புத்தனாவது சுலபமல்ல

முன் முடிவுகளெல்லாம்
குப்பையென மண்டிக் கிடக்கும்
மனக்குடுவையை சுத்தப்படுத்து முதலில்
அப்புறம் சுத்தப்படுத்தலாம்
புத்தன் முகத்தை!

உலகெனும் பெருங்கோப்பையில்
நிரப்பி வைக்கப்பட்டிருக்கிறது யுக காலம்.

விருப்பத்தேர்வு உன்னிடமே விடப்பட்டுள்ளது,  
அதன் ஒரு சிறு கண நேரம்
அல்லது
ஒரு முழுயுகம் எடுத்துக்கொள்ளலாம் நீ.

கல் புத்தன்  
கடவுள் புத்தனாக
ஒரு ஒருத்தருக்கும் ஒவ்வொரு அவகாசம்
சுயமாய் தீர்மானிக்கப்படட்டும். 

                              

ழ 6வது இதழ்

பிப்ரவரி / மே 1979

 நான்கு கவிதைகள்

1.

 அணுவுக்கு எதிராய்
 மக்கள் கிளர்ச்சி
 அணு உலையிலிருந்து
 சிதறி விட்டது
 அணுத்துகள் ஒன்று
 கலவர மக்கள்
 கூக்குரலிடுகின்றனர்
 வானிலிருந்தும் நீரிலிருந்தும்
 வினோத வாகனங்களைக்கொண்டு
 ஆராய்கின்றனர்
 சுற்றுப்புறத்திலிருந்து
 வெளியேற வேண்டும்
 உள் உலகிலிருந்து வெளி உலகிற்குத்
 தப்பிக்க வேண்டும்
 மீண்டும் மனிதம் அடிமையாயிற்று
 அதன் கண்டுபிடிப்பிற்கு.

2.

 எனக்குள் என்னில் என்னாய் விரிந்து
 உள் அழிழ்ந்தேன்
 கற்பனை நிஜம்
 காலம் ஒளி
 ஒலி பயணம்
 உருவம் உள்ளடக்கம்
 எல்லா இடங்களிலும் தேடினேன்
 தெரிந்தும் தெரியாமல்
 விரிந்தும் விரியாமல்
 இருந்தும் இல்லாமல்
 ஆன் ஏன்

3.

 அற்புதமாய்ப் புலர்ந்த காலை
 நீள நிழல்கள்
 நிலத்தில் கோலமிட
 வண்ணக்கலவையாய் உலகம்
 எங்கும் விரிந்து
 கெட்டியாய்த் தரை
 என் காலடியில்
 நிஜம் புதைந்து கிடக்க

4.

 ஒரு தலைப்பிடாத கவிதையாய்
 வாழ்க்கை
 ஒரு நாள் இரண்டு நாள் என
 தொடர்ந்த நாட்களை எண்ணினேன்
 காலையைத் தொடர்ந்து மாலை
 இரவாகும் காலப்புணர்ச்சியில்
 பிரமித்து நின்றேன்
 கடற் கரையில்

ஆத்மாநாம்

இரண்டு கவிதைகள்

1 சற்றைக்கு முன்
 ஜன்னல் சட்டமிட்ட வானில்
 பறந்து கொண்டிருந்த
 பறவை
 எங்கே?
 அது
 சற்றைக்கு முன்
 பறந்து கொண்
 டிருக்கிறது.

2 பறந்து செல்லும்
 பறவையை
 நிறுத்திக் கேட்டான்:
 பறப்பதெப்படி?
 அமர்ந்திருக்கையில்
 சொல்லத் தெரியாது கூடப்
 பறந்து வா
 சொல்கிறேன் என்றது.
 கூடப்  பறந்து கேட்டான்:
 எப்படி?
 சிரித்து உன்போலத்தான்
 என்றது.
 அட ஆமாம்
 ஆனால் எப்படி
 எனக் கீழே கிடந்தான்
 பறவை
 மேலே பறந்து
 சென்றது.

 

கூப்பாடு

என்னைச் சொல்லி 

ஆவது ஒன்றும் இல்லை-
நானாக உன்னைக் கூப்பிட வில்லை
நீயாக வந்தாய்
எட்டிப் பார்த்தாய் 
பிரதி பிம்பம் கண்டாய் 
பின் சென்று 
காணவில்லை என்று 
கூப்பாடு போடுகிறாய் 
அடம் பிடிக்கும் சண்டிச் சிறுமியாய்!
உன் பிம்பம் காட்டுதல் 
நான் வேண்டி விரும்பிச் செய்யவில்லை
அதுபோலவே 
காட்டக்கூடாது என்றும்
நான் ஆசைப் பட்டுச் செய்யவில்லை
உன்வீட்டுக் கண்ணாடியில்
ரசம் பூசியது
நீயா 
நானா
இதைச் சொல்ல
பிளாடோவும்
சாக்ரடீசும்
தேவையா-
கொஞ்சமே யோசித்தாலும்
விளங்கும் –
உண்மையில்..
எனக்கு 
பிம்பம் என்ற ஒன்றோ
அது தெரிவது
என்பதோ  
நான் அறியாத ஒன்று
எனக்குத் தெரியாதது 
நீயாக 
ஏதோ செய்கிறாய்
பின்னர் 
கூப்பாடு போட்டு 
ஊரைக் கூட்டுகிறாய்
மெழுகு வத்தி ஏற்றி 
கோஷம் போட்டு
நியாயம் வேண்டும் என்கிறாய்
பெயரிழந்த பறவை

பெயர் கொத்திப்பறந்த ஏதோ ஒன்று 
மரத்தின் உச்சியில் 
அமர்ந்து உற்று நோக்கிக்கொண்டிருக்கிறது
என்னை..

தேகமெங்கிலும் அந்நிய வாசனையோடு
சுயத்தை இழந்துக்கொண்டு 
நான்..

உயிர் திருகும் வலியில் என்
உணர்வுகளை கடத்திக்கொள்கிறது
அதனுள்..


பெயரிழந்த பறவையாகிறேன் நான்
குற்றத்தின் சுமையும் என்
சிறகின் மேல்..

 
******************************************
சிதறல் துளி
உறங்கியும் உறங்காமலும் 
இருக்கின்ற விடியலை 
மொத்தமாய் குத்தகை எடுத்துக்கொள்கின்றன
உன் நினைவுகள்.
என் கனவு, நினைவு, 
எல்லாமாகிப்போகின்றன 
உன் விரலிருந்து கசிந்த 
வார்த்தைகள்..
சுவாசமாய் உட்செல்லும் 
காற்று தீர்மானமாய்
சொல்லும் உன் வார்த்தைகளின் 
வெப்பத்தை..
உடலெங்கும் வழிந்தோடும் 
குருதி மட்டுமே உணரும் 
பிரியம் மேலிடுகிற 
உன் ஒவ்வொரு ஸ்பரிசத்தின் 
குளிர்ச்சியையும்.
உன் அளவிடமுடியா 
பிரியத்தின் முன் 
சிதறல் துளியாகிறேன் 
நான்.
**********************************************
யுகங்களின் தேவதைகளுக்கான 
இலக்கணம் கண்ணீராலும், துன்பத்தாலும் 
மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளன.
தேவதயென்றாலும், தாடகையென்றாலும்
பெண் பெண்ணாய்த்தானிருக்கிறாள்.
 

பந்தநல்லூரில் கிடைத்த பதவி உயர்வு….

3.
அழகியசிங்கர் எழுதும் கதைகளில் நான்தான் கதாபாத்திரமாக வருவேன்.  என்னைப் பற்றிதான் அவர் எழுதுகிறாரோ என்ற சந்தேகம் எனக்குள் எழும்.  ஆனால் அவர் எழுதும் எந்தக் கதையாக இருந்தாலும் முதலில் என்னிடம்தான் படிக்கக் கொடுப்பார். பின் அவர் என்னுடன் பேசும்போது, உன்னையேதான் பிரதிபலித்துக் கொண்டிருக்கிறேன் என்பார்
”ஒரு பத்மநாபன் உங்கள்முன் நேரிடையாக நின்று கொண்டிருக்கிறேன்.  இன்னொரு பத்மநாபன் கதைகளில்” என்பேன்.
அவர் சிரித்துக்கொள்வார்.  ”எழுதுவதற்கு என்ன அனுபவம் வேண்டும்?” என்று கேட்பேன்.  ”நம் வாழ்க்கையே ஒரு அனுபவம்தான்.  ஒன்றும் செய்யாமலிருந்தாலும் அனுபவம்தான்.” என்பார்.
இதோ அவரைப் பிரிந்து வந்துவிட்டேன்.  கும்பகோணம் வட்டாரத்தில் எனக்கு வேலை.  மாற்றல்.  மாற்றல் ஏமாற்றமா மாற்றமா?
கடந்த 24 ஆண்டு வங்கி வாழ்க்கையில் ஒரே விதமான இடம் அலுப்பாகத்தான் இருந்தது.  தலைமை இடம்.  வீடு.  10லிருந்து 5வரை என்று ஒரேவிதமான இயந்திரத்தனம் அலுப்பாகத்தான் இருந்தது. எல்லாம் அலுப்பு. பார்த்த முகங்களையே பார்த்துக்கொண்டிருக்கிற அலுப்பு.  மாம்பலம் ரயில்வே ஸ்டேஷன். பீச் ஸ்டேஷன்.  வெள்ளிக்கிழமை பூஜை.  இனிப்பு.  ஒருவித மாற்றம் வேண்டும்.  போதும் இது என்று தீர்மானித்தபோதுதான் ”உன் முடிவு தவறு,” என்றார் அழகியசிங்கர்.
”ஏன்?” என்று கேட்டேன்.
”ஐம்பதாவது வயதில் நீ குடும்பத்தைவிட்டு தனியாக இருக்க வேண்டும்.  வங்கி தன் ஆயுதத்தை விட்டு உன்னைத் தாக்கப் போகிறது,” என்றார்.
”ஊர் உலகத்தில் எல்லோரும் கஷ்டப்பட்டுத்தான் பணி புரிகிறார்கள்.  வேலைக்காக தூர தேசத்திற்கெல்லாம் போகிறார்கள்,” என்றேன்.
”நீ உன் சுதந்திரத்தை இழக்கப் போகிறாய்.  உன் முதல் துக்கம் உன் குடும்பத்தைவிட்டுப் பிரிவது. உன் பொறுப்பு கூடப் போகிறது.  உன் வேலை சுமை அதிகரிக்கப் போகிறது.  சுருக்கெழுத்தாளராக நீ இருந்த நிம்மதியான வாழ்க்கை உன்னைவிட்டுப் போகப்போகிறது.”
”என்ன பெரிய தூரம்.  இதோ கும்பகோணம்தான்  போகிறேன்.  300 கிலோமீட்டர் இருக்குமா?”
”நீ அங்கே போனபிறகுதான் நான் சொல்வது புரியும்.  நீ என்ன பெரிய அதிகாரியாகப் போகிறாயா?  ரத்தன கம்பளத்திலா உன்னை வரவேற்கப் போகிறார்கள்.  உன் கடைநிலை ஊழியன் கூட உன்னை மதிக்க மாட்டான்.  உன் மேல் உள்ள அதிகாரி இன்னும் உன்னிடம் எகிறுவான்.. வங்கிக் கதவைத் திறப்பதிலிருந்து மூடுவது வரை உன் பொறுப்பென்றாகிவிடும்…கஷ்டத்தை ஏன் விலைக்கு வாங்குகிறாய் என்பது தெரியவில்லை..”
அழகியசிங்கர் மனம் உடைந்து விட்டார்.  அவர் சொன்னது எவ்வளவு உண்மை என்று எனக்குப் புரிய ஆரம்பித்துவிட்டது.  
                                                                                                                            (இன்னும் வரும்)
a

மௌனியுடன்…

 
சிதம்பரம் 
1969-1971(பிறகும் விட்டு விட்டு)
சில ஆண்டுகளுக்கு முன் நண்பர் அழகிய சிங்கர் அவர்களை 
சென்னை புத்தகக் கண்காட்சி ஒன்றில் பார்த்தேன் . நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் சென்னைக்கு வருகிறேன். என் தம்பி சேகருடன் ஸ்டால் ஸ்டாலாகச் செல்கையில் பார்த்தேன். வங்கிப் பெயரைச்சொல்லி அழைத்தேன். என்னைத்தெரிகிறதா என்றேன். 
தியாகராஜன் தானே – ஏன் ஞாபகமில்லாமல் என்றார் ? 
 
எப்படி என்றேன். 
 
இந்தியன் வங்கியைச் சொல்லட்டுமா ? இல்லை தொழில் கவிதையைச் சொல்லட்டுமா என்றார்.
 
தூக்கிவாரிப் போட்டது.
 
எனக்கு ஒரு கவிதை. 
 
ஆனால் தொகுப்பாசிரியரான அவருக்கு – அந்தத் தொகுப்பில் குறைந்தது ஐநூறு கவிதைகளாவது இருந்திருக்கும் என நினைக்கிறேன். என்னுடையதோ ஒன்றே ஒன்று. கணையாழியில் வெளியானது என்று நினைப்பு. 
சிறிது அரட்டை – வங்கி, டிரான்ஸ்பர் பாலிசி பற்றி, இரண்டாண்டு ரூரல் கட்டாயம் பற்றி, புத்தகங்கள், அவரது இதழ் பற்றி..
நானும் அழகியசிங்கரும் இந்தியன் வங்கி தலைமை அலுவலகத்தில் வெகு அரிதாகவே அதுவும் சில மணித்துளிகளே சந்தித்துப் பேசியிருப்போம்- அவரது வேலை அப்படி; என்னுடையது பர்சனல் அசிஸ்டன்ட் என்ற உத்தியோகம். அந்த சில மணித்துளிகளில் பேசிய வற்றை கிட்ட தட்ட இருபதுக்கும் மேற்பட்ட ஆண்டுகள் கழித்து… 
கொக்குக்கு ஒண்னே மதி … 
 
ஆரியக் கூத்து ஆடினாலும், கண்ணே காரியத்திலே கண்ணாயிரு ..
 
அழகியசிங்கர் என்னுடைய மௌனி நாட்களைப் பற்றி மீண்டும் நினைவு படுத்தி அதைப் பற்றி எழுதினால்  என்ன என்று கேட்டார். 
இது நடந்தே பல வருஷங்கள் ஆகின்றன . நான் மௌனியுடன் கழித்த நாட்களோ 69-70 களில்.
அழகியசிங்கர் கேட்டபோது நான் சரி என்று சொல்லவில்லை; இருந்தாலும் அது உள்ளுக்குள்ளே நமநம என்று பற்றிக்கொண்டிருந்தது என்றே தோன்றுகிறது.
1969 என்பது நான் கடலூரில் டிக்ரீ முடித்து சிதம்பரத்திற்கு எம் ஏ படிக்க என்று வந்த வருஷம். ஆங்கில இலக்கியம். 
ஜெயகாந்தனின் தீவிர ரசிகன்- அப்போதெல்லாம் எல்லோரும் தான். தவிரவும் அப்படிச் சொல்லுவது அப்போது பாஷனில் இருந்தது. தற்போதைய ஷா ருக் கான் போல. ஜெயகாந்தன் ரசிகர்களோ ஷாருக்கின் ரசிகர்களோ கோபிக்க வேண்டாம். பாபுலாரிடிக்காகச் சொன்னேன். 
மௌனி சார் – அப்படித்தான் அவரை அப்போது அழைப்பது வழக்கம். ஏன் என்று தெரியாது. ஒருவேளை காலேஜில் அழைத்த பழக்க தோஷமோ என்னவோ. 
அப்படி சார் போடுவதில் மௌனிக்குப் பெரிய ஆட்சேபனை – சத்தமான ஆட்சேபனை- இருந்தது என்னவோ வாஸ்தவம் தான். ஆனால் இருவது வயது சிறுவனின் (என்னுடைய) ரிபீடட் இன்னொசென்ட் சாரை அவரால் கடைசி வரை நிறுத்தவே முடியாமல் போயிற்று.
மௌனிசாரை நான் வெகுநாட்கள் அறியவே இல்லை. அவர் எதித்த வீட்டிலேயே இருந்தபோதிலும். யாரோ ஒரு பெரியவர் – பட்டை பட்டையாக வீபூதியுடன், மேலே ஒரு அங்கவஸ்திரம் போட்டுக்கொண்டு அந்த வீட்டிற்குள் வந்து போவதைப் பார்த்திருக்கிறேன்- மௌனி என்று அறியாமல்.
முதல் அறிமுகம் ஒரு ” get out ” லே முடிந்தது. சுர்ரென்று முகம் சிவந்து ஆள் காட்டி விரல் நீட்டி, நல்ல வேளையாக வெளியே போடா கழுதை என்று தமிழில் சொல்லாமல் ( என்ன கொறைஞ்சா போயுடும் ? அப்போ என்னவோ அது பெரிய கன்செஷன் என்றே இருந்தது), ஆங்கிலத்தில் get out என்று கொஞ்சம் உரத்த குரலில் சொன்னார். பயந்து கொண்டு வெளியே ஓடி ரோடைக் க்ராஸ் செய்து என் விட்டிற்குள் நுழைந்து விட்டேன். .
ஆங்கிலத்தில் சொல்லுவார்களே அது போல – பதுங்கிக்கொண்டேன். (I went to the rear most part of the house which used to touch the temple wall in that “car street” in that “temple city”).
நிஜமாகச் சொல்லப்போனால் என்னுடைய கெட் அவுட்-க்கு ஜெயகாந்தனே காரணம். ஆனால் ஜெயகாந்தனுக்கு இது தெரிய வாய்ப்பில்லை – அப்போதும், எப்போதுமே. 

துடைத்து எறிய

 


காற்றில் மிதந்து

அல்லது 
அல்லாடிப் பறந்து
தன்மீதே
குழந்தையின் கிறுக்கெழுத்தில்
நல்ல நீல நிற மசியினில்
எழுதப்பட்டிருந்த
அந்த சில வரிகளைக் கொண்டு
அது யாரைத்தேடுகின்றது?
மிதந்து நடனமாட
தென்றலையா?
யாராவது படித்து
“ஆஹா” போடுவதற்கா?
எழுதிய குழந்தை வந்து
மீதத்தை எழுதி முடிக்கவா?
நானறியேன்-
எடுத்து
என்  காலணியிலிருந்த
அழுக்குத்துளியைத்
துடைத்தெறிந்தேன்-

வாழ்வாதாரம் என்றொன்றைத் தேடி..!

 
 
 
எனது நிழல் வரைந்துக் கொண்டிருக்கிறது இன்னும் என்னை.. 
எவ்வளவு பெரிய அபத்தக் குற்றச்சாடல்??

எழுதிப் புரியாத வாழ்வு
எழுதப் புரிதலென்பதில்    
உன்னைப் போலவே எனக்கும்
உடன்படிதலில் இல்லை பேரன்பே! 

                                             

Reply
Forward

சந்தை

 
 
வீட்டில் செய்த
பண்டங்களை
விற்க
கடைகடையாய் ஏறி இறங்கினேன்.
ஒரு கடைகாரனும்
என் பண்டத்தை கடையில் வைத்து விற்க
சம்மதிக்கவில்லை…
பண்டங்களை
நானே தின்று தீர்க்கவேண்டியதாகிவிட்டது.
அடுத்த நாளும்
பண்டங்களை செய்தேன்..
விற்பனை செய்ய
தெருவெங்கும்
கூவிச்சென்றேன்.
யார் வீட்டு
கதவுகளும் திறக்கவில்லை
காசு கொடுத்து
வானொலியில் என் பண்டத்தின் பெயரை
ஒலிக்கச்செய்தேன்.
ஒன்று கூட விற்கவில்லை.
சுவரொட்டிகளும்
விளம்பரங்களும்
பத்திரிக்கைகளும்
எதனாலும்
கைகூடவில்லை விற்பனை.
நடுத்தெருவில்
வீசியெறிந்தேன்
என் பண்டத்தை.
வீதியெங்கும் சிதறிக்கிடந்தவற்றை
என்னவென்று பார்த்து
பின்னர் சுவைத்தனர்
ஜனங்கள்.
அடுத்த நாள்
பண்டத்தை
சமைக்கத்துவங்கிய போது
வாசலெங்கும்
நுகர்வோர்களின் வரிசை.