வேப்பம்பூக்களுக்காகக் காத்திருக்குமொருத்தி

 

எம்.ரிஷான் ஷெரீப்

 

மழையுமற்ற கோடையுமற்ற
மயானப் பொழுது

இலைகளை உதிர்த்துப்
பரிகசிக்கிறது

வேனிற்காலத்தைப் பின்னிக்
கிடக்குமொரு

மலட்டு வேப்ப மரத்திடம்

நீவியழித்திடவியலா

நினைவுச் சுருக்கங்கள்
படர்ந்திருக்கும்

நீயொரு மண்பொம்மை

உனது கண் பூச்சி

செவி நத்தை

கொல்லை வேலியொட்டிப்
புறக்கணிக்கப்பட்டிருக்கும்

உன்னிடமும் வேம்பிடமும்

இவையிரண்டும் என்ன
உரையாடுகின்றன

திசைகளின் காற்று

விருட்சத்துக்குள்
சுழல்கிறது

தன் மூதாதையர் நட்ட
மரத்தில் இதுவரை

ஆசைக்கேனுமொரு பூப்
பூக்கவில்லையென

தொலைவிலிருந்து வந்த
புதுப் பேத்தியிடம்

கதை பகர்கிறாள் மூதாட்டி

வேப்பமரத்தடி வீடெனத்
தன் வீட்டிற்கேவோர்

அடையாளம் தந்திருக்கும்
மரத்தை

வெட்டியகற்ற மறுக்கிறாள்
கிழவியென

மருமகளொருத்தி முணுமுணுக்குமோசையை

சமையலறை ஜன்னல் காற்று

உன்னிடம் சேர்க்கிறது

மனித ஓசைகள் கேட்டிடக்
கூடாதென

காதுகளை மீண்டும்

நத்தைகளால் அடைத்துக்
கொள்கிறாய் – பிறகும்

கண்களை மூடும் பூச்சிகள்
தாண்டி

வேப்பம்பூக்களுக்காகக்
காத்திருக்கிறாய்

 

ரோபோக்களின் இசைநிகழ்ச்சி

லாவண்யா
 
அப்போது
நம்மால் அடக்கமுடியவில்லை
அப்போது
நமக்கு வேறு நினைப்பேயில்லை
அதற்கு 
நாம் ஆசைப்பட்டிருக்க்கஃகூடாது
இப்போது
அப்படித்
தோன்றுகிறது
நம் கதை
நெருப்பையணைக்க நெய்யூற்றியவன் கதை
நம் கதை
தேனில் விழுந்த ஈயின் கதை
எப்போதோ நாம்
பிறவிப்பெருங்கடலில் மூழ்கிப்போனோம்
மாயச்சுழலில்
மூச்சுத்திணறும் வேளையில்
ஆன்மீகச் சொற்பொழிவைக்
கேட்கப்போகலாமென்கிறாய்
பொக்கைவாயன்
முறுக்கு தின்ன ஆசைப்பட்டானாம்
இனிமேல்
நாம்
ஆன்மாவையறிந்து என்ன செய்யப்போகிறோம்?
வந்த்தை மகிழ்விக்க
வாய்த்த்தை கடைத்தேற்ற
நாலுகாசுக்கு
நாயாயலைந்து
சாத்தான்களுடன்
சமரசம் செய்துகொண்டபோது
நம் ஆன்மாவை
நாம்தான் தொலைத்துவிட்டோமே?
இந்திரசபையில் ஓல்ட்மாங்க்
நமக்காக்கஃ காத்திருக்கிறார்
அகாதெமியில் இன்றிரவு
ரோபோக்களின் இசைநிகழ்ச்சி
நான் என்ன சொல்கிறேனென்றால்
சத்யநாதா……….
 

எதையாவது சொல்லட்டுமா……89

அழகியசிங்கர்

    சி சு செல்லப்பா கூட்டம் ஒன்று ஜனவரி மாதம் நடந்தது.  அதில் கலந்துகொள்ள அவர் வந்திருந்தார்.  சி சு செல்லப்பாவின் நெருங்கிய நண்பர்.  செல்லப்பாவின் எழுத்து பத்திரிகையில் எழுதியவர்.  அவர் நடந்து வரும்போது யாரோ ஒருவர் அவரைத் தாங்கிப் பிடித்துக் கொண்டு வரும்படியாக இருந்தது.  முறுக்கிய மீசையுடன் கம்பீரமாகக் காட்சி அளிப்பவர்.  பேசும்போது தயங்கி தயங்கி பேசுவதுபோல் இருந்தாலும், யாரும் அவரது பேச்சை ரசிப்பார்கள்.  கிட்டத்தட்ட 75 வயதாவது அவருக்கு இருக்கும்.  தமிழில் சிறந்த சிறுகதைகளை எழுதியவர்.  ஆனால் அவர் தன்னை சிறுகதை எழுத்தாளர் என்று சொல்லிக்கொள்ள விரும்பமாட்டார் என்று நினைக்கிறேன்.  நாடகத்தில் தீவிரமாக கவனம் செலுத்துபவர்.  ஒவ்வொரு நடிகனும்  வசனம் பேசும்போது எப்படி உச்சரிக்க வேண்டுமென்பதில் அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்.  கூட்டத்தில் கலந்துகொண்ட அவர் சி சு செல்லப்பாவை குறித்து தன் எண்ண ஓட்டத்தைத் தெளிவாகப் பேசினார்.   அவரின் கம்பீரமான குரலுக்கு எந்தக் குறையும் இல்லை. ஆனால் அன்று அவர் துணையுடன் நடந்து வந்ததுதான் எனக்கு உறுத்தலாக இருந்தது.


    இன்னொரு எழுத்தாள நண்பர், அவருக்கு 68 வயதாகிறது.  ஆனால் வீட்டிலிருந்து தனியாக வெளியே வர பயப்படுகிறார்.  யாராவது ஒருவர் அவரை அழைத்துக்கொண்டு போக வேண்டும்.  என் வீட்டு பக்கத்திலிருக்கும் சரவணாபவன் ஓட்டலுக்கு இரண்டுமுறை அழைத்துக்கொண்டு போனேன்.  அங்கு இரண்டு முறையும் அவருக்குப் பிரச்சினை ஆகிவிட்டது. தலை கிறுகிறுவென்று சுற்றி ஓரிடத்தில் உட்கார்ந்து விட்டார்.  ஒரு மாத்திரை பெயரைக் குறிப்பிட்டு உடனே வாங்கிக் கொண்டு வரச் சொன்னார்.  நானும் வாங்கிக்கொண்டு வந்தேன்.  அதைச் சாப்பிட்ட பிறகே அவர் நிதானத்திற்கு வந்தார். அவரை வீட்டிற்கு அழைத்துக்கொண்டு போனால் போதுமென்றாகி விட்டது. 

    நான் மேலே குறிப்பிட்ட இரண்டு இலக்கியப் படைப்பாளிகளும் வெளியே எல்லா இடங்களுக்கும் தனியாக செல்பவர்கள். பல இலக்கியக் கூட்டங்களில் கலந்து கொண்டவர்கள். 

    என் அப்பாவிற்கு 91வயது.  அவர் என் வீட்டு கீழ் பகுதிக்கு மாடிப்படிகளில் ஜாக்கிரதையாக இறங்கி தினமும் நடப்பார். யார் உதவியும் இன்றி.  சமீப காலமாக அவரால் அப்படியெல்லாம் நடக்க முடியவில்லை.  வீட்டிற்குள்ளேயே நடந்து கொண்டிருக்கிறார்.  வெளியே வரமுடியவில்லை. “இனிமேல் தாக்குப் பிடிப்பது சிரமம்,” என்று தினமும் சொல்லிக்கொண்டு வருகிறார்.  “நான் அடுத்த வருடம் பிப்பரவரி மாதம் ரிட்டையர்ட் ஆகிவிடுவேன்.  அதுவரை உங்களுக்கு ஒன்றும் ஆகக் கூடாது,” என்று நானும் பதிலுக்குச் சொல்வேன்.

    சமீபத்தில் ‘பயோக்லிட்டசோன்’ வகை மாத்திரைகளுக்கு அரசாங்கம் தடை விதித்திருந்தது.  நீரழிவு நோயாளியான நான் ஐந்தாறு ஆண்டுகளாக சாப்பிட்டுக்கொண்டிருந்தது பயோக்லிட்டசோன் வகை மாத்திரை என்பதை மருந்து கடைகளில் அந்த மாத்திரை கிடைக்காமல் போனதிலிருந்து தெரிந்தது.  இம் மாத்திரையைத் தொடர்ந்து சாப்பிட்டால் நோயாளிகளுக்கு புற்றுநோய் வரும் என்று ஒரு சாராரும், இன்னும் சிலர் அப்படி இல்லை என்றும் கருத்து தெரிவித்திருந்தார்கள்.  என் நிலை தர்மசங்கடமாகப் போயிற்று.  நீரழிவு நோயை கட்டுப்படுத்த பல மருத்துவர்கள் நான் இருந்த பகுதியில் இருந்தாலும், நான் போய்ப்  பார்ப்பதற்கு சங்கடப் பட்டுக்கொண்டிருந்தேன்.  சில நாட்கள் மாத்திரை எதுவும் சாப்பிடாமல் வேறு இருந்தேன்.   திடீரென்று மொட்டை மாடிக்குச் சென்று  காலையில் அரை மணி நேரம் நடக்க ஆரம்பித்தேன்.  சாப்பிடும்போது கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட ஆரம்பித்தேன்.  நான் இதையே யோசனை செய்து கொண்டிருந்ததால் நீரழிவு நோயும், ரத்தக் கொதிப்பும் அதிகமாகிவிட்டது. 

    என் வாழ்க்கையில் மூன்று பேர்களை நான் சந்திக்க வேண்டாமென்று நினைப்பதுண்டு.  ஒருவர் மருத்துவர், இன்னொருவர் போலீஸ்காரர், மூன்றாமவர் வக்கீல்.  ஆனால் ஒவ்வொருவரும் அவரவர் வாழ்க்கையில் எதாவது ஒரு சந்தர்ப்பத்தில் இவர்களை சந்திக்காமல் இருக்க முடியாது.  இன்றைய பிரச்சினை நிறைந்த உலகத்தில் இவர்கள் தயவு இல்லாமல் வாழ முடியாது.  ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒரு நல்ல மருத்துவர், ஒரு நல்ல போலீஸ்காரர், ஒரு நல்ல வக்கீல் கிடைக்க வேண்டும். 

    ஒருமுறை பள்ளிக்கூட நண்பர்களுடன் அண்ணாதுரை மரணம் அடைந்த தருணத்தில் அவருடைய சமாதியைப் பார்க்கச் சென்றேன்.

சமாதியைப் பார்த்துவிட்டு மெரினா கடற்கரையில் கடல் நீரில் விளையாடிக் கொண்டிருந்தோம்.  என் சட்டை முழுவதும் கடல் நீரில் நனைந்துவிட்டதால், சட்டையைக் கழற்றி தண்ணீர் போவதற்குப் சட்டையைப் பிழிந்து கொண்டிருந்தேன்.  என்னுடன் வந்திருந்த சக மாணவன் என் சட்டையைக் கேட்டதால் கொடுத்தேன்.  அவன் வேண்டுமென்றே என் சட்டையை கடலில் வீசி எறிந்து விட்டான்.  நான் படித்துக்கொண்டிருந்தது துளூவ வேளாளர் பள்ளிக்கூடம்.  அங்கு குறும்பு செய்யும் மாணவர்கள் அதிகம் உண்டு. அந்தச் சட்டை எனக்கு திரும்பவும் கிடைக்கவில்லை  எனக்கு ஒரே வருத்தம். சட்டை இல்லாமல் எப்படி வீட்டிற்குள் நுழைவது என்ற அச்சமும் கூட இருந்தது.  குளிரில் வெடவெடவென்று நடுங்கியபடி நான் தங்கசாலையில் உள்ள என் வீட்டை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தேன்.  அப்போது காவலில் நின்று கொண்டிருந்த போலீஸ்காரர் ஒருவர் என்னைக் கூப்பிட்டார்.  நான் நடுங்கி விட்டேன்.  போலீஸ்காரர் என்கிற அச்சம்தான்.  என் பெயரை அவர் கேட்க, பெயரைச் சொன்னேன்.  எந்த வகுப்பில் எந்தப் பள்ளிக்கூடத்தில் படிக்கிறாய் என்று கேட்க, அதற்கும் பதில் சொன்னேன்.  அவர் என்னை வழி அனுப்பும்போது, “ஏன் இப்படி ஒல்லியாய் இருக்கிறாய்.. நல்லா சாப்பிடு…உடம்பை தேத்து,” என்று அறிவுரை கூறி அனுப்பினார்.  என்ன வித்தியாசமான போலீஸ்காரராக இருக்கிறாரே என்று நினைத்துக்கொண்டேன்.  
      
    நாங்கள் பவளக்காரத் தெருவில் குடியிருந்தபோது எப்போதும் நான் தெருவில்தான் காலையில் மூத்திரம் போவேன்.   ஒருமுறை அப்படிப் போய்க்கொண்டிருக்கும்போது, üதம்பி, போலீஸ் ஸ்டேஷனுக்கு வா,ýý என்ற குரல் கேட்டது.  பின்னால் ஒரு போலீஸ்காரர் நின்று கொண்டிருந்தார். அவர் பின்னால் பார்த்தால் பெரிய கும்பலே அந்தப் போலீஸ்காரரைத் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது.  நான் செய்தது தவறு என்று அப்போதுதான் பட்டது.  நான் போலீஸ் ஸ்டேஷன் போகிறேன் என்பதை என் வீட்டாருக்குத் தெரிவித்து விட்டு போலீஸ்காரருடன் சென்று கொண்டிருந்தேன்.  போலீஸ் ஸ்டேஷன் வாசலில் நாங்கள் கும்பலாக நின்று கொண்டிருந்தோம்.  எல்லோரும் தெருவில் மூத்திரம் போன குற்றத்திற்காக நின்று கொண்டிருந்தோம்.  சிறிது நேரத்தில் என் அப்பா அங்கு வந்தார்.  அவர் என்னை அனுப்பிவிட்டு எனக்குப் பதிலாக அவர் அங்கு நின்று கொண்டார். 

    பின் நீதிபதி முன் நான் சொல்வதற்குப் பதிலாக அவர் மூத்திரம் போனதாக ஒப்புக்கொண்டு அபராதம் கட்டிவிட்டு வந்தார்.

    ரெட்டியப்பட்டி சுவாமிகளின் கூட்டம் என் வீட்டில் முன்பெல்லாம் நடக்கும்.  ரெட்டியப்பட்டி சுவாமிகளின் முக்கியமான அறிவுரை.  உடம்பில் எதாவது நோய் வந்தால் மருத்துவர்களை அணுகக் கூடாது என்பது.  தானாகவே அந்த நோய் போய்விடும் என்பதில் அவருக்கு அசைக்க முடியாத நம்பிக்கை.  சுவாமிகளின் பக்தர்கள் சிலர் அவர்களுக்கு ஏற்பட்ட உடல் உபாதைகள் எப்படி தானகவே விலகியது என்பதை எனக்குச் சொல்லியிருக்கிறார்கள்.  ஆனால் சர்க்கரை நோயிலிருந்தும், இரத்த அழுத்த நோயிலிருந்தும் அப்படியெல்லாம் விடுதலை கிடைக்குமா?  எனக்குத் தெரிந்த ஒருவர், சர்க்கரை நோயால் அவதிப் படுபவர், மயிலாடுதுறையில் உள்ள ராஜன் தோட்டத்தில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் வேகமாக நடந்து நடந்து போவார்.  üநான் எந்த மாத்திரையும் சாப்பிடுவதில்லை.  இந்த நடைதான் எனக்கு முக்கியம்,ý என்று கூற கேட்டிருக்கிறேன்.

    2011ஆம் ஆண்டு ஜøலை மாதம் நானும் மனைவியும் அமெரிக்கா செல்ல தீர்மானித்திருந்தோம்.  அங்கு போவதற்கு டிக்கெட்டெல்லாம் வாங்கிவிட்டோம்.  அடுத்தநாள் காலையில் கிளம்புவதற்குமுன் ஒரு மருத்துவரைப் பார்த்து என்னன்ன மருந்துகள் சாப்பிடுகிறேன் என்று ஒரு மருந்து சீட்டு வாங்கிக் கொண்டு வரும்படி பையன் குறிப்பிட்டிருந்தான். அமெரிக்காவில் மருத்துவச் செலவிற்கு அதிகமாக செலவு செய்ய வேண்டுமாம். கிளம்புவதற்கு முதல் நாள் ஒரு மருத்துவரைப் போய்ப் பார்த்தேன்.  அவர் எனக்கு தேவையில்லாத பரிசோதனைகளைச் செய்தார்.  நான் ஏற்கனவே சாப்பிட்டுக் கொண்டிருந்த மாத்திரைகளை மாற்றி எழுதினார்.  ”நீங்கள் அமெரிக்கா போவது, ஆபத்து,” என்றார்.  எனக்குப் பெரிய அதிர்ச்சியாகப் போய் விட்டது. 

    நான் அடுத்தநாள் பிரிட்டிஷ் ஏர்வேஸில் ஏறிப் போகவேண்டும். அந்தச் சமயத்தில் ஏன் இப்படி ஒரு மருத்துவரைப் பார்த்தோம் என்று தோன்றியது.  போகாமல் இருந்து விடலாமா என்று யோசித்தேன். அது முட்டாள்தனம் என்று தோன்றியது.  அமெரிக்கா போவதற்கு பல மாதங்களாக திட்டமிட்ட நிகழ்ச்சி.  அவர் சொன்ன மருந்துகள் எதுவும் சாப்பிடவில்லை. வாங்கவும் இல்லை.  ஏற்கனவே சாப்பிட்டுக் கொண்டிருந்த மருந்துகளை மட்டும் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.

அமெரிக்கா போய்விட்டு ஒருமாதம் இருந்துவிட்டு வந்துவிட்டேன்.  அங்கு இருந்தபோது, அந்த மருத்துவர் சொன்னது ஞாபகத்தில் வந்து உறுத்திக்கொண்டே இருந்தது.  அங்கு காலையில் எழுந்தவுடன் நடக்க ஆரம்பிப்பேன்.  நான் ஒருவன்தான் அங்குள்ள வீதிகளில் நடந்து கொண்டிருப்பேன்.  அப்போது நான் சாப்பிட்டுக் கொண்டிருந்தது ‘பயோக்லிட்டசோன்’ மாத்திரை என்று தெரியாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்ததுதான்.

    சமீபத்தில் நான் அசோக்நகரில் உள்ள அனுமார் கோயில் பக்கத்திலுள்ள சர்க்கரை நோயாளிகளை பிரதானமாக கவனிக்கும் ஒரு மருத்துவரைப் பார்த்து வேறு மருந்துகளை வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்.  சர்க்கரையின் அளவையும், ரத்த அழுத்தத்தையும் தினம் தினம் நானே கருவிகள் மூலம் பரிசோதனை செய்து பார்க்கிறேன்.  மாத்திரைகள் மூலம் இல்லாமல் தானாகவே எல்லாம் சரியாக வேண்டும்.  ரெட்டியப்பட்டி சுவாமியின் ஆசிகள் வேண்டும்.

       (அக்டோபர் 2013 அம்ருதா இதழில் வெளிவந்துள்ளது.)

வரட்டும்


அழகியசிங்கர் 








சந்திரமௌலி என்பவர்
அங்கிருந்து இங்கு வருகிறார்
இங்கிருந்து அங்கு போகிறார்

பென்சன்காரர்கள்
எங்கே எங்கே எங்கே
என்று கேட்கிறார்கள்

அவர்
ஆமாம் ஆமாம் ஆமாம் என்கிறார்

யாருக்கும் எந்தத் தீர்வும் கிடைப்பதில்லை
குறையில்லாத மனிதர்களும் இல்லை
2014 பிப்ரவரி மாதம் பின்பு
இவரும் பென்சன்காரர்தான்
                                (25.09.2013) 




A. Thiagarajan

 
 

கண்ணாடி

 
கண்ணால் காண்பதும் பொய் …
கண்டதே காட்சி …
கண்ணாலே பேசி பேசி ….
இன்னமும் எத்தனை 
கண்கள் சார்ந்தவை ?
வார்த்தைகள், பழமொழிகள், அறிவுரைகள் 
வழக்காடல்கள் புழக்கத்தில் …
பார்த்தலே நம்புதல்
விசிவிக்- 
நீ எதை பார்க்கிறாயோ அதுவே கிடைக்கும்  
என்ன பேசினாலும் 
எப்படி யோசனை செய்தாலும் 
கண்ணாலே பார்ப்பது போலாகுமா?
பகுத்தறிவாளனும் இதையே…
தினமும் இந்தப் 
பொய் நமக்கு அவசியம் 
வேண்டியிருக்கிறது…
நினைவு தெரிந்த நாளிலிருந்து 
இன்று வரை
நான் எனது  என்று நம்பும்
என் முகமல்லாத
வேரொரு பிம்பத்தை 
தவறாமல் தினமும்
எனக்கே காட்டும் இந்த கண்ணாடியை 
தவறாமல் தினமும்
நானும் பொய்யாய் கண்டும்-
ஒரு சந்தேகம் 
கண்ணாடி கண்டுபிடிக்குமுன்னர் 
எதைப் பார்த்துக் கொண்டிருதோம்?
பார்த்தல் என்பதுதான் நம்புதல் 
என்று ஆன பின்,  
அவை 
நம்பிக்கொண்டிருத்தல் என்பது 
அவசியமில்லாத நாட்களாக இருந்தன  
என்றுதான் கொள்ள வேண்டும் ?
நமக்குள்ளே இருக்கும் வேற்றுமைகளே 
நம்மை யுநீக் ஆக்குகின்றன 
என்ற போதே 
கண்ணாடிகள் வந்தனவோ 

பெண்

சா.தீபா
 
 
காணக் கிடைக்காத 
காவல்கள் எனக்காகவே 
காவலில்லாத வாயில்களில் 
காத்துக் கிடக்கும்!
 
 தெருவில் இறங்கித் 
தொடர்ந்து நடக்கத் 
தொடர்பில்லாத  கண்கள் 
துளைத்துத் தொலைக்கும்!
 
ஆடைகளின் சலசலப்பும் 
ஆரவாரமாய்த் தோன்றும்!
வசைமொழியில் வாய் நனைத்து 
வார்த்தைகள் கேட்கும்!
 
பேருந்து நிறுத்தம் வந்து 
பெருமூச்சு விடும் முன்பு 
பெருங்கூட்டம் கழுகாகி 
வெறித்துப்  பார்க்கும்!
 
சகித்துக்  கொண்டு 
சட்டென்று பேருந்திலேற 
சற்றுமுன்  பார்த்த கூட்டம் 
வேலை காட்டும்!
 
நிறுத்தம் வந்து 
நின்றிறங்கிய பின்பு 
அலுவலக வாயிலும் 
அப்படியே வரவேற்கும்!
 
இறந்த பகலின் 
இருளோடு வீடு வர 
சந்தேகமாய் சில முகங்கள் 
சேறிரைத்துப்  போகும்
 
என்ன செய்ய?
         பெண் என்று 
          பெயர் வைத்து விட்டானே??? 
                                                         

சில குறிப்புகள்…1

அழகியசிங்கர்

    21.09.2013 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு மையிலாப்பூரில் உள்ள கோகுலே ஹாலில் ஆரம்பித்து 80 ஆண்டுகள் முடிந்த மணிக்கொடி பத்திரிகைக்கு ஒரு கூட்டம் நடந்தது.  மணிக்கொடி எழுத்தாளர் சிட்டியின் புதல்வர் போனில் அழைத்ததால் சென்றேன்.  அரங்கத்தில் மணிக்கொடி எழுத்தாளர்களின் வாரிசுகள் இடம் பெற்றிருந்தனர்.  சிதம்பர சுப்பிரமணியன் புதல்வர்கள், இராமையாவின் புதல்விகள், சிட்டியின் புதல்வர்கள், சி சு செல்லப்பாவின் புதல்வர் என்று பலர் கலந்து கொண்டார்கள்.  கி.அ சச்சிதானந்தம், ம ராஜேந்திரன், மூத்த எழுத்தாளர் நரசய்யா, பேராசிரியை செந்தமிழ்ச் செல்வி என்று பலர் கலந்துகொண்டு மணிக்கொடி பத்திரிகைப் பற்றி பேசினார்கள். 


    நான் தலைமை அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த காலத்தில் மறைமலைநகர் நூலகத்திற்குச் சென்று மணிக்கொடி இதழ்களைப் பார்த்திருக்கிறேன்.  மணிக்கொடி எழுத்தாளர்களான சி சு செல்லப்பா, சிட்டி அவர்களுடன் பேசிப் பழகியிருக்கிறேன்.              கூட்டத்திற்கு பொருத்தமே இல்லாமல் சுப்பு என்பவர் பேசிக்கொண்டிருந்தார்.  பின்னார் மணிக்கொடி சம்பந்தமாக மேலே அறிவித்த பேச்சாளர்கள் ஒவ்வொருவராகப் பேசினார்கள்.  6 மணிக்கு ஆரம்பித்த கூட்டம் 8.30 வரை முடிவடைந்துள்ளது.
 
    தமிழ்ப் பேராசிரியை மணிக்கொடி பற்றி ஆராய்ச்சி செய்து பட்டம் பெற்றவர்.  அது குறித்து எழுதும்போது மணிக்கொடி பற்றி தெரிந்துகொள்ள அவர் செய்த முயற்சிகளைப் பற்றி பேசினார்.  மணிக்கொடி என்பது பத்திரிகை மட்டும் அல்ல.  ரத்தமும் சதையும் கொண்ட அதில் ஈடுபட்ட எழுத்தாளர்களின் வாழ்க்கையும் அதில் அடங்கும். 

    சி சு செல்லப்பாவைப் பார்த்து பேசி அவருடைய ஒத்துழைப்பைப் பெறுவதைப் பற்றியும் பேராசிரியைப் பேசினார்.  வராவின் மனைவியைச் சந்தித்த விபரத்தையும் சுவாரசியமாக தெரிவித்தார். 

    மணிக்கொடி என்ற பத்திரிகை 17.09.1933 அன்று தோன்றியது. அதேபோல் 34 ஆண்டுகளுக்கு முன், செப்டம்பர் 17, 1899 அன்று வ.ரா பிறந்தார்.  பத்திரிகையை ஆரம்பிக்க காரணமானவர் ஸ்டாலின் சீனிவாசன் என்பவர். ஆங்கிலத்தில் அப்செர்வர் என்ற பத்திரிகையைப் பார்த்துவிட்டு தமிழில் அப்படி ஒரு பத்திரிகை ஆரம்பிக்க வேண்டுமென்று அவருக்குத் தோன்றியது.  டி எஸ் சொக்கலிங்கம்தான் பத்திரிகையை நடத்தியவர்.  பின்னால், பம்பாயில் நடந்துகொண்டிருந்த ப்ரி பிரஸ் ஜரனலுக்கு சீனிவாசன் போய்விட்டார்.  அதன்பின் வ.ரா.மணிக்கொடியின் ஆசிரியராக மாறினார்.  சொக்கலிங்கத்திற்கும் வராவிற்கும் ஏற்பட்ட கருத்து வேற்றுமையால், வ ராவை ஆசிரியர் பொறுப்பிலிருந்து விடுவித்துவிட்டார் சொக்கலிங்கம்.  பின், இலங்கையில் வந்து கொண்டிருந்த வீர கேசரியின் நாளிதழுக்கு வரா ஆசிரியராக பணியாற்ற சென்றுவிட்டார்.  சொக்கலிங்கம் எதிர்பாராதவிதமாக வ.ராவை பத்திரிகையிலிருந்து நீக்கியதை அவரால் நம்ப முடியாமல் இருந்தது.  கப்பலோட்டிய தமிழன் வ வு சிதம்பரம் பிள்ளையால் வீரகேசரியில் வராவிற்கு ஆசிரியர் பொறுப்பு கிடைத்தது.

    நான் சனிக்கிழமை இந்தக் கூட்டத்திற்குப் போனபோது மணிக்கொடியைப் பற்றி என்னன்ன தகவல்கள் கிடைக்குமென்றுதான் போனேன்.  வராவின் மணிக்கொடி தமிழ் பத்திரிகை உலகில் ஒரு முக்கியமான பங்கை வகிக்கிறது என்பதை மறுக்க முடியாது.

    கி.அ சச்சிதானந்தம் பேச ஆரம்பித்தபோது அவர் மணிக்கொடியை பி எஸ் ராமையாவிலிருந்து தொடங்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.  மணிக்கொடி என்ற பத்திரிகை ஸ்டாலின் சீனிவாசன், வ ரா, பி எஸ் ராமையா என்று பலரால் ஆசிரியப் பொறுப்பில் தொடங்கப்பட்டது.  அதில் ஈடுபட்ட பலரும் பண பலம் இல்லாவிட்டாலும் மன பலம் கொண்டவர்கள்.  பி.எஸ் ராமையா காலத்தில் மணிக்கொடியில் வெளிவந்த பல சிறுகதைகள் உலகத் தரத்தில் பேசக்கூடியவை.  காந்தி காலத்தில் சுதந்திரத்திற்கு முன் தோன்றிய மணிக்கொடி, சுதந்திரத்தைப் பற்றியோ காந்தியைப் பற்றியோ பெரிதும் பேசவில்லை.

    கி அ சச்சிதானந்தம் மணிக்கொடி எழுத்தாளர்களில் சி சு செல்லப்பா, மௌனி, ந.பிச்சமூர்த்தி, சிட்டி என்று வெகுசிலருடன் தான் பழகியிருப்பதாக குறிப்பிட்டார்.  ஸ்டாலின் சீனிவாசன் தமிழில் திறமையாக எழுதக் கூடியவர் என்று கி அ சச்சிதானந்தம் தெரிவித்தார்.அவர் எழுத்துகள் புத்தகமாக வரவேண்டுமென்ற தன் ஆதங்கத்தைவெளிப்படுத்தினார்.  பி எஸ் ராமையா மணிக்கொடி காலம் என்ற தொடரை தீபத்தில் எழுதுவதற்கு, சி சு செல்லப்பாவும் கி அ சச்சிதானந்தமும்தான் காரணம் என்பதைக் குறிப்பிட்டார்.  எப்போதும் சிசு செல்லப்பாவுடன் சுற்றிக்கொண்டிருப்பவர், பீகாக் பதிப்பகத்தை சி சு செல்லப்பாவின் புத்தகம் கொண்டு வர பயன்படுத்தியதாகக் குறிப்பிட்டார். 

    அடுத்தது கணையாழி ஆசிரியரும், முன்னாள் தஞ்சை பல்கலைக் கழக துணை வேந்தருமான ம ராஜேந்திரன் அவர்கள் பேசினார்.  கி அ சச்சிதானந்தம் கூறிய மணிக்கொடி என்பது ராமையாவின் காலத்திலிருந்து தொடங்குவதிலிருந்து ஆரம்பமாகிறது என்ற கருத்தை மறுத்தார்.  எப்போதும் கொடி என்றால் துணிக்கொடியைத்தான் குறிப்பிடுவோம்.  எப்படி மணிக்கொடியாக மாறியது என்பதை புதுவித விளக்கத்துடன் தெரிவித்தார்.  அதாவது பாரதியார் மணிக்கொடி என்ற வார்த்தைப் பிரயோகத்தை தன் கவிதைகளில் பயன்படுத்தியிருக்கிறார், அதனால் மணிக்கொடி என்ற பெயர் பாரதியாரின் பெயரிலிருந்து கிடைத்திருக்கும் என்றார்.  üஇங்கே மணிக்கொடி எழுத்தாளர்களின் உண்மையான வாரிசுகள் இருக்கிறார்கள்.  நாங்கள் அவர்களைப் படித்து அவர்களைப் பின்பற்றி வந்த வாரிசுகள்,ý என்று முடித்தார்.

    உரைநடையை எப்படியெல்லாம் பயன்படுத்த வேண்டுமென்பதை மணிக்கொடி காலத்தைச் சேர்ந்த படைப்பாளிகள் விவாதித்துப் பயன்படுத்தினார்கள் என்றார்.  அதாது ஒரு வரி என்பது மூன்று மூன்று வார்த்தைகள் கொண்டே முடிந்து விடும் என்றார்.  சிக்கனமாக வரி அமைப்பை கொண்ட வாக்கியத்தை மணிக்கொடி எழுத்தாளர்கள் கண்டு பிடித்ததாகக் குறிப்பிட்டார்.  ஸ்டாலின் சீனிவாசன் எழுதிய உரைநடை வாக்கியங்களை ம ராஜேந்திரன் படித்துக் காட்டினார். சமஸ்கிருத மரபையும், தமிழ் மரபையும் கலந்து தமிழுக்குப் பெருமை சேர்க்கும் விதமாக மணிக்கொடி இதழ் அமைந்ததாக ம ரா தெரிவித்தார்.

    கூட்டம் முடிவில் பேச வந்தவர் எழுத்தாளர் நரசய்யா.  அவருக்கு 80 வயது.  புதுமைப்பித்தனைத் தவிர எல்லா மணிக்கொடி எழுத்தாளர்களுடனும் பழக்கம் உண்டு என்றார்.  மணிக்கொடி என்ற பெயர் கம்பராமயண செய்யுளிலிருந்து வந்தது, பாரதியாரிடமிருந்து வரவில்லை என்ற ம ராஜேந்திரன் கூற்றை மறுத்தார்.  மணிக்கொடி எழுத்தாளர்கள் பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற எண்ணத்தில் எழுத்துத் துறைக்கு வரவில்லை என்று குறிப்பிட்டார்.  மணிக்கொடி பதிப்பாளர் சொக்கலிங்கத்திற்கும், வ ராவிற்கும் கருத்து வேறுபாடு இருந்தாலும், தினமணி இதழிற்கு ஆசிரியராக சொக்கலிங்கம் இருக்கவேண்டுமென்று வ ரா குறிப்பிட்டதாக நரசய்யா குறிப்பிட்டார்.  அரசியல் நோக்கத்துடனோ இலக்கிய நோக்கத்துடனோ கொண்டு வரப்பட்ட பத்திரிகை இல்லை மணிக்கொடி என்றார்.   பத்திரிகை ஒன்று வரவேண்டுமென்ற முயற்சிதான் அது என்றார்.  ஸ்டாலின் சீனிவாசன் எழுத்தை அவரும் பாராட்டினார். 


    என் பக்கத்தில் அமர்ந்திருந்தவர் சித்தார்த்தன் என்பவர்.  ‘சாம்ராட் அசோகன்’ என்ற வரலாற்றுப் புதினத்தை 4 பாகங்கள் எழுதி உள்ளார்.  அவர் என் கையில் ஸ்வாமிநாத ஆத்ரேயா எழுதிய மாணிக்க வீணை என்ற புத்தகத்தை படிக்கக் கொடுத்தார்.  என் நண்பர் ஆர் வெங்கடேஷ் அவருடைய நாவல் இடைவேளை என்ற புத்தகத்தைப் படிக்கக் கொடுத்துள்ளார்.  இக் கூட்டத்திற்கு வந்ததில் இரண்டு புத்தகங்கள் படிக்கக் கிடைத்தன. 

    கூட்டம் முடிந்தவுடன் நரசய்யாவைக் கேட்டேன்.  ஏன்  மணிக்கொடி எழுத்தாளர்களில் க.நா.சு என்ற பெயரை யாரும் உச்சரிக்கவில்லை என்று கேட்டேன். 

    ‘இது முதல் கூட்டம்.  இன்னும் தொடர்ந்து சில கூட்டங்களைக் கொண்டு வர உள்ளோம்,” என்றார் சிட்டியின் புதல்வர்.  மணிக்கொடி எழுத்தாளர்களின் வாரிசுகள் யாராவது மணிக்கொடி எழுத்தாளர்களைப் பற்றி பேசியிருக்கலாம்

    நான் வீட்டிற்கு வரும்போது மணி 9 ஆகிவிட்டது.  நான் இருந்த பகுதியில் மழை பெய்து விட்டிருந்தது.  நான் இக் கூட்டத்தைப்பற்றி பதிவு செய்ய வேண்டுமென்று பதிவு செய்து விட்டேன்.  இன்னும் சில தினங்கள் சென்றால், சொல்ல வேண்டிய பலவும் மறந்து போய்விடும்.
எதிரி

காஷ்மீர் சிறுகதை

– ஏ.ஜி. அத்தார்

தமிழில் – எம்.ரிஷான்
ஷெரீப்

நான் இந்தியக் காவலரனைக்
கடந்து வேகமாக நடந்து சென்றேன்.
அது மத்தியான நேரம். எவரும்
தென்படவில்லை. சிலவேளை அவர்கள்
உறங்கிக் கொண்டிருக்கக் கூடும்.
அவ்வாறில்லையெனில் ஓய்வெடுத்துக்
கொண்டிருக்கக் கூடும். நடுப்பகலில்
எந்தவொரு மனித ஜீவராசியும்
தேசத்தின் எல்லையைக் கடந்து
செல்வரென அவர்கள் நினைத்துக்
கூடப் பார்த்திருக்க மாட்டார்கள்.
வியர்வை வழிய நான் புகையிரதமொன்றைப்
போல வேகமாக ஓடினேன். எனது சகோதரனின்
முகம் எனது கண்ணெதிரே தோன்றுகிறது.
அவரது நிலைமை படுமோசமானதென
தகவல் தந்தவர் கூறியிருந்தார்.
நீலம் ஆற்றங்கரையில் தனது
இல்லத்தில் வசிக்கும் அவனுக்கு
தனதென்று சொல்லக் கூடிய எவரும்
அங்கில்லை.

நான் ஆற்றங்கரையில் இந்தியாவுக்குச்
சொந்தமான பகுதியில் வசித்து
வந்தேன். எனது சகோதரன் ஆற்றின்
எதிர்ப்புறத்தில் பாகிஸ்தானுக்குச்
சொந்தமான கரையில் வசித்து
வந்தான். ‘அவர் சுயநினைவற்ற
நிலையிலும் உங்கள் பெயரையே
கூறிக் கொண்டிருக்கிறார்’
என தகவல் தந்தவர் கூறியிருந்தார்.
அவ்வாறான தகவலொன்று கிடைத்த
பின்னர் நான் அமைதியாக இருப்பது
எவ்வாறு? எவ்வாறாயினும் ஒரே
இரத்தத்தில் உண்டான பந்தம்
இது.

நான் ‘அத்மகாம்’ பாலத்தை நெருங்கினேன்.
எனது சகோதரனின் வீடு நேரெதிர்ப்
புறத்தில் அமைந்திருந்தது.
அதனை நெருங்க எனக்கு ஐந்து
நிமிடங்கள் மாத்திரமே எடுக்கும்.
திருடனைப் போல வலதுக்கும்
இடதுக்கும் எனது பார்வையைச்
செலுத்திய நான், என்னையே தைரியப்படுத்திக்
கொண்டு தேசத்தின் எல்லையைக்
கடந்து செல்ல முயன்றேன். எனினும்,
சில அடிச்சுவடுகளைப் பதித்து
முன்னேறிச் செல்கையில் பலத்த
சப்தத்தோடு கூக்குரலிடும்
ஓசையைக் கேட்டேன்.

‘நில்!’

நான் செய்வதறியாது அவ்விடத்திலேயே
சிலையாக நின்றேன். முன்னே பார்த்த
எனக்கு, துப்பாக்கியை நீட்டியபடி
என்னை நோக்கி வந்துகொண்டிருந்த
இரண்டு இராணுவ வீரர்கள் தென்பட்டனர்.

“இந்தியனொருவன்” என எனது
முக லட்சணத்தைப் பார்த்த ஒரு
இராணுவ வீரன் கத்தினான்.

“கைது செய் அவனை” என அடுத்தவன்
கத்தினான்.

“இல்லை…இல்லை… ஐயா நான்
இந்தியனில்லை. அதே போல பாகிஸ்தானியனும்
இல்லை. நானொரு காஷ்மீர்வாசி.
அதோ அங்கே கேரனிலிருக்கும்
சிறிய வீடொன்று தென்படுகிறது
அல்லவா? அதுதான் எனது வீடு.
ஆற்றின் மறுகரையிலிருக்கும்
அந்தச் சிறிய வீடும் தென்படுகிறது
அல்லவா? அங்கேதான் எனது சகோதரன்
வசிக்கிறார். அவர் உடல்நிலை
பாதிக்கப்பட்டு மிகவும் மோசமான
நிலையில் இருக்கிறார். அவருக்கென்று
கூற அங்கு யாரும் இல்லை. அவரது
உதவிக்கு யாராவது வரும்படி
தகவலொன்று கிடைத்தது. ஐயா,
தயவுசெய்து எனக்கு ஒரு அரை
மணித்தியாலம் கொடுங்கள். அவருக்கு
எப்படியிருக்கிறதெனப் பார்த்து,
முடிந்தால் மருந்துகளும்
வாங்கிக் கொடுத்து..சிலவேளை
அது தண்ணீர் மாத்திரமாகவும்
இருக்கலாம்…அதைக் கொடுத்துவிட்டு
வருகிறேன்.”

எனது கழுத்தில் துப்பாக்கிப்
பிடியால் தாக்கப்பட்டேன்.
எனது இரு பாதங்களுக்குக் கீழே
பூமி அதிர்வதைப் போல உணர்ந்தேன்.
அவர்கள் என்னை அவர்களது பங்கருக்கு
இழுத்துச் சென்றனர்.

“இந்தியனொருவன் – எதிரி உளவாளியொருவன்”
என இன்னுமொரு இராணுவ வீரன்
என்னைப் பார்த்துக் கூறினான்.
அதனைத் தொடர்ந்து அவர்கள்
சித்திரவதைகள் செய்ய ஆரம்பித்தனர்.
நான் பாகிஸ்தானுக்கு எதிராக
வேவு பார்க்க வந்த இந்திய உளவாளியொருவனென
வாக்குமூலமளிக்கும்படி அவர்கள்
என்னை மிரட்டினர்.

நான் எதனை வாக்குமூலமளிப்பது?
நான் எனது சகோதரனின் எதிரியெனக்
கூற இயலுமா?

எனது சகோதரனின் வீட்டிற்கு
அண்மையில் அமைந்திருந்த அவர்களது
தலைமையகத்துக்கு அவர்கள்
என்னைக் கொண்டு சென்றனர். திரும்பவும்
நான் கெஞ்சினேன்.

“தயவு செய்யுங்கள் ஐயா. எனது
சகோதரன் அடுத்த வீட்டில்தான்
இருக்கிறார். அவரது உடல்நிலை
மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
ஐயா, எனக்கு கைவிலங்கிட்டாலும்
பரவாயில்லை. அதனோடு என்னை அவரிடம்
செல்ல அனுமதியுங்கள். அவருக்கு
எப்படியிருக்கிறதென விசாரிக்கக்
கிடைத்தாலும் போதும்”

எனினும் அவர்கள் செவிமடுக்கவில்லை.
எனது நகங்களைப் பிடுங்கிய
அவர்கள், அக் காயங்களின் மேல்
உப்பிட்டனர். நான் மயக்கமுற்றேன்.
எனது சகோதரன் மிகுந்த சிரமத்தோடு
சுவாசித்தபடி, தண்ணீர் கேட்டு
முனகும் ஓசை எனக்குக் கேட்டது.
எனது சகோதரனுக்கு அண்மையில்
நான் கொண்டு வரப்பட்டுள்ளேன்
என்பதனை நான் உணர்ந்தேன். எனினும்
எனக்கு விலங்கிட்டு சங்கிலியால்
கட்டப்பட்டிருந்தேன். சுற்றிவர
எங்கேயுமே தண்ணீர் தென்படவில்லை.
கை விலங்கின் கூரிய முனையொன்றில்
எனது இடது கையை வெட்டிக் கொண்டேன்.
கையின் வெட்டுப்பட்ட இடத்திலிருந்து
குருதி பெருக்கெடுத்துப்
பாய்ந்தது. வலது உள்ளங்கையைக்
குவித்து அக் குருதியைச் சேமித்து
எனது சகோதரனின் தாகத்தைத்
தணிக்க முயன்றேன். எனினும்
எனது கைகள் விலங்கிடப்பட்டிருந்த
காரணத்தால் எனது சகோதரனின்
உதடுகளை என்னால் நெருங்குவது
சிரமமாக இருந்தது. இறுதியில்
தண்ணீர் கேட்டு இறுதி முனகலொன்றை
வெளிப்படுத்திய அவர் அமைதியடைந்தார்.
நான் அழுது அரற்றினேன்.

“எல்லாம் முடிந்து விட்டது.
ஆண்டவனின் இராசதானி உடைந்து
வீழ்ந்து விட்டது. மனித எண்ணங்கள்
யாவும் அழிந்து விட்டன. சகோதரனொருவன்,
தனது சகோதரனுக்கே எதிரியாகி
விட்டான்.”

திடுக்கிட்டு எழுந்த
நான் இராணுவ வீரர்களின் விழிகளும்
கலங்கியிருப்பதைக் கண்டேன்.
யன்னலினூடே வெளியே பார்க்கும்படி
அவர்கள் எனக்குக் கூறினர்.
நான் அதனைக் கண்ணுற்றேன். எனது
சகோதரனின் உடலானது ஒரு சவப்பெட்டியில்
வைக்கப்பட்டிருந்தது.

“என்னைப் போக விடுங்கள்.
எனது சகோதரனின் முகத்தைப்
பார்க்க விடுங்கள். எனது இறுதி
மரியாதையைச் செலுத்த விடுங்கள்.
உங்களுக்குத் தெரியுமா? அவர்
எனது சகோதரன்.”

காலஞ்சென்றவர் எனது
சகோதரன் என்பதை தாம் நன்கறிவோம்
என அவர்கள் கூறினர். எனினும்
அவரது இறுதிக் கிரியைகளில்
பங்குகொள்ள எனக்கு இடமளிக்க
முடியாதெனவும் அவர்கள் அறியத்
தந்தனர்.

“எம்மால் எதுவும்
செய்ய முடியாது” என அவர்கள்
கூறினர்.

“உங்கள் அதிகாரிகளிடமிருந்து
அனுமதி வாங்கிக் கொடுங்கள்”
எனத் தாழ்மையாகக் கேட்டேன்.

“அவர்களாலும் எதுவும்
செய்ய முடியாது” என அவர்கள்
பதிலளித்தனர்.

“அவ்வாறெனில் அதிகாரிகளின்
தலைவர்களிடமிருந்து எனக்கு
அனுமதி வாங்கிக் கொடுங்கள்.”

“அவர்களாலும் எதுவும்
செய்ய முடியாது” என்பதே எனக்குக்
கிடைத்த பதிலாக இருந்தது.

“அதுவும் அவ்வாறெனில்
எனக்கு உதவி செய்யக் கூடியவர்
யார்? அதிகாரம் யாரிடம் இருக்கிறது?”

“அது எமக்குக் கூடத்
தெரியாது.”

—————————————————————-

 எழுத்தாளர்
பற்றிய குறிப்பு :

எழுத்தாளர் அப்துல்
கனி அத்தார், ஜம்மு காஷ்மீர்
கல்வித் திணைக்களத்தின் கீழ்
பணிபுரியும் ஒரு ஆசிரியர்
ஆவார். இவர் கவிதைகள், சிறுகதைகள்,
நாடகப் பிரதிகள் ஆகிவற்றை
எழுதியிருக்கிறார். சிறுகதைத்
தொகுப்பொன்றையும் வெளியிட்டிருக்கிறார்.

நீல பத்மநாபனின் 43 கவிதைகள் குறித்து……………


 
  அழகியசிங்கர்
 
 
 
  திருவனந்தபுரம் என்ற இடத்திலிருந்து மூன்று முக்கிய  படைப்பாளிகளை நான் அறிவேன்.  அதில் ஒருவரான நீல பத்மநாபனை எனக்கு கல்லூரி ஆண்டிலிருந்து தெரியும்.  அவர் புத்தகங்களை நான் விரும்பிப் படிக்க ஆரம்பித்ததிலிருந்து அவரை நேரிடையாக அறியாவிட்டாலும் அவர் மீது எனக்கு ஒருவித மதிப்பும், லயிப்பும் இருந்துகொண்டுதான் இருந்தது. 

 இன்னும் இரண்டு படைப்பாளிகளாக நான் அறிவது. நகுலனையும் காசியபனையும்.  இந்த மூன்று படைப்பாளிகளிடமும் நான் காணும் ஒரு ஒற்றுமை.  மூவரும் கவிதைகள் எழுதுவார்கள்.  சிறுகதைகள் எழுதுவார்கள்.  நாவல்கள் எழுதுவார்கள்.  கட்டுரைகள் எழுதுவார்கள்.  மொழிபெயர்ப்பு செய்வார்கள். 

 திருவனந்தபுரத்தில் இன்னும் இரண்டு படைப்பாளிகளைப் பற்றியும் நான் அறிவேன்.  அதில் ஒருவர் ஷண்முக சுப்பையா.  இன்னொருவர் ஆ மாதவன்.  ஷண்முக சுப்பையா கவிதைகளுடன் நின்றுவிட்டார்.  ஆ மாதவன் சிறுகதைகள், நாவல்களுடன் நின்றுவிட்டார். 

 நீல பத்மநாபனை நான் அறிந்தபோது ஒரு நாவலாசிரியராகத்தான் அறிந்தேன்.  உண்மையில் நான் அதிகமாக அவர் நாவல்களைப் படித்திருக்கிறேன்.  அவர் நாவல்களைப் படித்துக்கொண்டிருந்த காலத்தில் அவர் கவிதைகள் எழுதியிருக்கிறார் என்பதை நான் அறிந்திருக்கவில்லை.  அதேபோல் அவர் சிறுகதைகள் எழுதி உள்ளார் என்பதையும் உணரவில்லை.

 இப்படி நீல பத்மநாபனை அறிந்து கொண்டிருந்தபோதுதான் காசியபனை அவருடைய அசடு என்ற நாவல் மூலம் அறிந்தேன்.  நகுலனை நான் அவர் கவிதைகள் மூலமாகத்தான் அறிவேன். 

 நான் இங்கு இரண்டு விதமான பிரிவுகளைப் பார்க்கிறேன்.  ஒரு பிரிவில் உள்ளவர்கள் வெறும் கவிதைகளை மட்டும் படிப்பவர்கள்.  எழுதுபவர்கள்.  உதாரணமாக ஞானக்கூத்தன்.  இவர் அவர் வாழ்நாள் முழுவதும் கவிதையை மட்டும் சிந்திப்பவர்.  கவிதை எழுதிக்கொண்டிருப்பவர்.  கவிதையை திறனாய்வு செய்பவர்.  ஞானக்கூத்தனின் பல நண்பர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள்.  இருந்திருக்கிறார்கள்.  உதாரணமாக ஆத்மாநாம்.  ஏன் ஷண்முக சுப்பையா. இப்போது எழுதிக்கொண்டிருப்பவரில் தேவதச்சன்.  சுகுமாரன், பிரம்மராஜன்.  இன்னும் எத்தனையோ படைப்பாளிகளைக் குறிப்பிடலாம்.

 கவிதையை மட்டும் எழுதுபவர்களிடமிருந்து நாவல், சிறுகதைகள் போன்றவற்றுடன் கவிதைகளும் எழுதுபவர்களோடு ஒப்பிடும்போது கவிதைகள் மட்டும் எழுதுபவர்கள் சிறப்பாகவே எழுதுவதாக எனக்குத் தோன்றும்.

 நாவல் எழுதுபவர்கள் கவிதை எழுதும்போது நாவலில் சாயல் கவிதையில் தெரிவதாக தோன்றுகிறது.  அல்லது சிறுகதை எழுதுபவர்கள் கவிதை எழுதும்போது சிறுகதையின் சாயல் அதன் மூலம் வெளிப்படுவதாக எனக்குத் தோன்றுகிறது.

புதுவிதமான கவிதையின் முன்னோடியான க.நா.சு கவிதையை உரைநடை வடிவத்தில் மாற்றி புதுமைப் படைத்தவர்.  அதிலிருந்து கவிதையில் உரைநடையும், உரைநடையில் கவிதையும் நுழையத் தொடங்கி விட்டது. 

 பொதுவாக நீல பத்மநாபன் அவருடைய கவிதைகளை எல்லாச் சிற்றேடுகளுக்கும் அனுப்பவரில்லை.  அவர் குறைவாகவே கவிதைகள் எழுதுபவர்.  பத்திரிகைகளில் பிரசுரமாக வேண்டுமென்ற நோக்கம் இல்லாதவராக எனக்குத் தோன்றுகிறது. 

 நீல பத்மநாபன் கிட்டத்தட்ட 200 கவிதைகள் எழுதியிருக்கிறார் என்பது ஆச்சரியம்.    அவர் மற்றவர்கள் கவிதைகளை வாசிக்கவும் விருப்பப் படுவார்.  அதனால்தான் வேற மொழிகளிலிருந்தும் கவிதைகளை மொழி பெயர்த்திருக்கிறார். 

 இத் தொகுப்பில் உள்ள பெரும்பாலான கவிதைகள் தனிப்பட்ட விண்ணப்பம் போல் அமைத்திருக்கிறார்.  குறிப்பாக விஜயதசமி நாளன்று ஒரு கவிதை எழுதி விடுவார் என்று தோன்றுகிறது.

  ஓம் என்ற கவிதையில்
 
  இன்று விஜயதசமி
  மீண்டும்
  எழுதுகோலை அன்னை உந்தன்
  பாதத்தில் திரும்பத் தந்து
  போதுமென நிறுத்திட
  நினைக்கும் கணங்கள்
  இல்லை உன் கடன்
  பணிசெய்து கிடப்பதே…
  இறுதி நேரம்வரை
  இன்னும் உன்னால்..
  என்று கூறி முடிக்கும்போது
 
  ஓம் கணபதாயே நமக.. என்கிறார் 9.10.2008எழுதப்பட்ட கவிதை இது.
 
 அதேபோல் 2009 ஆண்டில் இன்னுமொரு விஜயதசமி வாக்தேவதையே என்று குறிப்பிட்டு கிறுக்கியே அதே வரியை கிறுக்குகிறேன் ஓம் கணபதாயே நமஹே என்று முடிக்கிறார்..ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட விஜயதசமி முன்னிட்டு ஒரே விதமான விண்ணப்பத்தை திரும்பவும் தெரிவிக்கிறார்.

  நீல பத்மநாபனின் முந்தைய கவிதைகளில் ஒருவித ஆவேசத்தை நான் பார்த்திருக்கிறேன்.  தன் முன்னால் நடக்கும் அக்கிரமங்களைக் கண்டு கொதிக்கும் மன நிலையில் அவர் பல கவிதைகளை எழுதியிருக்கிறார்.  அதுமாதிரியான கவிதை இத் தொகுப்பில் கிடைக்கிறதா என்று ஆராய்ந்து பார்த்ததில் üகங்கை அன்னையே வணக்கம்ý (பக்கம் 44) என்ற கவிதை என் கண்ணில் தட்டுப்பட்டது.  அக் கவிதையிலிருந்து சில வரிகள் :

  சாக்கடைகளில் வீழ்ந்து
  கைகால்கள் தலைகள் அடிபட்டு
  குற்றியிரும் கொலை உயிருமாய்
  நடைபிணங்களாய் செத்து செத்து
  பிழைத்து வாழ்ந்து முடிக்கின்ற
  பாவப் பிரஜைகளைப் பற்றி
  உங்களுக்குத் தெரியுமா

 தமிழில் அங்கத உணர்வுடன் கவிதை எழுதுபவரில் முக்கியப் பங்கை வகிப்பவர் ஞானக்கூத்தன்.  இவர் கவிதை என்று எதை எழுதினாலும் அங்கத உணர்வு தானகவே மேலோங்கி தென்படும்.  அதேபோல் உரைநடையில் அங்கத உணர்வுடன் எழுதுபவர் அசோகமித்திரன்.

 மற்றவர்களிடம் இந்த அங்கத உணர்வே இல்லையா என்ற கேள்வி எழும். நிச்சயமாக உண்டு. நீல பத்மநாபன் கவிதைகளில் கூட அங்கத உணர்வுடன் கூடிய கவிதை உள்ளது.  ஆனால் ஞானக்கூத்தனிடம், அசோகமித்திரனிடம் உள்ள வீச்சு மற்றவர்களிடம் குறைவு என்பதே என் எண்ணம்.  கோபிகிருஷ்ணன் என்ற எழுத்தாளர் ஒருசில கவிதைகள் மட்டுமே எழுதி உள்ளார்

  அவருடைய கவிதை ஒன்றை இங்கு படிக்கிறேன் :
 
  கவிதையின் பெயர் சொர்க்கவாசி.
 
 
  உயிர்வதை ஒழிந்தது

  சாக்ரடீஸ் வந்தார்
  மூடச் சிந்ததை ஒழிந்தது

  மார்க்ஸ் வந்தார்
  ஆதிக்க வர்க்ம் ஒழிந்தது

  டால்ஸ்டாய் வந்தார்யேசு வந்தார்
பாவம் ஒழிந்தது

காந்தி வந்தார்
தீண்டாமை ஒழிந்தது

புத்தர் வந்தார்
  வேறுபாடுள்ள சமுதாயம் ஒழிந்தது

  லிங்கன் வந்தார்
  அடிமைத்தனம் ஒழிந்தது

  பெரியார் வந்தார்
  அறிவிலித்தனம் ஒழிந்தது

  வேறு யாரோ வந்தார்
  தீமை ஒட்டுமொத்தமாக ஒழிந்தது

  உல்லாசமாக இருக்கிறேன்
  காதில் கடுக்கன் போட்டுக்கொண்டு

  யார் வருகைக்கோ காத்துக்கொண்டு

  அங்கத உணர்வுடன் எழுதுபவர்கள் வாழ்க்கையை கிண்டலாகப் பார்க்கிறார்கள். ஒருவிதத்தில் எளிமையாக வாழ்க்கையைப் பார்ப்பதற்கும் இந்த அங்கத தன்மை உதவும் என்று நினைக்கிறேன்.  நீல பத்மநாபன் எல்லாவற்றையும் கொஞ்சம் கோபமாகப் பார்ப்பவராக எனக்குத் தோன்றுகிறது.  இருந்தாலும் அவரும் அங்கத உணர்வுடன் கவிதைகள் எழுதி இருக்கிறார். 

  இத் தொகுதியில் நான் பார்த்த ஒரு கவிதை.  மாறாட்டம் என்ற கவிதை. பக்க எண் 13. 

  யாராரும் அறியாது
  கடைசி வரிசையில்
  கூட்டத்துடன் கூட்டமாய்
  நின்று செல்ல வந்தவனை
  கைப் பிடித்தழைத்து
  மேடைக்கு இட்டு வந்ததும்
  உள்ளுக்குள்
  ரீங்கரித்த
  அதே கேள்வி
  ஆள் மாறிப்போச்சோ     (2004)

 அதேபோல் ஆன்மிக உணர்வை வெளிப்படுத்துவதுபோல் கவிதை எழுதுவது அவ்வளவு சுலபமில்லை.  ஆன்மிக உணர்வு என்பது கடவுளைத் தொழுவது என்பதில்லை.  என்னுடைய பல நண்பர்கள் பதவியிலிருந்து ஓய்வு பெற்றவர்களைப் பார்த்து நான் கேட்பது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பது.   அதற்கு அவர்களுடைய பதிலைக் கேட்கும்போது, எனக்கு சிரிப்பு வரும்.  ஆன்மிகத்தில் ஈடுபடுவதாக அவர்கள் குறிப்பிடுவார்கள்.  என்ன ஆன்மிகம்? என்ன ஈடுபடுகிறாரகள் என்றெல்லாம் கேள்விகள் எழும். இன்னும் கேட்டால் அவர்கள் சொல்வார்கள்.  காலையில் எழுந்தவுடன் பூஜை அறைக்குச் சென்றால் வர 2 அல்லது 3 மணி நேரமாகும் என்பது. நான் பேசாமல் இருப்பேன்.  ஆன்மிகம் என்பது அது அல்ல.

 ஆன்மிகம் என்பது என்னைப் பொறுத்தவரை ஒரு தத்துவ வாழ்க்கை முறை.  இது எளிதில் சாத்தியமாகுமா என்பதை நான் அறியேன்.

  நீல பத்மநாபன் அவர் தொகுப்பில் ஒரு கவிதை எழுதியிருக்கிறார்.  பேரானந்தம் என்பது அதன் பெயர். பக்கம் 38ல் அக் கவிதை உள்ளது.

   ஒரு வாசல்
   அடைத்துவிட்டதென்று
   ஓய்ந்துவிடாதே
   உனக்குள்ளே
   ஒளிந்திருக்கும்
   ஒன்பது வாசல்கள்
   ஒவ்வொன்றாய்
   திறந்திட
   முயற்சி செய்வாய்
   பேரானந்தம்
   பெருகிடக் காண்பாய்…
 
 இப்படி எழுதுவதுதான் ஆன்மிகமாக கருதுகிறேன்.  இது மாதிரியான ஆன்மிகத்தைத்தான் நான் தேடிக்கொண்டிருக்கிறேன்.
 
(26.04.2013 அன்று நீல பத்மநாபன் பவள விழா கருத்தரங்கத்தில் வாசித்த கட்டுரை)

 

 
  
 
 
 
 
  

அலுப்பு

 
 A.தியாகராஜன்
 
 

சில சமயங்களில் மூச்சு விடுவது அலுப்பாக இருக்கிறது 

விடுவதை விட்டுவிடலாம் என்று சீரியசாகவே தோன்றுகிறது-

ஏன் வேலைக்குச் சென்றோம் என்று இருக்கிறது-  

கண்ட கழுதைகளின் கீதோபதேசங்களை 

பல சமயங்களில் இந்த கிருஷ்ணர்களை மனதில் சபித்துக் கொண்டு கேட்கையில்-

சில சமயங்களில் ஏதோ ஒருவன் சரி என்று தோன்றும் போது 

ஏன் நான் தெரியாதிருந்தேன் என்று என்னை நானே கரித்துக் கொட்டிக்கொண்டு- 

அலுப்பு –  
அது கோபம் இல்லை-

கோபம் மீண்டும் மீண்டும் வந்தால் அது அலுப்பாகி விடுகிறது-

அலுப்பு மீண்டும் மீண்டும் வந்தால் 

அது கோபமாகி மறுபடி 
ப்யூபா பூச்சி யாவது போல 

அலுப்பாகவே உரு மாறுகிறது –

நீ என்ன சாப்பிடுகிறாயோ அதுவே நீ , 

ஒன்றும் அவ்வளவு பெரிய ஆளில்லை- என்று கேட்கும்போது-
நான் ஜீன்களால்,படிப்பால், சூழலால் ஆடும் கைப்பொம்மை என்று உணர்கையில்- 
அன்பே சிவம் ஏன் சிவப்புக் கலராக இருக்க வேண்டும் என்று-

கோட் சூட் போட்டுக்கொள்ளும்போது-

ரோமில் இருக்கும் போது ரோமானியர்கள் செய்வதை செய் என்றவன் மீது-

வள்ளுவர் மீது உலகத்தோடு ஓட்ட ஒழுகச் சொன்னபோது-

வயிறு ஜிம் போகச் சொன்னபோது-

அசைக்க முடியாத கடவுள் நம்பிக்கை உள்ள அம்மாவைப் பார்த்து-

விட்டு விட சுதந்திரம் இருந்தும் விடாமல், நம்பிக்கை இல்லாத நிலையை நம்பாமல் பல காரியங்களைச் செய்யும் என்மீதும் –

கட்டாயம் வோட்டுப் போடும் அவசியத்தை எண்ணி-

நியாயமான கேள்விகளை கேட்க முடியாத போது-

தெருக்கோடி சாமி திருவிழாவுக்கு டொனேஷன் கேட்க வருபவர்களைப் பார்க்கும் போது-

டெட்ராய்ட் நகரம் திவாலா என்று படிக்கும் போது-

டி வி சிரிப்பு நிகழ்ச்சி களில் மீண்டும் மீண்டும் பார்தத தையே காட்டும் போது-

கிட்ட போகும்போது புஸ் வாணமானது வெடிக்கும் போது-

எனது வரவுகள் மட்டும் டாக்ஸப்ள் என்னும் போது-

நீங்கள் க்யூவில் என்று லக்ஷமாவது தடவை தொலைபேசியில் கேட்டும் யாரிடமும் கத்த வழியின்றி …-

நடக்க இடமில்லாத் வீதிகளில் –
அலுப்பு அலுப்பு அலுப்பு