பறவையின் இறகு

 

 வாசித்துக் கொண்டிருந்த புத்தகத்தில்
67 -ம் பக்கஎண் அடையாளமாக
ஒரு பறவையின் இறகை
செருகி இருந்தேன்.

மீண்டும் வாசிக்கஎடுத்தபோது
83  -ம்பக்கத்தில்
பறவையின் இறகு இருந்தது.

இப்பொழுது
பறவையின் இறகை
கையில்வைத்துக்கொண்டு
கற்க ஆரம்பித்திருக்கிறேன்
67 -ம் பக்கத்தில் இருந்து
83  -ம் பக்கத்திற்கு
எப்படி பறப்பதென்று?

     

தசாவதாரம்

அலைகள் ஒன்றையொன்று
துரத்தி விளையாடுகிறது
குளத்தில் சலனம்
எறிந்த கல்
நீரில் அமிழும்
கோயில் நகரத்தில்
கடவுளுக்கு இடமில்லை
விபத்து நடந்த பகுதியில்
வாகனங்கள் விரையும்
வேகத்தைக் குறைக்காமல்
வாழ்க்கை ரகசியம்
ஜாதகக் கட்டத்தில்
தெரியுமென்றால்
ஜோதிடக்காரன்
அன்னாடங்காச்சியாக
இருப்பதேன்
ஈரம் இல்லாத
மனிதர்களால் தான்
உலகம் விளிம்பில்
நின்று கொண்டிருக்கிறது
ஆளுக்கேற்றபடி
வேஷம் போடத் தெரியாதவன்
தேசாந்திரியாகத்
திரிய வேண்டியது தான்.

சொல்லிச் சென்ற நொடியிலிருந்து..

*
நீ
மீண்டும் வருவதாக
சொல்லிச் சென்ற நொடியிலிருந்து
நான்கு மொட்டுகளோடு
மலராமல் காத்திருக்கிறது
பூச்செடி

உனக்கென எழுதிக் கொண்டிருக்கும்
கடிதத்தை
நினைக்கும் கணமெல்லாம்
மேஜை விளிம்புவரை வந்து
எட்டிப் பார்த்து விலகுகிறது
ஜன்னல் திரை

ஒரு வார இடைவெளியை
ஓராயிரம் பட்டாம்பூச்சி சிறகுகளின்
வர்ணங்கள் உதிர்ந்து
புரியா ஓவியமாகிறது இத்தனிமை அறை

******

இரண்டு கவிதைகள்

1.

நான் பஸ்ஸில்
வந்து கொண்டிருந்தேன்
இருக்கை எதுவும் தட்டுப்படவில்லை
பஸ்
ஊர்ந்து ஊர்ந்து
சென்று கொண்டிருந்தது
பல ஊர்களைத் தாண்டியது
பல மனிதர்களைச் சுமந்து சென்றது
வயல்களைத் தாண்டியது
உயரமான மரங்களைத் தாண்டியது
கூட்ட நெரிசலில்
ஒழுங்கற்ற சப்தம் பஸ்ஸில்
சுழன்றபடி சென்றது
ஊர்ந்து ஊர்ந்து
பஸ் நகர்கிறது
நான்
பஸ்ஸில்
பயணித்துக்கொண்டிருக்கிறேன்.

2.

இந்த இடத்திற்கு
நான் வருவதற்கு முன்
இந்த இடம்தானா
என்று எனக்குத் தெரியாது.

சிக்கிம் –டாகுமெண்டரி

சத்யஜித்ராய் வாழ்ந்த காலத்தில் அவரால் முடிக்கப்பட்ட ஒரு படம் திரையிடப்படாமல் இருந்ததென்றால் அது சிக்கிம் டாகுமெண்டரி படம் மட்டுமே. அது மட்டுமல்ல அந்தப் படம் தீவிரமாக தணிக்கைக்கு உள்ளாகி தடையும் செய்யப்பட்டது. சிக்கிம் 1971ம் வருடம் எடுக்கப்பட்டது.
 அது திரையிடப்படாமலேயே பலகாலம் இருந்ததால் அது தொலைந்துவிட்டதாயும் கருதப்பட்டது. திடிரென 2003ல் அதன் நல்ல பிரதி பிரிட்டிஷ் பிலிம் இன்ஸ்டிட்யூட்டில் பத்திரமாக இருப்பதாக நம்பகமான தகவல் கிடைத்தது. அந்தப் படம் சென்ற வருடம் தான் பார்வைக்கு வந்தது.தற்சமயம் அது இணைய தளத்திலும் கிடைக்கிறது. இதன் மூலம் அவரது அனைத்துப் படைப்புகளும் மக்களுக்கு கிடைக்கப் பெற்றுள்ளன.

ஏன் இந்தப் படத்திற்கு இத்தனை எதிர்ப்புகள் என்பதை படத்தைப் பார்த்து எவராலும் புரிந்து கொள்ள இயலாது. ஒரு வேளை இந்தப் படம் சிக்கிம் முடியாட்சியின் கீழ் இருந்தபொழுது எடுத்த ஒன்று என்பதால் இது அந்த மக்களை இந்திய இணைப்புக்கெதிராக தூண்டிவிடும் என்று அச்சமுற வைத்ததா என்றால் அதற்கான ஆதாரங்கள் எதுவும் இதில் இல்லை . அதை எடுத்த இயக்குனர் ராய் தனது படங்களில் எத்தகைய பிரச்சாரத்திற்கும் தீவிர எண்ணங்களுக்கும் இடம் கொடாதவர் என்பதும் உலகறிந்த ஒன்று. மேலும் சிக்கிம் மக்களின் பகிரங்க ஒப்புதல் பெற்ற பின்னரே அது இந்தியாவுடன் இணைந்தது.

சிக்கிம்டாகுமெண்டரி மலை வாழ் மக்களின் அமைதியான வாழ்க்கையை எடுத்துரைக்கிறது. படம் அழகான காட்சிகளுடன் துவங்குகிறது. இமயமலையின் மூன்றாம் பெரிய சிகரமான கஞ்சன் ஜங்காவின் அரவணைப்பிலுள்ள  மலை பூமி சிக்கிம். ஆனால் அதை சுலபமாக வரைபடத்தில் பார்த்து தெரிந்து கொள்ள முடியாது என்று ராய் வர்ணிக்கிறார் . அதன் அப்போதைய அரசியல் பூகோள எல்லைகளாக தெற்கே-மேற்கு வங்காளம்,மேற்கே நேபாளம் , வடக்காயும் வடகிழக்காயும் திபெத், கிழக்காக பூடான் ஆகியன அமைந்துள்ளன. வடக்கிலிருந்து தெற்காக எழுபது மைல்களும் கிழக்கிலிருந்து மேற்காக நாற்பது மைல்களும் விஸ்தீரணம் கொண்ட நாடு சிக்கிம்.

சிக்கிம் நாட்டிற்கே உரித்தான தாவரங்கள்  அறிமுகப்படுத்தப்படுகின்றன. கோதுமை, பார்லி ஆகியவைதான் முக்கிய விவசாயப் பொருட்கள்.திபெத்தியர்கள் புராதனக் குடிமக்கள். நேபாளத்திலிருந்து இங்கு குடியேறியவர்கள்  இந்து சமயத்தினர். அதிக எண்ணிக்கையில் இருப்பவர்கள். ஆனால் அரச சமயம் மஹாயான பெளத்தம். கிறித்துவர்களும் சிறுபான்மையினராக உள்ளனர்.எல்லோரும் தங்களுடைய அடையாங்களுடன் கூடி வாழ்வது ஒரு தனிச்சிறப்பு.

ஒவ்வொரு  ஞாயிறு காலையிலும் சந்தை கூடுகிறது. மக்கள் தங்களது பொருட்களை அங்கு கொண்டுவந்து விற்கிறார்கள். அவர்கள் கடைபோடுவதை அனுமதிக்க  ஒரு சிறிய காகித சீட்டு வழங்கப்படுகிறது.பெரிய சந்தை சிக்கிமின் தலைநகரமான காங்டாக்கில் நடைபெறுகிறது.  அங்கே இந்தியர்களையும் காணமுடிகிறது.சலசலப்பில்லாத வாழ்க்கை முறையை மக்கள் கொண்டிருப்பதால் அதன் இயற்கை அழகை ரசிக்க சுற்றுலாப்பயணிகள் வருகின்றனர். அதன் மூலம் கிடைக்கும் வருமானம் கணிசமானது. அரசாங்கம் தனது வருவாயில் இருபத்தைந்து சதவிகிதத்தை மக்களின் கல்விக்காக செலவிடுகிறது. படத்தை தயாரித்த சோக்யால் (அரசர்)மக்களுடன் எளிமையாகப் பழகுவதாக படம் காட்டுகிறது. ஆனால் மக்களின் அதிருப்திக்கு அவர் ஆளானவர் என்பது சரித்திர தகவல். அவர் தனது முதல் மனைவி இறந்த பிறகு இரண்டாம் மனைவியாக ஹோப் குக் என்கிற அமெரிக்க பெண்ணை மணக்கிறார். அச்சமயம் சிக்கிம் செய்திகளில் கூடுதலாக அடிபடுகிறது.
ஆண்டு இறுதியில் ஒரு பெரும் விழா நடைபெறுகிறது . முகமூடி அணிந்த கலைஞர்கள்  அவர்கள் நாட்டு இசைக்கேற்ப நடனமாடுகிறார்கள். புதிய வருடம் பிறந்தவுடன் முந்தைய வருடத்தின் தீமைகள் அழிய ஒரு கூடாரம் கொளுத்தப்படுகிறது.
ஐம்பத்து ஐந்து நிமிட நேரப் படம் வண்ணத்தில் உருவாகியுள்ளது.அந்த காலத்தில் கதைப்படங்களும் கருப்பு வெள்ளையில்தான் பெரும்பாலும் தயாரிக்கப்பட்டன. இசை, வர்ணனை,இயக்கம் எல்லாம் ராய். படத்தொகுப்பு அவர் கட்டுப்பாட்டில் இல்லை என்று சொல்லப்பட்டது. படம் பார்ப்பவர்களுக்கு அது எளிதாகப் புலனாகிறது. ஷாட்டுகள்  ஒன்றுடன் ஒன்று லயமின்றி அவசர கதியில் இணைவதாய்  உள்ளன. படம் முழுவதிலும் மக்கள் கேமராவைப் பார்த்தபடி உள்ளனர். அது இயற்கையாகக் இருந்தாலும் அவர்களது வாழ்க்கை முறையை அதன் கதியில் நம்மால் காணமுடிவதில்லை என்கிற உணர்வும் ஏற்படுகிறது. சடங்குகளில் ஈடுபடும்போதுதான் அவர்கள் தங்கள் வேலைகளை பார்க்கிறார்கள். ராயின் முதல்படமான ரவீந்திரநாத் தாகூரைப் போலவே இதிலும் நேர்காணல்கள் எதுவுமில்லை. குறைகள் பல இருந்தாலும் பின்னால் வரும் சந்ததியினருக்கு அன்றைய சிக்கிம் மக்களின் வாழ்க்கை பற்றிய ஒரே ஆவணப்படம் என்கிற வகையில் இது முக்கியத்துவம் பெறுகிறது.

சிக்கிம் –டாகுமெண்டரி

                        

காக்கைகள் துரத்திக் கொத்தும் தலைக்குரியவன் – சிறுகதை

காக்கைகள் எப்பொழுதும் அவன் தலையைத்தான் குறி வைத்தன. அவன் பகல் வேளையில் வெளியே வந்தால் போதும். தெருவின் கரண்ட் கம்பிகள், தொலைபேசிக் கம்பிகளில், வேலியோரப் பூவரச மரங்களில், வீட்டுக் கூரைகளில், மீன் வாடியிலெனக் காத்திருக்கும் காக்கைகள் அல்லது ஒற்றைக் காக்கையேனும் அவனது தலையைக் குறி வைத்துப் பறந்து வந்து கொத்திவிட்டுச் செல்லும். ஒரு முறை கொத்திவிட்டுப் போன காக்கை, திரும்ப அவன் வெளியில் அலைந்து வீடு திரும்பும் வரை கொத்துவதுமில்லை, துரத்துவதுமில்லை. அவன் வீட்டுக்குத் திரும்பி, மறுபடியும் வெளியே வரும் சமயம் வந்து கொத்திவிட்டுப் பறக்கும். அதை அவன் கவனித்திருக்கிறான். ஒருமுறை கழுத்துப்பகுதியில் சிறகுதிர்ந்த, சற்று சாம்பல் நிறம் கலந்த காக்கை இப்படித்தான் செய்தது. எல்லாக் காக்கைகளும் இப்படித்தானென அதிலிருந்து அவன் புரிந்து கொண்டான். தங்களுக்குள் முறை வைத்துக்கொண்டு வந்து கொத்துகின்றனவோ என்று கூட ஐயப்பட்டான்.
காக்கை கொத்திவிட்டுப் பறக்கும்போதுதான் அவன் ஆதி முதல் கற்றறிந்த வசவு மொழிகளை வெளியில் உதிர்ப்பதைக் காணக் கிடைக்கும். ஓங்காரமான குரல், தெருவெல்லாம் அலறும். தலையைக் கொத்திப் போன வலி மறையும் வரை மிகக் கொச்சையான சொற்கள் எல்லாம் அவனிலிருந்து காக்கைகளுக்குப் பறந்துகொண்டே இருந்தன. தெருவின் பெரியவர்கள் தமக்கிடையே திட்டிக் கொண்டும், வீட்டுக் கதவு ஜன்னல்களை அடைத்தபடியும் தாங்கொணா அவனது வசவு மொழிகள் தமது வீடுகளுக்குள் நுழைந்திடாதபடி தடுத்துக்கொண்டனர். சிறுவர்களுக்கு அவனது தலையை காக்கைகள் கொத்திவிட்டுப் பறப்பது மிகப் பெரும் வேடிக்கையாயும், அவனுதிர்க்கும் சொற்கள் அவனை மீண்டும் மீண்டும் உசுப்பியும் குழப்பியும் விடப் போதுமானதாயும் இருந்தன. காக்கைகளெல்லாம் கொத்திவிட்டுப் பறந்த பின்னர் அவன் திட்டித் திட்டி ஓய்ந்து, தலையைத் தடவிய படியும், தடவிய விரல்களில் இரத்தச் சிவப்புகளேதேனும் ஒட்டியிருக்கிறதா எனப் பார்த்தபடியும் வரும்போது சிறுவர்கள் ‘கா..கா’ எனக் காக்கையின் மொழியைக் கத்திவிட்டு ஓடுவார்கள். அவன் விந்தி விந்தி ஓடித் துரத்துவான். அவன் ஓடுவதைப் பார்க்க, தவளையின் பாய்ச்சல் போலவும் நண்டின் நகர்வினைப் போலவும் இருக்கும்.
ஒழுங்காக ஓட முடியாமல் அவனது முழங்கால்கள் இரண்டும் பிறப்பிலேயே வளைந்திருந்தன. இன்னும் அவன் மிகவும் ஒல்லியானவன். அவனது முகம் போஷாக்கேதுமற்று மெலிந்த ஒரு இரண்டு வயதுக் குழந்தையைப் போன்று சிறியது. நெடிய இமைகளைக் கொண்ட சிறிய விழிகளைப் பார்க்கப் பாவமாகவும் இருக்கும். கருத்த சருமம் உடையவனல்ல. அதற்காக சிவப்பானவனாகவும் இல்லை. ஒரு மாதிரியாக வெள்ளைக் காகிதத்தில் செம்மண் தூசு அப்பியதைப் போன்ற வெளிறிப் போன நிறம். நெற்றியிலிருக்கும் சுருக்கக் கோடுகளை வைத்து மட்டுமே அவனது வயது முப்பதுக்கும் நாற்பதுக்குமிடையிலிருக்குமென அனுமானிக்கலாம். குட்டையானவன். வளைந்த கால்கள் அவனை இன்னும் குட்டையாகக் காட்டின. ஒருபோதும் அச் சிறுவர்கள் எவரும் அவனிடம் அகப்பட்டதில்லை.
சாதாரணமாகவே அவன் யாரிடமும் பேசுவதில்லை. எந்தக் கொம்பனாலும் அவனது நாவசைய வைத்து, வாயிலிருந்து ஒற்றைச் சொல்லை உருவியெடுக்க முடியாது. எல்லாக் கேள்விகளுக்கும் ‘ஆம்,இல்லை’ என்ற ஆமோதிப்பு அல்லது மறுப்புக்களைக் குறிக்கும் தலையசைவுதான் அவனிடமிருந்து வெளிப்படும். மிகவும் முக்கியமென்றால் மட்டும் கைகளால் கூடச் செய்கை செய்வான். அவனுக்கு அவர்கள் புரட்டிப் புரட்டிப் பேசும் மொழிகளெல்லாம் நன்கு தெரிந்திருந்தது. அவை அவனிடமிருந்து ஏதோ ஒன்றைக் காற்றுக்கு எடுத்துப்போவதாக நினைத்தானோ என்னவோ அவன் ஏனோ சொற்களை உதிர்க்கப் பயந்தான். ஒருவேளை அவனிடம் நிறைந்திருக்கும் சொற்களையெல்லாம் உதிர்க்க வைப்பதற்காகத்தான் காக்கைகளும் வந்து கொத்திவிட்டுப் பறக்கின்றனவோ என்னவோ? வானொலிப் பெட்டிக்கு அதன் தலையில் ஒரு அழுத்தி இருக்கும். அதை அழுத்திவிட்டால் பேசும். ஒலிக்கும். பாடும். அதுபோல அவனது பேச்சுப் பெட்டிக்கும் தலையில்தான் அழுத்தி இருப்பதாகவும் காக்கைகள் வந்து அழுத்திவிட்டுச் சென்றால்தான் அது பேசுமெனவும் குழந்தைகளுக்குக் கதை சொன்னபடி தாய்மார் உணவூட்டினர்.
அவன் ஒரு அநாதை என்றே ஊரில் எல்லோரும் பேசிக்கொண்டனர். எங்கிருந்தோ வந்து சேர்ந்தவன் அவ்வூரில் நீண்ட காலமாக வாழ்ந்து வந்தான். காக்கைகள் துரத்திக் கொத்துமெனக் கண்டறிந்த நாள் முதல் அவன் பகல்வேளைகளில் வெளியே வரத் தயங்கினான். மிக முக்கியமான தேவைகள் இருந்தால் மட்டுமே பகலில் வெளியே வருவான். அவன் அவ்வூரில் பெரிய ஹோட்டல் வைத்திருக்கும் பெரியவர் ஹோட்டலிலேயே வேலைக்கிருந்தான். அவனுக்கென்று சிறு குடிசையொன்றை ஹோட்டலுக்கருகிலேயே கட்டிக் கொள்ளும் அனுமதியைப் பெரியவர் அவனுக்கு வழங்கியிருந்தார். அவன் அதில்தான் வசித்தான். ஒரு தண்ணீர்க்குடம், இரண்டு அலுமினியப் பீங்கான்கள், ஒரு கேத்தல், ஒரு சிறுகுவளை, ஒரு சாக்குக் கட்டில், ஒரு தலையணை, இரண்டு வெள்ளைச் சாரன்கள், முன் பக்கத்தில் இரண்டு பாக்கெட்டுக்கள் வைத்த இரண்டு வெள்ளை அரைக்கைச் சட்டைகள் அவனது உடைமைகளென அக் குடிசையை நிரப்பின. அடுத்த நாள் ஹோட்டலில் வழங்கும் ரொட்டிக்காக இரவில் மா பிசைந்து ரொட்டி தயாரிப்பது அவன் வேலை. காக்கைகளுக்குப் பயந்து அவையெல்லாம் கூடடைந்த பின்னரான முன்னிரவில் அவன் ஆற்றுக்குப் போய்க் குளித்துவருவான். பிறகு ஹோட்டலுக்குப் போய் பகல் சமைத்து மீதமிருக்கும் சோற்றை உண்டு விட்டு ரொட்டி தயாரிக்கத் தொடங்குவான். வேலை முடிந்த விடிகாலையில் காலை மற்றும் பகலுணவுக்கென சில ரொட்டிகளைப் பார்சலாக எடுத்துக்கொண்டு அவன் குடிசைக்கு வந்தால் இனி அந்தி சாயும் நேரம் வரை உறக்கம்தான். உணவுக்கும் தண்ணீருக்குமென மட்டும் எழும்புபவன் மீண்டும் உறங்கிப்போவான்.
எப்பொழுதாவது மிகவும் முக்கியமாகத் தேவைப்பட்டு, பெரியவர் உத்தரவிட்டால் மட்டுமே அவன் பகல்வேளையில் வெளியே வருவான். ஒருமுறை இப்படித்தான் பெரியவர் வீட்டில் விறகு வெட்டித் தரும்படி அவனைக் கூப்பிட்டிருந்தார். வீதி தோறும் விரட்டிக் கொத்திய காக்கைகள், பெரியவர் வீட்டுமுற்ற மாமரத்தில் வசித்த காக்கைகளெனப் பல காக்கைகள் கொத்தியதில் விறகு வெட்டும்போது அவனது வியர்வையோடு சொட்டு இரத்தமும் நெற்றியிலிருந்து கோடாய் வழியலாயிற்று. வசவு மொழிகள் வாயிலிருந்து பெருஞ்சத்தமாக உதிரலாயிற்று. வீட்டின் கன்னிப்பெண்கள் யன்னல் வழி விசித்திரமாகப் பார்த்திருந்தனர். பெரியவரின் தாய்க்கிழவி அவனை விறகுவெட்ட வேண்டாமெனச் சொல்லி அவனது வீட்டுக்கு அனுப்பிவைத்தாள். அவனது சிறுவயதில் குஞ்சுகளிருந்த காக்கைக் கூடொன்றைக் கைகளால் பிய்த்தெறிந்தாகவும் அதற்காகத்தான் காக்கைகள் எப்பொழுதும் அவனைப் பழி வாங்குவதாகவும், காக்கைகள் அவனைக் கொத்துவது குறித்து ஊருக்குள் நிலவி வந்த கதையைக் கிழவி அப்பெண்களோடு பகிர்ந்துகொண்டாள். வரும்வழியில் கொத்தி ஓய்ந்த எந்தக் காக்கையும் அவனைக் கொத்தவுமில்லை. துரத்தவுமில்லை. அவன் அமைதியாகக் குடிசை வந்து சேர்ந்தான். தலையைத் தடவியபடியே உறங்கிப்போனான்.
ஹோட்டலில் வெளியே அனுப்ப ஆளில்லாச் சமயங்களில் பெரியவர் அவனை மீன் வாங்க அனுப்பிவைப்பார். அதுதான் அவனுக்கு அவனது வேலைகளிலேயே மிகவும் வெறுப்பான வேலை. மீன் வாடிக்கருகில் எப்பொழுதும் நிறைந்திருக்கும் காக்கைகள் குறித்து அவன் பயந்தான். மீனின் உதிரிப்பாகங்களைக் கொத்தித் தின்று பழகிய அவைகளின் சொண்டுகள் மிகக் கூர்மையானவை என்பதனை அவன் உணர்ந்திருந்தான். அவனைக் கண்டதும் சொண்டிலிருக்கும் உணவுப்பாகத்தைத் துப்பிவிட்டு, அவை ஒரு கடமையை நிறைவேற்றுவது போல அவனது தலையைக் கொத்திவிட்டுப் பறந்தன. சந்தைக்கு வந்திருக்கும் அவனையறியாத புதிய மனிதர்களெல்லாம் அவனை ஒரு அதிசயப்பிராணியாகப் பார்த்தனர். இடுப்பில் குழந்தைகளைச் செருகியிருக்கும் அம்மாக்கள், குழந்தைகளுக்கு அவனை வேடிக்கை காட்டினர். சந்தையிலிருக்கும் ஒரு விசித்திர, வேடிக்கைப் பொருள் என்பதுபோல அக்குழந்தைகளும் அவற்றின் கண்கள் மின்னவும், வாய் பிளந்தும், சிரித்தும் அவனைப் பார்த்து ரசித்தன.
இப்படித்தான் ஒருமுறை அவன் சந்தையிலிருந்து மீன் வாங்கி வரும்வேளை பள்ளிக்கூடச் சீருடையோடு ஒரு சிறுமி, புளியங்காட்டுக்குள் தனியாக அழுதுகொண்டிருந்ததைப் பார்த்தான். அவளது இதழ்கள் கோணி, எச்சிலும், மூக்குச் சளியும், கண்ணீரும் ஒரு சேர வடிய கைகளில் இரு புளியம்பழங்களோடு அந்த அத்துவானக் காட்டுக்குள் அவள் தனித்திருந்ததைப் பார்த்தான். நின்று அருகில் போய் என்னவென்று கைகளால் விசாரித்தான். யாருமற்ற காட்டுக்குள் வெண்ணிற ஆடையோடு கால்கள் வளைந்து குட்டையான இவனைப் பார்த்ததும் முதலில் அச்சமுற்ற சிறுமி பின்னர் தான் பழம் பறிக்க வந்து வழி தவறிப் போனதைச் சொல்லி விசித்தழுதாள். அவளை அழைத்துக்கொண்டு மீண்டும் சந்தைப்பகுதிக்கூடாக வந்து அடுத்த ஊருக்கான தெருவிலுள்ள அவளது வீட்டுக்கு அவளைக்கொண்டு சேர்த்தான். இடையில் புளிய மரக் காக்கையொன்று அவன் தலையைக் கொத்திவிட்டுப் பறந்தது. அந்தத் தெருவிலுள்ள ஒன்றிரண்டு காக்கைகளும் அவனது தலையைக் கொத்திப் பறந்தன. காக்கை பறந்துவரும் ‘விஸ்க்’ எனும் ஒலியைக் கேட்டபோதெல்லாம் சிறுமி விம்மியபடி திரும்பி காக்கையைப் பயத்தோடு பார்த்தவாறிருந்தாள். சில சிறுவர்கள் ‘கா..கா’ எனக் கத்திவிட்டு ஓடினர். மிகவும் அதிசயப்படத்தக்கதாக அவன் அச்சிறுமி முன்னால் காக்கைக்கெதிரான வசவு வார்த்தைகள் எதையும் உதிர்க்கவில்லை. அச் சிறுவர்களைத் துரத்தி ஓடத் துணியவில்லை. மௌனமாக, அத்தோடு அச் சிறுமியிடம் கேட்காமலேயே அவளது வீட்டுக்கு அவளை மிகச் சரியாகக் கொண்டு வந்து சேர்த்திருந்தான். அன்றிலிருந்துதான் ஊரில் எல்லோரையும் அவன் நன்றாக அறிந்து வைத்திருக்கிறானென்ற செய்தி ஊருக்குள் பரவியது. காக்கையன் என ஊருக்குள் அழைக்கப்படுபவன் சிறுமியைப் பத்திரமாகக் கொண்டு வந்து சேர்த்த செய்தி அவன் பற்றிய நல்லெண்ணத்தை ஊருக்குள் விதைத்தது.
அன்றிலிருந்து ஊருக்குள் அவனைக் காணும் சிலர் அவனின் நலம் விசாரித்தனர். பதில்களெதுவும் வராது எனினும் அவனைக் காக்கைகள் கொத்தாமலிருக்க வெளியே வரும்போது தொப்பி அணிந்துகொள்ளும் படியும் அல்லது காக்கைகள் பார்த்து மிரளும்படியாக மினுங்கும் ஏதாவதொரு நாடாவைத் தலையைச் சுற்றிக் கட்டியபடி வெளியே வரும்படியும் சிலர் ஆலோசனைகள் கூறினர். சிலர் பலாப்பழத்தோலைப் போல கூறு கூறாய் மேல் நோக்கி வளர்ந்திருந்த அவனது தலைமுடியினை முழுவதுமாக அகற்றி மொட்டையடித்துக் கொள்ளும்படியும், அல்லது நீண்ட கூந்தல் வளர்க்கும்படியும் கூடச் சொல்லினர். இன்னும் சிலர் இது ஏதோ செய்வினை, சூனியமெனச் சொல்லி அவர்களுக்குத் தெரிந்த மாந்திரீகர்களிடம் தாயத்து வாங்கிக் கட்டிக் கொள்ளும்படி கூறினர். அவன் எதுவும் பேசாமல் தலையை அசைத்து ஏற்றுக்கொண்டதாகச் செய்கை செய்தான். அடுத்த முறை பகலில் வெளியே வருகையில் அவர்கள் சொன்னவற்றை நடைமுறைப்படுத்தப் பார்த்தான். எதற்கும் அசையாக் காக்கைகள் அதன் பின்னால் தொப்பியைக் கொத்திப்பறந்தன. ஒரு முறை கொத்திய காக்கைகள் கூட மீண்டும் மீண்டும் சுற்றிவந்து திருப்பித் திருப்பிக் கொத்தின. கூடி நின்று ஒரு சேரக் கொத்தின. அவ்விடத்திலேயே பெருத்த ஓசையுடனான வசவு வார்த்தைகளோடு தொப்பியையும் நாடாவையும் கழுத்தில் ஏறியிருந்த கறுப்புத் தாயத்தையும் கழற்றி வீசியெறிந்தான்.

ஒரு இரவில் அவன் ஹோட்டலுக்கு ரொட்டி தயாரிக்க வராததைக் கண்டு பெரியவர் அனுப்பிய ஆள் அவனது குடிசை திறந்து தேடிப்பார்த்தான். தண்ணீர் குடத்தையும், இருந்த ஆடைகளையும் காணப் பெறாதவன் அவன் ஊரை விட்டு எங்கோ போய்விட்டதாக வந்து சொன்னான். அவனைத் தேடிப்போக அலுத்தவர்கள் ஓரிரண்டு நாள் பொறுத்துப்பார்க்கலாம் என இருந்தனர். ரொட்டி தயாரிக்கும் பொறுப்பு நெடுங்காலமாக ஆவலாகக் காத்திருந்த, வேலை தேடிப்போயிருந்த ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டது. மறுநாள் விடிகாலையில் குளிக்கப்போன அவ்வூர் மருத்துவச்சிக் கிழவிதான் கரையோரப் பாறையொன்றில் வழுக்கிவிழுந்து மண்டை உடைந்து பெரிய சிவப்பு எறும்புகள் மொய்க்க, குருதி காயச் செத்துக்கிடந்தவனைக் கண்டு அலறினாள். ஆற்றங்கரையின் மருத மரத்தில், அயல்மரங்களிலென எல்லாவற்றிலும் கருப்புத் திட்டுக்களாய்க் காக்கைகள் அவனைச் சுற்றிலும் கரைந்தபடி இருந்தன. அவன் எழவில்லை. எனினும் அவ்வூர்க் காக்கைகளெல்லாம் ஒன்று சேர்ந்தாப்போலக் கூட்டமாக இருந்து அவனைப்பார்த்துக் கரைந்தன. இரை தேடி அலைதல் மறுத்து அப் பிணம் அகற்றப்படும் வரையில் அங்கேயே கிடந்தன. இனிமேல் அவனது தலை வானொலிப்பெட்டியை அழுத்தி, ஒலிக்கவைக்கச் செய்யமுடியாதென அறிந்தோ என்னமோ, அவை அவனைக் கொத்தவுமில்லை, துரத்தவுமில்லை.

கல்லறை வாசகம்

சாலையின் இருபுறமும் உள்ள
பூக்கள் பேசிக்கொண்டன
அவள் செளந்தர்யத்தில்
மயங்காத ஆடவர்களே
இல்லை என்றது முதல் பூ
டாலடிக்கும் தோலுக்கு உள்ளே
இருப்பது
ரத்தமும், சதையும் தான்
என்றது இரண்டாம் பூ
எனக்கு மட்டும்
உருமாறும் வித்தை
தெரிந்தால்
அவள் அணியும் காலணியாக
மாறி காலடியிலேயே
ஆயுள் முழுதும் கிடப்பேன்
என்றது முதல் பூ
அவள் இறந்தால்
இந்தப் பாதையின்
வழியாகத்தான்
தூக்கி வருவார்கள்
என்றது இரண்டாம் பூ
பேரழகிகளை சாவு
நெருங்குவதில்லை என்றது
முதல் பூ
மண் யாரையும்
ருசி பார்க்காமல் விட்டு வைத்ததில்லை
என்றது இரண்டாம் பூ.

புள்ளிக் கோலங்கள்

அரைப் புள்ளிகள்
இணைந்த போது
ஒரு புள்ளியின்
கரு உருவானது.
இருட்டில் வளர்ந்து
ஒரு நாள்
வெளிச்சத்திற்கு
வந்த போது
அதற்கெல்லாமே
ஆச்சரியக் குறியாய்
இருந்தது.
கால் நிமிர்ந்தபோது
காற் புள்ளியானது.
கேள்விக் குறிகளோடு
உலகைக் கற்றுக்
கொண்டே வந்தது.
காலங்கள்
செல்லச் செல்ல
காற்புள்ளி
அரைப் புள்ளியாயிற்று.
மேலானவர்களின்
மேற்கோள் குறிகளுடன்
மேலாக வளர்ந்த அது
முக்காற்புள்ளியாய்
முதுமையை எட்டிற்று.
முகமெங்கும்
வரை கோலங்களுடன்
முதுகு வளைந்து
பணிவுடன் …
முழுப் புள்ளியான
முற்றுப் புள்ளியை
எதிர்நோக்கி
இருக்கிறது
முக்காற்புள்ளி.

இரவின் கரையிலிருந்து அழைக்கப்படும் பெருமழை..

 
இருளை மெழுகி வைத்திருக்கும்
அகன்ற நெடுஞ்சாலைப் பரப்பை
கடக்க யத்தனிக்கிறது
சின்னஞ் சிறிய தவளைக் குஞ்சு

சிதறும் வெளிச்சத் திரவம் பட்டு
கண் கூசி திகைக்கிறது சில நொடி

அதன் ஸ்தம்பித்த கணத்தை
நசுக்கி விடாத டயர்களைத் தொற்றியபடி
சாலையில் கசிந்து உருளுகிறது விளக்கின் சிகப்பு

இரவின் இக்கரையிலிருந்து
அக்கரைக்கு நகர்ந்து விட்ட தவளைக் குஞ்சு
மற்றுமொரு பெருமழையை அழைக்கிறது
பசுந்தளிரென விரிந்த இலையின் மீதமர்ந்து..
தன் இருபக்க தாடைகள் உப்ப..

எதையாவது சொல்லட்டுமா……….58

செப்டம்பர் 28ஆம் தேதி உலகம் முழுவதும் இதய நாள் கொண்டாடுகிறார்கள்.  போனவாரம் சனிக்கிழமை என் உறவினருடன் சென்னைக்கு இரவு 12.45க்கு வரும் ராமேஸ்வரம் விரைவு வண்டியில் ஏறும்போது, அவர் சொன்ன தகவல் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.  தில்லியில் இருக்கும் எங்கள் இருவருக்கும் நெருங்கிய உறவினருக்கு மாரடைப்பு ஏற்பட்டு தப்பித்துவிட்டார் என்று குறிப்பிட்டார். கேட்கும்போது அதிர்ச்சியாக இருந்தது.  தினமும் நடப்பவர்.  சர்க்கரை நோய், ரத்த அழுத்த நோய் இல்லாதவர்.  வயது 68 இருக்கும்.  அவருக்கு எப்படி இதுமாதிரி ஏற்பட்டது.  இன்னொருவர் என் அலுவலகத்தில் பணிபுரியும் ஒருவரின் தந்தைக்கு சமீபத்தில் ஏற்பட்ட மாரடைப்பால் அவர் ஒரு மாதம் மேல் அலுவலகம் வரவில்லை.
கடந்த 6 ஆண்டுகளாக நான் மூன்று விபத்துக்களை என் கண்ணால் பார்த்திருக்கிறேன்.  இது குறித்து ஒரு சிறுகதையும் எழுதியிருக்கிறேன்.  பந்தநல்லூர் என்ற கிராமத்தில் இருக்கும்போது, என் அலுவலக நண்பர் ஒருவருக்கு எதிர்பாராதவிதமாய் மாரடைப்பு (Heart Attack).  முதலில் இது தெதியாது.  அவசரம் அவசரமாக 30 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கும்பகோணத்தில் உள்ள சுகம் மருத்துவமனையில் சேர்த்தப் பிறகுதான் தெரியும்.  அவர் தப்பித்து விட்டார்.  கொஞ்சம் ஏமாந்தால் அவர் உயிருக்கே ஆபத்தாகியிருக்கும். 
ஒரு முறை என் அலுவலக நண்பர் ஒருவர், அவர் பெண்ணின் பாட்டுக் கச்சேரியை வைத்திருந்தார்.  பேசுவதற்கு பெண்ணின் கல்லூரி பேராசிரியர் ஒருவர் வந்திருந்தார்.  பாட்டுக் கச்சேரி போய்க்கொண்டிருந்தது.  துக்கடா பாடும்முன் மேடையில் எல்லோரும் அந்தப் பெண்ணைப் பாராட்டிப் பேசினார்கள்.  கல்லூரி பேராசிரியரும் பாராட்டிப் பேசினார்.  பின் பெண் துக்கடா பாட ஆரம்பித்தாள்.  கல்லூரி பேராசிரியர் மேடையிலிருந்து கீழிறங்கி அமர்ந்து கொண்டார்.  கொஞ்ச நேரத்தில் பேராசிரியர் அவர் உட்கார்ந்த இருக்கையிலிருந்து கீழே சாய்ந்தார்.  பின் நினைவு தப்பிப் போய்விட்டது.  பாட்டுக் கச்சேரி நின்றுவிட்டது.  நண்பருடன் வண்டியில் பேராசிரியரை அவசரம் அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம்.  நண்பரைப் பார்த்து, மருத்துவர் கேட்டார்  ”இவர் இறந்து போயாற்று… ஏன் அழைத்துக் கொண்டு வந்தீர்கள்?” என்று. எனக்கு படபடவென்று வந்தது.  அந்த இடத்தை விட்டு ஓட்டம் பிடித்தேன்.  மயிலாடுதுறையில் உள்ள என் அறைக்கு வந்தபிறகுகூட தூக்கம் வராமல் இரவு முழுவதும் அவதிப்பட்டேன்.  இப்படி நம் முன்னால் நடப்பதை எச்சரிக்கையாகவே நான் கருதுகிறேன். 
நான் அமெரிக்கா போவதற்கு முன் உடல் பரிசோதனை செய்துகொண்டு ஒரு மருத்துவரிடம் சான்றிதழ் வாங்கச் சென்றேன்.  ஏன்எனில் அமெரிக்காவில் சான்றிதழ் இல்லாமல் மாத்திரை தர மாட்டார்களாம்.  என்னைப் பரிசோதித்த டாக்டர், சான்றிதழ் தருவதற்கு முன் என்னை எச்சரிக்கை செய்தார்.  நான் பயந்து விட்டேன்.  அமெரிக்காவிற்கு கடைசி நிமிடத்தில் போகாமல் இருந்து விடலாமலா என்று நினைத்தேன்.  பின் முன் வைத்தக் காலை பின் வைக்கக்கூடாதென்று பயத்துடன் கிளம்பி விட்டேன். எப்போதும் என் ரத்த அழுத்தத்தை மருத்துவர் சோதிக்கிறார் என்றால் அது அதிகமாகவே காட்டும். அமெரிக்காவிலிருந்து டாக்டர் செல்வராஜூற்கு போன் செய்தேன்.  பின் அவர் ஏற்கனவே சொன்ன மாத்திரைகளைச் சாப்பிட்டு ஒரு மாதம் சுற்றிப் பார்த்துவிட்டு வந்து விட்டேன்.  திரும்பவும் சென்னை வந்து ஒரு மாதம் மேல் ஓடிவிட்டது.  இருந்தும் என் சர்க்கரை நோயைக் குறைக்க பலவித முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். குறிப்பாக தினமும் 30 நிமிடங்கள் தொடர்ந்து நடக்கிறேன். சாப்பாட்டை குறைத்துவிட்டேன். 
செய்தித்தாளில் உலக இதய நாள் பற்றி செய்திகளைப் படித்தபோது, ஒரு செய்தி என் கண்ணில் இருந்து விலகாமல் இருந்தது.  ஒருவர் பொங்கல், வடை, பரோட்டா சாப்பிடுவதை நிறுத்த வேண்டுமாம்.  இதைத் தொடர்ந்து சாப்பிட்டால் இதய நோய் வர எல்லாவித வாய்ப்பும் உண்டாம்.  அடப்பாவி தினமும் இந்தப் பொங்கல் வடையைச் சாப்பிடுகிறேனே என்று நினைத்துக்கொண்டேன். செய்தியைப் பார்த்த அன்று பொங்கல் வடையைச் சாப்பிடாமல் அலுவலகம் சென்றேன்.  அங்கோ என் அலுவலகப் பெண்மணி ஒருவருக்கு பிறந்த தினம் என்று எல்லோருக்கும் அலுவலக முனையில் உள்ள ஒரு கடையிலிருந்து வடையை தருவித்துக் கொடுத்தார்.  வேறு வழியில்லாமல் அந்த வடையைச் காப்பிட்டு 4 தம்ளர் தண்ணீரைக் குடித்தேன்.  சர்க்கரை நோயுடன் எப்படி வாழ்வது என்ற புத்தகம் எழுதலாமா என்று யோசிக்கிறேன்.