அம்மா மாதிரி (சிறுகதை)#

01வரவர இந்த அப்பாவைப் பார்க்கவே பிடிக்கவில்லை. ஏன் அப்பா இப்படியெல்லாம் செய்கிறார்? என்ன செய்தாலும் என்னால் அதை தடுக்கவா முடியும்? பன்னிரண்டு வயது பையனால் என்ன செய்ய முடியும்? இவர் இப்படியெல்லாம் செய்வாரென்று தெரிந்துதான் அம்மா முன்னாடியே போய்விட்டாளா? அம்மாவை நினைத்ததும் கண்களில் நீர் முட்டிக் கொண்டு வந்தது. அம்மாதான் எவ்வளவு அன்பாக இருந்தாள்? சாந்தமான அந்த முகம். எதைக் கேட்டாலும் வாங்கித் தரும் கனிவு. “அம்மா தாயே” என்று யாராவது பிச்சைக்காரர்கள் வந்தால் அவர்களுக்கு அரிசியோ, காசோ ஏதாவது கொடுத்தனுப்பும் அந்த பரிவு. அம்மா நிஜமாகவே ரொம்ப நல்லவள். அப்பா அப்போதெல்லாம் நன்றாகத்தான் இருந்தார். அம்மாவிடமும் எங்களிடமும் அன்பாக இருப்பார். அடிக்கடி எதையாவது சொல்லி சிரிப்பு வரவழைத்தபடி இருப்பார். எனக்கும் தம்பி தங்கச்சிக்கும் வெளியே எங்காவது போனால் கண்டிப்பாக ஐஸ்க்ரீம் வாங்கித் தருவார். அம்மா அப்பாவோடு நான் தம்பி தங்கச்சி எல்லோரும் சினிமா போவோம். சாயங்காலம் ஆனால் அம்மா எல்லோரையும் உட்காரச் சொல்லி படிக்கச் சொல்லுவாள். தங்கச்சி பாப்பாவுக்கு ஏ பி சி டி சொல்லிக் கொடுக்கும்போது அப்படியே கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல் இருக்கும். அம்மா எதையுமே சிரித்த முகத்தோடுதான் செய்வாள். அன்று வெள்ளிக்கிழமை. அப்பா வழக்கம் போல் கம்பெனி க்கு வேலைக்குப் போயிருந்தார். சயந்திரம் மூணு மணிக்குப் போனால் இரவு பனிரெண்டு மணிக்குத்தான் வருவார். நானும் தம்பி தங்கச்சியும் பள்ளிக்கூடம் விட்டு வந்தபின் விளையாடப் போய்விட்டோம். அப்போது கூட அம்மா நல்லாதான் இருந்தாள். கொஞ்ச நேரம் கழித்து, பக்கத்து வீட்டு ராஜூ ஓடி வந்து “உங்கம்மா மயக்கம் போட்டு விழுந்துட்டாங்கடா” என்றபோது அவசர அவசரமாய் வீட்டுக்கு ஓடிப் போனவன், அம்மாவைக் கட்டிலில் படுக்க வைத்து, அக்கம் பக்க ஆட்கள் எல்லாம் சுற்றி நின்று கொண்டிருந்ததைப் பார்த்தேன். அம்மாவின் கண்கள் மேல்நோக்கி பார்த்தவண்ணம் இருந்தன. அப்பா வந்து சேர்ந்த சிறிது நேரம் கழித்து அம்மா செத்துப் போனாள். அப்பா வாய்விட்டு அழுதார். நான் தம்பி தங்கச்சி எல்லோரும் கேவிக் கேவி அழுதோம். அம்மா இனிமேல் வரமாட்டாள் என்று நினைத்த போது அழுகை இன்னும் அதிகமாய் வந்தது. 02அம்மா போய் ஒரு வாரமாகி விட்டது. அப்பா சவரம் செய்யாத முகத்துடன் சோகமாய் வெளியே போவதும் வருவதுமாக இருந்தார். பின் ஒருவாறு சமாதானமடைந்து வேலைக்குப் போக ஆரம்பித்தார். முன்பைவிட எங்களிடம் நிரம்ப அன்பாக இருந்தார். ஒருநாள் அப்பா படித்துக் கொண்டிருந்த எங்களிடம் வந்து அமர்ந்து, பாசத்தோடு என் தலையைக் கோதியபடி, “கண்ணா… அம்மா இல்லாம ஏதோ போல இருக்கு இல்ல” என்றார். “ஆமாம்பா” என்றபடி அப்பாவையே பார்த்துக் கொண்டிருந்தேன். “கவலைப்படாதே, இன்னும் கொஞ்ச நாள்ல ஒரு புது அம்மா வரப் போறாங்க” என்றார். அப்பா சொல்வது என்னவோ புரிவது போல் இருந்தது. அதற்கு சரியான அர்த்தம் புரிவதற்குள், வீடு கோலாகலப்பட்டு அப்பா புதிதாய் ஒரு பெண்ணைக் கூட்டி வந்தார். “இன்னிலிருந்து இவங்க உங்க அம்மா மாதிரி” என்றார். அதற்கப்புறம் அப்பாவிடம் பழைய கலகலப்பு தோன்றியது. தம்பியும் தங்கச்சியும் ஒருமாதிரி, புதிதாய் வந்த அம்மாவிடம் ஒட்டிக் கொள்ள ஆரம்பித்தனர். எனக்கு மட்டும் என்னவோ அம்மா இருந்த இடத்தில் இந்த “அம்மா மாதிரியை” வைத்துப் பார்க்கவே பிடிக்கவில்லை. இத்தனைக்கும் “அம்மா மாதிரி” என்னிடமும் அன்பாகத் தான் இருந்தார். அம்மா மாதிரியை “சித்தி” என்று அழைக்கத் தொடங்கியிருந்தோம். அப்பாவும் சித்தியும் அடிக்கடி வெளியே கிளம்பிப் போனார்கள். “கூட வர்றேன்” என்று அடம் பிடித்த தம்பியும் தங்கச்சியும் நீண்ட நாளைக்குப் பின் அப்பாவிடம் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டார்கள். அப்பா கொஞ்சம் கொஞ்சமாக மாறத் தொடங்கினார். அவரும் சித்தியும் தனி அறையில் தான் படுத்தார்கள். “நாங்களும் கூடத்தான் படுத்துக்குவோம்” என்று சொல்ல எண்ணிய தம்பியும் தங்கச்சியும் அப்பாவிடம் “வாங்கிக்” கட்டிக்கொள்ள பயந்து சும்மா இருந்தனர். அம்மா இருந்த இடத்தில் இன்னொருவரைக் கொண்டு நிறுத்தியதோடல்லாமல், இந்த அப்பாவால் எப்படி இவ்வளவு கலகலப்பாய், எதுவுமே தன்னை வருத்தாதது போல் இருக்க முடிகிறது என்று பலமுறை நான் எண்ணி வியந்ததுண்டு. அம்மா போனபோது ஒருவாரம் தாடியும் சோகமுமாய் திரிந்த அப்பாவா, இப்படியெல்லாம் மாறிவிட்டார் என்று நினைத்தபோது மனசின் விம்மல் இன்னும் அதிகமானது. அதெல்லாம் வெறும் வெளி வேஷமோ என்றும் ஒரு யோசிப்பு உள்ளுக்குள் ஓடிக் கொண்டிருந்தது. அம்மா இருந்தபோது இருந்த முகம் சுளிக்காத அப்பா, கலகலப்பான அப்பா, பாசமான அப்பா கொஞ்சம் கொஞ்சமாய் மாற ஆரம்பித்தார். நானோ, தம்பி தங்கச்சியோ எதைக் கேட்டாலும் சுள்ளென்று எரிந்து விழ ஆரம்பித்தார். அடிக்கவும் செய்தார். வரவர இந்த அப்பாவைப் பார்க்கவே பிடிக்கவில்லை. எங்களோடு மட்டுமென்றில்லை. சித்தியிடமும் அதே மாதிரி ஆரம்பித்ததுதான் எங்களுக்கெல்லாம் ஆச்சர்யமான ஒன்று. 03அன்று ஒரு வெள்ளிக்கிழமை. அப்பா வெளியே போனவர் இன்னும் திரும்பவில்லை. அன்று வேலைக்கு லீவு போட்டிருந்தார். நாங்கள் உள் அறையில் பாடங்களைப் படித்துக் கொண்டிருந்தோம். சித்தி வீட்டு வேலைகளையெல்லாம் முடித்துவிட்டு அப்பாவிற்காக வாசலைப் பார்த்தபடியே எங்களையும் பார்த்துக் கொண்டிருந்தாள். மணி பதினொன்றானது. தம்பியும் தங்கச்சியும் நன்றாகத் தூங்கி விட்டனர். நானும் படுத்திருந்தாலும் தூங்காமல் விழித்திருந்தேன். பன்னிரண்டு மணிபோல் அப்பா வந்தார். சித்தியின் தோளில் கை போட்டபடி நடந்தாலும், நிறைய தள்ளாடினார். நான் படுத்திருந்த இடத்தைத் தாண்டும்போது புதுவிதமான வாசனையொன்று மூக்கைத் துளைத்தது. அப்பா குடிக்க ஆரம்பித்திருக்கிறாரா? பக்கத்து அறையிலிருந்து பேச்சு லேசாகக் கேட்டாலும் சற்று தெளிவாகவே கேட்டது. “ஏங்க.. இப்படிக் குடிச்சுட்டு வந்திருக்கீங்களே…உங்களுக்கே இது சரியாப் படுதா?” ஏய்..நான் அப்படிதாண்டி.. சும்மா வந்து படுறீ.. என்று ஆரம்பித்து அப்பாவின் வித்யாசமான பேச்சுக்களைஅன்றுதான் கேட்டேன். தொடர்ந்து சித்தி ஏதோ பேசவும், அப்பா சித்தியை அடிக்கும் சத்தமும் தெளிவாக கேட்டது. 04அப்பா அன்று சீனு மாமாவைப் பார்க்க போயிருந்தார். கடந்த சில மாதங்களாகவே அவர் அங்கு போவதும் வருவதுமாக இருந்தார். சில நேரங்களில் இரவில் நேரங்கழித்து வருவார். அப்படி ஒன்றும் சீனு மாமா வீடு கிட்டத்தில் இல்லை. பஸ் பிடித்துப் போக வேண்டும். என்றாலும், அப்பா அடிக்கடி, சில நாட்களில் வேலைக்கு லீவு போட்டுவிட்டு, போய்வந்தபடி இருந்தார். தாமதமாக வரும் நாட்களில், சித்தி ஏதாவது கேட்டால் தயங்காமல் அடிப்பார். அவர் அடிப்பதும், அது அவருக்குள் போயுள்ள சரக்கு பண்ணும் வேலை என்று சித்தி சமாதானப்பட்டுக்கொள்வதும் வரவர வாடிக்கையாய்ப் போய்விட்டது.இப்போதெல்லாம் அப்பா குடிக்காத நாட்கள் குறைந்து கொண்டு வந்தன. ஆனால், அந்த மாமாவைப் பார்க்க போய்விட்டு வரும் நாட்களில் மட்டும் நிரம்ப சந்தோசமாய் இருப்பார். சித்தியை நிரம்ப கொஞ்சுவார். தனி அறையில் தான். எங்கள் மேல் பாசம் பொங்கும். அதற்காகவே, அவர் அடிக்கடி அந்த மாமா வீட்டுக்குப் போகக்கூடாதாவென்று இருந்தது எங்களுக்கு. அன்றும் மாமா வீடு போயிருந்த அப்பாவின் வருகைக்காக நாங்கள் காத்திருந்தோம். இம்முறை போகும்போது சித்தியையும் கூட்டிக் கொண்டு போயிருந்தார். கேட்ட தம்பியிடம் “சித்திக்கு அவங்க அப்பா அம்மாவைப் பாக்கணுமாம்” என்று சொல்லிச் சென்றார். வீடு அன்று வெறிச்சென்று இருந்தது. தம்பியும் தங்கச்சியும் வெகு நேரம் விழித்திருந்து விட்டுப் பின் தூங்கி விட்டனர். நான் மட்டும் விழித்துக் கொண்டிருந்தேன். ரொம்பத் தாமதமாக அப்பா வந்தார். அப்பா அன்று தன்னுடன் யாரோ ஒரு புதுப் பெண்ணை அழைத்து வந்தார். பயந்த சுபாவத்துடன் அப்பாவை உரசியபடி நடந்து வந்தது. நான் படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தேன். அந்தப் பெண் அப்பாவிடம் “இதுதான் பெரிய பையனா” என்றது. “ஆமாம்” என்றவர் என்னருகில் வந்து லேசாக என் தலையை வருடினார். “இது யாருப்பா?” என்றேன். நம்ம சீனு மாமாவோடு பொண்ணு, இனி இவளும் உங்க அம்மா மாதிரிதான்” என்றார்.

முன் முடிவுகளற்று இருப்பது




எப்போதாவது என்றால் சரி. எங்காவது ஒருமுறை என்றால் சரி. யாராவது ஒருமுறை எனில் சரி நடைபெற்ற யாவற்றிலும் நாம் இருவருமே பங்கு பெற்றிருக்க பிரச்சினை என்றவுடன் பின்வாங்கி நிற்கும் உங்களிடம் பெரிதாய் வருத்தமேதுமில்லை எனக்கு. எதையுமே அறியாத தோற்றம் தரும் உங்களின் முகம் குறித்தும் எனக்கு முழு சம்மதமே. எல்லாப் பிரச்சனைக்கும் என்னை நோக்கி நீளும் உங்கள் கைகளைப் பற்றிக் குலுக்க இப்பொழுதும் எனக்கு சம்மதம். ஆயினும் ஒரு முடிவுக்கு வந்தாக வேண்டும் நான் இப்போது. முடிவொன்று தேவையா என்றாவது முடிவு செய்ய வேண்டும். முன் செய்த முடிவுகளெல்லாம் முடிவில் இப்படி எப்படியோ ஆகிக்கொண்டிருக்க முன் முடிவுகளற்று இருப்பதைப் பற்றி முழு மூச்சாய் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

கியான் (சிறுகதை)

கியான் செத்துப் போனாளாம். விழாக் காலங்களில் மைக் செட் போடும் மதியழகன், பார்க்கும் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருந்தான். யாருமே அதை அவ்வளவு பொருட்படுத்தியதாய் தெரியவில்லை. அழகப்பர் தன் பெட்டிக்கடையில் உட்கார்ந்தபடி வருவோர் போவோரிடமெல்லாம் தன் பிள்ளைபற்றிய இழிபுராணதைப்பாடிக்கொண்டிருந்தார். டீக்கடை கோவிந்தன் சூடான பாலை டிகாக்சனில் கலப்பதிலேயே மும்முரமாய் இருந்தான். பார்பர்ஷாப் முருகன் வாடிக்கையாளர் முகத்தில் சோப்பை போட்டுக்கொண்டிருந்தான்.தெருவோர நாய் ஒன்று யாரையோ பார்த்து ஆக்ரோசமாய் குலைத்துக் கொண்டிருந்தது. மனிதர்கள் முதல் மிருகங்கள் வரை யாரையும் அந்த செய்தி பாதித்ததாய் தெரியவில்லை. கியான் அப்படி ஒன்றும் அத்தனை பிரபலமான ஆளில்லை. சிறுபிள்ளைகளுக்கு அவள் ஒரு விளையாட்டுப் பொருள். கொஞ்சம் வளர்ந்த பிள்ளைகளுக்கு அவள் ஒரு பரிகாசப் பொருள். பெரியவர்களுக்கு அவளொரு பரிதாப ஜீவன். சுருங்கச் சொன்னால் கியான் ஒரு மனநிலை சரியில்லாதவள். ஊராரின் வார்த்தையில் ‘பைத்தியம்’. கியான் மற்றவர்களைப் போலில்லை. திடீர் திடீரென்று சிரிக்கின்ற ரகமோ, கையில் கிடைத்ததை எடுத்து வீசுகின்ற ரகமோ இல்லை. எப்போதும் எங்கேயாவது நடந்து கொண்டே இருப்பாள். அவள் எங்கிருந்து வருகிறாளென்று எவருக்கும் தெரியாது. நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவளென்றும், வரதட்சணைக் கொடுமையால் நடக்க இருந்த திருமணம் நின்று போனதால் இப்படி ஆனதாகவும், திருமணமானவளென்றும், யாரோ வைத்த சூனியத்தால் இப்படி ஆனதென்றும் பலவாறு கதைகள் உண்டு கியானைப் பற்றி. இவற்றில் எது உண்மையென்று யாருக்கும் தெரியாது. கியான் என்ற பெயர் எப்படி வந்ததென்று தெரியாது. ஆனால், கியான் என்று அழைக்கையில் அவள் திரும்பிப் பார்ப்பாள்.கியான் எங்களூரில் பிரபலமானதே ஒரு சுவாரசியமான கதை. அது ஒரு நல்ல மழைக்காலம். தொடர்ந்து இரண்டு மூன்று நாட்களாய் பெரிதாய்ப் பெய்த மழை, அன்று மெலிதாய் தூறிக்கொண்டிருந்தது. சிறுவர்கள் மழைத்தண்ணீரில் கப்பல் விட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். கியான் வழக்கமான பேருந்து நிறுத்த சிமென்ட் பெஞ்சில் அமர்ந்திருந்தாள். பஸ் நிறுத்தத்திற்கு எதிரே டீக்கடை ஒன்று உண்டு. டீக்கடை நாயரின் இரண்டு வயதுக் குழந்தையும் தெருவோரம் மழையில் விளையாடிக் கொண்டிருந்தது. வேகமாக வந்து கொண்டிருந்த லாரியொன்று அந்த இடத்தை நெருங்குகையில், சாலையோரம் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை, சாலையின் குறுக்காக ஓடி வர ஆரம்பித்தது. எந்தவித விபரீதமும் நிகழாமல், கியான் வேகமாய் ஓடிப் போய் குழந்தையை அணைத்தபடி காப்பாற்றி, மறுபுறம் கொண்டு வந்த அந்த தினத்திலிருந்துதான் கியான் எங்களூரில் நல்ல பிரபலம்.…எடுப்பாய் வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் முன் பற்கள் இரண்டும் அந்த முகத்திற்கு சற்று விகாரமான தோற்றத்தைத் தந்தாலும் இதுவரை எந்த குழந்தையும் அவளைப் பார்த்து பயந்ததாய் எந்த கதையும் இல்லை. ஆனால், கியானின் அட்டகாசமென்று சொல்லவேண்டுமென்றால், அதை பேருந்துகள் வந்து நிற்கும் நேரத்தில் காணலாம். அதுவரை அமைதியாய் தன் (!) இருப்பிடத்தில் அமர்ந்து கொண்டிருப்பவள், ஏதாவது பேருந்து வரும் சமயம், வேகமாய் ஓடி வந்து பேருந்தின் பக்கவாட்டில் தடதடவென்று தட்டுவாள். ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருப்பவர்களைப் பார்த்து, அது பெண்களாய் இருந்தாலும், “மாமா மாமா” என்று சத்தமிடுவாள். ஆனால் இதுவரை அவள் பேருந்துக்குள் ஏறவோ, கல்லால் அடிப்பது போன்ற செயல்களிலோ ஈடுபட்டதில்லை. ஒரு சில வேளைகளில், யாரையாவது சுட்டிக் காட்டி, “இந்த மாமாவைக் கட்டிக்கிறியா” என்றால், அதற்கு “இக்கும் போ மாமா” என்றே பதில் சொல்வாள். அப்படி சொல்கையில் அவள் லேசாக வெட்கப்படுவதைப் போல் கூடத் தோன்றும். கியானுக்கு கோபம் வரவழைக்கும் விஷயம் ஒன்று உண்டு. “டமுக்கு டப்பான்” என்ற வார்த்தையில் அப்படி என்ன இருக்கிறதோ தெரியாது. சிறுவர்கள் யாராவது விளையாட்டுக்காக அந்த வார்த்தையை சொன்னாலும், கண்களில் அக்னி ஜ்வாலை தெறிக்க, தெருவில் கிடைக்கும் கற்களை எடுத்து வீசத் தொடங்கி விடுவாள். கூடவே “அய்ய.. இக்கும்.. போ” என்று கத்திக் கொண்டே சிறுவர்களை துரத்திக்கொண்டு ஓடுவாள். ஆனால், சிறிது நேரத்திற்கெல்லாம், பழைய கியானாய், பேருந்து நிறுத்த பெஞ்சில் அவளைக் காணலாம். வந்து அமர்ந்த சிறிது நேரம் வரை, அவள் முகத்தில் சிறிய கோபம் ஒன்று இருக்கும். அது போன்ற நேரங்களில், வழக்கமான “மாமா மாமா” போன்ற கூச்சலோ, பேருந்துகளைத் தட்டுவது போன்ற செயல்களிலோ அவள் ஈடுபடுவதில்லை. ஆனால் எல்லாம் சிறிது நேரம்தான். பிறகு தன் வழக்கமான வேளைகளில் ஈடுபடத் தொடங்கி விடுவாள். அந்தக் கியான் செத்துப் போனாளாம்.அது அங்கு யாரையும் பாதித்ததாய் தெரியவில்லை. மனிதர்கள் முதல் மிருகங்கள் வரை யாவரும் தன் வேலையைப் பார்த்தபடிப் போய்க்கொண்டிருந்தன(ர்). இரண்டு நாட்கள் போனது. பேருந்து நிறுத்தமே தன களையை இழந்தது போல் இருந்தது எங்களுக்கு. திடீரென்று “இக்கும்.. போ” என்ற குரல் கேட்க ஆரம்பித்தது. தலையில் ஒரு கட்டுடன் தன் இருப்பிடம் நோக்கி வந்து கொண்டிருந்தாள் கியான். தலை காயம் பற்றி கேட்டவருக்கெல்லாம் “இக்கும்.. போ” என்றே பதில் சொன்னாள். ஒருவேளை அவள் யாராவது குழந்தையை காப்பாற்றப் போய் அடி பட்டிருக்கும் என்று யாவரும் நினைத்துக்கொண்டோம். அந்த “இக்கும் போ” என்ற சத்தமும், “மாமா மாமா” என்ற அழைப்பும் மறுபடி ஒலிக்க ஆரம்பித்ததில், இழந்த தன் களையை மறுபடி பெற்றிருந்தது எங்களூர் பேருந்து நிலையம். o

ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில்

ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில்
நிறைய தொலைபேசி அழைப்புகள்நீங்கள் யாரென்னும் கேள்வியோடு நிராகரிக்கப்படலாம்நிலுவையில் இருக்கும்நிறைய வழக்குகள்தள்ளுபடி செய்யப்படலாம்நாளைய நம்பிக்கைககளின்வேர்கள் நடுக்கம் காணலாம். உறவுகளுக்குள்ளானஉறுதிமொழிகள் உடனுக்குடன் ஆவணப்படுத்தப்படலாம். பிறந்த நாள்பிரிந்த நாள் உபசாரங்களெல்லாம்ஒடுங்கியோ அல்லதுஓய்ந்தோ போகலாம். அந்தந்த கணங்களில் வாழஅநேகம் பேர்ஆயத்தமாகலாம் நிகழ் கணங்களை உடனுக்குடன் பதிவு செய்ய வேண்டியகட்டாயம்கவிதைகளுக்கு நேரலாம் ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில் நிறைய துரோகங்கள்மன்னிக்கப்படலாம் அல்லது
மறக்கப்படலாம்

இதையும்#

இன்னும் சற்று மேம்பட்டதாக இன்னும் சிறிது சுரத்துள்ளதாக இன்னும் கொஞ்சம் உவப்பானதாக இன்னும் எப்படியெல்லாமோ இருந்திருக்கலாம் என்கிறீர்கள். இந்த ஒரு சிறு வாழ்வில் இந்தளவாவது இயன்றதே என்கிறேன். இதையும் எப்படியாவது புரிந்து கொள்ளுங்கள் ஏனைய பிற யாவற்றையும் போல.o

விளம்பரங்களில்

விளம்பரங்களுக்கிடையில்
வந்து போகின்றன
விளம்பரதாரர் வழங்கும்
நிகழ்ச்சிகள்

நல்லது பயக்குமெனில்
நல்லது கறையென்கின்றன

இன்னுமதிக வெளுப்புக்கு
இவையிவை என்ற
அறிவிப்புகளோடு

இலவசங்களுக்கான
சீசன்களை
எப்போதும்
நினைவுறுத்திக்கொண்டு

விளம்பரங்களில்
வகுபட்டு
பின்னமாகிக் கொண்டிருக்கிறது
பொழுதுகள்

இன்று வரை

நிச்சயமாய்
தெரியுமென்றாலும்
நீண்டு
கொண்டுதான் இருக்கிறது
இன்று வரை.

ஏதாவதொரு
கையசைப்போ
எதிர்கொண்டழைக்கும்
முகமொன்றுக்கோ
ஆன ஏக்கங்கள்.

O

விமான நிலைய வரவேற்பொன்றில்…



#
பயணக் களைப்பாய்
இருக்கலாம்.
போய்வரும் இடத்தில்
நேர்ந்த உறவைப்
பிரிந்ததால் இருக்கலாம்.
எதிர்கொண்டழைக்க
எவருமற்று காணும்
புது இடம் குறித்த
மிரட்சியாய் இருக்கலாம்.
ஏக்கமும் சோகமும்
கொண்டு எதிர்பட்டவனை
நோக்கி இதழ்க்கோடியில்
தவழ விட்டேன்
புன்னைகையொன்றை.
சற்றே சலனம் காட்டி
பின் சமாளித்து
போய்க்கொண்டிருந்தவன்
நினைத்திருக்கக்கூடும்
ஏதும் என்னைப் பற்றி.
இறுக்கிப் பிடிக்கும்
வாழ்க்கையில்
இன்னொரு முகத்தின்
சோகத்தை இம்மியாவது
இடம்பெயர்க்க
முடிந்ததென்ற
நிம்மதி எனக்கு.

பதட்டம்..



சகபயணி ஒருவன்
சட்டைப் பாக்கெட்டிலிருந்து
எடுத்த
மூக்குக்கண்ணாடியோடு
மாட்டிக்கொண்டபடி
வந்த பேனாவை மீண்டும்
சரியாகப் பொருத்தவில்லை – தன்
சட்டைப் பாக்கெட்டில்.
பதட்டம் கூடிக் கொண்டிருந்தது
பார்த்துக்கொண்டிருந்த என்னுள்.

பேசும் மௌனங்கள்…


எப்போதும்
பேசிக்கொண்டே
இருக்கின்றன
உன் மௌனங்கள்
எப்போதும்
பேசிக்கொண்டே
இருக்கிறேன்
உன் மௌனங்களோடு
எப்போதாவது
பேசிக்கொள்ளும்
நம் மௌனங்கள்
நம் இருவரையும்
புறம் தள்ளி.
0