அச்சங்கள்

 ராமலக்ஷ்மி


தோளில் வலையுடன் காடு மேடுகளில்
தேடித் திரிகிறான் கவிதையை,
ஒரு வேடனைப் போல.
காற்றைக் கிழித்தபடி
கிளியொன்று தன் குஞ்சுகளுக்காகக்
கவ்விப் பறந்தச் சோளக் கதிரிலிருந்து
நிலத்தில் உதிர்ந்த சிலமணிகளை,
ஆசையுடன் கொத்தப் போனச்
சாம்பல்நிறப் புறா மேல்
சாதுரியமாய் வலையை வீசுகிறான்.
தப்பிக்கும் போராட்டத்தில்
தோற்றுத் தளர்ந்த
பறவையின் கால்களை
இடக்கையால் வசமாய்ப் பற்றி
எடுத்துச் செல்கிறான்.
ஆனால்..
அது சுவைக்கப் படுகையில்
ஏற்படவிருக்கும் சத்தத்தை
எண்ணிப் பயப்படுகிறான்.
இருண்ட, அறியாத பாகங்களைக் கொண்ட
அதன் உடற்கூறு குறித்து
அச்சமுறுகிறான்.
தூக்கிப் பிடித்து
அப்படியும் இப்படியுமாகத்
திருப்பித் திருப்பிப் பார்க்கிறான்.
திடுமெனத் திறந்து கொண்ட அதன்
சிகப்புநிறச் சிறுகண்
தன்னை இகழ்ச்சியாய்ப் பார்ப்பதைத்
தாங்க மாட்டாமல்
விரல்களைப் பிரிக்கிறான்.
கண் எதிரே படபடத்துக்
கைநழுவி உயர உயரப் பறக்கிறக்
கவிதைப் புறாவை..
பார்த்துக் கொண்டே நிற்கிறான்.

2 Replies to “அச்சங்கள்

  1. கவிதைப்புறா கையிலிருப்பதைவிடவும், கறியாய் ருசிப்பதைவிடவும் வானளாவிப் பறக்கும்போதுதான் அழகு என்பதை அறிந்துவிட்டிருக்கிறான் வேடன். அழகிய கவிதைக்குப் பாராட்டுகள் ராமலக்ஷ்மி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *