மெட்டமார்ஃபஸிஸ்

எனக்கே தெரியாமல்
எனது அறைக்குள் ஒரு பச்சோந்தி
நுழைந்து விட்டது,
என்னிடம் அனுமதி கேட்கவுமில்லை
அதை அது எதிர்பார்க்கவுமில்லை.
அதை விரட்ட பெரும்பாடாயிற்று.
சில நாட்கள் கழித்து
பின்னர் அதைத்தொடர்ந்து
ஒரு பாம்பும் நுழைந்து விட்டது,
சரி பச்சோந்தியைப்பாம்பு
தின்று விடும் என்று
எனக்குள் மகிழ்ந்து கொண்டேன்
சில நாட்களாக பச்சோந்தியைக்காணவில்லை
பாம்பு மட்டும் உலாத்திக்கொண்டிருந்ததை
என் கண்ணால் காண நேர்ந்தது.
சரி உண்டு விட்டது என்று
நினைத்து மகிழ்ந்த போது
பாம்பின் நிறம் மாறிக்கொண்டே வந்து
மீண்டும் பச்சோந்தியாகி விட்டது.
இப்போது
பச்சோந்தியிடம் பாம்பாக
மாறும் வித்தையைப்பயின்று
கொண்டிருக்கிறேன்
என்னைத்தொந்தரவு செய்யாதீர்கள்.

அக்கறை/ரையை யாசிப்பவள்

அன்றைய வைகறையிலாவது
ஏதாவதொரு அதிசயம் நிகழக்கூடுமென
படிப்படியாயிறங்கி வருகிறாள்
சர்வாதிகார நிலத்து ராசாவின்
அப்பாவி இளவரசி
அதே நிலா, அதே குளம்,
அதே அன்னம், அதே பூங்காவனம்,
அதே செயற்கை வசந்தம்
அதுவாகவே அனைத்தும்
எந்த வர்ணங்களும் அழகானதாயில்லை
எந்த மெல்லிசையும் புதிதானதாயில்லை
எந்த சுதந்திரமும் மகிழ்வூட்டக் கூடியதாயில்லை
நெகிழ்ச்சி மிக்கதொரு
நேசத் தீண்டலை
அவள் எதிர்பார்த்திருந்தாள்
அலையடிக்கும் சமுத்திரத்தில்
பாதங்கள் நனைத்தபடி
வழியும் இருளைக் காணும்
விடுதலையை ஆவலுற்றிருந்தாள்
காவல்வீரர்களின் பார்வைக்குப் புலப்படா
மாய உடலையொன்றையும் வேண்டி நின்றாள்
அவள் நிதமும்
அப் புல்வெளியோடு
வானுக்குச் சென்றிடும் மாய ஏணியொன்றும்
அவளது கற்பனையிலிருந்தது
இப் பொழுதுக்கு மீண்டும் இக்கரை தீண்டா
ஒரு சிறு ஓடம் போதும்
எல்லை கடந்துசென்று
சுதந்திரமாய்ப் பறக்கும் பட்சிகள் பார்க்கவென
அச் சமுத்திரத்தின் அக்கரையில்
அவளுக்கொரு குடில் போதும்

பறவைகளின் திசை

அன்று அந்திக்கருக்கலில்
கூட்டமாக வெண் பறவைகள்
திரும்பத்திரும்ப முன்னும்
பின்னுமாகப்பறந்து கொண்டிருந்தன
அந்தக்காரிருளில் அவை
திட்டுத்திட்டாக தெளிவாகத்தெரிந்தன
நானும் பல தடவைகள்
இருட்டிவிட்டால் அடுத்த தெருக்களில்
சுற்றிக்கொண்டு எங்கள்
வீட்டைத்தேடிக்கொண்டிருப்பேன்
அதுபோலவே அவைகளும்
தமது கூட்டின்
திசையைத்தவறவிட்டதுபோல்
எனக்குத்தோணியது
எனக்கொன்றும் புரியவில்லை
எப்போதும் அம்மா சொல்வாள்
அவை என்றும் திசை அறியக்கூடியவை
ஆதலால் ஒருபோதும் அவற்றின் திசை
தப்புவதில்லை என்று
மேலும் அவை நாடு கடந்தும்
பறக்கக்கூடியவை என்றும்
கடல் கடந்தும்
பறக்கக்கூடியவை என்றும்
அம்மா சொல்லக்கேட்டிருக்கிறேன்
அன்று நள்ளிரவு கடந்தும்
நானும் அம்மாவும்
வீட்டு வாயிற்படியிலேயே
அமர்ந்திருந்தோம்
நான் கரு நிற வானத்தையும்
அந்தப்பறவைகளையுமே
பார்த்துக்கொண்டிருந்தேன்
அம்மாவோ வைத்த கண்வாங்காமல்
தெருக்கோடியையும்
அதன் முனையையுமே
பார்த்துக்கொண்டிருந்தாள்.

தருணம்

சில சம்பவங்கள்
நாம் விரும்பியோ விரும்பாமலோ நடக்காமலில்லை

யார் தீர்மானிக்கிறார்கள்
என்பது ஏனோ தெரிவதில்லை

அல்லது
நாமே அந்தச் சூழ்ச்சியில்
அறியாமல் மாட்டிக்கொண்டு விடுகிறோமா
என்றெல்லாம் தெரிவதில்லை

எல்லாம்
நடப்பது நடக்கட்டுமென்றுதான்
விடவேண்டியுள்ளது

நமக்கு விருப்பமான பொருள்
நம்மை அடைவதில்லை

நாம் தேர்ந்தெடுக்கும் பொருள்
நம் கைவசமாவதில்லை

நம் காலத்தை நாம் திருப்தியுடன்
கழிக்க வேண்டியதுதான்.

இதுதான் வாழ்க்கை என்று
பெரிதாக யோசனை செய்யாமலிருக்க வேண்டியதுதான்.

வரையறை

மழை விடாமல் பெய்தது
பகல் இருள் கவிந்திருந்தது
அலுவலகத்திற்கு
தாமதமாய் போனால்
நந்தனைப் போல்
வெளியே நிற்கவைத்து
விடுவார்கள்
சூரல் நாற்காலியில்
அவர் அமர்ந்திருந்தார்
நெல் மணிகளைக் கொறிக்கும்
மைனாக்களைப் பார்த்தபடி
புத்தி பேதலித்தவர்கள் எல்லாம்
ஏன் ஒரே இடத்தை
வெறித்துப் பார்க்கிறார்கள்
மனிதர்களோடு அளவளாவ
விரும்பாதவரைப் போல்
முகத்தை வைத்துக் கொண்டிருந்தார்
துஷ்டி கேட்க
இப்போதெல்லாம் அவர்
எவருடைய வீட்டிற்கும்
செல்வதில்லை
இப்போது எங்கோ
கிளம்பிக் கொண்டிருக்கிறார்
துக்கம் நிகழாத வீட்டிலிருந்து
ஒரு பிடி மண்ணை
அள்ளி வர
கிளம்புகிறாரோ என்னவோ.

மரம் பெய்யும் மழை

மழை பெய்யத்
தொடங்கியதும்
மரம் பெய்யவில்லை
மழையை…
மழை நின்று
வெகு நேரமாகியும்
மரம் பெய்து
கொண்டே இருக்கிறது
மழையை பெரிய
பெரியத் துளிகளுடன்.
பூப்பெய்த மரங்கள்
பூ பெய்கின்றன
மழையோடு.
பூப்பெய்தாத மரங்கள்
இலைகளைப் போட்டு
விளையாடுகின்றன
போகும் நீரில்

*27 ம் 67 ம்

27  வயது இளைஞனும்
67  வயது முதியவரும்
இணைந்து
நடை பயிற்சி செய்கின்றனர்

நடைவேகம் கூடக்கூட
27  க்கு மூச்சிறைக்கிறது

67  ன்வேகம்,
27 -ஐவிடக் கூடுகிறது
27  ,
67-ஐ விஞ்ச முயன்று தளர்கிறது

27  , 67- ஆகவும்
67  , 27- ஆகவும்
வீடு திரும்புகிறது

முடிவற்று நீளும் பயணத்தின் வெற்றுக் கால்கள்

 
அந்தத் தெரு வழியே நடக்கும் நிழல்களில்
ஒன்று வயதானது
மற்றொன்று இளவயது

தொலைந்து போன தருணங்களின்
ரகசியங்களை
அளவில் அடங்காத மலர்தலை
சொல்ல விரும்பும் தயக்கத்தை
கதவடைத்துக் கொள்ளும் மௌனங்களை
கருணையின் மீது பிரயோகிக்கப்படும் சாபங்களை

யாவற்றையும் உருக்கி ஊற்றும் வெயில்
பிளாட்பாரம் ஏறி நிதானிக்கும் வெற்றுக் கால்களை
குறுகுறுக்கச் செய்து சூடேற்றுகிறது
மேலும் நடக்கத் தூண்டி
முடிவற்று நீளும் பயணத்தை நோக்கி

எல்லாத் தெரு வழியேயும் நடக்க நேரும் நிழல்கள்
இரண்டுக்கு மேற்பட்டவை
ஆனால்
ஒன்று வயதானது
மற்றொன்று இளவயது

******
 

மொழி அதிர்ச்சி

”பிரச்சனெ பெரிஸ்ஸா ஒண்ணுமில்லீங்க.”

”பரவாயில்லெ, எதுவானாலும் சொல்லுங்க..அவங்களுக்கு என்ன பிரச்சினென்னு முழுஸ்ஸாத் தெரிஞ்சாத்தான் உதவி செய்யிறதுக்கு எங்களுக்குச் சுலபமா இருக்கும்.”

”கொஞ்ச நாளாவே சிடுசிடுங்கறது, எங்கிட்டே எரிஞ்சு விழுறது, கொழந்தைகங்களெப் போட்டு மொத்தறது இப்பிடியாயிருக்குதுங்க.  சமாதானப்படுத்துனாகூட கோபம் தணியிறதில்லெ..”
”வீட்டுலெ ஏதாச்சும் சிக்கலாச்சா?”

”சிக்கலுன்னு என்னெத்தெங்க சொல்றது?  கொஞ்ச நாளா யாபாரம் அவ்வளவு சொகமில்லீங்க.. ஒருவேளை அதனாலெதான் ரிலேக்ஸேஸனாயி ஒரு மாதிரி ஆயிட்டாளோன்னு நெனெக்கிறேன்.”

”என்ன ஆயிடுச்சின்னு சொன்னீங்க?”

”அது ஒண்ணுமில்லீங்க..நீங்க மேக்கொண்டு என்ன வெவரம் வேணும்னு சொல்லுங்க..”
”சரி, நல்ல ஆழ்ந்து தூங்குறாங்களா?”

”தூங்குறா.  ஆனாக்க சில வேளெயிலே ரிலேக்ஸேஸனாயி ஒரே முட்டா யோசிக்க ஆரம்பிச்சிருவா..அண்ணிக்குப் படுக்கிறதுக்கு ரவெக்கி ஒரு மணி ரெண்டு மணி ஆயிரும்.”
”என்ன ஆச்சுன்னா தூக்கம் கெடுங்குறீங்க?”

”அது ஒண்ணுமில்லீங்க..நீங்க மேக்கொண்டு கேளுங்க.”

”நல்ல ருசிச்சு வேளாவேளெக்கிச் சாப்பிட்றாங்களா?”

”அப்படிச் சொல்றதுக்கில்லீங்க..ஏதோ சாப்பிடும்..ஆனா ரிலேக்ஸேஸனாயிட்டா சாப்பாடு எறங்காது.”

”என்ன ஆயிடுச்சின்னா சாப்பாடு எறங்காதின்னீங்க?”

”அது ஒண்ணுமில்லீங்க..நீங்க மேக்கொண்டு கேளுங்க..”

”குளிக்கிறதுலெ ஏதாச்சும் பிரச்சினெயிருக்கா?  தெனமும் நேரத்துக்குக் குளிக்கிறாங்களா?”

”குளிக்குது.  அதுலெ என்னாங்க இருக்கு?  ஆனாக்க சிலவேளே இந்த ரிலேக்ஸேஸன் ஆயிடுங்க.. அப்ப குளிக்காதுங்க..”

”என்ன ஆனா குளிக்கமாட்டாங்கன்னு சொன்னீங்க?”

”அது ஒண்ணுமில்லீங்க.. நீங்க மேக்கொண்டு கேளுங்க..”

”இவங்களுக்குத் தலையிலெ எப்பவாச்சும் அடிபட்டிருக்கா?”

”பலமா அடின்னு சொல்றதுக்கு ஒண்ணுமில்லீங்க..ஆனா இவ படுத்துற கூத்து தாங்கமாட்டாமெ எனக்கே ரிலேக்ஸேஸன் ஆயி ஒரு ருல் தடியெ எடுத்து அவ தலையிலே சிறுஸ்ஸா ஒரு போடு போட்டுட்டேங்க. ஒரு நாலு தையல் போட்டிருக்கு.  அவ்வளவுதாங்க..”

”ஒங்களுக்கு என்ன ஆச்சுன்னு சொன்னீங்க?”

”அது ஒண்ணுமில்லீங்க.  நீங்க மேக்கொண்டு கேளுங்க..”

”நா மேக்கொண்டு கேக்குறதுக்கு முன்னாடி ஒங்ககிட்டெ ஒரு உதவி கேக்கணும்..”

”எங்கிட்டெயா, நா ஒங்களுக்கென்ன உதவி செஞ்சிறப் போறேங்க?”

”அப்பிடிச் சொல்றதுக்கில்லே..ஒங்களெப் புரிஞ்சிக்கர்றதுக்கு நீங்கதான் உதவி செய்யணும்..”

”………………………….”

”நடுநடுவுலெ எனனமோ ஒரு வார்த்தெயெ உபயோகிச்சீங்க..அது என்னான்னு கொஞ்சஞ் சொல்றீங்களா?”

”அட, நீங்க ஒண்ணு..அது ஒண்ணுமில்லீங்க..”

”அப்பிடி நீங்க சொல்லக்கூடாது.  நீங்க அது என்ன வார்த்தைன்னு சொன்னாத்தான் நீங்க சொன்ன முழு வெவரமும் எனக்கு வெளங்கும்.  இல்லேன்னா இவ்வளவு வெவரம் சேகரிச்சும் பிரயோசமில்லாமெப் போயிரும்..”

”நா புரியாத எதெயும் சொல்லலீங்களே.”

”இல்லெ, சொன்னீங்க. இந்த ரிலேக்ஸஸன்னு ஏதோ அடிக்கடிச் சொன்னீங்க. இந்த வார்த்தெய வேறெ ஒரு அர்த்தத்துலெதான் எனக்குத் தெரியும்.. ஆனா நீங்க எந்த அர்த்தத்துலெ அதெச் சொன்னீங்கன்னு சொல்ல முடியுமா?”

”அதுங்களா? அது சும்மாங்க..இந்த பேண்ட் சட்டை போட்டுவிட்டு ‘டை’ யெல்லாம் கட்டிக்கிட்டு ஒயிலாச் சிகரெட்டுப் பிடிக்கிற மாதிரித்தானுங்க அதுவும்..”
”எனக்குச் சத்தியமாப் புரியல்லெ.”

”ஆமாங்க, இந்த இங்கிலீஷ் வார்த்தைக்கெல்லாம் என்னாங்க பெரிஸ்ஸா அர்த்தம் இருந்திறப் போறது?”

”என்ன ஒரேயடியா அப்படிச் சொல்லீட்டீங்க..”

”பெறகென்னாங்க..இங்கிலீஷ்லெ தஸ்ஸு புஸ்ஸுன்னு நாலு வார்த்தெ விட்றதெல்லாம் ஒரு ஸ்டைலுக்குத்தானுங்களே.  ரிலேக்ஸேஸனும் அதே மாதிரித்தானுங்க..சும்மா ஸ்டைலுக்கு நடுநடுவுலெ அங்கெ அங்கெ விட்டுக்கிர்றதுங்க.. இதுக்கெல்லாம் போயி நீங்க அர்த்தங் கேட்டுக்கிட்டு இருக்கீங்க?”

(அக்டோ பர் – டிசம்பர் 1991ஆம் ஆண்டு நவீன விருட்சம் இதழில் பிரசுரமான கதை)

 

காலம்

அறையின் மேலே சுற்றி அலையும் மின்விசிறியோடு
சேர்ந்தே சுழன்றது எனக்கான காலம்.
எட்டிப் பிடித்துவிட எத்தனித்த தருணங்களில்
கைகளுக்குள் சிக்காமல் சுழன்றபடி இருக்கிறது.
துணைக்கு அழைத்த தாம்புக் கயிறும்
காலத்தின் சுழற்சியில் என் கழுத்தை சுற்றிக் கொண்டது.
மூச்சு முட்டி தத்தளித்து,
தூக்கி வீசப்பட்டு,
அறையின் ஓரத்தில் கிடந்தவன் மீது
நான் பார்த்துக் கொண்டிருந்த கணத்திலேயே
கீழிறங்கி,
என்னை மிதித்து, நடந்து, கடந்து சென்றது காலம்