யுகமாய் நீ

ராமலக்ஷ்மி
கூட்டை உடைத்துக் கொண்டு நீ
வெளியில் வரக் கேட்டுக் கொண்டது
வரலாற்றின் ஒரு காலக் கட்டம்
தயக்கங்கள் உதறிச் சிறகுகள் விரித்து 
பெண்ணே நீ 
உயர உயரப் பறந்து பொழுது
செம்பிழம்புச் சூரியன் 
வெம்மை உனைத் தாக்கிடுமோவென
முகில்களுக்குப் பின் ஒளிந்து
கொண்டது
ஒவ்வொரு துறையிலும் நீ 
சிகரம் தொட்ட வேளைகளில்
மலையெங்கினும் பூத்தன  மலர்கள் 
மகிழ்ச்சியில்
வீதியில் இறங்கி நீ நடக்கையில் 
மகளெனப் பரந்த வானம் 
குவிந்து ஆசிர்வதிக்கப் 
பூரிப்புடன் துணை வந்திருந்தாள் 
பூமாதேவி
அறம் பூரணமாய்த் தழைக்க
அதர்மம் முற்றிலுமாய் அழிய
வரம் வாங்கியிராத
மண்ணில்,
துளிர்க்கின்ற சுதந்திரங்கள்
செழித்து வேர்விடும் முன்னரேப் 
பறித்தெறியப்படுகின்றன
வக்கிர மனங்களால்
கைகளைக் கட்டிக் கொண்டு
வேடிக்கைப் பார்க்கிறது 
கொடுப்பது போல் கொடுத்து
எடுத்துக் கொள்ளும் 
கோரவிளையாட்டில்
என்றுமே தோற்காத காலம்
ஏனென ஏறிடும் உன் விழிகளை
எதிர்கொள்ள இயலாமல் நிலவு
தகிக்க
எரிந்து விழுகின்றன நட்சத்திரங்கள்
தாங்கிப் பிடிக்கக் கீழே வலையற்ற
நூறடி உயரத்தில் கட்டப்பட்ட
நூலிழை வித்தைக் கயிற்றினை,
உலகின் விமர்சன வெளிச்சங்கள்
உடம்பெங்கினும் ஊடுருவக் கடக்கிறாய்..
கைகளைக் காற்றில் பரப்பி
ஒவ்வொரு அடியாக

4 Replies to “யுகமாய் நீ

  1. /// ஏனென ஏறிடும் உன் விழிகளை
    எதிர்கொள்ள இயலாமல் நிலவு தகிக்க
    எரிந்து விழுகின்றன நட்சத்திரங்கள் ///

    வாழ்த்திய வரிகள் அனைத்தும் மிகவும் அருமை… வாழ்த்துக்கள்…

  2. // கொடுப்பது போல் கொடுத்து எடுத்துக் கொள்ளும் கோரவிளையாட்டில் என்றுமே தோற்காத காலம் ////

    100% நிதர்சன உண்மை..கவிதை மிக அருமை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *