வெயில் மங்கும் எழுத்துக்கள்..


*
கண் மூடித் திறந்த ஒரு நொடியில்
இருள் வந்துவிட்டது
அடுத்த நொடியில் மீண்டது
பகலின் நிழலென பரவும் இரவின்
நிழலென பரவும் பகல்

வாசிக்க முடியாமல் மங்கும்
எழுத்துக்கள் மொத்தமும்
புத்தகத்திலிருந்து கொட்டுகிறது
நிழலை இரவை இழுத்துக் கொண்டு

பால்கனியில் வெயில் பட வைத்திருக்கும் தொட்டியில்
ஊற்றி வைத்திருக்கிறேன் இரவை
செடியின் காம்பில் ஊர்கிறது
எழுத்துக்களை சுமந்தபடி
எறும்புகள்

வெயில் பட்டுப் பட்டு
ஒரு வசந்தத்தில் பூக்கத் தொடங்குகிறது
ஒவ்வொரு எழுத்தாய் எல்லா பகலும்
வாசிக்கத் தோதாய் எல்லா இரவும்

முதல் நிலவு

சூரியக்குடும்பத்தில் ஒரு கோளுக்கு
இருபத்தேழு நிலவுகள் இருப்பதாக
ஆய்வுகளின் முடிகள் தெரிவிக்கின்றன.
பகலென்ன இரவென்ன ?
எப்போதும் நிலவுகளின் ஒளியில்
எனை நனைத்துக்கொண்டேயிருப்பேன்
ஆதலால் நான் என்னை
அங்கே செலுத்திக்கொள்ளலாம்
என்றிருக்கிறேன்
இப்படிச்சொன்னதிலிருந்து
ஒரு நிலவு என்னுடன்
பேச மறுத்துவிட்டது.

குழப்பம்

 
 

0

எட்டாம் வகுப்பு கணக்கு வாத்தியார்
மோசஸ்சார் பற்றி கொஞ்சம் பேசலாம்

கருத்த உருவம்
தொடர்பற்ற பேச்சு
கன்னாபின்னா கோளத்துக்குள்
கன்னாபின்னாவென
வேலை செய்யும் மூளை

வகுப்பறையில் தூங்கும்
சோம்பேறி

சுவரசியமாக எதுவுமில்லையா?

முப்பதாவது வயதில்
லாரி ஏறி
மூளை வெளித்தள்ளி
இறந்து போனார்

அவரை நீங்கள்தான் இந்தக்
கவிதையைப் பயன்படுத்தி
கொன்றுவிட்டீர்கள் என்றால் நம்புவீர்களா?

ஒரு மழை நாள்

கார்மேக ஊர்வலத்தைக் கண்டு
மயில் தோகை விரிக்கும்
பூமியை குளிரச் செய்ய
வானம் கருணை கொள்ளும்
மரங்கள் தான் செய்த தவங்கள்
வீண்போகவில்லையென
மெய்சிலிர்க்கும்
குடை மனிதர்களுக்கு
மூன்றாவது கையாகும்
காகிதக் கப்பல்கள்
கணித சமன்பாடுகளைச்
சுமந்து செல்லும்
கொடியில் காயும்
துணிகளெல்லாம்
எஜமானியம்மாவை
கூவி அழைக்கும்
ஆடுகள் மே என்று
கத்தியபடி
கொட்டிலுக்கு ஓட்டமெடுக்கும்
தேகம் நனையச் செல்லும்
தேவதையை
கண்கள் வெறித்துப் பார்க்கும்.

பிளாஸ்டிக் நதி



எந்தவொரு நதியின் மீதும்
புகார் சொல்வது
முடியாது என்றபடி அதன்
கழுத்தைத் திருகுகிறேன்
பிளாஸ்டிக் பாட்டிலில் தளும்புகிறது
என்
தாகம்

*****
   

நனைந்த சிறகுகள்

மழைக்குருவியின்
கிறீச்சல்கள் கொடியில்
காய்ந்து கொண்டிருந்த
துணிமணிகளை கொஞ்சம்
கொஞ்சமாக நனைத்து
விட்டிருந்தது.
பின்னர் வந்த மழைக்கு
நனைக்க ஏதுமின்றி.
ஏமாற்றத்துடன் திரும்ப
விரும்பாத மழை
குருவியின் சிறகுகளை
நனைத்துச்சென்றது

துண்டு நிழல்


*
ஜன்னல் வழிக் காற்றில்
சுழலும் மின் விசிறியின் நிழல்
துண்டு துண்டாய் அறுத்துக் கொண்டிருக்கிறது
இந்த அறையை
என்
தனிமையை

****
  

சிறகைக் கோதும் சாம்பல் நிற மாலை..



மழையைக் கொண்டு வந்து சேர்கிறது
உன் சொற்கள்
அதன் ஈரத் திவலைகள் சிதறி
முளைக்கிறது என் மௌனம்

காரைப் பெயர்ந்த நம் சுவரின்
சுண்ணாம்புச் செதிலில்
விரல் வரைந்த கோடுகளாகி
பாசிப் படர்கிறது
கரும் பச்சை நிறமாகும் பெயர்கள்

விட்டுக் கொடுத்தல்களோடு
முடிந்து போகும் உரையாடல்களை
காலக் காகிதத்தின் கசங்கியப் பக்கங்களில்
சேமித்து வைத்திருக்கிறேன்

அதிலிருந்து புறப்படும் இசைக் குறிப்புகள்
ஜன்னல் கடந்து விரையும் காற்றோடு
போய் சேர்கிறது
கிளையிலமர்ந்திருக்கும்
பறவையிடம்

சிறகைக் கோதும் சாம்பல் நிற மாலையில்
குறுஞ் செய்தியொன்றை தாவிப் பிடிக்கிறது
கண்கள்
மழையைக் கொண்டு வந்து
சேர்பிக்கிறது உன் சொற்கள்..

******
    

உயிரோசை

உண்மையை
உண்மையென்று உணர்த்த
இத்தனை விவரங்களை
ஈமெயிலில் நீ
அனுப்பித் தந்த போதும்
தொலைபேசியில்
தெரிவித்த உன்
குரல்வழி விளக்கமே
போதுமானது எனக்கு.
ஏனெனில்
தொலைபேசியில் ஒலித்தது
உன் உதடுகளின் ஓசையா?
ஒரு உயிரின் ஓசை அல்லவா?