வாசல்

 
 
 
 
சிற்றூரில்

வாழ்ந்திருந்த சிறுவயதில்
விடியற்காலம்
வாசற்படியில்
நான் படிக்கும் சத்தத்தோடு
விதவிதமான பறவைகளின்
சத்தங்களும் சேரும்
சேவலின் கூவல்
காகங்களின் கரைச்சல்
குருவி, மைனாக்கள், மற்றும்
பெயர் தெரியா பறவைகள்
பகலுக்காக
ஆயத்தமாகும் சத்தங்கள்
இப்போதெல்லாம்
விடியற்காலத்தை
சந்திப்பதேயில்லை
பறவைகளின்
சத்தமும் கேட்பதேயில்லை
வாசல் மட்டும் இருக்கிறது….
பக்கத்து ஃப்ளாட்டின்
செருப்புகள் சிதறி

மாயங்கள் புரிகிறதே மதுவாகினி

உன்னுடனான உரையாடலுக்குப் பின்
செத்தை வெளியேற்றிய தாய்பசுவின் அமைதி கவ்வ
நூல் கோர்த்து தொங்கவிடப்பட்ட
வண்ண பலூன்களாக மிதக்கும் உன் வார்த்தைகள்
என்னுள் பயணிக்கத் துவங்குகிறது
சலவைக்குறியின் மையாகி
மகரந்தம் விதைக்கும் தட்டானாகவும்
நிலத்தை உயிர்ப்பூட்டும் மண்புழுவாகி
ஊற்றுக் கண்ணாகி கினற்றை ஈரமாக்குகிறது
இலுப்பை பூவாகி உடலை சக்கரையாக்கி
பவளமல்லியாகி சுவாசம் மணந்திட்டு
தொட்டாஞ்சிணுங்கியாகி நாணம் காட்டுகிறது
சுற்றும் நாய் ஒன்றிற்கு
பரிவுபொங்க சோறிட்டு
மீந்த மீந்த பாலூட்டுகிறது பூனைக்கு
வழிய வழிய செடிகளுக்கு நீர் இறைத்து
கையேந்துபவருக்கு ரூபாய்தாளை பிச்சையிடுகிறது
இருசக்கர வாகனத்தையும்
குதிரைகள் பூட்டிய ரதமாக்கி
புவி ஆளப் பிறந்தவனாய் பவனி வரச்செய்து
மாயங்கள் புரிகிறதே மதுவாகினி…

எதையாவது சொல்லட்டுமா………68

ந.முத்துசாமிக்கு இந்த முறை பத்மஸ்ரீ பட்டம் கிடைத்துள்ளது.  முத்துசாமியை நினைக்கும்போது ‘நீர்மை’ என்ற அவருடைய சிறுகதைத் தொகுப்பு ஞாபகத்திற்கு வரும்.  அவருடைய கதைகளைப் போல ந.முத்துசாமியும் வித்தியாசமான மனிதர். எளிமையான மனிதர்.  அவரைப் பார்க்கும்போது அவருடைய மீசைதான் ஞாபகம் வரும்.  கூத்துக்காக ந.முத்துசாமி தன் வாழ்நாள் முழுவதும், இன்னும் பாடுபட்டுக்கொண்டிருக்கிறார்.  எதையும் தெளிவாக செயல்பட வேண்டுமென்று நினைப்பவர்.  நடிகரின் உடல் அசைவுக்கும், வசன உச்சரிப்புக்கும் முக்கியத்துவம் கொடுப்பவர்.  கூத்துப்பட்டறையில் நடிக்கத் தெரிந்த நடிகனுக்கு நடிப்பு என்பது வெகு சுலபம்.
கூத்துப்பட்டறையை ஒரு விஞ்ஞானபூர்வமான அமைப்பாக ந. முத்துசாமி மாற்ற முயற்சி செய்துகொண்டிருக்கிறார் என்று எனக்குத் தோன்றுகிறது.  இரண்டு மூன்று முறை விருட்சம் சார்பாக முத்துசாமியை வைத்துக் கூட்டம் நடத்தியிருக்கிறேன்.  ஞானக்கூத்தன் கவிதையை எப்படி ஒரு நடிகன் நடித்துக் காட்ட முடியுமென்று ஒரு நிகழ்ச்சியில் நடத்திக் காட்டினார்.
ஒருமுறை ஐராவதம் என்ற படைப்பாளியை வண்டியில் அழைத்துக்கொண்டு இலக்கியச் சிந்தனை கூட்டத்திற்குச் சென்றேன்.  ஐராவதத்தைப் பார்த்த முத்துசாமி, ”என்னைய்யா, உம்மை தூசித் தட்டி அழைத்துக்கொண்டு வந்திருக்கிறாரா?” என்று கேட்டார்.  அதைக் கேட்கும்போது எனக்கு தாங்க முடியாத சிரிப்பை ஏற்படுத்தியது.
கூத்து என்பது பழைய காலத்துப் பாணி.  அதை உயிர்ப்பிக்கும் முயற்சியில் முத்துசாமி செய்து காட்டியிருக்கிறார்.  என் சின்ன வயதில் சித்திரா பெளர்ணமி அன்று எங்கள் கிராமத்தில் கூத்து நிகழ்க்சி ஒன்றை பார்த்த ஞாபகம்.  இரவு முழுவதும் நடக்கும்.  ஆனால் இப்போதெல்லாம் அது எந்த அளவிற்கு சாத்தியம் என்பது தெரியவில்லை.  எந்த அளவிற்கு எல்லோராலும் ஈடுபட முடியும் என்பதும் தெரியவில்லை. 
 நாடகம் என்பதே போய்விட்டது.  ஒரு காலத்தில் டிவி இல்லாதபோது, கூத்தும், பின் நாடகமும் தேவைப்பட்டது.  இப்போது எல்லாம் போய்விட்டது.  எல்லோராலும் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் சென்று ஒரு நாடகத்தைப் பார்க்க முடியுமா என்பது தெரியவில்லை.  ஏன்என்றால் எல்லோருக்கும் அவரவர் இடத்திலேயே எல்லாம் கிடைக்க வேண்டுமென்ற சூழ்நிலை வந்துவிடும் என்று தோன்றுகிறது. இந்த நிலையில் சினிமாகூட வீட்டிற்கு வந்தால் பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள். 
இன்னும் கூட கூத்தை எல்லோரும் பேசவேண்டுமென்று நினைக்கிற முத்துசாமியை வாழ்த்தாமல் இருக்க முடியவில்லை.

மிச்சம்

 
                
                மரம்போல் நிற்காதே
                மனம் திறந்து
                பதிலைச் சொல்லென்றேன்
                
                மனிதனைப்போல
                மலிவானவையல்ல மரங்கள்
                
                தேக்கின்விலை மனிதனுக்கில்லை
                சந்தனமணமும்
               
                மழை, வெய்யில்,  பனி, புயல்
                எதுவானாலும் எதிர்கொள்ளும் மரங்கள்
                
                 குடையில் குளிரறையில்
                கம்பளியில் ஒளிவான் மனிதன்
               
                தழையும் நிழலும் தந்தாலும்
                ஆடுகளைத் தின்னாது மரங்கள்
                மனிதன் தின்பான்
               
                மரத்தை வெட்டினால்
                கட்டில் தொட்டில் கதவு ஐன்னல்
                மேசை நாற்காலி செய்யலாம்
               
                மிச்சத்தை
                நீயே யோசித்துக்கொள்ளென்றான்
 
       

எதையாவது சொல்லட்டுமா………67

இந்த முறை புத்தகக் காட்சி ஆரம்பிக்கும்போதே வேண்டாம் என்று மனம் சொல்லியது. ஏன் என்ற காரணம் புரியவில்லை.  மிகக் குறைந்த அளவில் புத்தகங்களைப் போட்டு வியாபாரம் செய்வது சரியில்லை.  ஆனால் புத்தகங்களை வைத்துக்கொண்டு விற்கவும் வழியில்லை.  ஒவ்வொரு முறை புத்தகக் காட்சியில் காண்பது, ஒன்றிரண்டு புத்தகங்களைப் போட்டு விற்பதற்கு எல்லோரும் அலை அலையென்று அலைவது.  நானும் ஸ்டால் எடுக்காவிட்டால், அந்த நிலைக்குத் தள்ளப்படுவேன்.  என் புத்தகங்கள் ஒரு 30 தேறும்.  ஆனால் அது போதாது.
எப்போதும் விருட்சம் புத்தகங்கள் ரூ.10000 வரை விற்கும்.  இந்த முறை புதிய புத்தங்கள் போடாவிட்டாலும், 10000வரை விற்க முடிந்தது.  ஆனால் அது போதாது.  ஸ்டால் வாடகையே அள்ளிக்கொண்டு போய்விடும்.  பின் மற்றப் புத்தகங்களை விற்றுத்தான் மற்ற செலவுக்கு முயற்சி செய்ய வேண்டும். 
ஒரு ஒழுங்கான கணக்கு இருந்தால், புத்தகக் காட்சியில் புத்தகங்களை நன்றாக விற்கலாம்.  இந்த முறை நல்ல இடத்தில் ஸ்டால் கிடைத்தும் ரூ.50000க்கு மேல் புத்தகங்களை விற்க முடியவில்லை.  இந்த வருடம் எப்போதும் விட Low.  இரண்டு முக்கியம விஷயங்களை கவனத்தில் கொண்டு வர வேண்டியுள்ளது.  ஒன்று traffic.  புத்தகங்களைக் கொண்டு வருவது, கடையைப் பார்த்துக்கொள்ள தக்க நபர்கள் வைத்துக்கொள்வது.  எனக்கு பெரும்பாலும் நண்பர்கள் உதவி செய்வார்கள்.  அப்படி உதவி செய்யும் நண்பர்கள் பல தொல்லைகளுக்கு ஆளாக நேரிடும்.  இதற்கான செலவு, ஸ்டால் வாடகையைவிட கூடுதலாகப் போய்விடும்.
பல ஆண்டுகளாக நான் புத்தகக் காட்சியில் கலந்து கொண்டிருக்கிறேன்.  இந்த முறை வாங்கிய அடிபோல எப்போதும் வாங்கியதில்லை.  ஒருமுறை புத்தகக் காட்சி நடந்துகொண்டிருக்கும்போது, என் பெண்ணின் குடும்பம் விபத்தில் சிக்கி பரபரப்புக்கு ஆளானேன்.  அப்போதுகூட புத்தகம் அதிகமாக விற்றது.  பெரிய பதிப்பாளர்களைத் தவிர என்னைப் போல இரண்டுகெட்டான் பதிப்பாளர்களுக்கு செம்ம உதை.
உண்மையில் லாப நஷ்டக் கணக்குப் பார்க்காமல் புத்தகக் காட்சி என்பது ஒரு அனுபவம் என்று நினைத்தால் அதற்கு எந்தக் குறைவும் இல்லை.  பல நண்பர்களைச் சந்திக்கலாம்.  உறவினர்களைச் சந்திக்கலாம்.  எழுத்தாள நண்பர்களைச் சந்திக்கலம் என்று எல்லோரையும் சந்திக்கும் இடமாக புத்தகக் காட்சி தென்படுகிறது.  பின் எழுதும் ஆர்வத்தையும், படிக்கும் ஆர்வத்தையும் அது தூண்டுகிறது.
புத்கக்காட்சியில் புத்தகம் வாங்குபவர்களைப் பார்க்கும்போது, எனக்கு ஒன்று தோன்றியது. நானும் சில நம்பிக்கைக்குரிய புத்தகங்களை வெளியிடுவது என்று தீர்மானித்திருக்கிறேன்.  உதாரணமாக வாழ்க்கையில் வெற்றி பெறுவது எப்படி?  என்ற ரீதியில் புத்கங்கள்.  பின் அரசியல் தலைவர்களைப் பற்றிய புத்தகங்கள்.  அம்பேத்கர் பற்றி புத்தகம் போட்டால் ஆயிரக்கணக்கில் புத்தகம் விற்கும்.  இப்படித்தான் புத்தகம் விற்கிறது.  கவிதைப் புத்தகத்தை யாரும் தொட மாட்டார்கள்.  உடல் ஆரோக்கியம் பற்றி புத்தகங்களும் விற்கின்றன.  டாக்டர் செல்வராஜ் எழுதிய சிறுகதைப் புத்தகங்களைவிட அவருடைய வியத்தகு சிறுநீரகங்கள் புத்தகம் அதிகம் விற்கிறது. வழக்கம்போல் சமையல் புத்தகம்.  இந்த முறை சாகித்திய அக்காடமி பரிசு வாங்கிய காவல் கோட்டம் என்கிற வெங்கடேசனின் புத்தகம் அதிகம் விற்றது.
புத்தகக் காட்சியில் புதுமைப்பித்தன் வழி, க.நா.சு அரங்கம் என்றெல்லாம் வைத்து திறமையாக கட்டமைத்திருந்தார்கள்.  மேலும் பல எழுத்தாளர்களைக் கூப்பிட்டு பேச வைத்தார்கள்.  வெளியே பெரிய அரங்கில் வேறு விதமான கூட்டங்கள் நடந்து கொண்டிருந்தன.  உள்ளே க.நா.சு அரங்கில் வாசகர் எழுத்தாளர் சந்திப்பு ஏற்பாடு செய்திருந்தார்கள்.
பொதுவாக புத்தகக் காட்சியில் கூட்டம் குறைவு. 
 எப்படி இது தெரியுமென்றால் கான்டீன்.  நிதானமாக எல்லோரும் அமர்ந்தபடி சாப்பிட முடிந்தது.  அங்கு தின்பண்டங்கள் விலை கட்டுக்கடங்காமல் இருந்தது. என்னைப் போன்ற இரண்டுகெட்டான் பதிப்பாளர்களுக்கு லாபம் இல்லை. 

மக்கள் அவரைச் சூழ்ந்திருக்கிறார்கள்

 
அஸீஸ் நேஸின்

      அவர் இறுதியாக சிறையில் கழித்த காலம் மிகவும் கொடுமையானது. சிறையிலிருந்து விடுதலை பெற்ற பிறகு மிகவும் தொலைதூரத்திலிருந்த ஒரு பிரதேசத்திற்கு அவர் நாடுகடத்தப்பட்டார். அந்தப் பிரதேசத்துக்கும் அம் மக்களுக்கும் அவரொரு புதியவராக இருந்தார். அவர் சிறையிலிருந்த போது அவரது மனைவியால் அவர் விவாகரத்து செய்யப்பட்டிருந்தார்.

      அவரது எல்லா எதிர்பார்ப்புக்களும் சிதறுண்டு போயிருந்தன. வாழ்க்கையைக் கொண்டு செல்லப் போதுமான பணம் கூட அவரிடமிருக்கவில்லை. வேலையொன்றைத் தேடிக் கொண்டு, அமைதியான வாழ்க்கையொன்றைக் கழிப்பதற்கு அவர் நிரந்தரமாக அரசியல் வெளியிலிருந்து விலகிக் கொள்வாரா?
      எல்லாவற்றுக்கும் முதலில் அவர் ஓர் இருப்பிடம் தேடி நடந்தார். அவர் நாடுகடத்தப்பட்டிருக்கும் பிரதேசத்திலிருந்த நகரத்தில் மட்டுமல்ல, நகருக்கு வெளியேயும் கூட வீடொன்றைப் பெற்றுக் கொள்வதற்கு அதிக வாடகையைச் செலுத்தவேண்டியிருக்கும். வாடகையைச் செலுத்தத் தவறினால், வீட்டின் உரிமையாளன் வந்து தொந்தரவு செய்வான் என்பதனால் அவ்வாறான சந்தர்ப்பமொன்றுக்கு முகம்கொடுக்க அவர் விரும்பவில்லை. ஆனாலும் அவரது பழைய தட்டச்சுப் பொறியையும் உடைந்து சிதறிப் போயுள்ள வீட்டுத் தளபாடங்கள் சிலவற்றையும் வைப்பதற்கு ஓரிடத்தைத் தேடிக் கொள்ளவே வேண்டும். மிருகக் காட்சிசாலைக்கு புதிதாக வந்துள்ள விலங்கொன்றைப் பார்க்க வருவதுபோல், தன்னைப் பார்க்கவும் மக்கள் வருவார்களெனச் சந்தேகித்த அவர் அமைதியானதொரு வாழ்க்கை நடத்த எண்ணினார். அதனால் அவர் அப் பிரதேசத்தினொரு மூலையில் மக்களின் நடமாட்டமே இல்லாத ஒரு பகுதியிலிருந்த வீடொன்றின் ஓர் அறையை வாடகைக்கு எடுத்தார்.

      நகரத்திலிருந்து இரண்டு மணித்தியாலங்கள் நடப்பதன் மூலம், அந்த இடத்தை அடையலாம். புத்தகங்களை வைத்திருக்கும் பழைய சூட்கேஸ், சிதைந்த தட்டச்சுப் பொறி மற்றும் உடைந்து சிதறிப் போன வீட்டுத் தளபாடங்கள் ஆகியன வாடகைக்கு எடுத்த அறைக்கு கொண்டு வரப்பட்டன. அவர் அறையிலிருந்த யன்னலை பத்திரிகைத் தாள்களால் மறைத்தார்.

      அவர் தங்கியிருந்த வீட்டுக்குச் சற்றுத் தூரத்தில் பாதையின் எதிர்ப் புறத்தில் சிறியதொரு சில்லறைக் கடையிருந்தது. அதற்கும் கொஞ்சம் தூரத்தில் பாதையின் இடது பக்கத்தில் சிறியதொரு பழக் கடையொன்றும் இருந்தது. அவர் அக் கடைகளில் தனது தேவைகளைப் பூர்த்தி செய்துகொண்டார். சில்லறை வியாபாரியும், பழ வியாபாரியும் கொஞ்சம் கொஞ்சமாக அவரது நண்பர்களாகினர். அவர்களது வியாபாரம் மிகவும் சொற்பமானதாக இருந்தது. ஒரு நாளைக்கு வருகை தரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை ஐந்து அல்லது ஆறு மட்டும்தான். அதிகமாகப் பணம் செலவு செய்யக் கூடியவர்கள் அந்தக் கடைகளுக்கு வரவில்லை. அந்த இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு கடையைக் கொண்டு செல்வதற்கும் தேவையான வசதிகள் அக் கடை உரிமையாளர்களுக்கு இருக்கவில்லை.
      சில தினங்களுக்குப் பிறகு, சில்லறைக் கடைக்கு முன்னால் சுடச் சுட அப்பம் விற்குமொரு கடை ஆரம்பிக்கப்பட்டது. எந்நாளும் மத்தியான வேளையில் வருமொரு வியாபாரி, இரவின் இருள் சூழும் வரையில் அங்கு சுடச்சுட அப்பம் விற்றான். அதற்கும் சில தினங்களுக்குப் பிறகு இன்னுமொரு வியாபாரி, அதற்குப் பக்கத்திலேயே பாண் விற்க ஆரம்பித்தான். பழ வியாபாரியின் கடையின் பகுதியொன்றை வாடகைக்கு எடுத்த இன்னுமொருவன், கண்ணாடி அலுமாரியொன்றில் கேக்குகளை வைத்து விற்றான். சிறிது காலம் சென்ற பிறகு, சப்பாத்துத் தைப்பவனொருவன், பழச்சாறு பானம் விற்கும் சைக்கிள்காரனொருவன் மற்றும் தீன்பண்ட வியாபாரியொருவன் அப் பகுதியில் தமது வியாபாரங்களைத் தொடங்கினர்.
      சொற்ப காலத்துக்குள்ளேயே அவரது வீட்டைச் சூழவிருந்த பகுதி, சிறியதொரு சந்தை போல ஆகி விட்டிருந்தது. வீதியைப் பெருக்கும் மனிதனொருவன், வியாபாரிகளால் அசுத்தமடையும் அப் பிரதேசத்தை காலையிலிருந்து இரவு வரை சுத்தப்படுத்திக் கொண்டேயிருந்தான். சில்லறைக் கடைக்கும் பழக்கடைக்குமிடையில் புதியதொரு கோப்பிக் கடையும் ஆரம்பிக்கப்பட்டது. அங்கு போய் வருபவர்களின் எண்ணிக்கையும் படிப்படியாக அதிகரித்துக் கொண்டே வந்தது.

      அவர் தங்கியிருந்த வீட்டைச் சூழவிருந்த பாழடைந்த வீடுகளும் அறைகளும் புதிய குடியிருப்பாளர்களால் வாடகைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இந்தப் பிரதேசத்துக்கு சடுதியில் உதித்திருக்கும் அதிர்ஷ்டத்தை எண்ணி அவர் வியந்தார். எவ்வாறாயினும் அவரால் இன்னும் ஒரு வேலையைத் தேடிக் கொள்ள இயலவில்லை. அவரால் தனியாக ஒரு வேலையைத் தேடிக்கொள்ள முடியாது. எவரேனும் அவருக்கு வேலை கொடுத்தாலும், அவரைக் காவல்துறை எப்பொழுதும் கண்காணித்துக் கொண்டிருப்பதை அறிந்ததும் அவரது சேவையைத் தொடர்ந்தும் எதிர்பார்ப்பதைத் தவிர்ந்து கொண்டனர்.

      அவருக்கு அவரது நண்பர்களிடம் கடன் கேட்பதுவும் இயலாது. அவர்களில் அனேகர் வேலையற்றவர்கள். மற்ற நண்பர்கள் இவ்வுலகை விட்டும் சென்றிருந்தனர். நகரத்துக்குச் சென்று தனது அறையில் வாடகை தராமல் தங்கிக் கொள்ளும்படி சொன்ன நண்பரொருவரது வேண்டுகோளையும் அவரால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. அவர் தங்கியிருந்த பிரதேசத்தை விட்டுச் செல்வது சிரமமாக இருந்தமையே அதற்குக் காரணம். அவர் சில்லறை வியாபாரியிடமிருந்தும், பழ வியாபாரியிடமிருந்தும் மற்றும் ஏனைய வியாபாரிகளிடமிருந்தும் இடைக்கிடையே கொஞ்சம் பணம் கடனாகப் பெற்றிருந்தார். அவர் அந்தக் கடனையெல்லாம் திருப்பிக் கொடுக்க வேண்டும்.
      ஒரு மாலை வேளையில் அவர் இந்தக் கடன்களையெல்லாம் திருப்பிக் கொடுத்துவிட்டு அப் பிரதேசத்தை விட்டும் செல்வது எவ்வாறென சிந்தித்துக் கொண்டிருந்த போது, யாரோ வந்து கதவைத் தட்டினார்கள். அறைக்கு வெளியே அவரைச் சந்திக்க மூவர் வந்திருந்தனர். சில்லறை வியாபாரி, பழ வியாபாரி மற்றும் கோப்பிக் கடைக்காரன். அவர் தனது எளிய அறைக்குள் அவர்களை அழைத்து வந்தார்.
      “என்னை மன்னிக்க வேணும். கோப்பியோ வேறு ஏதாவதோ உங்களுக்குத் தர எனக்கு வழியில்ல.”

      சில்லறை வியாபாரி புன்னகைத்துக் கொண்டே, அவனது கையிலிருந்த கடதாசிப் பையை மேசையின் மீது வைத்தான்.
      ” அதுக்குப் பரவால்ல. நாங்க வந்தது வேறொரு விஷயத்துக்கு. இந்தாங்க கோப்பியும் சீனியும்.”
      அவர் கலவரமடைந்தார். இவர்கள் இவற்றை எடுத்து வந்திருப்பது எதற்காக?  அவர்கள் இங்கு வந்திருப்பது, தான் கடனாகப் பெற்றிருக்கும் பணத்தைத் திருப்பிக் கேட்பதற்காகத்தான் என அவர் எண்ணியிருந்தார். ஆனால் இவர்கள் பரிசுகள் எடுத்து வந்திருப்பது ஏன்?
      “ஐயா இந்தப் பகுதியை விட்டுட்டுப் போக நினைச்சிருக்கிறதா நாங்க கேள்விப்பட்டோம். அது நெசம்தானா? ” சில்லறை வியாபாரி கேட்டான்.
      “ஆமா..அப்படியொரு எண்ணமிருக்கு.”
      அவர்கள் வந்திருக்கும் காரணம் இப்பொழுது அவருக்குப் புலப்பட்டது. அவர்களிடமிருந்து கடனாகப் பெற்றிருக்கும் பணத்தைத் திருப்பிக் கொடுக்காமல் தான் தப்பிச் செல்ல முயற்சிப்பதாக அவர்கள் எண்ணியிருக்கக் கூடும்.
      ” ஆமா. நான் இந்த அறையை விட்டுப் போகப் போறதா எப்படித் தெரிஞ்சுக்கிட்டீங்க?
      ” எங்களுக்கு அக்கம்பக்கத்துலருந்து கேள்விப்பட்டுச்சு.”
      ” ஆனா அது பற்றிக் குழப்பமடைய வேணாம். நான் உங்கக்கிட்ட வாங்கிய கடனையெல்லாம் திருப்பிக் கொடுக்காம இங்க இருந்து போகப் போறதில்ல.”
      ” எங்கள வெட்கப்பட வைக்கவேணாம் ஐயா. ஐயாக்கிட்ட இருந்து எங்களுக்கு பணம் தேவையில்ல.”
      ” எனக்குன்னா ஐயாக்கிட்ட இருந்து கிடைக்குறதுக்கு எதுவுமில்ல. ஐயா எனக்குப் பணம் கொடுத்தாலும் நான் வாங்க மாட்டேன்” பழ வியாபாரி சொன்னான்.
      ” ஏனது?”
      ” நாங்க வந்தது ஐயாவோட சேவையை கௌரவிக்க. ஐயா எங்களுக்கு பெரியதொரு சேவையை நிறைவேற்றித் தந்திருக்கீங்க.”
      அவருக்கு மெலிதாக வியர்த்தது. எதுவும் பேச முடியாதபடி தொண்டையில் ஏதோ அடைபட்டது போல உணர்ந்தார்.
      ” அது பற்றி ஞாபகப்படுத்தவும் வேண்டாம்.” அவர் உளறலாகச் சொன்னார்.
      அவர்கள் அவர் யாரென அறிந்துகொண்டிருக்கிறார்கள். மக்களுக்காகப் போராடிய புரட்சியாளர் தான் தானென அவர்கள் எப்படியோ அறிந்துவிட்டிருக்கிறார்கள்.
      கோப்பிக்கடை உரிமையாளன் திரும்பவும் பேச்சை ஆரம்பித்தான்.
      ” இந்தப் பகுதியை விட்டுப் போறதுக்கு நினைச்சிருக்கிற யோசனையை விட்டுப் போடச் சொல்லி நாங்க தாழ்மையா வேண்டுறோம்.”
      ” ஆமா. நாங்க அதைச் சொல்லத்தான் வந்தோம்.” பழ வியாபாரி இடை நிறுத்தினான்.
      ” எனக்கு வாடகை கொடுக்க வழியொண்ணு இல்ல. அதனால நான் போயே ஆகணும்.”
      ” எங்களுக்குத் தெரியும்.” பழ வியாபாரி பேசத் தொடங்கினான்.
      ” எங்க எல்லோருக்குமே தெரியும். நாங்க வியாபாரிகளெல்லோருமே ஒன்று சேர்ந்து ஐயாவின் வீட்டு வாடகையை எங்களுக்கிடையில சேகரித்து ஒவ்வொரு மாசமும் கொடுக்குறதா தீர்மானித்திருக்கிறோம். எங்க எல்லோருடைய வேண்டுகோளும் ஐயா இந்தப் பகுதியை விட்டுப் போயிட வேணாங்குறதுதான்.”
      ” வாடகையப் பத்தி யோசிக்க வேணாம். நாங்க அதப் பார்த்துக் கொள்றோம். இந்தப் பகுதியை விட்டு மட்டும் போயிட வேணாம்.” சில்லறை வியாபாரி இடை மறித்தான்.
      அவரது விழிகள் ஆனந்தத்தால் நிரம்பின. அவர் வழி நடத்திய மக்கள் போராட்டத்தின் முக்கியத்துவத்தை பல வருடங்களுக்குப் பிறகாவது மக்கள் உணர்ந்து வைத்திருப்பது அவரது மகிழ்ச்சியை இரு மடங்கு, மும்மடங்குகளாகப் பெருகச் செய்தன.
      ” அதுன்னா முடியாது.” அவர் மீண்டும் சொன்னார்.
      ” என்னால அதை ஏத்துக்க முடியாது. வீட்டு வாடகை மட்டுமில்ல. எனக்கு இப்ப வேலையொண்ணு கூட இல்ல. அதனால எனக்கு இந்தப் பகுதியில வாழ முடியாது. எனக்கு என்னோட கூட்டாளியொருத்தன்கிட்டப் போய் வாழ்க்கையக் கொண்டு செல்ல முடியும்.”
      கோப்பிக் கடைக்காரன் திரும்பவும் கதைத்தான்.
      “நாங்க இது எல்லாத்தையும் பற்றியும் கதைச்சோம். ஐயாவுக்கு மாசாமாசம் தேவைப்படுறதையெல்லாம் வியாபாரிகளுக்கிடையில சேகரித்துத் தர்றோம். என்னவாயிருந்தாலும் இந்தப் பகுதியை விட்டுட்டு மட்டும் போயிட வேணாம்.”
      மூவரும் ஒன்றாக இணைந்து வற்புருத்தினார்கள். மக்கள் இப்பொழுது விழிப்படைந்திருக்கிறார்களென அவர் உணர்ந்தார். மக்களது உணர்வுகளில் புதியதொரு உத்வேகம் பிறந்திருக்கிறது. கடந்த காலங்களில் அவர் எடுத்துச் சென்ற மக்கள் போராட்டத்தைக் கேலி செய்த வியாபாரிகள் கூட இப்பொழுது அவரது மதிப்பை உணர்ந்திருக்கிறார்கள். அவரது கண்களிரண்டும் ஆனந்தக் கண்ணீரால் ஈரமாகின.
      ” ரொம்ப நன்றி..ஆனா எனக்கு உங்க உதவிகள ஏற்றுக்கொள்ள முடியாது.”
      அவர்கள் தொடர்ந்தும் அவரை வற்புருத்தினார்கள்.
      ” ஐயாவுக்கு இந்த அறை பொருத்தமானதாயில்ல. ” சில்லறை வியாபாரி தொடர்ந்தான்.
      ” இங்க வசிக்கிறதுக்கு இடங் காணாது. ஐயாவுக்கு இந்த அறை பிடிக்கலன்னா, மாடி வீடொண்ணு இங்க பக்கத்துல இருக்கு. அந்த வீட்டோட மேல் மாடியை வாடகைக்கு எடுத்துத் தர முடியும். குளியலறை, கழிப்பறை எல்லாமே அதுக்குள்ளேயே இருக்கு. நாங்க ஐயாவ அங்க தங்க வைக்கிறோம்.”
      ” எங்களுக்கு வேண்டியதெல்லாம் ஐயாவ எங்களிடமிருந்து தூரமாக்காம இங்கேயே வச்சுக்கிறதுதான்.” கோப்பிக் கடைக்காரன் சொன்னான்.
      அவர் பெரியதொரு குழப்பத்துக்குள்ளானார்.
      ” சரி. ஏன் நீங்க எல்லோரும் என்னை இந்தப் பகுதியிலேயே இருக்க வற்புருத்துறீங்க?”
      ” அது நல்ல தெளிவான காரணம். எங்களுக்கு நல்லதொரு வியாபாரமிருக்கு ஐயாவுக்கு நன்மை கிடைக்க.”
      ” பைத்தியமா? நானென்ன அந்தளவுக்கா உங்களோட கொடுக்கல் வாங்கல் செய்றேன்?”
      ” ஐயாவோட கொடுக்கல் வாங்கல் எதுவுமில்ல. கொடுக்கல்வாங்கல் செய்றது மற்றவங்களோட. ஆனா அந்த அதிர்ஷ்டத்தைக் கொண்டு வந்தது ஐயாதான். ஐயா இங்க வர்றதுக்கு முன்னாடி என்னோட கடைக்கு வந்தது ரெண்டு மூணு பேர்தான். ஐயா வந்தப்புறம் இந்தப் பகுதி மனிசக் குடியிருப்பாயிடுச்சு. இப்ப பாருங்க..புதிய கடைகள் தொறக்கப்பட்டிருக்கு. அவையெல்லாமே ஐயாவுக்கு நன்மை கிடைக்க நடந்தவை” சில்லறைக் கடை வியாபாரி விவரித்தான்.
      ” எங்களுக்கு தயவு பண்ணுங்க ஐயா. ஐயா இங்க இருந்து போய்ட்டா எந்த சந்தேகமுமில்லாம என்னோட கோப்பிக் கடையை மூட வேண்டி வரும்.”
      அவர்கள் தொடர்ந்தும் அவரை வற்புருத்தினார்கள். அவர்களுடைய குடும்பம், பிள்ளைகள் குறித்து அவர் சிந்திக்க வேண்டும். அவர்களெல்லோருமே வாழ்க்கை நடத்துவது அவரால்தான். தேவைப்பட்டால் அவருக்கு ஒவ்வொரு மாதமும் பணம் கொடுக்கவும் வியாபாரிகள் முன்வந்தனர்.
      ” நன்றி. ஆனா என்னோட சேவை அந்தளவு பெறுமதியுடையதல்ல. நான் நல்ல ஆரோக்கியமா இருக்கும்போதே வேலை செய்யணும். உங்களுக்காக நான் செய்ய வேண்டியிருப்பது நான் இங்க தங்குறது மட்டும் தானே?”
      ” ஆமா..அவ்ளோதான். நாங்க ஐயாவோட பெறுமதிமிக்க பெயரை எப்பவுமே மறக்க மாட்டோம். ஐயா இங்க வந்ததோடே ஐயாவோட நடவடிக்கைகளக் கவனிக்கன்னு பொலிஸார் படையொண்ணே இந்தப் பகுதிக்கு வந்துச்சு. அவங்களுக்கு சேவை செய்ய சப்பாத்துத் தைக்கிறவன், வியாபாரிகள்னு இந்தப் பக்கம் வந்தாங்க. இன்னும் கொஞ்ச நாள் போகும்போது பொலிஸ் படையோட வேலைகளைக் கண்காணிக்கன்னு இன்னொரு பொலிஸ் படையொண்ணு வந்துச்சு. அவங்களோட தேவைகளச் செஞ்சு கொடுக்க இன்னும் வியாபாரிகள் இங்க வந்தாங்க. இவங்க எல்லோருமே வியாபாரிகளிட்ட இருந்து சாமான்கள் வாங்கத் தொடங்கினாங்க.” பழ வியாபாரி கூறினான்.
      ” அதற்குப் பிறகு நான் கடையொண்ணு திறந்தேன். ஐயாவுக்கு நன்மை கிடைக்க பொலிஸ்காரர்கள் அந்தி நேரங்கள்ல எங்க கடைக்கு வந்து கோப்பிக் கோப்பைகள் மூணு, நாலுன்னு குடிக்கிறாங்க.”
      அவர் வேதனையோடு அவர்களைப் பார்த்தார்.
      ” அவர்கள் எல்லோருமே பொலிஸ்காரர்களா?”
      ” சில பேர் பொலிஸ்காரர்கள்.. சில பேர் பொலிஸ்காரர்களில்லை. ஒரு இடத்துக்கு பத்துப் பேர் வரும்போது அவங்களோட அவங்க குடும்பமும், நண்பர்களுமுன்னு அம்பது பேரளவில வருவாங்க. ஐயா இப்ப இந்த மாதிரிப் போய்ட்டா இந்தப் பகுதி பழைய நிலைக்கே போய்டும். எல்லாப் பொலிஸ்காரங்களுமே திரும்ப ஐயா பின்னால போய்டுவாங்க.”
      ” அப்ப எங்க வியாபாரம் படுத்துடும்.” சில்லறை வியாபாரி சொன்னான்.
      ” பிச்சைக்காரங்க எங்களுக்கு தயவுபண்ணுங்க ” பழ வியாபாரி கெஞ்சினான்.
      ” ஐயா போகவே வேணும்னா நாங்க காசு கொஞ்சம் சேர்த்து முன்னேறுற வரைக்கும் கொஞ்ச காலத்துக்கு இருங்க” கோப்பிக் கடைக்காரன் வேண்டினான்.
      அவர் ஒரு கணம் சிந்தித்தார். ‘எங்கு சென்றாலும் இதே நிலைமைதான்.’
      ” சரி..நான் போகல. ஆனா நீங்க கொண்டு வந்திருக்குற பரிசுகளையெல்லாம் திரும்ப எடுத்துக் கொண்டு போங்க.”
      அவர் கடதாசிப் பையைத் திரும்ப அவர்களது கையில் வைத்தார்.
      பழ வியாபாரி வெளியேறும்போது மீண்டும் திரும்பினான்.
      ” நாங்க எங்க மத்த வியாபாரிகளிட்டயும் இந்தச் செய்தியைச் சொல்லட்டுமா?”
      ” ம்ம்..! நல்லது.. நான் இந்தப் பகுதியிலிருந்து இப்பவே போறதில்ல. ஆனா எனக்கு உங்கக்கிட்ட இருந்து எதுவுமே வேணாம்.”
      ” ஐயாவுக்கு ஆண்டவன் அருள் புரியட்டும்.” கோப்பிக் கடைக்காரன் ஆசிர்வதித்தான்.  

எதையாவது சொல்லட்டுமா………66

நான் சென்னையில் நடக்கும் புத்தகக் காட்சியைப் பற்றி எழுத ஆரம்பித்தால், நிறையாகவே எழுதலாம்.  ஒருமுறை சாக்கு மூட்டை நிறைய புத்தகங்களை வாரிக்கொண்டு விற்க வந்தது.  பின் அதேபோல் சாக்குமூட்டை முழுவதும் நிரப்பிக்கொண்டு வீட்டிற்கு தூக்கமுடியாமல் தூக்கிக்கொண்டு போனது. விற்பதற்காகக் கொடுத்த புத்தகங்கள் தீயினால் எரிந்து சாம்பலாகிப் போனது.  அப்போது அந்தப் புத்தகங்களை அன்னம் என்ற கடையில் விற்பதற்குக் கொடுத்தேன்.  பின்னால் அவர்களிடம் நான் கொடுத்தப் புத்தகத்திற்கு இணையாக அவர்கள் புத்தகங்களை வாங்கிக்கொண்டேன்.  அந்தத் தீ விபத்து ஞானச்சேரிக்கு பெரிய நஷ்டத்தைக் கொடுத்து விட்டது.  பின் நானே ஸ்டால் போட்டு விற்க ஆரம்பித்தேன்.  அப்போதிலிருந்து தடுமாற்றம்தான்.  ஓராண்டில் விருட்சம் புத்தகம் ஒன்று இரண்டுதான் வரும்.  அதை வைத்துக்கொண்டு ஸ்டால் போட்டால் அவ்வளவுதான்.  எல்லாப் பதிப்பகத்தாரிடமிருந்தும் புத்தகங்களை வாங்கி விற்போம். 
என்னுடைய பெரிய சவால்.  நான் சென்னையை விட்டுப் போனாலும், புத்தகக் காட்சியில் கலந்துகொள்ள முடியுமா என்பதுதான்.  ஒருமுறைதான் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை.  மற்றபடி ஒவ்வொரு ஆண்டும் கலந்துகொள்ளாமல் இருக்க மாட்டேன்.  பெரிய லாபம் வராது.  ஆனால் புழுதியும் அலைச்சலும் அதிகமாக சேரும்.
இப்பவெல்லாம் லீவு நினைத்தபடி கிடைப்பதில்லை.  நண்பர்களை நம்பித்தான் புத்தகக் காட்சியை நடத்த வேண்டியுள்ளது.  8 நாட்கள் புத்தகக் காட்சியில் கலந்துகொள்ள முடியவில்லை.  2012 ஆம் ஆண்டில் புத்தகக் காட்சியில் கலந்துகொள்ள வேண்டாமென்று அப்பாவும், என் பெண்ணும் சொன்னார்கள்.  எனக்கும் உள்ளுக்குள் வேண்டாம் என்றுதான் தோன்றியது.  காரணம் அரசாங்கம் மாற்றம்.  5ஆம் தேதி புத்தகக் காட்சி திறப்பு விழா சுவாரசியம் இல்லாம் போய்விட்டது.  பல பதிப்பாளர்கள் முகங்களில் உற்சாகம் இல்லை.  பெரும்பாலான பதிப்பாளர்கள் புதிய புத்தகங்கள் போடவில்லை.  விருட்சத்திலிருந்து வரும் ஒரு புத்தகம் இரண்டு புத்தகம் கூட கிடையாது.  சிரிப்பே இல்லாத புத்தகக் காட்சியை இப்படித்தான் பார்க்கிறேன்.
ஸ்டால் வைப்பவர்கள் கணவன் மனைவி பதிப்பாளர்களாக இருந்தால் சரியாக இருக்கும். ஆள் வைத்தால் ஒரு நாளைக்கு ரூ250 லிருந்து 300 வரை பழுத்துவிடும்.  குறைந்தது இரண்டுபேர்களாவது ஒரு ஸ்டாலுக்கு வேண்டும்.  அதாவது  என்னைப்போல 100 சதுர அடி ஸ்டாலுக்கு. எல்லாம் சரி, ஆள் கூலிக்குப்போக புத்தகம் விற்று பணம் ஈட்ட வேண்டும். 
4ஆம்தேதி புத்தக ஸ்டாலுக்கு வந்து புத்தகங்களை வைத்தவுடன், பெரிய பெருமூச்சு என்னிடமிருந்து வெளிவந்தது.  அதற்குமுன் புத்தகங்கள் பார்சல் பண்ண உதவி செய்த நண்பர், ”இத்தனைப் புத்தகங்களை எப்ப விற்கப் போகிறீர்கள்?” என்று கேட்டார்.  நான் சொன்னேன், ”எல்லாம் 150 பிரதிகள்தான்.  விற்காவிட்டால், பேப்பர் கடைக்குப் போட்டு விடுவேன்,” என்றேன். நண்பர் சிரித்தார். 
எனக்கு முதலில் விசித்திரமான ஐடியா ஒன்று தோன்றியது.  ஸ்டாலில் விருட்சம் புத்தகங்களை மட்டும் கொண்டு வந்து போட்டுவிட்டு, பின் கவனிக்காமல் ஓடிவிட்டால் என்னவென்று.  யார் வேண்டுமானாலும், விருட்சம் புத்தகங்களை இலவசமாக எடுத்துக்கொண்டு போகட்டும்.  அல்லது எடுத்துக்கொள்ளாமல் போகட்டுமென்று.  பின் அந்த எண்ணம் மாறிவிட்டது. 
அப்பாவும், பெண்ணும் இப்போதும் சொல்கிறார்கள்.  ”நீ எப்போதுதான் இதையெல்லாம் நிறுத்தப் போகிறாய்…” என்று.  இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. நான் சிரமப்பட்டு தயாரித்த புத்தகங்கள் எல்லாம் என்னைப் பார்த்து சிரிக்கின்றன.  ஒவ்வொரு புத்தகமும் தயாரிக்கும்போது ஒரு கதை உண்டு.  யாருடனும் இல்லை என்ற தலைப்பில் என் கவிதைப் புத்தகத்தைத் தயாரித்தேன்.  அப்போது ஏன் இப்படி ஒரு தலைப்பை தேர்ந்தெடுத்தேன் என்று யோசித்தேன்.  உண்மையில் நான் யாருடனும் இல்லை.  நான் யாரையும் குருவாகவும் ஏற்றுக்கொள்ளவில்லை.  அதேபோல் எனக்கு யாரும் சீடர்களும் இல்லை.

எதையாவது சொல்லட்டுமா………65

நேற்று (1.1.2012) கம்பன் எக்ஸ்பிரஸ் வண்டியில் உட்கார்ந்திருந்தபோது, க்ளிக் ரவிக்குப் போன் செய்தேன்.  அவர் இலக்கிய வாசகர், சிறுகதை எழுத்தாளர்.  புகைப்படம் எடுப்பதில் திறமைசாலி.
அவர் ஒரு சிறுகதைத் தொகுப்பு கொண்டு வந்துள்ளார்.  எனக்கு அந்தத் தொகுப்பில் க்ளிக் ரவி என்ற பெயர்தான் உறுத்தலாக இருந்தது.  ஒரு திறமையான புகைப்படக்காரர், கதைகள் எழுத வேறு பெயர் எதையாவது தேர்ந்தெடுத்திருக்கலாம்.  அவர் சொன்ன ஒரு விஷயம் என் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.  இப்போதெல்லாம் யாரும் புத்தகம் படிப்பதில்லை என்று.
ஒரு பெரிய புத்தகக் காட்சி நடைபெறும்போது, எப்படி க்ளிக் ரவி இதுமாதிரி சொல்லலாம் என்று தோன்றியது.  அவர் சொல்வதில் எல்லாவித நியாயமும் இருப்பதாகவும் தோன்றியது.  முன்பு மாதிரி இப்போதெல்லாம் யாரும் புத்தகம் படிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை.  ஆனால் அளவுக்கதிகமாக புத்தகங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. 
எனக்கும் அப்பாவிற்கும் புத்தாண்டு அன்று சண்டையே வந்துவிட்டது.  ”நீ வாங்குகிற புத்தகங்களையெல்லாம் படிக்கிறயா?” என்று அவர் கேட்க, எனக்கு அவர் மீது கோபமே வந்து விட்டது.ஆனாலும் அந்த முணுக்கு கோபத்தை அடக்கிக் கொண்டேன்.  உண்மையில் என்னைச் சுற்றிலும் படிக்காதவர்கள் அதிகமாக இருக்கும்போது, நானும் படிக்காதவன் ஆகிவிட்டேன்.  எப்போதும் அப்பா தினசரிகளை மட்டும் படிப்பார்.  பின் டிவி.  என் குடும்பத்தில் உள்ள வேறு எந்த நபரும் இப்படி படிக்காதவர்கள்தான்.  நான் ஒருவன்தான் படிப்பவன். 
கல்லூரி நாட்களில் நான் பாரதியார் கட்டுரைகள் புத்தகத்தை படித்துக்கொண்டு மின்சாரவண்டியில் தாம்பரத்திலிருந்து மாம்பலம் வரை வந்துகொண்டிருப்பேன். கெமிஸ்டிரி படிக்க வேண்டிய சமயத்தில் பாரதியார் கட்டுரைகள் படிப்பேன்.  அப்போது என் மனநிலையை உருகும் மனநிலையாக வைத்திருந்தேன்.  பாரதியாரின் வாழ்க்கை வரலாறைப் படித்துவிட்டு, அவருக்கு ஏற்பட்ட முடிவைக் குறித்து உருகுவேன்.  அதேபோல் சில சினிமாப் பாடல்களைக் கேட்டால் உருகுவேன்.  ஆனால் என் எழுத்தாள நண்பர் ஒருவர், குருதத் படம் ஒன்றை பார்த்துவிட்டு அழ ஆரம்பித்து விட்டார்.
என் அப்பாவிற்கு இன்னொரு கவலை.  நான் வைத்திருக்கும் கொண்டு வந்திருக்கும் புத்தகங்களை என்ன செய்யப் போகிறேனென்று.  இன்னும் கேட்டால், என் குடும்பத்தில் உள்ள யார் கண்ணிற்கும் படாமல்தான் நான் புத்தகத்தை வைத்துக் கொண்டிருக்கிறேன்.  என் மனைவிக்கு புத்தகங்களைப் பார்த்தால் போது, படபடப்பாகிவிடும்.  எனக்கோ புத்தகங்களைப் பார்த்தால் மகிழ்ச்சியாக இருக்கிறது.  சிலருக்கு சில விஷயங்களில் சிலவிதமான வியாதி இருக்கும்.  எனக்கும் ப்ளாட்பாரத்தில் புத்தகங்களைப் பார்த்தால் போதும் வாங்காமல் இருக்க முடியாது.  இது என் குடும்பத்தாருக்கு பெரிய பிரச்சினை.  அப்பாவிடம் சொன்னேன். ”நான் இப்போதெல்லாம் புத்தகம் வாங்குவது கிடையாது,” என்று. 
”பொய் சொல்லாதே..” என்றார் அப்பா.
என் வருமானத்தின் பெரும்பகுதியை நான் புத்தகம் வாங்குவதும், புத்தகம் கொண்டு வருவதிலும் செலவிடுவதாக அப்பா எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருப்பார்.  அது உண்மையில்லை என்று சொன்னாலும் அப்பா நம்ப மாட்டார்.
சரி, நான் இப்ப சொல்ல வருவது, நம்மால் ஏன் புத்தகங்களைப் படிக்க முடியவில்லை?  க்ளிக் ரவி அவருடைய எல்லாப் புத்தகங்களையும் வேறு வழியில்லாமல் நூல் நிலையத்திற்கு தானம் வழங்கி விட்டதாகச் சொன்னார்.  குருதத் நண்பர் அவர் வீட்டுப் பரண்மீது புத்தகங்கள் அடுக்கடுக்காக தூசிப் படிந்து கிடக்கின்றன.  அந்த இடத்தை சுத்தம் பண்ண வேண்டுமென்று சொன்னால் போதும், அவர் வீட்டில் பெரிய ரகளையே நடக்கும்.  இன்னொரு நண்பர் இருக்கிறார், அவர் வீட்டு கட்டில் அடியெல்லாம் புத்தகங்களாக இருக்கும். 
நான் இன்னும் புத்தகம் ஏன் படிக்க முடியவில்லை என்பதற்கு வரவில்லை.  வயது ஆக ஆக இது ஒரு பிரச்சினை என்று நினைக்கிறேன்.  என் இன்னொரு நண்பர் ஒருவர், லைப்ரரி போவதை நிறுத்தி விட்டார்.  பின் அவர் எதாவது புத்தகம் படிக்க வேண்டுமென்றால், வாங்கி வைத்துக் கொள்வார்.  பின் நிதானமாக படித்துக்கொண்டிருப்பார்.  மாதக்கணக்கில். படிப்பதற்கு எந்த நிர்ப்பந்தமும் இல்லை. இந்த நேரத்தில்தான் முடிக்க வேண்டுமென்ற அவசியமும் இல்லை.  என்னால் அப்படி கூட புத்தகங்களைப் படிக்க முடியவில்லை.  உண்மையில் இப்படி நினைத்தேன் என்றால், எதாவது புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு விடுவேன்.  பின் சில பக்கங்களை எடுத்துப் புரட்டுவேன்.  ஆனால் பின்னால் படிக்க முடியாமல் போய்விடும். 
படிப்பதற்கு பெரிய முயற்சி செய்ய வேண்டும்தான்.  எனக்குத் தெரிந்த எழுத்தாள நண்பர் ஒருவர், எதாவது புத்தகம் படித்தால் அதைப் பற்றி விரிவாக எழுதவும் எழுதி விடுவார்.  நம்ம விஷயம் அதற்கும் பிரயோசனமில்லை. 
சரி எப்படி புத்தகம் படிப்பது?  என் பை நிறைய நான் படிக்க வேண்டிய புத்தகங்களை அடிக்கடி எடுத்துக்கொண்டு போவேன்.  பஸ்ஸில் ஏறியவுடன் படிக்கலாமென்றால், பஸ் முழுவதும் கூட்டம் நிரம்பி வழியும்.  சரி பஸ் வேண்டாம்.  அலுவலகம். மூச்சு விட முடியாது.  அந்த அளவிற்கு கூட்டம் முண்டி அடிக்கும்.  அந்தச் சமயத்தில் நான் பையிலிருந்து புத்தகத்தைத் தொட்டுப் பார்த்துவிட்டு வைத்துவிடுவேன். சக்கையாக அலுவலகம் பிழிந்த பிறகு வீட்டிற்கு பஸ்ஸில் வரும்போதும், புத்தகம் எடுத்துப் படிக்க முடியாது.  வீட்டிற்கு வரும்போது, தூங்கிக்கொண்டே வருவேன்.  புத்தகமாவது?  அது பையில் பத்திரமாகவே இருக்கும்.  ஞாயிற்றுக் கிழமைகளில் பரபரப்பாக இயங்குவதால், நான் புத்தகம் எடுத்துப் படிக்கும் நல்ல காரியத்தைச் செய்ய மாட்டேன். 
”நீ வாங்குகிற புத்தகங்களையெல்லாம் படிக்கிறயா?” என்று அப்பா கேட்பது காதில் விழுந்து கொண்டுதான் இருக்கிறது.  என்ன செய்வது?

எதையாவது சொல்லட்டுமா………64

ஒரு வழியாக 2011 போய்விட்டது.  ஓராண்டு ஆரம்பிக்குமுன் எதையெல்லாமோ செய்ய வேண்டுமென்ற எண்ணம் ஓடிக்கொண்டிருக்கும்.  ஆனால் ஒன்றும் செய்ய முடியாத இயலாமை இல்லாமல் இருக்காது. கடந்த ஆண்டில் 10 புத்தகங்கள் கொண்டு வரவேண்டுமென்று நினைத்துக்கொண்டிருந்தேன்.  பெரிய ஏமாற்றமாகப் போய்விட்டது.  பின் பத்திரிகையைத் தொடர்ந்து 3 மாதங்களுக்கு ஒருமுறை கொண்டு வர வேண்டுமென்று நினைப்பேன்.  ஒன்றும் நடக்கவில்லை.  இந்த ஆண்டு நான் ரொம்ப குறைவாகவே எழுதியிருக்கிறேன்.  என் நாவல் முயற்சி பாதியில் நிற்கிறது.  கவிதைகள் சிலவற்றை மட்டும் எழுதினேன்.  ஆனால் சிறுகதை எழுத முடியவில்லை. ஏன் மனம் அதில் செல்ல மறுக்கிறது?  அதேபோல் தினசரி செய்தித் தாள்களைத் தவிர நான் எந்தப் புத்தகமும் படிக்கவில்லை.
ஒரு கட்டத்தில் சர்க்கரை நோய் பற்றி பயம் வந்துவிட்டதால், தினமும் நடக்க ஆரம்பித்துவிடுகிறேன்.  காலையில் எழுந்தவுடன், ஓட்டலுக்குச் சென்று காப்பி குடித்துவிட்டு, நடக்க ஆரம்பித்துவிடுவேன்.  பின் கொஞ்சமாக சாப்பிடுவேன்.  அலுவலகம் ஓடுவேன்.  அதைவிட்டு திரும்பி வருவதற்குள் 9 மணி ஆகிவிடும். பின் எதைப் பற்றி சிந்திப்பது?  எழுதுவதும் கிடையாது.  படிப்பதும் கிடையாது. 
நான் எழுதுவதால் மட்டும் என்ன நடக்கப் போகிறது.  சாகித்திய அக்காதெமி பரிசு யார்யாருக்கோ போய்க் கொண்டிருக்கிறது.  பரிசுக்காக எழுதப் போவதில்லை என்றாலும், அது கிடைக்கவும் போவதில்லை.  இன்னும் சில பரிசுகள் ஏற்கனவே பரிசு வாங்கியவர்களுக்கே போய்க் கொண்டிருக்கிறது. 
சரி, எதாவது பத்திரிகையாவது கேட்கப் போகிறதா? கவிதை எழுதித் தாருங்கள்..கதை எழுதித் தாருங்கள் என்று.  அதெல்லாம் இல்லை.  எழுதினாலும் புத்தகத்தை நானே போடவேண்டும்.  அதை Marketing என்றால் என்னவென்று தெரியாமல் Marketing பண்ணத் தெரியவேண்டும்.  150 புத்தகங்கள்தான் அச்சடிக்கிறேன்.  பெரும்பாலும் லைப்ரரி ஆர்டர் வரப்போவதில்லை.  முன்பு, விஜயாபதிப்பகம் வேலாயுதம், திலீப்குமார் போன்றவர்கள் என் புத்தகங்களை விற்றுக்கொடுத்தார்கள்.  இப்போதெல்லாம் இல்லை.  New Booklands ல் ஒருமுறை புத்தகங்களை விற்கக் கொடுத்தால், பின் அவர்கள் திரும்பவும் கேட்பதில்லை. மறந்தும் விடுகிறார்கள்.
க.நா.சு ஒருமுறை நாவல் ஒன்றை அச்சடித்து, யாரும் அதை வாங்கவில்லை என்று தெரிந்தவுடன், அப்படியே பேப்பர் கடையில் போட்டுவிட்டதாக கூறுவார்கள்.  இலவசமாக க.நா.சு கவிதைகள் என்ற புத்தகத்தைக் கொடுக்கலாம் என்று கவிதைப் படிப்பவர்களைத் தேடி ஓடினேன்.  அவர்கள் என்னைப் பார்த்தவுடம் தலைதெறிக்க ஓட ஆரம்பித்துவிட்டார்கள். 
இதோ 2011 முடிந்துவிட்டது.  2012ல் அடியெடுத்து வைக்கும் உங்கள் எல்லோருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துகள். 
எப்படி சௌகரியம் ?!
மழைச்சாரலில் நனைந்த
என் கவிதையை
உலரவைக்க தென்றலை
எதிர்பார்த்து காத்திருக்கிறேன்
உலராத உயிர்ப்புள்ள
கவிதையில் மட்டுமே
விருப்பமுள்ளவராயின்
முன்னரே நனைந்துள்ள
உங்களின் ஈர இதயம் காட்டி
என்னிடமிருந்து
கவிதையைப்
பெற்றுக்கொள்ளலாம்
உலர்ந்து தெளிந்த
கவிதையில் மட்டுமே
விருப்பமுள்ளவராயின்
அலங்கமலங்கலாக
சிறிது அழிந்து மறைந்த
எழுத்துகளை உங்கள்
விருப்பப்படி நிரப்பிக்கொள்ள
வேண்டிவரும்.