அறுபதாம் தோட்டத்து மரண ஊர்வலம்

மொழிபெயர்ப்புக் கவிதை

கரங்களைக் கோர்த்து இரு வரிசையில்
முகத்துக்கு முகம் பார்த்தபடி
ஏழெட்டு வீடுகளையேனும் ஒழுங்காகக்
கட்டிட முடியாத நிலமொன்றில்
நெருங்கியடித்துத் தம்மை நுழைத்துக் கொண்ட
அறுபது வீடுகள்

அவற்றின் மத்தியால் செல்லும்
முச்சக்கர வண்டியொன்றேனும் பயணித்திட முடியாத
குறுகிய ஒழுங்கையின் இருமருங்கிலும்
இரண்டு வரிசைகளில் போடப்பட்டுள்ளன
ப்ளாஸ்டிக் கதிரைகள்

ஒரே விதமாகத் திறந்தே கிடக்கின்றன
எல்லா வீடுகளின் யன்னல்களும் கதவுகளும்

அமர்ந்திருக்கின்றனர் எல்லா வீட்டு முற்றங்களிலும்
வருபவர்கள் எல்லோரும்

அறுபதாம் தோட்டத்தில் வசித்த மூத்த குடியவள்
எவர்க்குப்
பசியெனினும் உண்ண உணவு கொடுத்து
எல்லோரது துயரத்துக்கும் ஒன்றுபோலவே செவிமடுத்தவள்
முழு அறுபதாம் தோட்டத்துக்கும்
அம்மா அவள்
பாட்டியவள்

எண்பத்தைந்து வருடங்களாக
துயரத்தை மட்டுமே அனுபவித்திருந்தாலும்
விழிகளிலிருந்து ஒரு துளிக் கண்ணீர் வழியவிடாது
எந்த நோய் நொடியும் தீண்டிடாது
ஒரு மலை, ஒரு பெருவிருட்சம் போன்றிருந்த
“ரத்து மார்கரெட் நோனா”
வீட்டுக்குள்ளே வந்துபோகும்
எவர் குறித்தும் அக்கறையற்று
சிறிய வரவேற்பறையின் மத்தியில்
மாமரப் பலகையால் செய்த
பெட்டியில் உறங்குகிறாள்
தன் பாட்டில் சுதந்திரமாக

ஓரிடத்திலிருந்து
மாஜரீன் பூசப்பட்ட பாண்துண்டுகளைக்
கொண்டு வருகையில்
மற்றோர் இடத்திலிருந்து கொண்டுவருவர்
தேனீரையும் பிஸ்கட்டையும்

ஒரே வீடு ஒரே குடும்பமென
எல்லா விழிகளிலும் கண்ணீரேந்தி
ஒன்றாக எல்லோருமே விழித்திருப்பார்கள்
இன்று அறுபதாம் தோட்டத்தில்

மூலம் – சஜீவனீ கஸ்தூரி ஆரச்சி (சிங்கள மொழி மூலம்)

தமிழில் – எம். ரிஷான் ஷெரீப், இலங்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *