பூனைக்கும் மனிதனுக்கும் பொதுவான உணவு

பூனைக்கும் மனிதனுக்கும் பொதுவான உணவு

செல்வராஜ் ஜெகதீசன்
வாங்கிய பொருட்களின்
கனம் தாங்காமல்
கடை வாசலில் வைத்தேன்
சற்றே இளைப்பாற.
பாய்ந்து வந்து பைகளின்
மேல் மோதிய
பூனையொன்றை
விரட்டியவன் வேகமாய்
அவ்விடம் விட்டு
அகன்றேன்.
பூனைக்கு உதவும்
மனமில்லாமல் இல்லை.
பூனைக்கும் மனிதனுக்கும்
பொதுவான உணவொன்றும்
பை-வசம் இல்லாததே
காரணம்.

அகத்தின் அழகு


இன்னொரு நாளின்
தொடக்கம்.
எல்லோருக்கும் கை அசைத்தபடி
வந்து கொண்டிருந்த மகனின்
மகிழ்ச்சி இழைகளால் ஆன
முகத்தை அணிந்தபடி
சென்று கொண்டிருந்தேன்.
இவனின் கை அசைப்பிற்கு
எதிர்வினை  ஏதுமின்றி
எதிர்ப்பட்ட முகமொன்றில் 
அத்தனை இறுக்கம். 
உற்றுப் பார்க்கையில்
சற்று முன் இறக்கி வைத்த

என் முகம்.

கார்பொரேட் கூட்டங்களின் கடைசி நிமிடங்கள்



ஐயன்மீர்!
தொடக்கத்தில்
திரையில் காட்டப்பட்ட  
பாதுகாப்பு அட்டைகள் பற்றி
எந்த ஆட்சேபமும் இல்லை எங்களுக்கு.
அடுத்து முன்வைக்கப்பட்ட  
வரவு செலவு கணக்கு பற்றியோ
எதிர்கால திட்டங்கள் குறித்தோ
நாங்கள் சொல்ல விரும்புவதும்
ஏதுமில்லை.
விடைபெறுவதற்கு முன்
விருந்தோம்பல் சகிதம்
திறக்கப்பட்ட மதுப் போத்தல்களைப் பற்றியே
எங்களின் இந்த தாழ்ந்த விண்ணப்பம்.
எங்களைப் போலவே உங்களின்
வாகனங்களின் வருகைக்கும்
காத்திருக்கும்
எதிர்பார்ப்பின் கண்களுக்கு
என்னவிதமான உத்திரவாதத்தை
தரப் போகிறோம்

நாம்.

எதிர் விளையாட்டு

இடைவேளை நேரங்களில்
பள்ளியில் விளையாடும் ஒரு
விளையாட்டின் பெயர்
‘எதிர் விளையாட்டு’
என்றான் மகன்.
‘சிரி என்றால் அழ வேண்டும்
அழு என்றால் சிரிக்க வேண்டும்
உட்கார் என்றால் எழ வேண்டும்
எழுந்திரு என்றால் உட்கார வேண்டும்.’
அனேகமாய் எல்லா நேரங்களிலும்
அவனே ஜெயிப்பதாய் அடிக்குறிப்பு வேறு.
அட்டகாசம் என்று தட்டிக் கொடுத்தவன்
அடியோடு அதை மறந்தே போனேன்.
அடுத்த நாள் வந்த ஸ்கூல் டைரியில்
எழுதப்பட்டிருந்தது.
‘பேசாதே என்றால் வகுப்பில்
பேசிக் கொண்டே இருக்கிறான்’
என்று.

உயிரோசை

உண்மையை
உண்மையென்று உணர்த்த
இத்தனை விவரங்களை
ஈமெயிலில் நீ
அனுப்பித் தந்த போதும்
தொலைபேசியில்
தெரிவித்த உன்
குரல்வழி விளக்கமே
போதுமானது எனக்கு.
ஏனெனில்
தொலைபேசியில் ஒலித்தது
உன் உதடுகளின் ஓசையா?
ஒரு உயிரின் ஓசை அல்லவா?

என்ன சொல்ல?

இனிமேல் பார்க்கவே கூடாதென்று நினைத்திருந்த
இடுங்கிச் சிரிக்கும் அந்த கண்களை
இனம் மொழி தேசம் கடந்து
இன்னொரு இடத்தில் காணச் செய்யும்
இந்த இயற்கையை என்ன சொல்ல?
o

சூடாப் பூ …

பள்ளி விட்டு வந்ததும்
தன் ஆஸ்தான இடத்தில்
அமர்ந்திருப்பாள்  அம்மு.
எல்லோரும் வீட்டிற்குப் போக 
தான் மட்டும்
அனுதினமும் அங்கு
வருவது பற்றிய
ஆரம்ப காலக் கேள்விகள்
அவளை விட்டுப் போய்விட்டன.
ஓலைக் குடிலின்
ஓர் மூலையில் அமர்ந்து
எல்.கே.ஜி பாடங்களை 
படித்துக் கொண்டிருப்பதும்
அம்மாவிடமிருந்து 
பூ வாங்கிப்போவோருக்கு
புன்னகை ஒன்றை
இனாமாய்க் கொடுப்பதும்
அவளின்
அன்றாடக் கடமைகள்.
மீதமிருக்கும் பூக்களுடன்
வீடு திரும்பிக் கொண்டிருக்கும்
அம்முவிற்கு
என்றைக்குமே புரிந்ததில்லை
அம்மா ஏன் சூடிக் கொள்வதில்லை
அவைகளில் ஏதொன்றையும் என்பது.

விமர்சனங்களைத் தாங்காத கலைஞன்

பெற்றோரைப் பேணாதபிள்ளையென்ன பிள்ளை? பேரிரைச்சல் இல்லாத அருவியென்ன அருவி? பேரின்பம் காணாத பிறவியென்ன பிறவி? சிற்றின்பம் துறக்காத துறவியென்ன துறவி? மனைவியர் மனசு நோகப்பண்ணும்கணவனென்ன கணவன்? மற்றெந்த உயிரையும்மதிக்காதமனிதனென்ன மனிதன்? மனதில் கல்மிஷம் கொண்டலையும்பிறப்பென்ன பிறப்பு? விமர்சனங்களைத் தாங்காதகலைஞன் என்ன கலைஞன்?

விநாயகர் சதுர்த்தி சிறப்பு நிகழ்ச்சிகள்…!




காலை வணக்கத்தில் தனம் சங்கீதா முற்பகல் பேட்டியொன்றில் கேரளத்துப் பாவ்னா பிற்பகல் பேட்டியில் பேரிளம்பெண் நமீதா மாலைத் திரைப்படத்தில் மறுபடியும் நமீதா கும்கும் குமரிகளின் குளுகுளு பேட்டிகளும் குத்தாட்டப் பாட்டுக்களும் பிரம்மச்சாரி பிள்ளையார்க்கு பெருங்குஷிதான்! பேரின்பம்தான்!

இரண்டு கவிதைகள்



01 தொடர்பிலிருந்து நீ விலகிச் செல்லும் ஒவ்வொரு முறையும் பிறிதொரு மார்க்கத்தில் உன்னை பின்தொடர யத்தனிக்கும் வேளையில் நீயாகவே அழைத்துப் பேசி தொடரச் செய்கிறாய் இந்த விளையாட்டை இன்னுமோர் முறையும். O 02 புதிதாய் வந்து நின்றிருந்த காரின் முன்புறம் நெடுநேரம் விளையாடிக்கொண்டிருந்த இரண்டரை வயது மகனின் கையிலிருந்த கல்லொன்றை காண நேர்ந்த பொழுதுக்குள் வரைந்து தள்ளியிருந்தான் நிறைய கோட்டோவியங்களை. சுற்றியிருந்தோரிடமிருந்து ஏதும் சுடுசொல் வருவதற்குள் பட்டென்று சொல்லி ஓடிப்போனான் ‘பெரிய ரப்பர் கொண்டு அழித்தால் போய்விடும் அப்பாவென்று.’ o