க.நா.சு.வின் கடைசி இருபது ஆண்டுகள்

அசோகமித்திரன்
 
 க.நா.சுப்ரமணியன் 1965ல் ஒரு பெரிய முடிவு எடுக்க வேண்டியிருந்தது. ஓராண்டு ‘இலக்கிய வட்டம்’ என்ற பத்திரிகையை நடத்தி, நிறுத்தியாயிற்று.
அவர் எழுதிப் பிரசுரம் செய்ய உறுதியான எதிபார்ப்புகள் அதிகம்  இல்லை.
வானொலிப் பக்கம் அவரை அழைக்கவே கூடாது என்று அங்கு உயர்
பதவியில் இருந்த ஒரு வெகுஜன எழுத்தாளர் உறுதி செய்து விட்டார். கநாசுவைப்
பிரசுரம் செய்த வெளியிட்டாரிடம் கநாசு நூல்களை வெளியிட்டால் தன நூல்களை
வேறிடம் தந்து விடுவேன் என்று எச்சரிக்கை விட்டார். வாலாஜா சாலையில்
குடியிருந்த கநாசு, ஆங்கிலத்தில் எழுதிப்பார்க்கலாம் என்று வீட்டைப்
பூட்டிவிட்டு டில்லி சென்றார்.
கநாசு
முதலிலிருந்தே ஆங்கிலத்தில் எழுதியிருந்தால் ஒரு வேளை ஓர் ஆங்கில
எழுத்தாளராகப் பெயர் எடுத்திருக்கலாம் . அவருடைய ‘அவதூதர்’ நாவலை
ஆங்கிலத்திலும் எழுதி ஆங்கிலப் பிரதியை அமெரிக்க ராண்டம் ஹவுஸ் கம்பெனி
நடத்திய ஒரு போட்டிக்கு  அனுப்பினார். பரிசு கிடைக்கவில்லை. ஆனால் அவர்கள் அதைப்
பிரசுரத்துக்கு ஏற்றுக்கொண்டு ஒரு முன்தொகைக் காசோலையும் அனுப்பினார்கள்.
(அந்தக் காசோலையை நான் பார்த்தேன்.) ஒரு நிபந்தனை. நாவலில் உள்ள அற்புத
நிகழ்ச்சிகளை அவர் விலக்கித் தரவேண்டும். கநாசு ஒப்புக்கொள்ளவில்லை. அவதூதர் பாத்திரம்  ஒரே
சமயத்தில் இரு இடங்களில் இருப்பது போல ஓரிடம் இருந்தது; அதை விலக்கி
இருக்கலாம்..அவர்கள்
ஆங்கிலப் பிரதியைத் திருப்பி அனுப்பிவிட்டார்கள். இதற்குள் கநாசுவின்
தமிழ்ப் பிரதி தொலைந்து விட்டது.
கநாசு
டில்லியில் பல ஆங்கிலக்கட்டுரைகள் எழுதினார். சரண் சிங் நடத்திய ‘ரியல்
இந்தியா’ என்ற பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்தார். அவருக்காக சின்னமனூர்
சென்று ஒரு கட்டுரை எழுதினேன். என்னுடைய ஒரு சிறுகதையைக் கூட அவர்
பிரசுரித்தார்.
 
.இந்திரா காந்தி 1980ல்
மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடனேயே கநாசு சென்னை வந்து விட்டார். கடைசி
ஏழெட்டு ஆண்டுகள் சென்னை மயிலை டி எஸ் வி கோவில் தெருவில் இருந்தார். அதே தெருவில் வசித்த பாவை சந்திரன் அவர்களுடன் அப்போதுதான் பழக்கம் ஏற்பட்டது.
இவ்வளவு படித்தும் எழுதியும் இருந்த
முதியவர்  ஒரு தோரணையும்  இல்லாமல் எல்லோருடனுடனும் பழகியது எவரையும்
ஆச்சரியத்தில் ஆழ்த்தும். ஓராண்டுக்குள் ‘குங்குமம்’ பத்திரிகையிலும்
‘தினமணி கதிர்’ பத்திரிகையிலும், ஐம்பதுக்கும் மேற்பட்ட கட்டுரைகள்
இந்திய வரலாற்று நாயகர்கள் மற்றும் மறுமலர்ச்சி சிந்தனையாளர்கள் பற்றியும்  எழுதினார். மிர்சா காலிப், வித்யாசாகர் பற்றி அவர் எழுதிய
கட்டுரைகள் மிகவும் சிறப்பானவை. பின்னர் அவர் ‘தினமணி கதிர்’ இதழில் ஒரு
தொடர் கதை எழுதினார். அந்த ஐந்தாறு ஆண்டுகளில் அவருடைய பல முக்கியமான
நாவல்கள் வெளிவந்தன. ‘பித்தப்பூ,’ கோதை சிரித்தாள்.’ தாமஸ் வந்தார்,’
‘அவதூதர்’ ஆகிய நூல்கள் வெளிவந்தன. (ஒரு விசித்திரம். ‘அவதூதர்’ நாவலுக்கு
அவரிடம் ஆங்கிலப் பிரதிதான் இருந்தது. அதை லதா ராமகிருஷ்ணன் அவர்கள்
தமிழில்
மொழிபெயர்த்தார்கள்!) இவை தவிர அவருடைய முந்தைய நாவல்களை மூன்று அல்லது
நான்காகச் சேர்த்து நூல்கள் வந்தன. பேசிய தொகையே குறைவு.
 . .
கநாசு
டில்லியில் இருந்தபோது  பல ஆங்கில நூல்களைப் பொறுப்பாசிரியராக வெளியிடக்
காரணமாக இருந்தார். ஒன்று கூட அவருடையது இல்லை. பதிமூன்றே நாட்களில்
இந்திரா பார்த்தசாரதியின் ‘குருதிப்புனல்’ நாவலை ஆங்கிலத்தில்
மொழிபெயர்த்து விகாஸ் பதிப்பகத்தாரிடம் கொடுத்தார். “இவ்வளவு அவசரம் ஏன்?’
என்று நான் கேட்டேன்.
“தாமதம் செய்தால் ஒரு வேளை  அவர்கள் மனது மாறிவிடும்,” என்றார். இன்னொரு
பதிப்பகத்தாரிடம் ‘தந்திர பூமி’ நாவலை ஆங்கிலத்தில் வெளியிடக் கொடுத்தார்.
அவர் பிறர் கதைகளைத் தொகுத்து மூன்று நூல்கள் வெளியிட்டார். ‘இவ்வளவு நல்ல
தெலுங்கு, கன்னடக் கதைகளை எங்கிருந்து கண்டு பிடித்தார் என்று ஆச்சரியமாக
இருந்தது..
 
அன்று
சாகித்ய அகாதமி விதிகளின்படி ஒருவரின் நூல் வெளிவந்து மூன்றாண்டுகள்தான்
பரிசுக்குக் கருதப்படும். ஒருங்கிணைப்பாளருக்கும் வாக்கு
உண்டு. ஆதலால் மற்ற இருவரில் ஒருவர் வாக்குக கிடைத்தால் போதும். அப்போது
நா பார்த்தசாரதி அகாதமியில் முக்கியமானவராக இருந்தார். அவர்
இருந்ததால்தான் தி
ஜானகிராமன், அழகிரிசாமி, ஆதவன் மற்றும் கநாசு ஆகியோருக்குப் பரிசு
கிடைத்தது. ஆதவன், அழகிரிசாமிக்கு அவர்கள் காலமான பிறகு அளிக்கப்பட்டது. கநாசுவுக்குப் பரிசு அறிவிக்கப் பட்டபோது (1986 December)
அவர் சென்னை குடிவந்து பல ஆண்டுகள் சென்றுவிட்டன. (இப்போது அகாதமி பரிசு
விதிகள் மாற்றப்பட்டுவிட்டன. யு ஆர் அனந்தமூர்த்தி தலைவரானதும் செய்த முதல் காரியம் ஒருங்கிணைப்பாளர் வாக்கை
ரத்து செய்தார். ஒரு  எழுத்தாளர் இறந்து விட்டால் அவர் நூல் இரு ஆண்டுகள்
பரிசுக்கு கருதப்படலாம். அப்படித்தான் சி சு செல்லப்பாவின் ‘சுதந்திர
தாக’த்துக்குப் பரிசு அளிக்கப்பட்டது.
பல
வெளிநாட்டுப் பிரசுரங்களில் கநாசுவின் கவிதைகள், மொழிபெயர்ப்புகள்
வெளிவந்திருக்கின்றன. அவரைப் பற்றிய ஒரு குறிப்பிலும் பரிசுகள் பற்றி
இருக்காது. அவர் பரிசு பெற்ற அடுத்த ஆண்டில் புதுமைப்பித்தனுக்கு
டில்லியில் ஒரு தேசியக்  கருத்தரங்கு நடத்தினார். ஒரு தற்கால அல்லது நவீன
தமிழ் எழுத்தாளருக்கு
இந்தியாவின் தலைநகரத்தில் ஒரு தேசியக் கருத்தரங்கு நடந்தது அதுவே
முதன்முறை. அந்த ஆண்டு இறுதியில் ஒரு மொழிபெயர்ப்புப்  பயிற்சி
நிகழ்சிக்காகச சென்னையிலிருந்து  டில்லி சென்றார். நான்கு நாட்களில் இறந்து
விட்டார். அவர் இறந்த பின் டி எஸ் வி கோயில் தெரு வீடு
காலிசெய்யப்பட்டது.
கநாசு எந்தப் பதவியும் வகிக்கவில்லை. பத்திரிகைத்
துணை ஏதும் கிடையாது. அவருடைய உடையையும் தோற்றத்தையும் கண்டு சாதாரண
கடைநிலை ஊழியர் கூட முறையாகப்  பதில் சொல்ல மாட்டார். கநாசு பிற எழுத்தாளர்
படைப்பு பற்றிய கருத்துகளை மெல்லிய குரலில்தான் சொல்வார். தான் விமர்சகன்
அல்ல
என்று அவர் திரும்பத்திரும்பக் கூறினாலும் அவருடைய அபிப்பிராயங்களுக்கு
மிகுந்த மதிப்பு இருந்தது. அதனாலேயே அவருக்கு நிறைய எதிரிகளும் உண்டு. நகுலன்  ஒரு கவிதை எழுதியிருக்கிறார்..
 
கனாசுவா? தமிழே தெரியாதே!
அவர் சிறுகதை எழுதித் தோற்றவர்.
நாவல் சுத்தமாக எழுத வராது.
கவிதையோ படு  அபத்தம்.
அது சரி, அவர் என் நாவல் பற்றி என்ன சொன்னார்?
 
தன
படைப்புகளைக் கநாசு சிறிதும்  ஏற்றுக்கொள்ளாத போதும் கநாசு மீது உண்மையான
அக்கறை கொண்ட ஓர்  எழுத்தாளர் நா பார்த்தசாரதி அவர்கள். கநாசு மறைவை விட
அற்பாயுளில் நா.பா போனதில் எனக்குப்  பெரிய இழப்பு.
(நன்றி :
ஆழம்,சென்னை,ஜூலை 4, 2013)   .                          

One Reply to “க.நா.சு.வின் கடைசி இருபது ஆண்டுகள்”

  1. க.நா.சுவின் எல்லாக் கதைகலையும் கட்டுரைகளையும் தனித் தொகுதிகளாக விருட்சமோ வேறு பதிப்பகத்தாரோ கொண்டு வரலாம். தமிழ் இலக்கியத்துக்கும் ரசனைக்கும் அவர்கள் செய்யும் சேவையாக அது திகழும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *