குழப்பம்

 
 

0

எட்டாம் வகுப்பு கணக்கு வாத்தியார்
மோசஸ்சார் பற்றி கொஞ்சம் பேசலாம்

கருத்த உருவம்
தொடர்பற்ற பேச்சு
கன்னாபின்னா கோளத்துக்குள்
கன்னாபின்னாவென
வேலை செய்யும் மூளை

வகுப்பறையில் தூங்கும்
சோம்பேறி

சுவரசியமாக எதுவுமில்லையா?

முப்பதாவது வயதில்
லாரி ஏறி
மூளை வெளித்தள்ளி
இறந்து போனார்

அவரை நீங்கள்தான் இந்தக்
கவிதையைப் பயன்படுத்தி
கொன்றுவிட்டீர்கள் என்றால் நம்புவீர்களா?

கோடு

எறும்பின் பாதையில்
ஆள்காட்டிவிரல் தேய்க்கும் சிறுமி
சிரிப்பை மறந்து
அமர்ந்திருக்கிறாள்

வரிக்குதிரை சந்திப்புகளைக்
கடக்கும் கண்ணிழந்தவர்களை
யாரோ கைபிடித்துக் கொள்கிறார்கள்

சாக்குக்கட்டிகளை
கடந்து செல்லும்
மனிதர்களைப் பார்த்தபடி
சில்லறைக்குக் கீழே
வரையபட்டிருக்கிறான்
கைவளைந்த கடவுள்

அதிர்வு தாங்கா அறைகள்

அறையை விட்டு வெளியேறுகிறேன்
விதிக்கப்பட்ட பொருட்களை
எடுத்துக்கொண்டு
வந்து நின்ற மரத்தின்
நிழலில் ஆசுவாசமடையத் தொடங்குகிறேன்

நான் வெளியேறிய
அறை
முன்னிலும் பிரகாசிக்கிறது
அடைசலாயிருந்த
புத்தக அலமாரியின் சுண்ணாம்புகள்
மீண்டும் பூசப்படுகின்றன

முட்டைகளின் நாற்றம் போக
பளிங்குக்கற்களில் சோப்புகளை
பிரயோகிக்கிறார்கள்

இவன் வெளியேற்றம்
இன்னொருவனுக்கான வழி
என யாரும்
சொல்லிவிடாதீர்கள்.
என் அறைகள்
அதிர்வுகளைத் தாங்குவதில்லை

வன்முறையின் சாட்சி

எட்டுக்காலம் அளவில்
அந்தச் செய்தி வந்திருந்தது.

ரத்தம் வழியும் புகைப்படங்களுடன்
பேருந்தும்
பேருந்தும் பேருந்தும் மோதி
முப்பத்தாறு பேர்
சம்பவ இடத்தில் பலி

பிய்ந்த கைகள்
உடைந்த கால்கள்
சிதைந்த தலை

ஆதி வன்முறையின்’
கடைசி சாட்சியென
இன்னும் அதிகமாய்
இரண்டு லட்சம் பிரதிகள்
விற்றிருக்கிறது பத்திரிக்கை.

சாராசரிக்கு​ம் சராசரி

இந்த அறை
இதற்கு முன்பு எத்தனை பேரைப்
பார்த்திருக்கும்

பேத்தியின்
அந்தரங்கங்களைத் தடவிப்பார்த்த
ஒருவன்

சுருக்குக் கயிற்றின்
முனையில்
காதலை முடித்துக் கொண்ட
ஒருவன்

சாராசரிக்கும் சராசரியில்
உறக்கத்தில்
இறந்த ஒருவன்

மற்றும்
இந்த அறையைப்போல்
வாழ்க்கை இறைஞ்சும்
உங்களுக்குத் தெரிந்த
ஒருவன்.

0

மரமொன்று நகரத் தொடங்குகிறது
இலைகளைச் சலசலத்தபடி

வேர்களின் நீளத்தை
அளந்தபடி

நிழல் குறித்த
பெருமிதங்களுடன்

கனிகளை வேடிக்கைபார்ப்பவன்
முகத்தில் எறிந்தபடி

நகரும் மரங்கள்
மரங்களாய் அறியப்படுவதில்லை
என
மரத்திற்கு தெரிவதில்லை.

0

பிறந்த குழந்தையை
ஏந்தும்
இன்னொரு குழந்தையின்
வாஞ்சையுடன்
இந்தக் கவிதையைச்
சுமந்து திரிகிறேன்.

இறக்கிவிடும்
இடம் நெருங்கும்போது
பாரமாகிறது கைகள்.

0

ஒரு கவிதைக்கு
எப்படிக் கவனித்தாய்
என்றான் நண்பொருவன்
எப்படி
யாரும் இதைக்கவனிப்பதில்லை
என்பதுதான்
எனது ஆச்சர்யம்.

0

பாலைவனத்தைச்
சுமக்கக் கொடுத்தீர்கள்
பிறகு கடலையும்
ஒரு சுடரை
என்னிடம் அளித்தது
உங்களுக்கு நினைவில் இல்லை
மண்ணைக் கிளறிப்போடும்
கோழியின் பாவனையில்
அடுக்கினீர்கள் எதைஎதையோ.
வைப்பதற்கு இடமில்லாத
நேரத்தில் தான் இந்தக் கவிதையை
அறிமுகம் செய்தீர்கள்

என்னைமீறி எல்லாம்
அடைகிறது இதில்.
oOo

கடவுள் ஆடிடும் ஆட்டம்

கடவுளுக்கு முன்னதான
ஜாதகக் கட்டங்களில்
இடையறாது சுழலும்
சோழிகள் திரும்பி விழுகின்றன சதுரங்க ஆட்டங்களில்
சிப்பாய்களை இழந்த ராஜாக்கள்
பயந்திருக்கின்றனர்
ராணிகள் அருகில். வண்ணம் மாறிவிழும் சீட்டுக்கள்
கோமாளியாக்கிக் கொண்டிருக்கிறது
பிரித்தாடும் கடவுளை. மனிதர்களின் ஆட்டத்தின்
சூட்சுமங்கள் புரியாது
தெறித்தோடுகிறார்
மனிதர்களுடனாடும் கடவுள். o ஒரு விளையாட்டின் இடைவேளையில்
தேநீர் அருந்தும் கடவுளை
கடவுளைச் சந்தித்தேன். இருவருக்கும் பேசுவதற்கு ஒன்றுமில்லை
புன்னகைத்தோம்
பிரிந்தோம். அவர் சொல்லாத உண்மைகளும்
நான் கேட்காத கேள்விகளும்
ஒன்றுடன் ஒன்று பேசிக்கொண்டிருந்தன பின்பு. o மரணத்தறுவாயில் என்னை வரச் சொல்லியிருந்தார்
கடவுள் ரகசியம் எதாவது உடைக்கப்படலாம்
என்றோ காதல் எதாவது சொல்லப்படலாம்
என்றோ புலம்பல்கள் சேரலாம்
என்றோ நினைத்திருந்தேன். நான் போய் சேருவதற்குள்
கடவுள் போய்சேர்ந்திருந்தார். o கடவுள் பொம்மைகளை வைத்து
விளையாடிய குழந்தைகளை
பழிவாங்குவார்
பிறிதொருநாள்.

சில நேரங்களில் சில மனிதர்கள்

கணீர் குரலுக்கு சொந்தக்காரர்கன்னையா ஓதுவார்.தேவாரம் பாடும் போதெல்லாம்கேட்பவருக்கு கண்ணீரேவருமென்பார் அப்பாஅவர் இறந்த நாளொன்றில்யார் கண்ணிலும் நீர் இல்லை.அவர் தேவாரம் பாடாததுதான்காரணம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்அந்த நாளில்.அசராமல் கரகம் ஆடக் கூடியவள்மேலத் தெரு மஞ்சுளாகரகம் அசையாமல்கண்ணில் ஊசியெடுத்தபடியேகாலில் படம் வரைபவள்.சமீபத்தில் ஜாக்கெட்டில் குத்தப் பட்டநூறு ரூபாய்களுடன் பார்க்கும் போதுஎடை அதிகமென இறக்கி வைத்திருந்தாள்கிளி மூக்கை நீட்டியிருக்கும் கரகத்தையும்இன்னும் சில ஆடைகளையும்உலகில் சூரியன் உள்ளவரைஉனை மறவேன் எனஎதுகை மோனையுடன்எழுதிக் கொடுத்தவனைவாரச்சந்தையில் பார்த்த பொழுதுஅவனுக்கு என்னை அடையாளம் தெரியவில்லை.சூரியன் இல்லாத அவன் உலகை நினைத்துகொஞ்சம் வருத்தமாக இருந்தது.காரைவீட்டு பெரியசாமி அண்ணாச்சியென்றால்எல்லார்க்கும் பயம்மீசைக்காக சிறுவர்களும்காசுக்காக பெரியவர்களும் அடங்குவார்கள்.தளர்ந்த அவரைப் போனவாரம் பார்த்த பொழுது“கான்கிரீட் ஊருக்குள்ளகாரைவீட்டுக்கு மதிப்பில்லப்பா”என்றார்.கடனை அடைப்பதற்காய் சொல்லிதுபாய் போன சங்கிலிதிருமணம் முடிந்து திரும்பி வந்தான்.வெளியூர் வேலைக்குக்கூடஅனுப்ப மாட்டாள் மனைவிஅத்தனை பாசமென்றான்.யார் கண்டதுசக்களத்தி பயமாய் இருக்கலாம்.முந்நூற்றுஅறுபத்துஏழாவது முறையாய்மஞ்சள் சுடிதாரில் வருகிறாய்ஏன் வேறு நிறமில்லையாஎன்றேன் கெளரியிடம்.இப்படி நீநியாபகம் வைத்திருப்பதை கேட்பதற்காகத்தான்என்றாள்

மரம் மாறும் பறவைகள்

ராஜினாமா செய்தவனுக்கு நண்பனாயிருப்பதில்
சில சவுகரியங்கள் இருக்கிறது
மேலாளர்களின் அரசியல் பற்றி
தைரியமாக சொல்லலாம்
ஒளித்து வைத்திருக்கும்
பணி உயர்வு புத்தகங்களைக்
காட்டலாம்
சந்திக்கப்போகும்
நேர்முகத் தேர்வுகளைப்பற்றி
சந்தேகம் கேட்கலாம்
நண்பனாய் இருத்தலின்
அசெளகரியம் என்பது
அவனது புதிய சம்பளத்தை கேட்காமல் இருப்பது
கேட்டுவிட்டு கவலைப்படாமல் இருப்பதுo
************
சமீபத்தில் வேலை
மாறிப்போன நண்பனொருவன்
புதிய அலுவலகத்தைப்
பற்றிபேசிக்கொண்டிருந்தான்
புதிய நண்பர்களைப்பற்றி
புதிய பொறுப்புகளைப்பற்றி
புதிய தலைமைகளைப்பற்றி
உணவகங்கள் பற்றி
பெசன்ட் நகர் கடற்கரையில்
அவனுடன் அமர்ந்திருந்த
புதிய பெண்ணைப்பற்றி

கடைசிவரை சொல்லவில்லை.

போன்சாய் ம‌ர‌ நிழல்


இருள் பூத்துத் தொங்கும்
போன்சாய் ம‌ர‌ நிழலிலிருந்து
வெளிவ‌ருகிறாள்
அர‌ளிப்பூ தேவ‌தை
பாம்புக‌ளின் பாதைத் த‌ட‌த்தின்
மேல்
க‌ம‌ழ்ந்து கொண்டிருக்கிற‌து தாழ‌ம்பூ ம‌ண‌ம்
ப‌ழைய‌ க‌விதையொன்றின்
பெண்ணைப் பிசாசென மொழிபெயர்க்கிறார்
காதல் மொழி தெரியா பெயர்ப்பாளன்
எல்லாக் க‌விதைக‌ளிலும்
தேவ‌தை
என‌ அடித்து எழுதுகிறான்
ஆசிரிய‌ சித்த‌ன்

டெரகோட்டா சிற்பங்கள்

கொஞ்சம் களிமண் எடுத்துக்கொள்ளுங்கள்
கெட்டியாக பிசையவேண்டும்
தேவைப்பட்டால் சிறிது தண்ணீர்
நீங்கள் விரும்பும் வடிவத்தின்
அச்சில் வார்க்கவும்
அடைக்கப்பட்ட அறையில்
புத்தகங்களை எரித்து
க‌ளிமண்ணைப் போட்டுவிடுங்கள்
டாக்டர் பொம்மையோ
கணினி வல்லுனரோ
விரும்பும் சிற்பங்கள் தயாராகும்.
களிமண்ணின் விருப்பத்தை
மட்டும் கேட்காதீர்கள்.