரித்துள்ளதோடு,
இஸ்லாமியர்களுக்கு குர்ஆன்
மீதுள்ள மரியாதையையும் நம்பிக்கையையும்
வெளிப்படையாகக் காட்சிப்படுத்தியுள்ளதன்
மூலம் அமெரிக்காவின், முஸ்லிம்கள்
மீதான தீவிரவாத எண்ணங்களையும்
அசைத்துப் பார்க்கிறது. திரைப்படத்தில்
வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும்
தனது மார்க்கத்தின் எல்லைக்குள்
நின்று உண்மையாகவும், நேர்மையாகவும்
வாழப் போராடுகின்றமையை எடுத்துக்
காட்டுகிறது.
ஒஸ்கார் விருதுக்குப்
பரிந்துரைக்கப்பட்ட இரண்டாவது
ஈரான் திரைப்படமாக இது இருப்பதோடு,
ஒஸ்கார் விருதினை வென்ற முதல்
ஈரான் திரைப்படமாகவும் இது
அமைகிறது. ஈரானிய மக்கள் இத்
திரைப்படத்தைக் கொண்டாடுகிறார்கள்.
ஒஸ்கார் விருதினை வென்றதை
விடவும், தமது எதிரி தேசமான
இஸ்ரேலின் திரைப்படத்தைத்
தோல்வியடையச் செய்து முதலிடத்தைப்
பிடித்ததனால் ஈரானில் இத்
திரைப்படம் மிகவும் முக்கியமான
ஒன்றாகவும் அமைந்திருக்கிறது.
பெண்ணுடலையும் ஆபாசங்களையும்
காட்டி பார்வையாளர்களை ஈர்க்கும்
நமது இந்திய மற்றும் வெளிநாட்டுத்
திரைப்படங்களுக்கிடையில்,
துளியும் ஆபாசமற்றும் சிறந்த,
உலகத்தரமான, நல்ல திரைப்படங்களைத்
தர முடியுமென்று நீருபித்திருக்கிறது
இந்த ஈரானியத் திரைப்படம்.
பல நல்ல திரைப்படங்களை உலகுக்குத்
தந்திருக்கும் ஈரான், இத் திரைப்படத்தின்
மூலமும் தனது படைப்பாற்றலை
மீண்டும் உறுதியாக  நிலைநிறுத்தியிருக்கிறது.
வரவேற்போம்.

கண் கூசும் வெயில்

செ .சுஜாதா
வர்ணஜாலங்கள் காட்டிய 
நீர்க்குமிழிகள் 
வலுவற்று உடைந்து சிதறுகின்றன 
 
வீடற்ற வெற்று கதவுக்கு
இத்தனை வேலைப்பாடுகள் ஏன்?
 
நம்பிக்கை உடைசல்கள் மண்டிய 
அவ்இடத்தைவிட்டு விலகி நடக்கிறேன் 
 
அழுந்த சாயம்பூசிய உதடுகளும் 
வீச்சம் ஒழுகும்
குறிகளும் 
மலக்காடென
வழியெங்கும் சிதறிக்கிடக்கின்றன 
 
மிதித்துக்கொள்ளாமல் கடக்க 
ப்ரயத்தனங்களை
கால் கட்டைவிரல் நுனியில்
நிறுத்தி இருக்கிறேன் 
 
கூக்குரலிட்டு அழும் 
மனசாட்சி எனும் மண்ணாங்கட்டியை 
உருட்டி 
குட்டிச்சுவரில் அடித்துவிட்டுத் தொடர்கிறேன் 
மேலும்  
படகுக்குள் துள்ளும் மீனாய் 
சுவாசம் கேட்டுத் தவிக்கும்  
இருப்பு 
எந்தக் கண்ணாடியிலும் பிம்பமாக இல்லை.
பச்சை வாசனை வீசும் 
விரிந்த மரத்தின் வேர்களில் 
என் தலை சாயும் காட்சி
கால்கள் தள்ளாட 
தளர்ந்து சரியும் 
இந்நினைவில் கடைசியாய் நிற்கிறது 

நானும் பார்க்கிறேன் உலக சினிமாக்களை

அழகியசிங்கர் 
சமீபத்தில் நானும் சில உலகச் சினிமாக்களைப் பார்த்துவிட்டு எனக்குத் தோன்றுவதை எழுதலாம் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டுள்ளது. உண்மையாகவே பல உலகச் சினிமாக்களை ஒரு 20 அல்லது முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் பார்த்திருக்கிறேன். அப்படிப் பார்த்தாலும் என் கவனத்திற்கு அது எப்போதும் போனதில்லை. ஒரு படத்தை இயக்கியவர் யார்? ஒரு படத்தின் சிறப்பம்சம் என்ன? போன்ற கேள்விகளுக்கு நான் போவதில்லை. படம் பார்ப்பேன். பார்த்த திருப்தியுடன் வந்துவிடுவேன். சில நாட்கள் அந்தப் படம் பற்றிய ஞாபகம் இருக்கும். பின் அதுவும் மறந்து விடும். யார் அந்தப் படத்தை இயக்கினார்கள். எப்படி அது சிறந்த படமாக இருக்கிறது என்றெல்லாம் யோசிப்பது இல்லை.

ஆனால் இப்போது ஒரு படத்தைப் பார்த்துவிட்டு அந்தப் படத்தைப் பற்றி எதாவது எழுதினால் என்ன என்று தோன்றுகிறது. அது என்னால் முடியுமா என்பதைப் பார்க்க விரும்புகிறேன். முன்பெல்லாம் உலகச் சினிமாப் படங்களைப் பார்க்க சில அமைப்புகள் இருந்தன. அதை நடத்துவது என்பதும் சாதாரண விஷயமில்லை. இப்போது அதெல்லாம் இருப்பதில்லை. காலம் மாறிவிட்டது. ஒரு படத்தை அப்படி ஒரு இடத்தில் போட்டுக் காட்டுவது என்பதும் சாத்தியமில்லாமல் போய்விட்டது. அந்த அமைப்புகள் படம் பார்க்க வருபவர்களிடமிருந்து பணம் வசூலிப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிடும். ஒரு சிறு பத்திரிகை ஆரம்பித்து சந்தா வசூலிப்பதைவிட கடினமான விஷயம் அது.

சமீபத்தில் நான் பார்த்த படம் ஒன்றின் பெயர் A SEPARATION இந்தப் படத்தை இயக்கியவர் அஸ்கர் ஃபர்ஹடி என்பவர். இது ஈரானிய படம். மிக எளிமையான அதே சமயத்தில் சற்று சிக்கலான நிகழ்ச்சிகளைக் கொண்ட படம் இது.
தன் கணவர் நாடாருடனும், பெண் டர்மாவுடன் ஈரானைவிட்டுப் போக நினைக்கிறார் சிமீன். அதற்கான எல்லா முயற்சிகளையும் மேற்கொள்கிறார். ஆனால் அவர் கணவர் நாடார் அவ்வாறு போக விரும்பவில்லை. அதற்குக் காரணம் அவருடைய தந்தை. அல்ஸிமர் நோயுடன் அவர் தந்தை போராடிக் கொண்டிருக்கிறார். 24 மணி நேரமும் அவரைப் பார்த்துக்கொள்ள வேண்டும்.
வேறு வழியில்லாமல் சிமீன் விவாகரத்திற்கு முயற்சி செய்கிறார். தன் கணவர் தன்னுடன் வெளிநாட்டிற்கு வர மறுக்கிறார் என்பதுதான் விவாகரத்திற்குக் காரணம். கணவர் கூறும் காரணம் தந்தையை விட்டுவிட்டு வர முடியாது என்பது. ஏனென்றால் தந்தை நோய்வாய்ப்பட்டுள்ளவராக உள்ளார்.

“நீங்கள் வெளிநாடு வந்தால், உங்கள் தந்தைக்கு என்ன தெரியப் போகிறது,”என்கிறாள் மனைவி.
அப்போது அவள் கணவன் சொல்கிறான் : “அவருக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். எனக்கு அவரைத் தெரியும்,” என்று.

விவாகரத்து மறுக்கப்படுகிறது. மனைவி கணவனிடம் கோபித்துக்கொண்டு தன் அம்மா வீட்டிற்குச் சென்று விடுகிறாள். ஒரே பெண் டர்மா அப்பாவுடன் இருந்து விடுகிறார். ஒரே காரணம் அம்மா திரும்பி வந்துவிடுவாள் என்பதுதான். இந்தப் படத்தின் முதல் சொடுக்கு இது.

 அடுத்ததாக நாடாருக்கு அப்பாவைப் பார்த்துக்கொள்ள யாராவது வேண்டும். அவன் அலுவலகத்திற்கும், பெண் பள்ளிக்கூடமும் சென்றுவிட்டாலும், அப்பாவை யார் பார்த்துக் கொள்வது? இது உண்மையில் பெரிய பிரச்சினை.
ரெஸயா என்ற திருமணமான ஒரு பெண்ணை அப்பாவைப் பார்த்துக்கொள்ள நாடார் ஏற்பாடு செய்கிறான். அந்தப் பெண் பணக் கஷ்டத்தைத் தீர்க்க இதற்கு சம்மதிக்கிறாள். தன் கணவரிடம் சொல்ல வேண்டாமென்று நாடாரிடம் கேட்டுக்கொள்கிறாள். உண்மையில் நடார் வீட்டைவிட்டு கிளம்பியவுடன் அவள் வருவாள். நடார் திரும்பி வருவதற்குள் அவள் போய்விடுவாள். அவளால் அல்ஸிமர் நோயுடன் தவிக்கும் நடாரின் தந்தையைச் சமாளிக்க முடியாது. இஸ்லாமிய சட்டப்படி தன் கணவரைத் தவிர இன்னொரு ஆணிற்கு பணிவிடை செய்வது என்பது ஒரு பாவமாகக் கருதப்படுகிறது. ரெஸயாவிற்கு இந்தச் சந்தேகம் வந்து, அவள் இதுகுறித்து போனில் விஜாரிப்பாள். முதல் நாள் அவள் அங்கு சென்று திரும்பவும் வீட்டிற்குச் செல்லும்போது அவளால் அங்கு பணிபுரிவது முடியாத காரியம் என்று தோன்றுகிறது. இது இரண்டாவது சொடுக்கு. 
 ஒருநாள் அவள் வீட்டில் வேறு பணிகளில் ஈடுபடும்போது, நடாரின் அப்பா வீட்டைவிட்டு வெளியே சென்றுவிடுவார். இந்த இடத்தில் ஏற்படும் பதட்டத்தை படம் பார்க்க வருபவர்களும் உணரும்படி இயக்கினர் உருவாக்கி உள்ளார். அவர் அப்பா தெருவில் ஒரு கடை முன்னால் நின்று கொண்டிருப்பார். ரெஸயா பதறிப்போய் அவரை அழைத்து வருவார். அப்போது ஏற்படும் விபத்தில் அவருடைய வயற்றில் வளரும் கரு கலைந்துவிடும். இந்தப் பின்னணியில் பெரிய குழப்பம் ஏற்படுகிறது. உடல்நிலை சரியாக இல்லாததால் டாக்டரைப் பார்க்க செல்கிறாள். நடாரின் அப்பாவை ஒரு கட்டிலில் கட்டி வைத்துவிட்டுப் போகிறாள். அவள் டாக்டரைப் பார்த்து திரும்புவதற்குள் நடார் வந்துவிடுகிறான். அவனிடம் உள்ள சாவியை வைத்து கதவைத் திறக்கிறான். உள்ளே அப்பா கட்டிலிலிருந்து கீழே விழுந்து கிடக்கிறான். இந்த இடத்தில் நடாரின் தவிப்பும், அவனுடைய பெண்ணின் தவிப்பையும் பிரமாதமாக வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர். ரெஸயா திரும்பி வந்தவுடன் பிரளயம் வெடிக்கிறது. அவளைப் பார்த்து திட்டுகிறான் நடார். வெளியே போகச் சொல்கிறான். பணம் வைத்திருக்கும் இடத்திலிருந்து பணத்தைத் திருடியதாக சொல்கிறான். அவளைத் திருடி என்று சொன்னதை ரெஸயாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்தச் சண்டையில் நடார் ரெஸயாவை வெளியே தள்ளி கதவைச் சாத்திவிடுகிறான். இங்கு இன்னொன்றும் குறிப்பிட வேண்டும். ரெஸயா அந்த வீட்டிற்கு வரும்போது தன் பெண்ணையும் அழைத்துக்கொண்டு வருவாள். அந்தப் பெண் ஒருமுறை நடாரின் அப்பாவின் மூக்கில் சொருகப்பட்டிருக்கும் ட்யூப்புகளைத் திருக ஆரம்பித்து விடுவாள். அப்படி திருகும்போது அவனுடைய அப்பா மூச்சுத் திணறல் ஏற்பட்டு தடுமாறுவார். படம் பார்ப்பவர்களிடம் ஒரு நிமிடம் பதட்டம் கூடிப் போகும்படி செய்கிறார் இயக்குனர். கதையின் மூன்றாவது சொடுக்கு இது. 
 பின் ரெஸயாவின் கர்ப்பம் கலைந்து போனதற்கு நடார் அவளைப் பிடித்துத் தள்ளியதுதான் காரணம் என்று ஜோடனை ஏற்பட்டு நடார் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறான். நடார் அவள் வேலைக்கு வருவதற்குமுன்பே கர்ப்பமானவள் என்பது தெரியாது என்று பொய்யாக வாக்களிக்கிறான். நடாரின் பெண் டர்மாவிற்கு அப்பாவின் பொய் தெரிந்து விடுகிறது. அப்பாவைப் பார்த்து வெளிப்படுத்தும் மிரட்சியை இயக்குநர் பிரமாதமான முறையில் கொண்டு வருகிறார். ஈரானில் சட்டம் கடுமையாக இருக்கும்போல் தோன்றுகிறது. பெண்ணிற்கு எதிராக நடக்கும் குற்றத்தை அவர்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள் என்பதுபோல் தெரிகிறது. நடாரின் மனைவி ஒருவித சமரச முயற்சிக்கு ஏற்பாடு செய்கிறாள். அதன்படி ரெஸயாவின் கணவனிடம் பணம் கொடுக்க முன் வருகிறாள். இது கதையின் நான்காவது சொடுக்கு. 
 ரெஸயாவின் வீட்டில் சந்திக்கிறார்கள். ரெஸயாவின் கணவனின் கடன்காரர்களும் அந்தப் பணத்தைப் பெற ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள். பணம் கொடுப்பதற்குமுன் நடார் ஒரு கேள்வி கேட்கிறான் ரெஸயாவைப் பார்த்து, ‘உண்மையில் அவன் தள்ளியதுதான் அவள் கர்ப்பம் கலைவதற்குக் காரணமா?’ என்று. குரான் மீது சத்தியம் செய்யச் சொல்கிறான். அவள் குரான் எடுத்துவர சென்று அதை எடுத்துக்கொண்டு வந்து சத்தியம் செய்ய அவள் மனச்சாட்சி அவளைப் பாடாய்ப் படுத்துகிறது. அவள் அழுகிறாள். அவள் கணவனுக்கு இது தெரிந்து அவள் பொய் சொன்னதற்காக அடிக்கிறான். தான் தப்பு செய்துவிட்டதாகவும் இந்தப் பணம் வேண்டாமென்று ரெஸயா மறுக்கிறாள். இது கதையின் ஐந்தாவது சொடுக்கு. 
இறுதியாக நீதி மன்றத்தில் நடார், சிமீ, அவர்களுடைய பெண் டர்மா மூவரும் நிற்கிறார்கள். நீதிபதி கேட்கிறார்: ”நீ யாருடன் இருக்க விரும்புகிறாள்…அம்மாவுடனா அப்பாவுடனா?” இந்தக் கேள்விக்கு உறுதியான பதில் வைத்திருக்கிறாயா என்று நீதிபதி கேட்கும்போது, வைத்திருக்கிறேன் என்று கூறும் அந்தப் பெண் அழுதபடி நிற்கிறாள். நீதிபதி நாடரையும், சிமீயையும் வெளியே காத்திருக்கும்படி சொல்கிறார். அவர்கள் வெளியே காத்துக்கொண்டிருக்கிறார்கள். அந்தப் பெண் யார் பக்கம் போகப் போகிறாள் என்ற புதிருடன் கதையை முடித்து உள்ளார்.

பொதுவாக சினிமாப் படங்களை நாம் பார்க்கும்போது மேலும் மேலும் நம்மைப் பார்க்க தூண்ட வேண்டும். இந்தப் படம் நமக்கு அந்த உணர்வை ஏற்படுத்துகிறது. இந்தப் படத்தில் நடிக்கும் யாவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். பார்வையாளர்களிடம் அவர்கள் நடிக்கத்தான் நடிக்கிறார்கள் என்ற உணர்வை ஏற்படுத்தாமல், கதா பாத்திரங்களுடன் ஒன்றிப் போய் விடுகிறார்கள். குறிப்பாக ரெஸயா தன் உணர்வுகளை அதிகம் பேசாமல் உணர்த்துகிறார். இந்தப் படத்திலேயே சிறப்பாக நடித்திருப்பது அவர்தான் என்று தோன்றுகிறது.

 இந்தப் படத்தை நான்23.08.2013 வெள்ளிக்கிழமை அன்று பார்த்தேன். இந்தப் படத்தை இயக்கிய இயக்கியனரின் மற்றப் படங்களையும் பார்க்க ஆவலாக உள்ளேன். தமிழில் ஏன் இதுமாதிரியான முயற்சி மேற்கொள்ளப்படவில்லை. இதுமாதிரியான படத்தைத் தயாரிக்க எவ்வளவு செலவாகும் என்பதெல்லாம் தெரியவில்லை.

சார்த்தின் தத்துவத்தில் மனிதனின் குணாதிசயம்



அம்ஷன் குமார்

(இக்கட்டுரை
திருச்சியிலிருந்து வெளிவந்த மானுடம் சிற்றிதழில் மே 1982ல் வெளியானது)

சுதந்திரம் பற்றி ஜீன் பால் சார்த்
கூறுவனவற்றிற்கு ஐரோப்பாவில் ஒரு நீண்ட பாரம்பரியம் இருக்கிறதெனினும் அவற்றில் பல கருத்துகள் புதிய
பாட்டிலில் புதிய ஒயின். சார்த் சுதந்திரம் பற்றி
தரும் எண்ணற்ற விளக்கங்களுக்கு அறிவுலகம்
அவருக்கு நிறைய கடமைப்பட்டிருக்கிறது.

மனிதன் என்பவன் சுதந்திரம். அவன் தன்னை
மாற்றியமைத்துக் கொள்ளவும் புதிய
வழியில் தன்னை நடத்திச் செல்லவும் அவனுக்கு உரிமை உண்டு. கைகால்களில் விலங்கிடப்பட்ட நிலையில் மனதளவில்
உணரும் ஆன்ம சுதந்திரம் பற்றி சார்த் இங்கே
பேசவில்லை. நிகழ் உலகில் மனிதன் தன்னுடைய செயல்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் சுதந்திரமே
சார்த் பேசுவது. `அடிமையானாலும் அவன் தன்னுடைய விலங்குகளை உடைத்தெறிவதற்கு
சுதந்திரமானவன்`. இத்தகைய சுதந்திரம் அவனை உண்மையாய் இருக்கத் தூண்டுகிறது.
இதன் விளவு அச்சுதந்திரத்தை பிரயோகிப்பவனுக்கு
சாதகமாய் இருக்கும் என்று சொல்வதற்கில்லை. மனிதனின் சுதந்திரம் வெற்றியைத் தேடித்தரும்
என்று சொல்வதற்கில்லை. மனிதனின் சுதந்திரம்
வெற்றியைத் தேடித்தரும் என்று நம்பக்கூடாது என்று எச்சரிக்கிறார் சார்த். எனவேதான்
மனிதன் சுதந்திரமாய் இருக்க விதிக்கப்பட்டவன்
(condemned to freedom) என்கிறார்.

காப்காவின் கட்டுக்கதைகளில் ஒன்று. ஒரு
சுண்டெலி உலகின் பரப்பைக் கண்டு பயந்து
ஓடுகிறது.கடைசியில் இடமும் வலமும் சுவர்களால் அடைபட்ட ஒர் அறையினுள் வந்தபிறகு சந்தோஷப்படுகிறது.
ஆனால் அந்த நீளச்சுவர்கள் சுண்டெலியின்
ஓட்டத்தில் மிக அண்மையாய் ஒன்றையொன்று நெருங்குகின்றன. கடைசியில் அந்த அறை மூலையிலுள்ள
எலிப்பொறியை நோக்கித் தான் செல்வது தெரிகிறது.
` நீ உன் திசையை மாற்றிக்கொள் ` என்று பூனை அதற்கு யோசனை கொடுத்துவிட்டு எலியைக் கபளீகரம்
செய்கிறது. மனிதனின் ஜீவிதம் பற்றியும் குறிப்பாக, தவிர்க்க முடியாத சூழ்நிலையில்
நிறுத்தி வைக்கப்படும்பொழுது மனிதனின்
முன்னுள்ள தேர்வு பற்றியும் இக்கதை மிக நன்றாக சித்தரிக்கிறது.

ஆனால் `சுதந்திரம் பிரக்ஞையின்  அஸ்திவாரம் என்று இதற்கு  அர்த்தம் கொள்ளக்கூடாது.` (1). பிரக்ஞை (For-itself) ஒரு நிலைத்த பொருளாக, எதுவாயும் இருக்கமுடியாது. சுதந்திரமாயும் கூட. `பிரக்ஞையானது` ஹஸ்ஸரலைத் தொடர்ந்து சார்த், ` எதைப்பற்றியாவது பிரக்ஞை” கொண்டிருக்கிறது` என்கிறார். `பிரக்ஞை எதனாலும் நிரப்பப்படாதது. ஆனால் அது
ஏதோ ஒன்றினால் நிரப்பப்படவேண்டி குறைபட்டு
நிற்கிறது.(It is a lack)
(2) எதனால்  அது நிரப்பப்படுகிறதோ அதுவாக  அது இருப்பதில்லை. நாற்காலி பற்றிய பிரக்ஞை நாற்காலியாவதில்லை. எனவே  அது சுதந்திரமாயுள்ளது. எப்பொழுதும்  அது தன்னைப் பிறவற்றின் மூலமாய் உணர்கிறது. இதனையே சார்த், ` பிரக்ஞை ஒரு ஜீவன் என்பதாவது  அதனுடைய  ஜீவனில் தன்னையல்லாத பிற ஜீவனைக் குறிக்கின்றதாய் இந்த ஜீவன் உள்ளவரை  அதன் ஜீவன் கேள்விக்கிடமாகிறது.` என்று  ஆடம்பரமாய்க் குறிக்கிறார். (3) இதற்கு நேர் எதிராக, வஸ்து அதாவது பொருள் (Being-in-itself) முழுமையானதாய், தன்னிறைவு பெற்றதாய் தன்னை நோக்கிக்
கேள்விகள் எழுப்பப்படின் விளக்கம் தருவதாயுள்ளது.
பிரக்ஞை இருப்பதனால் பொருள்  அறியப்பபடுகிறதேயொழிய பொருளின்  ஆதாரம் பிரக்ஞை அல்ல,  அது பிரக்ஞைக்கு காட்சி தந்த பின்னரும்  அதுவாகவே இருக்கிறது. ( அது  அதுவாகவே இருக்கிறது என்று சொல்வதைவிட `அது இருக்கிறது` என்ற பிரயோகத்தை சார்த் தகுந்த
காரணங்களுடன் விரும்புகிறார்.) `சிருஷ்டிக்கப்படாத,  அவ்வாறிருப்பதற்கு காரணம் ஏதுமில்லாத, மற்ற ஜீவனுடன் யாதொரு தொடர்பும் கொள்ளாத தன்னில் நிறைவுறும்
ஜீவன்  அனந்தத்திற்கும் தேவைக்கதிகமாயுள்ளது(4). பிரக்ஞையின் முக்கிய குணமான தன்னைக்
கடந்து இன்னொன்றை சுட்டுகின்ற செயலை  அது செய்வதில்லை.

சார்த்,  மனிதன் – பொருள் என்கிற இருமைக் கோட்பாடினை நிலைநாட்ட கணக்கற்ற வாதங்கள் புரிகிறார்.  அவர் பொருட்களுக்குப் பின்னால்  அவைகளின் முக்கியத்துவத்தையே மறக்கடித்து விட்டு  அரூப சாரம்சம் (Noumenon) நிற்பதாக வாதிடும் யதார்த்த வாதத்தினையும் , பொருட்களை மனிதனே  அறிகிறான் என்பதால்  அவற்றினை மனிதனின் பிரக்ஞைக்குள்
சுருட்டிச் சென்று விடும் திருஷ்டி-சிருஷ்டி
வாதமான கருத்து முதல் வாதத்தினையும் எதிர்க்கிறார். ஏனெனில்  அத்தகைய தத்துவக் கோட்பாடுகள் பிரக்ஞையை திண்மையுடையதாய் மாற்றவும்  அல்லது பிரக்ஞையை மறுக்கவும்
முயற்சிக்கின்றன. மனிதன் ஒருபோதும் வஸ்துவின்
குணத்தைப் பெறமுடியாது. மனிதன் பிரக்ஞை பூர்வமாய் ஒன்றை உணர்ந்துகொண்டே  அதனை அடையவும் (அதாவது பிரக்ஞை ஒரு
பொருளின் தன்னிறைவைப் பெறுகின்ற
உணர்வினை) முயற்சிப்பது (For-itself-in-itself)
இயலாத காரியமாதலால்  அவ்வாறாக விரும்பும் மனிதன் ஒரு
உபயோகமற்ற  ஆவேசமாகிறான் (useless passion). இதை ஒரு உதாரணம் வாயிலாக நாம்
சுலபமாகப் புரிந்துகொள்ளலாம். நாம் ஒரு அழகான
இயற்கைக் காட்சியை ரசிப்பதாக வைத்துக்கொள்வோம்.
அச்சமயம் நாம் நம்மைப்பற்றி நினைப்பதில்லை. நாம் அதை ரசிக்கிறோம் என்று உணரும் பொழுது நமது
ரசனை நின்றுவிடுகிறது. அப்பொழுது பிரக்ஞை

நம்மை நோக்கித் திரும்பி விடுகிறது. எனென்றால் நமது பிரக்ஞையினால் ஒரு சமயத்தில் ஒன்றைத்தான் செய்ய
முடியும். ஒரே சமயத்தில் நாம் இயற்கையை ரசித்துக்கொண்டும் அவ்வாறு நாம் செய்வதை உணர்ந்துகொண்டும் இருக்க விழைந்தால் அது நடைபெறாது. அவ்வாறு
விருப்பப்படுவது நாம் கடவுளாக மாறவிரும்புவதற்கு
ஒப்பானதாகும் என்கிறார் சார்த்.   மனிதனால்
ஒரு சைக்கிளைக்கூட தன்னுடையதென்று
உணரமுடியாது. அதாவது சைக்கிளைப் பற்றிய பிரக்ஞையையும் அது நம்முடையது என்கிற பிரக்ஞையையும் ஒரு சேர உணரத்தலைப்படுவதென்பது இயலாதது.
எல்லாவற்றையும் தாங்கள் அடைந்து விடுவதாய் மயங்கும் பொருள் படைத்தவர்களின் உடைமை பற்றிய உணர்வினை சார்த்
தன்னுடைய தத்துவத்தின் மூலம் மிக்க
தனித்தன்மையுடன் சிதற 
அடித்திருக்கிறார் என்று எண்ணுகிறேன்.

பிரக்ஞையின் தன்னிச்சையான குணத்தினை
நிலை நிறுத்துவதன் மூலமே மனிதன் சுதந்திரமானவன்
என்பதை மெய்ப்பிக்கமுடியுமாதலால் அவர் மனிதனின் குணாதிசயத்தை பல்வேறாக ஆராய்கிறார்.
குணாதிசயம் என்பது பல்வேறு கட்டுக் கதைகளாலானது.  ஏராளமான மூட நம்பிக்கைகள் கொண்டது.
மனிதனுக்கு இயற்கை
உண்டென்றும் அது அவனது குணாதிசயமெனவும்
பேணப்படுகிறது. அவனுடைய செயல்களைக் கட்டிவைத்திருக்கிறது.
மனிதனின் பிரக்ஞை ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலைக்குத் தூக்கி எறியப்படுவதையும்
அவனுக்கு இயற்கை என்ற ஒன்று வழங்கப்பட்டிருக்கவில்லை
என்பதையும் அபத்தவாத நாடகங்கள் அற்புதமாய் சித்தரிக்கின்றன. ஆனால் அவை தத்துவ பலத்துடன் விளக்கப்படுவது
சார்த்தின் எக்ஸிஸ்டென்ஷியலிசத்தில்தான். சார்த்
மனிதன் குணாதிசயமற்றவன் என்று புரட்சிகரமாய்க்
கூறுகிறார். மனிதன் குணாதிசயமுள்ளவன் என்பதை ஒப்புக்கொள்வது பிரக்ஞையின் குணத்தை
மறுப்பதாகும். பிரக்ஞை எப்பொழுதும் தன்னைக்
கடந்து செல்லும் குணம் கொண்டது எனும்போது அது எங்ஙனம் தனக்கேயுரித்தான குணங்கள் கொள்வது
சாத்தியமானதாயிருக்க முடியும்? அவ்வாறில்லையெனில்
மனிதனின் குணாதிசயம் பற்றிப் பேசப்படுவதை எங்ஙனம் நாம் தகர்த்தெறியப் போகிறோம்? எனவே மனிதனின் குணாதிசயத்தை
கட்டுப்படுத்துபவை
என்று சொல்லப்படும் கருத்துகளை அவர்
முறைப்படி எதிர்கொள்கிறார்.

மனிதனின் இறந்தகாலம் மனிதனின்
குணாதிசயத்தை உருவாக்குகிறது என்பதை சார்த்
எதிர்க்கிறார். முதலாவதாக இறந்த காலம் என்று மொத்த உருவம் படைத்த ஒன்றில்லை. இறந்தகாலம் என்பது
குறிக்கப்பட்ட ஒன்றாக உள்ளது. (5) எடுத்துக்காட்டாக
எனது இறந்த காலம் எனது கல்வி, வேலை, திருமணம் என்றெல்லாம் குறிப்பிடப்பட்டு என் முன்னே
நிற்கிறது. எனது செயல் ஒன்றினை நான் சுதந்திரமாகத்
தேர்வு செய்யும்பொழுது இவற்றின் விளைவுகளை, இவற்றின்
மீதான என் வாழ்க்கை பிடிப்புகளை நான்
எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.சுதந்திரமாக செயல்பட எனது கல்வியோ அனுபவமோ தடையாக இருப்பின் நான் அதனை எதிர்க்க வேண்டியுள்ளது. அந்த அளவில் எனது குறிப்பிடப்பட்ட  எதிர்காலம் எனது தேர்வை சாத்தியப்படுத்தவும் செய்கிறது. இறந்த
காலம் நான் பரிசீலிக்கத்தக்கதாய் இருப்பதால்
அது என் மீது ஒரு வெற்றுச் சுமையாக இருப்பதில்லை. ஜீவனிலிருந்து இல்லாமை வெளிப்படுவதைப்போலவே என்னுடைய
இறந்த காலம் அதன் எதிர்காலத்தைத் தேடிக்கொள்கிறது.
என்னை நான் மாற்றிக்கொள்வது, எனது
சூழலைத் தேர்ந்தெடுப்பது போன்றவை என்னை
வேதனைப்படுத்துவதாய், அயரவைப்பதாய், வாந்தியுணர்வை வரவழைப்பதாய் உள்ளது.
இந்நிலையில் நடைபெறும் போராட்டம் எக்ஸிஸ்டென்ஷியலிசம்
போற்றும் அசலான மனிதனை உருவாக்குகிறது.

இதுவரை சொல்லப்பட்ட மனிதனின்
பிரச்னைகள் அனைத்தும் பிரக்ஞையின் நிலையில்
உணரத்தக்கவை. சார்த் பிரக்ஞையின் சுதந்திரத்தை ஸ்தாபிக்க பிராய்டின் உளவியலுடன் வாதம் செய்ய
வேண்டியுள்ளது. தான் இவ்வாதங்கள் புரியும்பொழுது
இருத்தலியலின் (Ontology)
எல்லைக்கப்பால் சென்றுவிடுவதையும் உணர்கிறார். முடிவில் தன்னுடைய
தத்துவத்திற்கெதிராகவே அவர் செல்கிற முரணை நாம் பார்க்கவிருக்கிறோம். சார்த், பிராய்டின் உளவியலை மிகுந்த விஸ்தாரத்துடன் எதிர் கொள்கிறார்.

இருவரும் மனித நிலையை மிகவும் வேறுபட்ட
தங்களுடைய தத்துவங்களுக்கேற்ப விவரிப்பதால், இவர்களுடைய சொல்லகராதிகளும் மிகுந்த
வேறுபாடுகள் உடையதாயுள்ளன.

பிராய்டின் ஈகோவும் சார்த்தின்
பிரக்ஞையும் சம்பந்தங்கள் உடையது. ஆனால் ஈகோ
பிரக்ஞை பூர்வமானதெனினும் நிச்சயமான கட்டமைப்புடையது.
பிரக்ஞை தன்னையே கடந்து போகும் குணமுடையதால் அது `நான்` உணர்வற்றது என்கிற வேறுபாட்டை
உணர்த்திவிட்டு இட் அல்லது நனவிலிப் பிரக்ஞை(Unconscious) பற்றிய கொள்கையை சார்த் முழு மூச்சோடு
எதிர்க்க புறப்படுகிறார். நனவிலிப் பிரக்ஞை
என்பது பிரக்ஞையின் குணமில்லையென்று கூறும்
சார்த் அதனைத் தன்னில் நிறைவுறும்  வஸ்துவிற்கு ஒப்பிடுகிறார். நாஸியா நாவலில் உறக்க நிலையைக் குறிக்கும் சொல்லாக அதைப் பயன்படுத்துகிறார். பிராய்டின் ஒழுக்க
மனமான சூபர் ஈகோவிற்கு சமதையாக சார்த்தின்
தத்துவத்தில் தன்மீதான பிரக்ஞை (Reflective consciousness) இடம்
பெறுகிறது.

முதலாவதாக சார்த் மனித மனதின் முழுமையை
இட், ஈகோ, சூபர் ஈகோ என்றெல்லாம்
கூறு போடுவதையே விரும்பவில்லை. (6) சார்த்
பிரக்ஞையை இவ்விதம் பிளவுபடுத்தவில்லை.
பிரக்ஞை ஒன்றைப் பற்றியே அவர் பேசுகிறார். பிரக்ஞையே பிரக்ஞையின் செயலைப் பற்றி சிந்திக்கிற
தன்மீதான பிரக்ஞையாகவும் மாறுகிறது. அதாவது
பிரக்ஞையின் இயல்புபடி அது ஒரு சமயத்தில் ஒன்றை மட்டுமே செய்ய முடியும். எதாவது ஒன்றைப் பற்றிய
பிரக்ஞையாய் செயல்படுகிறது பின்னர் அதுவே தன்னைப் பற்றிய பிரக்ஞையாய் மாறிக்கொள்கிறது. மேலே தந்த
உதாரணத்தின்படி விளங்கிக் கொள்வேமேயானால் முதலில்
பிரக்ஞை இயற்கையை ரசிக்கிறது. பின்னர் தாம்
இயற்கையை ரசித்தோம் என்பதை உணர்வது (தன்மீதான பிரக்ஞை) என்பதாகும். இங்கே பிரக்ஞை தாம் என்ன செய்தோம்
என்பதை பின்நோக்கிப் பார்க்கிறது. தன்மீதான
பிரக்ஞை சாத்தியமாவதற்கு பிரக்ஞை அது தன் அமைப்பிலேயே அதனை முன்னோட்டமாக (Pre-reflective cogito) கொண்டுள்ளது. இதன்மூலம் மனிதன்  மன நிலை எதையும்  வெளிக்கொணரமுடியும் என்று அவர்
கருதுகிறார். ஆனால் நம்மால் உணரப்படாத
ஒரு மனநிலையை நாம் எவ்வாறு வெளிக்கொணர முடியும்? அப்படியொரு மனநிலை
இல்லை என்பது அவரது வாதம். நனவிலிப் பிரக்ஞை என்ற ஒன்று இருப்பதாகக் கொள்வோமெயானால் அதுவும் தன்னைப் பற்றிய
பிரக்ஞை கொண்டிருப்பதாக ஆகிறது. இல்லையென்றால்
அது எவ்விதம் தன்னை அவ்வாறாக உணர்ந்து கொண்டு தானாக வெளிப்படையக் கூடியவை என்றும்
குறியீடுகள் மூலம் வெளிப்படக்கூடியவை என்றும் எண்ணங்களை தணிக்கை செய்வது
சாத்தியமாகும்? பிராய்டின் உளவியல் கோட்பாடு இவ்விதம் ஒன்றுக்கு பின்னால் மற்றொன்று
என்கிற ரீதியில் முடிவற்ற பின்வாங்கல்களுக்கு
(Infinite regress) அதாவது நனவிலிப் பிரக்ஞை அதை கட்டுப்படுத்தும் தணிக்கை அதையும்
செயல்படுத்தும் இன்னொன்று என்றெல்லாம் நம்மை
இட்டுச் செல்கிறது. தத்துவத்தில் உள்ள எவ்விதக் கூற்றும்  முடிவற்ற பின்வாங்கல்களில் சிக்குறுவதை
விரும்பாத சார்த் இவற்றை எதிர்த்தே ஹெகல், ஹஸ்ஸரல், ஹைடேக்கர், பெர்க்லே ஆகியோரைக் கேள்விகள்
கேட்கிறார்.

பிராய்ட் நனவிலிப் பிரக்ஞை என்பது என்ன
என்று கூறவில்லை. அது ஒரு ஆவியல்ல
என்றும் பழங்கால சித்திர எழுத்துகளைப் (Hieroglyphics)போல ஒரு புரிபடுகிற
கட்டமைப்புடையது என்றும் கூறுகிறார். தன்னுடைய ஆராய்ச்சி முடிவுகளை வைத்துதான் அதை நம்புவதாயும்
அம்முடிவுகளை வேறு பொருத்தமான முறையில்
விளக்கி தன்னுடைய உளவியலை எதிர்க்குமாறு சவால் விடுகிறார்.(8)

சார்த் இந்த சவாலை எவ்விதம் ஏற்கிறார்?

அவருக்கு நனவிலிப் பிரக்ஞை என்பது இழிந்த நம்பிக்கை (Bad faith). பிரக்ஞை தன்னைப் பற்றிய உண்மையான புரிதலை ஏற்க மறுக்கும்பொழுது
அது இழிந்து போகிறது. அச்சமயத்தில் அது
தன்னைப் பற்றி கொண்டுள்ள நம்பிக்கை இழிந்த நம்பிக்கையாகிறது. இழிந்த நம்பிக்கை கொள்வதனால் பிரக்ஞை அதன்
சரளத்தை இழந்து முட்டுக்கட்டான நிலையை அடைகிறது.
இழிந்த நம்பிக்கை இவ்வாறு தனக்கு ஒரு சாசுவதமான உருவத்தை வழங்கிக் கொள்கிரது. இதுவே குணாதிசயம்
என்று அழைக்கப்படுகிறது. 
இழிந்த நம்பிக்கையின் மூலம் மனிதன்
குணாதிசயத்தை தனக்குத் தானே வழங்கிக் கொண்டு தன்னையே ஏமாற்றிக் கொண்டுவிடுகிறான்.
மனிதனால் அதாவது பிரக்ஞையின் இயல்புபடி
எத்தகைய குணாதிசயமும் கொண்டிருப்பது சாத்தியமில்லை. அது ஏன் என்பதை நாம் சற்றுமுன்னர் பார்த்தோம்.
அதாவது பிரக்ஞை சதாகாலமும் ஏதோ ஒன்றைப்பற்றியதாக
ஒரு சுழற்சியில் இருக்கிறது என்பதால் அதனால் ஏதோ ஒன்றாக மட்டும் நிலை பெற்றுவிடமுடியாது என்று.
அவனுக்கு குணாதிசயம் என்ற ஒன்று இல்லாததால்
அவனால் முட்டாளாகவோ, அறிஞனாகவோ, உண்மையானவனாகவோ, கயவனாகவோ இருக்க முடியாது. ஆனால் தன்னைத்தானே
ஏமாற்றிக் கொள்வதன்மூலம் -இழிந்த நம்பிக்கையின்
மூலம்- அவன் தன்னை எதுவாகவும் பாவித்துக் கொள்ளமுடியும். அவனால் சமூக அமைப்பு ஏற்படுத்திக்
கொடுத்துள்ள கதாபாத்திரங்களை (தலைவனாக, எழுத்தாளனாக, புரட்சியாளனாக, கருணை மிக்கவனாக என்றெல்லாம்)
அவ்விதமாக நடித்துக்காட்ட முடியும். (ஆனால்
இழிந்த நம்பிக்கை வந்த பிறகு மனிதனால் மீண்டும்
சரளத்தன்மையை அடையமுடியாது என்று பயங்கொள்ள வேண்டாம். ஏனெனில் இழிந்த நம்பிக்கையைவிட்டு சட்டென்று
மாறக்கூடிய தன்மையை மனிதன் பெற்றிருக்கிறான்
என சார்த் நம்பிக்கை அளிக்கிறார். வெயிட்டர்கள், டெய்லர்கள்,
ஏலம் விடுபவர்கள், கடைக்காரர்கள் ஆகியோரும்
சமுகத்தினர்முன் தாங்கள் குற்றேவல் செய்வதற்கென்றே
தோன்றியிருப்பவர்களாக நடிக்கிறார்கள். தன்னுடைய
கையை ஒரு ஆடவன் பற்றியுள்ள நிலையில் அது பற்றி ஏதும் உணராததுபோல் நடந்துகொள்கிற ஒரு யுவதியையும் சார்த்
இங்கே உதாரணம் காட்டுகிறார். அது இழிந்த
நம்பிக்கையின் வெளிப்பாடு. தான் பொறுப்பற்றிருக்க அச்செயல் அவளுக்கு உதவுகிறது. ஏனெனில் ஆடவன் தன்னை
தொடுவதை தான் உணர்வதாகக் காட்டிக் கொண்டால்
அதற்கு பொறுப்பு ஏற்க நேரிடும். அவள் அவனது காதலை ஏற்கிறாளா இல்லையா என்பதை அவள் தெரிவித்தாக
வேண்டும்.

சார்த்தின் பலம் பொருந்திய வாதங்களைக்
கேட்ட பிறகு நனவிலிப் பிரக்ஞை நமக்கு
முழுமையான விளக்கங்கள் தருகிற கொள்கையாகத் தோன்றவில்லை. ஆனால் அதே சமயம் பிராய்டின் மனிதர்களில் ஒரு
பிரிவினர் இழிந்த நம்பிக்கை கொண்டிருப்பவர்கள்
என்பதை நாம் உணர்ந்த பொழுதிலும் அதுவும் முழுமையான விளக்கமாக நமக்கு படவில்லை. இந்தியத்
தத்துவம் பிரபஞ்சம் பரம்பொருளிலிருந்து
பெறப்பட்டது என்று கூறுவது பரம்பொருளைப்பற்றி நினக்கத் தூண்டுகிறதாயுள்ளதேயன்றி பிரபஞ்சத்தை
விளக்குவதாய் இல்லை. அதைப்போலவே சார்த்
மனித குணங்கள் எல்லாவற்றையும் பிரக்ஞையின் பாற்பட்டதாய்க் கூறிவிடுவதன்மூலம் நனவிலிப் பிரக்ஞையை
மறுத்துவிடுவதாய்த் தோன்றிய போதிலும் அது
எதிர்கொண்ட பிரச்னகளுக்கு முடிவு கட்டியதாகக் கொள்ள முடியவில்லை. உதாரணமாக என்னை நான் புரிந்து
கொள்ளாததாலும் புரிந்துகொள்ளவியலாததாலும் தவறுகள் செய்ய நேரிடுகிறது. இத்தகைய அறியா நிலையில் நான்
இருக்கும்பொழுது என்னை இழிந்த நம்பிக்கையில் உழல்பவன்
என்று எவ்வாறு கூறமுடியும்?
என்னைப் புரிந்து கொள்ள நிறைய அவகாசமும்
கல்வியும் தேவைப்படுகிறது. ( உதாரணமாக சிறு வயது முதல் என்னைத் தொடர்கிற பாலுணர்வினை புரிந்து கொள்ள நான் வளர வேண்டியிருக்கிறது)

`என்னை` புரிந்து கொள்வதே உளவியல், தத்துவம் ஆகியவற்றின் தலையாய நோக்கமாதலால் சார்த் இதற்கு ஒரு புதிய
முறை வகுக்கிறார். ஒவ்வொரு மனிதனும் தனக்கென
கொண்டுள்ள  அடிப்படையான நிர்ணயம் (Original Choice) எது என்பதைத் தெரிந்து கொள்ள அவர் தனது உளவியல்
தத்துவம் வாயிலாக முயல்கிறார். இதை அவர் எவ்விதம் செயற்படுத்துகிறார் என்பதனை அவருடைய பாடிலேர் பற்றிய ஆராய்ச்சியினைப் பார்ப்பதன்மூலம்
அறியலாம்.

பிரெஞ்சு கவிஞர் பாடிலேர் தான் மிகவும்
நேசித்த தன் தாய் வேறொருவரை மறுமணம்
செய்துகொண்ட பொழுது நிலை குலைந்து போனார். இந்நிலையே அவரது அடிப்படையான நிர்ணயம். தான் யார்
என்பதை அவரால் அவ்விதமாக நிர்ணயித்துக் கொள்ள வழிவகுத்தது. இந்நிலையே அவரை வாழ்நாள் முழுவதும் வழிப்படுத்தி அவருடைய குணாதிசயத்தை உருவாக்கியது.
சார்த்தின் தத்துவப்படி பாடிலேரின் அடிப்படை
நிர்ணயம் இழிந்த நம்பிக்கையில் தொடங்குகிறது. இதை நிரூபிக்க வேண்டி சார்த் பாடிலேரின் கவிதைகளை
அவருக்கெதிராக விரிக்கிறார். இதை சற்று விரிவாகப் பார்ப்போம்.

முதலாவதாக அடிப்படை நிர்ணயம் என்பது
என்ன? என்னை நான் எவ்வாறு உருவாக்கிக் கொள்ளப்போகிறேன்
என்பதற்கான திட்டம் இதுவெனில் இத்தகைய நிர்ணயத்தை
நான் எப்பொழுது தொடங்குகிறேன்? மிகக்
குறிப்பாக என்னுடைய எத்தனையாவது
வயதில் நான் என் அடிப்படையை நிர்ணயம் செய்கிறேன்? இக்கேள்விக்கு சார்த்திடம் பதில் இல்லை. இதற்கு அடுத்தாற்போல்
இன்னொரு கேள்வி நம்மிடம் உருவாகிறது. ஒருவன்
தன்னை அடிப்படையில் இவ்விதம் நிர்ணயித்துக்
கொள்வது உறுதியென்றால் அவனுடைய வாழ்க்கை முழுவதும் இந்த நிர்ணயத்திற்கு கட்டுப்பட்டதுதானா? வேறு வார்த்தைகளில் கேட்டால் அவன் தன் வாழ்க்கையை தன் கடந்தகால
நிர்ணயித்திலிருந்து வேறுவிதமாக மாற்றியமைத்துக் கொள்ளும் திராணி அற்றவனா?

ஒருவன் பாடகனாக விரும்புவதாக
வைத்துக்கொள்வோம். இந்த அடிப்படை நிர்ணயம்-பாடகனாகும்
ஆசை-அவனை எல்லாவிதத்திலும் தயார் செய்கிறது. மனப்பழக்கம், முயற்சி மற்றும் குணங்கள் யாவும்
அவனுடைய விருப்பத்தை அனுசரித்தவையாக
அமைகின்றன. இதுவரையில் சரி. திடீரென ஒரு நாள் அவன் நாடக அரங்கினுள் நுழைய நடிகனின்
விஸ்தாரத்தின் முன் மயங்கிப் போகிறான். (கலைஞர்கள், சிறந்த மனிதர்கள் இவர்களது வாழ்வில்
இத்தகைய மாற்றங்கள் நடப்பது
நன்கு அறியப்பட்டவை. பாடகனாயிருந்து நாதஸ்வரத்தில் தன் மேதையைக் காட்டிய டி.என்.ராஜரத்தினம், நடனத்தில் துவங்கி சிதாரில்
பிரகாசிக்கும் ரவி
சங்கர் ஆகியோர் எண்ணற்ற உதாரணங்களில்
சிலர்.)  இங்கே அடிப்படை நிர்ணயத்துக்கும்-பாடகனாகும் விருப்பம்; தொடரும் விளைவுக்கும்– நடிகனாகி விடுவது; ஏராளமான தொலைவுள்ளது. முதலாவது உணர்வினைக் இசைக்குரலாய் வெளிப்படுத்துவது. பின்னது தன்னுடலைக்
கருவியாக்கி பிறிதொரு யதார்த்தத்தை நிறுவுவது.
இப்பொழுது அடிப்படை நிர்ணயத்துக்கு ஆதரவாக ஒருவர் இவ்வாறு பேசலாம். இரண்டும் கலைத்தொடர்புடையது
என்றும் நடிகனாகும் விருப்பம் பாடகனுக்கு
முதலில் இருந்திருக்க வேண்டும். ஆனால் அதுவளர அப்போதைய சூழ்நிலை இணக்கமற்றதாய் இருந்தபடியால் அத்தகைய
சூழலில் இயல்பாய் அவ்வுணர்வு வேறாய் வெளிப்பட்டது
என்றும் பின்னர் உரிய `நேரம்` வாய்த்த பொழுது அடிப்படையான நிர்ணயம் தன்னை நன்கு புரிந்துகொண்டு நடிகனாகும் விருப்பமாய்க்
கனிந்தது என்றும் விளக்கம் தரலாம். `நான் என்னை அன்று ஒரு நடிகனாகப் `பார்த்தேன்` என்று அதுவரை பாடகனாய் வளர்ந்த
அக்கலைஞன் தன்னை  அவ்வாறு அறிவிப்பதும் இக்கூற்றைப் பலப்படுத்தவே செய்யும்.

ஆனால் ஒன்றிற்கொன்று தொடர்பே இல்லாத
இருவேறு நிலைகளுக்கு ஒருவன் தாவிச் செல்வது
சாத்தியம் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. ஒருவன் தன்னை அவ்வாறு புதிதாய் தேர்ந்தெடுத்து கொள்வது
நடவாததல்ல. பாடகனாக விரும்பிய அக்கலைஞன் நாடகத்தினைப் பார்த்துவிட்டு நடிகனாக வேண்டுமென்று ஆசைப்படாது அந்த
நாடகம் போற்றிய புரட்சி வீரனாகவும்
ஆசைப்படலாம். புரட்சி வீரனாவதற்கான வித்தும் அப்பாடகனிடம் ஏற்கனவே இருந்தது என்று
கூறுவது அவனை விஸ்தாரங்கள் மிகுந்த மனிதன்-அதாவது
அவன் பலவாறாயும் தூண்டத்தக்கவன்– என்று குறிப்பதற்குதான் உதவுமேயொழிய அவனது அடிப்படை நிர்ணயம்
புரட்சி வீரனை முன் நோக்கியதாய் ஆனால் சூழ்நிலை
பாடகனாய்(பாடுவதன் மூலம் சுதந்திரத்தை விரும்புகிறவனாய், பாடுவதன் மூலம் புரட்சி செய்கிறவனாய்)
அதுகாறும் வெளிப்படுத்தியதாகக் கொள்ள உதவிசெய்யாது.
மேலும் அவன், `நான் என்னை அன்று புரட்சி வீரனாகப் பார்த்தேன்` என்று சொல்வதும் அவனுடைய புதிய
பிரக்ஞையை உறுதிப்படுத்துவதாயும் அவனுக்கு
இவ்வுலகம் அப்பொழுது கொடுத்த விழிப்புணர்ச்சியென்றும்
கருத வேண்டும். மாறாக அடிப்படையான நிர்ணயம் என்ற ஒன்று அவனது செயல்களுக்குப் பின்னால்
சதாகாலமும் உந்து சக்தியுடையதாக இருந்ததெனக்
கருதுவது அந்த வார்த்தைக்கு தாங்கிக் கொள்ள முடியாத அர்த்தங்களைக் கொடுப்பதற்கு சமமாகும்.

அடிப்படை நிர்ணயம் என்பதை மனிதன் தான்
கொள்ளும் எண்ணற்ற நிர்ணயங்களில் ஒன்று
அல்லது நாம் விரும்பினால் மனிதன் கொண்ட முதல் நிர்ணயம் (இரண்டாவது, மூன்றாவது எனத்தொடரவிருக்கும்
தொடர்ச்சியின் முதல்) அது என்று புரிந்து கொள்ள வேண்டும். மனிதன் என்கிற முழுமை கொள்ளும் நிர்ணயங்களில்
அடிப்படை நிர்ணயம் என்பது ஒரு பகுதியேயொழிய
அதுவே முழுத்தோற்றமாகாது. எனவே அடிப்படை நிர்ணயம் என்பது அதனில் வெறும் நீர்க்குமிழி போன்றது. எந்நேரத்திலும் உடைபடக் கூடியது. அது பின்னால் மனிதன்
கொள்ளவிருக்கும் நிர்ணயங்களுக்கு க்ரியா
ஊக்கியாகப் பயன்பட்டாலும் க்ரியா ஊக்கம் நடைபெற்ற ரசாயனப் பொருள் தன்போக்கான, தனக்கேயுரித்தான குணங்களைப் பெற்றுக்
கொள்வதைப்போல, பின்னர் வரும் நிர்ணயங்கள் சக்தி கொள்கின்றன.

பாடிலேரின் வாழ்க்கையின் அடிப்படை
நிர்ணயம் அவரை விட்டகலவில்லை என்கிற சார்த்தின் வாதம் ஏற்கத்தக்கதல்ல.

ஆனால் சார்த்தின் குற்றச்சாட்டுகளை தன்மீது
அப்பிக்கொள்கிறமாதிரி பாடிலேர் தன் தாயின்
மறுமணத்தால் நிலை குலைந்தார். ஐந்து பிராங்குகளுகாக உடலுறவு கொள்ள சம்மதிக்கும் விபசாரிகளுடன் உறவு கொண்டிருந்தார்.
கூடவே சார்லஸ் பாடிலேர் பிரான்சின்
தலை சிறந்த கவிதைகளையும் எழுதினார். பாடிலேரின் அடிப்படை நிர்ணயம் இவ்வாறு பல்வேறாக அவரை
வெளிப்படுத்திற்று என்று கொள்ளமுடியாது. ஏனெனில் கவிதை எழுதியதன் மூலமே பாடிலேர் தன்னுடைய நிலையைக் கடந்து சென்றார். அவ்வாறு இல்லையென்றால் அவர்
தன்னை ஒரு கவிஞனாய் வெளிப்படுத்திய பொழுதிலும்
தன்னைப்பற்றிய பரிதாபகரமான உணர்வையே பாடியிருக்க வேண்டும். மாறாக பாடிலேர் தான் ஒரு கவிஞன்
என்பதைப் பெருமிதத்துடன் உணர்ந்திருக்கிறார்.
தன்னை ஆல்பட்ராஸ் என்னும் வலிய இறக்கைகள் உடைய பறவைக்கு ஒப்பிடுகிறார்.

“ஓ, தேவனே! என் கடவுளே! நான் மனிதர்களில்
கடையனில்லை என்பதையும் நான் இகழ்கிற
மனிதர்களைக் காட்டிலும் நான் குறைந்தவன் அல்ல என்பதையும் நிரூபணம் செய்கிற மாதிரியான சில உயர்ந்த
வரிகளைப் படைக்கும் ஆற்றலை எனக்குத் தந்தருளுங்கள்“ என தனது உள்ளக்கிடக்கையை அவர்
வெளிப்படுத்துகிறார். பாடிலேர்
தன்னுடைய தாயின் மறுமணத்தினால் பாதிக்கப்படவில்லை என்றோ அதன் ஆறாத் தழும்புகள் அவரைக் கடைசிவரை
வருத்தவில்லை என்பதோ நமது வாதமல்ல. மாறாக அவ்வாறெல்லாம்தான் அவர் வாழ்ந்திருக்கிறார் என்பதே நமக்கு கிடைக்கும் ஆதாரங்களாகும். ஆனால் இதுவே அவரின்
ஒவ்வொரு முயற்சியையும் வழி நின்று நடத்திற்று
என்பதை நம்மால் ஒப்புக்கொள்ள முடியவில்லை.

கலைஞனை நரம்பு வியாதியுடன்
சம்பந்தப்படுத்துகிற பிராய்டின் உளவியலுக்கும்
அவனைக் கடந்த கால நிகழ்ச்சி ஒன்றின் தொடர்ச்சியாய்க் காட்டும் சார்த்தின் உளவியலுக்கும் அதிக
வித்தியாசமில்லை. சார்த்தின் சுதந்திரம்
பற்றிய பிரம்மாண்டமான வாதங்கள் அவருடைய அடிப்படை நிர்ணயம் என்கிற கருத்தினால்
பின்னோக்கப்படுகின்றன. மார்க்சிஸ்ட் ஆவதற்கு முன்பாகவே அவருடைய தத்துவத்தை அவரே ஒரு
முடிவுக்கு கொண்டுவந்துவிட்டதை நாம் உணர முடிகிறது.

அவரது மார்க்சிய பயணம் குறித்து சில
வரிகள். அவர் மார்க்சிசத்திற்கு எக்சிஸ்டென்ஷியலிசம்
வாயிலாகச் சென்றடைந்தார் என்று சொல்லப்படுகிறது. அது எந்த அளவிற்கு ஒப்புக்கொள்ளக் கூடியதாக
உள்ளது? வர்க்கப் பாகுபாடற்ற சமூகத்தை அமைக்கவே உழைக்கும்
வர்க்கத்துடன் சேரவேண்டும் என்று பிந்தைய நாட்களில் சார்த் சொல்கிறார். சரி. ஆனால் இதற்கு எக்ஸிஸ்டென்ஷியலிச
ஈடுபாடு எவ்வாறு அதுகாறும் தடையாக
இருந்திருக்கும் என்பதைப் போலவே எக்ஸிஸ்டென்ஷியலிசம்
எவ்வாறு இந்த சிந்தனையைப் பெற உதவியாயிருந்திருக்கும் என்ற கேள்வியும்.

எக்ஸிஸ்டென்ஷியலிச மனிதனும் மார்க்சிய
மனிதனும் வெவ்வேறானவர்கள். எக்ஸிஸ்டென்ஷியலிச
மனிதன் கால இட வரையற்றவன். எந்த ஒரு குறிப்பிட்ட சமுகத்தினனாகவும் இல்லாததினால்
எப்பேர்பட்ட சமுக மாற்றத்திலும் அவனுடைய பிரச்னைகள் மாறாதவை. அவன் தன் சுதந்திரத்தில் மட்டும் ஈடுபாடு
உடையவன். சுதந்திரம் என்பது பொருளாதார
நெருக்கடியை உத்தேசித்த ஒன்று என்பதை மொழியாதவன்.
அவருடைய மார்க்சிசத்தில் கால இடவரையற்ற தனிமனிதனைக் காண இயலாது. மார்க்சிய மனிதன் தன்
வகுப்பினரின் சுதந்திரத்திலும் சரித்திரப் பொருள்முதல்வாதத்திலும் நம்பிக்கை கொண்டவன். ஏதாவது ஒரு விதத்தில் எக்ஸிஸ்டென்ஷியலிசப் பார்வை சார்த்தை
மார்க்சிசத்தை நோக்கி தூண்டியது என்றால்
அது மனிதனுக்கு அவர் முன்பு வழங்கிய சுதந்திரத்தை மார்க்சிசத்தில் காண விழைந்ததுதான். அவர் பார்வையில்
மார்க்சிசப் புரட்சி சமூகத்திலிருந்து தனிமனிதனுக்கும்
தனி மனிதனிலிருந்து சமூகத்திற்கும் எடுத்து செல்லப் படவேண்டியது. இப்புரட்சியை இயற்கையோ
ஏனைய விதிகளோ அன்றி மனிதன்தான் உருவாக்க
வேண்டும் என்பதால் மனித சுதந்திரம்பற்றிய அவருடைய பழைய கருத்து இங்கு மீண்டும் பிரயோகிக்கப்படுகிறது.
ஆனால் மார்க்சிசத்திற்கு எவ்வகையிலும்
எக்ஸிஸ்டென்ஷியலிசம் இன்றியமையாததாக அமையவில்லை என்பதையும் இதன்மூலம் பெறலாம்.

————————————————————————————————————————————————————————————————————-

அடிக்குறிப்புகள்:-

1.Being and Nothingness (B & N) by Jean Paul Sartre. Translated by Hazel
E.Barnes. பக்
628. Washington Square
Press Edition-Pocket Books

2. பிரக்ஞை இத்தகைய
உள்ளீடற்ற குணம் கொண்டிருப்பதாலேயே அதனால் பிம்பங்களைத் தோற்றுவிக்க முடிகிறது என்பதை  Psychology of Imagination என்னும் புத்தகத்திலும் ஒரு உணர்விலிருந்து
மற்றொரு உணர்விற்கு பிரக்ஞை கணத்தில் தன்னை
ஆட்படுத்திக் கொள்ளமுடியும் என்பதை Theory of Emotions என்கிற புத்தகத்திலும் சார்த் விளக்கியிருப்பதைக் காணலாம்.

3. `Consciousness is a being such that in its being its being is in question
insofar as this being implies a being other than itself` B & N பக் 24

4.`Uncreated, without reason for its being without any connection with another
being, Being-in-itself is de trop for eternity`. Ibid பக் 29

5. சார்த்தின்
வாதங்களைப் படிக்கும்பொழுது ஐன்ஸ்டீனின் சார்பு நிலைக் கொள்கை ஞாபகத்திற்கு வருவது தவிர்க்க
முடியாதது. கருத்துமுதல் வாதம் நியூட்டனின்
விஞ்ஞானத்தை தளமாய் கொண்டது ( Ibid பக்
406) என்று அவர் கூறும்பொழுது நாம் அவருடைய
தத்துவத்திற்கும் ஐன்ஸ்டீனின் விஞ்ஞானத்திற்குமுள்ள
ஒற்றுமையை ஸ்தாபிக்க முடியும். ஆனால் சார்த் ஐன்ஸ்டீனின் பாதிப்பினால் தத்துவம்
பெற்றவர் அல்லர். க்யூபிசத்தைப் போலவே எக்ஸிஸ்டென்ஷியலிசமும்
தன் விளைவுகளால் அத்தகைய உண்மைகளை தரிசிக்கிறது. இதனால் சார்த் ஐன்ஸ்டீனை தோழமையுடன்
பார்க்கிறார். இப்பார்வையை  சார்த் ,பிரெஞ்சு நாவலாசிரியரான மரியக் பற்றி
எழுதியுள்ள கட்டுரையில் பார்க்கலாம்.

6. B & N பக்
91. அவர் தன்னுடைய உளவியல் மனிதனை அவனுடைய
முழுமையில் ஆராய்கிறது என்று கூறுகிறார். அவர்
கெஸ்டால்ட் (Gestalt) உளவியலை விரும்புவதன் காரணமும் இதுதான். கெஸ்டால்ட்
உளவியலும் தனக்கு
எக்ஸிஸ்டென்ஷியல் உளவியல் என்று உப
பெயரிட்டு கொண்டுள்ளது.

7. Ibid பக்கங்கள்
93, 733.

8. Sigmund Freud–A General Introduction to Psycho Analysis பக் 288.

க.நா.சு.வின் கடைசி இருபது ஆண்டுகள்

அசோகமித்திரன்
 
 க.நா.சுப்ரமணியன் 1965ல் ஒரு பெரிய முடிவு எடுக்க வேண்டியிருந்தது. ஓராண்டு ‘இலக்கிய வட்டம்’ என்ற பத்திரிகையை நடத்தி, நிறுத்தியாயிற்று.
அவர் எழுதிப் பிரசுரம் செய்ய உறுதியான எதிபார்ப்புகள் அதிகம்  இல்லை.
வானொலிப் பக்கம் அவரை அழைக்கவே கூடாது என்று அங்கு உயர்
பதவியில் இருந்த ஒரு வெகுஜன எழுத்தாளர் உறுதி செய்து விட்டார். கநாசுவைப்
பிரசுரம் செய்த வெளியிட்டாரிடம் கநாசு நூல்களை வெளியிட்டால் தன நூல்களை
வேறிடம் தந்து விடுவேன் என்று எச்சரிக்கை விட்டார். வாலாஜா சாலையில்
குடியிருந்த கநாசு, ஆங்கிலத்தில் எழுதிப்பார்க்கலாம் என்று வீட்டைப்
பூட்டிவிட்டு டில்லி சென்றார்.
கநாசு
முதலிலிருந்தே ஆங்கிலத்தில் எழுதியிருந்தால் ஒரு வேளை ஓர் ஆங்கில
எழுத்தாளராகப் பெயர் எடுத்திருக்கலாம் . அவருடைய ‘அவதூதர்’ நாவலை
ஆங்கிலத்திலும் எழுதி ஆங்கிலப் பிரதியை அமெரிக்க ராண்டம் ஹவுஸ் கம்பெனி
நடத்திய ஒரு போட்டிக்கு  அனுப்பினார். பரிசு கிடைக்கவில்லை. ஆனால் அவர்கள் அதைப்
பிரசுரத்துக்கு ஏற்றுக்கொண்டு ஒரு முன்தொகைக் காசோலையும் அனுப்பினார்கள்.
(அந்தக் காசோலையை நான் பார்த்தேன்.) ஒரு நிபந்தனை. நாவலில் உள்ள அற்புத
நிகழ்ச்சிகளை அவர் விலக்கித் தரவேண்டும். கநாசு ஒப்புக்கொள்ளவில்லை. அவதூதர் பாத்திரம்  ஒரே
சமயத்தில் இரு இடங்களில் இருப்பது போல ஓரிடம் இருந்தது; அதை விலக்கி
இருக்கலாம்..அவர்கள்
ஆங்கிலப் பிரதியைத் திருப்பி அனுப்பிவிட்டார்கள். இதற்குள் கநாசுவின்
தமிழ்ப் பிரதி தொலைந்து விட்டது.
கநாசு
டில்லியில் பல ஆங்கிலக்கட்டுரைகள் எழுதினார். சரண் சிங் நடத்திய ‘ரியல்
இந்தியா’ என்ற பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்தார். அவருக்காக சின்னமனூர்
சென்று ஒரு கட்டுரை எழுதினேன். என்னுடைய ஒரு சிறுகதையைக் கூட அவர்
பிரசுரித்தார்.
 
.இந்திரா காந்தி 1980ல்
மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடனேயே கநாசு சென்னை வந்து விட்டார். கடைசி
ஏழெட்டு ஆண்டுகள் சென்னை மயிலை டி எஸ் வி கோவில் தெருவில் இருந்தார். அதே தெருவில் வசித்த பாவை சந்திரன் அவர்களுடன் அப்போதுதான் பழக்கம் ஏற்பட்டது.
இவ்வளவு படித்தும் எழுதியும் இருந்த
முதியவர்  ஒரு தோரணையும்  இல்லாமல் எல்லோருடனுடனும் பழகியது எவரையும்
ஆச்சரியத்தில் ஆழ்த்தும். ஓராண்டுக்குள் ‘குங்குமம்’ பத்திரிகையிலும்
‘தினமணி கதிர்’ பத்திரிகையிலும், ஐம்பதுக்கும் மேற்பட்ட கட்டுரைகள்
இந்திய வரலாற்று நாயகர்கள் மற்றும் மறுமலர்ச்சி சிந்தனையாளர்கள் பற்றியும்  எழுதினார். மிர்சா காலிப், வித்யாசாகர் பற்றி அவர் எழுதிய
கட்டுரைகள் மிகவும் சிறப்பானவை. பின்னர் அவர் ‘தினமணி கதிர்’ இதழில் ஒரு
தொடர் கதை எழுதினார். அந்த ஐந்தாறு ஆண்டுகளில் அவருடைய பல முக்கியமான
நாவல்கள் வெளிவந்தன. ‘பித்தப்பூ,’ கோதை சிரித்தாள்.’ தாமஸ் வந்தார்,’
‘அவதூதர்’ ஆகிய நூல்கள் வெளிவந்தன. (ஒரு விசித்திரம். ‘அவதூதர்’ நாவலுக்கு
அவரிடம் ஆங்கிலப் பிரதிதான் இருந்தது. அதை லதா ராமகிருஷ்ணன் அவர்கள்
தமிழில்
மொழிபெயர்த்தார்கள்!) இவை தவிர அவருடைய முந்தைய நாவல்களை மூன்று அல்லது
நான்காகச் சேர்த்து நூல்கள் வந்தன. பேசிய தொகையே குறைவு.
 . .
கநாசு
டில்லியில் இருந்தபோது  பல ஆங்கில நூல்களைப் பொறுப்பாசிரியராக வெளியிடக்
காரணமாக இருந்தார். ஒன்று கூட அவருடையது இல்லை. பதிமூன்றே நாட்களில்
இந்திரா பார்த்தசாரதியின் ‘குருதிப்புனல்’ நாவலை ஆங்கிலத்தில்
மொழிபெயர்த்து விகாஸ் பதிப்பகத்தாரிடம் கொடுத்தார். “இவ்வளவு அவசரம் ஏன்?’
என்று நான் கேட்டேன்.
“தாமதம் செய்தால் ஒரு வேளை  அவர்கள் மனது மாறிவிடும்,” என்றார். இன்னொரு
பதிப்பகத்தாரிடம் ‘தந்திர பூமி’ நாவலை ஆங்கிலத்தில் வெளியிடக் கொடுத்தார்.
அவர் பிறர் கதைகளைத் தொகுத்து மூன்று நூல்கள் வெளியிட்டார். ‘இவ்வளவு நல்ல
தெலுங்கு, கன்னடக் கதைகளை எங்கிருந்து கண்டு பிடித்தார் என்று ஆச்சரியமாக
இருந்தது..
 
அன்று
சாகித்ய அகாதமி விதிகளின்படி ஒருவரின் நூல் வெளிவந்து மூன்றாண்டுகள்தான்
பரிசுக்குக் கருதப்படும். ஒருங்கிணைப்பாளருக்கும் வாக்கு
உண்டு. ஆதலால் மற்ற இருவரில் ஒருவர் வாக்குக கிடைத்தால் போதும். அப்போது
நா பார்த்தசாரதி அகாதமியில் முக்கியமானவராக இருந்தார். அவர்
இருந்ததால்தான் தி
ஜானகிராமன், அழகிரிசாமி, ஆதவன் மற்றும் கநாசு ஆகியோருக்குப் பரிசு
கிடைத்தது. ஆதவன், அழகிரிசாமிக்கு அவர்கள் காலமான பிறகு அளிக்கப்பட்டது. கநாசுவுக்குப் பரிசு அறிவிக்கப் பட்டபோது (1986 December)
அவர் சென்னை குடிவந்து பல ஆண்டுகள் சென்றுவிட்டன. (இப்போது அகாதமி பரிசு
விதிகள் மாற்றப்பட்டுவிட்டன. யு ஆர் அனந்தமூர்த்தி தலைவரானதும் செய்த முதல் காரியம் ஒருங்கிணைப்பாளர் வாக்கை
ரத்து செய்தார். ஒரு  எழுத்தாளர் இறந்து விட்டால் அவர் நூல் இரு ஆண்டுகள்
பரிசுக்கு கருதப்படலாம். அப்படித்தான் சி சு செல்லப்பாவின் ‘சுதந்திர
தாக’த்துக்குப் பரிசு அளிக்கப்பட்டது.
பல
வெளிநாட்டுப் பிரசுரங்களில் கநாசுவின் கவிதைகள், மொழிபெயர்ப்புகள்
வெளிவந்திருக்கின்றன. அவரைப் பற்றிய ஒரு குறிப்பிலும் பரிசுகள் பற்றி
இருக்காது. அவர் பரிசு பெற்ற அடுத்த ஆண்டில் புதுமைப்பித்தனுக்கு
டில்லியில் ஒரு தேசியக்  கருத்தரங்கு நடத்தினார். ஒரு தற்கால அல்லது நவீன
தமிழ் எழுத்தாளருக்கு
இந்தியாவின் தலைநகரத்தில் ஒரு தேசியக் கருத்தரங்கு நடந்தது அதுவே
முதன்முறை. அந்த ஆண்டு இறுதியில் ஒரு மொழிபெயர்ப்புப்  பயிற்சி
நிகழ்சிக்காகச சென்னையிலிருந்து  டில்லி சென்றார். நான்கு நாட்களில் இறந்து
விட்டார். அவர் இறந்த பின் டி எஸ் வி கோயில் தெரு வீடு
காலிசெய்யப்பட்டது.
கநாசு எந்தப் பதவியும் வகிக்கவில்லை. பத்திரிகைத்
துணை ஏதும் கிடையாது. அவருடைய உடையையும் தோற்றத்தையும் கண்டு சாதாரண
கடைநிலை ஊழியர் கூட முறையாகப்  பதில் சொல்ல மாட்டார். கநாசு பிற எழுத்தாளர்
படைப்பு பற்றிய கருத்துகளை மெல்லிய குரலில்தான் சொல்வார். தான் விமர்சகன்
அல்ல
என்று அவர் திரும்பத்திரும்பக் கூறினாலும் அவருடைய அபிப்பிராயங்களுக்கு
மிகுந்த மதிப்பு இருந்தது. அதனாலேயே அவருக்கு நிறைய எதிரிகளும் உண்டு. நகுலன்  ஒரு கவிதை எழுதியிருக்கிறார்..
 
கனாசுவா? தமிழே தெரியாதே!
அவர் சிறுகதை எழுதித் தோற்றவர்.
நாவல் சுத்தமாக எழுத வராது.
கவிதையோ படு  அபத்தம்.
அது சரி, அவர் என் நாவல் பற்றி என்ன சொன்னார்?
 
தன
படைப்புகளைக் கநாசு சிறிதும்  ஏற்றுக்கொள்ளாத போதும் கநாசு மீது உண்மையான
அக்கறை கொண்ட ஓர்  எழுத்தாளர் நா பார்த்தசாரதி அவர்கள். கநாசு மறைவை விட
அற்பாயுளில் நா.பா போனதில் எனக்குப்  பெரிய இழப்பு.
(நன்றி :
ஆழம்,சென்னை,ஜூலை 4, 2013)   .