நான் புத்தகக் காட்சி தேதியை தவறாகக் குறிப்பிட்டு விட்டேன்.  தேதி 5.1.2012 முதல் 17.1.2012வரை என்று வாசிக்கவும்.

அன்புள்ள நண்பர்களே,

வணக்கம்.
வருகிற 35வது புத்தகக் கண்காட்சி 5.1.2012 முதல் 17.1.2012வரை சென்னையில் நடைபெறுகிறது.  அதில் நவீன விருட்சமும் கலந்துகொள்கிறது.  நவீன விருட்சம் ஸ்டால் எண் 394.  இங்கு கலந்துகொள்ள விடுமுறை நாட்கள் தவிர மற்ற நாட்களில் நவீன விருட்சம் ஆசிரியரான நான் கலந்துகொள்ள முடியுமாவென்று தெரியவில்லை.  சீர்காழியிலிருந்து வரவேண்டும்.  எனக்கு ஸ்டாலைப் பார்த்துக்கொள்ள நண்பர்கள் உதவி செய்ய முடியுமா?
புதிய புத்தகம் எதுவும் விருட்சம் வெளியீடாக வரவில்லை.  ஏன் நவீன விருட்சமே வரவில்லை?  எல்லாம் பழைய புத்தகங்கள்தான்.  புத்தகக் காட்சி முடிவதற்குள் ரூ.5000க்குப் புத்தகங்கள் விற்றால் அதன் வெற்றியைப் பெரிதாகக் கொண்டாடலாம் என்று நினைக்கிறேன்.  உதவ விரும்புவர்கள் தகவல் தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.
அன்புள்ள

நாய்

ஒரு நாய் உள்ளே நுழைந்துவிட்டது
வாட்டச்சாட்டமான அதன் தோற்றம்
பயமுறுத்தியது
உறுமவில்லை
பார்த்தால் ஒரு பெண்மணி பின்னால்
சுற்றி சுற்றி வருகிறது
அந்தப் பெண்மணி
பஸ்ஸில் சென்றாலும்
அது
வந்து விடுகிறதாம்.
பணத்தைக் கட்டிவிட்டு
பெண்மணி வங்கிக் கிளையைவிட்டுச்
சென்று விட்டார்.
ஆனாலும்
அந்த நாய் மாத்திரம்
சுற்றி சுற்றி
என் மனதில்
வந்து கொண்டிருக்கிறது.

கூட்டல் கழித்தல்

 
பாவக்கணக்குகளை எழுதும் சித்ரகுப்தன்
எழுதி எழுதிக் கைசோர்ந்து 
கணினிக்கு மாறினார்.
ஜிபியில் சேமித்து முடியாமல்
டெராபைட் கொள்ளளவுக்கு மாறிய பிறகும்
திணற நேர்ந்தது.
அவுட் சோர்ஸிங் தீர்வாகுமென
மானுடரை அணுகினார்.
முட்டிமோதி முன்வந்த எவருக்கும் 
கணக்குகளில்
எந்தப் பாவமும் தெரியவில்லை.
பாவத்தைப் பற்றிய பார்வை
மாறியிருந்தது.
சம்பளமாகப் பூலோகத்தில்
சொர்க்க வாழ்வைப் பேரம்பேசி
வேலையைத் தொடங்கினார்கள்.
கூட்டலும் கழித்தலும்
வகுத்தலும் பெருக்கலும்
பணம், பதவி, புகழ் எனும் 
விடைகளையே 
திரும்பத் திரும்பத்
தேடியிருந்தது
சுவாரஸ்யத்தைத் தந்தது.
சகமனிதரிடம் அன்பு
பிற உயிரிடம் நேசம்
இயற்கையிடம் நன்றி
அற்றுப் போன பூமியின்
கடவுச்சொல் ஒருநாள்
காக்கும் சக்திக்கு மறந்து போகலாம்.
சுனாமிகளாலும் கலங்காத கோளினைத்
தன் இரட்சிப்பின் எல்லையிலிருந்து 
வைரஸ் பாய்ச்சி விலக்கலாம்.
அண்டவெளியில் பூமி
அதிவேகத்தில் சுழலாம்.
இரண்டு மணிகளுக்கொருமுறை
இரவு பகல் நேரலாம்.
அந்நாள்வரையிலும்
கூட்டலாம் கழிக்கலாம்
வகுக்கலாம் பெருக்கலாம்.
*** ***
 

குழந்தையின் கோபம்

கடவுளின் குழந்தையொன்று
உலகியல் விளையாட்டினை
விளையாடிக் கொண்டிருந்தது.
எது தவறு
எது சரியென
கடவுளிடம் கேட்டுக் கேட்டு
குழந்தை அந்தப்
பொம்மைகளை
தவறு சரியென
இரண்டு வட்டங்களுக்குள்
பிரித்து பிரித்து வைத்தது.
குழந்தை கடவுளிடம்
ஏதோ கேட்பதற்காக
திரும்பிப் பார்த்த
சில நிமிடங்களில்
வட்டங்களிரண்டிலிருந்தும்
பொம்மைகள்
சரிக்கும் தவறுக்குமாக
மாறி மாறி குதித்துக்
கொண்டிருந்தன.
சலித்துப் போனக்
குழந்தை
தவறுகள் வைத்திருந்த
வட்டத்திற்குள்
தானேப் போய்
உம்மென்று உட்கார்ந்து
கொண்டது

பிரத்யேக நிறம் சூழ்ந்த நடைபாதை..

 

*
மரணத்தின் குறிப்பேட்டில்
கையெழுத்து வாங்கும் தாதி
அவசரமாகத்
தவிர்த்து விடுகிறாள்
கேள்விகளையும்
அதற்குரிய பார்வைகளையும்

திறந்து அவளை உள்வாங்கிக் கொள்ளும்
கண்ணாடிக் கதவுக்கு அப்பால்
நிதானமாய் நீள்கிறது
பிரத்யேக நிறம் சூழ்ந்த ஒரு நடைபாதை

நம் கைகளோடு தங்கிவிடுவது
ஒரு பேனா மட்டுமே

******

கடைச் சொல்

 
கிளையிலிருந்து
தரைக்கு வீழ்கிற
இலையைப்  போன்றே
கணித நுட்பம்

தவிப்பு மனிதர்களின்
தந்திர வழி என்கிறார்கள் ?

தீர வலிக்குச்செய்து கொள்ளும்
நித்தியப்பணிவிடை என்கிறார்கள் ?

காதல் ஜோடிகளின்
கைகளிலிருக்கிற
கடைசி துருப்புச்சீட்டுஎன்கிறார்கள் ?

போதுமான தொரு
வாழ்விலிருந்து மீளும்
சுய விலகல் என்கிறான் ஞானி
ஒரு வேளை

துடித்தடங்கும்
இக்கயிற்றை அறுத்து
தரையிறக்குகையில்
உடைந்த என் குரல்வளையில்
எஞ்சியிருக்கலாம்

ஒரு தற்க்கொலையின்
காரணத்திற்கான
கடைசிச்சொல்.

குற்றத்துக்கான புள்ளி..

*
திருந்தி விடுவது பற்றி விவாதித்துக் கொண்டிருந்த பகலில்
சூழ்ச்சிக்கான முதல் புள்ளியைக் கையில் வைத்திருந்தேன்

நாளது வரை நடந்த சம்பவக் குறிப்புகள்
எட்டு மடிப்புக் காகிதக் கோடுகளின்
அழுக்கேறி கிழிந்திருக்கிறது

ஒவ்வொரு எழுத்தின் வன்மத்தையும் அலசித்
தழுதழுத்த நாக்கின் நுனி சிவந்திருந்தது

சுலபம் என்கின்றன மனச் சுவர்கள்
பாதுகாப்பின் உச்சியில் நீரோடும் மின்சாரக் கம்பிகள்
தருணங்களின் கணத் துளிகளை ஆவியாக்குகின்றது

திருந்தி விடுவது பற்றி விவாதித்துக் கொண்டிருக்கும் பகல்
எங்கோ ஓர் இருட்டின் தனிமையில்
சத்தமில்லாமல் திறந்து விடுகிறது குற்றத்துக்கான
இறுதிப் புள்ளியை

******

எதையாவது சொல்லட்டுமா………63

இந்த முறை 35வது புத்தகக் கண்காட்சி சென்னையில் நடைபெறுவது பற்றி யோசனையாக இருந்தது.  கலந்துகொள்ளலாமா வேண்டாமா என்ற யோசனை.  இந்த முறை புதிய புத்தகம் எதுவும் கொண்டு வரவில்லை.  ஏன் விருட்சமே கொண்டு வரவில்லை?  இருக்கிற புத்தகங்களை வைத்துக்கொண்டு உட்கார்ந்தால், ரூ5000 வரை தேறுமா என்பது சந்தேகம்.  எல்லாம் விற்கமுடியாத கவிதைப் புத்தகங்கள்.  இதற்கு உழைப்பு அதிகமாகத் தேவைப் படுகிறது.  பல நண்பர்களைத் தொந்தரவு செய்ய வேண்டியிருக்கிறது.  ஏன் இதில் கலந்துகொள்ளவேண்டும்? 
புத்தகம் கொண்டு வர முடியவில்லை.  ஆடம்பரமாகப் புத்தக வெளியீட்டு விழா நடத்த முடியவில்லை. தமிழில் பெரும்பாலான புத்தகங்களை உயிர்மை, காலச்சுவடு, கிழக்கு போன்ற பதிப்பகங்கள் போட்டிப் போட்டுக்கொண்டு போடுகின்றன.  விருட்சம் போன்ற பத்திரிகை என்ன செய்ய முடியும்?  அப்படியே புத்தகம் போட்டால் யார் கவனத்திற்கு அது போகும்.  விற்கவும் விற்காது.  என்னை விட்டும் போகாது. 
ஆட்சி மாறியதால், எப்போதும் கிடைக்க வேண்டிய லைப்ரரி ஆர்டரும் போய்விட்டது.  கண்டுகொள்ளவே இல்லை.  வரவும் இல்லை.  யாருக்கும் போய்ச் சேரவில்லை போல் தோன்றுகிறது.  பொதுவாக ஜனங்களுக்கு புத்தகங்கள் மீது மதிப்பு குறைந்து போய்விட்டது.  ஆனால் பல பதிப்பகங்கள் control இல்லாமல் புத்தகங்கள் போட்டுத் தள்ளுகிறார்கள்.  பல இடங்களுக்குப் புத்தகங்களைத் தூக்கிக்கொண்டு போகிறார்கள். 
புத்தகக் கண்காட்சியில் வாடகை ரூ10000 என்றால், செலவு ரூ10000 மேல் ஆகிவிடும்.  இந்தப் பணம் கிடைக்க வேண்டுமானால், கிழக்கு, உயிர்மை, காலச்சுவடு, ஆனந்தவிகடன் போன்ற பதிப்பகங்களின் புத்தகங்களையும் சேர்த்து விற்கவேண்டும்.  இதில் விருட்சம் புத்தகம் கொஞ்சம் விற்கும்.  இந்த முறை எதற்கு இந்தப் புத்தகக் கண்காட்சியில் கலந்துகொள்ள வேண்டும் என்று  தோன்றியது. தோன்றிகொண்டே இருக்கிறது. 
போனமுறை புத்தகக் கண்காட்சியில் ஏற்பட்ட கசப்பான அனுபவம் வேறு சேர்ந்துகொண்டது.  எனக்கு உதவி செய்த நண்பர் ஒருவர், நான் எதிர்பாராத தொகையைக் கடனாகக் கேட்டார்.  இது மாதிரி கடனாகப் பணம் கேட்டாலே ஆபத்து என்று எனக்குத் தோன்றியது.  ஏன் என்றால், பணம் கடனாகக் கேட்பவர்கள் யாரும் பணத்தைத் திருப்பிக் கொடுப்பதில்லை.  புத்தகக் கண்காட்சி மூலம் கிடைத்த சிறிய தொகையை அவருக்குத் தாராளமாகவே கொடுத்தேன்.  எனக்கும் அவருக்கும் எந்த வியாபாரத் தொடர்பும் இல்லை.  விருட்சத்திற்குக் கிடைக்கும் தொகை புத்தகம் போடத்தான் பயன்படுத்துவேன்.  லாபம் கிடையாது. திரும்பவும் புத்தகம் போடுவேன்.  அவ்வளவுதான்.  இந்த முறை வேண்டாமென்று நினைத்துக்கொண்டே அவரிடம் தொடர்புகொண்டு பேசினேன்.  ஒரு நாளைக்கு ரூ.1000 வேண்டுமாம்.  எனக்கு அவர் கேட்டது சிரிப்பை மூட்டியது.  1000 ரூபாய்க்குப் புத்தகமே ஒரு நாளைக்கு விற்காது.  விருட்சம் பொறுத்தவரை புத்தகம் விற்று லாபம் வந்தால் சரி, இல்லாவிட்டால் விளம்பரம் என்று சொல்லி தப்பிக்கலாம்.
விருட்சம் பொறுத்தவரை அது oneman show.  எல்லாமே நான்தான்.  அதனால் ஏகப்பட்ட தடுமாற்றங்கள்.  யாராவது கவிதைப் புத்தகம் போட  வேண்டுமென்று என்னிடம் வந்தால், மனதைத் திடமாக வைத்துக்கொள்ளுங்கள் என்பேன்.  புத்தகம் விற்க என்னிடம் புத்தகக் கண்காட்சியில் புத்தகங்கள் கொடுத்தால், கண்காட்சி முடிவதற்குள் வாங்கிக்கொள்ள வேண்டும்.  இல்லாவிட்டால் சந்திப்பதும், புத்தகத்திற்கான பணம் கொடுப்பதும் சிரமமாகிவிடும்.  
இப்படித்தான் சென்னையில் நடக்கும் 35வது புத்தகக் கண்காட்சிக்கு விருட்சம் தயாராகிவிட்டது.

ழ 5வது இதழ் – டிசம்பர் 1978 ஜனவரி 1979

தேனரசன் கவிதைகள் 
வெள்ளை ரோஜா-கவிதைகள் அன்னம் வெளியீடு,   அகரம் சிவகங்கை   ரூ.5-00
 தேனரசன் கவிதைகளை ஒருமுறை படித்ததும் ஒரு திறமையாளனை சந்திக்கிறோம் என்ற உண்மை உடனே புலப்பட்டு விடுகிறது.
   காகங்கள் முடிபுனைந்தால்
   கரைச்சல்களே சங்கீதம்
   சிறுமைக்கு நீர் வார்த்தால்
   தெருநெடுவே முள் வளரும்.
இந்த வரிகளைப் படிக்கும் பொழுது,’பேயரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்’ என்ற பாரதியின் வரியும், மற்றதில் எதிர் மறையாய ஒரு திருக்குறளும் முற்றிலுமாக மறைந்து புதிய வரிகளும் இடம் கொடுத்திருப்பதைப் பார்க்க முடிகிறது.
   ‘தேவை பணம் இதுவே
   திருவாய் மொழி  எனவே
   சேவை மனப்பான்மை
   சிவலோகம் போகிறது’
   ‘அவரவர்கள் பாட்டுக்கு
   அகப்பட்டது சுருட்டல்
   தவறில்லை என்னுமொரு
   தருமம் தழைக்கிறது.’
என்ற வரிகளில் ஒரு புதிய கவிஞனின் குரல் ஒலிப்பதைக் கேட்கலாம்.  சொல்லே கவிதை என்பது உண்மையென்றாலும் கவிஞன் கலைஞனுமாகவே காணப்பட்டு வருகிறான்.  கூற்றின் அளவிலேயே மேற்கண்ட வரிகள் தேனரசனுக்குக் கவிதை ஆகிவிட்டாலும் இந்தத் தொகுப்பில் சிருஷ்டி அளவிலான கவிதைகளும் உள்ளது  நிம்மதி தருகிறது.  அவற்றின் எண்ணிக்கை 38ல் 8 என்றாலும் ‘ஒரு வெளியேற்றம்’ ‘யார் சொன்னது?’ என்ற கவிதைகளும் பிறகு ‘ஆதிவாசிகள்,’ ‘ஒரு விவசாயியின் மறைவில்’, ‘ஈடு’, ‘பாவம் அம்மா,’  ‘மேஜை மீது’ ஆகிய கவிதைகளும் நன்றாக உள்ளன என்றாலும், எண்ணல் அலங்காரம் என்ற கவிதை எல்லாவற்றினும் சிறந்ததாக இருக்கிறது.  வயது வந்த தமக்கைக்காக ஒரு சிறுவன்.
   ‘ஐயா சாமி.  நாலு நாளாப் பட்டினி
   மூணு மாசம் முன்னாலே
   மாரி மகமாயி வந்து
   எங்க அக்காவின்
   ரெண்டு கண்ணையும்
   சூறையாட்டிட்டா
   ஒரு மனசு வெச்சு
   ஒதவுங்கையா’
என்று யாசிக்கிறான்.
   ‘நாளைக்குப்
   புத்திலக்கியம் படைத்து
   இந்தச் சமுதாயத்தை
   புணருத்தாரணம் செய்யப் போகிறவன்’

அந்த யாசிப்பில் வரும் நாலு, மூணு, ரெண்டு, ஒண்ணு என்ற எண்களின் இறக்கத்தை ரசிக்கிறானாம்.  இந்தக் கவிதையின் கடைசி வரிகளில் மனத்தின் வினோதப் போக்கு பிடிக்கப்பட்டிருப்பதால் இந்தக் கவிதையை உயர்வானதாகக் கூறவேண்டும்.

ஆனால் தேனரசன் கவனக்குறைவு என்ற குற்றத்துக்கு ஆளாகக்கூடாது.  உதாரணமாக அந்தச் சிறுவனின் யாசிப்புக் கூற்றில் ‘அக்காவின்’ என்று காணப்படுகிறது.  இந்தச் சொல்லில் வரும் ‘இன்’ பொருந்தாமல் நெருடுகிறது. 
கவிதை என்ற தலைப்பில் உள்ள கவிதை தேனரசனுக்குச் சிறப்பைத் தராது.  ‘பெண் துணை’ இல்லாத சமயத்தில் ஏகாந்தம் மேற்பட்டு ‘இப்போ யாருமில்லே வாடி என் மனச்சுக மோகினி’ என்று கவிதையை அழைக்கும் பொழுது தேனரசனின் திறமை வீணாகிறது.  ‘தனிமை கண்டதுண்டு-அதிலே
சாரமிருக்குதம்மா’ என்ற பாரதியின் வரியை நினைந்து மனதுக்கு ஆறுதல் சொல்லிக் கொள்ள நேருகிறது.  கவிதை பற்றிய, கவிஞனுக்கு இருக்க வேண்டிய அனுபவம் இங்கு காணப்படவில்லை.  மேலும் விஷயம் மிகவும் சாமான்யமாகி விட்டது. என்றாலும் கூட தேனரசன் நம்பிக்கை தருகிறார்.
                                                                                                –  ஞானக் கூத்தன்.               
 
அன்புடையீர்,
வணக்கம்.
ழ இதழின் 5வது இதழ் உங்கள் பார்வைக்கு முழுவதும் படைத்துவிட்டேன்.  இதேபோல் 6வது இதழ் முழுவதும் தருவதாக உத்தேசம்.  கவிதைகளும் கவிதைகளுக்குரிய பார்வையுடன் ஒரு இதழ் 1988ல் வெளிவந்தது.  பளபள அட்டை எதுவுமில்லாமல், அம்மணப்பதிப்பாக நியூஸ்பிரிண்டில் வெளிவந்த இதழ் ழ.
ஒரு திருமணத்தின்போது, அங்கு பரிமாறப்படும் சாப்பாடு இலைக்குக் கீழ், நியூஸ்பிரிண்ட் தாளைப் பயன்படுத்தினார்கள்.  அத்தாள் உருண்டையைப் பார்த்து, ஆத்மாநாம், எத்தனை ழ பத்திரிகைக் கொண்டு வரலாம் என்று ஞானக்கூத்தனிடம் கூறியதாக சொல்வார்கள்.
ழ பத்திரிகை வந்தவுடன் அதை எல்லோருக்கும் அனுப்புவார்கள்.  விற்பனைக்காக சில இடங்களுக்கும் அனுப்புவார்கள்.  ஆனால் அது விற்று வந்த பணத்தைப் போய்க் கேட்கக்கூட மாட்டார்கள்.  க்ரியா போன்ற சில அமைப்புகள் மொத்த விற்பனையை எழுதி வைத்துக்கொண்டு கொடுப்பார்கள்.  மற்றவர்கள் யாரும் சரியாக தந்ததில்லை. 
இதழ் அனுப்பும் பொறுப்பை ஆர்.ராஜகோபலன் அவர்கள் பார்த்துக்கொண்டிருந்தார்.  அவர் ஒரு கல்லூரி பேராசிரியர்.  அந்தப் பொறுப்பில் இருந்துகொண்டு ழ பத்திரிகையையும் பார்த்துக் கொண்டிருந்தார்.  இதழை 42 சுந்தரமூர்த்தி விநாயகர் கோயில் தெரு, சென்னை 5 என்ற முகவரியிலிருந்து கொண்டு வந்தார். அவர் ழ இதழின் இணை ஆசிரியர்.  திருவல்லிக்கேணியில் உள்ள  மக்கள் அச்சகம்தான் ழ பத்திரிகையை அச்சடித்துக் கொடுத்தது.
  
அன்புடன்,
அழகியசிங்கர்.