ஐராவதம் பக்கங்கள்

இலக்கியத்தின் முதுமை
எனக்கு இப்போது அறுபதைந்து வயதாகிறது.  வங்கியில் ஓய்வுபெற்று ஓய்வூதியம் பெற்று வருகிறேன்.  தெருவில் இறங்கி நடக்கும்போதெல்லாம் என்னைவிட முதியவர்களைத்தான் எதிர்கொள்கிறேன்.  வாலிபர்களும், யுவதிகளும் சைக்கிள், ஸ்கூட்டர் மோட்டார்கார் முதலிய வாகனங்களில் பயணிக்கிறார்களோ என்னவோ?
சமீபத்தில் எழுபத்தோரு வயது நிரம்பிய ஒரு நண்பரை தற்செயலாக சந்தித்தேன்.  அந்தக் காலத்தில் தீபம், கணையாழி முதலிய இலக்கிய பத்திரிகைகளின் வாசகர்.  காஞ்சிபுரம் நகரத்துக்காரர்.  புனேயில் ராணுவ கணக்குப் பிரிவில் பணியாற்றி ஓய்வுபெற்று கணிசமான ஓய்வூதியம் பெறுபவர்.  மாம்பலம் ஒட்டியுள்ள அசோக்நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் சொந்தக்காரர்.  மனைவியுடன் வசித்து வருகிறார்.  இவருக்கு இரு மகன்கள்.  இருவரும் உயர்கல்வி பயின்று அமெரிக்காவில் பத்தாண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறார்கள்.  அவர்கள் அமெரிக்கா குடியுரிமைப் பெற்று விட்டார்கள்.  இந்தியாவிற்கு திரும்பி வரும் உத்தேசமில்லை.  நண்பர் அமெரிக்கா போய் முறையே நியூஜெர்ஸி நகரில், டல்லாஸ் நகரில் ஆறு ஆறு மாதங்கள் கழித்துவிட்டு இந்தியா திரும்பி விட்டார்கள்.  
நியுஜெர்ஸியில் வசிக்கும் மூத்த மகன்,”அப்பா நீ இங்கேயே பிராணனைவிட்டால் நான் மின் யந்திரத்தில் உன்னைத் தகனம் செய்கிறேன்,” என்று கூறியிருக்கிறான்.  ஆனால் மனிதருக்கு அங்கு இருப்பு கொள்ளவில்லை.  இந்தியா திரும்பி விட்டார். என்னிடத்தில் சொன்னார். : “தம்பி, எனக்கு மரணம் நெருங்கி விட்டது.  நான் கண்ணம்மா பேட்டையில், (தியாகராயநகரின் சுடுகாட்டுப் பகுதி) எரிக்கப்படவே விரும்புகிறேன்,” என்றார்.  
இது விரக்தியனாலோ வெறுப்பினாலோ சொல்லப்பட்ட வார்த்தைகள் இல்லை.  நிறை வாழ்வு வாழ்ந்துவிட்ட திருப்தியில் மரணத்தை ஏற்றுக்கொள்கிற விதமாக கூறப்பட்ட வார்த்தைகள்.  அவருக்கு வாழ்க்கையின் மீதான பற்று இன்னும் நீங்கவில்லை என்பதற்கான அறிகுறிகள் எனக்கு எதிரிலேயே ஒரு செயல் புரிந்தார்.  அந்த வார குமுதம் பத்திரிகையை கடையில் வாங்கி பையில் தயாராக வைத்திருந்த தபால் கார்டில் அதில் வெளியாகியிருந்த ஒரு சமாசாரத்தின் எதிர் வினையாக நாலு வரிகள்எழுதி தபால் பெட்டியில் போட்டார்.  குமுதம் ஆசிரியருக்குக் கடிதங்கள் பகுதியில் தன் பெயர் பிரசுரமாவதைப் பார்க்க குழந்தைத் தனமான ஆசை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *