கவிதை

பெரியசாமி 
இரு கோப்பைகளில்
கடலை ஆற்றிக்கொண்டிருந்தவனிடம்
வேறெங்கு வாழ்வதென
போராடின மீன்கள்
மனமுடைந்த முதலைகள்
தற்கொலை பூண்டன
போக்கிடமற்று அலைந்தன
பிற ஜீவராசிகள்
கூடை கூடையாய் எல்லோரும்
புசிக்கத் துவங்கினர்
மலிவு விலையில் மீன்களை

பொம்மலாட்டம்

ப.மதியழகன்

சருகுகள் பாதையை
மூடியிருந்தன
பழுத்த இலைகள்
தன்னை விடுவிக்கும்
காற்றுக்காக காத்திருந்தன
மொட்டைப் பனைமரத்தில்
காகம் ஒன்று அமர்ந்திருந்தது
வண்ணத்துப்பூச்சி
வண்ணங்களை உதிர்த்துச் சென்றது
வண்டுகளின வருகைக்காக
பூக்கள் தவம்கிடந்தன
திருட்டுக் கொடுக்க
என்னிடம் காலணிகள்
மட்டுமே இருந்தன
அருவியில் குளிக்கிறார்கள்
பணப் பித்து பிடித்தவர்கள்
இல்லை என்பவர்கள் மீது
ஒளிக்கிரணங்கள் படுவதில்லை
உண்டு என்பவர்கள் வீட்டில்
தீபங்கள் அணைவதில்லை
பொம்மலாட்ட பொம்மைகள்
எது செய்தாலும் தவறில்லை
ஆட்டுவிப்பவன் கைகளுக்கு
எது சரி எது தவறென்று
தெரியவில்லை.

மகனின் தீபாவளி

 
 
சோமா
 
பொட்டடுப்பில் வெந்நீர் வைத்து
எழுப்பி விடும் அப்பத்தா
உடல் முழுதும் எண்ணைய்
தேய்க்கத் துரத்தி சோர்ந்து
முதுகில் ரெண்டு வைக்கும் அம்மா
இரவெல்லாம் கண்விழித்த‌
டெய்லரின் கருணையில்
பட்டன் வைக்க மறந்து
முதல்நாளிரவு வந்து சேரும்
புதுச்சட்டை வாசம்-அதன்
காலருக்கு சந்தனமிடும் அப்பா
பேரம் பேசி வாங்கியிருந்த‌
நாடார்கடை பட்டாசை
பிரித்துக் கொடுக்கும் பெரியப்பா
அதிரசம் முறுக்குச் சுட்டு
அடுக்கும் பெரியம்மா-சாமி
கும்பிடும் முன்னரே இனிப்பு உப்புப்
பார்க்க சாம்பிள் கொடுக்கும் சித்தி
உடை மாற்றி விடும் சித்தப்பா
வருடமொருமுறை வீடுவீடாய்
மங்களம் கொட்டும் மேளக்காரன்
புதுத்துணி கட்டிய ஜோரில் ஊரையே
வளைய வரும் நண்பர் பட்டாளமென‌
ஞாபகம் விரித்தெழும் நேற்றைய
என் தீபாவளி என் மகனுக்கானதில்லை.
ஞாயிறுகளின் நீட்சியான
தீபாவளி விடுமுறையில்
அவனுக்கான பட்டாசு
இன்னும் வாங்க‌ப்படவே இல்லை.

மெட்டமார்ஃபஸிஸ்

எனக்கே தெரியாமல்
எனது அறைக்குள் ஒரு பச்சோந்தி
நுழைந்து விட்டது,
என்னிடம் அனுமதி கேட்கவுமில்லை
அதை அது எதிர்பார்க்கவுமில்லை.
அதை விரட்ட பெரும்பாடாயிற்று.
சில நாட்கள் கழித்து
பின்னர் அதைத்தொடர்ந்து
ஒரு பாம்பும் நுழைந்து விட்டது,
சரி பச்சோந்தியைப்பாம்பு
தின்று விடும் என்று
எனக்குள் மகிழ்ந்து கொண்டேன்
சில நாட்களாக பச்சோந்தியைக்காணவில்லை
பாம்பு மட்டும் உலாத்திக்கொண்டிருந்ததை
என் கண்ணால் காண நேர்ந்தது.
சரி உண்டு விட்டது என்று
நினைத்து மகிழ்ந்த போது
பாம்பின் நிறம் மாறிக்கொண்டே வந்து
மீண்டும் பச்சோந்தியாகி விட்டது.
இப்போது
பச்சோந்தியிடம் பாம்பாக
மாறும் வித்தையைப்பயின்று
கொண்டிருக்கிறேன்
என்னைத்தொந்தரவு செய்யாதீர்கள்.

அக்கறை/ரையை யாசிப்பவள்

அன்றைய வைகறையிலாவது
ஏதாவதொரு அதிசயம் நிகழக்கூடுமென
படிப்படியாயிறங்கி வருகிறாள்
சர்வாதிகார நிலத்து ராசாவின்
அப்பாவி இளவரசி
அதே நிலா, அதே குளம்,
அதே அன்னம், அதே பூங்காவனம்,
அதே செயற்கை வசந்தம்
அதுவாகவே அனைத்தும்
எந்த வர்ணங்களும் அழகானதாயில்லை
எந்த மெல்லிசையும் புதிதானதாயில்லை
எந்த சுதந்திரமும் மகிழ்வூட்டக் கூடியதாயில்லை
நெகிழ்ச்சி மிக்கதொரு
நேசத் தீண்டலை
அவள் எதிர்பார்த்திருந்தாள்
அலையடிக்கும் சமுத்திரத்தில்
பாதங்கள் நனைத்தபடி
வழியும் இருளைக் காணும்
விடுதலையை ஆவலுற்றிருந்தாள்
காவல்வீரர்களின் பார்வைக்குப் புலப்படா
மாய உடலையொன்றையும் வேண்டி நின்றாள்
அவள் நிதமும்
அப் புல்வெளியோடு
வானுக்குச் சென்றிடும் மாய ஏணியொன்றும்
அவளது கற்பனையிலிருந்தது
இப் பொழுதுக்கு மீண்டும் இக்கரை தீண்டா
ஒரு சிறு ஓடம் போதும்
எல்லை கடந்துசென்று
சுதந்திரமாய்ப் பறக்கும் பட்சிகள் பார்க்கவென
அச் சமுத்திரத்தின் அக்கரையில்
அவளுக்கொரு குடில் போதும்

பறவைகளின் திசை

அன்று அந்திக்கருக்கலில்
கூட்டமாக வெண் பறவைகள்
திரும்பத்திரும்ப முன்னும்
பின்னுமாகப்பறந்து கொண்டிருந்தன
அந்தக்காரிருளில் அவை
திட்டுத்திட்டாக தெளிவாகத்தெரிந்தன
நானும் பல தடவைகள்
இருட்டிவிட்டால் அடுத்த தெருக்களில்
சுற்றிக்கொண்டு எங்கள்
வீட்டைத்தேடிக்கொண்டிருப்பேன்
அதுபோலவே அவைகளும்
தமது கூட்டின்
திசையைத்தவறவிட்டதுபோல்
எனக்குத்தோணியது
எனக்கொன்றும் புரியவில்லை
எப்போதும் அம்மா சொல்வாள்
அவை என்றும் திசை அறியக்கூடியவை
ஆதலால் ஒருபோதும் அவற்றின் திசை
தப்புவதில்லை என்று
மேலும் அவை நாடு கடந்தும்
பறக்கக்கூடியவை என்றும்
கடல் கடந்தும்
பறக்கக்கூடியவை என்றும்
அம்மா சொல்லக்கேட்டிருக்கிறேன்
அன்று நள்ளிரவு கடந்தும்
நானும் அம்மாவும்
வீட்டு வாயிற்படியிலேயே
அமர்ந்திருந்தோம்
நான் கரு நிற வானத்தையும்
அந்தப்பறவைகளையுமே
பார்த்துக்கொண்டிருந்தேன்
அம்மாவோ வைத்த கண்வாங்காமல்
தெருக்கோடியையும்
அதன் முனையையுமே
பார்த்துக்கொண்டிருந்தாள்.

தருணம்

சில சம்பவங்கள்
நாம் விரும்பியோ விரும்பாமலோ நடக்காமலில்லை

யார் தீர்மானிக்கிறார்கள்
என்பது ஏனோ தெரிவதில்லை

அல்லது
நாமே அந்தச் சூழ்ச்சியில்
அறியாமல் மாட்டிக்கொண்டு விடுகிறோமா
என்றெல்லாம் தெரிவதில்லை

எல்லாம்
நடப்பது நடக்கட்டுமென்றுதான்
விடவேண்டியுள்ளது

நமக்கு விருப்பமான பொருள்
நம்மை அடைவதில்லை

நாம் தேர்ந்தெடுக்கும் பொருள்
நம் கைவசமாவதில்லை

நம் காலத்தை நாம் திருப்தியுடன்
கழிக்க வேண்டியதுதான்.

இதுதான் வாழ்க்கை என்று
பெரிதாக யோசனை செய்யாமலிருக்க வேண்டியதுதான்.

வரையறை

மழை விடாமல் பெய்தது
பகல் இருள் கவிந்திருந்தது
அலுவலகத்திற்கு
தாமதமாய் போனால்
நந்தனைப் போல்
வெளியே நிற்கவைத்து
விடுவார்கள்
சூரல் நாற்காலியில்
அவர் அமர்ந்திருந்தார்
நெல் மணிகளைக் கொறிக்கும்
மைனாக்களைப் பார்த்தபடி
புத்தி பேதலித்தவர்கள் எல்லாம்
ஏன் ஒரே இடத்தை
வெறித்துப் பார்க்கிறார்கள்
மனிதர்களோடு அளவளாவ
விரும்பாதவரைப் போல்
முகத்தை வைத்துக் கொண்டிருந்தார்
துஷ்டி கேட்க
இப்போதெல்லாம் அவர்
எவருடைய வீட்டிற்கும்
செல்வதில்லை
இப்போது எங்கோ
கிளம்பிக் கொண்டிருக்கிறார்
துக்கம் நிகழாத வீட்டிலிருந்து
ஒரு பிடி மண்ணை
அள்ளி வர
கிளம்புகிறாரோ என்னவோ.

மரம் பெய்யும் மழை

மழை பெய்யத்
தொடங்கியதும்
மரம் பெய்யவில்லை
மழையை…
மழை நின்று
வெகு நேரமாகியும்
மரம் பெய்து
கொண்டே இருக்கிறது
மழையை பெரிய
பெரியத் துளிகளுடன்.
பூப்பெய்த மரங்கள்
பூ பெய்கின்றன
மழையோடு.
பூப்பெய்தாத மரங்கள்
இலைகளைப் போட்டு
விளையாடுகின்றன
போகும் நீரில்

*27 ம் 67 ம்

27  வயது இளைஞனும்
67  வயது முதியவரும்
இணைந்து
நடை பயிற்சி செய்கின்றனர்

நடைவேகம் கூடக்கூட
27  க்கு மூச்சிறைக்கிறது

67  ன்வேகம்,
27 -ஐவிடக் கூடுகிறது
27  ,
67-ஐ விஞ்ச முயன்று தளர்கிறது

27  , 67- ஆகவும்
67  , 27- ஆகவும்
வீடு திரும்புகிறது