எதையாவது சொல்லட்டுமா..90

அழகியசிங்கர்

 சேலத்தில் உள்ள ஒரு எழுத்தாள நண்பர், ü400 பக்கங்களுக்கு மேல் ஒரு நாவல் எழுதியிருக்கிறேன், அதைப் புத்தகமாகக் கொண்டு வர, யாராவது பதிப்பாளரைத் தெரியுமா?ý என்று கேட்டார். ஒரு பதிப்பாளர் பெயரைக் குறிப்பிட்டேன்.  உடனே அவருக்குப் போன் செய்து பேசிவிட்டார்.   பதிப்பாளர் தற்போது நாவல் போடுவதில்லை என்று மறுத்துவிட்டாராம். கட்டுரைப் புத்தகங்களைத்தான் கொண்டு வருகிறாராம்.  திரும்பவும் எனக்கு போன் பண்ணி எழுத்தாள நண்பர் சொன்னார்.  அவர் நாவல் எப்படி இருக்கும் என்பது தெரியாது.  ஆனால் அவர் நூறுக்கும் மேற்பட்ட நாவல்கள் எழுதியிருக்கிறார்.  அவருடைய நாவல்கள் சினிமாப் படங்களாக ஒரு காலத்தில் வெளி வந்திருக்கின்றன.  வெகுஜன வாசகர்களுக்கு அவர் நன்றாக அறிமுகமானவர்.  


    ஆனால் இன்று கவிதைப் புத்தகம் சிறுகதைப் புத்தகம் மாதிரி நாவல்களும் விற்பதில்லையா? விற்கிறது.  ஆனால் ஒருசில பேர்களைப் பார்த்துதான் வாங்குகிறார்கள்.  குறிப்பிட்ட பதிப்பாளர் 1000 பக்கங்கள் கொண்ட ஒரு நாவலை சமீபத்தில் பிரசுரம் செய்திருக்கிறார்.ஆனால் சேலம் எழுத்தாளர் புத்தகத்தைப் பிரசுரம் செய்ய மாட்டார். 1000 பக்கங்கள் கொண்ட நாவல் எப்படி விற்பனை ஆகிறது?

    என் இலக்கிய நண்பர் ஒருவர் ஆயிரம் பக்கங்கள் கொண்ட புத்தகத்தை உடனே வாங்கிக்கொண்டு வரும்படி சொன்னார்.  அப்புத்தகம் பற்றி தினமலரில் விமர்சனம் வந்திருந்தது.  அதை வாங்கிக்கொண்டு போய் கொடுத்தேன்.  ஒரு வாரத்தில் படித்தும் விட்டார். திரும்பவும் அவரைப் பார்க்கும்போது அந்த நாவல் பற்றி புகழ்ந்து தள்ளிவிட்டார்.  அந்த நாவலுக்கு இணை வேறு எதுவும் இல்லை என்றெல்லாம் சொல்ல ஆரம்பித்துவிட்டார்.  அந்த நாவலின் ஏதாவது ஒரு பக்கத்தை எடுத்து வைத்துக்கொண்டு படிக்கவும் சொல்வார். 

    ‘அந்த நாவலை எழுதியவரை நான் பார்க்க வேண்டும்.  பார்க்க நீ ஏற்பாடு செய்,” என்றெல்லாம் சொல்ல ஆரம்பித்து விட்டார்.  ‘உன்னிடம் கொடுக்கிறேன்… நீயும் படி,”ன்றார்.  ü’என்னால் முடியாது..” என்றேன்.  உண்மையில்  என்னால் ஒரு புத்தகத்தை இப்போதெல்லாம் படிக்க முடியவில்லை.  அதற்கு நேரம் கிடைப்பதில்லை.  எனக்கு சாத்தியம் இல்லாத விஷயம் 1000 பக்கங்கள் கொண்ட புத்தகத்தைப் படிப்பது.  மூன்று தலைமுறை நாவலை எழுதியிருக்கிறார் என்று நாவலாசிரியர் தம்பட்டம் அடித்துக்கொண்டால், படிக்கவே வேண்டாம் என்று தோன்றும். 

    நான் ஒரு புத்தகத்தை எடுத்துப் படிக்க ஆரம்பித்தால், சில பக்கங்களில் புத்தகம் என்ன சொல்ல வருகிறது என்பது தெரிய ஆரம்பித்து விடும்.   பின் முழுவதும் படிக்க முடிவதில்லை.  இப்படி அரைகுறையாகப் படித்த புத்தகங்கள் என்னிடம் அதிகமாக உள்ளன.  பின் எதாவது புத்தகம் படித்து முடித்துவிட்டால் உடனே அதைப் பற்றி எழுதி விட வேண்டும்.  இல்லாவிட்டால் சில வாரங்கள் கழித்து அப்புத்தகம் எதைப் பற்றி சொல்கிறது என்பது மறந்துவிடும்.

    சமீபத்தில் நான் படித்து எழுதாமல் விட்டுவிட்ட புத்தகம் க.நாசுவின் கோதை சிரித்தாள் என்ற புத்தகம்.  ஜெயமோகனின் விஷ்ணுபுரம் என்ற நாவலை நான் பாதிக்கு மேல் படிக்கவில்லை.  என்னைப் பொறுத்தவரை ஒரு நாவல் என்பது 200 பக்கங்களுக்குள் இருக்க வேண்டும்.  அப்படி எழுதப்படுகிற நாவல்களைத்தான் படிக்க முடியும்.  நேரம் இருக்கும். 

    என் பள்ளிக்கூட நாட்களில் நான் படித்த கல்கியின் பொன்னியின் செல்வன் என்ற மகா பெரிய நாவலை நினைத்துப் பார்க்கிறேன்.  அப்புத்தகத்தின் கடைசி பாகத்தை படிப்பதற்குள் போதும் போதுமென்று ஆகிவிட்டது. கடைசி பாகத்தை முடித்தவுடன், நாவலை என்ன இப்படி முடித்துவிட்டாரே என்று தோன்றியது. 

    படைப்பாளி என்னதான் எழுதினாலும், படைப்பை தீர்மானிப்பவன் வாசகனே.  வாசகனின் ஆதரவு இல்லாவிட்டால் படைப்பாளி ஒன்றும் செய்ய முடியாது. 

    சமீபத்தில் மணிக்கொடி எழுத்தாளர்கள் பற்றி ஒரு கூட்டம் நடந்தது.  கூட்டத்தில் க.நா.சு என்ற எழுத்தாளரைப் பற்றி யாரும் எதுவும் சொல்லவில்லை.  நூறாண்டுகளைக் கடந்த க.நா.சு மணிக்கொடியில் ஒன்றும் எழுதவில்லையா?  ஆனால் மணிக்கொடி எழுத்தாளர்களைப் பற்றி க.நா.சு அபிப்பிராயம் சொல்லியிருக்கிறார்.

    தமிழில் விமர்சனத்தை வளர்த்ததற்கு க.நா.சுவின் பங்கு முக்கியமானது.  என் இலக்கிய நண்பர் குறிப்பிட்ட தகவல்படி க.நா.சு முதலில் ஆங்கிலத்தில்தான் பி ஏ படித்தாராம்.  ஆங்கிலத்தில் எழுத வேண்டுமென்று விரும்பினாராம்.  மணிக்கொடி எழுத்தாளர் பி எஸ் ராமையாவின் கதைகளைப் படித்தபிறகு அவருக்கும் தமிழில் எழுதத் தோன்றியதாம்.  பின்னாளில் ஒவ்வொரு மணிக்கொடி எழுத்தாளர்களின் எழுத்துக்களைப் பற்றி க.நா.சு எழுதியிருக்கிறார். அதனால்தான் அவரை மணிக்கொடி எழுத்தாளர்களுக்குப் பிடிக்காமல் போய்விட்டதாக தோன்றுகிறது.

    எழுத்து பத்திரிகை ஆரம்பித்தபோது, ‘விமர்சனத்தையும் நாம்தான் ஆரம்பிக்க வேண்டும்,’ என்று க.நா.சு குறிப்பிட்டு ரசனை விமர்சனத்தை ஆரம்பித்தவர். சி சு செல்லப்பாவிற்கு அதில் நம்பிக்கை இல்லை, எழுத்தைக் கூறுபோடும் அலசல் விமர்சனத்தை அவர் தொடங்கினார்.  சி சு செல்லப்பா மணிக்கொடி எழுத்தாளர்களுடன் நின்று விட்டவர்.  க.நா.சு அப்படி இல்லை.  அவர் எந்தப் புத்தகத்தைப் படித்தாலும் அது குறித்து தன் கருத்தைத் தெரிவிப்பார்.  24 மணி நேரமும் பத்திரிகை, புத்தகம் என்று படித்துக்கொண்டிருப்பார். க.நா.சுவிற்கு இசையில் ஈடுபாடு உண்டா என்பது தெரியவில்லை.  சினிமாப் படங்களைப் பார்த்து ரசிப்பாரா என்பதும் தெரியவில்லை.  புத்தகம் படிப்பது, அது குறித்து எழுதுவதுதான் அவர் விருப்பமாக இருந்தது.  ஆனால் இன்றைய படைப்பாளிகள் அப்படி அல்ல.  அவர்களுக்கு பல துறைகளில் ஆர்வம் உண்டு. 

    மணிக்கொடி எழுத்தாளர்களில் பி எஸ் ராமையா சினிமாவிற்குப் போய்விட்டவர்.  மணிக்கொடி என்றால் எனக்கு பி எஸ் ராமையாவின் மணிக்கொடியைத்தான் தெரியும் என்று கி அ சச்சிதானந்தம் கூறியது ஞாபகத்திற்கு வருகிறது.  பி எஸ் ராமையா 300க்கும் மேற்பட்ட கதைகளை எழுதியவர்.  சிறுகதையை இயக்கமாகப் பரப்பியவர்.  அவருடைய 300 கதைகளும் புத்தகமாக வரவில்லை.  ஒருசிறுகதையை சில மணித்துளிகளில் படித்துவிடலாம்.  200 பக்க நாவலை சில நாட்களில் முயற்சி செய்தால் படித்து விடலாம். 1000 பக்க நாவலை மாதக்கணக்கில் படித்துவிடலாம்  ஒரு சந்தோஷமான செய்தி.  முதன்முதலாக சிறுகதை உலகின் தலைசிறந்த எழுத்தாளரான கனடாவைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் ஆலிஸ் மன்றோ இலக்கியத்துக்காக இந்த ஆண்டு நோபல் பரிசு பெற்றுள்ளார்.  முதன் முதலாக நோபல் பரிசு சிறுகதைக்காக இந்த ஆண்டுதான் கொடுத்துள்ளார்கள்.

    ராமையாவின் அத்தனைக் கதைகளைப் பற்றியும் விமர்சனத்தை சி சு செல்லப்பா எழுதி இருக்கிறார். ராமையாவின் சிறுகதை பாணி என்ற புத்தகத்தில்.  ராமையாவிற்கு ஒரு வாசகனாக அவரை எழுதத் தூண்ட சி சு செல்லப்பா கிடைத்தது மாதிரி, எத்தனை எழுத்தளர்களுக்கு வாசகர்கள் இருக்கிறார்கள்.   ஆனால் வியாபார பத்திரிகைகளில் சிறுகதைகள் இல்லாமல் போய்விட்டன.  ஒரு காலத்தில் அமரர் வாசன் கேட்டுக்கொண்டபடி ராமையா ஐம்பதுக்கும் மேற்பட்ட கதைகளை ஒவ்வொரு வாரமும் ஆனந்தவிகடனில் எழுதியிருக்கிறார். வாசக தயவு இல்லாமல் எத்தனையோ படைப்பாளிகள் எழுதுவதற்கு விருப்பமில்லாமல் தொலைந்து போயிருக்கிறார்கள்.  இன்று கோடிக்கணக்கில் தமிழர்கள் இருக்கிறார்கள்.  ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக தொலைந்து போய்க்கொண்டிருக்கும் கதை உலகத்தை யார் புரிந்துகொள்ள போகிறார்கள்.  மௌனியையும், புதுப்பித்தனையும் இன்னும் எத்தனை ஆண்டுகள் வாசகர்கள் ஞாபகத்தில் வைத்துக்கொண்டிருக்கப் போகிறார்கள்.

    நான் தடித்தடி புத்தகங்களைப் படிக்க வைத்துக்கொண்டு மிரண்டு போயிருப்பவன்.  அந்தத் தடிப் புத்தகங்களில் ஒன்றை 91 வயதாகிற என் அப்பாவிடம் படிக்கக் கொடுத்தேன்.  அவர் காலத்தில் எந்தப் புத்தகத்தையும் அவர் படித்த மாதிரி ஞாபகம் இல்லை.  காசு கொடுத்து புத்தகம் வாங்க மாட்டார்.  அவர் தி ஜானகிராமன் கதைகள் முழுவதையும் படித்து முடித்துவிட்டார்.  அசோகமித்திரன் சிறுகதைத் தொகுதி 2 பாகங்களையும் படித்துவிட்டார்.  எம் வி வெங்கட்ராமன் கதைகளையும் படித்துவிட்டார்.  இப்போது ஆதவன் கதைகள் பக்கம் திரும்பியிருக்கிறார்.  ஆனால் நாவலையோ கவிதையையோ படிக்க விரும்புவதில்லை.  ஒரு கதையைப் படித்துவிட்டு பரவசம் அடைந்து எதாவது சொல்வார் என்று எதிர்பார்த்தால் பெரிய ஏமாற்றமாக இருக்கிறது.

    காஞ்சிபுரத்திலிருந்து எனக்குத் தெரிந்த உறவினர் ஒருவர் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார்.  அவருக்கு வயது 85.  கல்யாணம் ஆகி 6 மாதங்களில் விதவை ஆகிவிட்டவர்.  எனக்கு அவரைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கும்.  சாதிய கட்டுப்பாட்டால் அவர் குடும்பத்தினர் அவருக்கு மறுமணம் செய்து வைக்கவில்லை.  அதைவிட கொடுமை என்னவென்றால் அவருக்கு மொட்டை அடித்து முக்காடு போட்டுவிட்டார்கள்.  இப்போதும் அவர் காஞ்சிபுரம் மடத்தில் தங்கி இருக்கிறார்.   அவர் எந்த வீட்டிலும் சில நாட்கள் கூட தங்கி இருக்க மாட்டார்.  ரொம்ப ஆசாரம் பார்ப்பார்.  85 வயதிலும் பார்க்க லட்சணமாக இருப்பவர்.  நான் நினைத்துப் பார்ப்பேன் சின்ன வயதில் அவர் எவ்வளவு அழகான யூவதியாக இருந்திருப்பாரென்று.  வயது ஏற ஏற முகத்தின் லட்சணம் குறைந்துகொண்டே போகும்.  ஆனால் ஒரு சிலர்தான் வயதானாலும் லட்சணமாக இருப்பார்கள். 

    அந்த உறவினர் என் வீட்டிற்கு இரண்டு நாட்கள் தங்க வந்திருந்தார்.  எப்போதும் முகத்தில் விபூதி இட்டுக்கொண்டு சுவாமி ஸ்லோகம் சொல்லிக்கொண்டிருப்பார்.  அந்தக் காலத்தில் அவர் கணவர் எப்படி காவேரியில் குளிக்கப் போய் இறந்து போனார் என்ற நிகழ்ச்சியை கண்ணீரோடு இப்போது கூட எங்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போது அடிக்கடி சொல்லிக்கொண்டிருக்கிறார். 

    என் வீட்டில் கூடத்தில் அவர் படுத்துக்கொண்டிருந்தார்.  இரவு நேரத்தில் கொஞ்சம் பால், பழம் மாத்திரம்தான் சாப்பிடுவார்.  தூக்கம் வராத இரவு நேரத்தில் லைட்டைப் போட்டுவிட்டு ஒரு புத்தகத்தை எடுத்துப் படித்துக்கொண்டிருந்தார்.  அவர் என்ன புத்தகத்தை எடுத்துப் படிக்கிறார் என்று பார்த்தேன்.  காசியபனின் üஅசடுý என்ற புத்தகம்.  எனக்குப் பெருமையாக இருந்தது. 

    அவர் காஞ்சிபுரம் கிளம்புவதற்கு முன் கட்டிலில் அவர் படித்த அந்தப் புத்தகம் முழுவதும் முடிக்காமல் படித்தப் பக்கத்துடன் குப்புற கிடந்தது.  ‘அந்தப் புத்தகத்தைப் படிக்கக் கொடு,’என்று கேட்பாரென்று நினைத்தேன்.  ஒன்றும் கேட்கவில்லை.  சும்மா பொழுது போகாமல் படித்திருக்கிறார்.

    புத்தகம் எழுதி விடலாம்.  ஆனால் படிப்பதற்கு வாசகர் வேண்டும். புத்தகம் படித்துவிட்டு அது குறித்து பேசுகிற வாசகர் வேண்டும்.
                             (அம்ருதா  நவம்பர் 2013 இதழில் வெளிவந்த கட்டுரை)
   
   
   

ஒரு பூக்காலத்தில் நான் மிதக்கும் தோணி

 எம்.ரிஷான்
ஷெரீப்

மலைக் காடொன்றின் மத்தியில்
தெளிந்த ஒற்றையடிப்
பாதையின் முடிவில்
ஒரு தனித்த குடில் வீடு
உனது ஓவியமாகியிருந்தது
விகாரைக் கூரையை அதற்கு
ஏன் தீர்மானித்தாயென்ற கேள்விக்கு
புறாக்களும் புனித
தேவதைகளும் வந்து செல்வரெனச்
சொல்லி
நீ காதலைச் சொன்ன தருணம்
மஞ்சள் அந்தி மாலை நேரத்தைப்
போல எவ்வளவு அழகாக இருந்தது

சின்ன மேசையருகே முழந்தாளிட்டு
நாமருந்திய தேன்பானம்
நீ தயாரித்தது
சூடுமற்ற குளிருமற்ற
இதமான காலநிலையில்
நாம் நடந்துவரச் சென்ற
அன்று நீ
மழை வருமா எனக் கேட்ட
பொழுது சிரித்தேன்
பெருங்குளத்துக்கு
மத்தியிலான காட்டைச் சுற்றிவர
நிலத்தில் பதித்திருந்த
பச்சை விளக்குகள்
முன்னந்தியில் ஒளிர
ஆரம்பிக்கையில் மழை
சட்டெனப் பெய்து வலுத்தது
கண்டு கை கோர்த்துக் கொண்டோம்

அப்பொழுதெல்லாம் எவ்
வடிவ மேகம் போல நீ மிதந்தாய்
என் புன்னகை ஒரு மந்திரக்
கோலென்றாய்
எந்த அதிர்வுகளுக்கும்
ஆட்படாத மனம்
அதிர்ஷ்டம் வாய்ந்ததெனச்
சொல்லி
உனது தூரிகை தொடர்ந்தும்
சித்திரங்களைப் பரிசளித்தது
என் நேசம் உன் புல்லாங்குழலின்
மூச்சென்றானது

நீ இசைத்து வந்த வாத்தியக்
கருவியை
அன்றோடு எந்த தேவதை
நிறுத்தியது
உன்னிலிருந்தெழுந்த
இசையை
எந்த வெளிக்குள் ஒளிந்த
பறவை விழுங்கிச் செரித்தது

மழைக் காலங்களில் நீர்
மிதந்து வந்து
விவசாயப் பயிர்களை
நாசப்படுத்தி
பெருக்கெடுத்துப்
பாய்ந்தோடும் நதியொன்றிருந்த
எனது கிராமத்தின் கதையை
இக் கணத்தில் உனக்குச்
சொல்ல வேண்டும்
ஊரின் முதுகெலும்பாய்ப்
படுத்திருந்த மலையின் ஒரு
புறம்
சமுத்திரமும் இருந்தது

வாழ்நிலங்களைக் காக்கவென
மூதாதையர்
அம் மலையைக் குடைந்து
இரண்டாக்கி
ஆற்றின் தண்ணீர்ப்
பாதையை
கடலுக்குத் திருப்பிய
கதையையும்
கூடைகூடையாய் தொலைவுக்கு
கால் தடுக்கத் தடுக்க
பெண்கள் கல் சுமந்து
சென்று கொட்டிய கதையையும்
இரவு வேளைகளில் விழி
கசியச் சொன்ன
பாட்டி வழி வந்தவள்
நான்

அந்த மன உறுதியும் நேசக்
கசிவும் ஒன்றாயமைந்த
நான் மிதக்கும் தோணியை
ஒரு பூக்காலத்தில்
ஏழு கடல் தாண்டித் தள்ளி
வந்திருக்கிறாய்
உனது எல்லா ஓசைகளையும்
மீறி
‘உஷ்ணப் பிராந்தியத்தில்
வளர்ந்த செடியை
குளிர் மிகுந்த பனி
மலையில் நட்டால்
ஏது நடக்குமென நீ அறியாயா’
எனப் பாடும் இராப் பாடகனின்
குரல்
தினந்தோறும் இடைவிடாது
எதிரொலிக்கிறது

பூ, பட்டாம் பூச்சி,மற்றும் நேஹா

ரவிஉதயன்

பூவின் இதழ்களை
பட்டாம் பூச்சியின் சிறகுகள் போல
வரைந்திருந்தாள்.

பட்டாம் பூச்சியின் சிறகுகளை
பூவின் இதழ்களைப் போல்
வரைந்து முடித்து விட்டு
சிறு கடவுளாகி சிரிக்கிறாள் நேஹா.

இப்பொழுது நான் காண்கிறேன்!

பட்டாம் பூச்சியின் சிறகுகள்
விரிய பூ மலர்வதையும்!

பூவின் இதழ்களோடு
பட்டாம் பூச்சி பறப்பதையும்!

யுகமாய் நீ

ராமலக்ஷ்மி
கூட்டை உடைத்துக் கொண்டு நீ
வெளியில் வரக் கேட்டுக் கொண்டது
வரலாற்றின் ஒரு காலக் கட்டம்
தயக்கங்கள் உதறிச் சிறகுகள் விரித்து 
பெண்ணே நீ 
உயர உயரப் பறந்து பொழுது
செம்பிழம்புச் சூரியன் 
வெம்மை உனைத் தாக்கிடுமோவென
முகில்களுக்குப் பின் ஒளிந்து
கொண்டது
ஒவ்வொரு துறையிலும் நீ 
சிகரம் தொட்ட வேளைகளில்
மலையெங்கினும் பூத்தன  மலர்கள் 
மகிழ்ச்சியில்
வீதியில் இறங்கி நீ நடக்கையில் 
மகளெனப் பரந்த வானம் 
குவிந்து ஆசிர்வதிக்கப் 
பூரிப்புடன் துணை வந்திருந்தாள் 
பூமாதேவி
அறம் பூரணமாய்த் தழைக்க
அதர்மம் முற்றிலுமாய் அழிய
வரம் வாங்கியிராத
மண்ணில்,
துளிர்க்கின்ற சுதந்திரங்கள்
செழித்து வேர்விடும் முன்னரேப் 
பறித்தெறியப்படுகின்றன
வக்கிர மனங்களால்
கைகளைக் கட்டிக் கொண்டு
வேடிக்கைப் பார்க்கிறது 
கொடுப்பது போல் கொடுத்து
எடுத்துக் கொள்ளும் 
கோரவிளையாட்டில்
என்றுமே தோற்காத காலம்
ஏனென ஏறிடும் உன் விழிகளை
எதிர்கொள்ள இயலாமல் நிலவு
தகிக்க
எரிந்து விழுகின்றன நட்சத்திரங்கள்
தாங்கிப் பிடிக்கக் கீழே வலையற்ற
நூறடி உயரத்தில் கட்டப்பட்ட
நூலிழை வித்தைக் கயிற்றினை,
உலகின் விமர்சன வெளிச்சங்கள்
உடம்பெங்கினும் ஊடுருவக் கடக்கிறாய்..
கைகளைக் காற்றில் பரப்பி
ஒவ்வொரு அடியாக

திருட்டு

                
        அழகியசிங்கர்

                
        அலுவலக வளாகத்தில்
        வைத்திருந்த யமஹா
        வண்டி திருட்டுப்போயிற்று.
        திருட்டுக்கொடுத்த சுவடே
        தெரியாமல் இருந்தது இடம்

        விரைப்பாய் காவலர்
        விரைத்தபடி தூங்கிக்கொண்டிருந்தனர்
        எடுத்துச் சென்றவன் சிரித்தபடியே
        போயிருப்பான்

        வண்டி வைத்திருந்தவரை
        காண்டினில் சந்தித்தேன்
        முகத்தில் உற்சாகத்துடன்
        உலா வந்திருந்தார்

        ‘வேண்டும் மென் தகடுகள்’
        என்றேன்
        எடுத்து வருவதாகச் சொன்னவர்
        முகத்தில்
        அதிகப்படியான சந்தோஷம்

        பின்
        தெரிந்தது
        அவர் வண்டி லபக்கென்று
        போயிற்று
       
        ஏனோ –
        அன்று
        வளாகம் முழுவதும்
        கூட்டமாய் வண்டிகள்
        ஒதுக்குப்புறமாய் வண்டியை
        வைத்திருந்தேன் நானும்

        திருட்டுப் போனதை அறிந்து
        என் வண்டி இருக்கிறதா என்று
        பார்த்தேன் பார்த்தேன்
        பார்த்துக்கொண்டே இருந்தேன்
        வண்டிகள் பலவற்றில்
        என் வண்டியும் இருந்தது
        எப்போதும் அவர் யமஹாவில்
        ஒயிலாக தென்படுவார்ட
        புது வண்டி தோரணையும் சேர்ந்து

        முகத்தில்
        நகைப்பு மறைய
        எதிரில்
        அலுவலக பாதுகாவலர்களுடன் வந்தார்
        அங்குமிங்கும்
        தேடி
        உதட்டைச் சுழித்து
        களைத்துப் போனார்

        மென்தகடுகள் விற்கும் வியாபாரி
        என்றதால்
        ‘இனி வெளி ஆட்கள்
        வண்டிகள் வரக்கூடாது வளாகத்திற்குள்’
        என்று உத்தரவிட்டது
        அலுவலகக் கட்டிடம்
        இரக்கமின்றி

        பரபரப்பில்லாமல்
        வெறும் செய்தியாய்ப்
        போயிற்று திருட்டு..
       

எனக்கு ஒரு பைத்தியகார அக்காவை தெரியும்

-ஜெம்சித் ஸமான்

35 வயதை கடந்துவிட்ட
அநாதை அக்கா
இப்போது சகோதரிகளின்
பராமரிப்பில் இருக்கிறார்

வெய்யில்
மழை எது வந்தாலும்
யாரும் அந்த சகோதரியை கவனிப்பதில்லை

இரவில் உறங்குவதை தவிர
வீட்டின் உள்ளே வரவும்
அனுமதியில்லை

சிறு குழந்தைகளை போலதான்
அந்த அக்காவின் உலகமும் வேறு
ஆனால் குழந்தைகளுடன் இருப்பதை போல
இவர்களுடன் யாரும்
அன்பாக இருப்பதில்லை

ரொட்டி துண்டங்களை
அப்படியே உண்டுவிடும் அக்காவுக்கு
ரொட்டித் துண்டங்களை சிறிது சிறிதாக பிய்த்து
யாருமே உண்ணக் கொடுப்பதில்லை

சுடச் சுட தேநீரை அருந்தி முடிக்கும்
அக்காவுக்கு
சூடு ஆறிய தேநீரை
யாரும் அருந்தக் கொடுப்பதில்லை

குளிப்பாட்ட
ஆடை மாற்ற
முகம் கழுவ
உணவு அருந்த
தலை சீவ
அடம் பிடிக்கும் குழந்தைகளை
எந்த அம்மாக்களும்
அப்படியே விட்டு விடுவதில்லை

எனக்கு தெரிந்த அக்காவை மட்டும்
ஏன் அப்படியே விட்டு விடுகிறார்கள்

சிறு குழந்தைகள்
வீட்டு திண்ணைகளில்
சிறு நீர் கழிக்கும் போதும்
வீட்டு வாசலில்
மலம் கழிக்கும் போதும்
மகிழ்வோடு துப்பரவு செய்யும்
அன்பான அம்மாக்கள்
ஏன் எனக்கு தெரிந்த
அக்காவை மட்டும்
சுடு சொற்களால் வஞ்சிக்கிறார்கள்

மாத விலக்கு நாட்களென்றால்
அந்த அக்காவை கடப்பதற்கே
முகம் சுழிப்பாக இருக்கும்
அந்த அக்காவும்
ஒரு பெண்தான் என்பதை
எப்படி மறந்தார்கள்

தயவாக பணிக்கும்
அக்காவின் ஏக்கம் தளும்பும் விழிகளை
இவர்கள் ஒரு நாள் என்றாலும்
கூர்ந்து பார்த்ததில்லையா..?

நடு நிசி கடந்து
விழிப்பு தட்டும் போதெல்லாம்
குளிரில் விறைத்து நடுங்கும்
இரவின் அமைதியை
கீறிக் கொண்டு எழும்பும்
அந்த அக்காவின் சுய பிதற்றல்கள்
இப்போது கேட்பதில்லை

அக்கா அமர்ந்திருக்கும் வாசலில்
இப்போது பதிதாக
பூக் கன்றுகள் பூத்திருக்கின்றன

அவர்கள் குழந்தைகள் விழையாட
நிழல் கூடாரங்கள்
அமைத்திருக்கிறார்கள்

கூடாரமில்லாத முற்றத்து
வெய்யிலில்தான் ஒரு நாள்
அக்கா தண்ணீர் கேட்டு கேட்டே
இறந்து கிடந்தா

புத்தக விமர்சனம் 1

அழகியசிங்கர்  
 
 
 
 சமீபத்தில் நான் படித்தப் புத்தகம் ஆர் வெங்கடேஷ் எழுதிய இடைவெளி என்ற நாவல்.  நாவலின் மொத்தப் பக்கங்கள் 152தான்.  இன்றைய மெகா நாவல் காலத்தில் ஆர் வெங்கடேஷ் 152 பக்கங்கள் அடங்கும்படி ஒரு நாவல் எழுதி முடித்துவிட்டார். இதைப் பாராட்ட வேண்டும்.  152 பக்கங்களுக்குள் 3 குடும்பத்தின் கதையைக் கொண்டு வந்துள்ளார்.  மாற்றி மாற்றி ஒவ்வொரு குடும்பத்தைப் பற்றி சொல்லுவதே இந் நாவலில் முக்கிய இழையாகப் படுகிறது. 

    வாழ்க்கையில் ஒவ்வொருவரும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில், நல்ல சம்பளத்தில் வேலை செய்து கொண்டிருக்கும்போது எதிர்பாராதவிதமாய் வேலையை விட்டு நீக்கி விடுவதுகூட பெரிய பிரச்சினையாகிவிடும்.  அதை எப்படி எதிர்கொள்வது.

    நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைந்து போகும்போது, அதன் விளைவாக பலர் துன்பத்தில் ஆளாக நேரிடும்.  வேலையைத் தொலைத்துவிட்டு நிற்கு மூன்று நபர்கள் சம்பந்தப்பட்ட நாவல் இது.  ரஞ்சன், ஆர்த்தி, கல்யாண் மூவருக்கும் எதிர்பாராதவிதமாய் வேலை போய்விட அதை எப்படி எதிர்கொள்கிறார்கள்.

    உண்மையில் அவர்களால் எதிர்கொள்ள முடீயவில்லை.  துவண்டு போய்விடுகிறார்கள்.  கல்யாண் தற்கொலையே செய்து கொண்டு விடுகிறான். 

    இது புத்தகமாக வெளிவந்து படிக்க நேரிட்டாலும், இதைத் தொடர்கதையாகப் படிப்பது ரொம்ப நல்லது. இப்போதெல்லாம் தொடர் கதைகள் மரபு பத்திரிகைகளில் இருப்பதில்லை.  முன்பெல்லாம் போட்டி போட்டுக்கொண்டு பத்திரிகைகளில் தொடர்கதைகள் வெளிவரும்.  இந்த இடத்தை டிவி சீரியல் பிடித்துக்கொண்டு விட்டது.

    பத்திரிகைகள் தொடர்கதைகளை வெளியிட்டால், இன்னும் பலர் எழுத வாய்ப்பு கிட்டும்.  டிவி சீரியல் அப்படி அல்ல.  நாவலில் மூன்று குடும்பங்கள் மூன்றுவிதமானவை.  மாற்றி மாற்றி மூன்று பேர்களை மையமாக வைத்து கதையை ஆர் வெங்கடேஷ் திறமையாக நடத்திச் செல்கிறார். 

    இப்புத்தகத்தைப் பற்றி இன்னும் யோசிக்கும்போது இது துன்பத்தை வெளிப்படுத்தும் புத்தகம் என்று குறிப்பிடலாமாவென்று  தோன்றுகிறது.
    வாழ்க்கையில் எதாவது ஒரு வேலைக்குச் சென்று பணம் சம்பாதிப்பது என்ற குறிக்கோளுடன் பலர் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.    மிகச் சாதாரண வேலையைப் பார்த்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் காலம் தள்ளுபவர்களை நான் பார்த்திருக்கிறேன். 

    ஆனால் அவர்கள் வாழ்க்கையில் எதாவது ஒரு பிரச்சினை என்று வந்துவிட்டால், அவர்களால் சமாளிக்க முடியாது.  தாக்கு பிடிக்க முடியாது. 

    இடைவெளி நாவலில் அதிகமான வலியை ஏற்படுத்தியவன் கல்யாண் என்ற கதா பாத்திரம்தான்.  வேலை என்ற ஆதாரத்தில் வாழ்த்து வரும் கல்யாண், தொடர்ந்து பல தோல்விகளைச் சந்திக்கிறான்.  அவமானப் படுகிறான்.  ஒரு எல்லைக்கு மேல் அவனால் தாக்குப் பிடிக்க முடியவில்லை.  தற்கொலைதான் ஒரே வழி என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு தற்கொலையும் செய்து கொண்டு விடுகிறான்.

    கல்யாண் மாதிரி மற்ற இருவரும் பல துன்பங்களைச் சந்திக்கிறார்கள்.  அளவுக்கு அதிகமான சிந்தனை, தேவையில்லாத பிரச்சினைகளையும் ஏற்படுத்தி விடும்.  பக்கம் 80ல்…

    üüஒரு சாலை திருப்பத்தில், மணல் கொட்டியிருப்பது தெரியாமல் திருப்ப, வண்டி சரிந்து விழுந்தது..சில நொடிகள்தான்.  சாலையில் தான் விழுந்துகிடப்பதும், பெரிதாக அடியெங்கும் படிவில்லை என்பதும், ஏதோ யோசித்துக்கொண்டே ஓட்டியது தவறு என்றும் வரிசையாக காரணங்கள்..
 
    ஆர்த்திக்கு ஏற்படுகிற ஒரு நிகழ்ச்சியை நாவல் இப்படி விவரிக்கிறது.  வேலை போய்விட்ட பிறகு அதிகமான சிந்தனை பிரச்சினையை ஏற்படுத்துகிறது.  சாதாரணமாக எதையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

     வெங்கடேஷ் நாவலில் சில இடங்களில் உணர்வுகளின் மிகை உணர்ச்சி தென் படுகிறது.  டிவி சீரியலில் கதா பாத்திரங்கள் ஒருவரை ஒருவர் உரையாடும்போது சாதாரணமாகப் பேசுவதில்லை. 

    வாக்கியங்களை எழுதும்போது, வாசகர்களை பெரிதும் வெங்கடேஷ் குழப்புவதில்லை.  சின்ன சின்ன வார்த்தைகளை வைத்து வரிகளை அமைக்கிறார்.  படிப்பவர்களைத் தூண்டும் விதமாக.  அவருடைய இரண்டாவது நாவல். இது  தொடர்ந்து அவர் எழுத வாழ்த்துகள்.

இடைவெளி – நாவல் – ஆர் வெங்கடேஷ் – பக். 152 – விலை ரு.100
தொடர்புக்கு : வேத பிரகாசனம், 142 முதல் மாடி, கீரின்வேஸ் சாலை.
ராஜ அண்ணாமலைபுரம், சென்னை 600 028

   

யுத்தங்கள் அனைத்தினதும் பிரதிபலனை நாங்கள் இன்றும் அனுபவிக்கிறோம் !

தமிழில் – எம். ரிஷான் ஷெரீப், இலங்கை
குறிப்பு – ஆப்கானிஸ்தானில்
பிறந்து, அமெரிக்க நாவலாசிரியராக
சர்வதேச அளவில் புகழ்பெற்ற
எழுத்தாளர் காலித் ஹுஸைனி,
தனது 15 ஆவது வயதில் ஒரு ஆப்கானிஸ்தான்
அகதிச் சிறுவனாக அமெரிக்காவுக்குள்
நுழைந்தார். அப்பொழுது அவருக்கு
ஆங்கிலத்தில் ஒரு சில சொற்கள்
மாத்திரமே தெரிந்திருந்தது.
இன்று அவர் ஒரு வைத்தியர்,
அமெரிக்க சமூக நல அமைப்பின்
தூதுவர் மற்றும் சர்வதேச அளவில்
வரவேற்பைப் பெற்ற The Kite Runner, A Thousand
Splendid Suns ஆகிய நாவல்களை எழுதிய
எழுத்தாளராகவும் அறியப்பட்டிருக்கிறார்.
இவரது புதிய தொகுப்பான And the
Mountains Echoed எனும் நாவல் கடந்த மே
மாதம் 21 ஆம் திகதி வெளிவந்தது. 
அவரது புதிய நாவலை அடிப்படையாகக்
கொண்டு இடம்பெற்ற நேர்காணலின்
தமிழாக்கம் இது.
_________________________________________________________________________________
உங்களது முந்தைய
இரண்டு நாவல்களும் ஆப்கானிஸ்தானை
அடிப்படையாகக் கொண்டவை. உங்கள்
புதிய நாவலின் சம்பவங்களும்
ஆப்கானிஸ்தானை அடிப்படையாகக்
கொண்டிருந்த போதிலும், அதன்
கதையானது, பரம்பரைகள் மற்றும்
கால இடைவெளி பலவற்றைக் கடந்து
கிரீஸ், பாரிஸ் மற்றும் கலிஃபோர்னியா
போன்ற உலகின் பல்வேறு பிரதேசங்களுக்கும்
விரிந்து செல்கின்றது. ஆப்கானிஸ்தானைத்
தாண்டி சர்வதேச அளவில் கதையை
விரிவாக்கிச் செல்ல நீங்கள்
தூண்டப்பட்டது எவ்வாறு?
காலித் ஹுஸைனி
: குடும்பம்
எனப்படுவது ஒரு ஆப்கானியனின்
வாழ்க்கையில் மிகவும் முக்கியமான
ஒரு அடையாளம் ஆகும். எவரும்
தன்னையும், தன்னைச் சுற்றியிருப்பவரையும்
புரிந்து கொள்வதைப் போலவே
உலகம் போன்ற அனைத்தினுள்ளும்
தன்னை நிலைநிறுத்துவதும்
குடும்பத்துக்கு இணையாகத்தான்.
இந் நாவலின் கதையை ஆப்கானிஸ்தானுக்கு
வெளியே கொண்டு சென்றது நான்
வேண்டுமென்றே செய்த ஒன்றுதான்.
அவ்வாறே இக் கதையின் யதார்த்தமான
நடைக்கு அவ்வாறான சர்வதேசப்
பரம்பல் அவசியமானது. காபூல்
நகரத்தில் ஆரம்பித்து கந்தஹார்
பிரதேசத்தில் முடியும் ஒரு கதையைக் கூற எனக்கு அவசியப்படவில்லை.
கடந்த பத்து வருட காலத்துக்குள்
நான் உலகின் பல இடங்களுக்கு
பயணம் செய்து பெற்ற அனுபவங்களை,
எனது கதையின் கதாபாத்திரங்களுக்குத்
தேவையான பூகோளச் சுற்றாடலை
உருவாக்குவதற்கு உபயோகப்படுத்த
எனக்குத் தேவைப்பட்டது. அவ்வாறே
ஒரு எழுத்தாளராக ஆப்கானிஸ்தானைத்
தாண்டிய அனுபவங்களை எனது படைப்பில்
சேர்த்துக் கொள்ள நான் விரும்பினேன்.
சில எழுத்தாளர்கள் தமது வாழ்நாள்
முழுவதும் ஒரே நகரத்தை அடிப்படையாகக்
கொண்டு அருமையான பல புத்தகங்களை
எழுதுகின்றனர். அது பாராட்டப்பட
வேண்டிய திறமைகளிலொன்று. எனினும்
எனக்கு இத் தொகுப்பை எழுதும்போது
இந்த இடத்தைத் தாண்டிச் செல்வதே
எனது தேவையாக இருந்தது.
மிகச் சாதாரணமானதொரு
எண்ணத்தோடுதான் இப் புத்தகத்தை
ஆரம்பித்தேன். ஒரு தந்தை, தனது
சிறு பிள்ளைகள் இருவரோடு பாலைவனத்தினூடு
காபூல் நகரம் நோக்கிச் செல்லும்
சந்தர்ப்பமொன்றின் மூலம்
அந்த எண்ணம் விரிவடைகிறது.
எல்லாப் பக்கங்களிலும் கிளை
விரித்துள்ள மரமொன்றின் தண்டைப்
பற்றிய சித்திரம் என்னுள்
வரையப்பட்டிருந்தது. அந்தச்
சாதாரண எண்ணம் மற்றும் மரத்
தண்டின் உருவத்துக்கு மேலதிகமாக
வேறெதுவும் கதையொன்றாகக்
கோர்க்கப்பட்டிருக்கவில்லை.
முதலில் பிரான்ஸுக்குச் செல்வது
குறித்தும் அங்கிருந்து பிறகு
கிரீஸுக்குச் செல்வது குறித்தும்
எண்ணம் எதுவும் முதலில் எனக்குள்
இருக்கவில்லை. கதையானது, அதுவாகவே
படிப்படியாக அவ்வாறு உருவானது.
இக் கதையானது எவ்வளவு தூரம்
விரிந்து செல்லும் என்பதையும்
எவ்வளவு வாழ்க்கைகளை இக் கதையின்
மூலம் தொடமுடியும் என்பதையும்
தேடிப் பார்ப்பதுவே எனது தேவையாக
இருந்தது.
The Kite Runner நாவலுக்கு
அடிப்படையாக அமைந்த அனுபவம்
எது?
காலித் ஹுஸைனி
: அக் கதையானது
அதிகளவில் புனைவாகவே எழுதப்பட்டது.
ஆனால் 1999 ஆம் ஆண்டின் மழைக்காலத்தில்
ஓர் தினம் தொலைக்காட்சியில்
நான் பார்க்க நேர்ந்த செய்தியொன்று
அக் கதைக்கு அடிப்படையாக அமைந்தது
எனக் கூறலாம். அச் செய்தியில்
தலிபான்களைப் பற்றி ஒளிபரப்பப்பட்டது.
ஆப்கான் மக்களுக்கு தலிபான்களால்
விடுக்கப்படும் பல்வேறு எச்சரிக்கைகள்
குறித்து அச் செய்தியில் கூறப்பட்டது.
அவர்கள் காற்றாடி விளையாட்டையும்
தடை செய்திருப்பாக அச் செய்தியில்
அறிவிக்கப்பட்டது. காபூல்
நகரத்தில் வாழ்ந்த காலத்தில்
எனது உறவினர்களுடனும், நண்பர்களுடனும்
காற்றாடி விட்டு விளையாடிய
என்னைத் திகைப்படையச் செய்ய
அச் செய்தியால் முடியுமாக
இருந்தது.
ஆகவே அச் செய்தியைச்
செவிமடுத்த பிறகு நான் எனது
எழுதும் மேசைக்கருகே அமர்ந்து
காபூல் நகரத்தில் காற்றாடி
விடும் விளையாட்டை விளையாடிய
சிறுவர்கள் இருவரைப் பற்றி
25 பக்கங்களில் ஒரு சிறுகதையை
எழுதினேன். அது நான் நினைத்ததிலும்
பார்க்க, அனுதாபத்தைத் தோற்றுவிக்கக்
கூடிய விதத்தில் வெற்றிகரமாக
எழுதப்பட்ட ஒரு கதையாக அமைந்தது.
அதை எழுதி சில வருடங்கள் கடந்த
பிற்பாடு, 2001 ஆம் ஆண்டு மார்ச்
மாதத்தில் அக் கதையை மீண்டும்
வாசிக்கும்போது அதனை ஒரு நாவலாக
எழுத வேண்டுமென எனக்குத் தோன்றியது.
ஆகவே நான் அக் கதையை மேலும்
செப்பனிட்டும், மேலும் விடயங்களைச்
சேர்த்து விரிவுபடுத்தியும்
நாவலொன்றாக வடிவமைக்கத் தொடங்கினேன்.
அது பிற்காலத்தில் The Kite Runner நாவலாக
அமைந்தது.
நீங்கள் அதன்பிறகு
எழுதிய A Thousand Splendid Suns எனும் படைப்பில்,
ஆப்கானிஸ்தானில் பெண்கள்
எதிர்நோக்கும் மிகவும் வித்தியாசமான
அனுபவங்கள் மீது கவனம் செலுத்தப்பட்டிருந்தது.
இந் நாவலை எழுத நீங்கள் தூண்டப்பட்டது
எவ்வாறு?
காலித் ஹுஸைனி
: நான் The Kite Runner
நாவலை எழுதி முடித்ததுமே இரண்டாவது
தொகுப்பையும் எழுத வேண்டுமென
எனக்குத் தோன்றியிருந்தது.
அவ்வாறே பெண்கள் குறித்து
எழுத வேண்டுமெனவும் எனக்கு
எண்ணமிருந்தது. நான் 2003 ஆம்
ஆண்டு மார்ச் மாதத்தில் ஆப்கானிஸ்தானுக்குச்
சென்ற நேரத்தில் யுத்தத்தின்
உண்மையான குரூரத்தை நான் எனது
கண்களால் நேரடியாக காணக் கூடியதாக
இருந்தது. யுத்தத்தின் காரணமாக
பெண்களின் வாழ்க்கையைக் குறிவைத்துள்ள
அழுத்தங்கள், அவர்கள் முகங்கொடுக்க
வேண்டியுள்ள துயரங்கள், இடர்கள் மற்றும் பாலியல்
வன்முறைகள், தடைகள், சாமான்ய
வாழ்க்கை நடைமுறைகளிலிருந்து
விலகி வாழ வேண்டிய நிர்ப்பந்தங்கள்,
மகளிர் இயக்கங்களுக்கு கட்டுப்பாடுகள்
விதிக்கப்பட்டமை, தமது சட்டங்கள்,
சமூக மற்றும் அரசியல் உரிமைகள்
போன்றவற்றுக்காக  முன்வருதல்
தடுக்கப்பட்டமை போன்ற பல விடயங்கள்
குறித்த கதைகளை நான் செவிமடுக்க
நேர்ந்தது.
அது மிகவும் குரூரமான
நிலையென எனக்குத் தோன்றியது.
அதே போல அவை அனைத்தினுள்ளும்
மிகவும் முக்கியமான கதையொன்று
இருப்பதாக எனக்குள் உணர்ந்தேன்.
நான் 2003 ஆம் ஆண்டு காபூல் நகரத்தில்
இருந்தபோது, பெண்களைக் குறித்து
தனிப்பட்ட ரீதியில் பல கதைகளைக்
கேள்வியுற்றேன். அக் கதைகள்
பல வருடங்களாக ஒன்றாக இணைந்து
கதாபாத்திரங்கள் பல கட்டியெழுப்பப்பட்டன.
அதற்கிணங்க ஒரு சந்தர்ப்பத்தில்
கதையானது கோர்க்கப்பட்ட பிற்பாடு,
நான் அதன் மூலமாக A Thousand Splendid Suns
நாவலை எழுதினேன்.
A Thousand Splendid Suns நாவலை
எழுதியது, The Kite Runner நாவலை எழுதியதை
விடவும் சிரமமான காரியமாக
அமைந்ததா?
காலித் ஹுஸைனி
: மிகவும் கடினமான
காரியமாக அமைந்தது. ஒருவரினதல்லாமல்,
ஒன்றுக்கொன்று வேறுபட்ட சமூக
பின்புலத்தைக் கொண்ட, ஒருவரிடமிருந்து
மற்றவர் வேறுபட்ட பெண்கள்
இருவரது கோணத்தில் எழுதுவது
உண்மையாகவே ஒரு சவாலாக இருந்தது.
அதனால், அநேகமான சந்தர்ப்பங்களில்
நான் அதனோடு உண்மையிலேயே போராட
வேண்டியிருந்தது. இறுதியில்,
ஆப்கான் பெண்மணியொருவருக்குப்
பொருத்தமான நிஜக் குரலைக்
கைப்பற்றிக் கொள்ளுதல் போன்றவை
குறித்து தீவிரமாகச் சிந்திப்பதை
நிறுத்தியதன் பிறகு, ஒரு சந்தர்ப்பத்தில்
கதாபாத்திரங்கள் உயிரோட்டத்தோடு
படைக்கப்படத் தொடங்கின.
இக் கதையில்
அச்சங்கள், சிக்கல்கள், எதிர்பார்ப்புக்கள்
பொய்த்துப் போதல் மற்றும்
ஆளுமையுடன் இணைந்த பல்வேறு
அடையாளங்கள் போன்ற நிறைய விடயங்கள்
ஒன்றாக இணைந்த மனித வாழ்க்கைகளை
முன் வைத்து நான் எழுதினேன்.
எனவே, அதனாலேதான் ஏதோவோரிடத்தில்
அக் கதாபாத்திரங்கள்  அவற்றுக்கு
உரித்தான வாழ்க்கையைப் பெற்றுக்
கொண்டு மிகவும் யதார்த்தமான
கதாபாத்திரங்களாகத் தோன்றின.
30 வருடங்களாக
இடம்பெற்ற யுத்தமானது உங்கள்
தேசத்தின் கலாசாரத்துக்கும்
ஆப்கானிஸ்தானுடைய அன்றாட
வாழ்க்கை நடைமுறைகளுக்கும்
ஏற்படுத்திய அழுத்தங்கள்
எவ்வாறானதென உங்களால் விவரிக்க
இயலுமா?
காலித் ஹுஸைனி
: அவை, ‘இதோ இவ்வளவுதான்’
எனக் காட்ட முடியாத அளவுக்கு
மிகப் பாரிய அழுத்தங்கள். ஆப்கானிஸ்தானில்
இடம்பெற்ற பல்வேறு யுத்தங்கள்
அனைத்தினதும் பிரதிபலனை நாங்கள்
இன்றும் அனுபவிக்கிறோம். உலகில்
ஆப்பிரிக்காவுக்கு உரித்தற்ற
வறிய நாடுகளிடையே ஒன்றாகக்
கருதப்படும் நாடாக அது மாறியிருக்கிறது.
உலகில் 218 ஆவது மட்டத்திலிருக்கும்
கரடுமுரடான நில உற்பத்திகளோடு,
மக்கள் தொகையில் நூற்றுக்கு
முப்பது சதவீதமானோர் வறுமையின்
கடைநிலைக்கும் கீழிருக்கும்
நிலையே இப்போது எமது நாட்டிலிருக்கிறது.
நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும்
பாதுகாப்பற்ற நிலை கொஞ்சம்
கொஞ்சமாக அதிகரித்தபடியிருக்கிறது.
பத்து இலட்சத்துக்கும்
அதிகமான மக்கள் ஈரான், பாகிஸ்தான்
போன்ற நாடுகளிலிருந்து மீண்டும் ஆப்கானிஸ்தானுக்கு
திரும்பி வந்திருக்கின்றனர்.
2002 ஆம் ஆண்டிலிருந்து இன்று
வரை 57 இலட்சமளவு பெருந்தொகையான
மக்கள் திரும்பவும் ஆப்கானிஸ்தானுக்கு
வந்திருக்கின்றனர். இவ்வாறு
ஆப்கானிஸ்தானுக்கு மீண்டு
வந்த மக்கள், ஆப்கானிஸ்தானில்
சாதாரண வாழ்க்கைக்குத் திரும்புவதென்பது
மிகவும் சிரமமான காரியமாக
மாறியிருக்கிறது. மீண்டும்
வழமை போல, முன்பிருந்தது போன்று
தமக்கு நன்கு தெரிந்த மக்கள்
சமூகத்தோடு இணைந்து தமது வாழ்க்கையை
மீண்டும் ஆரம்பிப்பது அவர்களுக்கு
மிகவும் கஷ்டமான விடயமாக ஆகியிருக்கிறது.
இதனாலேயே ஆப்கானிஸ்தானுக்கு
நீண்ட கால பொருளாதார அபிவிருத்தியின்
அவசியத்தை உணர்த்த வேண்டியிருக்கிறது.
கிராமங்களுக்குச் சென்று
கிராம மட்டத்தில் மக்களது
வாழ்க்கையைக் கட்டியெழுப்பக்
கூடிய அபிவிருத்தி நடவடிக்கைகள்
தேவைப்படுகின்றன. அவ்வாறே
ஆப்கானிஸ்தானுக்கு யுத்தத்
தீர்வொன்று தேவையற்றதெனக்
கூறுவது சம்பந்தமாக நாம் அனைவருமே
இப்பொழுது ஒரு பொதுவான இணக்கத்துக்கு
வந்திருக்கிறோம்.

அம்மா……

சின்னப்பயல் 

காரணப்பெயர்

எழுதிவைத்த
கவிதைக்குக்கீழ்
போட்டுக்கொண்ட

பெயர்
தான்
முதலில்
எழுதியது
பின்னர்
மேலே மேலே
எழுதியது
தான்
இப்போது
நீங்கள்
வாசிப்பது.

ஒளிரும்பெயர்

உன்
பெயரைத்தேடியெடுத்து
எப்படி
ஒளிரவைக்கிறாய்
என் செல்பேசியில்
?!

அதுமட்டுமே

உனைக்காட்டிலும்
எனக்கு
இரண்டுவயது
கூடுதல்

அதுமட்டுமே

அம்மா

காய்கறி
சாப்பிடவில்லையென்றால்
ஒரு கை மட்டுமே
வளரும்
இன்னொரு கை
குட்டையாகவே இருந்துவிடும்
பழத்தோடு கொட்டையை
சேர்த்துச்சாப்பிட்டால்
வயிற்றில் மரம்
முளைத்துவிடும்
இப்படியெல்லாம்
எனக்கு
விளையாட்டுக்காட்டி
செல்லமாக
பயமுறுத்திய
என் அம்மா
இப்போது
உறங்கிக்கொண்டிருக்கிறாள்
எத்தனை
கூப்பிட்டும் எழவில்லை
என் சின்னக்கைகள்
கொண்டு
அசைத்தும்
பார்த்துவிட்டேன்.
எழவேயில்லை.
இதற்கும் ஏதாவது
ஒரு காரணம் சொல்லி
என்னை
மகிழ்விப்பாள்
காத்திருக்கிறேன்

காலம் கடந்து
கொண்டிருக்கிறது
அவளின் கைகள்

ஏன்
குளிர்ந்துபோய்விட்டன
என்று மட்டும்
தெரியவில்லை.

உடல்மொழி

ஏற்றுக்கொள்ளாமலும்
வெறுக்காமலும்
இருக்க நினைக்கிறாய்
இருப்பினும்
நட்பில் தொடர விருப்பமெனில்
எனக்கும்
ஒரு வாய்ப்பிருக்கிறது
என்ற
உன் உடல்மொழியால் ஏன்
என்னைத்தொடர்ந்தும்
நிந்திக்கிறாய் ?

வாசல்

வாய்ப்புகள்

கதவில்லாத
வாசல் வந்து
நிற்கும்போதும்
கூட
வரவேற்கத்தெரியாமல்
நின்றிருக்கிறேன்.

இன்னும் ஒரு …

 
A .தியாகராஜன்
எல்லாரும் போயாச்சு –
அங்கே இருந்த கடைசி நாற்காலியையும் 
தரதரவென இழுத்து மலை மாதிரி 
இருந்த நாற்காலி போர் ஒண் ணு மேல 
இடி சத்தம் மாதிரி சத்தத்தோட 
அந்த ஆள் போட்டான் .
கல்யாண மண்டபத்து ஹால் காலி 
தரை இன்னும் சுத்தம் செய்யப்படாமல் 
ஆனாலும் விழவுக்களம் கமழ்ந்து கொண்டு 
வயசான இம்ப்ரஷனை கொடுத்துக் கொண்டு …
கட்டுசாதம் வாசல் டாக்சி ஒன்றில் அனாதையாய் –
ஓட்டுனர் ஓரக்கண்ணால் அதை அளந்து கொண்டிருந்தான்.
ஒரு டீ கிடைக்குமா என எனது குரல் 
மிகவும் க்ஷீணித்தே 
ஆனாலும் கட்டாயம் கேட்டிருக்க 
வேண்டும்-
 
பல வாழ்க்கைக் கனவுகள் 
பெண் மாப்பிள்ளை தவிரவும்  
வந்திருந்த பலர் தவிரவும் 
அந்த வராத டீ யிலும் வியாபித்து 
தனி பாதை ஒன்றில் 
ஒரு பயம் கலந்த எதிர் பார்ப்பில் 
பாதை உண்டா சேருமிடம் உண்டா 
நிச்சயம் சஞ்சலம் என்று 
அடிகள் கொண்டு …
மிச்சம் இருப்பது 
இந்த ஹாலின் தனிமை 
மட்டுமே 
இப்போதைக்கு-
இப்படித்தான் அந்த கடைசி 
கல்யாணமா ரிசப்ஷனா 
அதிலும்- 
அதில் பெண்ணின் அப்பா 
ஒரு மௌனத்தில் தான் யார் என்று மறந்து 
தரையில் தூங் கியே விட்டார் –
ஒருவாய் வத்தகுழம்பும் சுட்ட அப்பளமும் 
போறுமென்று யாரிடம் கூவுவது 
“சீக்கிரம் கூட்டுயா
அடுத்த பார்டி மத்யானம் வந்திரும் 
அது யூனியன் மீட்டிங்யா 
டிபனோட சரி…