எனக்கு ஒரு பைத்தியகார அக்காவை தெரியும்

-ஜெம்சித் ஸமான்

35 வயதை கடந்துவிட்ட
அநாதை அக்கா
இப்போது சகோதரிகளின்
பராமரிப்பில் இருக்கிறார்

வெய்யில்
மழை எது வந்தாலும்
யாரும் அந்த சகோதரியை கவனிப்பதில்லை

இரவில் உறங்குவதை தவிர
வீட்டின் உள்ளே வரவும்
அனுமதியில்லை

சிறு குழந்தைகளை போலதான்
அந்த அக்காவின் உலகமும் வேறு
ஆனால் குழந்தைகளுடன் இருப்பதை போல
இவர்களுடன் யாரும்
அன்பாக இருப்பதில்லை

ரொட்டி துண்டங்களை
அப்படியே உண்டுவிடும் அக்காவுக்கு
ரொட்டித் துண்டங்களை சிறிது சிறிதாக பிய்த்து
யாருமே உண்ணக் கொடுப்பதில்லை

சுடச் சுட தேநீரை அருந்தி முடிக்கும்
அக்காவுக்கு
சூடு ஆறிய தேநீரை
யாரும் அருந்தக் கொடுப்பதில்லை

குளிப்பாட்ட
ஆடை மாற்ற
முகம் கழுவ
உணவு அருந்த
தலை சீவ
அடம் பிடிக்கும் குழந்தைகளை
எந்த அம்மாக்களும்
அப்படியே விட்டு விடுவதில்லை

எனக்கு தெரிந்த அக்காவை மட்டும்
ஏன் அப்படியே விட்டு விடுகிறார்கள்

சிறு குழந்தைகள்
வீட்டு திண்ணைகளில்
சிறு நீர் கழிக்கும் போதும்
வீட்டு வாசலில்
மலம் கழிக்கும் போதும்
மகிழ்வோடு துப்பரவு செய்யும்
அன்பான அம்மாக்கள்
ஏன் எனக்கு தெரிந்த
அக்காவை மட்டும்
சுடு சொற்களால் வஞ்சிக்கிறார்கள்

மாத விலக்கு நாட்களென்றால்
அந்த அக்காவை கடப்பதற்கே
முகம் சுழிப்பாக இருக்கும்
அந்த அக்காவும்
ஒரு பெண்தான் என்பதை
எப்படி மறந்தார்கள்

தயவாக பணிக்கும்
அக்காவின் ஏக்கம் தளும்பும் விழிகளை
இவர்கள் ஒரு நாள் என்றாலும்
கூர்ந்து பார்த்ததில்லையா..?

நடு நிசி கடந்து
விழிப்பு தட்டும் போதெல்லாம்
குளிரில் விறைத்து நடுங்கும்
இரவின் அமைதியை
கீறிக் கொண்டு எழும்பும்
அந்த அக்காவின் சுய பிதற்றல்கள்
இப்போது கேட்பதில்லை

அக்கா அமர்ந்திருக்கும் வாசலில்
இப்போது பதிதாக
பூக் கன்றுகள் பூத்திருக்கின்றன

அவர்கள் குழந்தைகள் விழையாட
நிழல் கூடாரங்கள்
அமைத்திருக்கிறார்கள்

கூடாரமில்லாத முற்றத்து
வெய்யிலில்தான் ஒரு நாள்
அக்கா தண்ணீர் கேட்டு கேட்டே
இறந்து கிடந்தா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *